சூரியக் கதிர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 7,778 
 
 

யானைகள் பொருத போர்க்களத்துச் சிதறல்களாய் நீரின் பொலிவைக் காட்டிக் கொண்டு முட்டு முட்டாய்க் கிடக்கும் பாறைகளில் கால் வைத்து, பள்ளங்களிடையே சிறிதாகத் தேங்கிய நீர்க்குட்டைகளைக் கடந்து அவர்கள் வெகுதூரம் வருகிறார்கள். முதல் நாள் பகலில் அவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி ஆவலுடன் நீராட வந்தபோது, பாறைகளாக விரிந்து கிடந்த தொலைவைப் பார்த்து மலைத்தார்கள். கோடை இன்னும் முழுக்கருமையையும் காட்டாத பங்குனி முதலிலேயே அனல் பொறிகள் பறக்கும் வெப்பம் அவர்களின் உற்சாகத்தை விரட்டி அடித்து விட்டது.

“என்னமோ எல்லாரும் பிரமாதமாகச் சொன்னாங்க. துங்கபத்ரா ஸ்நானம், மடத்தில் எல்லாருக்கும் சாப்பாடு உண்டு. ஒரு காட்டேஜ் எடுத்திட்டா சுகமாத் தூங்கி அமைதியாக இருக்கலாம்னு சொன்னாங்க. ஸ்நானம்னதும் ஹரித்துவாரம் தான் எனக்கு ஆசையைக் கிளப்பித்து, பத்து நாள் லீவைப் போட்டுட்டு, உன்னையும் கிளப்பி இழுத்திட்டு வந்தா, இந்தப் பாறையும், குட்டைத் தண்ணியுமா இருக்கேன்னு ஆயிட்டுது…”

“தண்ணி ஓடுறாப்போல இருக்கு அங்கங்க… ஜனங்க போயி குளிக்கிறாங்களே…”

“கால வேளையில் சுகமாத்தான் இருக்கு… அதோ, அங்க நல்ல ஓட்டம் – இந்தப் பாறையைத் தாண்டிப் போயிடுவோம்… வா!”

“எச்சரிகே…! பூஜ்ய ராகவேந்திரசாமி பக்த ஜனகளிகே, போலீசாருட எச்சரிகே…!”

ஆரவாரமற்ற ஆற்றின் பரந்த வெளியின் மனோகரமான காலைப்பொழுதில் இந்த ஒலி, செவிகளுக்கு உவப்பாக இல்லை.

“இவன் எதற்கு இப்படி எச்சரிக்கை எச்சரிக்கைன்னு உயிரெடுக்கிறான்…? விலாஸ்… விலாஸ்… மெள்ள பார்த்து… இங்கே பாறை இருக்கு…!”

கமலினி முன்னே நீருக்குள் மெள்ளத் துழாவினாற் போல் நடந்து பெரிய பாறை ஒன்றில் ஏறுகிறாள்.

விலாசினிக்கு ஆறு குளம் எதுவும் பழக்கம் கிடையாது. எப்போதும் தண்ணீர் தட்டான நகர குளியலறையில் நாலு செம்பு ஊற்றிக் கொண்டு மீளும் குளியலே ‘லக்ஷவரி’ என்று தோன்றும். கமலினியின் தோழமையும், விடுதி வாசமும் கூடி மூன்று வருஷங்களே ஆகின்றன.

“நீ என்ன கமலி, என்ன விட்டுட்டு முன்ன போனா…? பேசாம நான் பாத்ரூமிலே குளிச்சிருப்பேன். தொந்தரவு பண்ணுற…?”

குழந்தைக்கு ஒரு வயசு நிரம்பியிருக்காது என்று தோன்றுகிறது. அது அழவில்லை. கக்கக்கென்று சிரிக்கும் வண்ணம், இருவரும் மாற்றி மாற்றித் துங்கை நீரை அது அனுபவிக்கச் செய்கிறார்கள்.

குடத்தைத் தேய்த்துக் கவிழ்த்துவிட்டு, உடன் வந்த சிறுமி ஆற்றில் குள்ளக்குடைய நீராடுகிறாள்.

“என்ன விலாஸ்… உக்காந்திட்டிருக்கே…? செம்பு கொண்டு வரலியே, மொண்டு ஊற்றிக்கன்னு பாக்கிறீயா…? வா, வா”

பாறையிலிருந்து கையைப் பற்றி நீருக்குள் இழுக்கிறாள் கமலினி. இவளுடைய மறுப்புகள், அம்மா போதும், போதும் விடு கமலி என்ற ஒலிகள் எடுபடாதபடி நீரை வாரி அவள் மீது அடிக்கிறாள்.

“சீ, என்ன கமலி விளையாட்டு…? நாற்பத்தஞ்சும் நாற்பத்தெட்டும் விளையாடும் விளையாட்டா இது…?”

“ஸோ வாட்…? தண்ணீருக்கும் வயசுக்கும் என்ன சம்பந்தம்…?”

“ஏம்மா துங்கபத்ரா…? உனக்கென்ன வயசு…? … உங்கூட விளையாடக்கூடாதா…?”

கமலினிக்கு எங்கெங்கோ தேக்கி வைத்த உற்சாகங்களெல்லாம் மடைபுரண்டு வருகிறது. அவள் பூர்விகம் தெற்குச்சீமை, பாபநாசமோ, அம்பாசமுத்திரமோ சொல்வாள். தாமிரவருணியில் விழுந்து நீச்சல் அடிப்பாளாம் பத்து வயசில். பிறகு தான் அவள் தந்தை பூர்வீக சொத்தை விற்று, பட்டணத்தில் ஓட்டல் தொடங்கி, எல்லாவற்றையுயம் இழந்து ஐந்து குழந்தைகளை விட்டு மாண்டுப் போனாராம். இவள் தாய்க்குத் தலைக்குமரி, யார் சிபாரிசோ, தொலைபேசித் துறையில் வேலை பெற்று, மூன்று தம்பிகளையும், ஒரு தங்கையையும் படிக்க வைத்து குடும்பக்காரர்களாக்கும் பொறுப்பையும் முடித்திருக்கிறாள். பறவைகள் ஆங்காங்கு பறந்து சென்றதும், உழைக்கும் பெண்களுக்கான விடுதியைத் தன் இருப்பிடமாகக் கொண்டாள்.

விலாசினியும் ஏறக்குறைய அவளைப் போன்றவளே. ஒரே ஒரு சிறு வித்தியாசம். இவள் கல்யாணம் என்ற ஒன்றின் கசப்பு மாத்திரை அனுபவத்தைப் பெற்றவள். விடுதியில் அவள் அறையைப் பகிர்ந்து கொண்ட பிறகுதான், ஒத்த தோழமை என்ற சொல்லின் இனிய பரிமாணங்களைக் காண்கிறாள்.

“இந்த சுகமான ஓடும் நீரை அனுபவிக்காமல்…”

அவளை நீரில் அமிழ்த்தி, திணறத் திணறத் தலையை முழுக்கி நீராட வைக்கிறாள்.

“ஓ… தண்ணீ ர்… இனிய ஆற்றுநீர்… அம்மம்மா , இது உடலை மட்டும் புனிதமாக்கவில்லை, நாடி நரம்பெல்லாம் பாய்ந்து உணர்வுகளை எல்லாம் புனித வாரிதியில் மூழ்கச் செய்கிறது.”

“போதும்… போதும் கமலி.. கமலி.. சேலை துணி எல்லாம் சொட்டச் சொட்ட ஒட்டிக்கொண்டிருக்கு… எப்படி ரூமுக்குப் போக…?”

“ரூமுக்குப் போக என்ன அவசரம்…? விலாஸ்… என் கடைசி ஆசை என்ன தெரியுமா…?”

“இனிமேல் உன்னோடு வரவே கூடாது…” என்று விலாசினி முணுமுணுக்கிறாள்.

“தொங்கலு உண்டாரு… ஜாக்ரத…?” என்று ஒலி பெருக்கி முழங்குகிறது. களுக்கென்று யாரோ சிரிக்கிறார்கள்.

விலாசினி திரும்பிப் பார்க்கிறாள். அந்தப் பெண், பாறையில் அமர்ந்து நீராட்டிய குழந்தைக்கு, சேலைத் தலைப்பை மறைத்துக் கொண்டு பாலூட்டுகிறாள்.

சூரியன் தன் முதற்கிரணங்களை அவிழ்க்கிறான். இளைஞன் துணிகளைத் துவைத்துப் பிழிந்து, அந்தச் சிறுமியின் உதவியுடன் பாறையில் நன்றாகக் காய வைக்கிறான். அவளுடைய பூப்போட்ட துணிச்சேலையையும் நன்றாகப் பிரித்து அவன் காயவைப்பதை அதிசயமாகப் பார்க்கிறாள்.

குழந்தையைச் சற்று எட்டி இறக்கத்தில் ஈர மணல் பக்கம் உட்கார்த்தி, அந்தப் பெண்ணிடம் ஏதோ சொல்கிறாள். கையில் ஒரு மலிவு பிளாஸ்டிக் பொம்மையைக் கொண்டு வந்து அந்தப் பெண் குழந்தைக்குக் கொடுக்கிறது.

பிறகு இவளும் நீராடச் சித்தமாகிறாள், உள்ளாடை ரவிக்கை களைந்து சோப்புப் போட்டு உலர்த்திவிட்டு, சேலையை வரிந்து இறுக்கிக் கொண்டு கணவன் நீராடும் இடத்திற்குப் போகிறாள்.

இத்தனை நேரமும் முதுகையே காட்டிக் கொண்டிருந்த அவள் முகம் தெரியத் தெலைவில் காட்சி அளிக்கிறாள்.

விலாசினிக்கு எங்கேயோ நினைவின் பிசிறுகளைச் சுண்டி விட்டாற்போல் தோன்றுகிறது.

யார்… யார்…?

இருபது வருஷ காலமாக, இதழ்பிரியும் அரும்புகளாகக் கொத்துக் கொத்தாக எத்தனையோ முகங்களைப் பார்த்தால் பேசிச் சிரித்து, அறிவுக்காள் பிரித்து உறவாடிய நினைவுகளின் இழைகள் நெஞ்சில் மோதுகின்றன. யார்… யாராக இருக்கும்…? இப்படி நினைவில் நிற்கும் சிவப்பு…? சௌமினியோ…? கன்னடம் பேசுகிறாளே, சௌமினி கன்னடக்கிளி இல்லையோ…? பத்மு… கன்னடம்… சிவப்புத் தான்… ஆனால் இப்படி ஒரு வண்ணம் இருக்காதே…? ஒரே ஒரு பருக்கைக்கல்தான் குத்துகிறது. ஆம், பருக்கைகல்… | சுவரில் அடித்தாற்போல் அவள் திருமணமாகிச் சென்று மூன்றேமுக்கால் நாழிகையில் கணவன் வீட்டிலிருந்து திருப்பி விடப்பட்டபோது….

கடைசித் தம்பி மூன்று வயசு; அம்மா செத்துப் போனாள். இரண்டு தங்கைகளையும் ஒப்பேறவிட்டு அப்பாவும் போய்ச் சேர்ந்தார். அவள் விட்ட படிப்பைத் தொடர்ந்து பயிற்சி பெற்று, பள்ளிக்கூட ஆசிரியையாக அப்போது வேலையும் செய்து கொண்டு, தாய்க்குத் தாயாகத் தங்கைகளுக்கும் தம்பிக்கும் எல்லாப் பொறுப்பையும் சுமந்து நடந்தாள்….

“உங்க மகனா டீச்சர்…?”

“ஆமாம், இப்ப டென்த் போறான்…”

“தம்பு…? அம்மா இருக்காங்களா….?” என்றுதான் எல்லாரும் கேட்டார்கள்.

“தாய் தகப்பனுக்கு மட்டும் கொள்ளி போடப் பிறக்கவில்லை. அவளுக்கும் அவன்தான்…! என்று தொட்டுத் தொடாத உறவுகள், அவளுக்கும் ஒரு பிடிப்பு வேண்டுமே!” என்று அவர்கள் பிணைப்பை உறுதிப்படுத்தினார்கள்.

தம்பு மூணு சப்ஜக்டிலும் நல்ல மார்க் எடுத்திருக்கிறான். அவனை எப்படின்னாலும் என்ஜினீயரிங்கில் சேர்க்கணும்…! என்று முயன்றாள். அவன் சூரத்தில் சேர்ந்து படித்தான். படிப்பு முடிந்து, அவன் சென்னையிலேயே சைக்கிள் தொழிலகத்தில் வேலைக்கும் சேர்ந்தபோது, விலாசினி பூரித்துப் போனாள். கணவனால் நிராகரிக்கப்பட்டவள் என்ற வடு, போன இடம் தெரியவில்லை .

மாநிறமானாலும் வாட்டசாட்டம், எல்லோரும் மதிக்கும் தம்புவைக் காணக்காண அவள் பெருமிதத்துடன் கட்டிய ஆகாயக்கோட்டைகள் ஆனத்தம். அவனுக்கு வரப்போகும் பெண்… வளர்ந்து படித்து, அழகாக, அன்பாக, வீட்டின் விளக்காக இருப்பாள். தன் வயிற்றில் பிறக்காத அந்த மகனும் அவளும் இணைந்து வாழ்வதையும் பேரன் பேத்திகளைத் தான் கையில் பிடித்துக் கொண்டு, பூந்தோட்டத்தில் உலவி வருவதையும் ஓய்வு காலத்தைக் கழிப்பதையும் எண்ணிப் பார்ப்பாள்.

தெரிந்த இடங்களில் சொல்லி வைத்திருந்தாள்.

ஆனால், அவளுக்கு எந்தச் சிரமமும் வைக்காமல், அவனே ஒரு நாள் தன் பைக்கில் அவளை வைத்துக் கூட்டிக் கொண்டு வந்தான்!

“…அக்கா ….இவ… பிரேமா…”

“பிரேம், இவங்கதா… அம்மா …” என்று அடக்கமாகச் சிரித்துவிட்டு ஒதுங்கி நின்றான்.

மின்னலடித்தாற்போல் ஒரு சிவப்பு; கொடிபோல் உடம்பு, சுருட்டையான முடியை இரண்டு மூன்று ரப்பர் வளையம் போட்டுக் கட்டிப் பின்னல் போல் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளைக் காலில் விழுந்து பணியுமுன் விலாசினி தூக்கி விட்டாள்.

“என்ன படிச்சிருக்கே…?”

“பி.யு.சி. படிச்சேன்.”

“ஏன் மேலே படிக்கலே…?”

“… சாரதாம்மா வேலை கிடைச்சிச்சின்னா ‘இருந்திட்டே’ கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் படிக்கலான்னு… டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல சேத்து விட்டாங்க…”

“சாரதாம்மாவா…? யாரு, சேவா நிலையம் சாரதாம்மாவா…?”

“ஆமம்மா. எனக்கு அவங்க தா, தாய் தகப்பெனெல்லாம்” துணுக்குற்றுச் சிரித்தாள் விலாசினி.

“…அக்கா, மனசொப்பி நான் இவளை… நீங்க மறுக்க மாட்டீங்கன்னு முடிவு செஞ்சிட்டேன்…” என்றான் தம்பு.

அவனுக்குப் பிடித்திருக்கிறது. பணம் பணம் என்று அலையாமல் பெருந்தன்மையுடன் எந்த ஆதரவுமில்லாத பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.

கல்வியும் சமூக மதிப்பும் உள்ளவன். இந்த அரிய குணத்தில் இன்னும் உயர்ந்துவிட்டதாக மகிழ்ந்தாள்.

சேவை நிலையத்துச் சாரதம்மாளுடன் மிகச்சிலரே திருமணத்துக்கு அழைக்கப் பெற்றனர். திருநீர்மலைக் கோயிலில் மணம் முடிந்ததும், விலாசினியே அவர்களைத் தேன் நிலவுக்கு அனுப்பி வைத்தாள்.

வெகு விரைவில் சொந்தமாக ஃப்ளாட் வாங்க இருந்தான். அவர்கள் ஊர் திரும்புமுன், தன் செலவில் குடும்பத்துக்கான சில அவசியமான சாமான்களுக்கு ‘ஆர்டர்’ கொடுத்து வரவழைத்து வைத்தாள், சோஃபா செட்டு; இரட்டைக் கட்டில்; பிரஷர் குக்கர்; உணவு மேஜை ஆகியவை அவர்களுக்குத் திடீர் மகிழ்ச்சியையும் வியப்பையும் அளிக்கவேண்டும் என்று, பார்த்துப் பார்த்து, அவைகளைப் போடச் செய்தாள்.

அவளுக்கு இன்னும் கோடை விடுமுறை கழிந்து பள்ளி திறக்கவில்லை. தம்பு ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தான்,

கோடைக்கானல் சென்றவர்கள், போன எட்டாம் நாளே திரும்பி வந்துட்டார்கள்.

“ஹாய், தம்பு! என்ன இவ்வளவு சீக்கிரம்? …..ஆபீசில் கூப்பிட்டுவிட்டார்களா?”

இருவருமே கலகலப்பாக இல்லை. அவள் துணுக்குற்றாலும் காட்டிக்கொள்ளாமல், ”ஏம்மா, பிரேமா?….. உடம்பு ஏதானும் அசௌகரியமா?” என்று வினவினாள்.

“அதெல்லாம் இல்லம்மா!” ச

மைத்துப் போட்டாள். கட்டில், உணவு, மேஜை எல்லாவற்றையும் கண்டு அவர்கள் வியப்புத் தெரிவித்து மகிழ்ச்சிக் கூத்தாடவில்லை. இவளே பேசிக்கொண்டு போனாள். நன்றாக இருக்கிறதா என்று திருப்பித் திருப்பி கேட்டாள்.

எல்லாவற்றுக்கும் ஒரு வார்த்தை அல்லது இரண்டு வார்த்தைகளே மறுமொழியாக வந்தன. அடுத்த நாள் காலையில் அவன் ஏழரை மணிக்கே அலுவலகம் கிளம்பிவிட்டான்.

அவளும் செல்ல ஆயத்தமானாள்.

“ஏம்மா, இனிமே சேல்ஸ் கேர்ல் வேலை வேண்டாம்னு சொல்லல…?”

“இல்லம்மா, நா..நான் சேவா நிலையம் போயிட்டு வந்திடறேன்.” அவள் பதிலுக்குக் காத்திராமலே படியிறங்கிப் போனாள்.

விலாசினிக்கு இருப்புக் கொள்ளவில்லை.

விரும்பி ஒப்பித்தானே மணம் புரிந்து கொண்டார்கள்….

தம்பு… மிக நல்ல ஒழுக்கமுள்ள பையன்தானே? அவன் ஒரு புகைபிடிக்கும் பழக்கம் கூட இல்லாதவன்… இருவருக்கும் என்ன மனஸ்தாபம் நேர்ந்திருக்க முடியும்?

அவன் பிற்பகல் மூன்று மணிக்கே திரும்பிவிடுகிறான்.

“ஏம்ப்பா…ஏதானும் பிரச்சினையா? ஏன் சந்தோஷமா இல்லை?”

“அக்கா, எனக்கு மனசு சரியில்லை . தொந்தரவு பண்ணாதே…” அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டான். அவள் திகைத்துப் போனாள். மாலையில் பிரேமா வந்ததும் சமையலடுப்பின் பக்கம் காபியைக் கலந்துகொண்டே கேட்டாள்…. “என்னம்மா சமாசாரம். எதானாலும் எங்கிட்டச் சொல்லக்கூடாதா?”

“மன்னிச்சுங்கும்மா…என் வாயால் எதுவும் சொல்லும்படி இல்லே. இரவு அவள் முன்னறையில் வழக்கம் போல் படுக்கையைப் போட்டுக் கொள்கிறாள், அவர்களுடைய பிணக்கு வெறும் ஊடல் இல்லை என்று வெட்டவெளிச்சமாயிற்று.

முனுமுனுவென்ற ஒலி, உரத்து வந்தது.

“என் இஷ்டப்படி இருக்க நீ விரும்பலன்னா, நாளைக்கே எங்கயேனாப் போய்க் கொள்! நாயைக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்ச புத்திக்குச் செருப்பாலடிச்சுக்கிறேன்!”

“ஏனிப்படிச் சத்தம் போடுறீங்க. அக்கா காதிலே விழுந்தா வேதனைப்படுவாங்க…”

“பின்ன ஏண்டி, மேத்தா டின்னர் கொடுத்தப்ப வராம மூக்கறுத்தே!”

“இந்த ஹைசொசைட்டி எல்லாம் எனக்குப் புடிக்கல; பழக்கமில்ல. பொம்பளைங்க எல்லாம் லிக்கர் எடுக்கறாங்க!”

“ஏண்டி…? உம்மனசுக்குள் பெரீ…ய்ய காந்தின்னு நினைப்பா? நான் சொல்றபடி கேக்க வேண்டியவதான் நீ! ஸேல்ஸ் கர்ளா நின்னிட்டு, கண்டவன் கூடல்லாம் தொட்டுப் பேசிச் சிரிச்ச கேட்டுக்கு, இது வேறவா? மேத்தா யாருன்னு நினைச்சே? அவன் கோடீசுவரன்டீ! தனி ஃபாக்டரி ஆரம்பிக்கப் போறான். எனக்கு ஏழாயிரம் சம்பளமும் காரும் பங்களாவும் தருவான். அவன் நம்மை மதித்து போன இடத்தில் பார்ட்டி கொடுக்கிறான். என்ன திமிர் இருந்தா நீ அவமதிப்பே? எவளோ பெத்துப்போட்ட அனாதைக்குழந்தை. குப்பையில் கிடந்தவ நீ! புத்தியைக் காட்டிட்டியே?”

“ஐ…ம் ஸாரி.. அந்தாளு பார்க்கிற பார்வை நல்லால்லீங்க!”

“நல்லால்ல? என்னடீ நல்லால்ல…?” பளாரென்று அரை விழும் ஓசை ….

“தம்பு!” விலாசினி அவளையறியாமல் கத்திக் கதவை இடித்தாள். கதவு திறக்கப்படவில்லை. ஆனால் அமைதிப்படுதா கனமாக விழுந்துவிட்டது. ஊடே மெல்லிய விசும்பலொலி அவளுக்கு மட்டும் கேட்டது.

பொழுது விடிந்து பள்ளி திறக்கிறார்கள்; விலாசினி காலையில் எழுந்திருக்கும் முன், பிரேமா எழுந்து பால் காய்ச்சிக் காபி போட்டுக் கொண்டிருந்தாள், காபியைக் கொடுத்துவிட்டு, ‘அம்மா என்னை மன்னிச்சிடுங்க. நான் போறேன். அவங்க என்னைப் போன்னு சொல்லிட்டாங்க…” என்று விழுந்து பணிந்த வண்ணம் கண்ணீர்த் திவலையை ஒத்திக் கொண்டாள். இவள் ஏதும் மறுமொழி கூற நாவெழாதவளாக நிற்கையில், அவள் தன் சிறுபெட்டி, தோல் பையுடன் படியிறங்கிப் போனாள்.

ஆம்… அப்போது அவள் மனத்திரையில் வேறொரு காட்சி. புருஷனுக்கு ஏற்ற அழகு, சிவப்பு, திறமையில்லாதவள் என்று கண்டவர் அனைவரும், அவளைப் பெற்றவள் உட்படக் கருத்துரைக்கும்படியில் கூனிக்குறுகி, பதினெட்டு முழச் சேலையில் ஒடுங்கி, சிங்கத்தின் குகையில் தள்ளிவிடப்பட்ட மானின் மருட்சியுடன் சுருண்டுகொண்டு மூலையில் நிற்கிறாள். பட்டு ஜிப்பாவும் பரிமள வாசனைகளுமாக, அவன் உள்ளே வருகிறான். மெத்தையில் சாய்ந்து கொண்டு, அவளைப் புழுவைப் போல் பார்க்கிறான்.

“ஏண்டி, மூதேவி, வாயேன்! உன் பவிசுக்கும் லட்சணத்துக்கும் நானா உன்னைக் கெஞ்சணும்?…” இந்த உதாசீனத்தில் அவள் கருகிப்போனாள். அழுகை வெடித்து வந்தது.

“ஏண்டி அழற? சனியனே! இப்ப உன்னை என்ன பண்ணிட்டேன்?” என்றான். அவள் அழுகை இன்னும் உந்தலாய்ச் சுவர்களையும் கதவுகளையும் மோத வெளிப்பட்டது. அவன் பொறுமையிழந்து “அம்மா, அம்மா!” என்று கூவினான். கதவு திறக்கப்பட்டது. “இந்தத் தரித்திரத்தை என் தலையில் கட்டினீங்களே? அனுபவியுங்கள்!” என்று சொல்லிவிட்டு அப்போதே வெளியேறினான். உடலும் உள்ளமும் அன்று எப்படி எரிந்ததோ, அதேபோல் எரிந்து கொண்டிருந்தது. விலாசினி பிரேமாவைத் தடுக்கவில்லை.

…பிரேமா… பிரேமாவா அது?….

“என்ன விலாஸ்? திகைச்சுப் போயிட்டே? அவங்களையே பாக்கறே?” ஆம். அவர்களைத்தான் கமலினியும் பார்க்கிறாள். ஒருவர் மீதொருவர் நீரை அடித்துக் கொண்டு, மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டு, அவர்கள் நீராடுகிறார்கள். அவர்களிடம் பணச்செருக்கு இல்லை. அவர்கள் துணிகள் நாகரிக சலவை பெற்றிருக்கவில்லை. நுரைவராத கார சோப்பும், ஆற்று நீரும்தான் உறவு என்று கழுத்தில் பளீரென்று கருமணி இருக்கிறது. அவர்கள் அந்தச் சூழலில் வாழ்க்கையாகிய காவியம் இசைக்கும் இளந்தம்பதி என்று தெரிவிக்கிறார்கள்.

“கண்ணைப் போடாதே, விலாஸ்…!”

“இல்லை கமலி, சுற்றிலும் எத்தனையோ இளசுகள் குளிக்கல? ஆனாலும் இவங்க சந்தோஷம் ரொம்ப இனிமையாத் தெரியுது. “பணக்காரங்க ஸ்விம்மிங்பூலுக்குப் போவாங்க. வீட்டில் கட்டினவளை விட்டுட்டு செக்ரிடரி கூடக் கொட்டம் அடிப்பான். அது ஒரு விடுதலைச் சுகமா? இந்த நிமிஷத்தில் இதெல்லாம் நமக்குன்னு சந்தோஷம், ஒளிவு மறைவு தெரியாத சந்தோஷம்…”

“நான் நினைக்கிறதையே நீயும் சொல்றே விலாஸ்!”

“இந்த மந்த்ராலயம் வந்தது. நினைவில் நிற்கும் விதமாகப் பதிஞ்சுபோச்சு!”

திரும்பி நடந்து வந்து பாறைகளைக் கடப்பது சிரமமாக இருக்கிறது. பெரிய பாறைகளின் நடுநடுவே, கழற்றிப் பிடுங்கி எடுத்தாற்போல கிடங்குப் பள்ளங்கள். கடந்தகால நீர்ச்சுழற்சியின் பயங்கரத்தை…

நீர் எவ்வளவு மென்மையாக, இதமாக இருக்கிறது? ஆனால் அதன் ஆற்றல்…! அவன் அவளை முதல் சந்திப்பிலேயே புழுவாக நினைத்து, அவள் பெண்ணையை, தாய்மைச் சக்தியை உதாசீனம் செய்தான். அவன் அவளைப் பலவந்தம் செய்திருந்தால் கூட ஒருவேளை பூச்சியாகப் போயிருந்திருப்பவளாக இருக்கும். அவன் அவமதிப்பு அவள் வீம்பையும் உறுதியையும் அவனை வாழ்விலிருந்தே அகற்றிவிடும் அளவில், சமூக நிராகரிப்பையும் பொருட்படுத்தாத வகையில் வளர்ந்தது….

செருப்பில் மண் புகுந்துவிட்டது. விலாசினி சற்றே நிற்கிறாள்.

‘அம்மா நமஸ்காரம்… ஆசீர்வாதம் பண்ணுங்கோம்மா!” பிரேமாதான். கருவிழிகள் அசாத்தியமாகப் பளபளக்கின்றன. அவள் குழந்தையை நீட்டுகிறாள். இருவருமாக அவள் கால்களைத் தொட்டுப் பணிகின்றனர்.

“எங்க குழந்தைக்கு ப்ரசாத்னு பேரு வச்சிருக்கோம். ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா…!”

குழந்தையை உச்சிமோந்து முத்தமிட்டு ஆசி பொழிகிறாள் விலாசினி. கண்ணீர் மல்குகிறது.

“நீ …ங்க இங்கதான் இருக்கிறீங்களாப்பா…?” அவன் கன்னடம் கலந்த தமிழில் பதிலிறுக்கிறான்.

“ஆமா… சாயங்காலம் டிஃபன் ரூம் வச்சிருக்கிறோம். இட்லி, தோசை, வடை எல்லாம் போடுகிறோம். இப்படி பந்து எரடு வருஷமா யிருந்தோம்மா. நம்ம மன யல்லி தா… எல்லா வாங்கோம்மா…!”

“நீங்க எங்கம்மா தங்கிருக்கிறீங்கோ …?”

“பஸ் ஸ்டாண்ட் பக்கம் மெயின் ரோட்ல தா ஒரு ஓட்டல்ல. தேவஸ்தான ரூம்ல தண்ணி இருக்காது என்றான்…”

“ஓ… நம்ம எடத்துக்குப் பக்கத்தில் ஸௌகர்யமா ரூமிருக்கம்மா, நா வாங்கித்தர்ரேன். ‘ராகவேந்திர ப்ரஸாத்’ன்னு போட்டிருக்கும். பக்கத்தில்தான் நாங்க இருக்கிறது.”

“வாரேம்மா…! அவசியமா வாரேன்…! ரொம்ப சந்தோஷமாயிருக்கு….!” குழந்தையை வாங்கிக் கொள்கிறாள். கூட வந்த சிறுமி குடத்து நீரைத் தலையில் ஏற்றிக் கொண்டு படியேறிப் போய்விட்டாள். இவர்கள் இருவரும் மாறி மாறிக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு நடந்து செல்கின்றனர்.

கமலினி படிக்கட்டின் அருகில் இவளுக்காகக் காத்து நிற்கிறாள்.

“உன்னைப் பார்த்துப் பொறாமையா இருக்கு விலாஸ்…!” விலாசினி நீர்க்கரையில் செழித்திருக்கும் அரளி மேட்டைப் பார்க்கிறாள். கொத்துக் கொத்தாக மொட்டும் மலருமாக … பூக்கள்… சூரியனின் கிரணம் சுட்டுப் பொசுக்கும் வன்மையுடையதுதான். ஆனாலும் இந்தப் பூக்களில் இதழ்களை எவ்வளவு நேர்த்தியாக மென்மையாக மலரச் செய்கிறான்….?

“எந்த மூலைக்குப் போனாலும் இப்படிக் காலில் விழுந்து கும்பிடற பழைய ஸ்டூடண்ட்…!”

விலாசினி புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறாள். இவளுக்கு அப்படியே இருக்கட்டும். இன்னும் வெகுகாலம் குறைந்தபட்சம் இந்த ஊரில் தங்கும் நாட்கள் வரையிலேனும், சொல்ல வேண்டாம்… ‘பெண்மை உதாசீனம் செய்யப்பட்டுக் காலடியில் தேய்ப்பதற்கல்ல’ என்று போற்றத் தெரிந்த அந்த இளைஞனையும் அவளையும் தொலைவில் பார்த்துக் கொண்டே படியேறுகிறாள்.

ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *