ஜன்னல்கள் இல்லாத ரயில்பெட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 8, 2023
பார்வையிட்டோர்: 1,937 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒவ்வொரு ரயில் பயணமும் எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். ஏதேனும் ஒர் அனுபவம் அதை நிறைந்திருக்கும். 

திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயிலில் அன்று ஏறி அமர்ந்தேன். அந்த ரயில் எப்போதும் காலை ஆறு ஐம்பதுக்கு கிளம்பி சரியான நேரத்திற்குச் சென்றடைவதும் திரும்ப வந்தடைவதும் வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். என்னுடைய அன்றைய பொழுது அந்த வண்டியில் பயணிப்பதும் ராமேஸ்வரம் சென்றதும் அதே வண்டியில் திரும்புவதும் ஆகும். கதை எழுதுவது புத்தகம் படிப்பது செல்போனை தோண்டுவது போன்ற ஏதுமற்ற வெறுமையோடு வெறுமையாக வேண்டும். அது அழித்தலின் ஆரம்பமாக வேண்டும். 

ஓடோடி வேகத்தைக் குறைத்து மெல்ல பாம்பன் பாலத்தில் வண்டி ஊர்ந்தது . மனம் அலைக்கழிந்து போனது. வாசலுக்குப் போய் கடலில் குதித்து விடலாமா என தோன்றியது. அறிவென்னும் கடிவாளம் மனதை உள்ளே இழுத்துப் போட்டது. மீள ஒன்றுமில்லாத ஒருமையானேன். 

நினைவு திரும்ப, கடைசி பெட்டியில் இருந்த நான் ராமேஸ்வரத்தில் முதல் பெட்டியில் இருந்தேன். எப்படி வந்தேன்? பெட்டியில் யாருமில்லை. நானும் இல்லை. பெட்டியே இல்லை. ரயிலும் இல்லை. நீங்கள் உண்மையை உணர உங்களையே இப்படி சோதித்து கொள்ள வேண்டுமென்றோ முயற்சிக்க வேண்டுமென்றோ கட்டாயத் தேவை ஏதுமில்லாமல் இருக்கலாம். எனக்கு, நான் தேவைப்பட்டேன். என்னையே நான் அழித்துக் கொண்டேன். 

கோரப் பசியில் ஓடாத குதிரையின் கடிவாளத்தை கடித்து உண்ட கழுதை, சிங்கம் போல ராஜநடை போடத் தொடங்கியது. காற்றையோ கடவுளையோ காணமுடிவதில்லை. உடலின் நாற்றத்தை பிடித்து வைத்திருக்கும் உயிரைக்கூட உணரத்தான் முடிகிறது. கண்கள், கால்கள் பிறவற்றால் உயிரினை உணர்வது வேட்டை நாயின் வாயில் அடங்கிப்போகும் சதையைப் போன்ற மூளையாகும். 

மண்டபம் கேம்ப் என்ற நிலையத்தில் வண்டி நின்றது. வாசல் வழியே எட்டிப் பார்த்தேன். தன்னந்தனி நபராக சிவப்பு பச்சை கொடிகளை வைத்துக்கொண்டு என்னைப் போலவே நிலைய அதிகாரி நிற்கிறார். எங்களுக்கு தனிமை பழக்கப்பட்டதுதானே. யாரும் ஏறவோ இறங்கவோ இல்லை. ரயில் யாருக்காகவும் நிற்காமல் யாருக்காகவும் காத்திருக்காமல் அது பாட்டுக்கு ஓடியது. கடிகார முற்களைப்போல. ரயில் பயணிப்பின் எதிர் திசை நோக்கி அமர்ந்திருந்தேன். தூரத்து கருவேலங்காடு ஒன்று வலப்புறமாக மெல்ல சுற்றியது. அருகில் உள்ளதெல்லாம் சரியாக பார்க்க முடியாத வேகத்தில் ஓடுகின்றன. முன்னோக்கியா? பின்னோக்கியா? காலம் முன்னோக்குவதுபோல் தெரியலாம் நாம் அதை எப்போதும் தட்டையாகப் பார்க்கக் கூடாது. வெயிலில் அவசரமாக வெட்டி விழுங்கிய புற்களை நிழலில் படுத்துக்கொண்டு ஆற அமர அசைபோடும் மாடுகளைப் போன்றது அது. காலத்தின் கொம்புகள் முட்டினாலும் எப்போதோ வீசிய தென்றல் வெப்பத்தின் போது வயிற்றைத் துடைக்கத்தான் செய்கிறது. 

உச்சிபுளி என்ற நிலையத்தில் நானிருந்த பெட்டியில் ஒரு பார்வையற்ற யாசகனும் ஒரு துறவியும் ஏறினார்கள். ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறதாம் யாசகருக்கு. உண்மையில் குரல் அழகுதான். அழகான பெண்ணுக்கு எந்த பெயர் வைத்தாலும் அழகு போல. அஜந்தா ஓவியத்தைப் போல. பேச்சுச் சப்தம் ஏதுமில்லை என்றாலும் பெட்டி காற்று வாங்குவதை ஓரளவுதானே அவரால் உணர முடியும். ஒரு பத்து ரூயாய் நோட்டை எடுத்து அவரது அட்சயப் பாத்திரத்தில் போட்டேன். என்ன நினைத்தாரோ பயணிக்கும் அந்த துறவி தன் கைப்பைக்குள் தடவி ஒரு பத்து ரூபாயை அவரும் போட்டார். கூட்டமே இல்லாததால் யாசகர் மீது துறவிக்கு இறக்கம் வந்து இருக்கலாம். பணக்கார துறவியாக இருக்கலாம். வங்கியில் சேமிப்பு கணக்கு கூட வைத்திருப்பாரோ? இருக்கலாம். வெவ்வேறு இருக்கலாம். நமக்கென்ன. யாசகரும் யாசகருக்கு யாகம் செய்தார். அவ்வளவே. இடது கையால் தடவி நோட்டுக்களை மட்டும் பத்திரமாக எடுத்து சட்டைப் பையில் திணித்துக்கொண்டு எஞ்சி கிடந்த சில்லறை நாணயத்தை உலுக்கியதில் பாட்டோடு தாளமும் சேர்ந்து சோர்ந்து வந்தது. மறு பக்க கதவருகே சென்று நின்று மறு நிறுத்தத்தில் பக்கத்து பெட்டிக்குப் போனார். வறிய குடும்பம் ஒன்று பெட்டிக்குள் வந்தது. தாயுடன் ஏழெட்டு வயது மதிக்கத் தக்க இரண்டு குழந்தைகள். அவர்கள் அணிந்திருந்தது இலவசமாக பள்ளியில் கொடுத்த சீருடை. காக்கி அரைக்கால் சட்டை. அழுக்கேறிய வெள்ளை மேல் சட்டை. ரெடிமேட் கடையில் ஜவுளி எடுக்கும்போது கொடுக்கும் துணிப் பையிலிருந்து இரண்டு பட்டாணிக் கடலை பொட்டலங்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாய் கொடுத்தார் அந்த பெண்மணி. அவளது உடையும் முகபாவமும் பாவப்பட்ட ஜீவன் என்பதை உணர்த்தியது. பட்டாணியை உண்டு முடித்த சிறுவன். “அம்மா கடல முடிஞ்சி போச்சி. இன்னொண்ணு தா” என்றான். 

“அவ்ளவுதான்டா தீந்துட்டுச்சி” என்றாள். 

“மூணு வாங்கினியே அம்மா” 

“அது அக்காவுக்குடா” என்று அவன் மூக்கில் ஒழுகிய சளியை முந்தானையால் துடைத்தவாறு “பச்ச தண்ணில ஆடாதன்னு எத்தன தடவ சொன்னாலும் கேட்டாதானடா” 

“பள்ளிக்கொடம் விட்டு வரும்போது மழ வந்தத்துக்கு நான் என்ன பண்ணுறது” அவன் பதில் பல அர்த்தங்கள் நிறைந்தவை. மழை வருமென்று தெரிந்தும் பள்ளிக்குச் செல்லும்போது எடுத்துப்போக குடை இருந்திருக்காது. வீடே ஒழுகும் ஓட்டைகள் கொண்ட குடிசையாக இருக்கும். பல வீடுகள் அப்படித்தானே இருக்கின்றன. உழைக்கிறார்கள். ஆனால் உயர முடிவதில்லையே. அதை உறுதி படுத்தும் வகையில் மூத்த பையன் அடுத்து ஒரு கேள்வியைக் கேட்டான். 

“அப்பா எப்பம்மா வருவார்?” 

“வருவார்டா” 

“அதான் எப்ப? . ஏம்மா ரொம்ப நாளா வரல?” 

“டே சும்மா இருடா” ஓர் அதட்டுதலில் மேலும் கேள்வி கேட்காதவாறு அடக்கி வைத்தாள். 

வெள்ளரிக்காயுடன் அடுத்த நிறுத்தத்தில் ஏறிய வியாபார பெண்மணியிடம் பத்து ரூபாய்க்கு மூன்று வாங்கி இரண்டை அந்த சிறுவர்களிடம் காட்டி வாங்கச் சொன்னேன். அவர்களுக்கு பெற்றுக்கொள்ள இஷ்டமில்லை போல. 

வேண்டாம் என்று கைகளால் சைகை செய்தார்கள். “வாங்கிக்கச் சொல்லுங்கம்மா” என்றேன். 

“வேண்டாய்யா” என்றார் பெண்மணி. 

துறவி அவனை அழைத்தார். போக யோசித்தான். பின் என்ன நினைத்தானோ தயங்கித் தயங்கி அருகில் போனதும் தான் வாங்கி வைத்திருந்த மூன்று வெள்ளரி பிஞ்சுகளை அவனிடம் கொடுத்தார் வாங்க மறுத்தான். தாயை பார்த்தான். சைகைகூட ஏதுமில்லை. ஏதோ சிந்தனை அவளை மூடியிருக்கக்கூடும். அசட்டுச் சிரிப்போடு வாங்கிக்கொண்டான். 

“ஒண்ணு ஒனக்கு. ஒண்ணு தம்பிக்கு. இன்னொண்ணு அக்காவுக்கு” என்றார். 

“ம்”

“பிச்சைக்காரன் கொடுத்ததுன்னு தூக்கி வீசிடாத. கழுவிபுட்டு தின்னு” என்றார். 

அவன் கொண்டுபோய் பையில் ஒன்றை திணித்தான். கழுவாமலேயே தம்பிக்கு ஒன்றைக் கொடுத்து தானும் உண்டான். 

நான் வைத்திருந்த வெள்ளரிக்காயில் இரண்டை துறவியிடம் நீட்டினேன். ஏதும் சொல்லாமல் வாங்கி கையிலேயே வைத்திருந்தவர். பின்னர் ஒன்றை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். மற்றொன்றை தன் பைக்குள் வைத்துக்கொண்டார். 

வறிய குடும்பம் இறங்கட்டும் என்று வண்டி நின்றிருக்குமோ. அவர்கள் இறங்கியதும் வண்டி பயணத்தைத் தொடர்ந்தது. வெள்ளரிக்காய் விற்ற முதலாளி அம்மா அடுத்த பெட்டிக்கு போனார். 

நான் வெள்ளரிக்காய் ஒன்றை கழுவிக்கொண்டு வந்து கடித்தவாறு துறவியிடம் பேச்சுக் கொடுத்தேன். 

“சாமிக்கு எந்த இடம்?” 

“தமிழ் நாடுதான்” என்றார். 

“தமிழ் நாட்டுல எந்த ஊர் சாமி?” 

“இங்கே வந்து பதினோரு வருஷமாச்சி சொந்த ஊர்னு எதுவும் இல்லை. ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸான்ட், கோவில் வெளி வரண்டா, ஆல மரம்தான் என் ராப்பொழுது” என்றார். 

“பூர்வீகம் எது சாமி?” 

“உத்திரப் பிரதேசம்” 

“உத்திரப் பிரதேசமா!” 

“ஆமாம். உ.பி.யில உள்ள ஓரு மாவட்டத்தில் ஓர் ஊர்” என்றார். 

“அங்கிருந்து இங்க எப்படி வந்திங்க?” 

“தெரிஞ்சிக் கிடனுமா?” 

“ஆமா சாமி. சொன்னா தெரிஞ்சிக் கிடுறேன். விருப்பமிருந்தா சொல்லுங்க” என்றதும் அவர் கதை சொல்லியாகிறார். நானும் நடுவே சொல்ல வருவேன். 

நான் இருபத்தி மூணு வயதில் ராணுவத்தில் சேர்ந்தேன். பயிற்சிக்குப் பின் உங்கள் மாநிலத்தின் குண்ணுரில் உள்ள வெல்லிங்டன் பயிற்சி பள்ளியில் பதினைந்து வருஷம் பயிற்றுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் ஐந்து ஆண்டுகளே சொந்த ஊரில் இருந்தேன். (உ.பி.யில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஹைதர்கார் என ஏன் சொல்ல வேண்டும்.) அதற்குள் இல்லறத்தில் விரிசல் வந்துவிட்டது. யாரிடமும் சொல்லி ஆறுதல் அடைய வேண்டும் என்ற மன நிலையெல்லாம் இற்றுப்போய் அதுவும் வாழ்க்கைதான் இதுவும் வாழ்க்கைதான் என பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் இலக்கு மரணத்தை நோக்கியது. என் ஆசையும் தேவையும் அதுதான். மற்றவை ஒரு துறவியின் தேவைகள். 

சொல்ல உங்களுக்கு தேவையில்லைதான். நான் தெரிந்துகொள்ள மனம் இருந்தால் சொல்லுங்கள் என்றேன். 

மனம் இல்லை. என்னிடம் இப்போது பாரமில்லை. உங்களுக்காக சொல்கிறேன். இலக்கியத்தின் மீதான அதீத ஈடுபாடு என்னை சிறுகதைகள் எழுத ஆர்வ மூட்டியது. ஐந்தே கதைகள்தான் எழுதினேன். இலக்கியத்திற்கு அத்தோடு முழுக்குப் போட்டேன். அதுதான் என் வாழ்வையும் புரட்டிப் போட்டது என்றார். 

சத்திய பிரகாஷ் ராவ் என்ற அந்த துறவியிடம் இலக்கியம் பற்றி தெரிந்துகொண்டதில் இந்தி இலக்கியத்தை விட வங்க இலக்கியத்தின் தாக்கமே அவர் பகுதியில் அதிமாக இருந்துள்ளது. இந்தி இலக்கிய முன்னோடியான பிரேம்சந்த் என்பவரின் புகழ்பெற்ற நாவலான கோதானம் மட்டுமே வாசித்துள்ளதும் வங்கத்து தாகூர், மராட்டிய காண்டேகர் ஆகியோரின் மொழிபெயர்ப்பு படைப்புகளை நிறைய படித்துள்ளார். தாரா சங்கர் பந்தோபாத்யாவின் நீலகண்ட பறவையைத் தேடி என்ற நாவலையும், குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னி நதி போன்ற தாவல்களைப் படித்துள்ளதில் இருந்தே தேடி புத்தகங்கள் வாசித்துள்ளது அறிய முடிகிறது. இதற்கெல்லாம் மாறாக தமிழில் சுஜாதாவின் மர்ம நாவல்களையும் அறிவியல் கட்டுரைகளையும் விரும்பி படித்துள்ளார். ராணுவத்தில் ஓய்வற்ற பணிகளுக்கிடையில் தேர்ந்த புத்தகங்களை வாசித்த நல்ல வாசகர் என்பதனால்தான் இவரது அடுத்த நகர்வு சிறுகதை எழுத்துவதற்குச் சென்றுள்ளது. சூழ்நிலை, விதி, சந்தர்ப்பம், பாவம் எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அங்கேதான் கயிறு பாம்பாக மாறியது என்கிறார் சத்தியா. 

ஒரு நாள் என் மனைவியுடன் பேருந்தில் பயணம் செய்தபோது அதே பேருந்தில் ஐந்து அல்லது ஆறு இருக்கைக்கு முன் அடுத்தத் தெருவில் உள்ள ஒரு பெண்மணியும் பயணம் செய்தார். அவர் எங்கள் தெருவில் வீடுகளுக்கு பால் ஊற்ற வருபவள். இத்தனைக்கும் நாங்கள் அவளிடம் பால்கூட வாங்குவதில்லை. வீடு திரும்பிய என் மனைவி அந்த பெண்ணை மையமாகக் கொண்டுதான் என் முதல் சிறுகதையை எழுதியதாகவும் அவளுக்கும் எனக்கும் தொடர்பு உண்டு என்றும் நான் சொல்லித்தான் அவளும் அதே பேருந்துக்கு வந்து பணித்துள்ளாள் என்றும் கதை கட்டினாள். 

அதுதான் தொடக்க புள்ளி. என் மனைவிக்கு இலக்கியத்தின் மீது எந்த ஈடுபாடுமற்றவள். கணவனின் கதை வந்துள்ளதே என படித்த வினை. பின்னோரு நாள் அவளுக்கு ஓட்டுநர் உரிமம் எடுக்கலாமென ஒரு பயிற்சிக்கூட அலுவலகம் சென்றோம். அங்கே பணி புரிந்து வந்த பெண்மணி எங்கள் இருவரையும் புன்னகையோடு வரவேற்றார் மனைவிக்கு மூஞ்சு உம்மென்றது. வீட்டுக்கு வந்ததும் அவள் என்னைப் பார்த்துத்தான் பல்லை இளித்ததாகவும் எங்களுக்குள் ஏதோ தொடர்பு உள்ளது என்றாள். இத்தனைக்கும் அந்த பெண்ணை நான் அதற்கு முன் பார்த்ததோ அந்த பயிலகத்திற்குப் போனதோ இல்லை. உரிமத்திற்கு பணம் கட்டிவிட்டு வந்தும் படிவங்களில் கையெழுத்துபோட மறுநாள் வரச் சொல்லியும் அடித்த ரகளையில் நாங்கள் போகவே இல்லை. 

உரிமம் எடுத்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நின்றதால் இரு வாரத்திற்கு பிறகு வேறொரு பயிலகத்திற்கு போனோம். என் போல்லாத காலம் அங்கேயும் ஒரு பெண்தான் எழுத்தராக இருந்தாள். அடி மாட்டு விலைக்கு பணிபுரிய பெண்கள் கிடைப்பதோடு சிகரெட் பிடிக்கப் போவது நடுவில் வெளியே போய் சொந்த வேலை பார்ப்பதெல்லாம் பெண்களிடம் இருக்காதென்பதால் இவ்வாறான நிறுவனங்களில் பெரும்பாலும் பெண்களே நியமிக்கப்பபடுவது வழக்கமாகி விட்டது. நல்லவேளை இவள் எங்களை பார்த்து புன்னகைக்க வில்லை பட்டும் படாமலும் பேசினாள். நான் பதில் அளிக்காமல் மனைவியை சொல்லட்டும் என திட்டமிட்டு இருந்து விட்டேன். என்ன இருந்தேன்ன உரிமம் பெற்றுத்தர மூன்று நாள் நாங்கள் அலைய வேண்டி இருந்தால் என்னை பார்க்க வேண்டுமென்றே அந்த பெண் மூன்று நாள் இழுத்து அடித்துள்ளாள் என மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாள். இந்த மூன்றாவது பெண்மணிதான் வார இதழில் வெளிவந்த எனது இரண்டாவது கதையின் நாயகி என்றாள். என்ன எடுத்துச் சொல்லியும் அவள் புரிந்துகொள்ளும் மன நிலையை இழந்தவளாகி விட்டாள். 

செய்தித்தாள் தொலைக் காட்சிகளில் எல்லாம் எதார்த்தத்திற்கு மாறான உறவுகள் குறித்த செய்திகள் வருவதை கேட்டு மனதிற்குள் வித்தியாசமாக நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு மனநிலை மோசமானது. இருபதாண்டு காலம் குடுப்பத்தை விட்டு தனியே இருந்தவன் ஒழுக்கத்தோடா இருந்திருப்பேன் என்ற ஐயம் அவளுக்கு. என்னால் புரியவைக்க முடியவில்லையா அல்ல புரிந்துகொள்ள தவறினாளா என்பதே தெரியவில்லை. மொத்தத்தில் தான் தோற்றுப்போய் விட்டேன். 

“ஏம்மா நான் அந்த பொண்ணோட பேச கூட இல்லையே. நீ தானே பேசினே” 

“எப்படி பேசுவிங்க. எல்லாம் நடிப்பு. பேசுனா தெரிஞ்சிடுன்னு ஒண்ணும் தெரியாதது போல ரெண்டு பேரும் ஆக்ட் விடுறிங்க” 

“ஐப்பது வயதாகப்போவுது இப்ப போயா என் மேல சந்தேகப்படுறே?” 

“எழுவது வயதுக்காரனுக கூட கொழுப்படுத்து தப்பு பண்ணுறானுக நீ பண்ண மாட்டியா என்ன?” தமிழ்நாட்டில் நீ வா போ என்று சண்டையில் பேசுவதுபோல ஹிந்தியில் மரியாதை குறைவான வார்த்தைகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டாள். 

“இந்த வயதுல காதலிக்கிறேங்குறியே. உனக்கு மூள கீள ஏதுமில்லையா?” 

“இது காதல் இல்ல. நீ பண்ணுறது கள்ளக் காதல்” 

“வா போன்னு பேச ஆரம்பிச்சிட்டே என்ன மரியாதை தெரியாத ஜென்மமா நீ”

“அப்டித்தான் பேசுவேன் . என்ன பண்ணுவே” 

“விட்டா வாடா போடான்னு பேசுவியா” 

“பேசு வேண்டா . உனக்கெல்லாம் எதுக்குடா மரியாதை” என்றாள். ஒரு இடத்தில் நிறுத்திக் கொண்டேன். 

என்னை அவளுக்குப் பிடிக்க வில்லை. நான் இல்லாமல் வாழ்வது பெரிய பிரச்சனை இல்லை என்பதை தெரிந்து கொண்டாள். பணியில் இருக்கும்போது தனியே தானே வாழ்ந்தால் அந்த அனுபவம். குழந்தைகளும் 
ஓரளவுக்கு வளர்ந்து விட்டார்கள். 

குழந்தைகளுக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. அப்பா பெரிய பொருட்டல்ல. அம்மாவிடம் வளர்ந்தவர்கள். 

நித்தம் நித்தம் சண்டை. சத்தம் வீட்டை அடைத்தது. மண்ணாங்கட்டி இலக்கியம் என பேனாவை மூடி வைத்தேன். ஐந்து சிறுகதை எழுதி மூன்று வெளிவந்ததோடு சரி. அதன் பிறகு படிப்பது கூட இல்லை. 

இத்தனைக்கும் அவள் அன்பானவள். நல்லவள்தான். சப்பாத்திக்கு டால்தான் குழந்தைகளுக்கு பிடிக்குமென்றாலும் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் சென்னா மசாலாவை எனக்காக அடிக்கடி செய்வாள். வயிறு முட்ட கொடுத்து மூச்சிரைக்க வைப்பாள். 

ஓநாய் அழுவதை போல ஒரு நாள் என் மேல் இரக்கப்பட்டு “நீங்க நல்ல நீங்கதான் உங்களுக்கு தெரியாமலேயே தப்பு செய்றிங்க. வாங்க ஒரு டாக்டரை பார்த்து உங்களுக்கு வைத்தியம் பண்ணுவோம்” என்றாள். 

“எனக்கென்ன வைத்தியம். நான் என்ன லூஸா? எனக்கு வைத்தியம் பண்ணுறேங்குறே” என்றேன். 

“வாங்க டாக்டர கேப்போம். அவரு என்ன சொல்ராருன்னு பாப்போம்” என்றாள். 

பட்டென என் மனதில் வேறொன்று தோன்றியது. அதுவும் நல்லதுதான் அவரைக்கொண்டு ஏதேனும் புத்திமதி சொல்லச் சொல்லலாம் என எண்ணி ஒத்துக் கொண்டேன். மறுநாள் ஒரு மனோதத்துவ மருத்துவரை சந்தித்தோம். 

“ம். சொல்லுங்க என்ன பிரச்னை?” என்றார் மருத்துவர். 

“இவரு சில லேடீஸோட இல்லீகலா கான்டேக்ட் வச்சிருக்காரு டாக்டர்”. 

“இவரு யாரு?” 

“ஹஸ்பென்ட். உண்மைய ஒத்துக்க மாட்டேங்குறார். வீட்டுல ஒரே சண்ட டாக்டர்.” 

என்னைப் பார்த்தார். “நான் மிலிட்டரியில இருபது வருஷம் இன்ஸக்டரா ஒர்க் பண்ணின கண்ணியமானவன். என்ன சந்தேகப்படுறாங்க டாக்டர்” என்றேன். 

“பெரிய மனுஷங்கங்குறத்துக்காக தப்பு பண்ண மாட்டாங்கன்னு சொல்ல முடியாது. அந்தஸ்துக்கும் தப்புக்கும் சம்பந்தமில்ல. நாட்டுல சில பாதிரியார்கள், பேராசிரியர்கள், சாமியார்களே தப்பு பண்ணுறாங்களே” 

மனைவி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தாள் “அதான் டாக்டர். தப்பையும் செஞ்சிட்டு ஒத்துக்க மாட்டேங்குறார். எலக்ட்ரானிக் முறையில ட்ரீட்மென்ட் கொடுத்து அவர் வாயாலயே உண்மைய வரவழைக்கணும் டாக்டர்” என்றாள். 

“அப்படியெல்லாம் எந்த வைத்தியமும் இல்லம்மா. யாரு சொன்னது உங்களுக்கு இத?” 

“ஒரு புக்ல  படிச்சேன் டாக்டர். இருக்கு” என்று அடித்து பேசினாள். சம்பந்தா சம்பந்தமில்லாது பேசியதை கண்ட மருத்துவர் அவளை பற்றி புரிந்துகொண்டு, தனித்தனியே பேச வேண்டுமென்று அவளிடம் பேசிவிட்டு பின்னர் என்னிடம் தனியே விசாரித்தார். நான் நடந்ததை சொன்னேன். 

“மீடியாக்கள்ல வர வித்தியாசமான சம்பவங்களை பற்றியே திரும்ப திரும்ப யோசிச்சு மனசுல அது மட்டுமே பதிஞ்சி பாக்குறத எல்லாம் அதை தொடர்பு படுத்தி பாக்குற குணம் இது. பல பேரு இது போல இருக்காங்க. நாம என்ன சொன்னாலும் கேக்கவே மாட்டாங்க. ரெண்டு பேருக்கும் மன அழுத்தம் இருக்குன்னு சொல்லி மருந்து தாறேன். உங்களுக்கு கொடுக்குறது வெறும் வைட்டமின் மாத்திரை. பேப்பர் கோட்டிங் இல்லாததா எழுதி தாறேன். ஏன்னா படிச்சாங்கன்னா தொல்ல. சாப்பிட்டதும் நீங்களும் தூக்கம் வர மாதிரி நடிச்சிட்டு தூங்க போய்டுங்க. என்ன புரியுதா?” 

“சரி டாக்டர். எப்டியோ சரியான சரி” 

“அது அவங்க டேப்லெட் எடுத்து கிடுறத பொருத்தது. எப்படியும் சாப்ட வச்சிடணும்”. 

“ஓ. கே. டாக்டர்”. 

இருவரையும் உட்கார வைத்து ” உங்க ரெண்டு பேருக்கும் மன அழுத்தம் இருக்கு. ரெண்டு பேருக்கும் மருந்து தாறேன். ஒரு மாதம் சாப்டுட்டு திரும்ப வாங்க பாப்போம்” 

“எனக்கு ஏன் டாக்டர் மாத்திரை கொடுக்குறிங்க. நான் நல்லாத்தானே இருக்கேன்” என்று முகத்தை கடுகடுப்பாக்கினாள். 

“மன அழுத்தம். வேற ஒண்ணுமில்ல. டாக்டர நம்பித்தான வந்திங்க. நான் சொல்லுறத கேளுங்க. ரெண்டு பேரும்” என்று அனுப்பி விட்டார். 

வெளியில் வந்ததும் நான் ஏதோ அவரிடம் சொல்லிக் கொடுத்து சரிகட்டி விட்டதாக சத்தமிட்டாள். 

இரவானதும் நீங்க பஸ்ட் மாத்திர சாப்பிடுங்க தான் அப்புறம் சாப்பிடுறேன் என மழுப்பினாள். பின்னர் நாளை எடுத்துக் கொள்கிறேன் என்றாள். நான் சாப்பிட்டதும் நாளையாவது அவள் சாப்பிடணுமே என தூக்கம் வருவதுபோல் சோம்பல் முறித்து படுக்கப் போனேன். 

மறு நாள் நான் சாப்பிட்டதும் ‘நான் ஏன் மாத்திர திங்கணும். நான் என்ன தப்பு பண்ணினேன்’ என ஆவேசப்பட்டு அவளின் மாத்திரைகளை பிடுங்கி சாக்கடையில் வீசிவிட்டு வந்துவிட்டாள். “முழுங்குனா உங்களுக்கு தானே தூக்கம் வருது நீங்கதான் முழுங்கணும்” என அடம் பிடித்து தினமும் என்னை மாத்திரை எடுக்க வைத்தாள். அந்த சத்து மாத்திரையை. 

தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரெட்டி ஆபீசராக வேலை பார்க்க சென்று வருவதால்தான் வெளியில் போகும்போது சந்தேகப் படுகிறாள் என அந்த வேலையையும் விட்டு வீட்டில் முடங்கினேன். 

வீட்டில் என்னை கண்டால் என்னுடன் எது பேசினாலும் ஆவேசம் கொள்ள ஆரம்பித்தாள். ஐந்து நாள் உறவினர் வீட்டுக்கு நான் சென்றிருந்தபோது அமைதியாக இருந்ததாக மூத்த மகன் மூலம் தெரிந்து கொண்டேன். 

ஒரு நாள் “நான் செத்து பொய்ட்டா நீ நல்லதுன்னு நெனக்கிறே. ஆனா சாவு வர மாட்டேங்குது தற்கொலை பண்ணிகிடுவேன் ஜாக்கிரதை.” மிரட்டினேன். 

“சாவுறதுன்னா சாவு. எக்கொண்ணுமில்ல. என் வாழ்க்கைய நான் பாத்துகிடுறேன்” 

“அந்தளவுக்கு வந்துட்டியா உழச்சு ஓஞ்சி போய்ட்டேன். இனி சக்கைதானேன்னு நெனக்கிறால்ல” 

“ஒழுக்கங்கெட்ட நீ இருந்தா என்ன செத்தா என்ன?” 

“உன்னோட சந்தேகப் பேய் உன்ன விட்டுபோய், தவறுக்கு மன்னிப்பு கேட்க நெனக்கிறபோது நான் இருக்கமாட்டேன் போ.” 

“நீ தப்பு பண்ணுனே. தப்பு பண்ணுறே அவ்வளவுதான்” 

“ஆனா நீ தப்பு பண்ணினேன்னு ஆயிரம் பேர் சொன்னாலும் நம்ப மாட்டேன் தெரியுமா” 

“ஓ . சந்தேகம் வேற படுவியா என் மேல. யார யாரோட ஒப்பிடுறே. நான் சீதடா.” 

சண்டையை வலுத்தது. 

குழந்தைகள் ஆங்கிலத்தில் திட்டி சப்தமிட்டார்கள். அவள் தனக்குத் தெரிந்த இன்னொரு மொழியான உருதுவில் திட்டினாள் நான் தமிழில் திட்டினேன். யாருக்கும் ஏதும் புரியவில்லை. அன்று யாரும் சாப்பிட வில்லை. இது தொடர் கதையானது. குடும்பம் என்ற வரையறைகள் சிதறிப்போயின. 

அவள் மனதில் சந்தேகப் பேய் உலுக்கத் தொடங்கியது. உண்பது உயிர் வாழ்வதற்காக என்றும் உயிர் வாழ்வது மரணத்திற்கு பயந்து என்றுமான நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆன்மா அடிமேல் அடிபட்டு நொறுங்கி கீழே விழாத 

கீழே விழாத மைக்கா போல் ஆனது தற்கொலை முயற்சியெல்லாம் வாழ்வெனும் தேடலுக்குள் பதுங்கியது. எச்சத்தில் ஏதேனும் நம்பிக்கை விதை கிடைக்கலாம் என்ற அவாவிலும் சில ஓலங்களின் பிரதிபலிப்பாய் என்னவாக இருக்கும் என்ற கற்பனை உருவின் முன் தோற்றுப்போயின. இருக்கவும் முடியாது இறக்கவும் முடியாது இருப்பதிலிருந்து விடுபடுதலே வழி என்ற முடிவுக்கு வந்தேன். உள்ளூரில் இருந்தால் யாருக்கேனும் தெரிந்து விடுமென காசிக்கு வந்து கடைசியாய் விஸ்வநாதனை தரிசித்துவிட்டு அங்கிருந்து தெரிந்த இடங்கள் தெரிந்த பாஷை உள்ள இடமென கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ராயிலில் சென்னை வந்து வேஷங்களை கலைத்து விட்டு துறவியானேன். 

இடையில் ஒருமுறை என்னிடம் பயிற்சி எடுத்த சிப்பாய் ஒருவரை பார்த்துவிட்டேன். தெரியக் கூடாதென முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டு நடந்தும் அவர் ஓடி வந்து “என்ன சார்?” என்றார். 

“ஒன்றுமில்லை சொல்வதற்கு” என்றேன். 

பேசமுடியாது மலைத்துப்போய் மௌனமானார். 

“சரி போகிறேன்” என்றார். 

“கையைக் கொடுங்கள்” என்றேன். 

கொடுத்தவர். 

“யாரிடமும் சொல்ல மாட்டேன். சத்தியம்” என்றார். 

“அதற்கில்லை. தமிழர்களைப் பற்றி எனக்கு நன்றாய் தெரியும். சொல்ல மாட்டீர்கள்” 

“பின் எதற்கு?” 

” “

மௌனத்தோடு முடிந்தது. கண்ணீர் துளிகளை ஆட்காட்டி விரலால் தட்டிவிட்டு நகர்ந்தார். 

ஐந்து ஏக்கர் கோதுமை விளை நிலம் இருக்கிறது. பென்ஷன்தாரர் காணாமல் போனதாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஓய்வூதியத்தை தற்காலிக சூடும்ப ஓய்வூதியமாக மாற்றி வழங்குவார்கள். ஏழு வருடமானதும் காணாமல் போனவர் இனி கிடைக்க வாய்ப்பில்லை என வழக்கை முடித்து இறந்ததாக அறிவித்திருப்பார்கள். அதனடிப்படையில் நிரந்தர குடும்ப ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருப்பாள். குடும்பத்திற்கு பொருளாதார பிரச்சனை ஏதுமிருக்காது. அதற்கு மேல் அவள் ஏதேனுமென்றால் அடுத்த தெருவில் வசிக்கும் அவளது விபரம் தெரிந்த தம்பி வழிகாட்டி சரி செய்துவிடுவார் என்ற நம்பிக்கையோடும் வெளியே வந்தேன். அப்போது வேண்டியது நான் காணாமல் போவது ஒன்றே. என்னை அடைத்து பூட்டிவிட்டு சாவியை தொலைத்துவிட்டேன். நெஞ்சம் கல்லானது என்றாலும் உள்ளே கொஞ்சம் ஈரம் இருந்திருக்கலாம். காலப்போக்கில் உணர்ந்து என்றாவது ஒரு நாளைக்கு கண்ணீராய் கசிந்திருக்கலாம். மகன்கள் இருவரும் கொஞ்சம் வருந்தியிருப்பார்கள். இளைய மகன் என்றேனும் வருவேன் என எதிர்பார்த்து ஏமாந்திருக்கக் கூடும். காலப்போக்கில் நினைவுகள் எல்லாம் உளுத்து உதிர்ந்துபோய் என்னை மறந்திருப்பார்கள். நானும் தான். 

நிமிர்ந்த பார்வை நேர்கொண்ட நடையில் ராணுவப் பள்ளியில் கவாத்துப் பயிற்சி அளித்து நேர்மையாய் கம்பீரமாய் வாழ்ந்த எனக்கு ஆரம்பத்தில் பிச்சை எடுப்பது மனதிற்கு பெரிய சவாலாகத்தான் இருந்தது. எல்லாவற்றையும் வெட்கமின்றி எடுத்து எறிந்துவிட்டு கூனிக் குறுகி கையேந்த வேண்டும். இதை விடுத்து உழைத்து பிழைத்து வாழ்ந்திருக்கலாம் தான். இல்லற வாழ்வை விட்டவனுக்கு துறவுதான் சரியென்றும் நசுங்கிய ஆன்மாவுக்கு இதுவே விடுதலையென்ற தீர்வில்தான் வந்தேன். என் தேவைக்கு கூடுதலாகக் கூட பிச்சை கிடைக்கும் 

“யாசகம் என்று சொல்லுங்களேன்.” 

இதில் என்ன வெட்கம். நான் எடுப்பது எனக்கு பிச்சைதான். கூடுதலாக பிச்சை கிடைத்தால் இயலாதவர்களுக்கு தர்மம் செய்து விடுவேன். எனக்கென ஒரு ஆயிரம் ரூபாவை என் பையில் எப்போதும் வைத்திருக்கிறேன். அனாதை பிணமென தூக்கி புதைப்போருக்கு அன்பளிப்பாக அது இருக்கட்டுமே என்று. 

இடையில் ஒரு வளம் மிக்க குடும்பம் இரு ஆண் குழந்தைகளோடு ஏறியிருக்கிறது. கொண்டுவந்த விலையுயர்ந்த பிஸ்கட்கள் ஜாக்லெட்களை உண்டு கும்மாளமாக பயணிக்கின்றனர். யாசகர் ஒருவரின் பாத்திரம் எழுப்பும் ஒலி அவர்களின் காதுகளுக்கு விழவில்லையா? இல்லை. போட மனமில்லை. சத்திய பிரகாஷ் துறவி ஒரு பத்து ரூபாய் நேட்டை எடுத்துப் போட்டார். என்னிடம் இருந்த ஒரே இருபது ரூபாய் நோட்டையும் போட்டேன். அந்த பணக்கார குடும்பத்திற்கு துறவியின் அன்பளிப்பு ஒற்றும் அசைவை ஏற்படுத்த வில்லை. அடுத்த நிறுத்தத்தில் இறங்கினர். காரில் வராமல் ரயிலில் வர ஏதோ காரணம் இருக்கலாம் . நமேக்கென்ன. 

ஓடி ஓய்ந்து போனது ரயில். 

இருவரும் இறங்கினோம். 

“போய்ட்டு வர்றேன் சாமி” என்றேன். 

“வர்றேன்னு சொல்லாதிங்க. போறேன்னு சொல்லுங்க” என்றார். 

நான் எதுவும் சொல்லவில்லை. 

“போகிறேன்” என்றார். ஏதோ ஓரு திசையில் பயணித்துகொண்டு இருந்தார்.

– எட்டி மரக்காடு சிறுகதை தொகுப்பில் வெளியான சிறுகதை (நன்றி: FreeTamilEbooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *