செக்கு மாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 3,645 
 
 

அவசரமாக காபியைக் குடித்து விட்டு செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பிய போது “சாயங்காலம் வரும்போது கொஞ்சம் முட்டை வாங்கி வாருங்கள்” என்றாள் பத்மினி.

”சரி , என் செல்போன எடு” என்று கடிகாரத்தைதை மாட்டிக்கொண்டான் சூர்யா.

செல்போனை சார்ஜரில் இருந்து கழற்றி சூர்யாவிடம் கொடுத்து விட்டு “ஆபிஸிலிருந்து இறங்கு போது போன் பண்ணுங்கள் கோயிலுக்குப் போய்விட்டு வரலாம்.” என்றாள் பத்மினி.

“சரி” என்றவாறு கதவைத் திறந்த போது “இப்படித்தான் சரி என்று சொல்லி விட்டுப் போவீர்கள். அப்புறம் நானும் நம் மகள் திவ்யாவும் உடுத்திக்கொண்டு ரெடியாக இருக்கும் போது ‘ஸாரி பத்மினி எனக்கு வேலையிருக்கு’ என்று போன் செய்து விட்டு ராத்திரி பதினோரு மணிக்கு வருவீர்கள்: என்றாள் பத்மினி சலித்துக் கொண்டு.

“அப்பட்டீன்னா வேலைக்குப் போகாமல் இருந்து விடட்டுமா”? என்றான் சூர்யா. “சரி சரி நீங்கள் கிளம்புங்கள். சாயந்தரம் சீக்கிரம் வரப் பாருங்கள்” என்று சொன்ன பத்மினியிடம் “வீட்டிற்குள்ளே டெலிபோன் மணி அடிக்கிறது, யாரென்று பார்” என்றான்.

தொலைபேசியை எடுத்துப் பேசியவள் “உங்கள் அக்கா ஊரிலிருந்து கூப்பிடுகிறார்கள்” என்றாள்.

உள்ளே வந்து போனை வாங்கிக் கொண்டு “அக்கா எப்படியிருக்கீங்க” என்று கேட்டான்.

“தம்பி அடுத்த மாதம் உன் மருமகள் தமிழரசிக்கு திருமணம் நிச்சயம் பண்ணியிருக்கிறோம். அதற்கு ஒரு இருபத்தையாயிரம் தந்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்” என்றது எதிர்முனை.

முன்னால் நின்று கொண்டிருந்த மனைவி பத்மினியை பார்த்துக் கொண்டே இங்கே என்ன பணமாக காய்ச்சா கெடக்குது என்று கத்த நினைத்தவன் “சரி, சரி பாக்கலாம்” என்றான்.

“அங்கே பம்பாயில இப்போது மழை எப்படி?” எதிர்முனையில் அக்கா.

“நல்ல மழை. வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கு ரெய்ன் கோர்ட் போட்டுக் கொண்டு கிளம்பும்போது உங்கள் போன்” என்றான்.

“நீ தமிழரசி கல்யாணத்துக்கு குடும்பத்தோடு கண்டிப்பாக வருவாயில்லையா?” என்றாள் அக்கா தொடர்ந்து “லீவு அதிகம் இல்லை திவ்யாவிற்கு. பள்ளிக்கூடம் நடந்துகிட்டிருக்கு, அதனால நான் மட்டுந்தான் வருவேன்.”

“சர், உன் விருப்பம் போல செய்” என்றவாறு எதிர் முனை தொலைபேசி தொடர்பை துண்டித்துக் கொள்ள “என்ன உங்க அக்கா மகள் தமிழரசிக் கல்யாணத்திற்கு பணம்தானே கேட்டார்கள்” என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டே கேட்டாள் பத்மினி.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. எப்போது வருகிறீர்கள் என்றுதான் கேட்டார்கள். நான் தான் திவ்யாவிற்கு ஸ்கூல் இருக்கிறதாலே நான் மட்டும் வாரேன் என்று சொல்லியிருக்கேன்.”

“சும்மா சொல்லாதீங்க, உங்க அக்கா மக கல்யாணத்திற்கு எங்கேயாவது கடன் புறட்டியாவது கொடுத்து விடுவீர்கள். என் தம்பி காலேஜிக்கு பீஸ் கட்றதுக்கு பணம் கேட்டால் அப்பம் மட்டும் பணம் இருக்காதே” என்றாள் கோபத்தோடு. ”ஏம்மா! உன் கூட சண்டை போட நேரமில்லை” என்றவன் மழை தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு படிகளில் இறங்கினான்.

மும்பை மழையையும் பொருட்படுத்தாது அலுவலகம் ஓடிக் கொண்டிருந்தவர்களோடு கலந்து ஆட்டோவில் ஏறி கல்யாண் ஸ்டேஷனுக்கு வந்து மும்பை சி.எஸ்.டிக்குப் போகும் பாஸ்ட் ரயில் தயாராக நிற்க அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினான்.

செல்போன் பையிலிருந்து கிறு கிறுத்தது. கூட்டத்தி நெருக்கியடித்து நின்று கொண்டிருந்ததால் கையைப் போட்டு செல்போனை எடுக்க மேனேஜர் சாக்ஸியின் போன் நம்பர் தெரிந்தது. “எஸ் சார்” என்றான்.

“சூர்யா, கொஞ்சம் ஏர் கார் கோ காம்ப்ளக்ஸ் போய் வருகிறீர்களா? அங்கே கஸ்டம் கிளீரென்ஸிலே ஏதோ பிராப்ளம் போல இருக்கிரது. உங்கள் உதவியாளன் குஞ்சால் போன் பண்ணியிருந்தான். நேராக போய் கஸ்டம்ஸ் ஆபிசரைப் பார்த்துக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து இன்றைக்குள் டெலிவரி எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள். இல்லையென்றால் பாக்டரி பந்தாகி விடும்”.

“சரி சார். நான் காட்கோப்பரில் இறங்கி ஏர் போர்ட் போய் பார்த்து விட்டு உங்களுக்குப் போன் பண்ணுகிறேன்.” என்றான்.

“அப்படியே வரும்போது நம்முடைய கண்ணா என் கம்பெனியிலே ஒரு செக் பேமென்டும் வாங்கிக் கொண்டும் வந்து விடுங்கள்.”

“அங்கே போனால் நேரத்தை இழுத்தடிப்பான் சார். வேண்டுமானால் அப்புறமாக உன்னியை அனுப்பி வாங்கிக் கொள்ளலாம் சார்.”

“இல்லையில்லை டிராஸ்போர்ட்டருக்கு இன்றைக்கு பணம் கொடுத்தே ஆகனும் பிந்தினாலும் பரவாயில்லை. செக்கை வாங்கிக் கொண்டு வாருங்கள்.” என்று போனைக் கட்விட பண்ணிவேகமாக வெளியே வந்து காட்கோப்பரில் முண்டியடித்துக் கொண்டு இறங்கி ஏர் கார்கோ போகும் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான்.

வேலைகள் முடிந்து மனைவி பத்மாவிடமிருந்து போன் வர “ஸாரி பத்து கிளம்ப நேரமாகி விட்டது. நீ புறப்பட்டு ரெடியாக இருப்பாய். நீயும் திவ்யாவும் கோயிலுக்குப் போய் விட்டு வந்து விடுங்கள். நான் வர லேட்டாகும்” என்று எதிர் முனையில் மனைவியிடம் திட்டு விழுவதற்குள் போனை கட் பண்ணி விட்டு இறங்கி நடந்தான்.

மழை கொஞ்சம் விட்டுப் போயிருந்தது. வேகமாக நடந்து மும்பை சி.எஸ்.டியில் கல்யாண் போகக் கூடிய இரயிகுக்கு வந்து முண்டியடித்து ஏறி அமர்ந்தான். கல்யாணியில் இறங்கியதும் மறவாமல் முட்டை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அடுத்த நாள் காலை “பத்மினி செல்போனை எடு“ என்று சொல்லி விட்டு ரெயின் கோர்ட்டை மாட்டிக்கொண்ட போது டெலிபோன் ஒலித்தது.

“உங்கள் அக்கா போனாகத்தான் இருக்கும். போபை எடுங்கள்” என்றாள் காபியை ஆற்றியவாறு.

போனை எடுக்குமுன் இணைப்பு நின்று விட, மழைத் தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்ட போது பையில் செல்போன் ஒலித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *