ஒரு நாள் என் மகனின் சைக்கிள் திருடுபோனது.
அப்பார்ட்மெண்டின் கீழே நிறுத்தப்பட்டிருந்த போது வாட்ச்மேன், கேட், பூட்டு, இத்யாதி…இத்யாதி என்று பல பாதுகாப்புகள் இருந்தும் சுலபமாகத் திருடிவிட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளெயிண்ட் கொடுக்கும் தைரியம் இல்லாததால், அப்படியே விட்டு விட்டேன்.
“”ஏன் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலை?” என்று மறுநாள், சின்ன மாமனார் வந்திருந்த போது கேட்டார்.
“”அதெல்லாம் வெட்டி வேலை. மதுரைல ஒருநாளைக்கு எத்தனை சைக்கிள் காணாமல் போகிறது தெரியுமா? அத்தனை சைக்கிளையும் தேடிக் கண்டு பிடிக்கணும்னா போலீஸ்காரன் பாவம்” என்று மனைவியைப் பார்த்துக் கொண்டே சொன்னேன்.
“”சித்தப்பா, இவருக்கு போலீஸ் ஸ்டேஷன் போறதுக்கு பயம். அதனால..” என்று மனைவி சொல்லும்போது முறைத்தேன். நிறுத்திக் கொண்டாள்.
சைக்கிள் இல்லாத வாழ்க்கைக்கு மகனைத் தயார் செய்ய முயன்றேன்.
“”உன் ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் வெறும் எழுநூறு மீட்டர் தூரம் தான..
ட்யூஷன் கூட ரொம்ப கிட்டக்கதான் இருக்கு. இது கூடவா நடந்து போய் நடந்து வர முடியாது?”
“”முடியாது” என்று அவன் கூறியதை புறக்கணித்தேன். கொஞ்ச நாளைக்கு சைக்கிள் இல்லாத வாழ்க்கை தண்டனைன்னு நினைச்சு நடக்கட்டுமே. அவன் தானே அசால்ட்டா இருந்தான்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் மதிய வேளையில் அலுவலகத்தின் மாதாந்திர மீட்டிங்கில் போனமாதத்து உற்பத்தியை விட வருகிற மாதம் ஒரு தொண்ணூறு டன்கள் கூடும் என்று தகவல் கொடுத்துக் கொண்டிருந்த போது ஒரு போலீஸ்காரர் எங்கள் அப்பார்ட்மெண்ட்டிற்கு வந்து என்னைப் பற்றிக் கேட்பதாக என் மனைவி செல் போன் செய்தாள்.
செல் போனைக் கூட அணைக்காமல்… “”எக்ஸ்க்யூஸ்மீ.. ஐவ் காட் அன் அர்ஜண்ட் கால் ஃப்ரம் ஃபேமிலி. ஸ்ரீ, யூ கண்டின்யூ” என்று வெளியே வந்து, “”போனில் என்னவாம்?” என்றபோது, “”நம்ம சைக்கிள் கிடைச்சிடுத்தாம். திருடினவனே ஒப்புண்டிருக்கான்” என்றாள்.
“”எந்த சைக்கிள்?”
“”ம்.. காணாமப் போச்சே. நம்ம ரவியோடது.. அதான்..”
எப்படி என்று யோசித்தேன். நான் ஒண்ணும் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலையே. ஒருவேளை மனைவியின் சித்தப்பா வந்திருந்த போது எனக்கு தைரியம் இல்லை என்பதனால் அவர் போய்… இந்த மாதிரி… என் மாப்பிள்ளையினுடைய சைக்கிள் திருடு போய்விட்டது. அவருக்குத் தைரியம் இல்லாததால் என் மாப்பிள்ளை சார்பாக நான்…, என்று புகார் கொடுத்திருப்பாரோ, என்று யோசித்துக் கொண்டே வீட்டுக்கு வந்த போது, இவ்வளவு தூரம் கார் ஓட்டிக் கொண்டு வந்தது உணர்வில் இல்லை. கான்ஸ்டபிள் பெரிய மீசை வைத்திருந்தார். கூடவே தலை கலைந்து கன்னம் வீங்கி, சட்டை பட்டன்கள் அணியாத ஒரு கிரிமினல் கையில் விலங்குடன். சைக்கிள் திருடன். உதட்டிலிருந்து பார்க்க ரொம்ப பரிதாபமாக அப்பாவி போல இருந்தான். வேறொரு இடத்தில் கைவரிசையைக் காட்டும்போது, கையும் களவுமாகப் பிடித்து, கன்னத்தைப் பேத்தெடுத்திருக்கிறார்கள்.
உதடும் வாயும் வீங்கி… அடித்த அடியில் எங்கேயெல்லாம் சைக்கிள்கள் திருடினான், எங்கேயெல்லாம் விற்றான் என்று முகவரி, தேதிவாரியாகச் சொல்கிறானாம்.
“”சார் உங்க சைக்கிள் கிடைச்சிருச்சு. இவன் தான் சார் திருடிருக்கான். மொத்தத்தையும் வளைச்சுப் பிடிச்சாச்சு. இருபத்துமூணு சைக்கிள். நீங்க ஒரு தடவை டவுன் போலீஸ் ஸ்டேஷன் வந்து உங்க சைக்கிள அடையாளம் காட்டீருங்க” என்றார்.
எனக்கு சந்தோஷத்தில் ஜிவ்வென்றிருந்தது.
இப்படியும் நடக்குமா? ஸ்கூலுக்கும் ட்யூஷனுக்கும் நடந்து போய் நடந்து வரும் மகனின் கஷ்டம் தீர்க்கக் கடவுள் முடிவு கட்டியிருக்கிறான் என்றால் அதை மாற்ற நாம் யார். தத்துவம் பேசிக் கொண்டேன்.
“”தோ. பத்து நிமிஷத்தில் வந்துட்றேன் சார். காபி சாப்பிடுறீங்களா?”
“”இல்ல சார். நான் போற வழியில குடிச்சுக்குறேன்” என்று தலையைச் சொறிந்தார். எனக்கு அவரின் தமிழ் புரிந்தது. பர்ûஸ எடுத்துப் பேசினேன். பதினைந்து நிமிஷங்களுக்குள் நான் ஒரு ஆட்டோ பிடித்து (காரில் போனால் ரொம்பவும் பணக்காரர்னு நெனைச்சுக்கிட்டு போலீஸ்காரர்கள் காசு ஜாஸ்தி எதிர்பார்ப்பார்கள் என்றாள் மனைவி. எனவே ஆட்டோவில் போனேன். டவுன் போலீஸ் ஸ்டேஷன் போனபோது, உள்ளே நுழைய பயமாய் இருந்தது.
வாசலில், ஒரு மூலையில் குப்பைபோலக் கிடந்த சைக்கிள்களுக்கு நடுவில், என் மகனின் சைக்கிள் ஒளிவீசியது.
“”இது தானே?” என்றார் மதியம் வீட்டுக்கு வந்தவர்.
நான் புதிதாய் வாங்கிக் கொடுத்தபோது ஒட்டிய மீனாட்சியம்மன் பட ஹோலக்ராம் சைக்கிளின் முன் பக்கத்து ஹாண்டில் பார் நடுவே மின்னியது.
“”உள்ள போய் ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுங்க. அதோட இதுவரை மூணு மாசமா ஏன் எப்.ஐ.ஆர் கொடுக்கலைங்கறதுக்கான காரணத்தையும் எழுதுங்க” என்றார்.
“”உள்ளே, யோவ்…. யாருய்யா நீ? இங்க ஏன் நிக்கறே?”
“”சார்.. நான் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கணும்னு வந்தேன்”
“”அப்ப ஏன் திருடன் மாதிரி முழிச்சுக்கிட்டு நிக்கிறே.. அங்க வாசப் பக்கம் போ?”
வெளியே வந்து ரைட்டர் என்று எழுதப்பட்டிருந்த மேஜையின் முன் நின்றபோது, “”என்ன?” என்றார்.
சொன்னதும் “”உட்காரு”
எழுதிக் கொண்டார். காரணம் சொன்னேன்.
கையெழுத்துப் போட்டேன். “”சரி நீ போய்ட்டு வர்ற செவ்வாய்க்கிழமை கோர்ட்கிட்ட வந்துரு” என்றார்.
அவர் யாரிடமோ பேசுவது போலத் தோன்றவே, நான் நேரே நடந்து போய், சைக்கிளில் ஏறி உட்கார்ந்து பூட்ட முயன்றபோது, “”யோவ். எவன்ய்யா அவன்? சைக்கிள எடுக்குறது?” என்று ஒரு போலீசார் வந்தார்.
“”சார் இது என் சைக்கிள்தான். திருட்டுப் போய் இப்பதான் கிடச்சிருக்கு. இந்த சைக்கிள் என்னதுன்னு ஐடன்டிஃபை பண்ணீட்டு எடுத்துட்டு போங்கன்னு அவர்தான் சொன்னார்”
“”அவ்வளவு சீக்கிரமா இது முடிஞ்சிருமா? என்ன இன்னும் கோர்ட்டுக்குப் போகணும். அங்க இது உன்னுதான்னு ஜட்ஜ் கேப்பாரு. சொல்லிட்டு அப்பறமா தான் எடுத்துக்கிட்டு போகமுடியும்”
கொஞ்சம் ஏமாற்றம், இருந்தாலும் கோர்ட்டுக்குப் போய் வாங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
செவ்வாய்க்கிழமை, ஒரு மணி நேரம் பர்சனல் வேலையாக வெளியே போய்விட்டு வருகிறேன் என்று ஆபீஸில் ஸ்ரீதரிடம் சொல்லிவிட்டு கோர்ட்டுக்குப் போனேன். போலீஸ்காரர் வந்திருந்தார்.
காலை பதினோரு மணி வரைக்கும் எதுவும் நிகழவில்லை. என் சைக்கிளையும் காணோம். என் கையெழுத்துக்காக, ஆபீஸில் பல லட்ச ருபாய் மதிப்புள்ள உற்பத்திப் பொருள்கள் காத்திருக்கும் போது, இங்கே ஆயிரம் ரூபாய் மதிப்புக் கூட பெறாத ஒரு சைக்கிளுக்காக இப்படிக் காத்திருக்கிறோமே என்று தோன்றியது.
போலீஸ்காரர், என் சைக்கிளை எனக்குத் தாருங்கள் என்று கோர்ட்டுக்கு ஒரு பெட்டிஷன் எழுதித்தரச் சொன்னார்.
“”ஒரு வக்கீல வச்சு ஸ்டாம்பு பேப்பர்ல எழுதி பெட்டிஷன் தந்தீங்கன்னா, நான் அதை கோர்ட்ல காட்டி, ஏற்பாடு செய்வேன்” என்றார். ஸ்டாம்ப் பேப்பருக்கு நூற்றி இருபது ரூபாயும், வக்கீலுக்கு இருநூற்றம்பது ரூபாயும் தந்தேன்.
“”எனக்கும் டீ செலவுக்கு..” என்றவருக்கு ஒரு நூறு.
பெட்டிஷன் தயார் செய்து, என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு போய் ஒரு மணி நேரம் கழித்து வந்தார். இன்னும் என்ன என்றேன்.
“”உங்கள அய்யா கூப்பிடுவார்னு சொன்னார். அவய்ங்க கூப்பிடுவய்ங்க அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணே” என்றான் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்த சைக்கிள் திருடன்.
பிக்பாக்கெட்காரர்கள், திருடர்கள், சொத்துத் தகராறில் கொலை செய்தவர்கள், ஜாமீன் கேட்பதற்காக வந்திருப்பவர்கள், மற்ற சில கிரிமினல்கள் போன்றவர்களை விசாரித்து அனுப்பிவிட்டு ஜட்ஜ் என்னைக் கூப்பிட்டார்.
என்னை ஒரே ஒரு தரம் பார்த்தார். நான் புன்னகையுடன் கூடிய குட்மார்னிங் சொன்னது கவனிக்கப்படவில்லை. எனக்கு எதாவது தண்டனை தந்து விடுவாரோ? என்று பயமாக இருந்தது. சே. எனக்கென்ன.. நான் குற்றம் இல்லாதவன். குற்றவாளி இதோ என் கண் முன்னே. சைக்கிள் திருடன். என்றைக்காவது பின்னால் ஒரு நாள் குற்றம் சாட்டப்பட்ட இந்த சைக்கிள் திருடன், குற்றவாளி இல்லை என்றோ, இவன் சைக்கிள்களைத் திருடவில்லை என்றோ, நிரூபணமானால், நான் என் சைக்கிளைத் திரும்பவும் கோர்ட்டில் ஒப்படைப்பதாக உறுதி தந்து ஆயிரம் ரூபாய்க்கு பர்சனல் பாண்டு எழுதிக் கொடுத்தால் ரிலீஸ் செய்யலாம் என்று மாஜிஸ்ட்ரேட் ஆர்டர் போட்டார். இன்றைக்குக் கோர்ட்டிலும் போலீஸிலும் உண்மையை ஒப்புக் கொண்ட சைக்கிள் திருடன் எப்படி பின்னாளில் இல்லை என்று நிரூபணமாகும் என்று எனக்குப் புரியவில்லை என்றாலும், எழுதிக் கொடுத்துவிட்டு, மாஜிஸ்ட்ரேட்டுகளின் சேம்பர்களுக்கு அருகில் எங்காவது என் மகனின் சைக்கிள் இருக்கும் கொடுத்து விடுவார்கள். வாங்கிக் கொண்டு காரின் பின்பகுதியில் அதை எப்படிக் கவ்வ வைத்துக்கொண்டு போவது என்று யோசனையுடன், போலீசாரிடம் “”சைக்கிள் எங்க?”
என்று கண்களால் தேடினேன்.
உடனே அவர்,நான் எதோ ஜோக் சொன்ன மாதிரி பெரிதாகச் சிரித்து விட்டு, “”சார் அதுக்கு நீங்க இந்த ஆர்டர எடுத்துக்கிட்டு டவுன் ஸ்டேஷனுக்கு வரணும்” என்றார்.
திரும்பவும் டவுன் போலீஸ் ஸ்டேஷன். அங்கே இருந்தவர்கள் இப்போது கொஞ்சம் சீக்கிரம் வேலை செய்வது போலத் தோன்றியது.
சாவி தந்தவருக்கு, நூறு ரூபாய் தந்தவுடன் பக்கத்திலிருந்த வேறு யாரோ ஒரு குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவனை(ரை)ப் பார்த்து, “”டேய் சாருக்கு சைக்கிளைத் தொடச்சுக் குட்றா” என்றார்.
அன்றைக்கு, இரவு எட்டு மணிக்கு, திருடு போன அவனின் சைக்கிள் போல வேறு ஒன்று, என் மகனுக்குக் கிடைத்தது. இந்தச் சைக்கிளைப் பெற நான் செலவழித்த பணம், நேரம் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்… எதுக்கு வீண் வேலை என்றும் தோன்றியது, அந்தச் சைக்கிளில் என் மகன் ஏறி ஜாலியாக ஒரு ரவுண்டு போனதைப் பார்க்கும் வரை.
– ஏப்ரல் 2014