செட்டியப்ப தாத்தாவும், பாரிஜாதப் பூ பறித்த ஏழு கடல்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 7,629 
 
 

55ல, சிலோனியா தோட்டத்துக்கு போயிருந்தப்பதான், செட்டியப்ப தாத்தாவ நான் முதல் முறை பார்த்தது. எங்க குடும்பம், ஏற்கனவே இருந்த சப்போக் தோட்டத்த விட்டு சிலோனியாவுக்கு மாறி வர்றதுக்கு செட்டியப்ப தாத்தா குடும்பம் செய்த உதவியிலதான்னு அம்மா ஒரு தடவை சொல்லியிருந்தாங்க. எங்க லட்சுமி அத்தையை அவங்க வீட்டுல கொடுத்திருக்கிற வகையில, செட்டியப்ப தாத்தா குடும்பம் நெருங்கின சொந்தம்னு அம்மா சொல்லிதான் எனக்கு தெரியும்.

ஏழுநாள் நடக்குற அம்மன் கோயில் திருவிழாவுல, ஒவ்வொரு ராத்திரியும், செட்டியப்ப தாத்தா கத சொல்வாரு. கோயிலுக்கெல்லாம் போயி தாத்தா கத சொல்ர பழக்கம் இல்ல. அவர் வீட்டு அஞ்சடியில வச்சிதான் சொல்வாரு. வெறும் 16 வீடுங்கதான் தோட்டத்துல. ரொம்பத் தள்ளி தோட்டத்து கிராணியார் பங்களா. ரெண்டு லயம் எதிரும் புதிருமா; நெருக்கமா இருக்கும். வேல விட்டு வந்து, தோட்டத்து ஜனங்க, கோயில் திருவிழா ஏற்பாடுங்களை செய்யும் போது, செட்டியப்ப தாத்தாவும், தலயில தலப்பா கட்டிக்கிட்டு கூட மாட இருந்து வேல பாப்பாரு.

செட்டியப்ப தாத்தா, மரம் சீவும் போது கூட தலப்பாவோடதான் சீவுவாரு. தொர, கிராணி, தண்டால்கள்னு யாரு தீம்பாரு பக்கம் வந்தாலும் , செட்டியப்ப தாத்தா, தலயில இருக்குற தலப்பாவைக் கழட்ட மாட்டாருன்னும், தாத்தா எப்பவும் ரொம்ப தைரியசாலின்னும் அம்மா சொல்வாங்க. செட்டியப்ப தாத்தாவை அம்மா, “நைனா” ன்னு தான் கூப்டுவாங்க. அப்பா எப்பவும் தாத்தாவ மாமான்னு கூப்டுவாரு. தாத்தா நல்ல நெறமா இருப்பாரு. உயரமாயும் கொஞ்சம் தாட்டியமாவும் இருப்பாரு. தாத்தா அவுங்க வீட்டு அஞ்சடியில உக்காரப்போட்டிருக்கிற ரோத்தான் நாற்காலியில இருந்தபடி தான் கத சொல்வாரு. கத சொல்லறதுக்கு முன்னாடி, வெத்தலய செவக்கச் செவக்கப் போட்டு துப்பிட்டு, வாயக்கொப்புளித்து அப்புறம் தாம் கத சொல்ல ஆரம்பிப்பாரு. அதுக்குள்ள, அஞ்சடி நிறைய பொம்பளங்க கூடியிருப்பாங்க.

தாத்தா, இன்னக்கி என்ன, கதய சொல்லப் போறார்னு யாருக்கும் தெரியாது. “ஏம்மா மாரி, நேத்து மேய்சலுக்குப் போன செவலையாத்தா, மேய்ச்ச காட்டுலய கன்னு போட்டுறச்சாமே; கெடேறியாமே, நல்லதாப் போச்சிபோ!” கத கேக்க வந்து கூடியிருக்கிறவுங்க வீட்டு சமாச்சாரங்களயெல்லாம் அப்பப்ப விசாரிச்சு தெரிஞ்சிக்கிடுவாரு. செட்டியப்ப தாத்தா வீட்டு செங்கம்மா பாட்டி, கத கேக்குறதுக்கு வாசக்கதவுக்குப் பக்கத்துலய பாயப் போட்டு ஒக்கார்ந்துக்குவாங்க. பாட்டிக்கு பக்கத்துல, அவுங்கள ஒட்டிக்கிட்டு ருக்குமணி அக்காவும், செங்கமலம் அக்காவும் உக்கார்ந்துக்குவாங்க.

செட்டியப்ப தாத்தாவுக்கு மூணு புள்ளங்க. சம்முவம் மாமா மூத்தவரு. ருக்குமணி அக்காவும், செங்கமலம் அக்காவும் அதுக்கு அடுத்தவுங்க. சம்முவம் மாமா, சிலோனியாவுலயே வேலப்பாத்தாரு.வேல விட்டு வந்து டவுன்ல இருக்குற தியேட்டர்ல ஆப்ரேட்டர் வேல பாக்கப் போயிடுவாரு. சம்முவம் மாமா, பச்ச கலர் ஹெர்குலிஸ் சைக்கிள்ளதான் டவுனுக்கு போவாரு. செட்டியப்ப தாத்தா சொல்ற கத கேட்க, பாட்டிக்கூட ஒட்டிக்கிட்டே போயிடற நான், சம்முவம் மாமா வேல முடிஞ்சி வந்தத ஒரு நாளு கூட பார்த்ததில்ல. தாத்தா விதவிதமா கத சொல்றதுக்கு எங்க கத்துக்கிட்டார்னே தெரியாத ஆச்சரியமா இருக்குமெனக்கு.

தாத்தா வோட, குரல் எப்பக் கேட்டாலும் கர்னு கேக்குற மாதிரியிருக்கும். தாத்தா கத சொல்றதக் கேட்க அஞ்சடியில உக்காந்திருக்கிறவங்க மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டு முன்னாடியும் நாற்காலி போட்டுக்கிட்டும் “பெரஞ்சா” மேல உக்காந்து கிட்டும் கத கேட்பாங்க. “லோஹீதாசா, என் மகனே! எப்படியடா, என்னையும் உன் தாயையும் பிரிய மனம் வந்தது” என்று , ஹரிச்சந்திர மகாராஜா, புத்திரனை இழந்த சோகத்தில் கதறிக் கதறி அழுதார்னு,தாத்தா பெரும் குரலெடுத்துச் சொன்னார்னா, அஞ்சடியில உக்கார்ந்து கத கேக்கிறவங்கள்ள பாதிப்பேரு, வாய் விட்டு அழுதுடுவாங்க.

மண்ணுல ஆலமரம் ஒன்னு சரிஞ்சிடுச்சி, தலைவிரி கோலமாய், மகனே; மகனே ன்னு, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, “கடவுளே , உனக்கு கண்ணே இல்லாம அவிஞ்சா போயிடுச்சின்னு ஆண்டவனையும் சபித்தாள் புத்திர பாசத்தால் தவித்த சந்திரமதின்னு” தாத்தா சொல்லும் பொழுதும் எல்லோரும் அழுதிடுவாங்க. அப்படிதான், செட்டியப்ப தாத்தா ஒருநாள் நல்லதங்காள் சரித்திரத்தை சொல்லிக்கிட்டு இருந்தாரு. திடீர்னு கெங்கந்தண்டல் வீட்டுலர்ந்து ஓ…ன்னு அழுகிற சத்தம் கேட்குது. என்ன.. ஏதுன்னு எல்லோரும் ஓடிப்போய் பாத்தாங்க. பாத்தப்புறம்தான் தெரிஞ்சது விஷயம். செட்டியப்பதாத்தா சொன்ன “நல்லதங்காள்” கதய கேட்டு ஊர்ல விட்டுட்டு வந்த அக்கா தங்கச்சிங்க ஞாபகம் வந்து துக்கம் தாள மாட்டாமத்தான் கெங்கந் தண்டல், அப்படி அழுதார்னு தெரிஞ்சி, ஆளாளுக்குப் போயி சமாதானப் படுத்த வேண்டியதா போயிடுச்சு. சரித்திரக் கதைங்க மட்டும் இல்ல, மந்திர தந்திர கதைங்களயும் சொல்வாரு.

“என்னைப்பார், என் அழகைப்பார்.. என்னைப்பார் என் அழகைப்பார்னு.. கூவிக்கிட்டே அஞ்சாரு தேவ கன்னிங்க, ஜெகதல பிரதாபன வெரட்டிக்கிட்டு வர்றாங்க. தேவ கன்னிங்க, கொளத்துல குளிச்சி விளையாடிக்கிட்டு இருந்தப்போ, கரையில கழட்டி வச்சிருந்த துணிமணிகளை ஜெகதலப்பிரதாபன் தூக்கிட்டு வந்ததப் பார்த்திட்டுதான் தேவ கன்னிங்க, அவனைத் தொரத்திகிட்டு வந்தாங்க. தேவ கன்னிகளோட, ஜாலத்திற்கெல்லாம் செவிசாய்க்காத ஜெகதலபிரதாபன், சடார்னு ஒரு வீட்டுக்குள்ள புகுந்து கதவச் சாத்திக்கிட்டான். என்னைப்பார், என் அழகைப்பார்னு தேவ கன்னிங்க விரட்டிக்கிட்டு வந்தப்ப, ஜெகதலபிரதாபன் திரும்பிப் பார்த்திருந்தான்னா, அவன அங்கய கல்லாய் சபிச்சிட்டிருப்பாங்க. வீட்டுக்குள்ள புகுந்து கதவத் தாள் போட்டுக்கிட்ட ஜெகதலபிரதாபங்கிட்ட அவங்களோட ஜம்பம் பலிக்கல. அவனோட கெட்டிகாரத்தனத்தைப் பார்த்த தேவ கன்னிங்க அவனோட ஆசையைப் பூர்த்தி செய்யுறதா சத்தியம் செஞ்சி கொடுத்தப்புறம்தான், கதவத் தெறந்து வெளியே வந்தான் ஜெகதலப்பிரதாபன்.

வீட்டுல இருந்த வெளியே வந்த நம்ப ஜெகதலப்பிரதாபனைப் பார்த்து, அவன் அழகுல சொக்கிப் போனாங்க, அஞ்சாறு தேவ கன்னிகளும். ஜெகதலப்பிரதாபன் அந்த நாட்டு இராஜகுமாரன்ல ஒருத்தன்றதும், தன்னோட தந்தையான நாட்டின் மன்னருக்கு, இரண்டு கண்களிலும் திடீரென்று பார்வை போய்விட்டதையடுத்து, அரண்மனைக்கு வருகை தந்த முனிவர் ஒருவர் கொடுத்த யோசனையின் படி, ஆறு கடல் தாண்டி ஏழாவது கடல்ல பூத்திருக்கிற பாரிஜாதப்பூ கொண்டு வந்து, அதன் சாறு பிழிந்து கண்களில் விட்டாதான், மன்னருக்கு திரும்பவும் பார்வை கிடைக்கும் என்று சொல்லிப் போனாலும் போனார், நாடே அமளி துமளிப்பட்டது. மன்னருக்கு இரண்டு மகிஷிகள். அதில் முதல் பட்டமகியும் ஜெகதலப்பிரதாபனின் தாயாருமாகிய, அரசியாரை மன்னர் ஏதொன்றுக்கும் சேர்த்துக்கொள்ளாமல் தள்ளிவைத்துவிட்டு, இரண்டாவதாகக் கட்டிக்கொண்ட இளைய அரசியின் மயக்கத்தில் மூழ்கிக்கிடந்தார் மனிதர். இளைய அரசிக்கு மூன்று பிள்ளைகள், மூன்றும் ஆண் பிள்ளைகள்.

அவர்களில் மூத்தவனுக்கு, அரசுப்பட்டம் கட்ட வேண்டும் என்று இளைய அரசி, மன்னரை இரவும் பகலும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், திடிரென்று மன்னருக்கு பார்வை போய்விட்டது. மன்னரின் நோய்க்கு யார் தீர்வு கண்டு, பார்வை மீண்டு வர முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு மன்னர், ராஜ்யத்தை வழங்கிப் பட்டாபிஷேகமும் நடத்துவார் என்று தண்டோ ரா போட்டுவிட்டார். தம் தாயாருக்கு, மன்னரான தன் தந்தை செய்த துரோகத்தை எண்ணி ஜெகதலப்பிரதாபன் வருத்தம் கொண்டிருந்தாலும், இந்தப் பிரச்சினையை சவாலாகவே எடுத்துக் கொண்டான். அவன் தன் தாயாரிடம் இதற்காக ஆசிபெற்று, தம்மேலும் தம் தாயாரின் பேரிலும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மூத்த மந்திரியிடம் ஆலோசனை கேட்கச் சென்ற போது தான், மந்திரி, பாரிஜாதப் பூ கொண்டு வரும் வழி முறைகளை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

அந்த யோசனையை அப்படியே கடைப்பிடித்த ஜெகதலப்பிரதாபன், தேவ கன்னிகள் அஞ்சாறு பேர்களிடமும் சத்தியம் வாங்கிக்கொண்டு, அவர்கள் அனைவரையும் திருமணம் செய்துக்கொண்டதோடு, அவர்களின், மாயா சக்தி உதவியால், ஏழாவது கடல் வரைக்கும் சென்று, பாரிஜாதப் பூவைக் கொண்டு வந்து மன்னரின் பார்வைக்குறைவுப் பிரச்சனைக்கு தீர்வு கண்டான். ஜெகதலப்பிரதாபனின், சாமர்த்தியத்தை உணர்ந்து, அவனுடைய தாயாரான முதலாவது பட்டமகிஷியைப் பிரித்து வைத்த பாவம் தான், தனக்கு பார்வை போனதற்கு காரணம் என்று கலங்கி அவர்கள் இருவருடமும், மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தன் மகன், ஜெகதலப்பிரதாபன் மட்டுமே இந்த நாட்டை ஆளத்தகுதியுடையவன் என்று கூறி தன் முதலாவது பட்டமகிஷியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நாட்டுமக்களிடம் மனமுறுகி மன்னிப்பு கேட்டார்.

கதயச் சொல்லி முடிக்கிறதுக்கு முன்ன, செட்டியப்ப தாத்தா இப்படி கூறினார்…. நம்ம ஜெகதலப்பிரதாபன் முடி சூட்டுவிழாவுல என்ன செஞ்சான்? தன் தந்தையான மன்னரைப் போல இல்லாம, தனக்கு பக்கத்துல அஞ்சாறு தேவ கன்னிங்களுக்கும், பட்ட மகிஷிகள் மாதிரியே முடிசூட்டி மரியாதை செஞ்சான். அதப்பார்த்து, மந்திரிமார்களும், மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஆனா…. ஒரு ஓரத்திலே நின்று இந்தக் காட்சிங்களப் பார்த்துப் பார்த்து, மன்னரின் இரண்டாவது பட்டமகிஷியும், அவளோட மூன்று இராஜகுமாரர்களும், முதல்ல பொறாமப் பட்டாலும் அப்புறம் எல்லாவற்றையும் மறந்து விழாவுல கலந்து சந்தோஷப்பட்டாங்க.

செட்டியப்ப தாத்தா ரொம்ப நாளக்கி அப்புறம் சொன்ன சந்தோஷமான கத இது. கத முடிஞ்சி எல்லோரும் எழுந்துப்போனப்போ, சிரிச்சு பேசிகிட்டே போனாங்க. தாத்தா, எப்ப கத சொன்னாலும் 10 மணியத் தாண்டாமப் பார்த்துக்குவாரு. கத முடிஞ்சி பார்த்தாக்கா, ஒரே அமைதியா இருக்கும். தூரத்தில் இருக்கிற “பவுண்டிரிப்” பக்கமிருந்து. தேவாங்கு ஓலமிடுற சத்தம் கேட்கும். சமயத்தில, கானாங்கோழி வேட்டைக்கு கண்ணி வெச்சிருக்கிற வேட்டைக்காரனுங்க கானாங் கோழி கணக்காவே சத்தம் குடுக்கிறதும் கேட்கும். தாத்தா எப்ப வாச்சும். பேய் கதங்கள சொல்வாரு. செட்டியப்ப தாத்தா சொல்லுற பேய்க் கதங்கள்ள வர்ற பேய்ங்க, மனுசாளுக்கு தொந்தரவெல்லாம் கொடுக்காதுன்னு சொல்லுவாரு. அதிலும், சின்னப் பிள்ளைங்களுக்கு உதவி செய்யிறுதுன்னா அதுங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு, செட்டியப்ப தாத்தா தான் எங்களுக்குச் சொன்னவரு.

கடவுளு எப்பவும் பேய்ங்க கிட்ட சொல்லுவாராம். எந்தக் குழந்தைக்கும் தொந்தரவு குடுக்கக் கூடாதுன்னு எச்சரிக்கை பண்ணிட்டாராம். தாத்தா, அப்படி சொன்னதுக்கு அப்புறம், யார் எந்தப் பேய்க் கதையைச் சொன்னாலும், புத்தகத்துல படிச்சாலும் பயமே இல்லாமப் போயிடுச்சி. தாத்தா, தேசிங்குராஜன்,காத்தவராயன், விக்கிரமாதித்தன், வீர அபிமன்யு கதயெல்லாம் சொல்வாரு.பட்டினத்தார், பஞ்சபாண்டவர், ராமாயணம், கோவலன் கண்ணகி, மதனகாமராஜன்னு ஒவ்வொரு நாளும் ஒரு புதுக்கதயச் சொல்வாரு. உட்கார்ந்திருக்கிறவங்க யாராச்சும் குசுகுசுன்னு பேசுனா “யாரும் இங்க முன்னேரு ஓட்டாதீங்கன்னு” கண்டிச்சு சொல்லிடுவாரு. நெலா காலத்துல, கத சொல்லறப்போ, தாத்தா எப்போதும் கொஞ்சம் உற்சாகமாகவே இருப்பார்.

ஒரு நாளு, மத்தியான நேரம், அப்பதான் பள்ளிக்கூடம் விட்டு வந்திருந்தேன். கருப்பு நெறத்து ஜீப் ஒன்னு, செட்டியப்ப தாத்தா வீட்டு வாசல்ல வந்து நின்னுச்சி. அதுல இருந்து, போலீஸ்காரங்க நாலஞ்சி பேரோட கெங்கன் தண்டலும் இறங்கினாரு. தாத்தா வீட்டுக்குள்ள, புகுந்தவுங்க, வீட்டுல இருந்து சம்முவம் மாமாகிட்ட ஏதோ பேசிட்டு, அவரையும் ஏத்திக்கிட்டு, கெங்கன் தண்டலு, போலீஸ்காரங்களோட திரும்பிப் போயிடுச்சு. லயத்துல இருந்தவுங்க அங்கங்க கூடிப் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்பாவும், யூனியன் காரியதரிசி முனுசாமியும், ஆளுக்கொரு சைக்கிள எடுத்துகிட்டு டவுனுக்குப் போனாங்க. அவுங்க ரெண்டு பேரும் போயி, ரொம்ப நேரம் கழிச்சி வீட்டுக்கு வரும்போது பாத்தா, சம்முவம் மாமா, அப்பாவோட சைக்கிள்ள பின் சீட்டுல உக்காந்து வந்தாரு.

சம்முவம் மாமாவக் கூட்டிக்கிட்டு வீட்டுல விட்டுட்டு வந்த அப்பா, அம்மாகிட்ட மட்டும் சத்தம் போடாமச் சொன்னது எனக்கு கேட்டது. சம்முவம் மாமா, காட்டுகாரங்களுக்கு (கம்னியூஸ்டு) கொண்டு போயி சாப்பாடுப் பொருள் குடுக்கிறார்னு போலீசில யாரோ துப்பு குடுத்திட்டாங்களாம். அதனாலதான்… விசாரிக்கிறதுக்கு கூட்டிகிட்டுப் போனாங்களாம்..னும். போலீஸ் ஸடேசன்ல, இருந்த மலாய்க்கார அதிகாரி அப்பாவும், யூனியன் காரியதரிசியும் ஸ்டேசனுக்குப் போனப்ப, “சம்முவத்தப் பத்தி வந்த புகாரை நம்பலன்னும் யாரோ இவரப்பத்தி தவறா எங்களுக்கு புகார் குடுத்திருக்காங்கிறது, அவர விசாரிச்சுப் பார்த்ததில இருந்து தெரியவந்திச்சின்னு” சொன்னதாவும் அம்மாகிட்ட அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு.

அந்த சம்பவத்துக்கு அப்புறம், செட்டியப்ப தாத்தாவும் அவரோட குடும்பத்துல இருந்தவுங்க எல்லோரும் தோட்டத்துல வேலக்கிப் போய்கிட்டு இருந்தாங்க. சம்முவம் மாமாவும், தோட்டத்து வேலய முடிச்சிகிட்டு பச்சக்கலர் “ஹெர்குலிஸ்” சைக்கிள்ள, “ஆப்ரேட்டர்” வேலக்கிப் போய்வந்துக்கிட்டு இருந்தாரு. போலிஸ்காரங்க, செட்டியப்ப தாத்தா வீட்டுக்கு வந்து சம்முவம் மாமாவ ஜீப்பில ஏத்திகிட்டுப்போயி, பிறகு அப்பாவும் யூனியன் காரியதரிசியும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்த அன்னக்கி இராத்திரி, தாத்தா வீட்டுல சத்தம் போட்டு வாக்குவாதம் பண்ணது அக்கம் பக்கத்து வீடுகளுக்கு கேட்டுச்சி.

“சீனன்களோடு, நமக்கெல்லாம் சகவாசம் இருக்கக் கூடாதுடா சம்முவம்”. அப்புறம் நம்ம, குடியே கெட்டு குட்டிச்சுவரா போய்டும்னு”, தாத்தா சம்முவம் மாமாவுக்கு, புத்திமதி சொன்னதும், சம்முவம் மாமாவப் புடிச்சிகிட்டு பாட்டி அழுவுறதும் கூட பக்கத்து வீடுங்களுக்கெல்லாம் கேட்டுச்சி.

அந்த அன்னக்கி, செட்டியப்பதாத்தா அஞ்சடியில உக்காந்து கத சொல்லல. அதுக்கு மறுநாளும் தாத்தா கத சொல்லல. பகலெல்லாம் கூட தாத்தா மொகத்துல சந்தோஷமே இல்லாமதான் இருந்திச்சி. அம்மாகிட்டயும், பாட்டிகிட்டயும், நான் கேட்டுப்பாத்தேன், ” ஏன் தாத்தா இரண்டு நாளா கத ஏதும் சொல்றதில்லைன்னு.” பாட்டிதான் என்ன ரொம்பத்திட்டுனாங்க. “அவன் வீட்டுலயே பெரிய கத, பெறவு அவன் எங்கடா உனக்கு கத சொல்றது. உனக்கு இப்ப கத கேக்குற பைத்தியம் ரொம்பத்தான். ஒங்க அப்பன் கிட்ட சொல்றன்னு” திட்டுனாங்க. அப்ப நான், டோ மினிக் சார் கிட்ட, மூணாம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தேன்…கத பாட்டு ரெண்டையும் மேரி டீச்சர்தான், சொல்வாங்க.. சொல்லிக்கொடுப்பாங்க. பள்ளிக்கொடத்துல கூட மேரி டீச்சர், உங்க செட்டியப்ப தாத்தா நேத்து என்னப்பா கத சொன்னாருன்னு கேட்பாங்க.

முன்ன ஒரு தரம், செட்டியப்ப தாத்தா சொன்ன, வண்டிக்காரனும், வைரமாலைப் பேயும்-கிற கதயச் சொன்னப்ப மேரி டீச்சர் ரொம்பவே ரசிச்சாங்க. மூணாங் கிளாசுப் பசங்க ரொம்ப பேருக்கு, பகல்லயே பீ..மூத்திரம் வரமாறி ஆய்டிச்சி. ராத்திரியானா, சிலோனியா தோட்டமே ஒரே அமைதியா ஆய்டிச்சி. நரசய்யா தாத்தா வீட்டுல எப்பவுமே, சாயங்காலத்துலதான் கிராமப்போன்ல பாட்டு வைப்பாங்க… “கல்யாணம் ஆகும் முன்னே..கையைத்தொடலாகுமா” ன்ற பாட்டும், கண்ணில் தோன்றும் காட்சியாவும் என்ற பாட்டும் அடிக்கடி வப்பாங்க. மத்தியானம், சாயங்காலத்துல மட்டும்தான், ஏசுதாஸ்,கிராமப்போனுக்கு சாவி கொடுத்து பிளேட்டு எடுத்து வச்சு பாட்டு போடுவாரு. நரசய்யா தாத்தாவோட மகன்- ஏழாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தாரு. யூனியன் காரியதரிசி முனுசாமி வீட்டு ரேடியோவுல, ஆல் இந்தியா பாடும்… மற்றபடி லயத்துல கலகலப்பெல்லாம், செட்டியப்ப தாத்தா சொல்ற கதங்கனாலதான்.

ஒரு தடவ, ஆமையாயிருந்த இராஜகுமாரன் ஒருத்தனோட கதய தாத்தா சொல்லியிருந்தாரு. இராஜகுமாரனா இருக்கிறவனுக்கே இப்படியெல்லாம் கஷ்டம் வருமான்னு எனக்கு வருத்தமாயிடிச்சு. நாம கூட ஜெகதலபிரதாபன் மாதிரி கெட்டிக்காரனா இருந்து, தேவகன்னிங்க கிட்ட இருந்து சத்திய வரம் எல்லாம் வாங்கிக்கனும்னு நெனச்சிகிடுவேன். அன்னக்கி ராத்திரி, பாட்டி, அம்மா,அப்பா எல்லாம், செட்டியப்ப தாத்தா வீட்டுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு வந்தாங்க. ருக்குமணி அக்காவும், செங்கமலம் அக்காவும், அவங்க அம்மாவோட வந்து வீட்டுல எங்க அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தாங்க.

அந்தன்னிக்கு மறுநாள், செட்டியப்ப தாத்தா வீட்டு குடும்பம் சிலோனியா தோட்டத்தவிட்டு, சித்தியவான் பக்கம் இருக்குற சுங்கைவாங்கித் தோட்டத்துக்குப் போயிட்டாங்க.லோரிய கொண்ணாந்து சாமனயெல்லாம் ஏத்தும் போது லயத்துல இருந்த எல்லோருமே பாத்தாங்க… தாத்தா குடும்பத்துல இருந்த எல்லோருமே கண் கலங்கினாங்க. தோட்டத்து சந்தோஷத்தை செட்டியப்ப தாத்தா குடும்பம் எடுத்துக்கிட்டுப் போயிட்ட மாதிரி ஆயிடிச்சி. இதுல, சம்முவம் மாமா மட்டும் ரொம்ப தெம்பா நடமாடிக்கிட்டு இருந்தாரு.

லோரியில, செட்டியப்ப தாத்தா வீட்டு சாமானுங்கள ஏத்துறதுக்கு, அப்பாவும் அம்மாவும் ரொம்ப ஒதவியா இருந்தாங்க. கொஞ்ச நாளக்கி முன்ன, நாங்க சிலோனியா தோட்டத்துக்கு வந்தப்ப, லோரியில இருந்த சாமானுங்கள செட்டியப்ப தாத்தா குடும்பத்துல உள்ளவங்கதான் இறக்கிவச்சி ஒதவி செஞ்சாங்க. இதயெல்லாம் பாக்கும் போது எனக்கு அழுவனும் போல இருந்திச்சு.

செட்டியப்ப தாத்தா குடும்பம் சிலோனியாவை விட்டுப் போன கொஞ்ச நாள்லயே, தோட்டத்த துண்டு போட்டு விக்கப் போறங்கன்னு கேஸ்லைட் வௌக்கு வச்சிக்கிட்டு நாற்காலிங்க போட்டு தோட்டத்துல உள்ளவங்க கூடி பேசுனக்கூட்டத்துல யூனியன் காரியதரிசி முனுசாமி எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்தாரு. நாங்களும் புருவாஸ் பக்கம் இருந்த தோட்டத்துக்கு மாறிப் போய்ட்டோ ம். அங்க போனப்பதான், துங்கு படம் போட்ட “பேட்ஜீ”ல்லாம் குடுத்து, நமக்கு “மெர்தேகா” வரப்போவுதுன்னு சொன்னாங்க. அங்கயும் நான் மூணாங்கிளாசுல தான் சேர்ந்தேன். மெர்தேகா, ஓட்டப்பந்தயத்துக்கு என்னய எல்லாம் தம்பிராஜா ஆசிரியர்தான் கூட்டிகிட்டுப் போனாரு. புருவாஸ் தோட்டத்துல இருந்தப்பதான், மூணாங்கிளாசு, நாலாங்கிளாசு, அஞ்சி ஆறாங்கிளாசு பசங்கள எல்லாம், தம்பிராஜா ஆசிரியர்,புலேந்திரனோட “ஈல் ஏ மன்” காடியில வச்சி, ஈப்போவுக்குகெல்லாம் சுத்துப்பயணம் கூட்டிக்கிட்டுப் போனாரு.

அந்தத் தோட்டம் மலைப்பிரதேசமா இருந்ததால, தம்பி, தங்கச்சிங்களுக்கெல்லாம், அடிக்கடி காய்ச்சல், வாந்தின்னு வந்துகிட்டு இருந்ததப் பாத்து மறுபடியும் இடம் மாறி அம்பிகா தோட்டத்துக்கு அப்பா எங்களக் கூட்டிக்கிட்டு வந்துட்டாரு. அப்பதான் எனக்கு “கண்ணுவலி” வந்து பாடாய் படுத்திடிச்சி. ஒருவாரம் ரெண்டுவாரம்னு எண்ணெய் மருந்தெல்லாம் விட்டுப்பார்த்தும், வலியும், அருவுறதும் நிக்காம, “குரூப் ஆஸ்பத்திரியில” கொண்டு போய் சேர்த்துட்டாங்க. அங்கதான், செட்டியப்ப தாத்தாவ நான் மறுபடியும் பாத்தது. தாத்தாவுக்கு நெஞ்சுவலின்னு கொண்ணாந்து சேர்த்திருந்தாங்க. செட்டியப்ப தாத்தாவப் பாக்கவந்த, ருக்குமணி அக்கா, செங்கமலம் அக்கா, பாட்டியெல்லாம், கண்வலிக்காக “வார்டுல” வந்து சேர்த்திருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டு என்னையும் பாக்க வந்தாங்க.

சம்முவம் மாமா மட்டும், காலயிலயே தாத்தாவப் பாக்க வந்துடுவாரு. வரும்போது, எங்க ரெண்டு பேருக்குமே சேர்த்தாப்போல பசியாற ரொட்டி, தேத்தண்ணியெல்லாம் வாங்கி வந்து குடுத்துட்டு போவாரு. சம்முவம் மாமா, முன்ன பாத்ததவிட தெடகாத்திரமா இருந்தாரு. நெஞ்சுவலியினால, செட்டியப்ப தாத்தா முன்ன மாதிரி இல்லாம மெலிஞ்சி போயிருந்தாரு. இராத்திரியானா, எனக்கு கண்ணுல “பீள” வடிஞ்சி ரெண்டு கண்ணும் ஒட்டிக்கும். செட்டியப்ப தாத்தா தான், வெந்நீர்ல துண்ட நனச்சி சுத்தப் படுத்திட்டு பசை மருந்தெல்லாம் தடவி விடுவாரு.

சிலோனியாவுல இருந்ததவிட, இப்ப நான் செட்டியப்ப தாத்தா கூட ரொம்பவும் நெருக்கமாயிட்டேன். ஆஸ்பத்திரியிலிருந்த என்னைப் பாக்க அப்பா வரும்போது தாத்தாவுக்கும் சேத்தே சாமானுங்கள வாங்கிக்கிட்டு வருவாரு. முன்ன மாதிரியில்லாமே தாத்தாவோட சகஜமா கிட்டதாலே நானே ஒரு தரம் கேட்டேன். யாரு தாத்தா உங்களுக்கு இவ்ளொ கதயும் சொல்லிக் குடுத்ததுன்னு. ஊர்ல, கடம்பூர் கிராமமாம். அங்க “வடிவேலு” வாத்தியார்னு ஒருத்தர் இருந்து இதயெல்லாம் சொல்லிக்கொடுத்தாராம். பாதி கதங்கள, பொஸ்தகம் வச்சிப் படிச்சி தெரிஞ்சிக்கிட்டது தானாம். ராவானா “ஆஸ்பத்திரி” ஆம்பிள “வார்டுல” செட்டியப்ப தாத்தா கத சொல்ல ஆரம்பிச்சிடுவாரு.

ரெண்டு கண்ணுலயும் வலி இருந்தாலும், தாத்தா சொல்ற கதயக் கேக்க எல்லா சீக்காளிங்களும் கூட்டம் கூடிடுவாங்க. சிலோனியாவுல கத சொன்ன மாதிரி சத்தம் போட்டு சொல்லாம, கொஞ்சம் அடங்குனக் குரல்ல தான் சொல்வாரு. குருப் ஆஸ்பத்திரி, “டிரசர்” மாருங்க “டூட்டி” பாக்க வரும் போது, கத சொல்றதக் கேட்டா சத்தம் போடுவாங்க.அதனால, தாத்தா அடங்கின குரல்ல சொல்லுவாரு. தாத்தாவுக்கு நெஞ்சுவலி பூரணமா குணமாகல. டிரசர், டாக்டர்லாம் அவரக் கூட்டிக்கிட்டுப் போயி அடிக்கடி சோதனை செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு கொஞ்சம் கொஞ்சமா.. கண்ணுவலி கொணமாயிக்கிட்டு இருந்துச்சி.

ஒரு நா… ராத்திரி ஒம்பது மணி இருக்கும். கடல் காத்து மெல்ல வீசிக்கிட்டு இருந்துச்சி. காத்துக்கு, பிரசவவார்டுக்கு முன்ன இருக்கிற, மகிழம்பூ மரத்திலிருந்து கௌம்பி வந்த வாசம், எல்லோருக்கும் சந்தோஷத்தக்குடுத்துச்சி… தாத்தா, இன்னும் கத சொல்லத் தயாராகல. படுக்கயத் தட்டிட்டு கொசு வலய சரிபண்ணிக்கிட்டு இருந்தவரு எல்லோரயும் சீக்கிரம் வரச் சொல்லிக் கூப்பிட்டாரு. “வார்டுல” இருந்த நோயாளிங்கள்ள ஒருத்தரு என்னா செட்டியப்பன் இன்னக்கி இவ்ளோ அவரசப்படுத்துறன்னு கேட்டாரு. அதுக்கு தாத்தாவும், “அவசரந்தாய்யா எல்லாக் கதங்களயும் சொல்லிமுடிச்சிடனும்யா, அது மட்டும் இல்லையா, எம் பேரப்பையன் இன்னும் ரெண்டு மூணு நாள்ள, வீடு திரும்பிடுவான்யா.. அவனுக்கும் கத சொல்லி முடிக்கனும்யா,” தாத்தாதான் இப்படி கேட்டவருக்கு பதில் சொன்னாரு.

‘வார்ட’ விட்டு இன்னும் மகிழம்பூ வாசம் விலகில. ‘வார்டு’க்கு சீக்காளிங்களப் பாக்க வந்தவங்க கொடுத்துட்டுப் போனதெல்லாத்தையும், ஏறக்கட்டி வச்சிட்டு ஒவ்வொருத்தரா வந்து, செட்டியப்ப தாத்தாவோட படுக்கைக்குப் பக்கத்துல உக்கார்ந்தாங்க. வெத்தலைப் போட்ட வாயக் கொப்பளிச்சிட்டு, தாத்தா கத சொல்ல ஆரம்பிச்சாரு.இன்னக்கி, தாத்தா பஞ்சப்பாண்டவர்களோட கதயச் சொல்ல ஆரம்பிச்சாரு. பதினெட்டு நாள் போர் நடந்துச்சின்னும், போர்ல கௌரவங்க தோற்றுப்போயி, ஆயிரக்கணக்குல அழிஞ்சாங்கன்னும். அதோட மட்டுமில்லாம, பாண்டவங்கள சூழ்ச்சி பண்ணி, அஸ்தினா புரத்துல உள்ள அரக்கு மாளிகையில வச்சி பஸ்பம் பண்ணப் பாத்தாங்கங்கிறதயும், குளத்துல பதுங்கியிருந்த துரியோதனனத்துவம்சம் செஞ்ச பாண்டவர்களப் பத்தியும், தாத்தா ரொம்ப உற்சாகமா சொல்லிக்கிட்டு இருந்தப்ப தான் தாத்தாவுக்கு நெஞ்சுவலி வந்துருச்சி.

“வார்டு”ல இருந்த ஒருத்தரு ஓடிப்போயி,

`டிரசர’க் கூட்டிக்கிட்டு வந்தாரு.அவரும் தாத்தாவுக்கு என்னென்னமோ ஒதவியெல்லாம் செஞ்சிப்பாத்தாரு.தாத்தாவால வலிதாங்க முடியில. மொதல்ல முனகிக்கிட்டிருந்த தாத்தா நேரம் ஆவ ஆவ கதறித்துடிக்க ஆரமிச்சிட்டாரு. தாத்தாவ, லுமுட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக ஏற்பாடு செஞ்சிட்டாங்க. செய்தி தெரிஞ்சவொடனே சம்முவம் மாமா ஆஸ்பத்திரிக்கு வந்துட்டாரு. தாத்தாவ `லுமுட்’டுக்கு கொண்டு போனதுக்கு அப்புறம் ஆம்புள `வார்டு’ல இருந்த யாரும் விடிய விடியத் தூங்கல. தாத்தா நெஞ்சுவலி வந்து இந்த மாதிரி அவஸ்தப்பட்டதில்லேன்னு, அங்க இருந்தவங்கப்பேச்சில இருந்து தெரிஞ்சது. யாருக்கும் தூக்கம் இல்லாமயே, விடிஞ்சிடுச்சி.

சம்முவம் மாமா மட்டும் தான், ஆஸ்பத்திரிக்கு வந்து, தாத்தாவோட
சாமானுங்களையெல்லாம்,
`பய்யில’ வச்சிக்கிட்டு இருந்தாரு. மாமாவ யாரும் எதுவும் கேக்கல. செட்டியப்ப தாத்தாவோட, கைலி, சட்டை, வேட்டி எல்லாத்தயும் மடிச்சி ஒன்னு ஒன்னா வைக்கும் போது ரொம்பவே கண் கலங்குனாரு. ரெண்டு மூணு பேரு போயி சம்முவம் மாமாவக் கட்டிப்புடிச்சி சமாதானம் சொன்னாங்க. எனக்கும் சம்முவம் மாமாகிட்டப் போயி ஏதாச்சும் கேக்கனும்னு தோணுச்சி. சம்முவம் மாமா பக்கத்துல போயி நின்னு, “மாமா”ன்னு கூப்பிட்டேன். சம்முவம் மாமா, என்னையும் பெரிய ஆளா நெனச்சாரோ என்னமோ, தெரியில… என்னயப் புடிச்சிக்கிட்டு அழுதாரு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *