சூரிய நமஸ்காரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 7,888 
 
 

சடகோபன் இருபத்து மூன்று வயது வரையிலும் தீவிர முருக பக்தனாக இருந்தான். வைணவக் குடும்பத்தில் இது அரிது என்றாலும் அவன் தகப்பனாரிடமிருந்து தொத்திய நம்பிக்கை. அவன் அண்ணன்கள் இருவரும், அக்காக்கள் மூவரும், அம்மாவும் இதற்கென்றே அவனைக் கேலி பேசுவார்கள். பக்கத்திலிருந்த சிவன் கோவிலில் சுப்ரமண்யர் சந்நிதியில் தினம் பனிரெண்டு முறை பிரதட்சணம் செய்வான். அப்போது டி.எம்.சௌந்தரராஜன் பாடிய அருணகிரி நாதர் படப்பாடல்கள் ரொம்பப் பிரசித்தம். அதிலும் ‘முத்தைத் தரு பத்தித் திரு நகை’யைக் கேட்கும் போதெல்லாம் அவனுக்கு அந்தத் தமிழும், குரலும், சந்தமும், கந்தனுமாகச் சேர்ந்து கண்களில் நீர் தளும்பி விடும். அந்தப் பாட்டு கேட்கும் நேரங்களை அவன் நல்ல சகுனங்களாக எடுத்துக் கொண்டான்.

ஒருமுறை பழனி சென்று அதிகாலை பஸ்ஸில் வந்திறங்கி வீடு நோக்கி நடக்கையில் அந்தத் தெருவில் அவனுடைய நெடுநாள் பிரேமையான சகுந்தலா அவள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். அவள் இவனைக் கவனிக்கவில்லை. அப்போது ஏதோ கோவில் ஒலிபெருக்கியில் ‘முத்தைத் தரு’ வந்தது. அவன் அவளுக்கும் தனக்கும் கல்யாணம் நடந்து விடும் என்பதன் சூசகமான அறிவிப்பாகவே அதை எடுத்துக் கொண்டு அக மகிழ்ந்தான்.

முதலில் மூன்று அக்காக்கள். பிறகு அண்ணன்கள். கடைசி அண்ணனுக்கும் அவனுக்கும் பத்து வயது இடைவெளி. வீட்டில் கடைக் குட்டி என்றால் எல்லோருக்கும் செல்லம் என்பார்கள். அவனளவில் நேர் எதிரிடை. வீட்டில் எல்லோரும் அம்மாவைப் போல் ஒல்லியாக உயரமாக இருக்கையில் இவன் மட்டும் குள்ளமாக குண்டாக. பெரியம்மா அம்மாவிடம் “கடைசி குழந்தையோல்லியோ அதான் உங்க ஆத்துக்காரர் நன்னா அழுந்த சாதிச்சுட்டார். அவர் மாதிரியே அச்சு அசலா அப்படியே இருக்கான்” என்பாள். அதைக் கேட்கையில் சடகோபனுக்கு அவமானமாகவும், கூச்சமாகவும் இருக்கும். வயது ஆக ஆக இவனும் இளைத்துவிட்டான். ஆனால் உயரம் மட்டும் சராசரிதான். அப்பாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவன் பரம வைரியாக மாறியதற்கு அது மட்டும் காரணமில்லை.

அவனுடைய இருபத்து ஒன்றாம் வயதில் சகுந்தலாவிற்கு கல்யாணமாகிப் போய் விட்டதும் முருகனும் சடகோபனை விட்டுப் போய் விட்டான். இருபத்து ஏழு வயது வரை ஆஞ்சனேய பக்தனாகவும், திருமணத்திற்குப் பின் ராம பக்தனாகவும் ஆனான். வயது நாற்பத்தைந்தில் அவன் பெற்றோர் இருவரும் அவர்கள் சென்ற ஆட்டோவோடு இரயிலில் அரைபட்டு இறந்ததும் யாருடைய பக்தனாக இருப்பது என்று தெரியாமல் போயிற்று.

வயிற்றுப் பிழைப்பு சகோதர சகோதரிகளை வேறு வேறு ஊர்களில் வாழுமாறு செய்ததும், காசு விஷயத்தில் அப்பா குணம் அப்படியே இறங்கியிருந்ததால் எல்லோரும் அதில் மிகவும் கணக்காக இருந்ததும் அந்தக் குடும்பம் சிதறாமல் இருக்க முக்கிய காரணங்கள் ஆயின. தவிர மாநில அரசு ஊழியரான அப்பாவின் சொற்ப வருமானத்தில் இவர்கள் அடித்துக் கொள்ளவோ, பிரித்துக் கொள்ளவோ ஒன்றும் மிச்சம் இல்லை. பெற்றோரும் ஒவ்வொரு பிள்ளை வீட்டிலும் கொஞ்ச கொஞ்ச நாட்கள் இருந்து சாகும் வரை காலம் தள்ளினர். சென்னையில் இருந்ததாலும், சடகோபனின் மனைவி இருப்பதிலேயே சாதுவாகவும், சீக்காளியாகவும் இருந்ததாலும் அவனோடு அதிக நாட்கள் இருப்பார்கள். எந்த வீட்டில் இருக்கிறார்களோ அப்பாவின் பென்ஷன் பணம் அந்த வீட்டிற்கு.

கோபம் என்ற ஒரே ரசத்தைத்தான் சடகோபனின் அப்பா சதா சர்வ காலமும் அப்யசித்தும் அபிநயித்தும் வந்தார். அதுவும் மகன் ஒல்லியானதோடு அன்றி, முருகனையும் கை விட்டு விட்டான் என்றதும் அவர் கோபத்துக்கு அசைக்க முடியாத காரணம் கிடைத்து விட்டது என்று நம்பினார். பாக்கி மகன்கள் வீட்டிலும் அவர் அப்படித்தான் இருந்தார் என்பது வேறு விஷயம். அம்மாவும் அவருக்கு சளைத்தவளில்லை.

அதனால் அவர்கள் வீட்டில் மாமியார் மருமகள் சண்டையைத் தவிர மாமனார் மருமகள் சண்டைகள் அடிக்கடி நடக்கும். அப்பா அம்மா போனது மிகப் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. எனினும் உள்ளூர சடகோபன் இனி வீட்டில் சண்டை குறையும் என்று நம்பினான். வயது நாற்பத்தைந்து ஆகி விட்டது. இனியும் அவன் இவன் ஏன். நம்பினார். அவர் நம்பியதற்கு மாறாக புருஷன் பெண்டாட்டி சண்டையும், வளர்ந்து விட்ட இரு மகன்களோடு இவர்கள் இருவரும் போடும் சண்டைகளும் அதிகரித்தன. மனைவி வேதாவும் முற்றிலும் மாறி விட்டாள் என்பதை அவர் அப்போதுதான் கவனித்தார்.

ஒரு சிலம்பாட்டம் போல் எல்லா சண்டைகளுக்கும் எப்படியோ புயலின் கண்ணாக ஆகி விட முயலும் சடகோபன் எல்லோருக்கும் நல்லவராக நியாயவானாக இருக்க முயன்று எல்லோரோடும் சண்டை போட்டு எல்லாருக்கும் கெட்டவரானார்.

யாருக்கு பக்தனாக இருப்பது என்று தெரியவில்லை என்று சொன்னோமல்லவா. பெற்றோர் விபத்தில் மறைந்தது மற்றும் மகன்கள் இருவர் தந்த நெருக்கடியாலும் அவர் கோவில்களையும், தெய்வங்களையும் விட்டு விட்டார்.

இந்த சந்தர்பத்தில்தான் சடகோபனுக்கு ஓஷோ, ஜே.க்ருஷ்ணமூர்த்தி, ராம க்ருஷ்ணர், மற்றும் ஜக்கி வாசுதேவ், ரவி சங்கர் போன்றோர் பரிச்சயமாகி கடைசியில் இப்போது ரமணரிடம் வந்து நிற்கிறார். வயதும் அறுபது ஆகி விட்டது. வாழ்க்கையைத் துவக்கிக் கொண்டே இருக்கிறார். எஃப் டி.வி.யும், ஹிந்தி பாப் ஆல்பங்களும் ஓஷோவும், ரமணரும் அவரை பங்கு போட்டுக் கொண்ட காலத்தில் பையன்கள் இருவரும் திருமணம் முடிந்து வேளியூர்களில் (தனியாகப் போவதற்கென்றே) செட்டிலாகி விட்டார்கள்.

இன்று கூட தூக்கம் வரவில்லை. அவர் என்றுமே தூக்கத்திற்கு தவித்தவரில்லை. மத்யானம் இரண்டு மணி நேரம் தூங்குவதால் இரவு லேட் ஆகிறது. மணி பதினொன்று. எஃப் டி.வி. ஓடிக் கொண்டிருந்தது.

ரமணரின் ‘நான் யார்’ என்ற கேள்வி ஒரு வாரமாகவே சடகோபனைக் குடைந்து கொண்டிருந்தது. ஓஷோ வேறு மேத்ஸ், ம்யூசிக், மெடிடேஷன் என்கிறார். முதலிரண்டோடும் சடகோபனுக்கு சுமுக உறவு இருந்ததே இல்லை. மூன்றாவது என்ன என்று புரியவேயில்லை.

‘நான் என்றால் சடகோபன்.’ இதில் வேறு என்ன இருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. ஒரு வேளை ரமணர் ‘தான் யார்’ என்று நம்மிடம் கேட்கிறாரோ என்ற சந்தேகம் வேறு வந்தது. ரமணர் மகான். சடகோபன் மகானில்லை. சடகோபன் ரிடையர்ட் மேனேஜர் – ஃபைனான்ஸ், பாரத் கேபிள்ஸ். கண் பவர் -6. அப்பா அம்மாவின் பிள்ளை. வேதாவின் கணவன். இரண்டு பையன்களின் தந்தை. மூன்று பேத்திகளின் தாத்தா. அக்காக்கள், அண்ணாக்களின் தம்பி. தக்காளி அலர்ஜி. இந்தக் கேள்விக்கு இவ்வளவு தெளிவான பதில் இருக்கையில் என்ன சிக்கல். மேலும் சொல்லப் போனால் பி.பி. சுகர் பேஷன்ட். இப்போ ரத்திரி போட்டுக் கொள்ள வேண்டிய மாத்திரையை மறந்து போன… திடுக்கென்று ஞாபகம் வந்து உள்ளே எழுந்து போனார்.

வேதா தூங்கி இரண்டு ஜாமம் ஆகி இருக்கும். சின்ன லைட்டைப் போட்டு மாத்திரை இருந்த மேஜையை நெருங்குகையில் “என்ன கண்றாவி இது? பாதி ராத்திரியிலே லைட்டைப் போட்டு ஏன் உயிரை வாங்கறேள்” என்று வேதா சீறிப் பாய்ந்தாள். அவள் கண்கள் கூசி திறக்கப் படாமலேயே இருந்தன. இவருக்கு அப்போது கூட ஆத்திரம் வரவில்லை. “மாத்ரை, மாத்ரை” என்று சொல்ல முற்பட்டார். அவள் “நாசகார குடும்பம். கொடுமை செஞ்சுதானே பழக்கம். இன்னும் தீரலையா? அப்பன், ஆயீ, பிள்ளைகள்னு கூட்டம் மொத்தமும் கொலைகாரக் குடும்பம்.” என்று உச்சஸ்தாயியில் கத்தினாள்.

பக்கத்து வீட்டுக்கெல்லாம் அவள் கத்துவது கேட்கும் என்ற பயத்தில் ஆத்திரம் மிக அவர் கட்டில் மீது பாய்ந்து அவள் வாயைப் பொத்தினார்.

“கொலைகாரா கொலைகாரா” என்று அவள் குழறினாள்.

“கத்தாதே” என்று அடங்கிய குரலில் கூறிவிட்டு, இனி கத்த முற்பட மாட்டாள் என்று நிச்சயம் ஆன பிறகே, கையை எடுத்து கட்டிலிலிருந்து இறங்கி மத்திரையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அவருக்கு ஆத்திரம் பொங்கியது. ட்யூப் லைட், அலங்கார விளக்கு, வழி விளக்கு, அட்டாச்ட் பாத் ரூமைத் திறந்து அதனுள் இருந்த விளக்கு எல்லாவற்றையும் போட்டார். போட்டு விட்டு ஒரு நாற்காலியின் மேல் அமர்ந்து கொண்டு மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் விட்டு விழுங்கினார். இப்போதைக்கு விளக்குகளை அணைக்கப் போவதில்லை என்கிற மாதிரி சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

வேதா ஒரு தலையணையை எடுத்து முகத்தின் மேல் வைத்து அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கு இரண்டு சிசேரியன்கள். அதைத் தவிர பித்தப் பை மற்றும் கருப்பை எடுத்தல் என்ற இரண்டு ஆபரேஷன்கள் நடந்திருந்தன. அவ்வளவு அறுத்தும் திமிர் அடங்கவில்லை என்று சடகோபனுக்கு வழக்கம் போல் அப்போது தோன்றியது.

எவ்வளவு சண்டைகள். அப்பா, அம்மா, மனைவி, பையன்கள் என்று பங்கேற்பவர்கள் இணை சேர்ந்து, கூடிக் கூடி மாறி, மாறி வந்தாலும் போர்கள் நிற்பதேயில்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து கொண்டேதானிருக்கின்றன.

கொஞ்ச நேரம் கழிந்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண் வேறு லேசாக எரிந்தது. வேதா அசையவே இல்லை. மெல்ல எழுந்து ஹாலில் டி.வி.யையும் விளக்கையும் அணைத்தார். பிறகு ஒவ்வொரு விளக்காக அணைத்து விட்டு பாத் ரூம் கதவை சாத்தி விட்டு கட்டிலில் ஏறி தன் இடத்தில் படுத்துக் கொண்டார்.

ரொம்ப தூரத்தில் கேட்ட நாய்களின் ஊளைகளையும், குரைப்புகளையும், மின் விசிறியின் சுழற்சியையும் தவிர வேறு சப்தமே இல்லை. ஆத்திரம் மிதமாகி அடங்கிக் கொண்டிருந்தது.

வேதா தலையணையை முகத்திலிருந்து எடுத்து விட்டு “இத்தனை வயசாயும் உனக்கு புத்தியில்லையே. நீ சேவிக்கிற அந்த ரமணர்தான் உனக்கு சொல்லணும். அவர்தான் உனக்குப் புரிய வைப்பார்” என்றாள்.

ஆத்திரம் மீண்டும் உயிர் பெற, படுக்கையில் அவள் பக்கம் திரும்பி எழுந்தவாறே பல்லைக் கடித்துக் கொண்டு “என்னடி சொல்லுவார்” என்றார் சடகோபன்.

“நீ ஒரு எச்சக்கலை நாயின்னு”.

– சொல்வனம், ஜூலை 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *