செயற்கையாகும் இயற்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 12,823 
 

“விஜய் ப்ளீஸ்….ப்ளீஸ்…..என் செல்லமில்ல, பட்டுல்ல, தங்கமில்ல…..”

இன்னைக்கு ஒரு நாள் தான்….. ப்ளீஸ்….. என்று கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருந்த மதுவிடம்…….இல்லை…..இல்லை…..இல்லை……. என்று வேகமாக தலையாட்டி மறுத்துக் கொண்டிருந்தான் அவளின் கணவன் விஜய்.

அம்மா…..நானும்….நானும்…..செல்லம்….பட்டு…..தங்கம்…..

‘ஆமாம்….ஆமாம்….நீயும் செல்லம், பட்டு, தங்கம் தான் வினய்க்குட்டி ஆனா சோபாவில் சறுக்காம உட்காரு, விஜய், காலையிலிருந்து எல்லா வேலையும் செஞ்ச தானே இன்னும் அந்த மேஜையை மட்டும் சுத்தம் பண்ணிட்டு வாக்கும் போட்டுவிடு……’ ஷாலினி வர நேரமாயிடுச்சி, இப்ப தான் இந்த வீட்டுக்கு முதல்முறை வராங்க அதுவும் குடும்பத்தோட. உன்னோடு வேலை செய்யறவர் தானே அவள் கணவன் ராஜ், என்னோட தோழி கூட இல்லை, நான் ஒன்றிரண்டு முறை பார்ட்டி யில் சந்தித்ததோடு சரி.

அதுக்கு!, “ஒரு அளவில்லையா இதெல்லாம் ரொம்ப அதிகம் மது, வீடு சுத்தமா தானே இருக்கு அப்புறமென்ன இதை துடை அதை துடைன்னு…. அதிகமா துடைச்சி லெதர் சோபாவே வெளுத்துப் போச்சு, மேஜையை பாரு இப்ப தான் இழைச்ச மாதிரி இருக்கு.”

நீங்க அதிகமா துடைச்சதால அது வெளுத்துப் போகலை விஜய், ‘உன் பையன் சாப்பிட்டு கையை துடைக்கிறது, பெயிண்டை துடைக்கிறது, கோந்து ஓட்டறது எல்லாம் அதுல தான் பத்தாததுக்கு சோபா தான் அவனுக்கு சறுக்குமரம். அப்பறம், மேஜை இழைச்சி வைத்த மாதிரி இருக்கா, அந்த புகழும் உன் பையனுக்குத்தான் பென்சில் மட்டுமே ஒரே ஆயுதமாக்கி வார்னிஷ் எல்லாம் சுரண்டி நச்சுத்தன்மை இல்லாத இயற்கை மேஜையாக்கிட்டான், ஐயாயிர ரூபாய் மேஜை இப்ப ஐம்பதாயிரமாயிடுச்சி.’ எப்படி டா இப்படி பண்ணினேன்னு கேட்டா சாப்பாட்டு மேஜையில் செயல் முறை விளக்கம் கொடுக்கறான்.

ஹாஹா…..பாரு நல்லது தான் செஞ்சிருக்கான், இந்த வயசிலேயே ஆண்டிக் எல்லாம் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிடுச்சு அவனுக்கு. அட, இப்ப எதுக்கு அவனை முறைக்கிற ‘பிள்ளைங்கன்னா அப்படித்தான் இருக்கும். எல்லா பொருளும் கை படாம வச்ச இடத்திலேயே பத்திரமா இருக்க, இது என்ன மியூசியமா.’

ம்ம்ம்….உன் பையனை புகழ்ந்தது போதும், நேரமாகுது போய் கிளம்புங்க அவங்க வந்திட போறாங்க.

ஆமாம் நானும் ரெண்டு நாளாய் தேடறேன், எங்க புதுசா வாங்கிட்டு வந்த டிசைனர் ஜீன்ஸ் ?

அலமாரியில் தான் இருக்கு…..

இல்லை அது வேற பிராண்ட், நாம வாங்கிட்டு வந்த பிராண்ட் இல்லை….

நான் தான் அதை கொடுத்திட்டு இதை வாங்கிட்டு வந்தேன்…

என்ன…. ஏன்? அது நல்லா தானே இருந்தது….

ஏன் இது மட்டுமென்ன நல்லா தானே இருக்கு…. அது அவன் ஜீனில் கட் பண்ணி டிசைன் செய்து வித்தான் பதினைந்தாயிரம் ரூபாய், இது நல்ல ஜீன் னா நானே வாங்கி கட் பண்ணி டிசைன் செய்தேன் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் தான்.

ஆ……..அடிப்பாவி….எங்க வாங்கின?

அது எதுக்கு உனக்கு……………ஜீன்ஸ் நல்லா இருக்கு தானே … அப்பறமென்ன….

அப்பா….. அப்பா….. நான் சொல்றேன் எனக்கு தெரியும்…..அம்மா வந்து……

“போதும் வினய்….….கையெல்லாம் அழுக்கா இருக்கு பாரு போய் கழுவிட்டு வா, ஆன்ட்டி வந்திடுவாங்க. நீ ஏன் விஜய் என்னையே பார்த்திட்டு இருக்க… போய் கிளம்பு…. ஆ…. அதுக்குள்ள வந்திட்டாங்க……காலிங் பெல் சத்தம் கேட்குது, நீ ஜீனை மாட்டிட்டு வா….” என்று வினய்யையும் விஜய்யையும் திசை திருப்பி விட்டு அவர்களை வரவேற்க அவசரமாக விரைந்தேன்.

“ஹாய்….வாங்க ஷாலினி வாங்க ராஜ்……எப்படி இருக்கீங்க….உள்ள வாங்க…உங்க பையனா…ஹாய்…உங்க பேர் என்ன?” என்னை பார்த்துவிட்டு திரும்பவும் ஐபாடை குனிந்து பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான், நான் விரிந்திருந்த உதடுகளை ஒரு நுண்ணளவு கூட குறைக்காமல் பார்வையை மட்டும் ஷாலினியிடம் திருப்பினேன்……

ஹாய் மது…அவன் பேர் சுதிர்… ரொம்ப அமைதி அவன்… நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க? …. “உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு….ஆனா சிங்கள் டோர் நுழைவாயில் இல்லையா எங்க வீட்டில் டபுள் டோர், அப்பக்கூட புதுசா வாங்கின நூத்திபத்து இன்ச் டிவி யை வீட்டுக்குள்ளே எடுத்திட்டு வர முடியலை…” என்று அடுக்கடுக்கா கேள்விக்கு சம்பந்தமில்லா பதில்களும் அவளிடமிருந்து வந்து குவிந்துக் கொண்டிருந்தது.

இப்பவும் அதே புன்னகையோடு, “அப்படியா……உட்காருங்க….அப்புறம் எப்படி எடுத்திட்டு வந்தீங்க?” என்ற அவள் எதிர்ப்பார்த்த கேள்வியை அவளை ஏமாற்றாமல் தொடுத்துவிட்டு சந்தோஷத்தில் விரியும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே பதில்களுக்காக எதிர் சோபாவில் அமர்ந்து காத்திருந்தேன்.

“அதுவா எங்க புது ஸ்பா பொருத்திணப்ப செய்த மாதிரி வீட்டுக்கு பின் வாசல் கண்ணாடி கதவை கழட்டி வச்சி தான் எடுத்திட்டு வந்தோம்” என்றாள் ஷாலினி வாகாக சோபாவில் சாய்ந்தபடி…..

ஓ…..இருங்க குடிக்க ஏதாவது எடுத்திட்டு வரேன்…..

“வினய் அமைதியா உட்காரு…” என்று சோபாவை ஏணியாக்கி ஏறிக்கொண்டிருந்த வினய்யை கண்டித்தபடி நான் எழுவதற்குள் விஜய்யே ஜுஸ்வோட வந்து விட்டார்கள் அவர்களை வரவேற்றபடி.

“ஸ்பா ஏற்கனவே வீட்டோட இருந்ததுதானே? அப்பறமென்ன தனியா வேற பொருத்தினீங்களா?” என்ற கேள்வியோடு விஜய்யும் சோபாவில் வந்து அமர்ந்தான்.

“ஏற்கனவே இருந்தது பழைய மாடல் அதனால அதை எடுத்திட்டு இப்ப டிசைனர் ஸ்பா பொருத்தினோம், இல்லையா ராஜ்” என்று ராஜின் தலையாட்டலை சாட்சியாக்கினாள் ஷாலினி.

டிசைனர் ஸ்பா வா அது என்ன? என்று கேள்வியை வாய் வழியாக கொண்டு வரும் முயற்சியில் இருந்த விஜய்யை, கண்ணசைவில் தடுத்துவிட்டு ஷாலினியிடம் திரும்பி “ஜூஸ் எடுத்துக்கோங்க” என்றேன்.

ஜூஸ் ரொம்ப நல்லா இருக்கு மது, ரொம்ப பிரெஷா இருக்கு, ஆர்கானிக்கா? எப்படி செய்தீங்க?

ஆன்ட்டி….ஆன்ட்டி…..எனக்கு தெரியும்.

“வினய் சும்மா இரு…” என்று நான் அடக்கியும் அவன்…

“அது ஆன்ட்டி அம்மா…ம்ம்ம்ம் விடும்மா…வாயிலிருந்து கையை எடும்மா……” என்று என் செயல் முயற்சியையும் புறந்தள்ளிவிட்டு, என் பார்வையும் தவிர்த்தபடி வேக வேகமாக….. “அம்மா…ஜூஸ் பாக்சை கட் பண்ணி க்ளாஸ் ல ஊத்தி லெமன் ஜூஸ் போட்டு பிரிஜ்ஜில வச்சிட்டாங்க,” என்றான்.

எனக்கு ஷாலினியின் முகத்தை பார்க்கவே முடியவில்லை…இவனை வச்சிட்டு ஒரு வேலையும் செய்யக் கூடாது என்று மனதினுள் நொந்துக் கொண்டிருந்தேன்.

ஷாலினியின் பார்வை என்னிடமே இருந்தது ஆனால் என் பார்வை அவளை தவிர எல்லாவற்றையும் மும்முரமாக ஆராய்ந்தபடி இருந்தது, சோபாவில் குட்டி கரணம் அடிக்க முயற்சி செய்யும் வினய், அவனுக்கு பக்கத்தில் ஐபாடில் தொலைந்து போன சுதிர், வாய்க்குள் சிரிப்பை மென்று கொண்டிருக்கும் விஜய், ஷாலினி எதுவும் பேசாதபோதும் கை கட்டியபடி இலக்கில்லாமல் தோராயமாக எங்கோ பார்த்தபடி தலையாட்டிக் கொண்டிருக்கும் ராஜ்…. சிறிது நேரத்தில், சூழ்நிலையை மெல்லிய கனைப்போடு ஷாலினியே சரி செய்தாள்..

ம்க்கும்….இந்த சோபா மேஜை கூட நல்லா இருக்கு மது, டிசைனரா? நச்சுத்தன்மை இல்லாத, ஆர்கானிக் தானே?

என் கண்கள் உடனே ஷாலினியை சந்தித்து ஸ்தம்பித்தது, அதிர்ச்சியில் திறந்த வாயோடு இப்பொழுது ஷாலினியை விட்டு என் பார்வை அகலவே இல்லை… விஜய்யும் கூட……

நாங்க கூட இப்படி தான் வாங்கி இருக்கோம் இல்ல ராஜ்? நீங்க எங்க வாங்குனீங்க மது?

ஆ……நா….ஹ்ம்ம்…நாங்க….

“ஆன்ட்டி….ஆன்ட்டி…..எனக்கு தெரியும் நான் சொல்லறேன்….இதை நான் தான் டிசைன்….” என்று வினய் ஆரம்பித்தவுடன் அவன் வாயை மூட நானும் விஜய்யும் ராக்கெட் வேகத்தில் பாய்ந்துக் கொண்டிருந்தோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *