செல்லெனப்படுவது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,877 
 
 

தினசரி டார்கெட்டை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் கைலிக்கு மாறி, டீ குடிக்கக் கிளம்பியபோது, நண்பர் கிருஷ்ணாவிடமிருந்து போன்! ”கொஞ்சம் உடனே கிளம்பி, ராயபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர முடியுமா?” என்று பதற்றக் குரலில் கேட்டதில், ஏதோ பெரிய பிரச்னை என்று புரிந் தது. சரி, நேரில் பேசிக்கொள்ளலாம் என அவசர மாக பைக்கை எடுத்துக்கொண்டு, ராயபுரம் கிளம்பினேன்.

உள்நாட்டுக் குழப்பமும், வறுமையும் உந்தித் தள்ள, இரண்டு தலைமுறைகளுக்கு முன் நேபாளத்தை விட்டுப் புலம் பெயர்ந்து, சென்னையில் குடியேறியவர் கிருஷ்ணாவின் தந்தை. பிழைக்க வந்த ஊரில் இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகளைப் பெற்ற சாதனையோடு செத்துப்போய்விட்டார். என்றைக்காயினும் நாடு திரும்பி, சொந்த ஊரில் வாழ்ந்தாக வேண்டும் என்ற கனவில், மொத்தக் குடும்பத்தையும் இழுத்துச் சுமப்பது கிருஷ்ணாவின் அம்மாதான். அரும்பாடுபட்டுப் பிள்ளைகளைப் படிக்கவைத்து, ஆளுக்கொரு வேலையும் வாங்கிக்கொடுத்திருக்கிறாள். பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகும், நேபாளம் திரும்பும் கனவில் தானும் விடா மல் இன்னமும் வேலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறாள் அந்த வயோதிகப் பெண்மணி. மொத்தக் குடும்பமுமே உழைப்புக் கும் ஒழுக்கத்துக்கும் பேர் பெற் றது! நால்வரில் ஒருவரின் சம்பளம் வாடகைக்கு, மற்றவரின் சம்பளம் சாப்பாட்டுக்கு, ஒருவரின் சம்ப ளம் நேபாளத்தில் உறவினர்களின் உதவியோடு கட்டிவரும் வீட் டுக்கு, மற்றொருவரின் சம்பளம் பெண்ணின் திருமணச் செலவுக்கு என்று திட்டமிட்ட வாழ்க்கை.

கிட்டத்தட்ட நேபாளத்தில் வீடு கட்டும் பணிகள் முடிவடைந்து, சென்னையை விட்டுக் கிளம்ப நாளும் குறித்திருந்தார் கள். நேபாளத்தில் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த விவசாய இளைஞன் ஒருவனுக்குப் பெண் ணைக் கொடுத்து, மணமகனின் தங்கையையே கிருஷ்ணாவின் அண்ணனுக்குத் திருமணம் செய்துகொள்வது என முடிவாகி இருந்தது. ”நாங்கள் இத்தனை வருஷம் பட்ட கஷ்டத்துக்கு ஒரு முடிவு வந்துவிட்டது. சொந்த நாட் டில், சொந்த கிராமத்தில் அப்பா ஆசைப்பட்டபடியே எங்கள் குல தெய்வத்துக்குப் பூஜை கைங்கர்யங்கள் செய்து வாழப்போகி றோம்” என என்னிடம் அடிக்கடி சொல்வார் கிருஷ்ணா.

ராயபுரம் ஸ்டேஷன் வாசலிலேயே கலங்கிய கண்களோடு நின்றுகொண்டு இருந்தார் கிருஷ்ணா. அவரை நெருங்கி, ”என்ன ஆச்சு கிருஷ்ணா? ஏதாவது ஆக்ஸிடெண்ட்டா?” என்றேன். ‘ஓ’வென அலறியபடி முகத்தில் அறைந்துகொண்டு அழ ஆரம்பித்துவிட்டார். அவரின் அருமைத் தங்கை வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்துகொண்டு, காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துவிட்டாள் என்பதை அறிந்த நான் அதிர்ச்சியில் உறைந்தேன். இதற்கு முன் சில நண்பர்கள், வீட்டுக்குத் தெரியாமல் காதல் கல்யாணம் செய்துகொள்ள, என் உதவியை நாடியிருக்கிறார்கள். நண்பன் ஒரு பெண்ணைக் கூட்டி வரும்போது நாம் எடுக்கின்ற நிலைப்பாடும், நண்பனின் தங்கை ஓடிப்போய்விட்ட பொழுதில் நாம் எடுக்கின்ற நிலைப்பாடும் ஒன்றாக இருக்குமா என்ன?!

தமிழகத்தைவிடப் பல வருடம் பின் தங்கியிருக்கும் நேபாள கலாசாரத்திலிருந்து வந்தவர் களுக்கு, இது நிச்சயம் ஜீரணிக்க இயலாத பேரதிர்ச்சி! ‘ஒரு நாள் இந்த ஊரை விட்டுப் போகப் போகிறவர்கள் நாம்! எல்லாரி டமும் அளவாக வைத்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லிச் சொல்லி வளர்த்த பிள்ளைகளுள் ஒன்று, ஊர் திரும்பும் வேளையில் பிரிந்துபோய்விட்ட அதிர்ச்சியில், கிருஷ்ணாவின் அம்மாவுக்கு மாரடைப்பு வந்துவிட்டதாம். அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அருகிலிருந்து பார்த்துக்கொள்வதற்குக்கூட ஆளில்லாமல் தவித்துக்கொண்டு இருந்தார் மூத்த மகன் என்பதைக் கிருஷ்ணாவின் மூலம் அறிந்து கொண்டேன். ‘சே… என்ன பெண் இவள்? யார் குறித்தும் கவலை இல்லாமல் இப்படியரு கல்யாணம் செய்துகொண்டாளே!’ என மனதுக்குள் கறுவியபடியே, காவல் நிலையத்துக்குள் புகுந்தேன்.

உள்ளே, கிருஷ்ணாவின் பக்கத்து வீட்டுப் பெரியவர் அந்தப் பெண்ணிடம் தாயின் நிலை பற்றி எடுத்துச் சொல்லி, வீடு திரும்பும்படி கெஞ்சிக் கொண்டு இருந்தார். ”எனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. வாழ்ந்தா இவரோடுதான். இல்லேன்னா இங்கேயே செத்துடுவேன்!” என வசனம் பேசிக்கொண்டு இருந்தாள் அவள். இதுமாதிரியான காட்சிகளைத் தினசரி பார்த்துப் பழகிப்போன கான்ஸ்டபிள் ஒருவர், ”என்ன சொன்னாலும் இப்ப மண்டையில ஏறாது! சனியனைத் தலைமுழுகிட்டுக் கௌம்புங்கய்யா! சவம் சோத்துக்கு அலையும்போது தெரியும்!” எனப் பெருசை விரட்டிக்கொண்டு இருந்தார். அவரிடம் என் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு, அவளை நெருங்கினேன். என்னைக் கண்டதும் திரும்பிக் கொண்டாள். அந்த இளைஞனைக் கவனித்தேன். இந்தக் கிளிக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தம் இல்லாத பூனையாக, அதுவும் கடுவன் பூனையாகக் காட்சியளித் தான்(ர்). குறைந்தது 35 வயது இருக்கலாம். அவள் வேலை செய்யும் ஜவுளிக் கடையில்தான் இவனும் வேலை பார்க்கிறானாம். சேலை மடிப்பது தவிர, வேறு சோலி பார்க்கத் தெரியாத பனாந்தரி என்பது அவன் முகத் திலேயே தெரிந்தது.

அவளோடு பேசினால், அவ மானத்தைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது என்பது புரிந்தது. இன்ஸ்பெக்டரிடம் பேசி, அவனது முகவரியைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். அவன் குடியிருக்கும் ஏரியாவில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு பத்திரிகை நண்பருக்கு போன் செய்து விசாரித்தேன். ”அவனா! ஏற்கெ னவே கல்யாணம் ஆகி, ஒரே வாரத்துல அந்தப் பொண்ணு இவன்கூட இருக்க முடியாதுன்னு ஓடியே போயிடுச்சே!” என்று அடுத்த அதிர்ச்சியைத் தந்தார்.

நொந்துபோயிருக்கும் கிருஷ்ணாவுக்கு இன்னுமொரு பேரதிர்ச்சியைக் கொடுக்க வேண் டாம் என முடிவு செய்து, டீ வாங்கிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினேன். வழியெங்கும் தேறு தல் வார்த்தைகளைக் கூறிய படியே, அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனை வராந்தாவில், கிருஷ்ணாவின் அண்ணன் கதறி அழுதுகொண்டு இருந்தான். நேபாள மண்ணில் விடுவதற்காகப் பிடித்து வைத்திருந்த தன் உயிரை அந்தத் தாய் இங்கேயே விட்டிருந் தாள். இரண்டு இளைஞர்களும் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க, கடவுள் குறித்த எனது நம்பிக்கைகள் நொறுங்க ஆரம்பித்தன.

கிருஷ்ணாவின் அலுவலகத் தைத் தொடர்புகொண்டு விவரம் சொல்லி, மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டிய தொகை யைச் செலுத்தி, அம்மாவின் உடலை வீட்டுக்கு எடுத்து வருவ தற்குள், இரண்டு இளைஞர்களும் நான்கைந்து முறை மயக்கம் அடைந்தனர். தங்கைக்குத் தகவல் கொடுக்கலாமா என்று கேட்ட தற்குப் பிடிவாதமாக மறுத்துவிட் டனர். உறவுக்காரர்களுக்குத் தந்தி கொடுக்க முகவரிகளை வாங்கிக்கொண்டு தந்தி அலுவல கம் செல்ல யத்தனிக்கையில், என் செல்போன் அழைத்தது. எடுத்துக் காதில் வைத்தேன்.

”நான் கிருஷ்ணாவோட தங்கச்சி பேசறேன். என் செல் போன் வீட்டுல இருக்குது. அது நான் என் சம்பளத்துல வாங்கி னது. அதை நீங்களே பொது ஆளா எடுத்து, என்கிட்ட கொடுத்துடுங்க!”

– 27th பெப்ரவரி 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *