சூனியக்காரனின் முதலிரவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,857 
 
 

ஆலாந்துறை நஞ்சப்பன் படு பிரபலம் ஆகிவிட்டார். தனக்கு பிடிக்கவில்லையெனில் யாரை வேண்டுமானாலும் கொன்றுவிடுவார் என்பது முதற்காரணம். பில்லி சூனியத்தில் அவரை அடிக்க சுற்றுவட்டாரத்தில் ஆள் இல்லை என்பது இரண்டாவது காரணம்.

நாற்பது வயது. நெடு உருவம். கறுத்த தேகம். ரெட்டை மாடு பூட்டப்பட்ட வண்டியில் ஆஜானுபாகுவான அவர் போகும் போதெல்லாம் பெண்கள் வீடுகளுக்குள் புகுந்து தாழிட்டுக் கொள்வது சாதாரணமான காட்சி. ஆண்கள் தங்களின் தோளில் துண்டு இருந்தால் எடுத்து அக்குளில் செருகிக் கொள்வார்கள். இந்த மரியாதையைச் செலுத்துவதில் வயது, சாதி என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது.

நஞ்சப்பன் வெளியூர்க்காரர். ஆலாந்துறைக்கு முதன் முதலாக வந்து மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக குடிசை போட்டபோது அவருக்கு அப்படியொன்றும் மரியாதை இல்லை. வெளியூர்க்காரனை எப்படி பார்ப்பார்களோ அப்படித்தான் ஆலாந்துறைக்காரர்கள் பார்த்தார்கள். அந்த ஊர் பெரிய தோட்டத்து பழனிச்சாமிக்கு கடவுள் என்றாலே ஆகாது பில்லி சூனியம் என்றால் ஆகுமா? நஞ்சப்பனின் குடிசைக்கு முன்பாக வந்து அவரை கண்டபடி திட்டத்துவங்கினான். வெற்றிலை பாக்கை மென்றபடிக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நஞ்சப்பன் அவன் நகர்ந்தவுடன் அவனது காலடி மண் ஒரு பிடியை எடுத்துக் கொண்டு தனது குடிசைக்குள் போனதை அக்கம்பக்கத்தினர் பார்த்தார்கள். அடுத்த மூன்றாவது நாள் காலையில் படுக்கையில் இருந்து எழ முடியாமல் பழனிச்சாமி ஓலமிட்டான். ஊரே திரண்டுவிட்டது. இதற்கு காரணம் நஞ்சப்பன் என்று ஊர்க்காரர்கள் முணுமுணுத்துக் கொண்டார்களே தவிர யாரும் வெளிப்படையாக பேசவில்லை.

இதன் பிறகாக முச்சந்தி, இட்டேரி என பல இடங்களிலும் முட்டை, தலைமுடி கோர்க்கப்பட்ட எலுமிச்சை போன்ற வஸ்துகளுடன் சில சமயங்களில் மண்டையோடு கூட தென்படத் துவங்கின. ஊர்க்காரர்கள் நஞ்சப்பனைக் கண்டு பயப்பட ஆரம்பித்தார்கள். அதே சமயம் நஞ்சப்பனை பார்க்க வெளியூர்க்காரர்கள் வந்து போவது சகஜமாகிவிட்டது. அமாவாசை தினங்களில் சுடுகாட்டில் மந்திர உச்சாடனம் படு பயங்கரமாக கேட்கத் துவங்கியது. அந்த நேரத்தில் நஞ்சப்பனின் குரல் அதிரும். இடையிடையே கேட்கும் பெண் குரல்தான் நஞ்சப்பனின் குரலை விடவும் திகிலூட்டுவதாக இருக்கும். சில சமயங்களில் அது பரிதாபமான அபயக் குரலாகவும், வேறு சில சமயங்களில் மிரட்டலாகவும், பல சமயங்களில் வெறும் அழுகையாகவோ அல்லது சிரிப்பாகவோ இருக்கும்.

இந்த வித்தியாசமான சத்தங்களினால் இரவில் விழித்துக் கொள்ளும் குழந்தைகளை தூங்க வைப்பது ஊர்க்காரர்களுக்கு பெரும்பாடாக இருந்தது. அடுத்த நாள் குழந்தைகளுக்கு அனேகமாக காய்ச்சல் வந்திருக்கும். புருவ முடிகள் விறைத்துக் கொண்டு நிற்பதாக கிழவிகள் அடையாளம் காட்டுவார்கள். தூக்கிக் கொண்டு நஞ்சப்பனிடம் போவதைத் தவிர ஊர்க்காரர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. சுடுகாட்டு சாம்பலை நெற்றியில் பூசி விடுவார் அல்லது யந்திரம் ஒன்றைக் கொடுத்து பொழுது சாய்வதற்கு முன்பாக அரைஞாண் கயிறில் கட்டிவிடச் சொல்லி அனுப்பிவிடுவார். சில குழந்தைகள் ஜன்னி கண்டு இறந்துவிடுவதும் உண்டு. ஆனால் அப்பொழுதும் கூட யாரும் நஞ்சப்பனை எதிர்க்க துணியவில்லை. ஊர்க்காரர்களுக்கு நஞ்சப்பனைக் கண்டால் அத்தனை பயம்.

வசியம் செய்வதற்கும், எதிரிகளை நசுக்குவதற்கும் பணம் படைத்தவர்கள் நஞ்சப்பனை தேடி வரத் துவங்கினார்கள். முதலில் தனது கஸ்டமரின் எதிரிகளை அழைத்து மிரட்டிப்பார்ப்பார். வழிக்கு வராத பட்சத்தில் துப்பாக்கியை காட்டுவார். அப்படியும் மசியாத போதுதான் பில்லி சூனியத்தை கையில் எடுப்பார். கோபம் எல்லை மீறும் சமயங்களில் கொன்றும் விடுவதும் உண்டு. நஞ்சப்பனின் வருமானம் யாருமே எதிர்பாராத அளவில் கொட்டியது. நாதே கவுண்டன் புதூர் பெரியதோட்டத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார். தன்னால் கொல்லப்பட்டவர்களை அந்த தோட்டத்தின் கிணற்று மேட்டிலேயே புதைத்து விடுகிறார் என்றும் பேச்சு உண்டு.

இதன் பிறகுதான் ரெட்டை மாட்டு வண்டி, பெண்கள் தாழிட்டுக் கொள்ளுதல், ஆண்கள் அக்குளில் துண்டை செருகுதல் இத்யாதி, இத்யாதி எல்லாம்.

நஞ்சப்பனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. அறுபதைத் தாண்டியும் வாரிசு இல்லாமல் இருந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணாகிவிட்டதாகவும் முதல் மனைவியின் இரத்தத்தை ஒரு காட்டேரி கேட்டதால் அவளின் கழுத்தை அறுத்து காட்டேரிக்கு கொடுத்துவிட்டு அதற்கு பிரதியுபகாரமாக அதனிடமிருந்து பெரும் பலத்தை பெற்றுக் கொண்டாராம். இதை நஞ்சப்பனின் தோட்டத்தில் வேலை செய்யும் கருப்பன்தான் சொல்லியிருக்கிறான். ஆனால் இதை யாரும் பார்த்ததில்லையாம். கருப்பன் சொல்வது உண்மையாக இருக்க கூடும் என ஆலாந்துறைக்காரர்கள் நம்பினார்கள்.

தனக்கு வாரிசு இல்லை என்பதைப் பற்றி நஞ்சப்பன் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்காகவாவது ஒரு வாரிசு தேவை என நினைத்தார். திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டு பல இடங்களுக்கும் ஆள் அனுப்பினார். ஒருவரும் பதில் சொல்வதாகத் தெரியவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பிறகாக மிரட்டுவதுதான் வழி என்று முடிவு செய்த நஞ்சப்பன் மேட்டாங்காட்டு ராமசாமியை அழைத்து வரச் சொன்னார். ராமசாமிக்கே நஞ்சப்பனை விட குறைந்த வயதுதான். ஆனால் அவரது மகளை நஞ்சப்பனுக்கு கட்டித்தர வேண்டுமாம். பர்வதத்துக்கு ஆவணி வந்தால்தான் பதினேழு வயது முடிகிறது. நேரடியாக மறுப்புத் தெரிவிக்க முடியாமல் ராமசாமி தயங்கினார். குடும்பத்தையே தன்னால் விளங்காமல் செய்துவிட முடியும் என்ற நஞ்சப்பனின் அஸ்திரத்திற்கு ராமசாமி பணிய வேண்டியதாயிற்று.

திருமணம் தடபுடலாக நடந்தது.அத்தனை செலவையும் நஞ்சப்பன் ஏற்றுக் கொண்டார். திருமணம் முழுவதும் பர்வதம் அழுது கொண்டேயிருந்தாள். அவளது அம்மாவும் கதறிக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் வெளியில் தெரியாத அளவுக்கு முகம் வீங்கிக் கிடந்தது. நஞ்சப்பன் செருக்குடன் தாலி கட்டினார். பர்வதம் தனது பாதத்திற்கு கீழாக பூமி வழுக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். முதலிரவுக்கான ஏற்பாடுகளை நஞ்சப்பனின் வீட்டிலேயே செய்திருந்தார்கள். பர்வதம் தலையைக் கூட உயர்த்தவில்லை.

அடுத்த நாள் காலையில் நஞ்சப்பன் பர்வதத்தின் முகத்தை பார்க்க விருப்பமில்லாமல் விடிவதற்கு முன்பாகவே தோட்டத்திற்கு போய்விட்டார். பர்வதம் தன்னை இளக்காரமாக பார்ப்பதாகவே நஞ்சப்பனுக்கு தோன்றியது. சுற்றுவட்டாரத்தையே தன் மிரட்டலால் அடக்கும் தான் இந்தச் சிறுமியிடம் தோற்றுவிட்டதாக நினைக்கத் துவங்கினார்.

அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே நஞ்சப்பன் பில்லி சூனியம் வைப்பதை குறைத்துக் கொண்டார். வெளியாட்கள் யாரையும் தான் பார்க்க விரும்பவில்லை என்றும் அறிவித்தார். நஞ்சப்பன் களையிழக்கத் துவங்கியபோது ஊர் மீது படிந்திருந்த சாம்பல் திரை விலகத் துவங்கியது. தனக்கு வாரிசு இல்லாததால்தான் நஞ்சப்பன் வருத்தமுற்றிருப்பதாக ஊருக்குள் நினைத்துக் கொண்டார்கள்.

வடக்கு தோட்டத்து சுந்தரேசனிடம் மட்டுமே நஞ்சப்பன் அவ்வப்போது பேசுகிறார். போன வெள்ளிக்கிழமை மாலையில் நஞ்சப்பனை பார்க்க வந்திருந்தார். அவர்தான் பேச ஆரம்பித்தார் “இந்த பில்லி சூனியத்தை சுத்தமா வுட்டுடு. அப்போத்தான் வம்சம் பெருகும்ன்னு சொல்லுறாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு கோடாங்கி இருக்கான் அவனை நான் கூட்டியாரேன். அவனுக்கு சொல்லிக் கொடுத்துட்டு இந்தக் கருமத்தை நீ தலை முழுகிடு. அடுத்த பத்தாவது மாசம் ஊட்ல தொட்டில் ஆடும் பாரு”என்றார். கேட்டுக் கொண்டிருந்த பர்வதம் தனது அறையை நோக்கி ஓடினாள். கதவை ஓங்கி அறைந்து தாழிட்டுக் கொண்டாள். தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கத் துவங்கினாள். அது பிரவாகமான சிரிப்பாக இருந்தது. சுந்தரேசன் இருக்கையில் இருந்து எழுந்தார். நஞ்சப்பன் தலையைக் குனிந்து கொண்டார். அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பல்லி சத்தம் எழுப்பத் துவங்கியது. அதுவும் சிரிப்பொலியைப் போலவே இருந்தது.

– ஆகஸ்ட் 22, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *