சோதிட நம்பிக்கை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 4,479 
 
 

எனக்கு ஜோதிடத்தில் எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை. சோதிடம் பொய் என்று அந்தப் பாரதி சொல்லி விட்டுப்போனான். நானோ எழுதி எழுதி ஏட்டைக் கெடுக்கின்ற ஜாதிக்காரன். என் அப்பாதான் என்னிடம் அடிக்கடி சொல்வார்.

“ஏன்டா காசுபோட்டு வாங்கின வெள்ள பேப்பர்ங்களை எல்லாம் கருப்பாக்கிகிட்டு அலையுற?” விஷயம் எதுவும் தெரியாமலா சொல்லி இருப்பார்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டு கட்டங்களை ஆய்ந்து ஆய்ந்து கிரகங்களைப் பார்த்தால் அந்த பாரதிக்குத்தான் ஜோதிடம் என்கிற விஷயம் சரியாகப் பிடிபடவில்லையோ என்று ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. யாரும் பொய் வேண்டுமானால் சொல்லிவிடலாம். அது அப்படியேயில்லை. இது இப்படியே இல்லை. சந்திரன் தான் ஒரு கிரகமா, இல்லைதானே? சூரியன் ஒரு விண்மீன் ஆயிற்றே? எப்படி கிரகம் என்று பட்டம் கட்டி நவக்கிரகங்களின் மைய இடத்தில்? நாம் வாழும் இந்த பூமி என்கிற கிரகத்துக்கு ஒரு கணக்கும் அந்த நவக்கிர வரிசையில் காணோமே? எல்லாம் சரிதான் ஆனாலும் இந்த ஜாதகத்தினுள் ஏதோ ஒன்று ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. அடிமனம் ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறதோ?

மைக் பிடித்துக்கொண்டு ஜம்பத்திற்குப் பேசிவிடலாம், ஜோதிடத்தில் எல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. அது உண்மையாகிவிடுமா? எழுத்தாளர் புதுமைப்பித்தன்தான் ஏதோ ஓர் இடத்தில் சொல்வார்: “பேய் பிசாசு இல்லை இல்லை என்று பட்டப்பகலில் அடித்துச் சொல்லிவிடலாம். பாதி ராத்திரியில் பேய் பிசாசு நினைப்பு வந்துவிட்டால் அச்சம் நம்மை உலுக்கித்தானே பார்க்கிறது?’ துளி அச்சம். அது உண்மை.

என் சம்பந்திதான், வருங்கால சம்பந்தி… இப்படிச் சொன்னால் சரியோ?

“உங்க பையனுக்கும் என் பெண்ணுக்கும் திருமணப்பொருத்தம் பார்க்க வேண்டும். அரியலூர் அதுதான் அந்த திருச்சிக்கு அருகிலே உள்ள அந்த அரியலூருக்குப் போய் அந்த ஜோசியரைப் பார்த்துவிட்டு வர வேண்டும். நீங்களும் கட்டாயம் என் உடன் வருகிறீர்கள்?” என்று அழைத்தார்.

நானும், “சரி வருகிறேன்” என்று சம்மதம் சொல்லிப் புறப்பட்டேன்.

ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டபடி அரியலூர் பேருந்து நிலையத்தில் நானும் அவரும் சந்தித்தும் விட்டோம்.

“இப்ப நாம எங்க போகணும்?”

“நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம்.ஜோசியரு விலாசம் எங்கிட்ட இருக்கு, நேரா அவருகிட்டதான் போறம்”

“எனக்கு ஜோசியம் இதுல எல்லாம் அவ்வளவு பிடிப்பு இல்லே. நான் ஜோசியரு கிட்ட போவுறதும் இல்லை” சம்பந்தியிடம் சொல்லிக் கொண்டேன்.

பொய்தான் சொன்னேன்.

“அது கூட தெரியாமலா? நீங்க உங்க பையன் எனக்கு ஜாதகம் அனுப்பியிருக்கறது பாத்து நானே தெரிஞ்சிகிட்டேன்” அவரும் விடுவதாக இல்லை.

எனக்குள் மனம் குறுகுறுத்தது. அப்படி அவருக்கு ஜாதகம் அனுப்பும்போது என்ன தவறு செய்துவிட்டோம். கேட்டுத்தான் விடுவோமா? கேட்காமல் விடுவோமா? எது சரியாக இருக்கும்? மனம் ஒரு கணக்கு வேறு போட்டுப் பார்த்தது.

“அது கெடக்கு வுடுங்க. இப்ப நாம அரியலூர் மார்கெட் சந்துகிட்ட போறம். அங்க ஒரு மெஸ் இருக்கு. தெலுங்கு பேசுற ஐயர்தான் வச்சீருக்கார்னு கேள்வி.அந்த மெஸ்சுக்கு பக்கத்து வீடு.ஜோசியர் வீடு.. ஒரு ஆட்டோவை பிடிக்கறம். போறம். ரைட்டா வேலய முடிக்கறம். அந்த மெஸ்சுல ஒரு டிபன், காபி சாப்புடறம். அப்புறம் பொறப்படறது நாம சவ்கர்யந்தான். என்னா நான் சொல்றது?”

“ஜோசியரு பேரு?” நான் தான் கேட்டேன்.

“சுவாமி வீரு”

சம்பந்தி எனக்குப் பதில் சொன்னார்.

“யாரோ? எவரோ? எனக்கும் பெரியதாக அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. என் மனைவி அவளது நண்பர்கள் எனக்குச் சொன்னதுதான். சொன்னால் சொன்னபடிக்கு விஷயங்கள் நடக்கும் என்கிறார்கள். ஒரு விஷயம் சொன்னார்கள்…

திருமணப்பொருத்தம் அமைந்துவிட்டாதால்தான் நம்மிடம் காசு வாங்குவாராம். இல்லாவிட்டால் நீங்க போயி வேற ஜாதகம் எதாவது கெடைச்சா கொண்டு வாங்க. பெறகு பொருத்தம் பார்க்கலாம் ன்னு அனுப்பி விடுவாராம்”.

அரியலூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்காரர்கள் அவ்வளவாக இல்லை. மூலைக்கு ஒருவராகவே நின்று கொண்டிருந்தனர். ஓர் ஆட்டோவை சம்பந்தியே அமர்த்தினார். நாங்கள் இருவரும் ஆட்டோவில் அமர்ந்து கொண்டோம்.

“இதுக்கு மின்னாடி அரியலூர் உங்களுக்கு பழக்கமா? வந்து இருக்கிங்களா? போயிருக்கிங்களா?”

“ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். என் நண்பன். என்னோட ஈ பி ஆபிசுல டைபிஸ்ட் வேல பாத்துகிட்டு இருந்தவரு. ஆச்சி அது முப்பது வருஷம் இருக்கலாம். அவரு கொஞ்சம் கம்யூனிஸ்ட்காரரு. அந்தக் கல்யாணமும் சீர்த்திருத்தக் கல்யாணம். ஞாயிற்றுக்கிழமை ராவு காலத்துல வச்சிருந்தாரு. அவரு பேரு மறந்துகூட போனேன். நெனப்பு வந்ததும் சொல்றேன். அதுக்கு இந்த அரியலூர் வந்ததுதான். அப்புறம் இங்க நமக்கு ஜோலி ஒண்ணும் இல்லே.” நான் பேசிக் கொண்டே வந்தேன்.

“அவுருக்கும் இந்த அரியலூர் சொந்த ஊர்தான். இப்ப நாம போற எடம் எங்க?” நானே மீண்டும் கேட்டேன்.

“மார்கெட் தெருவு”

“இப்பம் ஞாபகம் வருது. அவ்ரு பேரு வீராசாமி. ஆமாம் அதான். அவரு வீடும் மார்கெட் தெருவுலதான்னு எனக்கு ஒரு நெனைப்பு. சொந்த வீட்டுலவச்சிதான திருமணம் ஆச்சுது. யூனியன் தலைவருங்க பலபேரும் கல்யாணத்துக்கு வந்து இருந்தாங்க. கட்சிக்காரருல்ல, அப்புறம் வராம இருப்பாங்களா? வந்து இருப்பாங்க. அதுவும் அது அந்தக் காலம்”

“என்ன சொல்றிங்க சம்பந்தி? இந்தக் காலம்னா எங்க வரப்போறாங்கன்னு சொல்றீங்களா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. சும்மா ஒரு இதுக்கு சொன்னேன்” அவர் முடித்துக் கொண்டார்.

எனக்கு மனத்திரையில் வீராசாமியைப் பற்றி பழைய நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தன. வீராசாமி எல்லோரையும் “காம்ரேட்’… “காம்ரேட்’ என்றுதான் அன்போடு அழைப்பார். சிவப்பு சட்டை, சிவப்புக் கரை போட்ட வேஷ்டி. நீளத்துண்டு ஒன்று, கருஞ்சிவப்பு நிறத்தில் தோளில் தொங்கும். கக்கத்தில் ஒரு தினசரி. அதிலும் முகப்பு பக்கத்தில் அரிவாள் சுத்தியல் படம் போட்டிருக்கும். தொழிற்சங்க மேடைகளில் ஏறி அந்த மைக் பிடித்துவிட்டால் மூன்று மணி நேரத்துக்குப் பேசுவார். சேகுவேரா என்பார், மாவோ என்பார்,பிடல் காஸ்ட்ரோ என்பார்.

காம்ரேட் வீராசாமி பேச்சைக் கேட்பதுவே ஓர் உற்சாகமாக ஓர் உணர்வின் கொப்பளிப்பாக இருக்கும். மாநாடுகள் எங்கு நடந்தாலும் காம்ரேட்கள் புடை சூழ வீராசாமி அணிவகுப்பார். கொடி பிடித்து பாத யாத்திரை போவார். நான் அவரோடு கூட்டங்களுக்குப் போய் பிரமித்து நின்று கொண்டிருப்பேன்.

“என்ன சம்பந்தி ரொம்ப யோசனையா? வந்த களைப்புன்னு நெனைக்கிறேன். மார்கெட் தெரு வந்தாச்சி. எறங்குறம்”

நான் சுதாரித்துக்கொண்டேன். பழைய நினைப்பு என்னை எங்கோ அழைத்துக் கொண்டு போய்விட்டது.

“இதுதான் ஜோசியர் வீடு” ஆட்டோக்காரன் சொல்லி இறக்கினான்.

வீட்டு வாயிலில் கல்யாணக் கூட்டமாக இருந்தது. “சாமி வீரு ஜோதிட நிலையம்’ எழுதிய விளம்பரப் பலகை பெரியதாக நின்றுகொண்டிருந்தது. ஜோதிட நிலையத்தின் சிப்பந்திகள் காவிச்சட்டை அணிந்து கொண்டிருந்தனர்.

“எல்லார்க் கிட்டயும் அப்பாயின்மென்ட் வாங்கினதுக்கு பிரிண்ட் அவுட் கண்டிப்பாக இருக்கணும். காபி டிபன் சாப்பிடறதுன்னா பக்கத்துல தெலுங்கு அய்யரு மெஸ்சு இருக்கு. எது வேணுமோ சாப்பிடுங்க. பெறகு வாங்க. உங்க நம்பர் என்னவோ அதுப்படி உங்களை சாமி அய்யா கூப்பிடுவாங்க. ஒரு டோக்கன்னுக்கு ரெண்டு பேருதான் உள்ள அனுப்புவோம். ஜாதகங்க எத்தினி வேணும்னாலும் கொண்டாரலாம். பொருத்தம் அமஞ்சா தான் அய்யாகிட்ட தட்சணை ஏதும் சமர்ப்பிக்க முடியும். பொருத்தம் அமையலன்னா நாம வந்துட வேண்டியதுதான்.”

சம்பந்தி தன் கைவசம் இருந்த ஒரு பிரிண்டவுட்டை அவரிடம் காண்பித்தார்.
“உங்களுக்கு முன்னாடி ரெண்டு பேரு இருக்காங்க. நீங்க மூணாவது. போங்க காபி, டிபன் ஏதாவது சாப்பிடுங்க. வந்து வெயிட் பண்ணுங்க” எங்களிடம் சொல்லி முடித்துக்கொண்டார். நாங்கள் இருவரும் நாற்காலி பார்த்து அமர்ந்துகொண்டோம்.

“இன்னைக்கு சஷ்டி. நல்ல நாளு. சஷ்டி கவசம் சொல்லிக்கிறேன். மனசுக்குள்ளாறதான். பொருத்தம் அமையணும். அதுதான். பிரார்த்தனை”

நான் சிரித்துக் கொண்டேன். லேசாகத்தான்.

“என்ன சிரிக்கிறீங்க?”

“ஒன்றுமில்லை” பதில் சொன்னேன். என் மகனுக்கும் நல்ல உத்யோகம். அவர் பெண்ணுக்கும் அப்படித்தான். நல்ல படிப்பு. ஒரு பிரச்னையும் இல்லாத குடும்பங்கள். தேவைக்கு தக்க சொத்து பத்துக்கள். ஒருவருக்கு ஒருவர் பிடித்தும் இருப்பது மெய். நான் என மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

சம்பந்தி அவர் வாய் முணுமுணுத்தது.

“நகநக நகநக நகநக நகென, டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண, ரரரர ரரரர ரரரர ரரர, ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி, டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு, டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு’ என போய்க் கொண்டே இருந்தது. இதற்கெல்லாம் ஏதும்பொருள் இருக்குமா? இல்லை. அது அந்த பழநி மலையான் முருகனுக்கு மட்டுமேதான் பிடிபடுமா? எனக்கு ஏனோ எட்டுவதே இல்லை.

“நீங்க உள்ள போகலாம்”

ஜோசியரின் சிப்பந்தி எங்களை உள்ளே போகச் சொன்னார். இரண்டு ஜாதகங்களையும் கையில் எடுத்துக்கொண்டு சம்பந்தி முன்னே சென்றார். மூன்று மின்சார மஞ்சள் பல்புகள் ஒரு அறை வாயிலில் அணைந்து அணைந்து எரிந்தன. அந்த வாயிலுக்கு முன்பாக திரைச்சிலையில் “ஓம்’ என்று எழுதித் தொங்கிக் கொண்டிருந்தது. குத்து விளக்குகள் நான்கு மூலைகளிலும் ஒளிர்ந்தன. மையமான மேடையில் சாமி வீரு அமர்ந்திருந்தார். அவருக்கு முன்பாக ஒரு டெஸ்க். அதன் மீது பென்சில், பேனா நோட்டு புத்தகங்கள்… கால்குலேட்டர், அவருக்கு அருகில் ஒரு கணிப்பொறி. அதன் திரையில் விநாயகர் நடனமாடியபடி.

சாமிவீரு நெற்றியில் சந்தனம். குங்குமம் கறுப்பு மெய் விபூதி அனைத்தும் கச்சிதமாகக் கொலுவிருந்தன. இடையில் பட்டு வஸ்திரம் கழுத்து நிறைத்து ருத்திராட்ச மாலைகள். கைகளில் பிரேஸ்லெட் மோதிரங்கள். தங்க பிரேமில் மூக்குக் கண்ணாடி.

“ஜாதகங்கள் இங்க கொடுங்கோ. மனசுல குல தெய்வத்தை இஷ்ட தெய்வத்தை மாதா பிதாவை நினைச்சிக்கணும்”

சாமிவீரு பேசியது அவ்வளவுதான். சம்பந்தி இரண்டு ஜாதகங்களையும் கொடுத்துவிட்டு பழப் பை, பூப்பந்து என ஜாதகங்களுடன் எடுத்து வைத்தார். ஒருமுறை சாமி வீருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டுத் தன் கைகளைக் கட்டியமர்ந்திருந்தார்.

சாமி வீருவைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. இவர் என்ன மந்திரவாதியா? ஜோசியக்காரரா? என்று ஐயம் வந்தது. சாமி வீரு ஜாதகங்களைப் பார்த்தார். கண்களை மூடினார். எதையோ மனக்கண்ணால் பார்த்துப் பேசிய மாதிரி இருந்தது. பின்னர் கணிப்பொறிக்கு வந்தார். இரண்டு நிமிடங்கள். கணித்திரையில் எதுவோ ஓடி நின்றது. அச்சாகிய நான்கு காகிதங்கள் வெளிவந்தன.

“ரொம்பப் பொருத்தமாக இருக்கு. இந்த பொண்ணுக்கு இந்த பையன்கறது அந்த சிறுவாச்சூர் மதுரகாளி முடிவு. நீங்க கல்யாண வேலைகள ஆரம்பிக்கலாம். ஆயுசு, ஆரோக்கியம், ஐஸ்வர்யம், குலவிருத்தி எல்லாம் சுபமா அமைஞ்சி இருக்குற ஜாதகம்க. ரொம்ப அபூர்வம்” சாமிவீரு முடித்துக் கொண்டார்.

சம்பந்தி கண்களை மூடி மூடித் திறந்து சாமிவீருவை மீண்டும் நமஸ்கரித்தார்.

தனது சட்டைப்பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டார்.

“நான் காசு பணம் கையால தொடறது விட்டு ரொம்ப நாளாச்சு. அத நீங்க அந்த உண்டியல்ல போட்டுட்டு போகலாம்” என்றார் சாமிவீரு.

நான் சனி மூலையில் இருந்த உண்டியலைப் பார்த்தேன். அதன் மீது சோதிடம் பொய் என்று கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தது. சம்பந்தி தனது கையில் எடுத்து வைத்திருந்த பணத்தை அந்த உண்டியலில் போட்டு விட்டு அந்த உண்டியலை ஒரு முறை தொட்டு பின்னும் நமஸ்கரித்தார்.

சாமிவீரு கொடுத்த நான்கு கணிப்பொறி அச்சுக் காகிதங்களோடு ஒரு குங்குமப் பொட்டலமும் உடன் இருந்தது. ” இதுக எல்லாம் கிடக்கட்டும்… இது என்ன சோதிடம் பொய் என்று எழுதி அந்த உண்டியல் மீது வைத்து இருக்கிறாரே’ என்று என் மண்டையைக் குடைந்தது. இந்த சாமிவீரு யார்? நமது நண்பர் வீராசாமியாகக் கூட இருக்கலாமோ என்கிற அய்யம் திடீரெனத்தான் எனக்குள் முளைவிட்டது.

“இது என்ன சோதிடம் பொய்னு எழுதி அதுக்குக் கீழே ஒரு உண்டியல் வச்சிருக்கிங்க. நீங்க பெரிசா ஜோதிடராச்சேன்னு இப்ப உங்களுக்குள்ள ஒரு சந்தேகம் வந்துருக்கு. இல்லையா?”

“ஆமாம் சாமி” நான்தான் சொன்னேன். சம்பந்தியோ இதுகள் எதிலும் நாட்டம் இல்லாமல் திருமணப்பொருத்தம் பார்த்தது… அதன் இத்யாதிகளிலேயே மூழ்கிவிட்டிருந்தார்.

சாமி வீருதான் சொன்னார். “சோதிடம் பொய்யின்னா ஒரு மனிதன் சோதிடத்தை மட்டுமே நம்பி எங்க தன்னுடைய முயற்சியை கை விட்டுடப் போறானோன்னு ஒரு அச்சத்துல பாரதியார் சொன்னது.. மனித முயற்சிதான் எப்பவும் ரொம்பப் பெரிய விஷயம்”

எனக்கு என் நண்பன் வீராசாமி என்னிடம் நேரில் பேசுவதுபோலவே இருந்தது. என் சம்பந்தியை நோக்கினேன். அவர் வேறு உலகத்தில் இருந்தார். ஜோதிடம் பார்க்க அடுத்துக் காத்திருப்போர் உள்ளே நுழைந்து அமர்ந்துகொண்டனர்.

நான் சாமிவீருவை ஒருமுறை பார்த்துக்கொண்டேன்.

“வெளிய போவுற வழி இப்படி இப்படி” என்று வேறு ஒருவழியைக் காண்பித்தார் சாமிவீருவின் காவிச்சட்டைச் சிப்பந்தி.

ஒரு பெரிய ஹாலைக் கடந்து வெளிப்படும் போது ஹால் சுவரில் நிறைய போட்டோக்கள் மாட்டப்பட்டிருந்தன. ஒரு போட்டோ சட்டென்று கண்ணில் பட்டது. பழைய போட்டோ. நான் படித்துக்கொண்டேன். ருசியப் புரட்சி தினம் நவம்பர் ஏழு, ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்து. அன்று அரியலூரில் நடைபெற்ற தோழர் வீராசாமி } தோழியர் கதிர்மதி திருமணப் படம். நானும் இந்தத் திருமண நிகழ்வுக்கு வந்திருந்தது என் நினைவுக்கு வந்துவிட்டது. புழுக்கையாய் இந்த போட்டோவில் எங்கோ நானும் இருப்பேன். என்னிடம் பத்திரமாக இந்த போட்டோவின் நகல் இன்னமும் இருக்கிறது. காம்ரேட் வீராசாமி எனக்குக் கொடுத்ததுதான்.

“நடேச அய்யிரு மெஸ்சுல ஒரு காபி சாப்பிட்டு பெறகு கௌம்பலாம். என்ன சொல்றீங்க?” என்றார் சம்பந்தி. “இனி கல்யாணத்துக்கு ஏகக்காரியம் கெடக்குது” அவர் ஒரு முறை சொல்லிக்கொண்டார்.

எனக்குள் என் நண்பர் காம்ரேட் வீராசாமி ஜோதிடர் சாமிவீரு ஆனதுதான் எப்படி? என்பது ஓடிக் கொண்டிருப்பதை நான் அவரிடம் சொல்லவில்லை.

– பெப்ரவரி 2017

எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *