சேகு மாமாவின் அம்பாஷ்ட்டர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 8,256 
 

பூஞ்சோலை எனும் பெயர் கொண்ட அழகியதொரு கிராமம்தான் எனது கிராமம். இயற்கை கொஞ்சும் பச்சை புல்பூண்டுகளும் மஞ்சல் மணல் தெருக்களும். கிராமத்தின் ஒவ்வொரு மண் குடிசைகளிலின் முற்றத்திலும் வாகை, புங்கான், மாமரம் முந்திரிகை தேக்கு என அக்கிராமே மரங்களால் சூழ்ந்தே செடிகொடிகளோடும், பற்றை காடும் பள்ளிவாயல், சர்ஜ் மற்றும் காளியம்மன் கோவிலும் அதன் அருகே ஒற்றையடி பாதைகளும் வயல் வரம்புகளுமாய் இயற்கையால் இறைவன் நிறைத்து வைத்திருந்தான். வசந்தகாலங்களில் அங்கு இருக்கும் வாகை மரங்கள் தொடக்கம் ஏனைய மரங்களும் சிவப்பும் – செம்மஞ்சலுமாய் பூக்கள் பூத்து குலுங்குவதினாலோ என்னவோ அந்த கிராமத்துக்கு பூஞ்சோலை என்றே பெயர் வந்ததாகவும் என்னுடைய பாட்டனார் அடிக்கடி சொல்வதை நான் கேட்டுள்ளேன்.

அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதுதான். நண்பர்களோடு கிராமத்தின் காடு கரை அழைந்து திரிந்துவிட்டு அங்கிருக்கும் வாகை மரங்களில் ஏறி கூத்தாடுவோம். அதில் பூத்த பூக்களின் மொட்டுகளை குயில்கள் பாடி இசைத்து உண்டு களித்த பின்னர் அதுகளின் பாட்டுக்கே எசப்பாட்டு பாடிக்கொண்டே நாங்களும் வாகை பூக்களை சுவைத்ததுக்கொண்டும், திருட்டு மாங்காய் பரித்து திண்டும் களித்தும் ஓடை வெளியெங்கும் குளித்து மகிழ்ந்ததை என்னால் எனது அந்த இளம் பராயத்தை என்றுமே மறக்க முடியாது.

எங்கள் கிராமத்தில் அப்போது இயந்திர வாகனங்கள் என்று எதுவுமே இருந்ததில்லை. மாட்டு வண்டி பயணமே நெடுகிலும் இருந்தன.
மாட்டு வண்டி வைத்திருந்த, சவாரிக்காரர்களில் ‘சேகு மாமாவே’தான் கிராமத்தின் பிரபலமான நபராகவும் இருந்தார். கிராமத்திலிருந்து தூரத்துப்பிரயாணமோ அல்லது சடங்கு சம்பிரதாய விஷேச சவாரி என்றாலோ உடனே சேகு மாமாவுக்குத்தான் எல்லோரும் அழைப்பு விடுப்பார்கள். சேகு மாமாவின் மாட்டு வண்டியில் போகாத மனுஷனும் இல்லை அந்த மாட்டு வண்டி போகாத ஊரும் இல்லை வண்டியில் பூட்டியிருந்த மாடுகளின் கால்கள் படாத நிலங்களும் இல்லை என்றாகியிருந்தது. அந்தளவுக்கு சவாரிக்கு பெயர்போன சேகு மாமாவிடம் அன்றைக்கு ரூபாயும் தாராளமாய் புழக்கத்தில் இருந்தது.

சேகு மாமாவின் இயற்பெயர் சேகு இஸ்மாயிலாம். அவரது தகப்பனாரோ அக்காலத்தில் கம்யூனிஸ்ட் தத்துவங்களோடு ஒன்றிப்போய் வாழ்ந்தவராம். அதனாலேதான் சே குவாரே எனும் கம்யூனிஸ்ட் போராளியின் ஈர்ப்பில் ஏற்பட்ட பிரியத்தினால் தனது மகனுக்கும் சேகு இஸ்மாயிலென பெயர் வைத்ததாகவும்! பின்னர் சேகு மாமாவும் தகப்பனார் வழியிலே சே குவாரேவின் பரம விசிறியும் ஆனார் எனும் ஒரு கதையும் உண்டு.

