ஜீவிதத்தின் உள்வட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 1, 2024
பார்வையிட்டோர்: 560 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ரெக்கைகளைத் தட்டிச் சடசடத்துக் கூவிய தலைக்கோழி, செல்லம்மாவின் உறக்கத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டது. ‘அவக், தொவக்’ கென எழுந்த செல்லம்மா… கூந்தலை உதறி முடிந்து கொண்டாள். 

‘அதுக்குள்ளே விடிஞ்சிருச்சா’ என்று சலிப்போடு முணுமுணுத்துக் கொண்டாள், கதவைத் திறந்து வெளியே வந்தாள். கும்மென்ற இருட்டு சூழ்ந்து கொண்டது. கீழ்திசையின் அடிவானம் முகம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. 

‘அடியாத்தே… நேரம் ஓடிப் போச்சே! அலுத்துக்களைச்ச உடம்பை ஒறக்கம் ஒரே அமுக்கா அமுக்கிப் புடிச்சு… ஊம்…’ என்று சுயவிமர்சனமாக முணங்கினாள். 

இன்னும் ஏழு மைல் தூரம் நடந்துதான் வேலைத் தளத்துக்குப் போகமுடியும் என்ற நினைவு, அவளுக்குள் ஒரு மலைப்பை ஏற்படுத்தினாலும், அவளது கால்களுக்கு சக்கரம் கட்டிவிட்டது. பரபரவென்று மாரியப்பன் வீட்டுத் தொழுவத்துக்குச் சென்றாள். 

சாணம் எடுத்து வந்து மண் சட்டியில் கரைத்தாள். சளப் சளப்பென்று தெளித்தாள். அடுப்புச் சாம்பலை அள்ளிய கை யோடு, அதே சாம்பலில் பல்லையும் துலக்கிக் கொண்டாள். வீட்டைப் பெருக்கினாள். 

பாயைவிட்டு விலகி உருண்டு கிடந்த பெண் குழந்தை யின்பாவாடையை இழுத்து மூடினாள். கோழையை வடித்துக் கொண்டு உறங்கிய சின்னவன் மீது பழைய சேலையை விரித்து மூடினாள். 

பரபரத்து வேலை செய்த செல்லம்மா… பிள்ளைகளைப் பார்த்த பார்வையை விலக்காமல் நிலைத்து நின்றாள். மனசுக்குள் ஒரு சோகம் திரண்டு வந்து, கண்களுக்குள் மோதி உறுத்தியது. படபடத்த இமைகள் ஈரத்தில் நனைந்தன. 

‘இப்பப்போனா… வீடு வந்து சேர்ரதுக்குள்ளே பொழுது சாஞ்சுடும். அதுவரைக்கும் இந்தப் ‘பச்சை மண்ணுக’ என்ன செய்யும்! தாயில்லாப் புள்ளைகபோல தெருக்காட்லேதான் திரியணும். பாவம்! ஒருவாய் கஞ்சியை ஊத்தி குடிக்க வைச்சு ‘கங்’ குளுரப் பாக்குறதுக்கு, நமக்கு கொடுத்து வைக்கலியே… 

இந்த எண்ணம் ஒரு துன்பமாகச் சுரந்து மனசுக்குள் நிரம்பித் தளும்பியது. ஏதோ ஒரு பாரம் ஏறிக் கொண்டது போல கனத்தது. நினைவுகளை ஒரு பெருமூச்சாக்கி… காற்றில் கரைத்தாள். 

கஞ்சியை ஊற்றிக் குடித்தாள். புள்ளைகளுக்கு ரெண்டு வேளைக்குச் சரியா வருமா என்று பானையில் உள்ளதைச் சரிபார்த்துவிட்டு, மூடி வைத்தாள். 

டயர் செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டாள், ஒரு பழைய சாக்கை மடித்து வைத்துக் கொண்டு, கட்டைக் குச்சியையும் எடுத்துக் கொண்டாள். ‘கொட்டு மம்பட்டி’யை எடுத்துத் தோளில் கோர்த்து மாட்டிக் கொண்டாள். 

கூட்டுக்குள் கத்திய கோழிகளைத் திறந்துவிட்டாள். 

கதவைச் சாத்துவதற்கு முன்பாகக் குழந்தைகளை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். பார்வையினாலேயே அள்ளி மனசுக்குள் அணைத்துக் கொள்பவளைப் போலப் பார்த்தாள். 

இதயத்தின் அடியாழத்திலிருந்து சீற்றத்துடன் வெளிப் பட்ட பெருமூச்சுடன் தெருவில் இறங்கினாள். இருட்டு இன்னும் அடர்த்தி குறையாமலிருந்தது. இலேசாகப் பனியடித்தது. புளித்த கஞ்சி வயிற்றுக்குள் குளிர்ந்து தேகம் முழுவதும் புல்லரிக்க வைத்தது. 

வாடைக்காற்று வேகமில்லாமல் வீசியது. பனியின் வீர்யத்தை அதிகப்படுத்தியது. 

அடைமழை அடைச்சுக்கிட்டு பேயவேண்டிய இந்தப் பொரட்டாசி மாசத்துலே, இப்படி பனி கொட்னா என்னத்துக்காகும்? மழை எப்படி எட்டிப்பாக்கும்? ‘மானம்’ பாத்து மனசு இறங்கி மழை பெய்யாட்டா… மனுச மக்க எப்படி பொழைக்கிறது? காட்லேதா என்ன வேலை நடக்கும்? கூலியாளுகளுக்கு என்ன வேலை கெடைக்கும்? 

‘பூமியுள்ள சம்சாரிகளாச்சும்… இந்த வறட்சியிலேயும் கெத்துவிடாம இருந்துருவாக. அன்னாடம் பாடுபட்டு பானை கழுவுற கூலி ஜனங்க வூடுகள்லே என்னத்தை வைச்சி உலை காய வைக்குறது? ம்ஹும்… வேலையத்து விதியத்து… இப்படி வேந்தட்டிக் கெழங்கு வெட்டி, வித்து… சே! இது என்ன பய பொழப்பு, சீரழிஞ்ச பய பொழப்பு! 

நினைவுகள் வாழ்வின் அவலத்தைச் சுற்றி மொய்க்க, செல்லம்மா நடையைத் துரிதப்படுத்தினாள். மையிருட்டு கண்களை மறைத்தாலும், பாதங்கள் பட்டு வெளுத்துப்போன ஒற்றையடிப் பாதை, இருட்டுக்குள் விரித்துப் போட்ட வெள்ளை நாடாவைப் போல வளைந்தும் நெளிந்தும் புலப்பட்டது. 

பழகிய பாதை… பாதைக்குப் பரிச்சயப்பட்ட பாதங் கள்… தயக்கம் எதுவுமில்லாமல் கால்கள் முன்னேறிக் கொண்டிருந்தன. 

இன்னும் ஏழு மைல்கள்… இடையில் நாலைந்து ஊர்கள்… வேலைத் தளத்துக்குப் போய்ச் சேர்றதுக்குள்ளே ‘ஆத்தாடி, அம்மாடி’ன்னு ஆயிப்போகும். உஸ்ஸுன்னு உக்கார முடியாது. உழுகாமக்கெடக்குற கருசக் காடுகள்ளே ஓடிஓடி மம்பட்டியாலே ‘மொங்கு மொங்கு’ன்னு வெட்ட ணும். முழங்கால் ஆழத்துக்குக் கீழேதான், வேந்தட்டிக் கெழங்கு இஞ்சி போல மண்ணுக்குள்ளே புதைஞ்சி கிடக்கும். அதைக் கண்டுபிடிச்சு, கட்டைக்குச்சியாலே குத்திக் கௌறி… தொடச்சித் தொடச்சி சாக்குக்குள்ளே போடணும்… 

சாயங்காலம் வரைக்கும் சளைக்காம தோண்டுனா… மூணு, நாலு கிலோ கெடைக்கும். கொண்டுபோய் காளிமுத்து கடையிலே போட்டா ஒரு கிலோவுக்கு ஒரு ரூவா இருபது பைசாவாம்…… அவங்க என்ன மறு வெலைக்கு விப்பானோ, யார் கண்டாக? – அவன் குடுக்கிற துட்டுலேதான்… ஓலை காயணும்… 

மழையத்துப்போய் வறட்சியாகிப் போனதுனாலே தானே, இந்தப் பஞ்சப் பொழப்பு…! இந்த மாதிரி சீப்பட்டுப் போய் வாழ்றதைவிட… உசுரை மாய்ச்சுத் தொலைக்கலாம்… நம்ம இருந்துதான், நாட்டையாளப் போறோமாக்கும்…!’

செந்தட்டியாபுரத்து நாய்கள் ரொம்ப விழிப்பாக இருந்தன.கிராமமே அலறிப்போகிற மாதிரிக் குரைத்தன. அவள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. நாய்களை நெருங்க விடாமல், கட்டைக் குச்சியைப் பின்னால் நீட்டிக் கொண்டே அவள் பாட்டுக்கு நடந்தாள். 

பாய்ந்து வந்த நாய்கள் குச்சியை ஒரு மிரட்சியோடு பார்த்துத் திகைத்தாலும், குரைப்பதை மட்டும் நிறுத்த வில்லை. செல்லம்மா ‘நிமாண்ட்’ நாழியில் ஊரைக்கடந்தாள். ஓடைக்குள் விழுந்தாள். கலகலத்துப்போன மணலில் கால்கள் புதைய, ‘பொதுக் பொதுக்’ கென்று சப்தம் வந்தது. 

வேலிமரத்துக் கிளைகள் முகத்தைப் பற்றிப் பிடிக்க முயல்கின்றன. அதை ஒதுக்கிவிட்டு, முள்ளின் கீறலினால் ஏற்படுகிற காந்தலை உணர்ந்தவாறே விறுவிறுவென நடந்தாள். 

பாதையின் இருமருங்கிலும் நிலம் கரேலென்று விரிந்து கிடந்தது. தாலியறுத்த மலடியைப் போல வெறுமையாகத் தோற்றமளித்தது. 

‘எந்த மகராசன் புஞ்சையோ… வெள்ளாமைக்கு வழியத்துப்போய் வெம்பரப்பாய் கெடக்கு…’ 

ஆடி ஆவணி மாசத்துலே பேய வேண்டிய மழை பேஞ்சிருந்தா… காடுக இப்படியா கெடக்கும்? கருசக் காடுகள்லாம் வெதைப்பாயிருக்குமே! நாத்தோ பருத்தியோ… இந்நேரம் முழங்கால் உசரத்துக்கு வந்துருக்குமே… 

இந்த மாதிரி இறைவைப் புஞ்சைகளையும் சம்சாரிக இப்படியா சும்மா போட்டு வைச்சிருப்பாக? குப்பை யடிப்போ… உழவடிக்கிறதோ… மொளகா நாத்து நடுறதோ… சன்ன வேலையா நடந்துருக்கும்? 

கூலிசனங்களுக்கும் ‘நெரிபுரி’யா வேலை கெடைத்திருக்கும்… காலகாலத்துலே கொத்துவாங்கி, காச்சிக்குடிச்சுட்டு, புள்ளைகளோட நேரத்தோடப்படுத்து உறங்கலாம்… 

கல்லுமனசா இறுகிப்போய் மானம்’ கண்ணை மூடப்போய்… பூமி இப்படி சும்மாகெடக்கு? வேலையத்துப் போய் கூலியாளுக ஆலாய்ப் பறக்குற பொழைப்பாயிப் போச்சு…… வேந்தட்டிக் கெழங்கே விதின்னு ஆயிப்போச்சு… 

மானம் அயத்துப்போனாலும், பூமி மனுஷனை அயக்காது, அதுலேயும் கருசப்பூமி… அடிவவுத்துலே சேத்து வைச்சிருந்து, பஞ்சகாலத்துலே பஞ்சாய்ப் பறக்குற ஏழைபாழைகளுக்கு ஏதாச்சும் குடுத்துக் காப்பாத்துது. இன்னைய நெலமைக்கு வேந்தட்டிக் கெழங்கு மட்டும் இல்லேன்னா… கூலிமக்க பொழைக்க வழியில்லாம்.. வேறெ சீமைக்குத்தான் போய்ச் சேரணும். எந்தச்சாமி புண்ணியமோ… கருசமண்ணு இந்த மட்டுக்காச்சும் ஏதோ காப்பாத்துதே… 

ஆமநாட்டு நாய்களும் உறங்கிவிடவில்லை. கூட்ட மாகக் குரைத்துக்கொண்டு பாய்ந்து வந்தன. உறக்கச் சடை வோடு முற்றத்தில் நின்ற ஒன்றிரண்டு பெண்கள் நாய்களை அதட்டினர். 

‘சேடு… சேடு… கழுதை, சும்மாகெடங்களேன்! விடிஞ்ச பெறகு கள்ளனை வெரட்டிப் பிடிக்கீகளாக்கும்! சே…டு’ 

நாய்களை அதட்டிய உயர்ந்த குரலை தாழ்த்திக் கொண்டு விசாரித்தனர்… 

“யாரது……. இந்நேரம்… செல்லம்மாவா?” 

“ஆமம்மா…”‘ 

“என்ன இந்நேரம்? தூரவா?” 

“வேந்தட்டிங்கெழங்கு வெட்டப் போறேம்மா புல்லாப்பட்டி காட்டுக்கு.” 

“அடே… யம்மா… சல்லம் பட்டியிலேருந்து புல்லாப் பட்டிக்கா…? ரொம்பத்தூரமாயிருக்குமே…” 

“தூரந்தாம்மா. என்ன செய்றது? மழையில்லாம வேலையுமில்லே ஜோலியுமில்லே… எப்பாடு பட்டாச்சும் கொதிக்குற வவுத்தை அமத்தணுமே யம்மா…” 

“அதுவும் சரிதான். மழை செய்ற கூத்துலே மனுஷப் பொழப்பு, நாய்ப்பொழப்பா போச்சு.. சரி… செல்லம்மா… … காலடி பாத்துப்போ” 

“சரிம்மா…”

ஆமநாடு பின்னால் நழுவிக் கொள்ள, ஆற்றுக்குள் விழுந்தாள், பனந்தோப்பில் ஏறினாள். வண்டிப் பாதைக்கு நடுவில் நீண்ட ஒற்றையடிப் பாதையில் நடையை எட்டிப் போட்டாள். 

நாய்ப்பொழப்பா போச்சு… என்று அந்தப் பெண்கள் அனுதாபப்பட்டது, நினைவுக்கு வந்தது. அவமான உணர்வு மனசில் ரம்பம் போட்டு அறுத்தது. அவளும் உணர்ந்து சலித்த அவலம்தான் என்றாலும், மற்றவர்கள் உதடுகளிலிருந்து அந்த அவலத்துக்கு அனுதாபம் சொல்லும் போது… ஒரு கேவலத்தை உணர்கிறாள். இப்படியாகிப் போச்சே… என்று தன் நிலைமையை எண்ணி எண்ணி கைத்துப் போகிறாள். 

‘இதைவிட செத்துத் தொலைக்கலாம்… இந்தப் பூமியிலே இருந்து பட்டத்தைக் கட்டி ஆள போறோ மாக்கும்…!’ 

கீழடிவானத்தின் வெளுப்பில் பிரகாசம் தெரிகிறது. துண்டு துக்காணியாகக் கிடந்த மலட்டு மேகங்களின் விளிம்புகள் கன்றிச் சிவந்து கிடந்தன. 

பாதையின் இருபக்கங்களிலும் அடர்த்தியான வேலிமரக் காடுகள். கால் வைக்க இடமில்லாமல் புதர்போல் வளர்ந்து கிடந்தது. சுவர்க்கோழியின் ‘ஙு…’ என்ற இரைச்சல் காதைக் குடைவது போலிருந்தது. 

வேலிமரக் காட்டின் முதுகுக்குப் பின்னால் பதுங்கி நின்ற வலையபட்டியைக் கடந்து செல்லும் போது, ரத்தப் பிரகாசமாய் பொழுது தலைதூக்கித் தகதகத்தது. நடையின் வேகத்தில் கட்கத்திற்குள் வியர்த்துக் கசகசத்தது. நாசிக் கடியிலும் வியர்வை மணிகள் நழுவி விழுந்தன. 

மெட்டல்ரோடு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தது. கிடங்கும் மேடுமான வெறும் பாதையில் கருங்கல் சல்லிகளைத் தாறுமாறாகப் பரப்பி வைத்தாற் போலிருந்தது. கால்விரலைப் பதம் பார்க்கிற கற்களைக்கூட குனிந்து பார்க்காமல் ‘வேகு, வேகு’ என்று நடந்தாள். 

மழையில்லாத காட்டு ஜனங்களுக்கு சர்க்கார் என்னமோ வேலைக, தான்யம்… துணி மணி ஓசியா… மாட்டுக்கடன் எல்லாம் தர்ரதாக ரேடியோவுலே சொல்லுதாக… இங்கே ஒரு எழவையும் காணலே… ஏதாச்சும் குடுய்யான்னு கேக்கலாம் னாலும்… அந்தப் பாழாப் போற சர்க்கார் எங்கயிருக்குன்னும் தெரியலியே… இந்த பட்டிக்காட்லே கெடக்குற ஏழை பாழைகளை… சர்க்கார் மட்டுமா… சாமிகூட ஏறெடுத்துப் பாக்காது… 

தூரத்தில் கூட்டமாய் வரிசையாக மனிதர்கள் பரபரக்கிற தோற்றம். எல்லாம் இவள் ஊரைச் சேர்ந்த கூலி மக்கள்தான். வேந்தட்டிக்கிழங்கு வேட்டைக்காரர்கள்தான். 

‘எம்மாடீ… எம்புட்டுத் தொலைவுக்குப் போயிட்டாக? நம்ம ஊருச் சிறுக்கிக… போறப்போ வாரியான்னு ஒரு வார்த்தை கேட்டாளுவளா? அரவமில்லாம முந்தி ஓடியிருக் காகளே… என்னத்தை அள்ளுதுக்கு இப்படி ‘கமுக்கமா’ காகளே…என்னத்தை ஓடுதாளுவளோ…’ 

மனசுக்குள் ஜ்வாலை விட்டெரிந்த ‘வௌத்தை’ வாய்விட்டே முணங்கிக் கொண்டாள். கூட ரெண்டு கெட்ட வார்த்தைகளையும் உதிர்த்துக் கொண்டாள். 

நடக்க நடக்க தொலைவு தொலையவில்லை. தொடைச் சதைகளில் வலியெடுத்தது. இடுப்பைச் சுற்றிக் கடுகடுத்தது. உடலின் ஒவ்வொரு சதைத் துணுக்கும் ‘உட்கார், உட்கார்’ என்று ஓய்வுக்காகக் கெஞ்சியது. 

ஒரு போட்டியின் வைராக்யத்தில் உடம்பின் அவஸ்தை களை தாங்கிக் கொண்டு மேலும் துரிதமானாள். ‘ஏய் பலவற்றைச் சிறிக்கிகா… உங்களுக்கு நா எளச்சவளா…? பாத்துருவோம்’. 

குளிர்ச்சியான காலை வெய்யில். இலேசான வாடைக் காற்று வியர்வையைப் புணர்ந்தது. 

வானத்தை முத்தமிடுகிற உயரத்தில் நிமிர்ந்து நின்ற சிமிண்டாலையின் புகைக் குழாயிலிருந்து வெண்ணிற மேகங்கள் கூட்டமாகப் படையெடுத்தன. தென்மேற்குத் திசையில் அணிவகுத்து பயணப்பட்டன. வானத்தில் போடப்பட்ட வெள்ளிரோடு போலத் தோற்றமளித்தது. 

நடை நடையாக இருக்க… மனசு பிள்ளைகளிடம் ஓடியது. 

இந்நேரத்துலே சின்னவன் முழிச்சிக்கிட்டு என்னைத் தேடுவான். ம்மா… யம்மா… ன்னு சிணுங்கிச் சிணுங்கி அழுவான். பாவம், அந்தப் பொம்பளைப் புள்ளை.. அவளாலே எப்படி அந்தப் பயலை சமாளிக்க முடியும்? 

கஞ்சியைத்தா ஊத்திக்குடுப்பா. அதுதானே முடியும்! தாயைத் தேடுற பச்சை மண்ணுக்கு.. கஞ்சியைக் காட்டுனா போதுமா? 

செல்லம்மாவின் பெற்றமனசு ஏங்கித் தவித்தது. 

இதயத்துள் ஒரு சோகம் திரண்டு வந்து நின்று கொண்டது. கண்ணுக்குள் வந்து மோதி, குத்தல் எடுத்தது. 

புள்ளைக முகமறிஞ்சு பேசிச் சிரிச்சு, பசியறிஞ்சு கஞ்சி குடுத்து பார்த்துப் பூரிக்க கொடுப்பினை இல்லாமல் போயிற்றே… எல்லாம் அந்தப் பாவி மனுசனாலே வந்த வெனை. 

ஓடியாடி ஒழைச்சு சம்பாதிச்சுப் போட வேண்டிய மனுசன், இந்த மணிக்கொத்துப் புள்ளைகளை மறந்துட்டு… ஊர்ப்பட்ட ஒரு சிறுக்கியை இழுத்துக்கிட்டு ஓடிட்டான் பொட்டைச் சிறுக்கிநா பொழப்புக்காக இப்படி நாயா அலைஞ்சு…காட்லே சீரழிய வேண்டியிருக்கு… 

தன்னையும் குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு ஓடிப்போன புருஷனை நினைக்கிற கணத்தில் சண்டாளமாக வௌம் பொங்கினாலும், அந்தக் கோபம் மறு நிமிஷமே இழப்பின் சோகமாகக் கனிந்து மனசை அழுத்துகிறது. 

நெஞ்சுக்குள் மோதித் தழும்புகிற வேதனை, கண்களின் ஓரங்களில் நீராகக் கசிகிறது… 

கம்மாபட்டியைக் கழித்துவிட்டாள். சுள்ளென்று உரைக்க வேண்டிய ஏறுவெய்யில் இதமாக இருந்தது. மெட்டல் ரோட்டை விட்டு விலகி, வெறுமையாகிக் கிடந்த கண்மாயுக்குள் இறங்கினாள். குறுக்குப் பாதையில் நடந்தாள். கண்ணில் சூரிய வெளிச்சம் ஊசியாகக் குத்தியது. ஆயிற்று… இதோ வந்தாகிவிட்டது. இன்னும் ரெண்டுமைல்தான். புல்லப்பட்டி கருகக்காடு. 

ஏர்முகம் பாராமல் ஏங்கிப் போய் வெம்பரப்பாகக் கிடக்கிற கருகக்காட்லே மொங்கு, மொங்குன்னு வெட்ட வேண்டியதுதான். முழங்கால் ஆழத்துக்குக் கீழே இஞ்சி போல புதைஞ்சு கிடக்கிற வேந்தட்டிக் கிழங்கை குத்திக்கிளறி எடுக்க வேண்டியதுதான். எம்புட்டுக் கிடக்குதோ… அம்புட்டுக்காசு… 

ஏதோ, யோகமிருந்து நாலு கிலோவாச்சும் கெடச்சா… அஞ்சு ரூவா சம்பளமாவது கெடக்கும்… அந்தத் துட்டைப் பார்க்க… இத்தனை அலைச்சல்… பாடுகள்! 

ஒரு பொழுதின் வயிற்றுப்பாடு கழிய… இந்த நாய்படாத பாடு பட வேண்டியிருக்கு. இந்த அவலத்துலே உசுர் வைச்சிக்கிட்டு இருக்கிறதைவிட மாண்டு மடிஞ்சு போகலாம்… சே! 

பொழுது முகம் சிவந்து விட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் முதுகுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தது. 

காளிமுத்து, கடையை விட்டு வெளியே வந்த செல்லம்மா, சாமான்கள் வாங்கியது போக மிச்சமிருந்த சில்லறையை எண்ணிப் பார்த்தாள். ஒரு ரூபாய்க்கு கூட எட்டவில்லை. முந்தியில் அதை முடிந்து கொண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டாள். 

வீட்டுக்குள் நுழைந்தாள். வீடெல்லாம் கோழிப்பீ, பானை சட்டிகள் தாறுமாறாகக் கிடந்தன. சாமான்களை வைத்துவிட்டு மனசைக் கவ்வுகிற ஒரு ஆவலோடு வெளியே பார்த்தாள். 

இடுப்பில் தம்பியை வைத்து இழுத்துக்கொண்டு, ஒரு வெறிவேக ஆவலில் ஓடிவந்தாள் பொம்பளைப் புள்ளை. செல்லம்மாவெளியே பாய்ந்து மகனை ஆவிசேர்த்து வாங்கிக் கொண்டாள். மனசெல்லாம் பொங்கிப் பாய்ந்த ஒரு இன்ப ஊற்று அவளுக்குள் மோதி விம்மியது. 

ஒரு முரட்டு வெறியோடு மகனைத் தன் முகத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டு மாறிமாறி முத்தமிட்டாள். “ஏங் கண்ணு… ஏஞ் செல்லம்…” என்று பிதற்றிக்கொண்டே முத்தமழை பொழிந்தாள். 

கொஞ்சி முடித்து நிறுத்தியபோது… அவள் கண்களில் நீர்க்கசிவு தெரிந்தது. மனசுக்குள் பொங்கிய இன்ப ஊற்றின் கசிவு. 

“எம்மா…எம்மா…” என்று துவக்கிய மகள், தம்பியைப் பற்றியும், அவன் செய்த சேட்டைகளைப் பற்றியும் நீட்டி முழக்கி நிறையச் சொன்னாள். 

அதைக் கேட்டு நெஞ்செல்லாம் பூரித்துப் போனாள். 

கடையில் வாங்கிவந்த பொறி கடலையை மகள் கையிலும், முறுக்கை மகன் கையிலும் தந்தாள். “தின்னுங்கடா கண்ணுகளா… தின்னுங்க…” 

“ஏண்டா…நீ அம்மா எங்கேன்னு தேடலியாடா கண்ணு ஏஞ்செல்லமில்லே, ஏந்தங்கமில்லே” 

அவளுள் பொங்கிப் பீறிட்ட சந்தோஷக் கிளர்ச்சியில் செல்லம்மா குழந்தையை மறுபடியும் அழுந்த அணைத்து முத்தமிட்டாள். அவள் முகத்தில் காலைச்சூரியனின் பிரகாசம் ஒளிர்ந்தது. 

மகளின் காய்ந்த தலையை வலது கையால் தடவிக் கொண்டே, மார்பிலிருந்த மகனின் அழுக்குக் கன்னத்தைத் தன் கன்னத்தோடு சேர்த்துத் தேய்த்துக் கொண்டாள். அந்த ஸ்பரிசத்தில் தோன்றிய சுக உணர்ச்சியும், மனசுக்குள் பூத்துச் சொரிந்த ஆனந்தமும்… பொழுது பூராவும் அவள் வடித்த வியர்வையையும், களைப்பையும், சலிப்பையும் துடைத்து விட்டது போலிருந்தது. 

அந்தப் பிஞ்சு முகங்களின் மலர்ச்சியையும், வெளிச் சத்தையும் பார்க்கப் பார்க்க அவளுள் ஒரு இனிமையான இசை எழுந்து ஒலிப்பது போலிருந்தது. 

இந்த உணர்ச்சியின் உத்வேக பலம் மட்டும் சாஸ்வதமாக இருந்தால்… இந்தப் பஞ்சத்துடன் மட்டுமல்ல; எந்த ராட்சஸ வாழ்க்கையுடனும் மல்லுக்கட்டுவதற்கு அவள் பயப்படமாட்டாள்! 

மரணமே நெருங்கி வந்தாலும் ‘தூரப்போ’ என்று துரத்துவாள். 

– தாமரை – பிப்ரவரி, 1985. இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற கதை.

– சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987, கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *