(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தான் ஸ்ரீனிவாசன், அவன் எதிரே அவனிடம் கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து நம்பிக்கையோடு உட்கார்ந்திருக்கிறார் ராமநாதன். என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான் ஸ்ரீனிவாசன், எப்பிடிச் சொன்னால் இவருக்குப் புரியும் அதுவும் இவர் இருக்கும் நிலையில் யோசித்து ஒரு வழியாக மனதைத் தேற்றிக்கொண்டு சார் என்னை மன்னிக்கணும் நீங்க என்னாலெ முடியாது சார் என்றான் தீர்மானமாக, இப்பிடி உங்ககிட்டயே சொல்றதுக்கு நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் வாங்கிக்கிறேன் ஆனா என்னாலே இதுமட்டும் முடியாது சார்,அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான் ஸ்ரீனிவாசன். ராமநாதன் கத்திக்கொண்டிருந்தார் கொஞ்சமாவது நன்றி இருந்தா இப்பிடிப் பேசுவியா நடுத்தெருவுலெ இருந்த உன்னை படிக்க வெச்சு ஆளாக்கி இன்னிக்கு நீ ஒரு பெரிய தொழிலதிபர்.
அப்பிடி நான் என்ன கேட்டுட்டேன் என் பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிறியான்னுதானே கேட்டேன். உன் சொத்தை எழுதிக்குடுன்னா கேட்டேன் உனக்கு வரதட்ஷணையா எவ்வளவு தரணும் சொல்லு. உனக்கு என்னென்ன வேணுமோ ஒரு பட்டியல் குடு. எல்லாத்தையும் செய்யறேன். என்னை என்ன வக்கத்தவன்னு நெனைச்சியா. ஏதோ என் கண்ணுக்குத் தெரிஞ்சு நல்ல பையனா இருக்கியே. உன்கையில என் பொண்ணை பிடிச்சுக் குடுத்துட்டா நிம்மதியா இருக்குமேன்னு கேட்டேன்.
அது சரி என்ன இருந்தாலும் சொந்த ரத்தமாயிருந்தா இப்பிடிப் பேசுவியா என்றார் . அப்போது அங்கே வந்த அவருடைய மனைவி சாரதா ஆமாங்க சொந்த ரத்தம்தான் என்றாள். அதிர்ந்து நிமிர்ந்தார் ராமநாதன்.
நீங்க ஹார்ட் அட்டாக் வந்த போது உங்களுக்கு ரத்தம் கொடுத்து காப்பாதினவனே இந்த ஸ்ரீனிவாசன்தான். அதான் அன்னிலேருந்து ஏன் அதுக்கு முன்னாடியே கூட உங்களை அவனோட அப்பாவாத்தான் மதிச்சிண்டு இருக்கான். நம்ம பொண்ணு சாருலதாவை தங்கையாத்தான் நெனைச்சுண்டு இருக்கான்.
என்னைக்கூட அம்மான்னுதான் கூப்படறான் அது புரியாம கத்திண்டு இருக்கீங்க என்றாள். இது வரை அவருக்கு முன்னால் வந்து பேசியே அறியாத சாரதா. அன்னை சாரதா தேவி போலவே காட்சி அளித்தாள் அவருக்கு,…அதிர்ந்து போய் நின்றிருந்தார் ராமநாதன்.
சார் இல்லே இல்லே அப்பா நான் நம்ம சாருலதாவுக்கு ஒரு நல்ல வரன் பார்த்திருக்கேன். கல்யாண செலவெல்லாம் நாமதான் செய்யப்போறோம். அந்தப் பையனுக்கு நான் உத்தரவாதம் தரேன். ரொம்ப நல்ல குடும்பம் என்றான் ஸ்ரீனிவாசன்.
ராமநாதன் வார்த்தை வராமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அவனை அப்படியே கட்டித்தழுவினார். அவருடைய பாசமான கைகள் அவனுக்கு வார்த்தைகளால் உணர்த்த முடியாத மன்னிப்பு கேட்டலையும் நன்றியையும், உணர்த்தின.
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.