“ஜானகி நான் திளம்பறேன்.”
“எங்கே போறிங்க?”
“இதென்னடா புது கேள்வி, நாடகத்திற்கு தான் போய்க் கொண்டிருக்கிறேன்”.
“இனிமே நீங்கள் நடிக்க வேண்டாம். நாடகமும் வேண்டாம், ஓன்னும் வேண்டாம் வீட்டிலேயே இருங்கள்”
“என்னாச்சு உனக்கு ஜான்கி?”
“எனக்கு ஒன்னும் ஆகலை. இந்த வயசிலயும் சின்னப் பொண்ணுகள் கூட்டம் சுற்றித் திரிகிற உங்களுக்குத்தான் வெட்கமில்லை”.
“என்ன சொல்றே?”
“எல்லாத்தையும் உடைச்சுச் சொன்னால்தான் தெரியுமா? கல்யாணம் முடிஞ்சு இருபத்தைஞ்சு வருஷமாச்சு தெரியுமா? இன்னும் ஏழு வருஷத்திலே நீங்கள் ரிடையர் ஆகப் போறேள், இந்த வயசிலே போய் கண்ட பொம்பளை பிள்ளைகள் கூட்டம் சுற்றிண்டு… சிவ சிவா_ கேட்கவேரொம்ப கூச்சமாயிருக்கு. இனி இந்த நாடகத்திற்கும், நடிப்பிற்கும் போக வேண்டாம்.”
“சும்மா என்னத்தையோ கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறாய். நான் கிளம்பறேன். எனக்கு நேரமாகிவிட்டது.”
“நான் இன்றைக்கு உங்களை நாடகத்திற்கு போக அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் முன்னால் வந்து நின்றாள் ஜானகி.
“ஜானகி வீணாக முரண்டு பிடிக்காதே எனக்கு டிராமாவிற்கு நேரமாகி விட்டது.”
“இனி நீங்கள் நாடகம் நடிக்க போனது போதும். நமக்கு திருமணமான புதிதிலேயிருந்து நீங்களும் தான் நடிக்கப் போகிறீர்கள்; நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா.
கல்யாணம் முடிகிற வயசிலே பெண்ணை வளர்த்து வைச்சிருக்கோம்கிறதை மறந்து விடாதீர்கள். சீதாவையும் அமெரிக்காவிற்கு படிக்கிறதுக்கு அனுப்பி வைச்சிட்டு இந்த வயசிலே சும்மா சின்னப் பொண்ணுங்க கூட ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறேள். ஏன் நான், சலித்துப்போயிட்டேனா?”
“ஜானகி திடீரென்று உனக்கு இந்த சந்தேகம் ஏன், என்னையா இப்படி நினைக்கிறாய்?”
“ஏன் மிஸ்டர் சுவாமிநாதனும் ஆண் மகன் தானே. அவருக்கும் ஆண் மேலாதிக்கம் இருக்கத் தானே செய்யும், இது உடலோடு ஊறிப் போன விஷயமில்லையா?”
“ஏன் இப்படி திரும்பத் திரும்ப என்னைச் சந்தேகப்படுகிறாய்? அப்படி என்னத்தைக்கண்டாய்?.
“நான் கண்டிருந்தால், அந்த வேளையே கழுத்தை நெறித்துக் கொன்று போட்டிருப்பேன், ம். என் மன்னி வந்து சொன்னாள். உங்கள் நாடகத்தில் நடிக்கிற பொண்ணோட சினிமாவிற்கு போனேளா?”
“அய்யோ! அந்தப் பெண் மட்டும் தனியாக வரவில்லை, டிராமா குரூப் எல்லோரும் சேர்ந்து தானே சினிமா பார்க்கப் போயிருந்து தோம்.. ஏன் வீணாக இப்படி விகற்பமாகப் பார்க்கிறீர்கள்?”
“அத்தனை குரூப் போடே போன நீங்கள் அந்தப் பெண்ணிற்கு மட்டும் ஐஸ் கிரீம் வாங்கித் தந்தீர்களா?”
“கிண்டலாகக் கேட்டாள். அதனால் வாங்கித் தந்தேன்.“
“அதனால்தான் அவளோடு அவள் வீட்டிற்கு போனீர்களா?”
“அவளை வீட்டில் கொண்டு விட்டு வந்தேன்”
“நம் திருமணம் முடிந்து இவ்வளவு நாள் ஆன பிறகும் என்றேனும் இப்படி பிரிந்து வருவதுண்டா. நான் தனியா தவித்துப் போவேன் என்று பதறிப் போய் வருகின்ற நீங்கள் இப்போதெல்லாம் இரவு பன்னிரண்டு மணி ஒரு மணி என்று நேரம் கெட்ட வேளையிலே வருகிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம்!”
“ஜானகி நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு டி.வி. சீரியல் பண்ணலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து வருகிறேன். தினமும் அதற்கான. டிஸ்கஷனில் கலந்து கொண்டு கிளம்பி வர எனக்குப் பிந்தி விடுகிறது”.
“நீங்கள் எவ்வளவுதான் சொல்லுங்கள், எனக்குள் மனசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது? நீங்கள் ஏதோ தப்பு பண்ணுகிறீர்கள் என்று தான் தோன்றுகிறது”.
“நீ கேட்டவற்றுக்கெல்லாம் நான் சரியான விளக்கம் சொல்லியிருக்கிறேன். இதைவிட என்ன எதிர்பார்த்து இப்படி அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கிறாய்?”
“சரி வீட்டிற்குள் வீணாக இன்று சண்டை போடவேண்டாம். போய் நாளையிலிருந்து நாடகத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லி விட்டு வந்து விடுங்கள்.” என்று ஒதுங்கினாள்
ஒரு கணம் நின்று சிந்தித்த சுவாமி நாதன் வெளியே வந்து, ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு நாடக சபாவை நோக்கிக் கிளம்பினார்.
“நான் செய்பவை எல்லாம் தவறு தானோ? சீதா மாதிரி கல்யாண வயதில் என் பொண்ணை வைத்துக் கொண்டு இப்படி அலைகிறேனோ? இந்த வயதில் இது தவறு தானோ? என்று யோசித்துக் கொண்டே ஸ்கூட் டரை ஒட்டிக் கொண்டிருந்த சுவாமி நாதன், தியேட்டருக்குள் வந்ததும் புவனா ஓடிவந்தாள்.
இன்னும் நாதன் சாரைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேன். வாருங்கள் என்று தோளில் கைபோட்டபடி நடந்த புவனாவை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவ்ர் அவள் கையைத் தட்டி விட்டார்.
மனைவி ஜானகியிடம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. “அந்தப் பெண் எனக்கு மகள் மாதிரி”.
“இப்படி உறவுகளைக் கொச்சைப் படுத்தாதீர்கள். என்னையும் ஒருத்தன் சிஸ்டர் சிஸ்டர்-என்று துரத்திக் கொண்டு வந்தான். நானும் சகோதரன் மாதிரிதான் பழகினேன். திடீரென்று ஒரு நாள் வந்து நான் உன்னைக் காதலிக்கிறேன். கட்டிக்கிறாயா? என்று கேட்டான் சிஸ்ட்ரை எவனாவது கல்யாணம் பண்ணுவானா? வீணாக-உறவுகளைப் போட்டுக் கொச்சைப்படுத்தாதீர்கள்”.
ஜானகி சொன்னது ஞாபகம் வந்தது. நாடகக் கம்பெனி மானேஜர் ராமராஜன் வந்த போது “ராம, ராஜ், நான் நாளையிலிருந்து நாடகத்திற்கு வர முடியாத சூழ்நிலை யிலிருக்கிறேன்” என்றார் சுவாமிநாதன்.
“என்ன சுவாமி நாதன் சார்” என்றாள் புவனா கொஞ்சம் அதிர்ச்சியுடன்.
“சொல்ல முடியாத காரணங்கள்” என்றார். சுவாமி நாதன் ராம். ராஜனும் புவனாவும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றனர்.