கதையாசிரியர்:
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 23,786 
 

பிஸினஸ் விஷயமாகச் சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது.

“குட் மார்னிங்…ஜெயா….சொல்லு” என்றார், டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு மகளிடம்.

ஜெயாவுக்கு குரல் நடுங்கியது. அவள் அழுது கொண்டே பதட்டமாகப் பேசுவது இவருக்குப் புரிந்தது. “அப்பா…..தாத்தா சென்னையிலே ஒரு சாலை விபத்திலே இறந்து விட்டாராம். இப்போதுதான் போன வந்தது. அவரின் உடல் ‘ஜீ.எச்’ இல் உள்ளதாம். அம்மா ரொம்பவும் அழுது புலம்பிண்டு இருக்கா. ஈவினிங •பிளைட்டில் அம்மாவை ஏற்றி அனுப்பட்டுமா?” என்றாள்.

மஹாலிங்கம் சிரித்துக்கொண்டே “அப்படியாம்மா, ரொம்ப சந்தோஷம். நான் அவசியம் போய்ப் பார்த்துட்டு, அப்புறம் உனக்குப் போன் செய்கிறேன்” என்றார், சற்றும் தன் முக பாவனையில் வருத்தமோ, அதிர்ச்சியோ ஏதும் இல்லாமல்.

அப்பாவின் இத்தகைய பேச்சு, ஜெயாவுக்கு அதிர்ச்சியை அளித்தது. தன் தாயாரிடம் இந்த டெலிபோன் உரையாடலைப் பக்குவமாக எடுத்துச் சொன்னாள். இதைக் கேள்விப்பட்ட மஹாலிங்கத்தின் மனைவி ஈஸ்வரிக்குத் தன் கணவன் மேல் கோபமாக வந்தது.

” இவருக்கு எப்போதுமே எங்க பிறந்த வீட்டுக்காரங்களைக் கண்டாலே ஒரு வித இளக்காரம் தான். மாமனாரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட பிறகாவது ஒரு மனிதாபிமானத்தோடு பேச மாட்டாரோ! அவ்வளவு பணத் திமிரு, இருக்கட்டும் நேரில் போய் பேசிக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, விமான டிக்கெட் பதிவு செய்ய ஏற்பாடுகளை கவனிக்கலானாள். மாமனாரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்ட மஹாலிங்கம், தன் தந்தை இறந்த துக்கத்தில் மூழ்கி இருந்த ஈஸ்வரியுடன் அதிகமாக மனம் விட்டு பேச முடியாத சூழ்நிலை நிலவியதில், அவள் ஒரு மூன்று வாரங்களாவது, பிறந்த வீட்டிலேயே இருந்து விட்டு வரட்டும் என்று தன் மாமியாரிடம் சொல்லி விட்டு, தான் மட்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தன் மாப்பிள்ளையைப் பற்றி அடிக்கடி பெருமையாகப் பேசி பூரித்துப் போகும் தன் தாயிடமே கோபமாக வந்தது, ஈஸ்வரிக்கு.

ஒரு மாதம் கழித்து டெல்லிக்குத் திரும்பிய ஈஸ்வரி, தன் கணவனிடம், “எங்கப்பா சாலை விபத்திலே செத்துப் போனது உங்களுக்கு ரொம்பவும் சந்தோஷமா? உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், எங்க அப்பாவை அந்தப் பணத்தால் திரும்ப வரவழைக்க முடியுமா?” என சுட்ட எண்ணையில் போட்ட அப்பளமாகப் பொரிந்து தள்ளினாள்.

“ஸாரி…ஈஸ்வரி. சென்னைக்குப் போன இடத்தில் என் வியாபார நண்பர் ஒருவர் மூலம், நம்ம ஜெயாவுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமான ஒரு வரன் பார்த்து, ஜாதகமும் பொருந்தி,
மற்ற எல்லா விஷயங்களும் பேசி முடிக்கும் நேரம், நம் ஜெயாவிடமிருந்து இந்த துக்கமான தகவல் வந்தது. நான் உடனே அங்கிருந்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பிள்ளை வீட்டார் ஏதாவது அபசகுனமாக நினைக்காமல் இருக்கவும் தான் அவ்வாறு சொல்லும்படி ஆகிவிட்டது.

என்னிடம் உள்ள பணத்தாலும், செல்வாக்காலும் அவரின் உயிரைத் திரும்பக் கொண்டுவர முடியாவிட்டாலும், அவருடைய உடலையாவது வெகு சீக்கரமாக ‘ஜீ.எச்’ லிருந்து வீட்டுக்குக் கொண்டுவர முடிந்தது. மேற்கொண்டு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளையெல்லாம் எதையும் குறைக்காமல், நல்ல படியாகச் செய்ய, எல்லாச் செலவுகளும் என்னுடையதாகவே இருக்கட்டும் என்று சொல்லி, உன் அம்மாவிடம் நிறைய பணம் கொடுத்துவிட்டு வந்தேன். இந்தப்பணம் கொடுத்த விஷயம் உன்னிடமோ, வேறு யாரிடமோ சொல்லிக்கொள்ள வேண்டாம் என்றும் அவர்களிடம் வேண்டிக்கொண்டேன். எனக்கும், என் மாமனாரின் இந்த திடீர் முடிவில் மிகவும் வருத்தம் தான். விதியை நம்மால் என்ன செய்ய முடியும்? அமரரான உன் அப்பா ஆசீர்வாதத்தால் தான், இந்த ஒரு நல்ல இடம் கைகூடி வந்து நம் ஜெயாவின் கல்யாணம் நல்லபடியாக முடியணும்” என்று சொல்லி, தன் மனைவியின் கைகளை ஆறுதலாகப் பற்றிக்கொண்டார்.

தன் கணவரின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவரின் சமயோஜிதச் செயலையும், தனக்கே கூடத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு அவர் தக்க நேரத்தில் செய்துள்ள உதவிகளையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் ஈஸ்வரி. அவர் இருந்த சூழ்நிலை தெரியாமல், அவசரப்பட்டு ஏதேதோ பேசிவிட்டோமே என வருந்தி, அவர் மீது சாய்ந்த வண்ணம் கண்ணீர் சிந்தினாள், ஈஸ்வரி.

– மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *