கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2024
பார்வையிட்டோர்: 1,827 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளியிலிருந்து ஜிங்லி வீட்டுக்குத் திரும்பி வந்து கொண் டிருந்தான். அவன் நடைக்கேற்ப தோளில் புத்தகப் பை, கடியாரத்தின் பெண்டுலம்போல் ஆடியது. அவன் வந்து கொண்டிருக்கும் இடத்தில் ஆள் நடமாட்டம் கிடையாது. அதுவும் இந்த ரயில் தண்டவாளம் தாண்டற இடம் வரதே. சரியான பொட்டல் காடு. யாராவது அடிச்சு போட்டால் கேட்க ஒரு ஆள்-கண்டேன்’னு கத்த ஒரு காக்காகூட கிடையாது. அந்த மாதிரி ஏதாவது நேர்ந்துட்டால் “நீ ஏன் அங்கே தனியா போனே?”ன்னு கேட்டு அடிக்கத்தான் பெரிய வாளுக்குத் தெரியும், “ஐயோ, பட்டது பல்லா, கல்லா?” ன்னு பதைக்கறது அப்புறம்தான். 

ஆனால் ஜிங்லிக்கு -(‘ஜீங்லிக் கண்ணாட்டான்’- கண் ணாட்டிக்கு ஆண்பால்!) இந்த இடம் எல்லாம் தண்ணி பட்ட பாடம், ‘கர்ர்ர்’ வாணம் போன்ற அவன் ஒட்டத்துக்கு முன்னால் எவனாவது நிற்க முடியுமா? ஜிங்லிக்குப் பாட்டி இட்டபேர் ‘சிட்டிக் குருவி’ன்னா! ஆனரல் அந்த வேப்ப மரத் தண்டை – அரசமரம்னு இன்னொருத்தர் சொல்றா. இரண் டுக்கும் வித்தியாசம் என்னன்னு அவனுக்குக் தெரியாது. ஆனால் அது முக்யமில்லே – அந்த மரத்தண்டை வரபோது மாத்ரம் மார் தவறாமல் ‘பட்பட’னு ரெண்டு அடி – காதுக்கு நன்னா கேக்கற மாதிரி – அடிச்சுக்கும். ஏன்னா, அதிலே மூணு வருஷத்துக்கு முன்னாலே – அப்பாவுக்கு இந்த ஸ்டேஷ னுக்கு மாத்தல் ஆறதுக்கு முன்னாலேயே – ஒரு ஆள் தொங்கினானாம். வேலைக்காரி சின்னம்மா பிள்ளை கடம்பாடி. “அதோ பாத்தியா, அந்தக் கிளைதான்!”ன்னு கூடவர்ற போதெல்லாம் சுட்டிக் காமிக்கத் தவர்றதேயில்லே. பொம்ம னாட்டிபோல் மயிரை வளர்த்து, பின்னல் போட்டுண்டு – 

“நாகாத்தாளுக்கு முடி கொடுக்கறேன்னு வேண்டுதல் அம்மா. இன்னும் வேளை வல்லேம்மா. பையனைக் கண் ணாலே பார்க்க முடியுமாம்மா அப்போ! உடம்பெல்லாம் கண்ணாயிருந்தான். நான் என்னத்தைச் சொல்லப்போறேன் போ. அந்தக் கோலத்தை! அவளுக்குத்தான் புண்ணியமா யிருந்தான். ஆத்தா தெருவையே சூறையாடிட்டா. அந்த வருசம் ஊரிலே ஒரே வூட்டிலே எத்தினி பேருக்கு ஆயுசைக் கவுத்துப் போட்டு அளந்துட்டா தெரியுமா? காலையிலே ஒண்ணு ஏணையிலே போனா அன்னி மாலையிலேயே இன் ணொண்ணை பாடையிலே தூக்கிட்டு குடுகுடுன்னு ஓடுவாங்க. “ஐயோ மவனே, கப்பலைக் கவுத்துட்டியேடா’… ஐயோ எமனே. என் மஞ்சளுக்கும் குங்குவத்துக்கும் உலைவெச்சுட்டி யேடா”ன்னு வாய்வுட்டு அலறி வவுத்தெரிச்சலைத் தீர்த்துக்க முடியுமா என்ன?-ஊம் -மூச்சு! வந்து மேலே குளுந்து போனது யாரு? ஆத்தான்னா? அப்பறம் அவ கோவம் தணியற வரைக்கும் ஊருக்கே மோசம்னா? இந்த விசயத்து லெல்லாம் அந்த நாள்ளெ ரொம்பக் கட்டுப்பாடா இருப் பாங்க. இப்போ மாதிரியா? பரமாத்மா ஊர்க்கட்டைப் பேசப் போயிட்டேன். முன்னாலே குடும்பம் கட்டாயிருக் குதோ? கொயந்தைக்குக் கஞ்சிக்கு வாங்கி வெச்ச பாலை, ஆத்தாளே காப்பிக்கு ஊத்திக் குடிச்சுட்டு மவனுக்குக் கையை விரிக்கிறா. இந்த நாளைச் சொல்லு! என்னவோ ஆத்தா ளுக்கும் சோவம் ஒரு வகையாத் தணிஞ்சுது, அவ மலை யேறிப் போவு முன்னாலே, தான் அளந்த படியை சும்மா உருட்டக் கூடாதுன்னு அவளுக்கும் அந்த நாயம் அந்த சமயத் திலேயும் நெனப்பிலே இருந்து என் பைய ஒரு கண்ணிலே பூவோடு மாத்திரம் விட்டுட்டுப் போயிட்டா. அவளிட்ட பிச்சை என் மவன். எங்கே இருந்தானாச்சும் ஆயுசோடு அவன் நல்லாயிருக்கணும்: எனக்கு உதவாட்டியும் போறான். நான் எப்படியோ அய்யாமாரு வீட்டுக் காப்பித்தண்ணி குடிச்சி- கஞ்சித்தண்ணி போட்டா கஞ்சித்தண்ணி,அமா வாசை. பண்டிகை சோறு போட்டால் சோறு – இப்பிடியே என் வவுத்தை வளத்துட்டு எண்ணிக்கேனும் ஒருநாள் இந்தப் புளக்கடையிலேயே தலைப்பை விரிச்சுப் போட்டவ திரும்பி எழுந்திராமே போனாலும் போறேன். எம் புள்ளை எனக்கு ஒதவ மாட்டான்; எனக்கே தெரியுது. அப்பன் சரியா இருந் தாத்தானே அவனும் சரியா இருப்பான்? அப்பனில்லாப் புள்ளை. நான் என் வவுத்துக் கய்ட்டத்துலே என் பொம்புளே சன்மத்திலே என்னாத்தை அவனைக் கட்டி ஆள முடியுது? ஜாண் புள்ளையானாலும் ஆண்புள்ளையில்லே? இப்பவே துண்டு பீடி பிடிக்கிறான். எனக்கே தெரியுது. என்னையே வண்டையாத் திட்றான். எனக்குக் காது அவிஞ்சா போச்சு? 

ஒருசமயம் இல்லாட்டி ஒருசமயம் கோவம் பொருக்கு தில்லே; ‘அடப்பாவி. ஏற்கனவே ஒரு கண் அவிஞ்சு போச் சே?’ன்னு கையை ஓங்கறேன். ஆனால் கை இறங்குதப்போ தானா வேகம் கொறைஞ்சு போவுதே. அது என்ன ஆச்சரியம் அம்மா? அதுவும் அந்த மாரியாத்தா வரம்தானா. பையன் மேலே கை படறப்போ பஞ்சாத்தான் ஒத்திப் போவுது, ஆனா அதுக்கே அந்த சமயம் மவன் மனம் எந்த கொணத் துலே இருக்குமோ, எனக்குத் தெரியறதில்லே? அவனே வாய்விட்டு சிரிச்சாலும் போச்சு, இல்லாட்டி, “ஐயோ அப்பாடி! அம்மாடி! கொல்றாளே, கொல்றாளே!”ன்னு தெருவைக் கூட்டி னாலும் போச்சு. ‘ஏண்டி அறிவு கெட்ட வளே! அம்பனில்லாக் கொயந்தை – ஒனக்கு ஒரு தலைக்கு ஒரு மவன் – அவனை அடிச்சு ஒனக்கு என்ன லாபம்?’னு மத்தியஸ்தம் பண்றவங்க ஒரு வார்த்தை சொன்னா எனக்குத் துக்கம் நெஞ்சைப் பிடுங்கிக்குது, அம்மா ஒங்கிட்ட மாத்ரம் விட்டுச் சொல்றேனே; ஓங்கிட்டச் சொன்னா என் ரகசியம் எங்கும் போவாது; எனக்குத் தெரியும். எனக்குக் கடம்பாடி கிட்ட கதிகலக்கம்தான். இந்தக் காலத்துப் பசங்களைத் தைரியமா ஒரு வார்த்தை பேச முடியுதா? தொட்டதுக்கெல்லாம் வூட்டைவுட்டு ஓடிப்போவுதுங்க. ரயிலடியிலே தலையைக் குடுக்குதுங்க, ஒருநாள் கண்ணப்பன் புள்ளையார் கொளத் திலே மிதக்குதுங்க. அதுங்கதான் ரோசக்காரப்புள்ளைங்களா. இல்லே, பண்டமெல்லாம் வெலையேறிப் போச்சுன்னு உசிர் மாத்திரம் அப்படி மலிஞ்சு போச்சா? – இங்கிலீசு படிச்சவங்க. ஓங்களைத்தான் கேக்கணும். 

“ஆனா என் மவன் மேலே யாராச்சும் கைவெச்சாங் கன்னு தெரிஞ்சுது, எனக்குத் தாங்காது; சும்மா வுட மாட் டேன். காளி கோவம் என் மேலே சாமி வந்துடும். முந்தா நேத்து இசுகூலுக்குப் போயி அவனோடே வாத்தியாரம்மா கிட்ட நானே சொல்லிவிட்டேன்: இதோ பாரு, என் மவன் மூணாம் கிளாசை மூணு வருசமாத் தாண்டாட்டியும் எனக்கு அக்கறையில்லே. அவன் அப்பாஉசிரோடே இருந்தா எப்பவோ தாண்டியிருப்பான், அவன் அப்பன், அரிவாள் மீசை ஆறு முகக் கிராமணி, ஒரு பேச்சு பேசக்கூட வேணாம் – முளங் காலுக்கு மேலே கெட்டி செவப்புச் சாய வேட்டி, பானை வவுத்துலே பாதி சரிய, புள்ளையை ஒரு கையிலே புடிச்சுக் கிட்டு வந்து நின்னு மாங்கொட்டை முளியை ஒரு தரம் முளிச்சாப் போதும், பெரிய வாத்தியாரே நேரே வந்து புள்ளையைக் கூட்டிக் கிட்டுத் தன் கிளாசுலேயே குந்த வெச்சுடுவாரு. அதனாலே என் புள்ளைக்குப் படிப்பு ஏறாட்டிப் போவுது. அவனுக்கு ஏறாது. அவனுக்கு ஏற் வேணாம். நீங்கதான் ஒசந்த சாதி. பொண்ணானாலும் படிப்பு வேணும்; வேலை வேணும், கலியாணம் ஆவல்லேன்னா, கலியாணத்துக்குத் துட்டு சேர்க்க, வேலைக்குப் போவீங்க. கலியாணம் ஆச்சுன்னா செலவுக்குப் பத்த லேன்னு, பெத்த கொயந்தையைத் தொட்டிலில் வளர்த் துட்டு, வாயிலே சீப்பானைச் சொருவிட்டு, புருசனும் பொஞ்சாதியும் ரெண்டு பேரும் மூலைக் கொத்தரா உத்தியோவம் பார்ப்பீங்க, என் புள்ளே உங்க மாதிரி யெல்லாம் உத்தியோவம் பார்க்கப் போறானா? அந்த நாளிலே அவன் அப்பன் பாளையைச் சீவி கள்ளை இறக்கி னான்னா இந்த நாளினே என் மவன் பனஞ்சாறை இறக் கிட்டுப் போறான். அவன் அப்பன் கத்தி இன்னும் ஏரவாணையில் சொருவித்தான் இருக்குது, அதன் கூர் இன்னும் மங்கல்லே. என் மவன் கண்ணாலம் கட்ட உங்க மாதிரியெல்லாம் ஒறவு தாண்டி, ஊர் தாண்டிப் போக வேணாம். எங்க குலம் போறதில்லே, என் மவனுக்குப் பொண்ணு என் அண்ணி வவுத்துலே வளருது. இந்த ஆவுணிக்கு மாசம் அஞ்சு, நான் அண்ணி வவுத்தைத் தொட்டுப் பார்த்துச் சொல்லிட்டேன், ‘இது என் வூட்டுப் படியிலே வலது காலை முன் எடுத்து வெச்சு வர என் மருமவ தான்’னு பொண்ணுதான் பிறக்கும்; எனக்குத் தெரியும். அது எங்க குலச் சத்தியம். என் அண்ணாத்தை பேச்சுக்கு மறுவார்த்தை சொல்லுமா என்ன? ஆமான்னு தலையை ஆட்டினாலே அது ஆணையிட்ட சொல்லுதான். என் அண்ணிதான் எதிர் சொல்ல முடியுமா? என்னாச்சும் மொனகினாலே, வவுறும் புள்ளையுமா தெருவிலே நிறுத்திடுவான், நான் சொன்னாலும் கேட்கமாட்டான். உன் பொண்ணுக்கு நீ தேடி வெச்ச புள்ளை பினாங்கிலேருந்து வருவான், நீயும் அவங்களோடு கப்பலேறிப் போய், அவுங்களுக்கு சமைச்சுப் போட்டுக்கிட்டு மூணு பேரும் குசாலாக் குடும்பம் நடத்துங்க’ன்னு சொல்லிடுவான். அதனாலே வாத்தியாரம்மா. ஒங்க சாதிக் கவலையெல்லாம் எங்களுக்கில்லே. என் பையனை நீ தொடாதே”ன்னு சொல்லிட்டேன். 

“சரிம்மா. பேசிட்டே இருந்துட்டேன். பொளுது சாஞ்சு போச்சு. ரெண்டு வெத்திலை இருந்தாக் குடேன். தொண்டை காஞ்சு போச்சு. எனக்கு நல்ல வெத்திலேயா வேணாம். கட்டைப் புகையிலைக்குக் காஞ்ச வெத்திலை பத்தாதா? துளிர் வெத்திலையை நீயே போட்டுக்க. குளி குளிச்சிருக்கே, பாவம் அந்தக் கொடிக்கால்காரனை வளியிலே கண்டா இங்கே தெனம் ஒரு கவுளி கொண்டாந்து போடச் சொல்லவா. இல்லே, நானே வாங்கி வந்துடவா? வவுத்தை இழுத்துக் கட்டும்மா; இல்லாட்டி: தொப்பை வுளுந்துடும். இந்தத் தடவையும் பொண்ணைப் பெத்துக்கிட்டே, போ. அப்போ நம்ம ஜிங்லிப் பையன்தான் செல்லமவன். மூணு பொண்ணுக்கு நடுவுலே ஒரு ஆம்புள்ளே. ஜிங்லி அதிர்ஸ்டக் காரப் பையன், நான் அன்னிக்கே சொன்னேனே – ஒனக்கும் ஆயாளுக்கும் கையாலே ஆவல்லேன்னு அவனுக்குத் தலைக்குத் தண்ணி போட்டேனே. அன்னிக்கே கண்டு சொன்னேன்! பையனுக்கு மச்சம் எங்கே இருக்குது, பார்த்தியா? 

“இதென்னடியம்மா, உள்ளதை சொன்னா ஒனக்கு ஏன் இப்படி மொவம் செவக்குது? ஆனா நான் அதியப் பிரசங்கி தான்; ஒப்புக்கறேன். புள்ளை ஓடம்புலே இருக்குது பெத்தவளுக்குத் தெரியாமே மத்தவங்க என்னைத்தைக் கண்டுசொல்ல முடியும்? ஆனா என் மேலே தப்பா எதுவும் எண்ணம் வெக்காதே, அம்மா. நான் கள்ளங் கவடு அத்தவ. என் வாய்க்கு வந்ததை என்னவோ குறி சொல்றாப்போல சொல்லிட்டே போறேன். 

“உன் புள்ளையும் என் புள்ளையும் எப்பிடி ஒத்துமையா இருக்காங்க, பார்த்தியாம்மா? உன் மவன், புத்தகம் சிலேட்டு பையிலே தொங்க விட்டுக்கிட்டு என் குடிசைக்கெதிரே நின்னுக்கிட்டு ‘:கடம்பாடீ!”ன்னு கொரல் குடுக்கிறபோது என் பையன் அந்த நேரம் எந்த முருங்கை மரத்திலே ஏறிக் கிட்டு இருக்குதோ, எனக்கு எம்மாம் சந்தோசமா இருக்குது தெரியுமா? ஒனக்குத் தெரியாது; நீ பொய்னா பொய், மெய்னா மெய், வெச்சுக்க எனக்குக் காது குளுகுளுங்குது, ரெண்டு பேரும் சேர்ந்தாப்போலே பள்ளிக்கூடம் போவச்சே எட்ட எட்டப் போற அந்த ரெண்டு முதுவையும் சுத்தி நெத்தியிலே கையை முறிச்சா திஸ்டி எப்படிக் களியுது தெரியுமா? இந்த பாப்பார சாதிதான் படிச்ச சாதி. இது தான் எதிலேயும் நம்பிக்கையில்லாத சாதி. அசப்பிலே அவுங்களைப் பார்த்தா ரெட்டைன்னு சொல்லுவாங்க. அதுக்கென்ன, என் புள்ளை நிறம் கொஞ்சம் மட்டு. உன் புள்ளை திரேகம் கொஞ்சம் இளைப்பாக் காட்டுது- பச்சையும் புளுங்கலும் கலந்தாப்போல, அவ்வளவு தானே! போன வாரம் பளம் டாயரும் சொக்காயும் நீ குடுத்தியே, கடம்பாடிக்கு என்ன அச்சா இருக்குது தெரியுமா; அவனுக்கே தைச்சாப்போலே! களுத்துலேதான் புடிப்பாயிருக்குது. இதுக்குன்னு இருந்தா அதுகூட இருக்காதா வவுத்துலே என் புள்ளே, உன் வவுத்துலே உன் புள்ளேன்னு பொறந்தா? கடவுளோட எண்ணம் இல்லாட்டி ஒலகத்துலே எல்லாரும் ஒரு வவுத்துலே பொறந்திருக்க மாட்டாங்களா! ஆனா நான் கடம்பாடிக்கு தைரியம் சொல்லியிருக்குறேன். இகு இரு’ அய்யர் வூட்டுப் பொண்ணுக்குக் கண்ணாலம்- ஆனை மேலே, குதிரை மேலே, ஸாரட்டு வண்டி மேலே அவசரமா வந்துட்டேயிருக்குது. ஒனக்கு டாயர். சொக்கா, எனக்குப் புடவை புதுஸ்ஸாவே எடுப்பாங்க’ன்னு. புள்ளைக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாத்தறது, நான் சொல்லிட்டேன், உன் பாடு. எங்களுக்கு வார்த்தைதான் பெரிசு. நாங்க பொய் சொல்லுவோம். குடிப்போம். காவலிலே இருந்துட்டு வந்துடுவோம், எங்க சாதிக்கு அது ஒண்ணும் பங்கமில்லே. ஆனா வார்த்தையைப் பொறுப்பாக் குடுத்துட்டா தலைபோனாலும், என் அம்மா தாலி போனாலும், காப்பாத்தியே ஆவணும், தெரிஞ்சுதா? எப்போ அம்மா நாள் பார்த்திருக்குது? உன் மவளைக் கேட்டா, அடி போடி சின்னம்மா!’ன்னு சிரிச்சுக்கிட்டே மொவத்தை வெட்டறதைப் பார்த்தாலே, நாள் ரொம்பக் கிட்ட வந்துக் கிட்டேயிருக்குதுன்னு தோணுது. எப்போ வந்தா எனக் கென்னம்மா? அது எங்கே இருந்தானாச்சும் சரி, இருக்கற எடத்துலே தோளோடு தாலி தொங்கத் தொங்கக் கட்டி பதினாறும் பெத்து திருக்காசா இருக்கணும். அப்போ என்னிக்காச்சும் வெள்ளிக்கிளமை தலை முளுவிட்டு தண்ணி காய கூந்தலை தோளாப் பட்டையில் இறக்கிவுடறப்போ, அது அலுவாத் துண்டாட்டம் அவுந்துவுளறப்போ, மயிரை ஒண்ணொண்ணாப் பிரிச்சு சிக்கு எடுக்கறப்போ, அண்ணிக்கு ஒருநா நான் என் ஆத்தா வூட்டுலே இருக்கறப்போ, சின்னம்மா, பாம்புக்கும் முள்ளுக்கும் அஞ்சாம, தாளம் புதரிலிருந்து தாளம் பூவைத் தன் கையாலே புடுங்கி வந்து எனக்குத் தன் கையாலேயே சடை தெச்சு வெச்சாளே!’ன்னு ஒரு சமயம் நெனைச்சாலும் அந்த நெனைப்பின் மணம் அத்தனை இடம் தாண்டி வருசம் தாண்டி என்னை இங்கே வந்து எட்டும்; எனக்கு அது போதும். நீ என்னம்மா சொல்றே? இந்த ஒலகத்துலே யாரு வேறே என்னத்தைக் கண்டது? நீ என்னம்மா சொல்றே? எல்லாத்தியும்விட எண்ணந்தானே பெரிசு? அதுகூட இல்லாட்டி உயிர் வாளவே என்ன இருக்குது? 

“நான் இப்டீ ஒரொருநா, பாக்கை ஊதி வாயிலே போட்டு, வெத்திலையிலே சுண்ணாம்பு தடவிக்கிட்டிருக்கற நேரம் வரைக்கும், பாக்கை மெல்லற வேளைக்கு…அது பாக்கு மயக்கமோ, எள் ஆசைதானோ, எனக்குத் தெரியாது – இப்டீ நெனைச்சுக்குவேன் – நம்ம ஜிங்லிப் பையன் சின்ன அய்யர் ஆனப்புறம் பெரிய அய்யராட்டமே இதே டேஸனுக்கு டேஸன் மாஸ்டரா வந்துட்டா, அவர்கிட்ட கடம்பாடி வேலைக்கு அமந்துட்டா அட, வர ரயிலுக்கு கொடி காட்டவும், வந்த ரயிலை போ”ன்னு அந்தத் தண்ட பாளத்தைத் தொங்கவிட்டிருக்காங்களே அதைத் தட்டவும் ஒரு ஆள் வேணாமா? அட, அதுவே வேணாம், ஐயா வேட்டியைத் தோச்சுப் போடவும், பசங்களுக்கு வேடிக்கை காட்டவும், டேஸனுக்கும் வூட்டுக்கும் பாதையிலே புல் செதுக்கவுமாவது ஆள் வேணாமா? – அப்போ அது எவ்வளவு நல்லாயிருக்கும்! என்னவோ வெள்ளி மொளைக்கறதுக்கு முன்னாலே நான் எளுந்து உன் வீட்டு வாசல்லே தண்ணி தெளிக்கக் கோலம் இருத்த வேளை வீணாப் போவல்லேன்னு அந்த நிம்மதியிலேயே கவலையில்லாமே கண்ணை மூடிடுவேன். அட, நான் நெனைச்சபடித்தான் நடக்குமோ நடக்காதோ. அந்த முத்தாலம்மைக்குத் தான் வெளிச்சம். நெனைச்சுட்டாவது இருக்கேனே, நெனைப்புக்கு யார்கிட்டே யாவது லசேன்ஸ் வாங்கியாவணுமா? நீ என்ன சொல்றே? எனக்குப் பேசிப் பேசித் தொண்டை காஞ்சே போச்சு நீ தலையைக்கூட ஆட்டாம கள்ளுக்கடை கருவேல் மரத்துப் புள்ளையாராட்டம் குந்திட்டிருக்கியே! நான் கேட்ட விசயம், காஞ்ச வெத்திலை என்ன ஆச்சு?- 


அந்த மரத்தண்டை வரும்போதெல்லாம் ஜிங்லிக்கு மார்பு ‘பட்பட்’ –

ஓடிவந்தால் “படபட” 

பயந்தால் “படபட” 

கால் அந்த இடத்தைக் கடுகியும் கடக்கத் தவித்தாலும். கண்காணாத கைகள் ஆயிரம் மரத்தினின்று பிரிந்து வந்து நெஞ்சை இறுகத் தழுவி மனத்தை (நெஞ்சில் தான் மனம் என்று விதித்தவர் யாரோ?) தடுக்கும். ஒரு கணம்தான் அந்த அணைப்பு. அதிலும் பாதிதான் அவ்வணைப்பின் தடுப்பு. உடனே அக்கைகள் விட்டுவிடும். கூடவே நேரும் கால்களின் வெலவெலப்பு, நெஞ்சையழுத்தும் அம்மூச்சுத் திணறல், கண்ணுக்கெதிரே காற்றில் தன்னை எழுதிக் கொண்டு எழும் அந்த நிழலடைந்த உருவம் – அதெல்லாம் நேரத்தையும், அந்த சமயத்தின் மனோதைரியத்தையும். பக்கத்திலிருக்கும் துணையையும் பொறுத்தவை. 

இன்னிக்கு அந்தக் கடம்பாடிப் பயல் சேர்ந்து வரவில்லை. திடீர் திடீர்னு ஏன்தான் அவனுக்குக் கிறுக்குப் பிடிக்கிறதோ தெரியவில்லை. இருந்தாற் போலிருந்து காணாமற் போய் விடுவான். தேடிப்பிடிச்சால், பூமிமேல் கூர்ந்த கண்ணோடு, குனிஞ்ச முதுகு நிமிராமல் அடிமேல் அடிவைத்து, காசோ நகையோ தொலைச்சுட்ட மாதிரி தேடிக்கொண்டிருப்பான். 

“என்னடா கடம்பாடி, தேடறே?’

அவனுக்கே  தெரியாது. அதுதான் அவன் கிட்ட விசேஷம். 

‘அதுவே ஒரு ஸ்குரூ லூஸ், அத்தோடு சேராதேன்’னு அக்கா திட்டம் பண்ணறாள். 

ஆனால் கடம்பாடியும் ஜிங்லியும் தான். bracket(). ஆனால் அக்கா சொல்றதுக்கேற்றபடி கடம்பாடியின் காரியங்களும், எல்லைக்கோட்டின் அந்தண்டையா இந்தண்டையா என அச்சுறும்படி விளிம்பு படிந்திருக்கும். 

கடப்பாடிக்கு அசிங்கம், பயம் ரெண்டுமே என்னென்று தெரியாது. அவனுக்குப் பூனைக்குட்டி ‘ஷோக்’. 

ஒவ்வொருத்தருக்கு ஒரு ஒரு “ஷோக்” 

அக்காவுக்குக் கண்ணாடி ஷோக், நிலைக் கண்ணாடி எதிரே நின்னுட்டாள்னா அதில் தன்னைக் கண்டே தான் ப்ரமிச்சு நின்னுடுவாள். பாட்டி திட்டி அங்கிருந்து கலைச்சு விட்டாள்னா, போக வர கூடத்தில் புழங்கற போதெல்லாம் வழியிலே கண்ணாடியிலே கழுத்தை நீட்டிய வண்ணந்தான். உதட்டை முறுக்கிண்டு, புருவத்தை நகத்தால் கீறிண்டு. நெற்றியில் தொங்கும் மயிர்ப் பிரியை வளையமாய்த் திருகி விட்டுண்டு – அது என்னென்ன கோணங்கியோ! 

அப்பாவுக்கு photo ஷோக். யார் எங்கே எடுக்கப் போறான்னு எப்படி மோப்பம் தெரியுமோ! அது தெரிஞ் சவாளோ தெரியாதவாளோ – அவாளுக்கு சம்மதமோ இல்லையோ — no mind ஓரத்திலாவது டக்குனு தலையை நீட்டிடுவார். 

பாட்டிக்கு கற்சட்டி ஷோக். அடுக்காய் ஒண்ணுக் குள்ளே ஒண்ணு – இது வெத்தல் குழம்புக் கச்சட்டி. இது ரஸக் கச்சட்டி, இது தோசைமாவு கரைக்கிற கச்சட்டி இது கறி வதக்கற கச்சட்டி இது வடுமாங்காய் ஊறுகாய்க் கச்சட்டி. 

அதுமாதிரி கடம்பாடிக்கும் “பூனைக்குட்டி” ஷோக். ரெண்டு மூணு தன் மேல் ஏறி விளையாட விட்டுக் கொள்வான். ஒண்ணு அவன் கழுத்து வளைவில் அடிவயத்தை ‘ஈஷி”ண்டு உறங்க. ஒண்ணு அவன் உச்சந் தலை மேல் வாலை முறுக்கிண்டு நிற்கும். ஒண்ணு மடியில் விளையாடும். பக்கத்தில் தாய்ப்பூனை – நான் கிட்ட வந்தாலே சீர்றதே – கண்ணை மூடி சுகமாய் வெயில் காய்ஞ்சுண்டிருக்கும். 

கடம்பாடிக்கு எங்கிருந்துதான் செத்தபூனை கிடைக் குமோ! உடனே அவன்பாடு கொண்டாட்டந்தான். சவ ஊர்வலத்திற்கு தடபுடல் ஏற்பாடென்ன, சவந்தூக்க சம் வயதில் அவன் சேர்க்கும் “ஜமா” என்ன, பாடைய லங்காரத்திற்குப் பொன்னரளிப் பூவென்ன கொட்டு முழக்குக்கு ஓட்டை டப்பாக்களென்ன! 

சவத்தின் கீழ்வாய்ப்பல்லின் இளிப்பைக் காட்டி: “பாருடா ஜிங்லி, அதன் சிரிப்பைப் பார்த்தியாடா? எல்லாருக்கும் நடக்கிற மாதிரி நமக்கும் நடக்குதுன்னு அதுக்கு சந்தோஸண்டா! நம்மை வாழ்த்துதுடா!” 

அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு ஜிங்லி தலையை ஆட்டுவான். இல்லாட்டா அவனுக்குப் பிடித்தமான விளையாட்டு எவ்வளவோ இருக்கே, அதில் எல்லாம் சேர்த்துக்க மாட்டான்.”இப்படி எனக்குக் குமட்டறதே. இந்த நாத்தம் இவன் மூக்கை மாத்திரம் துளைக்காதா?” 

இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? கடம்பாடி யைத் தேள் கொட்டாதே! ஒருதரம் உப்புச் சட்டியில் கை லிட்டதும் அம்மாவை ஒரு போடு போட்டுட்டு – அம்மாவுக்கு வாந்தி வாந்தியா எடுக்கறதும், மயக்கம் போடறதும் மாரடைக்கறதும்… அடேயப்பா! ஒரே அமர்க்களப்படுத் திட்டா.பாட்டி, புளியைக் கரைச்சுண்டே (‘புளி கரைக்க ஒரு கச்சட்டி!’) ‘ஏற்கெனவே சொல்ல வேண்டாம், இக்கிலி பிக்கிலி! போறாத்துக்குக் கர்ப்பிணி வேறே!” 

அம்மாவுக்கு வலியைவிட ஆத்திரம். தேள் கண்ணுக்குப் படாமலே மின்னலாய் மறைஞ்சுடுத்து. கொட்டின தேளை அடிச்சாலே பாதி விஷம் இறங்கும் என்கிற ஆறுதலுக்கு வழி யில்லாமலே போச்சு. 

ஆனால் கடம்பாடி தேளைப் பிடித்துப் புறங்கையில் விட்டுக் கொள்வான். அது வாலைத் தூக்கிக் கொண்டு அவன் தோள் வரை ஏறும், ஆனால் ஒன்றும் செய்யாது. அது 

ல் அப்படி ஊர்கையில், அதன் செயலுடன் சோபையையும் இழந்து விட்டது போல் தோன்றும். படிப் படியாய் ஓய்ச்சல் கண்டு ஓட்டமும் தளர்ந்து, முழங்கை முட்டில் திகைத்து நின்று விடும். ‘அதன் பலத்தையும் வாங்கிக்கற அளவிற்கு கடம்பாடி ரத்தத்தில் எந்த விஷம் ஓடறது?’ 

“எப்டீடா அது, கடம்பாடி?” 

பதிலுக்குப் பதிலாக கற்சிலையின் புன்னகைபோல், கடம்பாடியின் வாயில் பூக்கும் ரகஸ்யம் என்னென்று கண்டவர் யார்? அவனைப்பற்றி ஒண்ணுமே புரிஞ்சுக்க முடியல்லே, 

ஒரு நாள் “குட்ஸ்” போச்சு. ”கார்டுவானை”ச் சேர்க் காமல் இருவத்தியாறு பெட்டி, வண்டி ஸ்டேஷனை தாண்டிப் போறபோது ஊதித்து. [இதுக்குன்னு ரயில்னு இருந்தால் ”விசில்’ அடிக்காதா என்ன? இல்லாட்டா அது என்னதான் ரயில்? ஒருதினுசா, முக்கி முனகிண்டு தொண்டையில் சதை அடைச்சுண்டு, பலஹீனமா. கூர்ப் பென்சிலால் கோடு கிழிச்ச மாதிரி-பாட்டி, தள்ளாமையில் ”ஊங்” கொட்டிண்டே தயிர் கடையறாளே அது மாதிரி- 

[ஆனால் கூடவே; “நடக்கிறது நடக்கட்டும். நான் வெண்ணெய் எடுத்துப் பார்த்துடத்தான் போறே”ன்னு பல்லைக் கடிக்கிறாளே, அதுதான் முழுக்கப் புரியல்லே. பாட்டிக்கு மோர் மேல் கோபமர், இல்லை. வேறு யார் மேல் கோபம்?] 

கடம்பாடிக்கு மூஞ்சி, நெருப்பில் காய்ச்சின அப்பளாம் மாதிரி வதங்கி, சவுங்கி, நசுங்சி. உதடு பிதுங்கிடுத்து. விசிச்சு, திடீரென விக்கி விக்கி அழறான். “என்னடா? என்னடா?’ன்னு பத்துத்தடவை பதறிக் கேட்டும் மூஞ்சிதான், உப்பறது. பதில் வரல்லே. ஜிங்லிக்கும் தொண்டை அடைக் கிறது. சிரங்கு, கொட்டாவி மாதிரி துக்கமும் ஒட்டுவா ரொட்டியா? 

ஆமா. சில சமயங்களில் எனக்கு என்னைப்பத்தி நினைச்சுக்கறபோது நான் இப்படி செஞ்சேன், நான் அப்படி செஞ்சேன்னு எண்ணிக்கறதைவிட; 

ஜிங்லி சிரிச்சான். ஜிங்லி காப்பியைக் கொட்டிட்டு பாட்டி கைக்கு அகப்படாமல் ஓடிப் போயிட்டான். சாயங்காலம் அப்பாகிட்ட ஜிங்லி சக்கை உதை வாங்கினான்- 

இப்படி என்னைப் பத்தியே நானே வேத்தாளாய் நினைச்சுப் பாக்கறதுலே ஏதோ ஒரு தமாஷ் இருக்கு. நெஞ்சிலே என்னவோ குறுகுறு பண்ணினாலும் அப்புறம் ரொம்ப நாழி கழிச்சு ஆயிரம் தேம்பலுக்கு நடுவே. 

“அத்தினி பாரத்தை இழுக்கமாட்டாமே இழுத்துட்டுப் போவுதே, அந்த எஞ்சினுக்கு எவ்வளவு கஷ்- ஷ்- டமா – ஆ – ஆயிருக்-க்-கும் ஊ,ஊ!” 

ஆனால் அன்னிக்கு ஒருநாள், ஜிங்லியும் கடம்பாடியும் கூடத்தில் விளையாடிண்டிருந்தபோது ஒரு பிள்ளைப் பூச்சி நத்திப் பறந்தது, கடம்பாடிக்கு திடீர்னு கோரம் வந்தது. அவனுக்கு மூஞ்சியே மாறிப்போச்சு, அதைக் காலாலேயே தேச்சுட்டான்- “சொதக்’- ஐயே!-பாட்டி லபலபன்னு அடிச்சுக்கறா. 

“அட கடம்பாடி கொடும்பாவிt முழியா.பழிகாரா! ஏற்கனவே உன் தாய்க்கு ஒரு பிள்ளையா வாய்ச்சிருக்கே, இன்னும் அவள் வயத்தெரிச்சலை என்ன கொட்டிருக்கக் காத்திண்டிருக்கேடா!” 

கடம்பாடி அசடு வழிய, மூஞ்சியைத் தொங்கப் போட்டுண்டு நிக்கறான். எனக்கு சிரிப்பா வரது. இஞ்சின் ‘குட்ஸை” இழுக்கறதைத் தாளாத மனசுலே பிள்ளைப் பூச்சியைக் கொன்ற கொடூரம் எப்படிக் குடி கொண்டிருக்கும்; 

“டே ஜிங்லி, இங்கே வாயேன்!” 

கடம்பாடி தன் இரண்டு கைகளையும் முதுகின் பின்னால் மறைச்சு வெச்சுண்டிருக்காள். 

“என்னத்துக்கு?” 

”வாயேன், உனக்கு ஒண்ணு காண்பிக்கப் போறேன்.” 

கிட்ட வந்ததும் கடம்பாடியின் கைகள் முரட்டுத் தனமாய் ஜிங்லியின் வலது கைமேல் பாய்ந்தன, திடீரென கட்டை விரலில் கண்ட “சுரீலி”ல் ஜிங்லி அலறி விட்டான். அது முள்ளா, ப்ளேடா, நெருப்புக் கொட்டையா? விரலின் உள்சதைக் குமிழில் சிவப்பு சட்டெனத் துளித்து உடனே பரவவும் ஆரம்பித்து விட்டது. மண்ணில் கூட ஒரு சொட்டு விழுந்து உறிஞ்சிப் போச்சு. 

உடனே கடம்பாடி குனிந்து அந்த விரலைப் பிடித்துத தன் வாயுள் வைத்துச் சப்பினான். அவன் வாயின் வெத் வெதப்பு வலிக்கு எவ்வளவு இதமாயிருக்கு! 

“ஜிங்லி, உன் ரத்தம் என் உடம்பில் கலந்துட்டுது. இனிமேல் நீ எனக்குத் தம்பி. அண்ணனாயிருக்கணும்னு உனக்கு ஆசையிருந்தால் அப்படியே இருந்துக்க; எனக்கு அக்கறையில்லே. ஆனால், நம்ம ரத்தம் ஒண்ணுக் கொண்ணு கலந்துட்டுது. இனிமேல் நாம ரெண்டு பேரும் ஒத்தருக் கொருத்தர் துரோகம் நினைக்கமுடியாது. இனி எத்தனை வருசமானாலும் சரி – நாம பிரிஞ்சு எங்கிருந்தாலும் சரி- உன் கஷ்டம் இனிமேல் என் கஷ்டம், எனக்கும் இனிமேல் அப்படித்தான். ஜிங்கி- ஜிங்லி – இதுக்கு நீ என்ன சொல்றே? ஏதாவது சொல்லேண்டா! நீ சொன்னாலும் சொல்லாட்டி யும் நம்ம ரத்தம் போனது சத்தியம் – ஆமான்னு சொல்லு! சொல்லு! சொல்றியா இல்லியா?” 

“ஐயோ! ஐயோ!” 

கடம்பாடிக் காண்டாமிருகம் கையைப் பிடிச்சு முறுக்கறது, பிராணனே போறது. ஆனால், அதைவிட அவன் சொன்னது தொண்டைக்குள் புகுந்து கொண்டு அடைக்கற அடைப்பு எனக்குப் பேச்சு வரமாட்டேன்கறது. என்னவோ அழுகையா வரது, ஆனந்தமாகவும் இருக்கு. ரெண்டும் ஒரே சமயத்தில் எப்படி இருக்க முடியும்னு திகைப்பாவும் இருக்கு.


அந்த மரத்தண்டை நெருங்கும் போதெல்லாம் கடம் பாடியின் குரலில் ஒரு அடக்கம். கைகால் ஆட்டத்தில் கூடத் தணியாத ஒரு ஒடுக்கம். ஒரு சிரத்தை, ஒரு அச்சம். ஒரு ரகஸ்யமான பக்தி என்று கூடச்சொல்லலாம். முகத்தில் தனியாய். அதற்கு ஒவ்வாத ஒரு சூடிகை. முழுத் தோற்றத் திலேயே ஒரு “உஷ்.” 

ஜிங்லியை பக்தியான தூரத்தில் நிறுத்திவிட்டு. ஒரு முறை அந்த மரத்தை வளையவருவான். அதன் அடியில் ஒரு பாம்புப் புற்று இப்போதுதான் குழல் விட்டுக் கொண்டு உருவாகி வருகிறது, மரத்தடியில் இலைச் சருகுகளும், காற்றில் சுழன்று அடித்துக் கொண்டு வந்த வேறு குப்பை களும், ஜமக்காளம் விரித்தாற் போன்று நெருக்கமாய், அடர்ந்து உதிர்ந்திருக்கின்றன. 

“இதோ இங்கே -இங்கேதான்-” தடவைக்குத் தடவை அவன் சுட்டிக்காட்டும் இடம் மாறிக்கொண்டே இருக்கும், ஆனால் அதைப் பற்றி இருவருக்குமே அக்கறை இல்லை. உடனே அண்ணாந்து பார்ப்பான். ‘அதோ. அந்தக் கிளை தான். தேன் கூடு தெரியுது பாரு. அதான்-” 

“பாதம் கூட பூமியிலிருந்து முழுக்க. ”அலேக்கா'” தூக்கல்லே. ஆள் தொங்சினபடி கையைக் காலை உதைச்சுக் கிட்டப்போ. கால் கட்டை விரல் தரையைக் கீறின இடம் பள்ளமா எத்தினி நாளைக்கு அப்படியே இருந்திச்சு, தெரியுமா? அதை பார்த்துப் பார்த்து எனக்கே பயமாப் போய், நானே மண்ணை அள்ளிப் போட்டுட்டேன். ஜிங்லி, கழுத்து ஒடியறப்போ அந்த ஆளுக்கு எப்படித் துடிச்சிருக்கும்?” 

ஜிங்லி தன் கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். “திடீர்னு தொண்டையை வரட்டினாப்போல் இல்லை? நேரமாயிட்டாப் போல் இல்லை? நெஞ்சை வலிக்கறாப்போல இல்லை?” 

இருவரும் அவரவர் எண்ணங்களில் தம்மையிழந்து அந்த இடத்தைச் சிந்தித்தபடி நின்றனர். 

“கடம்பாடி நின்னபடியே தூங்கிட்டானா என்ன? ஒரேயடியாய் இருட்டிப் போயிடுத்தே! பாட்டி கவலையோடு வாசலில் காத்துண்டு நிப்பாள்”- 

“என்னடா மஹாதேவா, உன் பிள்ளையைக் காணோமேடா! விளக்கு வெச்சுப் போச்சேடா!” 

“அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே? இந்தப் பொட்டல் காட்டில் விளக்கு வெக்கறவாளும் நாம்தான், ணைக்கறவாளும் நாம்தான். வேணுமானால் அந்த விளக்கை ஒரு அரைமணிநேரம் தள்ளி வெச்சுக்கோ உன் பேராண்டி வந்தப்புறம்!” 

“தேடறதுக்கு முருகேசனை அனுப்பேண்டா!” 

”ஏன், அவனைப் பார்த்தால் உனக்கு வேட்டை நாயாத் தான் படறதா? மனுஷனாப் படல்லியா? ரெண்டு night சேர்ந்தாப்போல செஞ்சு பார்த்தால் தெரியும், அவன் கண் எப்படிக் கெஞ்சும்னு! நீ ஏம்மா கவலைப்படறே? அவனுக்கு ஒரு மெய்க்காவல்காரன் இருக்கானே அவனோடுதானே போயிருக்கான்? ஒருத்தனுக்கு ஏதாவது நேர்ந்தால் இன் னொருத்தன் வந்து சொல்ல மாட்டானா?”

“நான் ஏற்கெனவே வயத்திலே நெருப்பைக் கட்டிண்ருக் கேன். நீ ஏண்டா சுப வாக்கியம் சொல்றே?” 

“என்னை என்னம்மா பண்ணச் சொல்றே? நீ உத்தரவு கொடு, இன்னிக்கே அவன் காலை இங்கே கிடக்கிற ஏதாவது ஒரு தண்டவாளத் துண்டாலே ஒடிச்சுடறேன். உனக்குப் பேரன் தக்குவான். நாள்பூரா நீ கண்ணெதிரே பார்த்துண்டு மகிழலாம்.” 

அம்மா, உள்ளே குழந்தையைத் தூளியிலே ஆட்டிண்டே ‘நாள்பூரா அம்மாவும் பிள்ளையும் சேர்ந்துண்டு ‘’அவன்’ இதைப் பண்ணினான். அதைப் பண்ணினான்”னு ரெட்டை நாயனம் வாசிச்சிண்டு கரிக்கறத்துலே குறைச்சலில்லை. இப்போ குழந்தை மேல் அலாதியாப் பொத்துண்டு ஒழுகிற தாக்கும்! எனக்கு வேண்டியே இல்லை!” 

ஆனால், அம்மா மொணமொணக்கறாள்னு பாட்டிக்கா தெரியாது? மனசிலிருக்கறதையே மோப்பம் பிடிச்சு ஏடு மாதிரிப் படிச்சுச் சொல்லிடுவாளே! இல்லாட்டா பாட்டி மூக்குக்கு எப்படி அத்தனை கூர்ப்பு வந்தது? 

“பாட்டி உன் மூக்கு ஏன் அப்படி கத்தி மாதிரி இருக்கு?’ 

பேரன் கேள்வியினால் பாட்டிக்கு உள்ளூரச் சந்தோஷம். 

”ஓ அதுவா? அரவான் மாதிரி தீட்டி வெச்சிருக்கேண்டா! நான் சாகறத்துக் குள்ளே சில பேர் மூக்கையும் நாக்கையும் அறுக்கணும்னு காத்திண்டிருக்கேன்!” 

“நீ காத்துண்டு வேறே இருக்கையா என்ன பாட்டி? அப்பப்போத்தான் ‘பட்பட்’னு போட்டுண்டேயிருக்கையே!” 

அம்மா தலை சட்டுனு சமையலுள்ளிலிருந்து நீட்டறது, அப்பா “நைஸ்ஸா!” நியூஸ் பேப்பரைத் தாழ்த்தி அதன் பின்னாலிருந்து திருட்டுப் பார்வை பார்க்கறார். எல்லோரும் பூனைக்கெதிரே எலி மாதிரி என்ன நேருமோ? 

ஆனால், அதென்னமோ வாஸ்தவம்தான், எல்லோ ருக்கும் பாட்டியைக் கண்டாலே அஸ்தியிலே கொஞ்சம் “ஐஸ்” தான். பிடரி மாதிரிப் புரளும் அந்த மஞ்சள் நரைக் கூந்தல் நடுவே, சிரிப்பில்லாத முகத்தில் ஜ்வலிக்கும் அந்த மஞ்சள் பூத்த கண்களை நிமிர்ந்து பார்த்துப் பேச யாருக்குமே கொஞ்சம் அச்சம்தான். பாட்டிக்கு அலாதியா ஒரு தோரணை உண்டு. அவள் எதிரே எப்படிப்பட்ட தைரிய சாலிக்கும் கையும் பிடியுமா அகப்பட்ட திருட்டுக் களை கொஞ்சமாவது சொட்டத்தான் சொட்டும். 

அதனால் “ஜிங்லி, உனக்கு அசாத்தியத் துணிச்சல் தாண்டா! நாங்கள் வளையில் பதுங்கிண்டிருக்கோம். நீ என்னடான்னா குஹைக்குள்ளேயே அனாயாசமாப் போய் வளையவரயே!”ன்னு அவா ப்ரமிக்கறா. 

பாட்டி ஒரு சிங்கம்தான். 

(ஆனால் ஆண் சிங்கத்துக்குத் தானே பிடரியுண்டு; பெண் சிங்கத்துக்கேது? இதென்ன குழப்பமோ தெரியல்லியே!)  

“நீ சொல்றதும் சரிதான். களைக்கக் களைக்க வெட்டிண்டேயிருக்கும்.”

இதுதான் பிடிக்க மாட்டேன்கறது, இந்தப் பெரியவாள் பாஷையில். பளிச்சுனு போயிண்டேயிருக்கற பேச்சில் திடீர்னு இருட்டடிப்பு. 


அவன் சிந்தனையைக் கலைத்து இருட்டைத் துளைத்துக் கொண்டு கடம்பாடியின் குரல் அவன்மேல் இறங்கியபோது, அந்த இடத்தில் தேங்கிவிட்ட நிசப்தம் சொட சொடத்தது. 

“அந்த ஆள் யார், தெரியுமாடா” 

ஜிங்லி திகைத்தான். “எந்த ஆள்?” 

”அதுதான் இங்கே தூக்குப் போட்டுக் கிட்டு செத்துப் போன ஆள்!” 

“எனக்கு எப்படித் தெரியும்?” 

“அது எங்க அப்பாடா?”- கடம்பாடியின் குரல் தேம்பிற்று. 

தான் கண்ட அதிர்ச்சி ஒருபுறம் இருக்கட்டும்; இந்த மாதிரி சமயங்களில்தான் கடம்பாடி ஒரு புதிர்ப் பொட்டலம் ஆயிடறான்: (இங்கே திறக்காதே! வீட்டுக்குப் போய்த் திறந்து பார், உள்ளே என்ன இருக்குன்னு. களிமண்ணா, பப்பர்மின்டா நீயே கண்டுக்கோ! லக்கி ப்ரைஸ்! லக்கி ப்ரைஸ்!) 

இது, எவன் துக்கத்தையோ தன் துக்கமாக ஆக்கிக் கொள்வதில் அவனுக்கிருக்கும் அலாதி வரத்தில் சேர்த்தியா எஞ்சினுக்கு அழுதாற்போல்? (பாட்டுக்கு, படிப்புக்கு, நடிப்புக்கு, பரோபகாரத்துக்குன்னு பட்டம் வழங்கறாளே, அதுமாதிரி கடம்பாடிக்கு துக்க திலகம்னு பட்டம் சூட்டு வோமே?) இல்லை, ஏற்கெனவே லூஸ், பௌர்ணமீ, அமாவாசைன்னு பருவக் கோளாறாமோ, அதுவா? 

ரெண்டுமேயில்லாமல் நிஜம்மாவே இருந்துட்டாலோ! 

ஜிங்லிக்கு மயிர்க்கூச் செறிந்தது. கடம்பாடி திடீரென ஒரு புது தரிசனமாகப் பிதுங்கினான். 

எல்லாப் பெரியவாளையும் போல், படுக்கயாப் படுத்து. நாளடைவில் நாறாய்த் தேய்ந்து. நாத்தமாயெடுத்து (பாட்டி படுக்கையை -அது அம்மாவைப் பெத்த பாட்டி; இந்தப் பாட்டிக்குத்தான் அழிவே இல்லையே! அந்தப் பாட்டி படுக்கையை சுட்டே யெரிச்சுட்டா) செத்ததே தேவலைன்னு இருக்கறவா மூச்சுவிடும் படியில்லாமல், “பட்”னு தூக்கில் உயிர் போறதிவ், ஒரு தீராத ஆச்சரியம் இருக்கத்தான் இருக்கு. 

அப்படி ஏன் சாகணும்? 

தற்கொலையா? 

பிறர் கொலையா? 

கடன் தொல்லையா? 

எதிரியின் வஞ்சமா? 

குடி வெறியா? 

ஏன்? எப்படி?? எதற்காக?

பார்க்கப் போனால் இதெல்லாம் என்ன அசட்டுக் கேள்விகள். அர்த்தமற்ற கேள்விகள்! எப்படியோ செத்துட்டான். உன்னைப்  போல் சாவல்லே, என்னைப் போல் சாவல்லே; தன்னாலோ, மத்தவனாலோ, இந்த உயிர் தன் முழு அளவுக்கு வாழாமல் தியாகமாயிட்டுது. இதுக்கு என்ன சொல்றே? 

தர்க்க ரீதியாய்த் தன்னில் வந்தடைந்த இந்தக் கேள்வி யினால் ஜிங்லி மூச்சுத் திணறிப் போனான். 

தியாகம், 

என்ன அழகான வார்த்தை! 

தேசத்திற்குத் தியாகம். 

மக்கள் மேல் அன்பிற்குத் தியாகம் – மூணாம் பாடத்தில் வரதே சித்தார்த்தன் கதை! அது மாதிரி இது எதற்குத் தியாகம்? 

”ஜிங்லி, என் அப்பாவுக்கு சாவே கிடையாது. எனக்கு நிச்சயமாய்த் தெரியும், ஏன் தெரியுமா? இந்தப் புத்தைப் பார்த்தியா? நேத்து என் கனாவிலே வந்து சொன்னாரு ; டேய் பையா, புத்திலே நான்தாண்டா பாம்பாய் வாழறேன். நீ ஆளாவற வரைக்கும் நான் இங்கேயே இப்படிச் சுத்திக்கிட்டி ருப்பேன்!” 

மரத்தடியில் இலைச் சருகுகளடியில் எதுவோ சலசலத்தது. 

“டேய், வீட்டுக்குப் போகலாண்டா!” 

“நீ போ! நான் இன்னுங் கொஞ்ச நேரம் இருந்து என் அப்பனோடு பேசிட்டுத்தான் வரப்போறேன்!” 

கடம்பாடியைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமை யாத்தானிருக்கு, நாள் ஆக ஆக அவனுக்குப் பெருமை பெருகும், 

“இவன் யார் பிள்ளை, தெரியுமா?” 

“அதான் தெரியாதா, அந்த மரத்திலே அன்னிக்குஒத்தன் தொங்கினானே, அவன் மகன். அவனுக்கென்ன குறைச்சல் அப்பனே பாம்பாயிருந்து மகனைக் காப்பாத்திட்டிருக்கான்.’ 

ஓஹ்ஹோ! இப்போ புரிஞ்சுது. அதனால்தான் கடம் பாடிக்கு விஷம் ஏறல்லியா? 

யார் கண்டது. ஒரு நாளைக்கு அவனுக்கு அவன் அப்பா புத்திலிருந்து மாணிக்கம் கிடைச்சாலும் கிடைக்கும். 

கடம்பாடி அதிர்ஷ்டசாலி, 

3

ஆனால் இன்று மரத்தின் மந்திரக் கட்டிலிருந்து சுருக் கவே விடுபட்டாச்சு, அதையொட்டி விசன விஷயங்களில் மயங்கி, பிறகு மங்கி உழல, மனசில் மனம் இல்லை. மனம் இன்று குஷி. கடைசி பீரியட் வாத்தியார் வரவில்லை. பையன்களை முன்னாலேயே அவிழ்த்து விட்டாச்சு. 

ஜிங்லி தன்னைக் குதிரையாய் பாவித்துக் கொண்டு விட்டான்…”ந்ளொப் க்ளொப் க்ளொப்…” வாயில் குளம்புத் தாளம் போட்டுக் கொண்டு ஒரே நிதானத்தில் ஒடிக் கொண் டிருந்தான். 

இந்தமானம் இருக்கே – மானமா.வானமா?- வீட்டுக்குப் பின்னால் அவரைப் பந்தல் அடியில் உட்கார்ந்து இலைகளின் சந்து வழியாப் பார்த்தால் சின்னதாயிருக்கு: இங்கே எப்படி இவ்வளவு பெரிய மைதானமாயிருக்கு? மேகங்கள் அடைச்சுண் டாலும் சிறுத்துப் போயிடறது. ஆனால் இன்னிக்கு “ஜம்”னு தோச்சுப் பிழிஞ்சு இழுத்துப் பிடிச்சு உலர்த்தின மாதிரி இருக்கு? பளிச்சினு நீலம், பூமி விளிம்பில் தொடற இடத்தில் லேசாய் உப்பிண்டு அங்கே செந்திட்டு படர்ந்திருக்கு. 

அக்காவின் கன்னம் மாதிரி. 

அவ்வளவுதான். ஜிங்லி வாய்விட்டு உரக்கப் பாட ஆரம்பித்துவிட்டான். 

“பங்குனி மாதம் 
பருப்புக் கலியாணம்” 


பத்தாந்தேதி. 

சொல்லிச் சொல்லிக் கலியாணம் கிட்டவே வந்தாச்சு. 

வீட்டுக்கு வரவாளும் போறவாளும் திடீர்னு அதிகமா யிட்டா. பண்டமும் பாத்திரமும் வீட்டில் நிரம்பிய வண் ணமா இருக்கு. இடம் போதல்லே. தினம் ஒரு பச்சை நோட்டை மாத்தியாறதுன்னு அப்பாவும் பாட்டியும் ஆத்திரப்படறா. 

செலவில்லாமல் கலியாணம் ஆகுமா?”ன்னு அம்மா கேக்கறா. 

“பணம் இல்லாமல் செலவு பண்ண முடியுமா?”ன்னு அப்பா கேக்கறா. 

சண்டை, சமாதானம். மறுபடியும் குஸ்தி. 

ஆனால், யார் மண்டை உடைஞ்சால் என்ன. என் பாடு கொண்டாட்டம். சமையல்கார மாமாவை கட்டிக்கணும். அது மிக்ஸ்சரோ : கேசரியோ, முந்திரிப் பருப்பு நிறைய இருக்கிற பக்கத்தை என் பக்கமா வெட்டிடுங்கோ, மாமா – நான் கலியாணப் பெண்ணின் தம்பி. 

கற்கண்டைக் கையில் குத்தா அள்ளிப்பேன். 

என் பெருமையே எனக்கு இவ்வளவு பெரிசாயிருக்கே. கலியாணப் பெண்ணைக் கேக்கணுமா? என்னிக்குமே அவள் சண்டி. இப்போ ஒரு எச்சில்கூட இடுவதில்லை, எல்லாம் அம்மாவே பார்த்துக்கறா. “அங்கே போய் நீ கஷ்டப்படறது இருக்கவே இருக்கு’ இனிமே நீ இங்கே இருக்கிற வரைக்கும் என்னாலே முடிஞ்ச வரைக்கும் நீ சுகமாயிருந்துட்டுப்போ” ன்னு அம்மா கண் கலங்கறா. துணைக்குப் பொண்ணும் மூக்கைச் சிந்தறா ; 

“இந்த நாடகம் யார் கண்காக்ஷிக்கு நடத்தியாகறது? பொண்ணுக்கு இப்பவே இந்த உரையேத்தம் கண்டால் தான், அங்கே போனால் ஆம்படையான் அம்மியிலே குழம்புக்கு அரைச்சுக் கொடுப்பான்னு – ரேழியில் சிங்கம் உறுமறது. 

அக்கா இப்போது தன் நினைப்பில் இல்லை. பொம் மையை ஸ்குரூ முடுக்கினால் ஸ்குரு இறங்கற வரைக்கும் அது ஒன்னையேதான் திருப்பித் திருப்பி செஞ்சுண்டிருக்கும். அது மாதிரி அவள் புதுசு புதுசா உடுத்திக்கிறதும். கண்ணாடி யெதிரே முகத்தைத் திருப்பித் திருப்பி முதுகைப் பார்த்துக் கறதும், உடனே உதட்டை முறுக்கிண்டு உடுத்தினதைக் களையறதுமா இருக்கா. 

ஸ்குரூ ஓயவில்லை. (Full-tight) 

”டேய் ஜிங்லி, என் க்யூடெக்ஸைப் பார்த்தியாடா?” 

”ஏன். அடுத்தது உன் சவுரியை நான் வெச்சுப் பின்னின் டேனான்னு கேளேன்!” 

உடனே, அக்காளுக்கும் தம்பிக்கும், சண்டை, கைகலப்பு அடி, உதை. 

“இனி அவளை நீ தொட்டியோ” என்று கத்திண்டே அம்மா கையில் அப்பளக் குழவியுடன் ஓடி வருகிறாள், 

“வா, வா. எங்கே போயிட்டே, உன்னைப் பார்த்துக் கறேன்! இன்னி ராத்ரி இங்கேதானே சோறு?” 

“ஜங்ஷனில்,வெற்றிலைப்பாக்கு, பீடா சாமான் விக்க றானே, அவன் மாதிரி கோமதி கழுத்தில் ஒரு கண்ணாடி ஸ்டாண்டை மாட்டி, அதில் அவளுடைய அரிதார சாமான் களை வெச்சுக் கொடுத்துட்டால் போதும். அன்னி முழுக்க அவளுக்குச் சோறு வேண்டாம். தண்ணி வேண்டாம்” பாட்டி கேலி பண்ணுவதற்கேற்ப அக்கா என்னவாவது மினுக்கிண்டுதான் இருப்பாள், 

ஆனால், மினுக்கிண்டப்புறம் அக்கா “ஜோக்” காகத் தான் இருக்கா, அப்போ அவளைப் பார்த்தால் வண்ணான் மடி மாதிரி இருக்கு, கலைக்க மனமில்லை. ஆனால், கலைக்காமல் கட்டிக்க் முடியாதே அதுமாதிரி புரியாத ஒரு குழப்பம்,பார்க்க மகிழ்ச்சி, லேசா ஒரு வேதனை, மனக்கஷ் டத்தில் முடிஞ்ச கதை போல். தொட்டால் நலுங்கிடுவாளோ? ‘பூ”ன்னு ஊதினால் காற்றில் கறைஞ் சுடுவாளே? அப்புறம் அவள் ஜிங்லியைக் கூப்பிட்டாலும் சரி, ”என் சிவப்புச் சாந்தைக் காணோமே!”ன்னு வாய்விட்டு முன கிண்டே தேடினாலும் சரி. நமக்குக் காதில் கேட்கப்போவது ‘உஷ்! உஷ்’ன்னு காற்றின் அசைவுதான். 

‘உஷ்! உஷ்!” ஜிங்லி சட்டெனத் தன் ஓட்டம்  தெறித்து நின்றான். உடல் முழுக்க ‘விர்ர்ர்ர்-” 

‘உஷ்! உஷ்!”

‘குஷ்!குஷ்!” 

இது காற்றின் அசைவு அல்ல. காற்று கொஞ்ச நாழியா கவே விழுந்து விட்டது. யாரோ பேசறா. முழு ரகஸ்யமா வும் இல்லை, குரல் தாழ்ந்து-ஆனால், பேசறது புரியாதபடி அவ்வளவு தாழ்ந்து இல்லை. 

”கோமதி’ கோமதி!” 

இதென்ன அக்கா பேருன்னா அடிபடறது! இது எங்கள் குஹையிலிருந்துன்னா வரது? இது எப்படி யாருக்குத் தெரிஞ்சுது? 

சுயத்திலேயே மோதிரம் போல். நெருக்கமாய் ஒரு மரக் கூட்டத்தின் வளையத்தின் நடுவே ஒரு புல் திட்டுத்தான் அவர்களுடைய குஹை. அதன் உள்ளேயே ஒரு புதரை நடுவில் விலக்கிக் கொண்டுதாள் நுழையணும், அதை பேச வோ. விளையாட்டுகளுக்குத் திட்டம் போடவோ, பெரியவர் களின் அத்துமீறி ஏதேனும் செய்தபின் அந்த அலை ஓயும் வரை பதுங்கிக் கிடக்கவோ கிடைத்த அவர்களுடைய ரகஸ்ய பூமி – அது பூமியே அல்ல; சொர்க்கம். 

ஆனால் ரகஸ்யம் குலைஞ்சு போன பின் இனி எப்படி அது சொர்க்கமாயிருக்கும்? இன்னும் யாருக்கோ தெரிஞ்சு போச்சே! பாரு. கணக்கு வாத்தியார் குரலாட்டமாயிருக்கே? ஆமாம்’ கணக்கு வாத்தியாரே தான்? 

“கோமதி, இனி என்னால் பொறுக்கவே முடியாது.” 

”சே ! இதென்னன்னா?” 

அக்காவும் இருக்காளா என்ன? 

அவன் காலடியில் ஒரு அணில் மரத்தின் மேலிருந்து விழுந்து புரண்டு அடித்துக் கொண்டு ஓடிற்று. பின்னாலேயே விரிந்த இரு பெரும் சிறகுகள்-அவற்றின் “விர்ர்” முகத்தில் மோதிற்று – துரத்திப் பாய்ந்து வந்து, பூமியில் அணில் விழுந்த இடத்தை ஒற்றி, ஏமாந்து: எழும்பிப் போயின. இத்தனைக்கும் இமை துடிக்கும் நேரம் கூட ஆகவில்லை. 

மரத்தின் வேரின் அடியிலிருந்து ‘ட்வீக்! ட்வீக்!! ட்வீக்!!!” 

பயமா? ஏளனமா?? வெற்றியா?? 

”ஆமாம். என்னை நெடுந்தூரம் ஆசைகாட்டி இப்போது நடு வழியில் விட்டு விட்டாய்,” 

“நீங்கள் என்ன சொல்றேள்? கால் ஆற மாலையில் உலாவக் கிளம்பினவளை. இங்கே எங்கேயோ ஒரு கல் வெட்டு காண்பிக்கிறேன்னு அழைச்சுண்டு வந்துட்டு, ‘நான் உங்களை நடு வழியில் விட்டுட்டேன்’ என்கிறேளே 

“நான் இந்த வழியைச் சொல்லவில்லை. உனக்கு அன்னிக்கு நினைவிருக்கா? உனக்கு மறந்து போனாலும் நான் என் நெஞ்சில் கல்வெட்டாய்க் காப்பாற்றித்தான் வைத்திருக் கிறேன்.” 

“ஓ, இதுதான் நீங்கள் காண்பிக்கப்போற கல்வெட்டா?”

“ஆமாம். ஏன் கூடாது? இதைவிடக் கல்வெட்டு ஒசத்தி யாமோ?-இது கல்வெட்டு கூட இல்லை. இது நெஞ்சின் பிளவு, இது இதயத்தின் விரிசல்!” 

ஏதேது ! கணக்கு வாத்தியார். தமிழ் வாத்தியாராகவும் இருக்கலாம் போல இருக்கே! செய்யுள் பேசறாரே! 

நீ என்னோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையையும், என் மேல் வீசிய ஒவ்வொரு பார்வையையும். புரிந்த புன்னகையை யும்; என் எதிரே நடமாடுகையில் உன்ஒவ்வொரு அங்க அசை வையும் என் நினைவில் பொக்கிஷமாய் எப்படி சேகரித்து வைத்திருக்கிறேன் தெரியுமா? ஒரு சமயம். காற்றுவாக்கில், உன் முன்றானையின் தலைப்பு என் முகத்தில் மோதிய மூர்ச்சையிலிருந்து நான் தேற எனக்கு எத்தனை நாளாச்சு தெரியுமா?” 

“இதுக்குத்தானே பாட்டி அடிச்சுக்கறா: அடக்கம்! அடக்கம்! முனையைத் தூக்கி இடுப்பில் சொருகு!”ன்னு. 

“நான் ஒண்ணும் உங்களுக்கு ஆசை காட்டல்லே – எல்லாம் நீங்களா நினைச்சுக்கறதுதான்.” 

“அப்படியேதான் இருந்துட்டுப் போகட்டும். என் னுடைய எத்தனையோ சுமைகளில் இதுவும் ஒன்று. என்னைப் போல் நீயும் நினைக்கணும்னு எதிர் பார்க்க எனக்கு உரிமை யில்லைதான். ஆனால் என் எண்ணங்கள் நான் இப்படித் தான் எண்ணணும் என்று மாற்றியமைக்க யாருக்குமே உரிமை கிடையாது. என்னால் என் எண்ணங்களை எண்ணா மலும் இருக்க முடியாது!” 

“நீங்கள் என்னென்னவோ பேசி என் மூளையைக் குழம்ப அடிக்கறேள்!”-கோமதி சிணுங்கினாள். 

“உனக்கு இப்போது அப்படித்தான் இருக்கும். பின்னால் என்றேனும் ஒருநாள் நினைக்காமலா இருப்பாய்.”ஸ்ரீகாந்த் என்று ஒருவன் இருந்தான், அவன் என்மேல் வைத்திருந்த ஆசையில் என் காலடியிலேயே தன் உயிரைத் தியாகம் செய்யத் தயாராயிருந்தான்”என்று?’ 

தியாகம்! அப்போ இதுமாதிரியும் ஒண்ணு இருக்கா?

“ஓ!”

அக்காவுக்கு ஆச்சரியமா? சந்தோஷமா?? பீதியா??? 

சந்தோஷமாய்த்தான் இருக்கும். ஏன் இருக்காது? தனக் ஒருவன் உயிரைவிடக் காத்திருக்கான்’ என்றால் அவனிடம் என்ன வேனுமானாலும் வேலை வாங்கிக்க லாமே! கிணற்றிலே சொம்பு விழுந்துட்டால் அவனை முழுகி எடுக்க வைக்கலாம். எடுத்து வந்தால் சொம்பு லாபம் ஆள் மூழ்கிப்போனால் அப்பவும் எனக்காக ஒருத்தன் செத்தான் என்கிற பெருமை. 

நீங்கள் ஏன் இப்படியெல்லாம் பேசறேள்? இன்னும் உங்களால் உங்களைப் பெற்றவர்கள் சுகப்பட வேண்டியா எவ்வளவோ இருக்கு. உங்களுக்கு உத்தியோகம் வேண்டாமா? உங்களுக்கும் கலியாணம் கார்த்திய நடக்கவேண்டாமா? காலம் எப்பவுமே இப்ப இருக்குமா?’ 

“என் வாழ்வின் கட்டிடமே இடிந்து விழுந்த பின் என் மேல் சவரனாகவே மழை பெய்தாலும் எனக்கு என்ன ஆச்சு?” 

“சரிதான்! இதெல்லாம் என்ன பேச்சு? நேரமாச்சு. எனக்கு வழிவிடுங்கள்.” 

“இல்லை, இதை நீ கேட்டுவிட்டுத்தான் போகணும். அன்றொரு நாள் நான் ஜிங்லிக்குப் பாடம் சொல்லிக் கொடுக் கையில் நீ காப்பி கொண்டு வந்தாய். டம்ளரை என் எதிரில் வைத்ததும் காப்பி கொஞ்சம் சிந்திற்று. நீ, தலையை ஒரு விதமாய்ச் சாய்த்துக் கொண்டு ‘Oh 1 am sorry!” என்ற அந்த நிமிஷத்திலிருந்து நீ எனக்கு உன் தடம் மாறிப் போனாய். நீலப் பொற்கிரணம் வீசினாற்போல் உன் ஒளி ஆனால் உன் ஒளியை நீ அறியாமலே வளைய வந்ததே உன் ஒளியைப் பன் மடங்கு பெருக்கிற்று – நான் உங்கள் வீட்டு வாசற்படியை மிதிக்கும்போதெல்லாம் முகமனில் உன் தலை யசைப்பும். புன்னகையும் – ஹா ! கோமதி, நீ ஏன் அப்பவே முகம் சுளித்திருக்கக் கூடாது?” 

“உம்மணாமூஞ்சிச் சுபாவம் எனக்குக் கிடையாது. உங்களிடம் மெனக்கெட்டு வந்து நான் குழையவுமில்லையே! நீங்கள் “மணி என்ன?’ என்று கேட்டால், அதுக்கு நான் பதில் சொன்னால். அதுவே உங்களுக்கு இடம் கொடுத்தாச்சு என்கிறேளா?” 

“கோமதி, இதுதான் நமக்குள் வித்தியாசம். உனக்கு சாதாரணமாய் இருந்ததெல்லாம், எனக்குக் காய்ந்த பூமியில் பொழிந்த அமுத தாரையாய் இருந்தது. கோமதி, இனி என் றேனும் ஒருநாள், நான் உன் வீட்டுப்படியேறி வந்தால் உன் கணவனோ, உன் குழந்தைகளோ. என்னை “வா” என்று வரவேற்பதைவிட நீ என்னை வாய்திறந்து “வாங்கோ” என்று சொல்லாமல் என்னை அடையாளம் கண்டுகொண்டு கனிவு காட்டும் உன் மெளனமான தலையசைப்புக்கே பெரிதும் ஏங்கி, வாசலிலேயே நிற்பேன், இந்த மனோ நிலை எனக்கு என்றுமே மாறாது; இது உண்மை. இது சத்தியம்.” 

‘ஐயையோ.இதென்ன! என்னை ஏதேனும் வில்லங்கத் தில் மாட்டி விடாதேயுங்கள். நான் ஒரு பாவமும் அறியேன். பாட்டி என்னைப்பார்த்துப் பல்லைக் கடிக்கறதெல்லாம் என் நல்லதுக்குத்தான்னு புரியறது.” 

“அப்படீன்னா?” 

“பாட்டி சொல்வா ; “நீ வெகுளி’ ன்னு நிரூபிக்கறதே. உன் முழு ஜோலியாய், உன் புக்ககத்தில் இருக்கப் போற துன்னா, அதைவிட வினையேவேண்டாம். கட்டினவன்கிட்ட என்னிக்குமே ஜாக்கிரதையா இருக்கணும். புருஷாள் நம்ம மாதிரி தொட்டதுக்கெல்லாம் சந்தேகப் படமாட்டா. ஆனால் அவாள் மனசில் களங்கம் விழுந்துடுத்தோ, அப்பறம் அந்த முள்ளின் வேரை யானைகட்டி இழுத்தாலும் அசைக்க முடியாது. அப்பறம் அந்தப் பெண் செத்துத்தான் தான் நிரபராதின்னு நிரூபிக்கணும். அதனால் எப்பவும் இதை யோசனை பண்ணிக்கோ: நான் வாழக்கத்துண்டேனா? என் நல்ல குணத்தை நிரூபிக்கக் கத்துண்டேனா?” கிழவி ஏதோ தொண தொணப்புண்னு நான் சலிச்சுக்கறதுண்டு. ஆனால் அத்தனையும் வாக்குன்னு எனக்குப் புரிஞ்சு போக்சு. வழி விடுங்கோன்னா-” 

”கோமதீ”- 

“ஹஹ் -ஹ – ஹச்- சூ!” 

ஜிங்லியே மிரண்டு போனான்! “இவ்வளவு பெரிய தும்மல் என்னிடம் எங்கே ஒளிஞ்சுண்டிருந்தது?” 

குகையில் ”கப்’ன்னு சத்தம் அடங்கிப் போயிற்று. பிறகு முயலை அதன் பதுங்கலிலிருந்து கிளப்பி விட்டாற்போல், திடுதிடுவென்று ஏதோ விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஒரு சப்தம், ஒன்றிரண்டு நிமிஷம் கழிந்த பின்னர் புதரில் ஜாக் கிரதையாய் ஒரு சலசலப்பு. உடனே விறுவிறுவென நடை கிளம்பி, முன் சப்தத்தின் எதிர்திக்காய்ச் சென்று ஓய்ந்தும் போயிற்று. 

ட்வீக்! ட்வீக்!! ட்வீக்!!! 

அந்த இடத்தில் ஏறிப்போன முறுக்கைக் கலைப்பது போன்று சில் காற்று படமெடுத்துக் கொண்டு எழுந்தது. 

4 

அத்திம்பேரை இப்பத்தான் கிட்டப்பார்க்க முடியறது அவரே எடுப்பாயிருக்காப் போலத் தோணறது. அத்திம் பேரிடம் ஸ்டைல் இருக்கு. மனுஷாள் வந்தவுடன் “டக்’னு சிரிக்கிறதும், வந்தவா தாண்டிப்போனவுடனே, டப்பா மூடி மாதிரி சிரிப்பை ‘டக்’ னு மூடிக்கறதும், வந்த வாள் உயரத்துக்குத் தக்கபடி, தன் உடம்பை வளைஞ்சு கொடுக்கறதும், வந்தவா தாண்டிப்போனவுடன், நாணறுந்த வில்மாதிரி (ட்ரொய்ஞ்ஞ்|’) நிமிர்ந்துக்கறதும் அடேயப்பா! 

மாமிகள் எல்லாரும் பேசிக்கறா: மாப்பிள்ளை முடுக்குத்தான்!” 

ஆனால் ஒண்ணுதான் முழுக்கப் புரியல்லே; முழுக்கப் பிடிக்கல்லே – ஒரேடியா இங்கிலீஷில் பொரிஞ்சு தள்ளறார். 

“Who is the young gentleman?” 

அட. ஒரு செக்கண்டில், என் குட்டைக்குச் சரியா. மாப் பிள்ளை தன் நெட்டையை வளச்சிட்டாரே!- அவனுடைய கைக்குள் அவனுடைய பொம்மைக் கை மறைஞ்சு போச்சு. 

“He is my little brother” 

(வெட்கம் கெட்டவர்! தாலி கட்றதுக்கு முன்னாலேயே ரெண்டுபேரும் பேசிக்க ஆரம்பிச்சுண்டாச்சு!) 

“How do you do. young man? Charming little fellow! and this–?” 

(ட்ரொய்ஞ்ஞ!) அத்திம்பேர் நிமிர்ந்தாச்சு, அத்திம்பேர் புருவம் ஒரு துள்ளு துள்ளித்து, தலைமயிரையே தொட்டுடும் போல. (முடியுமோ?) 

“இவர் பேர் ஸ்ரீகாந்த், அத்திம்பேர் கணக்கு வாத்தியார்”. 

“Oh, very glad to meet you.” 

[இவர் பெயர் ஸ்ரீகாந்த். இவர் ஏ.எஸ், எம்.முக்கு மச்சினன். இவர் அவாத்துக்கு வந்து நாலு மாசமாச்சு. இவர் எப்போ திரும்பிப் போவார்னு அவாளுக்கே தெரியாது. இவருக்கு அதைப்பற்றி அக்கறை கிடையாது. சாப்பாடு அவாத்துலே; எனக்குக் கணக்குக் கத்துக்கொடுக்கிற சாக்கிலே மத்தியான டிபன் எங்காத்துலே, இன்னிக்கு ஒண்ணும் பண்ண லேன்னு குழம்பு சாதத்தை உருட்டி வெச்சா, அதுவும் ‘க்ளோஸ். அக்காவைப் போக வர முறைச்சுப் பார்க் கிறதும், “புஸ் புஸ் ன்னு பெருமூச்சு விடறதும் ஏன்னு நாலு நாளைக்கு முன்னால்தான் எனக்குத் தெரிஞ்சது) – இப்படிச் சொல்ல நாக்கு தவிக்கறது. ஆனால் தோணறதை யெல்லாம் சொல்லக் கூடாதுன்னு உள்ளே ஒன்னு எச்சரிகை பண்ணறது. 

“அத்திம்பேர்!” 

அத்திம்பேர் மறுபடியும் அவன் பக்கமாய்க் குனியறார், ராமபிரான் அணில் மேல் குனிஞ்ச மாதிரி. அவர் முகத்தில் புன்னகை. ‘அத்திம்பேர் ரொம்பப் பிரியமாய் இருப்பார் போலிருக்கே!” 

“You want to say something?” 

“அத்திம்பேர் அத்திம்பேர், என் அக்கா ரொம்ப நல்லவ, மனசில் ஒண்ணும் இல்லாதவ, நெருப்பில் குளிச்ச சீதையைப்போல் புனிதமானவ.” 

ஏன் இப்படி அவன் வாயிலிருந்து வந்தது? அவனுக்கே தெரியாது. அந்த பாஷைகூட அவனுடையதல்ல. 

அத்திம்பேர் நிமிர்ந்தார். ராமர் வில்! அவர் புன்னகை மாறவில்லை. 

”What is he Saying?” 

அக்கா முகம் பார்க்கச் சகிக்கல்லே, வெளுத்து, கறுத்து, செவந்து மாறி நிழலடிச்சு- ஆனா எப்படியோ சமாளிச் சுட்டாள். 

என்மேல் அவனுக்கு ரொம்ப ஆசை. என்னை களுக்கு சிபாரிசு பண்றான்-“- அவனைத் தன்பக்கம் இழுத்து இறுக அணைத்துக் கொண்டாள். 

“எங்கள் வீட்டுக்கு ஒரே பிள்ளை. எனக்கு ஒரே தம்பி!” 

அவள் விழிகள் பெருகின. அத்திம்பேர் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார் – Good Chap!” 

“என்னடி உள் பிள்ளை “கிண்டியாய நமஹ”ங்கறது தாக்கல் மோக்கல் இல்லாமே?’ 

“பாட்டி பின்னாலே இருக்கேளா?” 

“யார் கண்டது? பிஞ்சுலே பழுத்த வெம்பல்! உங்களோடு கதை கேட்கப் போறதோன்னோ?” 

இரவுப் பந்தியில் அவள் பக்கத்தில்தான் கணக்கு வாத்தி யார் உட்கார்ந்திருந்தார், வெங்காயச்சாம்பாரில், வெங் காயத்தானைத் தனியாக ஒரு கரண்டி இலையில் வடிக்கச் சொல்லி, உருளைக்கிழங்குக் கறியை ஒருகை பார்த்து (“நான் பார்த்துக்கறேன், நீர் சும்மா தள்ளும் ஓய்) பாயாஸத்தை மூன்று தொன்னை கேட்டு வாங்கிக் குடித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஜிங்லிக்குத் திடீரென்று வாய்விட்டுச் சிரிப்பு வந்துவிட்டது. 

“இவரா உயிரைத் தியாகம் பண்றவர்?”

“என்னடா சிரிக்கிறே?’ 

”எனக்கு என்னவோ நினைப்பு வந்தது” 

“என்ன?” 

நல்ல வேலையாய் ஜிங்லிக்குப்பதில் சொல்ல நேரவில்லை.

“பாயஸம்? பாயஸம்! அண்ணாவுக்கு சந்தேகத்துக்குப் பாயஸம்!” 

மணி அய்யரே கோகர்ணம் தூக்கி விட்டார். அவர் சட்டையில் தங்கமெடல் ஸேப்டி பின்னிலிருந்து தொங்கிற்று. 

“ஐயர்வாள்! இந்தப் பக்கம்!!”- தொன்னையை ஏந்தியபடி, கணக்கு வாத்தியார் கத்தினார்.

– தயா (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *