(வெப் சீரிஸ்-க்காக கொடுக்கப்பட்ட செல்லக்கிளி கதையின் கதைச்சுருக்கம்)
எம்கே குரூப் சேர்மன் முத்துகிருஷ்ணன் . இவருடைய பிசினஸ் சாம்ராஜ்யத்தைப் பார்த்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரது ஒரே மகன் ராஜீவ் , மருமகள் சாந்தா இருவருமே பொறுப்பில்லாமல் இருந்தனர். பிசினஸ் -ல் முத்துகிருஷ்ணன்னுக்கு உறுதுணையாக இல்லை. இவர்களின் இயல்புக்கு மாறாக இவர்கள் பெற்றெடுத்த ஒரே மகள் செல்லம்மா – டீன் ஏஜ் பருவத்திலேயே கருத்தாக இருந்தாள். பெற்றோரின் பொறுப்பற்ற செயல்களை எப்போதும் கண்டிப்பாள். இதனால் அவளுடைய பெற்றோர் அவள் கண்ணில் படாமல் ஓடி ஒளிவார்கள். அவள், வீட்டில் தாத்தாவின் ஆபீஸ் பணிகளுக்கு உதவி செய்தாள். தாத்தா அழைக்கும் போது அலுவலகத்திற்கும் சென்று , முக்கியமான மெயில்களை எழுத , அனுப்பி வைக்க உதவினாள். பிசினஸ் ட்ரெண்ட்ஸ் பற்றி இன்டர்நெட், சோஷியல் மீடியாவில் வரும் விஷயங்களை தாத்தாவுக்கு தெரியப்படுத்தினாள். தாத்தாவை டெக் சேவியாக ஆக்கினாள்.

ஒரு முறை வழக்கம் போல் பாரட்டிக்குச் சென்ற செல்லம்மாவின் பெற்றோர் – ராஜீவ் , சாந்தா , வீடு திரும்பும் போது , இயற்கை உபாதைக்காக சென்ற ஓட்டுநர் வரும் வரை காத்திருக்காமல் , காரில் சாவி இருந்த காரணத்தால் , சாந்தா , தானே வண்டியை ஓட்டினாள். ஓடி வந்த ஓட்டுநரைத் திட்டி விட்டு வண்டியை வேகமாக ஓட்ட ஆரம்பித்தாள். கணவர் நிறுத்து அவரே வரட்டும் என்று கூறியதை அவள் கேட்கவில்லை. அன்றிரவு அவர்கள் உலகை விட்டு விடை பெற்றார்கள். ஏற்கனவே மனைவியை இழந்து வருந்திய முத்துகிருஷ்ணன் , மகனுக்கும் மருமகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளை கனத்த இதயத்துடன் செய்து முடித்தார். பாட்சா படத்தில் ரஜினி உடன் வரும் ஜனகராஜ் போல் முத்துகிருஷ்ணன் உடன் எப்போதும் இருப்பவர் – முத்துக்குமரன். இவருக்கு சிறு வயதிலிருந்து நண்பர். நடுத்தர குடும்பத்திலிருந்து வந்த முத்துக்குமரன், கோடீஸ்வர நண்பரை வைத்து பணம் , சொத்து சேர்க்கும் வேலைகளில் ஈடுபடவில்லை. அலுவலகத்தில் அவருக்கு எந்த பதவியும் இல்லை. முத்துகிருஷ்ணன் சொல்லும் பணிகளை செய்வார். அவருக்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை. அதனால், வீட்டிலும் அலுவலகத்திலும் நண்பர் உடனேயே இருந்து வந்தார். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். பேசினாலும் நண்பர் இட்ட வேலைக்காக தான் பேசுவார். அவரிடம் நெருங்கிப் பழகி பயன் பெறலாம் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. வீட்டிலும் அலுவலகத்திலும் எதிலும் அவர் மூக்கை நுழைக்க மாட்டார்.
பெரும்பாலும் நண்பரின் வீட்டில்தான் இருப்பார். அவரது வீடு பூட்டி தான் இருக்கும். அலுவலகத்தில் அவரை எம்கே 2 என்று குறிப்பிடுவார்கள் .
எம்கே குரூப்பின் அனைத்து நிறுவனங்களுக்கும் பொது மேலாளர் – நடுத்தர வயது கொண்ட ரவி கிருஷ்ணா . முதலாளியின் நன்மதிப்பைப் பெற்றவர். முழு நம்பிக்கைக்குரியவர். இவரை ஆர். கே . என்று குறிப்பிடுவது வழக்கம்.
செல்லம்மா , தன்னுடைய பெற்றோரின் ஓர் ஆண்டு சடங்குகள் முடிவு அடைந்தவுடன் , மேல்படிப்புக்கு வெளிநாடு சென்றாள். வெளிநாடு புறப்படுவதற்கு முன்பாக . தாத்தாவின் உடல்நிலை , பணிகளைப் பார்க்க முடியாத நிலைக்கு குன்றினால் , பிசினெஸ் விவகாரங்களை ஆர்.கே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவரைத் தனிப்பட்ட முறையில் முத்துக்குமரன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமாக ஆவணத்தை அளித்துச் சென்றாள். தாத்தாவின் உடல்நிலை முடியாமல் போனால் ஆர்.கே வுக்கு பிசினஸ் சம்பந்தமாக கையொப்ப அதிகாரத்தையும் அளித்தாள்.
ஆனாலும் , உடல் தளராத , மனம் தளராத முத்துகிருஷ்ணன் , தமது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
செல்லம்மாவின் தோற்றம் , உருவ அமைப்பு கொண்டவள் பாரதி நகர் செல்லக்கிளி . செல்லக்கிளியின் பெற்றோர் – ராஜசேகரன் – கவிதா . செல்லக்கிளிக்கு அக்கா தனலட்சுமி . ஐந்து வயது பெரியவள். செல்லக்கிளியின் தாய்மாமா – சுந்தரம் . சுந்தரத்திற்கு முறையான வருமானமும் வேலையும் இல்லாத காரணத்தால் , எப்போதும் சண்டை போட்டு வந்த இவரது மனைவி தங்கம் , இவரை விட்டுப் பிரிந்து மகள் சாந்தியையும் அழைத்துக் கொண்டு வேறு இடத்தில் வசித்து வந்தாள்.
செல்லக்கிளி , ப்ளஸ் டூ படித்து வந்த போது , இவளுடைய தந்தை ராஜசேகரன் – பேக்ட்டரியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இறந்து விடுகிறார். தந்தையின் உடல் , வீடு வருவதற்குள் அதிர்ச்சியில் இவளுடைய தாய் கவிதாவும் இறந்து விடுகிறாள். செல்லக்கிளி , கலங்காமல் , மாமாவின் உதவியுடன் ஆக வேண்டிய காரியங்களைச் செய்கிறாள். படிப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு , மாமாவுடன் கம்பெனிக்கு நடைநடையாய் நடந்து போராடி இழப்பீடு பெற்று , அந்த தொகையில் பெரும் பகுதியை வங்கியில் டெபாசிட் செய்து விட்டு மீதம் உள்ள தொகையை கொண்டு சிறு வியாபாரிகளுக்கு தண்டல் கடன் கொடுக்கிறாள். இப்படியாக , அந்த பகுதியில் பிரபலம் பெற்ற செல்லக்கிளி , அங்கு நடக்கும் அடாவடிகளை தட்டிக் கேட்கும் சமூக சேவகியாகவும் உருவெடுக்கிறாள்.
வட்டி பிசினஸ் -ல் செலவுகள் போக சேமித்து வைத்த பணம் மூலமாக மாமாவின் கடன்களை அடைக்கிறாள். அக்கா தனத்திற்காக அப்பா அம்மா வாங்கி வைத்த நகைகளுடன் மேலும் சில நகைகள் வாங்கி , ஏற்கனவே தனத்திற்கு பேசி வைத்த மாப்பிள்ளை குடும்பத்தாருடன் தானே பெரிய மனுஷி போல் பேசி தனத்தின் திருமணத்தை நடத்தி வைக்கிறாள். மாமி தங்கத்திடம் மாமாவுடன் சேர்ந்து வாழும்படி மன்றாடுகிறாள். மாமி உடன்படாமல் தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பி விடுகிறாள். சாந்தி மட்டும் இவள் மீது பாசம் காட்டுகிறாள். அவளாலும் அம்மாவின் மனதை மாற்ற முடியவில்லை என்பதை செல்லக்கிளி புரிந்து கொள்கிறாள்.
பாரதி நகர் பக்கம் வந்த ஒரு சில சமயங்களில் , கடை வீதிகளில் , அச்சு அசலாக , செல்லம்மா போலவே இருக்கும் செல்லக்கிளியைப் பார்த்து வியப்படைந்தார் ஆர்.கே.
மிஞ்சியிருந்த ஒரே உறவான பேத்தியையும் பிரிந்த காரணத்தால் , முத்துகிருஷ்ணனின் உடலிலும் உள்ளத்திலும் நலிவு ஏற்பட , அவர் அலுவலகம் வருவதும் அன்றாட பிசினஸ் செயல்பாடுகளைக் கவனிப்பதும் குறையத் தொடங்கியது. முத்துக்குமரன் , வீட்டில் உள்ள பணியாளர்களின் துணையுடன் நண்பரைப் பார்த்து வந்தார்.
முத்துகிருஷ்ணனின் குடும்ப மருத்துவர் அடிக்கடி கவனித்து வந்தார். முக்கிய உடல் பரிசோதனைக்கு அவரை முத்துக்குமரன் , மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தார்.
வீட்டுக்கு வேண்டியதை செய்து வந்த மேலாளர் இளைஞன் , வேறு வேலைக்குப் போய் விட்டதால் , வேறொருவர் நியமனம் செய்வது குறித்து முத்துக்குமரனிடம் பேசவும் முதலாளியைப் பார்க்கவும் ஆர்.கே வந்த போது , முத்துக்குமரன் , பாஸ் , பேத்தியின் நினைவாகவே இருப்பதாகவும் செல்லம்மாவைப் பாரத்தால் அவருக்கு நோய்நொடி எல்லாம் பறந்து விடும் என்று கூறுகிறார். ஆர்.கே . , மகிழ்ச்சி , கவலை இரண்டையும் ஏற்படுத்தும் தகவலை முத்துக்குமரனிடம் கூறினார் . அமெரிக்காவில் உள்ள செல்லம்மாவுக்கு பிரைன் சிப் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஒரு நான்கு மாதங்களுக்கு போனில் கூட அழைக்க வேண்டாம் என்று செல்லம்மா மெயில் அனுப்பி உள்ளதாக அவர் சொன்ன தகவல் தான் அது.
ஆர்.கே , முதலாளியின் உடல்நலன் மேம்பட மட்டும் அல்லாமல் எம்கே குரூப் , சுமூகமாக நடப்பதற்கும் செல்லம்மா , பங்குதார ர்கள் இடையே தோன்ற வேண்டிய அவசியம் உள்ளதாக முத்துக்குமரனிடம் கூறினார்.
ஆர்.கே வும் முத்துக்குமரனும் ஆலோசனை செய்து பாரதி நகர் செல்லக்கிளியின் உதவியைக் கோருவது என்று முடிவு செய்கின்றனர். செல்லக்கிளியின் மாமா சுந்தரத்தின் மனத்தைக் கரைத்து அவரிடம் செல்லக்கிளியிடம் எடுத்துச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறார்கள். செல்லக்கிளி மறுக்கிறாள். அதன் பிறகு , செல்லக்கிளியின் பைனானஸ் பிசினஸ் -ல் உதவியாளனாக சமீபத்தில் சேரந்து கொண்ட சுபாஷ் என்னும் இளைஞன் மூலம் பேசி அவளை சம்மதிக்க வைக்கிறாள். ஆர்.கே யின் பிஏ ஆக உள்ள ஜெயச்சந்திரன் என்னும் இளைஞன் , செல்லக்கிளிக்கு செல்லம்மாவின் நடை
உடை பாவனை , தோரணை எல்லாம் கற்றுக் கொடுக்க அமர்த்தப்படுகிறான். ( இவன் , எம்.கே குரூப்பை எப்படி யாவது கைப்பற்றத் துடிக்கும் விஜயகுமார் என்பவனின் ( ராஜீவ் – ன் தோழன் ) ஸ்லீப்பர் செல். )
ஆடவர்கள் யரையும் ஏறெடுத்துப் பார்க்காத செல்லக்கிளிக்கு ஜெயச்சந்திரனைப் பார்த்த தும் கண்டதும் காதல் ஏற்படுகிறது.
செல்லக்கிளி , செல்லம்மா ஆக முத்துகிருஷ்ணன் முன்பு நிறுத்தப்படுகிறாள். அவரது உடல்நலனில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்படுகிறது.
முத்துகிருஷ்ணன் , செல்லக்கிளி உடன் பங்குதார ர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
ஜேசி என்கிற ஜெயச்சந்திரன் , ஆள் மாறாட்டம் நடந்துள்ளது பற்றி விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கிறான். அவன் முத்துகிருஷ்ணனையும் ஒரிஜனல் செல்லம்மாவையும் எப்படியாவது முடித்து விட்டு பங்குதார ர்களை சரிக்கட்டி இந்த பிசினஸ் சாம்ராஜ்யத்தைப் பிடிக்க திட்டம் தீட்டுகிறான்.
தாத்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவிலிருந்து செல்லம்மா , சென்னை வருகிறாள் என்ற செய்தி விஜயகுமாருக்கு கிடைக்கிறது.
சென்னை விமான நிலையத்திற்கு வெளியே. சிறப்பாக செயல்பட்டதற்காக , தில்லி சென்று விருது வாங்கி வந்த பாரதி நகர் கவுன்சிலர் அல்லி மேடத்தை வரவேற்க செல்லக்கிளி ஒரு புறம் காத்திருக்க , செல்லம்மா விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறாள்.
வில்லனின் ஆட்கள் , செல்லக்கிளியைத் தாக்க முற்படும்போது , செல்லம்மா , அவளை இழுத்து காப்பாற்றுகிறாள். கூட்டம் கூடி விட தாக்க வந்தவன் ஓடி விடுகிறான்.
தன்னைப் போலவே இருக்கும் செல்லக்கிளியைப் பார்த்து செல்லம்மாவின் வியப்படைகிறாள். செல்லக்கிளி , அவளைப் போல் ஆள் மாறாட்டம் செய்த காரணத்தால் தலை குனிந்து நிற்க அருகில் இருந்த சுபாஷ் , நடந்தவற்றை விவரிக்கிறான்.
சுபாஷ் , தாக்குதல் விஷயத்தை ஜெயச்சந்திரன் , மொபைல் போனில் பேசியதைக் கேட்டு தான் இங்கே விரைந்து வந்தேன் என்று சொன்னான். அவனை மறந்து விடு அக்கா என்றும் கூறினான்.
செல்லம்மா புன்னகை பூத்து செல்லக்கிளி நீங்க நல்லதுதான் பண்ணி இருக்கீங்க ஏன் தலை குனியறீங்க வாங்க வீட்டுக்குப் போகலாம் என்றாள்.
செல்லக்கிளி , அல்லி மேடத்தை வரவேற்று விட்டு வருவதாக கூறினாள். சுபாஷ் , டாக்சி அழைத்து வந்தான்.
செல்லம்மா , செல்லக்கிளி , அல்லியைப் பார்த்து விட்டு வரும் வரை காத்திருந்தள்.
வீட்டிற்கு இருவரும் சேர்ந்து சென்று தாத்தாவைப் பார்த்தனர். முத்துகிருஷ்ணனின் விழிகள் வியப்பில் விரிந்தன .