சைக்கிள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,053 
 
 

போட்டி ஆரம்பமானது. வற்றிய குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வரவேண்டும். செல்வராஜ்தான் ஜெயிக்கபோவதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். போன வருட கோடைவிடுமுறையில் நடந்த போட்டியில் என்னை ஜெயித்து முதல் பரிசான மூன்று “தேன்மிட்டாய்” பாக்கெட்டுகளை வென்றவன் தான் செல்வராஜ். போனமுறை நான் தோற்றதற்கு காரணம் ராஜன் அண்ணன் கடையில் எடுத்து ஓட்டிய வாடகை சைக்கிள்.ஆனால் இப்போது நான் பயணிப்பது என் சைக்கிளில்.

போனவருடத்தை நினைத்துக்கொண்டிருந்தால் அதோ எனக்கு முன் மூச்சிரைக்க சைக்கிளை மிதிக்கும் செல்வராஜை என்னால் வெல்லமுடியாது.சோறு தின்பவன் மாதிரியா சைக்கிள் ஓட்டுகிறான்? போன வருட தோல்வியால் பள்ளிமுழுவதும் என்னை கிண்டல்செய்ததை மறக்க முடியுமா? இன்னும் சிறிது தூரம்தான்….இதோ அவனை நெருங்குகிறேன்… விடமாட்டேன்….வெற்றி! வெற்றி!

மூன்று தேன்மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வீடுவந்தேன். நண்பர்கள் மத்தியில் என் புகழ் பரவியது.என் வெற்றிக்கு காரணம் என் புது சைக்கிள் என்று நினைத்தனர் நண்பர்கள்.சைக்கிள் வாங்கித்தந்த அப்பாவிற்கும், வெற்றி வாங்கித்தந்த சைக்கிளுக்கும் மனதால் நன்றி சொன்னேன்.

அப்பாதான் தினமும் என்னை பள்ளியில் கொண்டுவிடுவார்.பக்கத்து ஊரிலிருக்கும் பள்ளிக்கு என்னுடன் நடந்தே வருவார் அப்பா. பலநாட்களாக அழுது அடம்பிடித்தபின்னரே சைக்கிள் ஒன்றை வாங்கித்தந்தார். சைக்கிளுக்கு பூஜை போட்டு,சந்தனம்,குங்குமம் வைத்து பிள்ளையார்கோவில் வாசலில்தான் சைக்கிள்சாவியை என் கையில் தந்தார் அப்பா. “வேகமா ஓட்டக்கூடாதுப்பா…மெல்ல ஓட்டனும்” என்கிற அறிவுரையை அப்பா முடிக்கும் முன்பே பாதி தெருவை தாண்டியிருந்தது என் “டைகர்”. என் சைக்கிளுக்கு நான் வைத்த செல்லபெயர் அதுதான்.

அதன்பின்னர் பக்கத்து தெரு மகேசனுடன் சைக்கிளில் ஒன்றாக பள்ளி செல்ல ஆரம்பித்தேன். தினம் தினம் யார் முதலில் பள்ளி சென்றடைவது என்கிற போட்டியில் மகேசனுக்கு எப்போதும் இரண்டாவது இடம்தான்.
புத்தகப்பையை கேரியரில் வைத்து விழாமலிருக்க வலதுகையால் பிடித்துக்கொண்டே வேகமாக பெடலை அழுத்தி மிதிக்க வேண்டும். எதிர்க்காற்றில் ஓட்டுவது மிகவும் கடினம், சிலநேரம் காற்றை எதிர்க்கமுடியாமல் கீழே விழுந்தாலும் சமாளித்து முதலிடம் பெற்றிருக்கிறேன்.

மேடு பள்ளமென்று பாராமல் வேகமாக ஓட்டியதில் வாங்கிய இரண்டாவது மாதமே கிறீச்சிட ஆரம்பித்தான் டைகர்.

தேங்காய் எண்ணை விட்டுப் பார்த்தேன். ராஜன் அண்ணன் கடைக்கு சென்று கிரீஸ் வைத்து பார்த்தேன் அப்பாவும் என்னென்னவோ செய்து பார்த்தார் டைகரின் கிறீச் சத்தம் மட்டும் ஓயவேயில்லை.

“வண்டிய வேகமா ஓட்டாதன்னு சொன்னா கேட்கறதே இல்ல..பாரு சைக்கிளு பாவம்போல கத்துது” என்று அடிக்கடி சொல்வார் அப்பா.

சைக்கிள் வாங்கிய ஒருவருடத்தில் ஐம்பது முறையாவது கீழே விழுந்திருப்பேன் ஆனால் ஒருமுறைகூட பலத்த அடி பட்டதில்லை. சைக்கிள் வந்த மகிழ்ச்சியில் நன்றாக படிக்கவும் ஆரம்பித்தேன். எப்பொழுதும் முதல்மூன்று இடத்தில் இருந்ததால் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவனாக மாறினேன்.

“சைக்கிளு வீட்டுக்கு வந்த நேரம் எம் பேரனுக்கு நல்ல ராசி,நல்லா படிக்கிறான்ல புள்ள” என்று வெத்தலையை இடித்துக்கொண்டே சொல்வார் பாட்டி. டைகர் என் வீட்டில் ஒரு உறுப்பினராக மாறிப்போனான்.

ஒருமுறைகூட சைக்கிளை ஓட்டியதில்லை ஆனாலும் தினமும் சைக்கிளை துடைத்து சுத்தம் செய்வார் அப்பா.

பள்ளிப்பருவம் முடித்து கல்லூரிக்காக சென்னைக்கு வந்தபின்பு எங்கள் வீட்டு மாட்டுக்காடியின் ஓரத்தில் நிரந்தரமாக நின்றுகொண்டிருந்தான் டைகர்.தூசி அண்டாமலிருக்க ஒரு பழைய போர்வையால் மூடிவைத்திருந்தார் அப்பா. ஒவ்வொரு முறையும் கடிதத்தில் மறக்காமல் சைக்கிளை பற்றி ஒருவரியாவது எழுதுவார்.

விடுமுறைக்காக ஊர் செல்லும்போதெல்லாம் கிராமத்து தெருக்களில் டைகரில் வலம் வந்து மகிழ்வேன்.

கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கும்பொழுதுதான் அந்த சம்பவம் நேர்ந்தது. விடுதிக் காப்பாளர் என் அறைக்கதவை தட்டி அந்த துக்கச் செய்தியை சொன்னார்.

உடனே பஸ்பிடித்து ஊருக்கு வந்தேன். அம்மா மயக்க நிலையில் ஓரமாக அமர்ந்திருந்தார். அப்பாவின் சடலம் வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் அழுதுகொண்டிருந்தனர். என் அலறல் சத்தத்தில் ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள் அம்மா. “ராசா உங்கப்பா போயிட்டாருடா..நம்மள அநாதையாக்கிட்டு போயிட்டாருடா..” அம்மாவின் குரல் அழுகின்ற பெண்களின் பெரும்சத்தத்தின் நடுவிலும் நெஞ்சில் அறைந்தது. தொண்டை வறண்டு மயங்கி விழுந்தேன்.

சவக்குழிக்கு சற்றுத்தொலைவில் என்னை அமர்த்தி மொட்டை அடித்தார்கள். தோளில் பானைநீர் சுமந்து மூன்றுமுறை சுற்றி வந்தபின் புதைகுழியில் மூன்று முறை மண் அள்ளிப் போட்டேன். கண்ணீருடன் வீடு வந்துசேர்ந்தேன்.

நான்கைந்து நாட்களில் சுற்றம்தவிர்த்து அம்மா,நான்,பாட்டி மட்டும் மிஞ்சியிருந்தோம்.

“அசதியா இருக்கு சந்தைக்கு சைக்கிள்ள போறேன்னு போனவருதான் மேலத்தெரு முனையில திரும்பும்போது தடுமாறி கீழே விழுந்துட்டாரு. மண்டையில அடிபட்டு அதேயிடத்துல உசுரு போயிருச்சு ராசா…மொத மொதலா சைக்கிள்ள போறாரேன்னு பெருமையா நினைச்சேன் இப்படி ஆயிடுச்சே” அப்பா இறந்த நாளிலிருந்து திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா.

ராஜன் அண்ணன் கடைக்கு சைக்கிளை சென்று விற்றுவிட தீர்மானித்து, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு மாட்டுக்காடியிலிருந்த சைக்கிளை வெளியிலெடுத்து வாசல் வந்து பெடலை மிதிக்க தொடங்கினேன்.

“சனியன் புடிச்ச சைக்கிளு அநியாயமா உங்கப்பன் உசிர வாங்கிருச்சே” பாட்டியின் புலம்பல் காதில் சன்னமாய் விழுந்தது.

எப்போதும் கிறீச்சிடும் சைக்கிள் இன்று சத்தமின்றி பயணித்துக்கொண்டிருந்தது.

– Friday, June 6, 2008

நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *