கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,902 
 
 

“இந்த முறை நீங்க ஊருக்கு வரும் போது ஒரு முடிவு பண்ணியாகணும். இல்லேன்னா…இல்லேன்னா எங்களை நீங்க மறந்துர வேண்டியதுதான். ஆமா செல்லிபுட்டேன். நானும் பிள்ளைகளும் மருந்துகுடிச்சுச் செத்துப் போயிருவோம்!”

விமலா சொல்லிவிட்டுப் போனைச் சட்டென வைத்துவிட, நான் அப்படியே பிரமைபிடித்து அமர்ந்திருந்தேன். வரவர போனைப் பார்த்தாலே அலர்ஜி, வெறுப்பு. கடல் கடந்து வந்து. குடும்பத்தை பிரிந்து, சந்தோஷத்தை இழந்து வேலை பார்க்கிறோம். வெயில், குளிரைப் பொருட்படுத்தாமல் சம்பாதித்து அனுப்புகிறோம்.

பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று புதுவீ’டு, டெலிபோன் மற்றும் சகல வசதிகளும் செய்துக் கொடுத்தாலும் நிம்மதியில்லை. அவர்களிடம் திருப்தியுமில்லை.

குவைத்தில் காய்ந்து போய் கிடக்கிறேன், நாலு வார்த்தை அன்பாய் – ஆதரவாய்ப் பேசுவோம் என்று நினைக்கிறாளா?

எப்போதும் புகார், புகைச்சல்! பெற்றோர்கள் மேல் குற்றம் – குறை! போன் பண்ணும் போதெல்லாம் “விசா எடுத்தாச்சா.. எப்போ எங்களை அங்கே அழைக்கப் போறீங்க..?” என்கிற பல்லவி புலம்பல்.

எனக்கு வெறுப்பாய் வந்தது. குடும்பத்தை விட்டுவிட்டு நான் மட்டும் இங்கே என்ன சந்தோஷமாகவா இருக்கிறேன்? நான் கஷ்டப்பட்டாலும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிச் சேமிக்கிறேன்.

குடும்பத்தை இங்கு அழைத்தால் சேமிப்புக் கரையும் என்பது ஒருபுறம் இருந்தாலும், வயதான அப்பா அம்மாவைப் பார்த்துக கொள்ள ஆள் இல்லாமல் போய்விடுமே என்கிற கவலை அழுத்திற்று.

விமலா அதை ஏன் புரிந்து கொள்ளமாட்டேனென்கிறாள்! கடைசிகாலத்தில் எங்களை விட்டால் அவர்களுக்கு வேறு யார் இருக்கிறார்களாம்!

அடுத்த மாதம் விடுமுறை.

மனைவி கெடுவைத்துவிட்டாள். பொடா! இனி தவர்க்க முடியும் என்று தோன்றவில்லை. விசா எடுத்தேன். சின்னதாய் வீடு. பிள்ளைகளுக்கு இந்தியப் பள்ளிகளில் அட்மிஷன்.

ஊருக்கப் போகிறோம் என்றால் -ஆறுமாதம் முன்பிருந்தே சந்தோஷம் பிறந்துவிடும். உறவு நட்புகளெல்லாம் பார்த்துப பார்த்து பொருட்கள் வாங்கிச் சேகரித்து எப்போதுமே அதிகபடி லக்கெஜ் வந்துவிடும். அவற்றை ஊரில் கொடுத்து அவர்களின் முகமலர்ச்சியைப் பார்க்கும்போது பாலைவனத்தில் படும் கஷ்டமெல்லாம் மறந்துப் போகும்.

“எதுக்கு அனாவசியமாய்… இதெல்லாம்?” என்று பொய்யாய்க் கடிந்து கொண்டு நெக்லஸை விமலா போட்டு ‘இது நல்லாருக்கா? என்று அழகு காட்டுவது ஒரு சுகம். பிள்ளைகளும் “இது எங்கப்பா வாங்கி வந்த டிரஸ், ஷு, கம்மல், வளையல் என்று ஊர் முழுக்க வலம் வருவது பெருமையாயிருக்கும்.

விடுமுறை நெருங்க நெருங்க புல்லரிப்பு, தூக்கம் வராது. மிதப்பு!

ஏர்போர்ட்டில் போய் இறங்கினதும் வாசல் தெளித்துக கொண்டு அவர்களின் ஏக்க முகத்தைப் பார்த்ததுமே உடலில் ஜிவ். மனைவியை பொது இடத்தில் முடியாது என்பதால் பிள்ளைகளை வாரி அணைத்துப் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்து..

அதெல்லாம் ஒரு அனுபவம்.

இப்போது அந்த மாதிரி எதுவுமே தோன்றவில்லை. ஊருக்குப் போக வேண்டும்மா என்றிருந்தது. போய் இறங்கியவுடனேயே ஏன் வந்தோம் என்று நினைக்கும்படி சண்டை பிடிக்கப் போகிறாள்.

அம்மா ஒரு பக்கம்! மனைவி மறுபக்கம் வாதிட என்பாடு திண்டாட்டம். நான் யாரைக் கடிந்துக் கொள்ள முடியும்? எந்தப்பக்கம் பேசினாலும் பிரச்னை. உலகத்திலிருக்கிற மாமியார்-மருமகள்கள் திருந்தவே மாட்டார்களா..?

சொந்த ஊர்.

ஏர்போர்ட்டிலிருந்து வீடு போய்ச் சேரும் வரையிலும் காரில் அமைதி அப்பா-அம்மா- மனைவி எல்லோரும் இருந்தும் கூட யாரும வாய் திறக்கவில்லை.

வாய் திறக்காதவரை வசதி. ஆனால் எல்லோரும் பெரிய தாக்குதலுக்குத் தயாராகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. வீட்டிலும கூட கலகலப்பில்லை.

“அப்பா…!” என்று பிள்ளைகள் ஓடிவந்து பெட்டியை பிடுங்க, “போங்கடி உள்ளே! போய்ப் படிங்க!” என்று விமலா விரட்டியடித்தாள். அவர்களின் முகம் சுருங்கி ஏமாற்றத்துடன் ஏறிட எனக்கு சங்கடமாயிற்று.

“பிள்ளைகளை ஏன் திட்டுகீறாய்.”

“ஆமா பிள்ளைன்னதும் பொத்துகிட்டுவரது! இங்கே நான் என்றால் இளப்பம், என்னை யார் திட்டினாலும் – அதுபத்திக் கவலையில்லை.”

“ஏய் என்ன இது? வந்ததும் வராததுமாய்?”

விமலா வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொள்ள, அப்பாவும்! அம்மாவும் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கால் பதித்தவுடனேயே நரகம் ஆரம்பம்!

ராத்திரி பிள்ளைகளைத் தூங்க வைத்துவீட்டு வேண்டுமென்றே தள்ளி – அதுவும் திரும்பி படுத்துக கொண்ட விமலாவைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இவள் இப்படித்தான்! எதையாவது சாதிக்க வேண்டும் உசுப்பிவிட வேண்டும என்றால் வேலை நிறுத்தம்! மௌனம்.

சில நாட்களில் நல்லதாப் போச்சு என்று நானும் திருப்பிக் கொள்வேன். நான் வருவேன் – அணைப்பேன் – ஆறுதல் சொல்வேன் எனக் காத்திருந்து அது நடக்காமல் போனால் உடன் புசுபுசுவென அழுகை பொங்குவாள்.

அப்படியும் பலனில்லையென்றால் எழுந்து ஹாலுக்குப் போய் விடுவாள் பாவம் விமலா! எனக்கிருக்கிற ஏக்கமும் – பசியும் பாசமும் இவளுக்கும் இருக்கும்தானே!

மெல்ல அரவணைத்து, “ஏய்… எல்லோரும் இப்படி முரண்டு பண்ணினா எப்படி..? இந்த முஞ்சியைப் பார்க்கவ நான் வந்தேன்..ம்..?”

“விசா எடுத்தாச்சா?”

“இப்போ என்ன அவசரம்?”

“ஆமாம். எனக்கு அவசரம்தான். முடியலை. நானும் மனுஷிதானே – மெஷின் இல்லையே! எனக்கும் ஆசாபாசங்கள் – உணர்வுகள் இருக்கு.”

“யாரு இல்லேன்னாங்களாம்!”

“என்னனவோ கஷ்டப்படறேன் கஷ்டப்படறேன்னு வசம் பேசறீங்களே, என் கஷ்டம் உங்களுக்குத் தெரியுமா? இங்கே எது செஞ்சாலும் குத்தம். விடியற்காலை நாலரைக்கு எழுந்தால் தண்ணீர் பிடித்து, வீடு, வாசல் தெளித்து வெந்நீர் வச்சு பிள்ளைகளை எழுப்பி படிக்கவச்சு குளிக்க வச்சு டிபன் செஞ்ச கொடுத்து ஓய்வில்லாம மதியம் – இரவு வரை ஒழிவில்லை. மாய்ஞ்சு மாய்ஞ்சு கவனிச்சுக்கிட்டாக்கூட உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருப்தி கிடையாது. குத்தம் குறை! இடித்தல்! சபித்தல்! புலம்பல்!”

“சும்மா பொத்தாம் பொதுவில் சொன்னா எப்படி… என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சா தானே அவங்களைக் கண்டிக்க முடியும்?”

“ஒரு ஆயிரம் சொல்லலாம். குத்தம் சொல்றது குத்திக்காட்டறது என் நோக்கமில்லை. ஆனாலும் கூட சகிச்சுக்கிறதுக்கும் ஒரு எல்லையிருக்கு. கட்டில்ல படுத்திருக்கும் அப்பா எழுந்து பாத்ரூம் போகக்கூடாது…? அப்படியே வாசல்லேயே மூத்திரம் போறார். இது மாதிரி எத்தனையோ!”

“போகட்டும விடுடி! பெரியவர்தானே! வயசானவங்களுக்குச் செய்கிற வேசனம் பாக்கியம்டி என்னை பார்த்து பார்த்து வளத்தவர். படிக்க வச்சு ஆளாக்கினவர்!”

“அதுக்காகத்தான் இத்தனை நாள் பொறுத்துக்கிட்டேன். வேலைக்கிடையிலே டிபன் ரெடி பண்ண அஞ்சு நிமிஷம் லேட்டாச்சுன்னா அம்மா உடனே கோவிச்சுக்கிட்டு தெருவுக்குப் போயிடறாங்க. மருமக சோறு போடலே -சாப்பாடு போடுன்னு எதிர்த்த வீட்டுக்குப் போய் புகார் பண்றாங்க நம்மைப்பத்டித அவங்க என்ன நினைப்பாங்க? இதெல்லாம் எனக்குத் தேவையா?”

“ஒண்டியா அல்லாடறாளேன்னு ஒத்தாசை பண்ணாட்டியும் பரவாயில்லை – புரளி பேசாமாவது இருக்கலாமில்லே?”

விமலாவின் வார்த்தைகளில் இருந்த நியாயம் எனக்குப் பிரிந்தது. அவளது உழைப்பை – ஆதமார்த்தத்தை துரும்பாகிப் போன அவளது சரிரமே சாட்சி சொல்லிற்று. என்ன செய்வது எப்படி இந்த பிரச்னையைத் தீர்த்து வைப்பதென்று எனக்கு புரியவில்லை.

மறுநாள் அப்பா-அம்மா வாய் திறப்பார்கள் என்று பார்த்தேன். ஏமாற்றம்.

இறுக்கமாகவே அமர்ந்திருந்தனர். பதிலுக்கு மருமகள் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் விளக்கமளிக்கலாம். ம்கூம்.

‘ஏன் இப்படி நடந்துக்கிறீங்க’ – என்று கேட்கத் துணிச்சல் இல்லை. முன்பொருமுறை கேட்ட போது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போய்விட்டார்கள்.

ஒரு வாரம் அவஸ்தை. உறுத்தல். பயம். வெறும் வாயை மெல்லும தெருவாசிகளுக்கு நல்ல அவல் கிடைத்தது. செந்தில் மாறிட்டான்- பெண்டாட்டி பேச்சைக் கேட்டுகிட்டு பெத்தவங்கைளை விரட்டிட்டான் அரபு நாட்டுக்குப் போய் சம்பாதிச்சு என்ன பிரயோஜனம் வயசானவங்களின் சாபம் சும்மாவிடுமா என்று காதுபடவே பேசினார்கள்.

இன்னொரு முறை அதுமாதிரி ஆகிவிடக்கூடாது. என்ன செய்யலாம்?

வெளியே பிரச்சனை என்றால் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டு ஆறுதல் பெறலாம். குடும்பப் பிரச்சனைகளை எங்கேப் போய்ச் சொல்ல?

ஆத்மார்த்த நண்பர்கள் தான் இதற்கு மருந்து.

ஆற்றாங்கரையில் அவர்களைச் சந்தித்த போது. “செந்தில்! பேசாம குடும்பத்தை உங்ககூட அழைச்சு போயிருடா!” என்றனர்.

“அப்புறம் அப்பா-அம்மாவை யார் பாத்துக்கிறதாம்?”

“அந்தக் கவலை அவங்களுக்கு இருக்கணும். மருமகளை கொடுமை பண்ணும் போது தெரியணும். வயசாச்சுங்கிறதுக்காக பரிதாபப்பட முடியாத அளவுக்கு பெரிசுங்களோட டார்ச்சர் தாங்கலேப்பா. உன் மனைவி பாவம். இதுல அவங்களைக் குறை சொல்ல எதுவுமேயில்லை. ஒண்ணு அவங்களை நீ கொண்டுப் போகணும். அல்லது வேலையை விட்டுட்டு நீ இங்கே வந்திரணும். அப்போதான் பெரிசுங்க அடங்கும்!”

‘அது நடக்காதுரா. இங்குள்ள வேலையையும் விட்டுட்டு அங்கே போயிருக்கேன். நல்ல உத்யோகம். நல்ல சம்பளம், அதில்லாம் இங்கே வந்து என்ன பண்றதாம்! பிள்ளைகளின் படிப்பு இருக்கு. வீட்டுக்கடன் பாக்கி இருக்கு.”

“ஏய்.. செந்தில்! நீ சொல்றதெல்லாம் சரிதான். ஒத்துக்கிறேன். பணம் வாழ்க்கைக்கு முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகிடக்கூடாது பணம்தான் பிராதானம்னா எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? வயசு போச்சுன்னா திரும்ப வராதுடா. ப்போ எல்லாமே வேகமாத் தெரியும்.”

“ஒரு காலகட்டத்துல பணம் இருக்கும். ஆனால் அனுபவிக்க யாரும் இருக்க மாட்டாங்க. அப்போ ரொம்ப பீல் பண்ணுவாய் பார். வேறு யாருக்காக இல்லேன்னாலும பிள்ளைகளுக்காகவாவது நீ அழைச்சுக்கணும். இந்த வயசுல அதுங்க அப்பா அம்மாவோட வாழணும் வளரணும்டா.”

நண்பனின் வார்த்தைகளில் இருந்த நிஜம் என்னைத் தாக்கிற்று. பெரியவர்களின் நலத்தைப் பார்த்தால் குழந்தைகள் வெம்பிப் போவர்.

அப்போது காலையில் பள்ளிக்குப் போகும்போது மகள், “இன்னைக்கு எங்களை ஸ்கூல்ல விடறீங்களாப்பா?” என்று கேட்டது ஞாபகத்திற்கு வந்தது.

“நான் எதுக்கு – அதான் பஸ் இருக்கே!”

“ஒரு நாளைக்குப்பா.. ப்ளீஸ்..”

“இல்லை. எனக்கு வேலையிருக்கு. போங்க!”

“அப்போ ஸ்கூல் விட்டு அழைக்க வரீங்களா.. ப்ளீஸ்ப்பா.. மத்த பிள்ளைங்களுக்கெல்லாம் அவங்க அப்பா-அம்மா அழைக்க வராங்க!”

அது இப்போது ஞாபகத்துக்கு வர பள்ளிக்குச் சென்றான். மணியடித்ததும் புற்றீசலாய்ப் பிள்ளைகள் ஓடிவந்தன. என்னை பார்த்ததும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி. நம்பிக்கையில்லை.

“ரொம்ப தாங்ஸ்ப்ப்!” என்று ஓடிவந்து கட்டிக்கொண்டன.

“எதுக்கும்மா?”

“அழைக்க வந்ததுக்கு. இத்தனை நாட்களாக – நமக்கு யாருமில்லை – அனாதை என்கிற எண்ணமிருந்தது. இப்போ அது போயே போச்சு!”

“வா- ஆட்டோ பிடிப்போம்!”

“வேணாம்ப்பா. நடந்து போலாம். பேசிக்கிட்டே போகலாம்” என்று ஆளுக்கொரு பக்கம் அவர்கள் பிடித்துக் கொண்டனர். வழியில் கடை தென்பட “ஏதாச்சும் வேணுமா?” என்றேன்.

எனக்குள்ளும் மகிழ்ச்சி. உற்சாகம். “என்னவேணும் சொல்லுங்க. சாக்லெட்? ஐஸ்க்ரீம்?”

“பெரிய வீடு நகைகள் எதுவுமே வேணாம்ப்பா. எங்களையும் அழைச்சுக் போயிருங்கப்பா!” பிள்ளைகள் கெஞ்சவே என் மனதும் கரைந்து போயிற்று.

“அது கஷ்டம்டா. நான் சம்பாதிச்சாத்தானே – நீங்க ஸ்கூல் பஸ்ல போக முடியும்! பெரிய வீடு! நல்ல டிரஸ் நகைகள்!”

வீட்டு வந்ததும் – இனியும் கேட்காமல் இருந்தால் தப்பாகி விடும என்று தோன்றவே. நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு. “அப்பா! இது உங்களுக்கே நல்லாருக்கா!” என்று ஆவேசப்பட்டேன்! “உங்களுக்காகத்தானே நான் குடும்பத்தைப் பிரிச்சு அங்கே மெஸ்ஸில் சாப்பிட்டு கஷ்டப்படறேன்.. அதை ஏன் நீங்க புரிஞ்சுக்க மாட்டேன்கிளீங்க!”

“வேணாண்டா. எங்களுக்காக யாரும் எந்தத் தியாகமும பண்ண வேணாம். குடுமபத்தைப் பிரிஞ்சி இருக்க வேணாம். குடும்பத்தை எப்போ வேணாலும் நீ அழைச்சுப் போகலாம்!”

“அப்புறம் நீங்க…?”

“எங்களைப் பத்தி என்ன கவலை…? ஊர் உலகத்துல எத்தனையோ முதியோர் இல்லங்கள்!”

“இது நியாயமாப்பா…?”

“வீண் பழி போடறதுக்கு – அன்பு பாசமில்லாம கரிச்சு கொட்டறதுக்கு அது எவ்வளவோ மேல்!”

இரண்டு மாதங்களுக்குப் பிறது-

குடும்பத்தைக் குவைத்தில் செட்டில் பண்ணியிருந்தேன். சின்ன பிளாட் என்றாலும் எல்லா வசதிகளும் இங்கு உண்டு. மனைவி – பிள்ளைகளுக்கு சந்தோஷம்.

அன்று டூட்டி முடிந்து வீடு திரும்பும் போது – மகள் ஓடிவந்து.. “அப்பா! இங்கே வந்து பாருங்க–தாத்தா!” என்று அலறினாள். குதூகலித்தாள்.

“எங்கேடா..எங்கே..?”

“இதோ டிவியில்..”

அப்போது டிவியில் ‘முதியோர் இல்லத்தில் ஒரு பார்வை’ என்கிற நிகழ்ச்சி காட்டிக் கொண்டிருந்தார்கள். அதில் பேட்டியாளல் “உங்களுக்கு யாருமில்லையா… ஏன் இங்கே வந்தீங்க!” என்று கேட்க – “அப்பா எனக்கு எல்லோரும் இருக்காங்க. அன்பான மகன். அனுசரனையான மருமக. தங்கமானப் பேத்திகள்” என்று உருகினார்.

“அப்புறம் ஏன் இங்கே? அவர்கள் கவனிக்கலியா..?”

“நல்லாப் பார்த்துகிட்டாங்க. நாங்க வாழ்ந்து முடிச்சவங்க. எங்களைச் சொல்லி – மகன் குடும்பத்தை பிரிஞ்சு – வாழ்வை அனுபவிக்காம ஒதுக்கறான். எத்தனை சொல்லியும் கேட்கலை. அதனால் மருமகளைக் கொடுமை பண்றமாதிரி நடித்து – எங்க மேல வெறுப்பு வர வச்சு – அவன் அவளை அழைச்சுக்கவச்சோம். இப்போ அவங்களும் சந்தோஷமாயிருக்காங்க. நாங்களும் இங்கே பத்திரம்!”

அவர் சொல்லிவிட்டுத் தன் கண்களைத் துடைக்க, எங்களின் கண்களும் நனைந்து போயின.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *