சொந்தத்தில் ஒரு வீடு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 22, 2022
பார்வையிட்டோர்: 1,830 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த மனிசன் ஒரு மாதிரி. இவர நம்ப ஏலா” நின்று நின்று கால்கள் மரத்துப் போன நிலையில் தன் தாயாரின் செவிகளில் போட்டு வைக்கிறாள். ராபியா.

“இண்டைக்கி என்ன இப்படிக் கூட்டம். இதெல்லாம் எப்ப முடியுமோ ?”

அவளுக்கும் சலிப்புத் தட்டிவிட்டது.

ஞாயிற்றுக் கிழமை, ஓய்வு நாள் என்பதாலோ என்னவோ, அல்லது எப்பவும் இப்படித்தானோ! ஆண்களும் பெண்களுமாகப் பெரும்பாலும் இளைஞர்களே முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அழகிய முகப்பைக் கொண்டது அவ் வீடு.

உள்ளேயிருந்து அழைப்புக் குரல் வருமோ வராதோ? கால் கடுக்க நின்று கொண்டிருந்த பல ஆண்கள் ரோடு என்றும் பாராமல், ஓரமாய் கால்வாயிலிருந்து கமழும் வாடையை உள்வாங்கினாலும் பரவாயில்லை என்று மனம் புழுங்கிச் சபித்தவர்களாய் அப்படியே உட்காந்து விட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் தூர இடங்களிலிருந்து வந்திருப்பார்கள் போல் தெரிகிறது.

“ராபியா நாங்களும் ஓரிடத்தில இருந்து கொள்வமா…?”

“எங்களுக்குக் கூட உள்ளுக்கு போக ஏலாதா?……….. கொஞ்சமிருங்கம்மா தாரோ வாரமாதிரி இருக்கு…….’

சே……. எப்பவோ அலுவலகத்திற்குள் நுழைந்த ஒரு நடுத்தர வயது ஆள். வெளியே வந்தவுடன் திடீரென்று கூட்டத்தில் ஒரு சலசலப்பு. சற்று நேரத்தில் அது ஒரு பூகம்பமாக மாறி முகவர் நிலையத்திற்கு முன்னால் பெரும் இரைச்சலுடன் வெடித்தது.

கோபமும் ஆவேசமும் நிறைந்து வழிய ஏஜன்சியுடன் சிக்குப் பட்ட நபர் தகாத வார்த்தைகளால் சாடத் தொடங்கிவிட்டார். பத்துப் பதினைந்து பேர் அவருக்குப் பக்கபலமாகி விட்டனர். ஆள் கூடக் கூட அவருக்கு உசார்தான். முகவர் நிலைய கனவானின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் இலவசமாக விளம்பரப் படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

அந்தச் சல சலப்பில் இப்படியும் ஒரு குரல் – “ஏற்றத் தாழ்வு நிரம்பிய ஒரு சமூக அமைப்பில வறுமைக்கோடு தன் சுவடுகளை ஆழப் பதித்துக் கொள்வதால் தான் இதெல்லாம்….. பெரிய மீன்கள் எப்பொழுதும் சின்னதுகளை விழுங்குவதால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் மேலே வரவும் மேலே உள்ளவர்கள் இன்னும் மேலே மேலே போகவும்…….. நம்மால் ஒன்றும் கத்திப் பிரயோசனமில்ல. நாமும் எதிர் நீச்சல் போடக் கற்றுக் கொள்வதைத் தவிர…. எதுக்குச் சொல்றேன்னா……”

ராபியாவுக்கு இந்தக் குரல்…. இல்லை இந்தக் கருத்து கேள்விப்பட்ட மாதிரி இருந்தது. பிடித்தமாகவும் இருந்தது ஆறுதலாகவும் இருந்தது. தக்க சமயத்தில் ஆலோசனையாகவும் இருந்தது. அந்த ஆள் யார்? யாராயிருந்தால் என்ன? படித்ததோடு “சமூகத்த நல்லா அவதானிக்கிற” மனிதன். கோடி நன்றிகள் சொல்ல வேண்டும் போலிருந்தது.

உச்சத்திற்கு வந்து கொண்டிருந்த கதிரவனின் சுட்டெரிப்பைத் தாள முடியாமல் தவிக்கின்றார்கள்.

ராபியா அவள் தாய் சல்மா உம்மா. தந்தை அப்துல் ரகுமான். மூத்த சகோதரன் நஜீம் – முழுக் குடும்ப அங்கத்தவர்களுமே படையெடுத்து வந்து, தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியே இரைச்சல் சற்றுக் குறைந்திருந்தாலும் ஏஜன்சிகாரனின் சுயமரியாதையைக் கிழிக்கும் சொற் கூட்டத்திலிருந்து கமழும் அசுசை ரோட்டோர வாய்க்காலிலிருந்து வீசும் வாடையை விட மோசமாக இருந்தது. பலரும் தலை குனிந்த வண்ணம் நெகிழ்கின்றனர்.

உரையாடல்களிலிருந்து தெறிக்கும் சொல்லம் புகளைச் செவிமடுத்து, அலுவலக அறையிலிருந்து வெளியேறி நியாயம் பகர்வதற்கு ஒரு ரோசமுள்ள கனவானாவது வெளி வந்திருக்க வேண்டுமே!

“நஜீ நாநா ம்மாவுக்கு கால் வலி, இப்ப என்ன செய்ற இன்டக்கி அந்த மனிசனோட பேச ஏலுமா……?” பொறுமை இழந்து குரல் கொடுக்கிறாள் ராபியா.

வயதான தாய் தந்தையருக்கும் ஒரே பதட்டம் தான். கத்தல்கள் ஓய்ந்து தணிவது போல் தென்படுகிறது. “வந்தது வந்தாச்சி……. கொஞ்சம் இருந்துதான் பாப்பமே…….. இன்னுமொரு நாளக்கி வந்தாலும் அலைச்சல் தானே…… இவன்ட மருவாதி கப்பலேறி முடியட்டும்…”

நஜீமின் கருத்திலும் ஒரு நியாயம் இருப்பது போலத்தான் தெரிகிறது.

சல்மா உம்மாவும் குறுக்கிடுகிறாள்.

“பரவாயில்ல மகன்…மறுவா வாறதும் போறதும். இண்டக்கே இரண்டில ஒண்ட பாத்துட்டு போவம்…”

“ஓ…ஓ…இனி என்னால வர ஏலா…” அப்துல் ரகுமான் திடமாகச் சொல்லிவிட்டார்.

“காலமயும் தின்னல்ல. தாகமா இருக்கு. ஏதும் குடிச்சாலும் நல்லம் போலிருக்கு…….” சலமா பிரேரித்தாள்.

மெதுவாக நடந்து தேநீர்க்கடை ஒன்றை அடைந்தார்கள். சூடான மரக்கறி ரோல்ஸ் சாப்பிட்டு தேநீர் அருந்தி, சற்று நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்து சேர்ந்தார்கள்.

இதமாக இருந்தது. ஆனால் ரஹ்மானுக்கு ஒரே யோசனை. புலம்பினார்.

“…என்னதான் புரொக்டர் மூலம்… எக்ரீமண்ட் எழுதி எடுத்தாலும் ஆள கிளப்புறது கஷ்டம் தான்…”

கிழவரின் கண்கள் ஏஜன்சி கட்டிடத்தையே இமை கொட்டாமல் விழிக்கின்றன.

அந்த அழகிய கல்வீடு

நீள் சதுர வடிவிலான முன் விறாந்தைக்குள் நுழைந்தால் எதிராக – நாம் பயணித்த புகைவண்டி அமைந்திருப்பது, விசாலமான நடுக்கூடம். அதன் வலது இடது புறங்களில் இரு பெரிய படுக்கை அறைகள்.

கூடத்தைக் கடந்ததும் சாப்பாட்டறை. அதன் இரு புறங்களிலும் குளியலறை மலசலகூடம் என்று சகல வசதிகளையும் உள்ளடக்கிய வசந்த மாளிகை, ராபியா மன்ஸில்’

‘ராபியாவுக்கு புரோக்கர் மூலமாக கல்யாணம் பேசி வந்திருக்கு…. மாப்பிள்ள வீட்டாரும் ஒரே பிடியாகப் பிடிக்கிறார்கள்….’

‘எங்களுக்கு சீதனம் வேணாம்….. கொழும்பில சொந்தத்தில வசதியான ஒரு வீடு இருந்தால் போதும்…’

மாப்பிள்ள வீட்டார் திட்ட வட்டமாகச் சொல்லியிருந்தார்கள்.

அப்துல் ரகுமான் சல்மாவைக் கைபிடித்த காலத்தில், அவளது பங்கிற்கு இருந்த பணத்துடன் அவரது நீண்ட கால உழைப்பும் இணைய, வாரிசுகளின் பிற்காலத்தை யோசித்து அவ்வீடு வாங்கி முற்றிலும் நவீன முறையில் திருத்தியமைக்கப் பட்டது. பின்னர் குடும்பத்தில் மூத்தவன் என்ற முறையில் நஜீம் முறைப் பெண் மும்தாஜை மணம் முடித்து அவளுக்குச் சொந்தமான புதுமனை புகுந்ததும். குடும்ப வீடு ஒரே மகள் ராபியாவுக்கே என்று முடிவாகியதும் அனைவரும் பூரித்துப் போனார்கள்.

கிழவரும் நோய் வாய்ப்பட்ட பிறகு. சொந்த வீட்டைக் கொஞ்சக் காலத்திற்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவர்களும் மகனின் வீட்டிற்கே குடியேறினர்.

ராபியாவின் திருமணம் முடிந்தவுடன் அவள் தனது வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தவேண்டும் என்பது தான் அனைவரதும் அபிலாஷை.

எனினும் அது நிறைவேறும் வரைக்கும். ‘பெற்ற மனம் பித்து’ தான். அந்த மனச் சுமைக்குப் பால் வார்த்தது போல் ராபியா மன்சிலுக்கும் ஒரு சோதனைக் காலம்.

அனைத்துமே முந்தநாள் நடந்ததுபோல் இருக்கிறது.

ஐந்து நீண்ட வருடங்களுக்கு முன் வீட்டை வாடகைக்கு எடுத்தவன் இப்படி ஏஜன்சி போடுவானென்று யாருக்குத் தெரியும்.

வெளியில் காத்திருந்து நெரிசல் கலைந்த பின்னர் சொந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்கள்.

ஏஜன்சி கனவான அவர்களது வருகையைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவர்கள் தமது மனக்கிடக்கையை வெளிப்படுத்தி, ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தார்கள்.

அனைத்தையும் அவன் பொறுமையுடன் உள்வாங்கிக் கொண்டான். அவனுடைய வியாபார மூளை சுறுசுறுப்பாக இயங்கியிருக்க வேண்டும்.

இனிமேலும் மூடிவைத்திருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தான்.

இற்றை நாள்வரை மனதில் பதுக்கி வைத்திருந்த முடிவை மெல்ல முடிச்சவிழ்க்க எத்தனிக்கின்றான்.

“முதல்ல எல்லாருமா இருங்க….வெய்யில்ல நிண்டு களைச்சிப் போயிருக்கிறீங்க…”

பணியாள் மூலம் எல்லாருக்கும் குளிர்பானம் கொடுக்க ஏவினான்.

நீண்ட கால இடைவெளிக்குப் பின் சொந்த வீட்டின் முன் அறையில் அமர்ந்து ஜன்னல்களின் ஊடாகத் தமது பார்வைகளைச் செலுத்துகின்றனர்.

“இங்க பாருங்க மிஸ்டர் ரகுமான்…நீங்க வயசில மூத்த மனிதர். இங்க வாரவங்க எல்லாம் வாய் கிழிய கத்தினா எல்லாம் சரியெண்டு நினைக்கிறாங்க…ஒருவருமே என்னுடைய நிலைமையில் இருந்து யோசிச்சிப் பார்க்கிறதில்ல…”

மிக்க மரியாதையோடு ஆரம்பிக்கின்றான் “இப்ப ஒங்கட விசயத்த பாப்பமே. நானும் இடந்தேடி பறக்கிறன். எங்க? கிடைச்ச பாடில்லயே. கிடைச்சாலும். லட்ச ரூபா – சும்மா ‘கீ மணியாக’ கேட்டா நா எங்கே போறது? எப்படி குடுப்பன்…”

அவன் பேச்சையே அவர்கள் கூர்ந்து அவதானிக்கின்றனர்.

“ஆனா…. ஒங்கட நிலம எனக்கு நல்லாத் தெரியும். இந்த வீட்ட குடுத்தா தான் மகள்ட கல்யாணம் நடக்கும். கட்டாயம் நடத்த வேண்டியது. தாய் தகப்பன் நானா என்கிற மொறையில ஒங்கட பொறுப்பு…”

அவர்களது உள்ளங்கள் சிலிர்ததுப் போகின்றன.

“ஆயிரம் பேருக்கு தொழில் தார ஒரு ஏஜன்சிய டக்கென்று மாத்த முடியாத நெலம எனக்கு.”

கொஞ்ச நேரத்திற்கு முன் அவர்கள் நெஞ்சங்களில் கொதித்துக் கொண்டிருந்த ஆவேச உணர்வுகள் முற்றாகச் சிலிர்த்துப் போய் விட்டன.

“மகளுக்கு அப்படி ஒன்றும் பெரிய வயசு இல்லாவிட்டாலும், நல்ல இடத்தில் முடிச்சு வைக்கணும், சீதனம் இல்லாம, குறைஞ்சது சொந்தத்தில் ஒரு வீடு இருக்கணும் எண்டு பேசி வந்திருப்பது நல்ல விசயம்…சொனக்காம முடிச்சுப் போடுங்க”

மன எரிச்சலைக் கிளப்பிவிடுமாப் போலிருக்கிறது அவர்களுக்கு.

“அதுக்குத் தானே வீட்ட திருப்பித்தாங்க, எண்டு மாசக் கணக்கா அலையிறம்…”

“இப்ப அதுக்கு என்ன…தர ஏலாதெண்டு எப்பவாவது சொன்னனா…? இது உங்கட வீடு. நீங்க நாளக்கே வேணும் எண்டாலும் எடுங்க…ஆனா ஒண்டு சொல்றன்…நான் ஒரு லட்சம் கேக்கல்ல…எண்ட நஷ்டத்தில கொஞ்சம். ஒரு எழுபத்தஞ்சாயிரம் ரூபா தந்தீங்க எண்டா போதுமானது…நாளக்கே ஏஜன்சிய மூடிப்போடுவன்…மனம் வச்சா இந்தக் காலத்தில் இது பெரிய சல்லியில்ல…”

அவர்கள் அசடு வழிய அசந்து போய் விழிக்கின்றனர்.

“நீங்க யாருக்கிட்ட போய் யோசின கேட்டாலும். இதுதான் நியாயமான முடிவு. எப்ப நீங்க பணம் தாரீங்களோ. உடனே உங்களுக்கு வீடு ‘சுவரா’ கிடைக்கும்……. வேறு யாருமா இருந்தா வழக்கு புரொகடர் செலவு அது இது என்று எவ்வளவு கரைச்சல்…எவ்வளவு செலவு….ம்..?”

சற்றுத் தடுமாற்றம் அடைந்தவர்கள், அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்க முடியாமல் ‘எதற்கும் ஆற அமர யோசித்து ஒரு முடிவுக்கு வர அவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள்.

வீட்டை அடைந்ததிலிருந்து அனைவருக்குமே பெரிய மனப் போராட்டம்.

‘தந்திரமாக விழுங்க வரும் ஒரு சுறாவிலிருந்து தப்ப எதிர் நீச்சல் போடுவது எப்படி?’ என்று ராபியாவின் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது.

வயதான தாய் தந்தையருக்கு ஒரு புதிய ஞானோதயம் பிறக்காமல், உணர்ச்சிவசப் பட்ட நிலையில் புலம்பிக் கொண்டிருந்தனர்.

நஜீமும் தீவிரமாகச் சிந்தித்து. ‘இனியும் ஆதங்கப் பட்டு ஒன்றும் ஆகப் போறதில்ல’ என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

பக்குவமாகத் தாய் தந்தையருக்கு எடுத்துச் சொன்னான்.

இராப் போசனத்திற்குப் பிறகு மும்தாஜ் கோப்பி பரிமாறினாள்.

அனைவரும் கிட்டத்தட்ட ஒரே முடிவிற்கு வந்துவிட்டனர்.

“ஏஜன்சிகாரனுக்கு அவன் கேட்டதைக் கொடுத்து வீட்டைத் திருப்பிக் கொள்றது தான் புத்தி…”

“ஆனால் எப்ப இந்தப் பணத்தைத் தேடுகிறது”

அவர்களது தலைகளை இமாலயம் அழுத்துகிறது.

“ஈட்டுக் கடையில இருக்கிற மும்தாஜ்ட நகையை வித்து. ராபியாட பேங் புத்தகத்தில் உள்ளதையும் புரட்டினாலும், தாலிக் கொடிக்கு என்ன வழி? கலியாணம் எண்டா கையிலேயும் இருக்க வேணும் இல்லியா…” என்றான் நஜீம்.

“…கல்யாணம் இப்ப முக்கியம் இல்ல. வீட்ட திருப்ப வழியப் பாருங்க…வழக்குப் போட்டு எடுக்கிறது இன்னுமின்னும் செலவு” என்றாள் ராபியா

அனைவரும் நித்திரைக்கென்று தத்தமது அறைகளுக்குச் சென்று விட்ட னர்.

ராபியாவும் நித்திரையின்றி மனம் குழம்பிக் கொண்டிருந்த போதுதான் அவளுக்கு அந்த நம்பிக்கைப் பொறி மெல்லிதாகச் சுடர் விடத் தொடங்கியது.

காலைத் தொழுகைக்கு ‘அழைப்பு’ ஒலிபெருக்கியில் ஒலித்ததோடு பளீரென்று ஒரு விடியல்.

தகப்பனாரும் இரவெல்லாம் விழித்து நொந்து போய் இப்பொழுது தான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். தொழுகைக்கும் எழும்பவில்லை . யாரும் எழுப்பவுமில்லை .

காலை தொழுகைகளை முடித்துவிட்டு வந்ததும், தாயின் சோகம் படிந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தாள் ராபியா.

“…ம்மா நீங்க ஒண்டும் யோசிக்காதீங்க…நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறன்”.

“…”

“…ம்மா நான் எட்டு மணிக்குப் போல முனீருன்னிசாவைப் பார்த்திட்டு வரப்போறன்…சரியா…?”

அவள் எந்த வித மறுப்பும் சொல்ல வில்லை. முனீருன்னிசா ராபியாவின் நெருங்கிய தோழி. அட்வான்ஸ் லெவல் வரைக்கும் அவளுடன் படித்தாள். ஓரளவு வசதி படைத்தவள். பரீட்சைகளுக்கு நிறைய நோட்ஸ் புத்தகங்கள் கொடுத்துதவியவள். இருவருமே பல்கலைக் கழகம் செல்ல வேண்டிய புள்ளிகள் பெற்றும் ராபியாவுக்குத் தாய் தந்தையர் தடைபோட்டதும் இருவரது மேற்படிப்பும் நின்று விட்டது. ராபியா எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் பல்கலைக்கழகத்திற்கு தனியே செல்ல மறுத்துவிட்டாள். —

குளித்து விட்டு கருநீலமும் குங்கும நிறமும் கலந்த சல்வாரி தாவணியணிந்து…… “நா வாறேம்மா….” என்று புறப்பட்டபோதும், அவள் ஒன்றும் விபரமாகச் சொல்ல வில்லை .

நஜீம் அலுவலகத்திற்குப் போயிருந்தான். அவன் மனைவி மும்தாஜ் சிறிசுகளுடன் மெனக்கெட்டுக் கொண்டிருந்தாள்.

ராபியா மிகுந்த நம்பிக்கையுடன் நடந்தாள். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் தோன்றும் போது, ஆக்கபூர்வமான தீர்மானம் எடுப்பதில் குடும்பத்தில் அவள் தான் சமர்த்து முனீருன்னிசா மட்டும் உதவி விட்டாளோ. அவள் எடுத்திருக்கும் தீர்க்கமான முடிவில் எந்தவித மாற்றமும் இராது.

தடைக்கற்களுக்குப் பயந்து. எதையும் ஆரம்பத்திலேயே போட்டு உடைக்காமல் மிக்க துணிச்சலுடன் எடுத்த முடிவு அல்லது மீறல் அது.

மனையை மீட்க வேண்டிச் சில மீறல்கள் செய்ய உந்தப்பட்டிருக்கிறாள்.

தாய் தகப்பனின் விருப்பு வெறுப்புக்களைப் பார்க்கும் தருணமில்லை இது.

மாப்பிள’ வீட்டாரைப் பற்றி அவளுக்குத் துளியேனும் கவலை இல்லை .

ராபியா முனீருன்னிசாவின் இல்லத்தை அடைந்த போது. கீழ்வானில் மிக வேகமாக ஏறிவரும் இளங்கதிரவனின் சுட்டெரிப்பிற்கு வாடிவிடாமல். பூஞ்செடிகளுக்கு ‘நீர்’ வார்த்துக் கொண்டிருந்தாள். முனீருன்னிசா,

“ஆ…பொன் வார…யாரும்மா வழி காட்டினது…” முனீருன்னிசா இன்முகத்துடன் வரவேற்றாள்.

“முனீர்…இன்னுமொரு கொடி படரத் துடிக்குது…நீதான் தண்ணீர் ஊத்தணும்…” என்று தொடங்கி….

தனது பிரலாபத்தையும், நோக்கத்தையும் சற்று விரிவாகவே விளக்கி மனப்பாரத்தைக் குறைக்க முயன்றாள்.

எதிர்பார்த்தது போல் முனீருன்னிசாவின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டிவிட்டதில் ராபியா களிப்புக் கடலில் மூழ்கிப் போனாள்.

துரத்திவரும் சுறாவை விரட்டியடிக்கத் தெம்பும் பக்கபலமும் கிடைத்துவிட்டது. தோழியின் பிடிவாதத்தால் மதிய உணவை முடித்துக் கொண்ட ராபியா வீடு திரும்பிய போது மாலை மூன்று மணி பிந்திவிட்டிருந்தது.

சல்மா உம்மா பதறிப் போயிருந்தாள்.

“என்னம்மா நீங்க…நா முனீருன்னிசா வீட்டுக்குத்தானே போனன்…இதுக்கே இப்படிப் பதறிப் போனா…?”

தாய் மகளைக் கூர்ந்து நோக்கினாள்.

மகளின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி! என்றுமில்லாதவாறு. இனம் புரியாத சுறுசுறுப்பு! தாய்க்கு ஒன்றும் விளங்கவில்லை. ராபியா அப்படி ஒரு நாளும் இருந்ததில்லை.

“ராபியா போன விசயம் என்ன? முனீருன்னிசா என்ன சொன்னா?…சொல்லன் ராபியா?”

ராபியா எதைச் சொல்லப் போகிறாள்.

முன்பு முனீருன்னிசா கேம்பஸ் போக மிகவும் விரும்பி ராபியாவை அழைத்தாள். ராபியாவிற்குத் தடை பிறப்பித்தும் இருவருமே போகவில்லை. ஆனால் இப்பொழுது ராபியாவின் தேவைக்கு அதே முனீருன்னிசா காம்பஸ்’ என்ன அதற்கு அப்பாலும்…..

இப்படிக் குத்திக் காட்டி தாயுள்ளத்தைப் புண்படுத்த விரும்பவில்லை அவளுக்கு.

“…ம்மா நாளக்கி முனீருன்னிசா எங்கட வீட்டுக்கு வாரா…அவளே உங்களுக்கு விளக்கமா சொல்வா….ஆனால் நான் ஒண்டு சொல்வன். நீங்க குழம்ப வேணாம். வாப்பாவுக்கும் நஜீநானாவுக்கும் சொல்லுங்க…. பயப்பட வேண்டிய தேவ இல்ல….”

“…”

முனீருன்னிசாட வாப்பா, றஸ்வி ஹாஜியார் எங்களுக்கு பணம் தருவார். அவரே ஏஜன்சிகாரன் கேட்ட அந்தத் தொகையைக் கட்டி அவ்னிடமிருந்து வீட்ட எடுத்து தருவார். ஒரு கிழமையில் அவர் நரேன் புரொக்டரோட வந்து கூப்பிட்டா வாப்பாவும் நஜீநானாவும் போகணும். ஹாஜியார தவிர ஏஜன்சிகாரனோட யாரும் ஒண்டும் பேசத் தேவையில்லை …..

மறுநாள் முனீருன்னிசா வந்து குட்டை உடைத்த போது –

‘ராபியா மன்சில்’ உடைந்து விழுந்து அழுது கதறியது.

வீடு ஏஜன்சிகாரனுக்குப் பறிபோகாமல் இருக்க வேறு மார்க்கம் இல்லை என்பதை ராபியாவும் முனீருன்னிசாவும் தெளிவு படுத்தினார்கள். ‘ஆபத்துக்கு பாவமில்லை ‘.

ஒருவராலும் ஒன்றும் பேசமுடியாத நிலைமை.

அடுத்த சில நாட்களாக ராபியாவும் முனீருன்னிசாவும் ஓடித்திரிந்தார்கள். ஒரு நாள் றஸ்வி ஹாஜியாரே வீட்டிற்கு வந்து அப்துல் ரகுமானுக்கும். சல்மா உம்மாவுக்கும் ஆறுதல் கூறினார்.

ராபியாட வாப்பா நீங்க பயப்படத் தேவையில்லை. நான் முனீருன்னிசாவையும் கூட அனுப்புறன்தானே இரண்டு பேருக்கும் முழுப்பாதுகாப்புடன் ‘எக்கவுன்ட்ஸ் கிளார்க்’ வேலை கிடைக்கும். இருபதாயிரத்துக்கு மேல் சம்பளம். இரண்டு வருஷம் போதுந்தானே…..

“ராபியா, அந்தக் கொடி ராபியா மன்சிலில் படருமா?”

முனீருன்னிசா வாஞ்சையுடன் வினவினாள்.

“நிச்சயமா ஆனா, ஒரு பெயர் திருத்தம். ‘முனி’ பிளஸ் ‘ரா’ முனீரா மன்சில்”

முனீருன்னிசாவையும் ராபியாவையும் சுமந்த வண்ணம் ஆகாய விமானம் ‘ஓமானை’ நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

– மல்லிகை – ஏப்ரல் 1995.

– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *