“ஏனுங்கம்மிச்சி கத்திரிக்காய நீங்கதான் விளைவிக்கறீங்க.இத்தன கத்திரிக்காய் மலையாட்ட கொட்டிக்கெடக்கறப்ப உங்க சாப்பாட்டுக்கு எதுக்கு சொத்தக்கத்திரிக்காய அறிஞ்சு போடறீங்க?” என தன் தாயின் தாயான தவசியம்மாளைப்பார்த்து வெகுளியாக அதே சமயம் அறிவார்ந்த வார்த்தையால் கேள்வியாகக்கேட்டாள் பத்து வயது சிறுமி காம்யா!
“சொத்தக்கத்திரிக்காய் விலைக்கு போகாது சாமி.ஆனா சொத்தை இருக்கற பக்கத்தை அருவாமனைல அறிஞ்சு போட்டு,நல்ல பக்கத்த பொறியல் பண்ணிக்கலாம்.எங்கம்மாவும்,எங்கம்மாவோட அம்மாவும் இப்படித்தான் பண்ணுவாங்க.நல்ல காய்களை சனிக்கிழமை சந்தைக்கு அனுப்புனம்னாத்தான் நாலு காசு சுருக்குப்பைக்கு வந்து சேரும்.அத வச்சு அரைப்பவுனுங்காப்பவுனும் எடுத்து சேத்ததாத்தான் உம்பட சீருக்கு ஒறவுக்காரங்க முன்னால மரியாதையா நானும் நிக்க முடியுங்கண்ணு.ஒன்னம் மூணு வருசத்துல வயசுக்கு வந்துருவியில்ல…?” என தனது சேமிக்கும் பழக்கத்தை நொங்கு போன்ற கொங்கு பாசையில் எடுத்துரைத்தார் விவசாயி மனைவி தவசியம்மாள்.
தவசியம்மாளின் தந்தையும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் சிரமங்களை சிறு வயது முதலே நன்கு அறிந்தவர்.படிப்பு பிடிக்காமல் போகவே பருவமடைந்து சில வருடங்களிலேயே தாயை சிறுவயதிலேயே இழந்த காரணத்தாலும்,தந்தையும் வறுமை நிலையிலிருந்த நான்கு பெண்களுக்கு திருமணம் முடித்து கடன் பட்ட நிலையிலும், முதல் சகோதரி இரண்டு குழந்தைகளுடன் இறந்து விட, வேறு பெண் மருமகனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டால் அவளது குழந்தைகளின் நிலைமை மோசமாகி விடுமென தனது கடைசி பெண் தவசியம்மாளை இரண்டாவது தாரமாக கொடுக்க அப்பா முடிவெடுத்ததாலும் மச்சானுக்கே வாழ்க்கைப்பட நேர்ந்தது.
தன் கணவனுக்கும் தவசியம்மாளுக்கும் பதினைந்து வருட இடைவெளி.மறுமணமாகி இரண்டாண்டுகளில் கணவர் பாம்புக்கடிக்கு இரையாகிவிட,இளம் விதவையானார்.தமக்கு குழந்தைகள் பிறக்காவிட்டாலும் தம் கணவருக்கும் அக்காவுக்கும் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளை தம் குழந்தைகளாகவே எண்ணி பாசமுடன் வளர்த்து,திருமணம் செய்து வைத்தவர் தனியாக இருந்து விவசாயம் செய்து அதன் வருமானத்தில் வாழ்வதோடு, அவர்களுக்கு முறைப்படி சீர் சிறப்பும் செய்து வந்த நிலையில்,மூத்த மகளின் குழந்தை காம்யா விடுமுறையில் வந்திருந்த போது குழந்தையுடன் தாமும் குழந்தைபோல தன் நினைவுகளை கூறியதோடு,அக்குழந்தையின் அறிவாற்றலைக்கண்டு வியந்து போனார் தவசியம்மாள்.
“உங்க கிட்ட நாலு ஏக்கர் பூமி இருக்கு. ஒரு ஏக்கர் ஒரு கோடிக்கு போகுதுன்னு எங்கப்பா சொன்னார். ஒரு ஏக்கரா மட்டும் ஒருகோடிக்கு வித்து பாதிய பேங்ல போட்டு வட்டிப்பணத்த வாங்கி செலவு பண்ணிட்டு, பாக்கிய சித்திக்கும் எங்கம்மாவுக்கும் கொடுத்துட்டு, விவசாயம் பண்ணி கஷ்டப்படாம இருக்கலாமில்ல..?” எனக் கூறிய காம்யாவை கட்டியணைத்து உச்சி மோந்து “உனக்குத்தான் எத்தனை மூளை…?” என பெருமூச்சு விட்டவர், “அப்படி நம்ம முன்னோர்கள் வித்துட்டு பாடு படாம இருந்திருந்தா நமக்கு இந்த சொத்து கிடைச்சிருக்குமா? வாயைக்கட்டி,வயத்தக்கட்டி பாடுபட்டு மிச்சம் பண்ணினதாலதானே நமக்கிருக்கு? இத பங்கு போட்டா சித்திக்கு ரெண்டு ஏக்கரா, உங்கம்மாவுக்கு ரெண்டேக்கராத்தானே வரும். அதுல உனக்கு ஒரு ஏக்கரா, உம்பட தம்பிக்கு ஒரு ஏக்கராத்தானே கெடைக்கும்…? இன்னைக்கு பூமி விக்கிற வெலைக்கு நீங்க படிச்சு வேலைக்குப்போயி வாங்கற சம்பளத்துல வாங்க முடியாது கண்ணு. நானெப்படியோ அரைக்கஞ்சீமு, காக்கஞ்சீங்குடிச்சு விக்காம காப்பாத்திப்போட்டனாக்கும்.ம்…எப்படியோ எம்பட உசுருக்கப்புறமும் நீங்க விக்காம காப்பாத்தி போடோனும்.அஞ்சனப்போ, பத்தனப்போ பூமினு இருக்கோனுமாக்கு. அப்பத்தான் சொந்த பந்தம் மதிக்குஞ்சாமி” எனக் கூறியவர் சந்தைக்கு விற்பதற்க்காக அனுப்பி வைக்க கத்தரிக்காய்களை தரம் பிரித்து சாக்குப்பையில் போட்டு கோணூசியால் தைத்து அடுக்கி, வாடாமலிருக்க தண்ணீரை எடுத்து மிகுந்த ஈடுபாட்டுடன் சாக்கு பையை நனைத்து விட்டார் கடின உழைப்பாளியான தவசியம்மாள்.