சே குவாரேவின் தாக்கத்தினால்தான் சேகு மாமாவின் நடை உடை பாவனைகள் மற்றும் தொழிலாளர் கொள்கை பேச்சு என ஒரே வித்தியாசமகவும் அப்போது இருந்தது. அதை பார்த்து ரசித்துக் கேட்டறிந்து எனக்கோ அறிவுக்கு எட்டாத பருவம் என்றபோதிலும் நானும் கம்யூனிஸ்ட்டின் பக்கமாய் சற்று சறுக்கி சாய்ந்துகொண்டேன்.

இப்படியே காலங்கள் நகர்ந்தது. கிராமத்துக்குள் அவ்வப்போது இயந்திர வாகனங்களின் வருகையும் ஏற்படத் தொடங்கியது. இதை அவதானித்த சேகு மாமாவுக்கும் ‘ஓர் கார் வாங்கிவிடவேண்டும்’ எனும் ஆசையோ நெடுநாட்களாக மனசோடு ஒட்டிக்கொண்டது. ‘தான் நீண்டகாலமாய் வைத்து பிழைப்பு நடத்தி வந்த மாட்டு வண்டியை, விற்பனை செய்து காரொன்றை வாங்குவதற்கு’ திட்டமிட்டிருந்தார் மனுஷன். அவருடைய மாடுகளும் நீண்டகாலமாய் கடுமையாக உழைத்து களைத்து தேய்ந்துபோய் வயதாகியும் போனது. ஒருவழியாக வண்டியையும் அதில் பூட்டியிருந்த மாடுகளையும் விற்றுக்கொண்டு, கையிலிருந்த கையிருப்பு பணத்தையும் அத்தோடு சேர்த்து, ‘இந்தியன் அம்பாஷ்ட்டர்’ மோடல் கார் ஒன்றையும் வாங்கினார் சேகு மாமா.

காரை வாங்கிக்கொண்டு ஊருக்குள் நுழையவிருக்கும் சேகு மாமாவை முழு கிராம மக்களுமே வேடிக்கை பார்ப்பதற்காக ஊர் எல்லையில் இருக்கும் பாலா ஐய்யாவின் தேனீர் கடையருகில் ஒன்று கூடியிருந்தனர். தூரத்தில் சிவப்பு நிறத்திலொரு கார் ஒன்று சிரிதாய் தெண்படவே, அதைக்கண்டு சேகு மாமாவேதான் அதை ஓட்டி வருகிறார் என அங்கு நின்றிருந்தவர்களோ “”அடடா…ஆஹா ஓஹோனே வியப்புடன் பேசிக்கொண்டதும், மறுபக்கம் நின்றிருந்த பெண்மணிகளோ சுத்தமாக குலவை இட்டதும் முழுக்கிராமமே சேகு மாமாவின் உற்சாக வரவேற்பில் அன்று ரணகளமாகிக்கொண்டிருந்தது. ‘கிராமத்தில் முதல் ஆளாக
சேகு மாமாதான் முதன்முறையாக கார் வாங்கியதும், அவரே அதை அதிசயமாக ஓட்டி வரப்போகிறார்’ என்பதையும் பார்ப்பதற்காக வேண்டி அப்போது கூட்டத்தின் நெருசலின் நடுவில் நானும் சிக்கிக்கொண்டு அல்லோல்பட்டுக் கொண்டிருந்தேன்!.

கூட்டமாய் நின்றவர்களை நோக்கியே வந்து சேர்ந்த சேகு மாமாவின் காரோ, சடாரென்று பிரேக்கை போட்டு முன்னும் பின்னுமாய் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு நின்றுகொண்டது. அப்போது அங்கு கூடியிருந்த கிராமவாசிகளோ முட்டி மோதிக்கொண்டே கலவராமாகிபோனார்கள். பஞ்சாயத்து பெரியவர்களோ “விலகு விலகு” என எல்லோரையும் ஓரங்கட்ட மூடியிருந்த கார் கண்ணாடியும் திறந்தது. ‘அது சேகு மாமாதான்’ என எல்லோருமாக வாய் பிளந்து பார்த்திருந்த வேளையில் அவர் வேறொருவராக இருந்தார். “அப்போ சேகு மாமா காரை ஓட்டி வரவில்லையா!?” எனும் ஏமாற்றத்தில் அங்கு நின்றிருந்த எல்லோரும் ஆளாளுக்கு ஏதோதோ பேசிக்கொண்டு காரை கண்ட ஆச்சரியத்தில் மூழ்கி மறந்திருந்தனர். காரின் பின் சீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் வீட்டிருந்தார் யாரோ ஒருவர். ஊர் மக்களின் கலவர சத்ததின் காரணமாக கண் விழித்துக்கொண்ட அவரோ தனது வாயின் ஓரமாய் வடிந்தோடிய வீனியை துடைத்துக்கொண்டே கார் கதவின் வழியாக தலையை இட்டு “”ஆஹ்வ்”””வென பெரியதொரு கொட்டாவியுடன் சிரித்துக்கொண்டே பார்த்தாரே அவர், “வேற யாரு!?” “நம்ம சேகு மாமாவேதான்!”.

அந்த காரை ஓட்டி வந்த ட்ரைவரிடம் தனது வீட்டைக்காட்டி அங்கு போகுமாறு கூறினார் சேகு மாமா. அப்படியே அவ்விடத்தை விட்டு காரும் நகர்ந்து சேகு மாமாவின் வாசலிலே போய் நின்றது. ஓரிடத்தில் பார்க்கிங்க் பண்ணப்பட்ட காரை கிராம மக்களோ கூடி நின்று வேடிக்கை பார்க்கவும் தொடங்கினார்கள். கண்காட்சி நிகழ்ச்சிபோல் தினந்தோறும் இந்நிகழ்வு ஓடிக்கொண்டேதான் இருந்தது.

‘நெடுநாட்களாய் ஓரிடத்தில் பார்க்கிங்க் பண்ணப்பட்டிருந்த காரும், வீட்டிலே முடங்கிய சேகு மாமாவும் எங்கும் போய் வந்ததாகவும் தெரியவில்லை!’ என்றானது. மாட்டுவண்டி இருந்தபோது கிடைத்த சவாரிகள் கார் வந்தபோது சேகு மாமாவுக்கு கிடைத்ததாகவும் இல்லை. அதற்கெல்லாம் பெரியதொரு ரகசியமொன்றும் ஒழிந்திருந்தது. அதுவரை அந்த ரகசியம் கிராம மக்களில் யாருடைய காதுகளுக்கும் துளியளவும் வந்து சேரவில்லை. ஒருவழியாக பொத்தி காத்த அந்த ரகசியமோ, சேகு மாமா ஓர் நாள் மனைவியின் வாயை வீம்புக்கு தூர்வாரப்போய் அமலிதுமலியாக அது மாறி, ஊரே நாறும் அளவுக்கு அந்த ரகசியம் அக்கம்பக்கமாக கசிந்து முழு பூஞ்சோலையுமாக தெரிய வந்தது.

‘சவாரியும் இல்லை!. கையில் பணமும் இல்லை!’ என்றிருந்தபோதுதான், சேகு மாமாவின் மனைவி அவரோடு தினமும் சண்டை இட்டு வாய் கிழிய கத்தியதில் ‘சேகு மாமாவுக்கு கார் வண்டி ஓட்டும் ட்ரைவிங் வராது!’ எனும் ரகசியம் காற்றில் பறந்து பக்கத்து கிராமம் வரை அது பரவிக்கொண்டது. அதுவரை காரை கழுவி குளிப்பாட்டி துடைத்து வைத்துவிட்டு தலையை சொரிந்தபடி திண்ணையில் ஓர் பத்திரிகையின் வாசிப்பின் பரபரப்பில் மூழ்கிபோவதே தனது முக்கிய பொழுதாக்கியே போக்கிக்கொண்டிருந்தார் சேகு மாமா.

இப்படியே நாட்கள் ஓடிவிட்டது. ஓர் நாள் அரசியல் பிரச்சாரம் என ‘செபாஸ்டின்’ எனும் பஞ்சாயத்து அரசியல்வாதி ஒருவர் ஸ்ப்பீக்கர் கட்டி தெரு பிராச்சாரங்களுக்காக வேண்டி சேகு மாமாவின் காரை வாடகைக்காக கேட்டு அவருடைய வீட்டுக்கும் வந்திருந்தார். சேகு மாமாவுக்குத்தான் ட்ரைவிங் வரராதே! பிரச்சாராத்துக்கு வந்திருந்தவரோ தனது கம்யூனிஸ்ட் தோழர் என்பதனால் தர்மசஙகடமான நிலையில் வேறு வழியின்றி தனக்கு சுத்தமா ட்ரைவிங் வராது என்பதை பம்மியபடி உளரிக் கொட்டிவிட்டார் சேகு மாமா. “அவ்வளவுதானே அடக்கழுத அது எனக்கு ஏற்கனவே வந்து சேர்ந்து காலாவதியாய் போய் குப்புறப்படுத்த செய்தியாச்சே… நம்மகிட்ட ஆளுங்க இருக்கானுங்க கவலைய விடு சேகு” என கூறிவிட்டு வெளீயூரில் பயிற்சி பெற்ற ட்ரைவர் ஒருவனை அழைத்துவந்து காரையும் கொண்டு சென்றார் அரசியல்வாதியான செபாஸ்டின்.

பட்டித்தொட்டியென புழுதி பறக்க காரும் தேர்தல் பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தது. புதிதாய் காரை பார்த்ததும் பெரியவர்களும், சிறுவர்களுமாக அதன் பின்னாடியே ஓடித்திரிந்து புதினம் களித்தனர். போதாதற்கு அந்த வருடம் சேகு மாமவின் கம்யூனிஸ்ட் தோழருமான செபாஸ்டின் அமோகமாக வெற்றியீட்டினார் . அதற்கெல்லாம் முழுக் காரணமே சேகு மாமாவின் அந்த சிவப்பு வர்ண அம்பாஷ்ட்டர் காரேதான்!.

சேகு மாவுக்கு இப்படியே காலம் கடத்துவதாகவும் ஆகிப்போனது. எங்கு செல்வதென்றாலும் யாரோ ஒரு ட்ரைவரை வெளியூரிலிருந்து கொண்டுவந்து கூலிக்கு அமர்த்தி காரை ஓட்டும் நிலைக்கும் ஆளானார். இறுதிவரை ட்ரைவிங்க் என்பதினை கற்றுக்கொள்ளவதில் பயத்திலே இருந்துவிட்டார் மனுஷன். ட்ரைவர்களுக்கே பஞ்சம் என்றிருந்தபோது கூலிக்கு அமர்த்தியவர்களோ, அவர்கள் காரை காச்சி மூச்சசென ஓட்டுவதை பார்த்து வயிரெறிந்து அடிக்கடி அவர்களுடன் வாய்த்தகராறிலும் ஈடுபடத்தொடங்கினார் சேகு மாமா. பின்னர் எவருமே அவருடைய காரை ஓட்டுவதற்கென்று அந்த பக்கமே வந்ததில்லை என்றாகிப்போனது.

சேகு மாமாவின் நிலையோ மென்மேலும் பரிதாபமாக சென்றுகொண்டிருந்தது. வீட்டில் சேகு மாமா காரை வெட்டியாக வைத்திருக்க ரோட்டில் மாட்டுவண்டியில் போய்வரும் வண்டிக்காரர்கள் கூட சேகு மாமாவை பார்த்து எகத்தாலமாய் சிரிப்பதும், நையாண்டி பண்ணுவதுமாய் வீம்புக்கென வந்து செல்வதுமாக தினமும் அதுவே வாடிக்கையாகிப்போனது. அவனுங்களுடனே மல்லுக்கட்டுவதும், வயிர் எரிந்து புழம்புவதுமாய் அவருக்கு பொழுது விரக்தி நிலையை காட்டியதும் கையில் பத்து பைசாவுக்கும் வழியின்றி இருந்தவருக்கோ வெறும் காரை வைத்து பழுது பார்க்கும் படலமும் தொடங்கியது.

மாதம் ஒருமுறை என சவாரிக்கென்று அறிந்தவர்கள் யாராவது ட்ரைவர்களை வெளியூரிலிருந்து கூட்டி வந்து அழைத்தால், காரை ஸ்ட்டார்ட் பண்ணும்போதே போதும் போதும் என்றாகிப்போனது. நெடுநாளாக கார் அப்படியே கிடப்பில் கிடந்ததால் அடிக்கடி மக்கர் பண்ணி ஏதோவொரு பழுது வியாதியாகவும் அந்த காரை தொற்றிக்கொண்டது. அதை சரி செய்வதற்க்காக வயல், நிலம் புலம் அனைத்தையும் விற்று அதற்கு பரிகாரம் பார்த்தே சேகு மாமாவும் ஒரு கட்டத்தில் ஆண்டியானர்.

பின்னர் ஒருநாள் சேகு மாமா, ‘தான் மாட்டுவண்டியை விற்றதால் வந்த வினை’யை எண்ணியெண்ணி அழுது புழும்பியதும் தன்னோடு இதனால் தினமும் சண்டையிட்டுக்கொண்டிருந்த மனைவியும் அவருடைய இயலாமையை பார்த்து அவரை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

கிட்டத்தட்ட பித்துப்பிடித்த கிறுக்கனாகவே தாடியும் சடைத்த முடியுமாக மாறிப்போன அவர், கைச் செலவுக்கும் ஒன்றுமில்லாமல் போகவே கூலிக்காக கிராமத்தில் உள்ள முதலாளிகளின் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று தனது குடும்ப ஜீவியத்தையும் கடத்த தொடங்கினார். அங்குமிங்குமாக பிழைப்புக்காக அழைந்த திரிந்த சேகு மாமாவை நான் பார்த்து, அவருடைய அடையாளத்தை கண்டு, என்னால் தாங்கவே முடியவில்லை என்றாகிவிட்டது “எப்படியிருந்த மனுஷன், ஊருக்குள் கௌரவமாக முதலாளியாக வாழ்ந்தவர்! இன்னைக்கு என்னடனா ஓர் மாடு மேய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு பைத்தியக்காரனாட்டம் மாறிவிட்டாரே!” என என் வேடிக்கை பருவத்தில் மனதுக்குள் புழுங்கி நொந்தும் கொண்டேன்.

அன்றிலிருந்து ஓறிரு மாதங்களுக்கு பிறகு. நாங்களும் பஞ்சம் பிழைப்பதற்காக குடிபெயர்ந்து இன்னுமொரு கிராமத்துக்கு சென்று வாழும் சூழலும் ஏற்பட்டது. நாங்கள் தங்கியிருந்த குடிசை – சாமான்களை காலி செய்துவிட்டு ஊரைவிட்டு போகும்போது அவ்வழியில் இருந்த சேகு மாமாவின் வீட்டையும், அவரையும் இறுதியாக ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம்னு சென்றிருந்தேன். மாட்டுக்குட்டையில் கார் ஒரு கைலியினாலும் இன்னும் சில போர்வைகளினாலும் போர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படியே கண் இமைக்காமல் அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். கொள்ளைப்புறமாக இருந்து வந்த சேகு மாமா என்னை பார்த்துவிட்டார். என்னையும் காரையும் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டார்.

சிரித்தபடியே என்னருகில் வந்தவர் “என்னடா ஊருக்கு கெளம்புறீங்களாம்னு கேள்விப்பட்டேன்” என்றார். நானும் “ஹ்ம் மாமா… நாங்க வேறொரு ஊருக்கு போறோம் அதான் சொல்லிட்டுபோகலாம்னு வந்தேன்” என்றேன். “சரி பத்திரமாய் போய்ச் சேருங்க… மாமாவை மறந்திடாத என… பெரியவனானா அடிக்கடி வந்து பார்த்திட்டுப் போடா சரியா” என அவர் கூறும்போதே என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.

அந்த பூஞ்சோலை கிராமமும், சேகு மாமாவும், அங்கு சுற்றியிருக்கும் காடு கரைகளும் என் உயிரின் பாதியாக அப்போது இருந்தது. அனைத்தையும் விட்டு தூரம் செல்கையில் எனக்குள் அனைத்தும் துறந்தவனாகவே வெறுமையோடு மாட்டுவண்டியின் வால் பிடியில் சாய்ந்துகொண்டே கொட்டுத்தடியை பிடித்துக்கொண்டு மேடு பள்ளத்தில் வண்டி விழுந்து எழுந்து செல்கையில் ஆடி ஆடி எனது குடும்பத்தோடு பல நினைவுகளை சுமந்தபடி அழுதழுது சென்றுகொண்டிருந்தேன்.

நாங்கள் பூஞ்சோலையிலிருந்து வேறு கிராமத்துக்கு சென்று பல வருடங்களும் ஆனது . பூஞ்சோலை தந்த இன்பத்தின் ஒரு சதவீத அளவிளான இன்பம்கூட அங்கெல்லாம் கிடைக்கவேயில்லை. பஞ்சம் பிழைக்க வந்ததினால் வாழ்ந்தும் பழகிவிட்டோம். சேகு மாமாவை மறுபடியும் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் எனும் ஆசை மட்டும் அடிக்கடி என் உள் மனதில் ஊசலாடிக் கொண்டேதான் இருந்தது.

நான் வாலிபனான பிறகும், பூஞ்சோலை கிராமத்துக்கு போவதற்கான பல முயற்சிகள் கூட இறுதிவரை எனக்கு கைகூடி வரவேயில்லை!.

பின்னர் சில வருடங்களுக்கு பிறகு எனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பொன்றும் அமைந்து வந்தது. அத்தோடு நானும் கெளம்பி வெளிநாடு சென்றுவிட்டேன். பல வருடங்களாய் ஊருக்கு வராமல் வெளிநாடுகளிலே என் வாழ்க்கை தஞ்சமாய் கழிந்திருந்தது.

நீண்ட இடைவெளியில், சுமார் எட்டு வருடங்களுக்கு பின்னர்தான் ஊருக்கு திரும்பி வரும் வாய்ப்பும் எனக்கு பிறந்திருந்தது.

ஊருக்கு வந்து சேர்ந்தேன். வாப்பாவிடம், சேகு மாமவையும் பூஞ்சோலை கிராமத்தையும் பற்றியே தினமும் விசாரித்துகொண்டிருந்தேன். ‘சேகு மாமா இப்போது கோழி பண்ணையொன்று வைத்து சந்தோஷமாக இருப்பதாகவும்’ அவர் கூறினார். நானும் வெகு ஆவலுடன் சேகு மாமாவையும் எனது பிறந்த மண்ணான பூஞ்சோலையையும் காண்பதற்காக ஓர்நாள் சென்றிருந்தேன்.

அவசரகதியில் அபிவிருத்தி அடைந்திருந்தது பூஞ்சோலையான எனது கிராமம்!. ஏறிக்கரை, காடு, வயல்வெளி எல்லாமே பஞ்சாயத்து கட்டிடங்களும், கல் வீடுகளுமாய் காட்சியளித்தது. மணல் பாதைகள் அனைத்தும் தார் பூசிய கருங்கற்கல் வீதிகளாக செப்பனிடப்பட்டிருந்தது. எனது கிராமத்தை பார்த்த எனக்கோ கண்கள் இரண்டும் இருண்டவெளியை நோக்கி செல்வதாக அப்போது தோன்றியது. எனக்கு சிறு வயதில் கிடைத்த அந்த தென்றல் காற்று, மண் வாசனை புள்பூண்டுகளின் பச்சை மணம் எதுவுமே எனக்கு அந்த நொடியில் கிடைக்காமல் போனது. வெறும் இயந்திர வாகனங்களின் எரிபொருளின் வாசனைகளும், பெரும் இறைச்சல்களும் எனது சுவாச துவாரத்திலும் – காதுகளையும் பதம் பார்த்து சென்றுகொண்டிருந்ததுதான் அப்போது சொச்ச மிச்சமாகிப்போனது…

அப்போது நான் சென்றுகொண்டிருந்த பஸ், எங்கள் கிராமத்தின் எல்லையின் மூலையில் டீக்கடை வைத்து வாழ்ந்த பாலா ஐய்யாவின் டீக்கடை ஓரத்திலே நிறுத்தப்பட்டது.

“பூஞ்சோலை பிரயாணிகள் யாராவது இருக்கீங்களாப்பா…? இருந்தா இதுதான் கடைசி ஸ்டாப் இறங்கிடுங்கப்பா” என்றே கூவினார் கண்டக்டர். நானும் அவ்விடத்திலே இறங்கிக்கொண்டேன். பாலா ஐய்யாவின், டீக்கடையை திரும்பி பார்த்தேன். அது பாலா ஐய்யாவின் கொட்டகையாக இருந்த டீக்கடை இருந்த இடம்தான்!. ஆனால் இப்போது பெரியதொரு ரெஸ்ட்டாரண்டாக காட்சி அளித்தது. அங்கு உற்று கவனித்தேன் ஏதோவொரு வேறொரு பெயர்ப்பலகையும் தொங்கியிருந்தது.

மனதுக்குள் பாலா ஐய்யாவின் நினைவுகளோடு, சேகு மாமாவின் வீட்டருகே நடந்து சென்றடைந்துகொண்டேன். சீமெந்து சுவரும், கல் வீடுமாக சேகு மாமாவின் கலி மண் குடிசை இருந்த நிலம் மாறியிருந்ததை அப்போது என்னால் பார்க்கவும் முடிந்தது.

“சேகு மாமா அங்குதான் இருக்கின்றாறா!?” எனும் சந்தேகமும் அப்போது எனக்குள் வந்து சென்றது. வீட்டையே திகைத்து பார்த்துக்கொண்டு நின்றிருந்த என் பின்னாடி ஓர் சைக்கிள் வந்து நின்று பெல்லும் ஒலித்தது. சற்று திடுக்கிட்டே நகர்ந்து சுதாரித்துக்கொண்ட நான் ‘யாரென’ திரும்பி பார்த்தேன். பாதி சொட்டை விழுந்து நரைமுடியோடு, இரண்டு நாள் சேவிங்க் பண்ணி வளித்து முளைத்த நரைத்த தாடியோடும் சேகு மாமாவே சைக்கிளில் நின்றிருந்தார்.

“மாமா சுகமா இருக்கீங்களா?” என கேட்டேன். மேலும் கீழுமாக என்னை உற்று பார்த்துவிட்டு யோசித்துக்கொண்டேயிருந்த சேகு மாமா என்னை அடையாளம் காணவே நெடுநேரமாக தடுமாற்றத்துடனே காணப்பட்டார். ஒருவழியாக அடையாளம் கண்டவர் சைக்கிளை விட்டு இறங்கி “அடடே… நம்ம ஹசனுடைய மகன்லே நீ…? ஆளப் பார்க்கவே அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்திட்டியேடா..!” என்றவாறே சைக்கிளை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறு கையை
என் தோழில் போட்டு அழுத்தி அவரது வீட்டுக்குள் என்னை அழைத்துச்சென்றார்.

எனது குடும்பத்தையும், கதைகளையும் மூச்சுவிடாமல் கேட்டுக்கொண்டேயிருந்தார் சேகு மாமா. நானும் எனது பங்கிற்கு பலதையும் – பழையதையும் அவரிடம் கேட்டு விசாரித்தேன். ‘அவர் மனைவி இறந்துவிட்டதாகவும் அவர் இப்போது வீட்டுக்கு பின்னாடியுள்ள சிறு தோப்பில் நாடுட்டுக்கோழி பண்ணை ஒன்றும் வைத்திருப்பதாகவும’ கூறினார்.

சேகு மாமாவுக்காகவேண்டி நான் கொண்டு வந்திருந்த பொருட்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு, சற்று களைப்பாரும்போதே அவரது பண்ணையை காட்டுவதாக எழுந்து பின் கதவை திறந்தார்.

மெல்லிய வாடைக்காற்று என் முகத்தையும், வியர்த்திருந்த மேனியையும் பதம் பார்த்து வருடிச்சென்றது. சேகு மாமாவின் தோப்பு மட்டுமே அன்றைக்கு போல் இன்றும் வாகை மரங்களும், புங்கான் மரங்களும், தேக்கு மரங்களும் இன்னபிற கணிவகை மரங்களுமாய் அப்படியே, அந்தக்கலத்தில் இருந்தபடி எந்தவிதமான மாற்றமின்றி அதே காட்சியுடனே நின்றிருந்தது. பூஞ்சோலையில் அங்கு மட்டுமே பச்சைப்பசலை என் கண்களுக்கு குளிர்ச்சியை தந்தது.

“எப்படி மாமா ஊரே இவ்வளவு நவீனமாகியும் இந்த இயற்கையை நீங்க மட்டும் பத்திராமாய் பொத்தி பாதுகாத்து வைத்திருக்கீங்க?” என ஆர்வ மிகுதியில் கேட்டுவிட்டேன். அவரும் சிரித்துக்கொண்டே “நான் நட்டுவைத்ததையும், எங்கிட்ட வந்து சேர்ந்ததையும் பாதுகாப்பதில் அன்றைக்கு இழந்த எனது இரு கண்மணிகளான மாடுகளினாலும், மாட்டுவண்டியினாலும் நல்லாவே பாடம் கற்றுவிட்டேன்… அதன் இழப்பினாலே இனியும் எதையும் இழக்ககூடாதுனு விடாப்பிடியாக என்னுடனே அனைத்தையும் வைத்துக்கொண்டேன், என் மனைவியை தவிர…!” என கண்கள் கலங்கியபடி துக்கம் தனது தொண்டையை அடைத்துக்கொள்ள கூறி முடித்தார்.

பேசிக்கொண்டே பண்ணையில் கோழிகள் இட்ட முட்டைகள் சிலவற்றை ஓர் அட்டை பெட்டியில் எடுத்து வைக்க தொடங்கினார் சேகு மாமா. ஏதோதோ தனக்குள் பேசிக்கொண்டு முட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த அவரை பின் தொடர்ந்த எனக்கோ எதர்ச்சயாக ஓர் உருவம் நின்றிருந்ததை அங்கு பார்க்கவும் நேரிட்டது.

அதன் அருகே மெதுவாக சென்றேன். எனக்கே அப்போது ஆச்சரியமும் அதிர்சியுமாக இருந்தது. நான்கு பெரும் கல்லில் உயர்த்தி வைக்கப்பட்டிருந்த டயர்கள் அற்ற சேகு மாமாவின் அதே சிவப்பு அம்பாஷ்ட்டர் காரேதான். இறந்து இத்து இரும்பாகி வர்ணம் கலைந்து ஓட்டை உடசலுடன் அது காணப்பட்டது. கதவின் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தேன் சடாரென மேலே எகிறி பாய்ந்து எனது மூஞ்சுக்கு முன்னே வந்து சிறகடித்து குதித்தது சில வெடக்கோழிகள். பயந்து திடுக்கிட்டே பின்னாடி நின்றிருந்த சேகு மாமாவை அவசரமாக திரும்பி பார்த்தேன். நெளிந்த புன்னகையில் என்னை ஒருமுறை ஏறிட்டு பார்த்துவிட்டு, மீண்டும் அவர் பாட்டுக்கு முட்டைகளை எடுத்து வைக்கத் தொடங்கினார்…

“பூஞ்சோலை எனும் கிராமத்தில் முதல் இயந்திர வாகனத்தை கொண்டுவந்தும், அதனால் பல சுவராசியங்களையும், புதினங்களையும் தந்ததுமல்லாமல் தனது வாழ்க்கையில் பல போராட்டங்களுக்கும் அது வித்தாகிபோன அந்த சிவப்பு அம்பாஷ்ட்டர் காரைக் கூட அவர் இறுதி வரை கை விடவேயில்லை..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *