சுவர்ப்பேய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 11,624 
 
 

வேலையில் சேர்ந்த முதல்நாள் சாயங்காலம் இனம் புரியாத வெறுமை மனமெங்கும் நிறைந்திருந்தது. பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் காத்திருந்த நாட்களில் என் மனத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நாடித்துடிப்பு மாதிரி நிறைந்திருந்த நாள் நிஜமாகவே வந்து கடந்த பிறகு ஒருவித வெற்றிடம் உருவாகிவிட்டது. அதில் வேறு கற்பனைகளை இனிமேல்தான் நிரப்பியாக வேண்டும்.

வங்கிக் கட்டடத்தின் எதிர்மருங்கில் இருந்த தேநீர்க்கடையில் தனியாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தனிமையும், யாருக்காகவும் ஒளிந்து குடிக்க அவசியமற்று என் கையில் புகைந்த சிகரெட்டும் தந்த விட்டேற்றியான மனநிலை வெகு ஆனந்தமாக இருந்தது. யாரோ என் தோளைத் தொட்டார்கள்.

காசுத்துறை அதிகாரி அருணாசலம். அவருடைய மொழியும் பேச்சும் வித்தியாசமானவை. புதுமைப்பித்தனின் கதையிலிருந்து இறங்கி வந்த கதாபாத்திரம்போலப் பகல் முழுவதும், கிளை முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது அவரது உரத்த குரல்.

தனீயா நின்னு சீரெட்டை என் ஜாய் பண்ணுதீராக்கும்?

வண்டிக்காரத் தெருவில் போய்க் கொண்டிருந்த ஓரிருவர் திரும்பிப் பார்த்தார்கள். நான் அவசரமாக சிகரெட்டைப் பின்புறம் கொண்டு போனேன்.

”குடியும் குடியும். உத்தியோகத்துலே சேந்தாச்சு. இன்னமே நீரும் பெரியமனுசன்தானே வே. “என்று சிரித்தார். தலைமுடியும் வரிசைப் பற்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளுத்திருந்தன. தாமும் ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். நான் அசட்டுத்தனமாகச் சிரித்துக்கொண்டே கையை முன்புறம் கொண்டுவந்தேன்.

ஒமக்குப் பூர்வீகம் எந்தூர்ன்னு சொன்னேரு?

கரட்டுப்பட்டி சார்.

எது, சோளவந்தான் கரட்டுப் பட்டியா?

ஆமா சார்.

அட. அங்கினெ நம்ம பய ஒர்த்தென் வாத்தியா இருந்தானே . . .

ஞாபக அடுக்குகளில் எதையோ தேடுகிற மாதிரி அவர் முகத்தில் தியானம் கவிந்தது. விழிகளைச் சுருக்கி தெருவை வெறித்தார். நினைவு வந்துவிட்டமாதிரிக் கண்கள் மலர்ந்தபோது என்னிடம் சொன்னார்.

அதுவும் இருக்குமே, ஆறேளு வருசம் இருக்கும். ஆச்சு, டச்சு விட்டுப்போய் ரொம்ப வருசம் ஆச்சு. இப்பொ எங்கினெ இருக்கானோ?

தன் ஞாபக அடுக்குகளுக்குள் புகுந்து அவர் தேடிய அதே சமயம் நானும் மானசீகமாகக் கரட்டுப்பட்டிக்கும் மதுரைக்கும் சென்று வந்திருந்தேன். பின்னாட்களில், கல்லூரியில் படித்த காலத்தில், தல்லாகுளம் பொது நூலகத்தில் எடுத்து வந்த காஞ்சனையில் கந்தசாமிப் பிள்ளையின் பேச்சில் ராஜுவாத்தியார் வாசனையடித்தது உடனடியாக நினைவு வந்து விட்டது.

ராஜூ வாத்தியாரா சார்?

அவம்தான். ராசுதான். நமக்குத் தூரத்துச் சொந்தக்காரென்வே அவன். எங்க அம்மெ வளியிலே . . . நல்ல பய. அவனெ மாதிரி ஒரு ஜெம்மைப் பாக்க முடியாது . . .

சிகரெட்டை வேகமாக இழுத்தார். புகை அதைவிட வேகமாக வெளியேறியது.

. . .ம்ஹும். விடு, நல்ல மனுசங்களைத்தானெ தெய்வம் தொரத்தித் தொரத்தி அடிக்கிது. சவம் நம்ம கோயில்கள்ள குடியிருக்கது சாமியா பிசாசான்னு சமயத்திலெ சந்தேகம் வந்துருது.

அவர் சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்த்த விதத்திலேயே தெரிந்தது, விஷயத்தை அவர் முடித்துக் கொண்டுவிட்டார் என்பது. அவர் வங்கியை நோக்கியும் நான் என்னுடைய புது அறை நோக்கியும் நகர்ந்தோம்.

மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அறை நண்பர்களுடன் திரும்பினேன். என்னுடைய வழக்கப்படி மொட்டைமாடியில் படுக்கச் சென்றேன். நண்பர்கள் வெட்டவெளியில் படுப்பதை விரும்புவதில்லையாம். எனக்கானால் கூரைக்குக் கீழ் படுத்தால் தூக்கம் வராது. திருமணத்துக்குப் பிறகு என்ன செய்வீர்கள் என்று என் புதிய நண்பர் ஒருவர் கேட்டுச் சிரித்தார். தெரியாது என்று நானும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன்.

மொட்டைமாடியில் இருட்டும் நிசப்தமும் அடர்ந்திருந்தன. கீழே வீதியில் எப்போதாவது ஒரு வாகனம் உறுமிச் செல்லும் எந்திர ஓசை. யாரோ ட்ரான்ஸிஸ்டர் கேட்கிறார்கள். இன்ன பாட்டு என்று தெரியாத, ஆனால் பாட்டு என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிற, தொலைவிலிருந்து ஒலிக்கும் இசையைக் கொஞ்சநேரம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சிகரெட் பற்றவைத்தேன். முடித்துவிட்டு மடக்குக் கட்டிலில் மல்லாந்து படுத்தேன். நானும் ஒரு ஆகாயம் நிரம்ப நட்சத்திரங்களும் மட்டும் பகிர்ந்து கொண்ட தனிமையில் அமிழ்ந்திறங்கும்போது ராஜு வாத்தியார் ஞாபகம் கனத்து எழுந்தது.

அப்பாவின் மரணத்தையொட்டி கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டோம். அதன்பிறகு ஒன்றே கால் வருடம் கழித்து மதுரையில் வந்து குடியமர்ந்தோம். நாங்கள் கிராமத்தைவிட்டுக் கிளம்புவதற்கு ஆறேழு மாதங்கள் முன்னால் மேல்நாச்சிகுளம் நடுநிலைப் பள்ளிக்கு மாற்றலாகி வந்தார் ராஜூ வாத்தியார்.

கிராமப் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்கள் கிடையாது. வகுப்பாசிரியர் என்று ஒருவர் இருப்பார். எல்லாப்பாடத்தையும் அவர்தான் எடுத்தாகவேண்டும். ராஜு வாத்தியார் எந்தப் பாடமானாலும் சுவாரசியமாக எடுக்கக்கூடியவர். அவர் பேசுகிற தமிழ் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

லே மக்கா . . . சேசுராசு . . .

என்று கூப்பிடுவதும், கேக்கான் பாக்கான் குட்மாணிங் வைக்கான் கூப்புடுதான் அந்தாலே இந்தாலேவாறு கால் ஓவு என்றும் அவர் பேசப்பேசக் கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும் . . . அவ்வையார் மீது எனக்கு இன்றுவரை இருக்கும் காதலுக்கு ராஜூ வாத்தியார்தான் முதல் காரணம்.

அவ வலுத்த கிளவீல்லா . . .

என்று ஆரம்பித்து அவ்வையார் பாடல்களை – பாடப்பகுதியில் வந்தவை போக – ஏகப்பட்டது மனப்பாடமாகச் சொல்லுவார்.

அவர் பணிபுரிந்தது மேல்நாச்சி குளத்தில் என்றாலும், குடியிருந்தது கரட்டுப்பட்டியிலிருந்த நாட்டாமைக்காரர் வீட்டில் என்று சொன்னேனல்லவா? அந்த வீட்டில் மேற்குப்புறம் ஒரு சுவர் இருந்தது. உண்மையில், முற்காலத்தில் அது சுவராக இருந்திருக்க வேண்டும். பிறகு என்ன காரணத்தாலோ நடுவில் மாத்திரம் இடிந்து, மேற்கூரையில்லாத குட்டிச்சுவராகி நின்றது. சிவப்பு நிறத்தில் இளித்துக்கொண்டு நிற்கும் செம்மண் சுவர். சுவரையொட்டி உட்புறம் இருந்தது திறந்த வெளி முற்றம்தான் என்பதால் குடி வந்தவர்கள் யாரும் அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விட்டார்கள் போல.

ராஜுவாத்தியார் அந்தச் சுவரைப் பற்றி எங்களுக்கு ஒரு கதை சொன்னார். அவ்வையார் ஒரு தடவை கரட்டுப்பட்டி வழியாக வந்தாராம்.

சாடையிலே அந்தக் கிளவி நம்ம முத்தாச்சி மாதிரியே இருப்பா . . .

என்றார் வாத்தியார்.

ஆனா ஒண்ணு, சேலையைக் கெண்டைக்கால் வரைக்கி எறக்கித்தான் கட்டுவா கிளவி. முத்தாச்சி மாதிரித் தொடை வரைக்கி வளிச்சு ஏத்தியிருக்கமாட்டா.

வகுப்பு ஓவென்று சிரித்தது. தாமும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் வாத்தியார்.

அவ்வைக்குக் கடுமையான பசி. கையில் காசில்லை. வழக்கமாகத் தோளிலிருக்கும் கந்தை மூட்டையில் தினை மா கொண்டுவருவார். சமயநல்லூருக்கு அருகில் வரும்போதே அதுவும் தீர்ந்தாகிவிட்டது. இனிமேல் நிலக்கோட்டை போனால்தான் சாப்பாடு கிடைக்கும். அங்கே தார்வேந்தன் என்று ஒரு பிரபு இருக்கிறார். அவர் மேல் பாடுவதற்கு ஓரிரண்டு வெண்பாக்கள் கட்டலாம் என்றால், பார் மேலும் சீர் மேவும் கார் போலும் என்று எதுகைகள் உதிக்கிறதே தவிர கரு திரள மாட் டேனென்கிறது. வயிற்றைக் கிள்ளுகிற பசிதான் காரணம்.

நம்ம நாட்டாமெக்காரரோட கொள்ளுப்பாட்டனுக்கு ஒரு கொள்ளுப்பாட்டன் இருந்தாரு. அவரு சம்சாரம் ஒரு ஆச்சி இருந்துச்சே, அதுக்கு நீலி ஆச்சின்னு பேரு. அது ரெம்பத் தடவை இந்தச் செவுத்தெக் கெட்டி நிறுத்தீறணும்னு நோங்குச்சு. அதாண்டே, நாங்க இருக்க வீட்டுலெ ஒரு குட்டிச் செவுரு நிக்கில்லா, அதெத்தாம். கொத்தரு வந்து கெட்டுவாரு, கூலியெ வாங்கிக்கிட்டு அவரு நகந்ததும் செவுரு வுளுந்திரும். உள்ளூர்லெ கோடாங்கி அடிச்சுப் பாத்தாக. அப்பத்தான் நூஸு தெரிஞ்சுச்சு. இந்தச் செவுருக்குள்ற முனியில்லா இருக்காம். பாக்க அப்புராணி மாதிரி நிக்ய செவுரு. உள்ளுக்குள்ள எம்புட்டுப் பெரிய ரகசியம் வச்சிருக்கு பாரு.

ஆச்சி சுதாரிச்சுக்கிச்சு. வெளியூர்லருந்து வேலெ தேடி வார கொத்தமார்ட்டெ கண்டிசனாச் சொல்லிப்போடும். செவுர எடுத்துக் கெட்டீட்டு ராத் தங்கிறணும். காலையிலே செவுரு நின்னா பதக்கு நெல்லு கூலி, இல்லாட்டி இல்லே.

இந்தச் சமயத்திலேதான் நம்ம அவ்வெ வாராக. கிளவி நீலி ஆச்சிட்டெ வந்து சாப்பாடு கேக்கா. ஆச்சி, போடுதேன், செரமம் பாக்காமெ இந்தச் செவுர எடுத்துக் கட்டிர்றியா? ன்னு கேக்கு.

எம்புட்டுக் கூலிங்கா அவ்வை யாரு. ஒரு பதக்கு நெல்லுத்தாரேன்ங்கு ஆச்சி. போர வளிக்காச்சேன்னு தலையாட்டுதா அவ்வெ. சாப்புடும்போது ஆச்சி வெசயத்தெ வௌக்கமாச் சொல்லுது. அப்பிடியா சேதின்னு கிட்டெப்போயி செவுத்தெத் தட்டிப்பாக்கா அவ்வெ. தலையத் தலைய ஆட்டிக்கிடுதா. ஏதோ புரிஞ்சு போச்சு அவளுக்கு.

செம்மண்ணெக் கொழைச்சுத்தாறதுக்கும் பாண்டுலெ நெரப்பித் தூக்கியாறதுக்கும் ஒரு ஆள் மட்டும் ஏற்பாடு செஞ்சாக் கட்டீறலாம்ன்னு ஆச்சிட்டெச் சொல்றா. கிளவியா இருக்காளே, கூட ஒரு பதக்கு நெல்லுத்தானே, சவம் செவுரு நின்னாச் சரிதான்னு ஆச்சி ஒத்துக்கிடுது. செவுரைக் கெட்டி முடிச்சுட்டு கும்பா நெறையக் கூழ் வாங்கிக் குடிக்கா அவ்வெ. குடிச்சு முடிச்சுத் திரும்பிப்பாத்தா, செவுரு லேசா ஆட்டம் காட்டுது . . . அந்தாலே செவுரெப் பாத்து ஒரு பாட்டுப் பாடுதா.

மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்கு வந்தேன்

சொற்கொண்ட பாவின் சுவை யறிவா ரீங்கிலையே

விற்கொண்ட பிறைநுத லாள் நீலி தரும் கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே . . .

அப்புறம் அவ்வைக் கிழவி சாகும்வரை அந்தச் சுவர் வீழாமல் நின்றதாம். பிறகு ஏதோ ஒரு கால கட்டத்தில் மின்னல் தாக்கியதில் மீண்டும் குட்டிச் சுவராகிவிட்டது.

கையில் எடுத்த சிட்டிகைப் பொடியை, கண்களை இறுக மூடிக்கொண்டு உறிஞ்சி முடித்தார் வாத்தியார். நாசியில் ஏறிப் புகுந்த துகள்கள் நிஜமாகவே ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

டியூப் லைட்டுலெ வெளிச்சம் இருக்கது எதுனாலெ? உள்ளாறே கரண்டு ஓடுது. அதேதாம்லெ மின்னலுக்கும். ஒரு மின்னல்லெ இருக்க கரண்டெ வெச்சு நம்ம முனியாண்டி கோயில் டியூப்லைட்டெ ஆயிரம் வருசத்துக்கு எரிய வைக்கலாம் . . .

என்று விஞ்ஞானப் பாடத்துக்குத்தாவினார் ராஜூ வாத்தியார்.

அவ்வையாரின் பெயரோடு முத்தாச்சியின் முகமும் பொருந்திக் கிடந்துவருகிறது எனக்குள். மேற்சொன்ன கதையின் ஆரம்பத்திலேயே இது நிகழ்ந்துவிட்டது என்று தோன்றுகிறது. இவ்வளவுக்கும் அவ்வையார் முத்தாச்சிபோல தொடர்ந்த வெற்றிலைப் பழக்கத்தால் காவியேறிய பற்கள் கொண்டவரா, பொக்கைவாய்க் கிழவியா என்று எனக்குத் தெரியாது.

ராஜு வாத்தியாரின் வீட்டுக்கு மேற்குப்புறம் முத்தாச்சிக் கிழவியின் வீடு. ஊரின் கடைசி வீடு. வீட்டின் முன்வாசல் முற்றத்தையும் திண்ணையையும் சிறு கடையாக மாற்றியிருந்தாள். நாங்கள் பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் முத்தாச்சி கடைமுன் சற்று நின்றுவிட்டுப் போவோம், அட்டைகளில் தொங்கும் வற்றல்கள், வடகங்கள், பல்லிமிட்டாய்ப் பொட்டலங்கள் ஊறுகாய்ப் பாக்கெட்டுகளை வேடிக்கை பார்த்தபடி. இதுபோக எந்நேரமும் அந்த வீட்டுக்குள்ளும் சுற்றுப் புறத்திலும் நிரம்பியிருக்கும் கருவாட்டு மணம். அவளுடைய திண்ணையில் எந்நேரமும் யாராவது வெளியூர்ப் பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அக்கம்பக்க கிராமங்களிலெல்லாம் கிழவியின் கைவைத்தியத்துக்குப் பெரும் மவுசு.

முழங்காலுக்கு மேல் ஏற்றிச் சொருகிய கண்டாங்கிச் சேலையுடன் பழைய ஒரு ரூபாய் நாணயம் அளவு விட்டமுள்ள சிவப்புக்கல்தோடுகள் அணிந்து திண்ணையின் ஓரத்தில் அமர்ந்து சதா வெற்றிலைமென்றுகொண்டிருப்பாள் முத்தாச்சி. ஏந்திய கீழுதட்டிலிருந்து வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளும் செந்நிற எச்சில் சாரலும் சரமாரியாய்க் கொட்டும். அவற்றின் வேகத்துக்கிசைய புத்தர்போல வளர்த்த காதுச் சவ்வின் கீழ்ப்புறம் தோடுகள் ஊசலாடும்.

சற்று அதிகநேரம் நாங்கள் நின்று விட்டாலோ, கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிட்டாலோ எங்களை நோக்கி ஆவேசமாய்க் கேட்டு விரட்டுவாள்.

இங்கென்னா வேலெ. அம்மணக்குண்டி ஆட்டம் பாக்க வந்தீகளாக்கும்?. ஓடு ஓடு, பள்ளிக் கொடத்துல மணியடிச்சுரும்.

இதையெல்லாம்விட, முத்தாச்சி எனக்குக் கற்றுத்தந்த பாடம்தான் முக்கியமானது.

ஆண்களும் பெண்களும் சமம் என்ற கருத்தை முதன்முதலில் எனக்குள் விதைத்தவள் முத்தாச்சிதான். எங்கள் வீட்டிலெல்லாம் நிலைமை வேறு மாதிரியிருந்தது. அப்பாவைக் கேட்காமல் அம்மா ஒரு துரும்பைக்கூட நகர்த்த மாட்டாள்.

எங்கே . . . அவ எடுத்த முடிவெ சாதுர்யமா என் வாயாலெ வர வழைச்சுர்றா.

என்று அப்பா கேலி பேசினாலும், இறுதி முடிவுகள் அப்பாவின் பெயரால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அண்ணன்மார் இன்னும் ஒருபடி மேலே போனார்கள். குறிப்பாக இரண்டாவது அண்ணா. அவன் மன்னியைக் கண்மூடித்தனமாக அடிக்கும்போது இந்தக் குடும்பத்துக்கும் அந்த நிகழ்வுக்கும் சம்பந்தம் கிடையாது என்பதுபோன்று ஒரு பொது அமைதி நிலவும். வீங்கின முகத்துடன் தனியாக உட்கார்ந்து அழும் மன்னியை அணைத்துக்கொள்ள வேண்டும்போல எனக்குப் பரபரக்கும். நல்லவேளை, நானெல்லாம் பெண்ணாய்ப் பிறக்கவில்லை என்று ஆறுதல் பட்டுக் கொள்வேன். ஏழாம் வகுப்புப் படிக்கும் மனத்துக்கே உரிய ஆறுதல் அது என்று பிற்பாடு பலநாட்கள் தோன்றியதுண்டு.

இந்த இடத்தில்தான் முத்தாச்சியின் முக்கியத்துவம் வருகிறது. பிள்ளையார் கோவில் திடலில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, வெள்ளைக்கரடுவரை போய்விட்டு வரலாம் என்று பாண்டி யோசனை சொன்னான். கரட்டை ஒட்டி ஏகப்பட்ட புதர்கள் இருக்கும். சப்பாத்திக் கள்ளிகளும் கருவேல மரங்களும் காவல் காக்கும் ஒற்றையடிப்பாதை வழியே வரும்போது கரட்டான்களும் பாம்புகளும் நத்தைகளும் மரவட்டைகளும் வெல்வெட் பூச்சிகளும் தவளைகளும் பார்க்கக் கிடைக்கும். தாத்தா வாத்தியாரின் காச நோய் வைத்தியத்துக்கு நத்தை பொறுக்க ரீஸஸ் பீரியடில் எங்களை அழைத்துச் செல்லும்போது பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் அந்தப் பக்கமெல்லாம் போக விடமாட்டார்கள். பெண் குழந்தைகளுக்குச் சமமான பாதுகாப்புடன் என்னை வளர்த்து வந்தார்கள். பாண்டி இருந்த தைரியத்தில், அப்பா மறைவுக்குப் பிறகு அம்மா திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப்பெண்களுடன் வம்பு பேசுவது குறைந்துவிட்ட தைரியத்தில், அண்ணன்மார் எவரும் தற்சமயம் ஊரில் இல்லை என்ற தைரியத்தில், பாண்டியின் யோசனைக்கு உடன்பட்டேன். வழியில் காய்ந்தும் பச்சையாகவும் கிடந்த மலக் குச்சங்களைப் பார்க்கும்போதெல்லாம்,

தாயில்லாப் பிள்ளெ கெடக்கு. பாத்து வா.

என்று எச்சரித்தபடி கைபிடித்துக் கூட்டிப் போன பாண்டி, சட்டென ஓரிடத்தில் என் கையை அழுத்தி நிறுத்தினான். உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்து எச்சரித்தான். அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் முத்தாச்சி குத்த வைத்து அமர்ந்திருந்தாள்.

இடுப்புக்கும் மேலே வழித்தேற்றிய சேலைக்குக் கீழே பளிங்கு போலப் பளபளத்த புட்டத்தை விடவும் என் கவனத்தைக் கவர்ந்த வேறு ஒரு சங்கதி இருந்தது. அவள் கம்பீரமாக சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தாள். இதெல்லாம் ஆம்பளைகள் சமாசாரமில்லையா என்று ஒரு கணம் தோன்றியது. என்றாலும், பெண்கள் சம்பந்தமான பிற்கால அறிதல்கள் பலவற்றுக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாய் அந்தச் சுருட்டு என்னையறியாமலே எனக்குள் ஏறி அமர்ந்தது.

எஸ்ஸெஸ்ஸெல்ஸியில் நல்ல மதிப்பெண் வாங்கி பள்ளிக்கூடத்தில் இரண்டாவது மாணவனாகத் தேறியபோது, கரட்டுப்பட்டிப் பிள்ளையாரைப் பார்த்து நன்றிகூறி வரச் சொன்னாள் அம்மா. மீசை அரும்பிவிட்ட பருவம் என்பதால் தனியாகச் சென்றுவர அனுமதி கிடைத்தது. பிள்ளையாருக்கு விடல் போட்டுவிட்டு ஊருக்குள் போனேன்.

கடைவாசலில் கால்நீட்டி உட் கார்ந்து பஞ்சுபோல் முழுக்க நரைத்த தலைமுடியை ஈருவளியால் சிடுக்கெடுத்துக்கொண்டிருந்தாள் முத்தாச்சி. ரவிக்கை போடும் வழக்கம் இல்லாதவள். இடது முலை சேலைக்குள் பாதி மறைந்தும் பாதி தெரிந்தும் அவள் இடுப்பில் நிரந்தரமாகச் செருகியிருக்கும் சுருக்குப்பையின் சாயலுடன் ஆடியது. அக்குள் ரோமங்களில் நரை பாய்ந்திருந்தது. தெருவில் நடந்துவந்து அவள் கடை வாசலில் நின்றுவிட்ட என்னைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்.

ஆத்தாடி, ஐயரு மகென்தானே, அம்மா நல்லாருக்காகளா சாமீ?

என்று கூவினாள். வியாபாரப் பொருட்களைப் பரத்திய திண்ணையின் ஓரமாக எஞ்சியிருந்த இடத்தில் என்னை உட்காரச் சொன்னாள்.

கலர் சாப்புடுறீகளா?

நாலே வருடத்தில் முத்தாச்சிக்கு இருபது வயது கூடிவிட்ட மாதிரிக் கிழடு தட்டியிருந்தாள். அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து இடது மார்பில் புற்றுநோய் தாக்கி சில மாதங்கள் போராடிவிட்டு இறந்தே போனாள் என்று கேள்விப்பட்டேன். நான் பார்த்த நாளில் அந்த நோய் வேர்பிடித்து ஆழ இறங்கத் தொடங்கியிருக்கலாம் ஒருவேளை, அவளே அறியாதவண்ணம்.

வாத்தியார் வீடு பூட்டிக்கெடக்கே ஆச்சி?

அதையேங் கேக்குறீக? அவுகதேன் ஊரெ விட்டே போய்ட்டாகளே?

அப்பிடியா? எந்தூருக்குப் போனாங்க ஆச்சி?

தேவதானப்பட்டிக்கி அங்குட்டு ஏதோ ஒரு பள்ளிக்கொடமாம்.

ஏன், என்னாச்சு?

அது பெரீய்ய கதெ சாமி.

போனவருடம் சாமிகும்பிடு முடிந்த மறுநாள் ஊர்ப்பெண்கள் எல்லாம் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லையாற்றில் கரைத்துத் திரும்பினார்கள் அல்லவா, வாத்தியாரின் மனைவி சிரித்து முத்தாச்சி பார்த்தது அன்றுதான் கடைசி.

தொடர்ந்து நாட்கணக்காக உற்சவம் நடத்தி முடித்த களைப்பில் ஊரே உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தபோது, ராஜூ வாத்தியாரின் வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டானாம். உடைந்த சுவர் வழியாக முற்றத்தில் நுழைந்து பம்மிக் காத்திருந்திருக்க வேண்டும் என்பது முத்தாச்சியின் யூகம்.

நள்ளிரவில் குட்டிச்சுவருக்கு இந்தப்புறம் சிறுநீர் கழிக்க எழுந்து வந்தாளாம் முத்தாச்சி. வாத்தியார் வீட்டிலிருந்து வாட்டசாட்டமான ஒரு ஆள் இறங்கி ஓடியிறங்கியிருக்கிறான். வீட்டுக்குள் வாத்தியார் சம்சாரம் அழும் சப்தமும் வாத்தியார் அவளுக்கு சமாதானம் சொல்கிற மாதிரியும் கேட்டதாம். இதுவரை சாதாரணமாகச் சொல்லி வந்த முத்தாச்சியின் குரல் சடாரென்று தழைந்தது.

ஏஞ் சாமீ, களவாங்க வந்தவன் வீட்லயிருந்து எறங்கி ஓடுறான். நம்ம கூட்டாளமிண்டா என்ன செய்வோம்? திருடன் திருடன் ஓடுறான் புடிண்டு அலற மாட்டோம்? வாத்தியார் வீட்லெருந்து ஒரு சின்ன மொனக்கங்கூட இல்லே.

ம்

அதுனாலெதான் எனக்கு இன்னமும் சந்தேகம் . . .

இருந்த இடத்தில் இருந்தவாறே, பாவனையாக என் காதருகில் தன் உதட்டைக் கொண்டுவந்தாள் முத்தாச்சி. குரலில் மேலும் கொஞ்சம் ரகசியம் சேர்ந்தது.

. . . வந்தவென் வெறுங்கையோட ஓடுன மாரித்தான் இருந்துச்சு சாமி. அவன் ஓடுன சீரெப்பாத்தா பொருளெக் களவாங்க வந்தவனெ மாரித் தெரீலே. ஆனா, அவென் சீவரங்கொளத்தான் இல்லேண்றது மட்டும் நிச்சியம். அவிங்ய ஆளுமேல கைவய்க்க மாட்டாங்ய.

இதற்குள் முத்தாச்சியைப் பார்ப்பதற்காக இரண்டு பெண்கள் வந்து சேர்ந்தார்கள். தாயும் மகளும்போல இருந்தார்கள். இருவர் முகத்திலும் உயிர்க்களை இல்லை. அந்தப் பெண் தேவையில்லாமல் அடிக்கடி தன் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. என்னிடம் பேசிய போது இருந்த பாவத்துக்குச் சம்பந்தமேயில்லாத அதிகாரத் தொனியில் முத்தாச்சி கேட்டாள்

எந்தூரு?

நீரேத்தான்.

பதில் சொன்ன மூத்தவளின் குரலில் லேசான நடுக்கம் இருந்தது. நான் முத்தாச்சியைப் பார்த்துத் தலையாட்டிவிட்டுக் கிளம்பினேன். எதிர்ச்சாரிப் பொட்டலில் மண்டியிருந்த எருக்கலஞ்செடிகளின் ஊடாகப் பழுப்பும் வெள்ளையும் கலந்த நாய் ஒன்று புகுந்து ஓடியது.

ஞாபகத்தின் ஆழ்பரப்பில் புதையுண்டு கிடக்கும் எந்த ஒரு சம்பவமாவது தனியாகக் கிடக்கிறதா, சொல்லுங்கள்? வியர்த்த உடம்புடன் மணல்தரையில் புரண்டு எழுந்த மாதிரி, மேற்பரப்புக்கு எழுந்துயரும் எந்தவொரு நிகழ்ச்சி, தனிநபர், அல்லது நாளுடனும் பல்வேறு உபரி நினைவுத் துகள்கள் ஒட்டிக்கொண்டு வரத்தானே செய்கின்றன. ராஜு வாத்தியார் என்ற பெயர் தன்னுடன் இழுத்து வரும் வால் வெகு நீளமானது. கரட்டுப்பட்டி, முத்தாச்சி, அவ்வையார், ராஜு வாத்தியாரின் கருகருவென்ற சுருள்முடி, இடது கைக் கட்டை விரல் நகத்தில் அவர் நாலைந்து தடவை தட்டிவிட்டுத் திறக்கும் பழுப்புநிறப் பொடி மட்டை, கரும்பலகையில் சச்சதுரமாகத் திரண்டு வரும் சாக்பீஸ் எழுத்துகள், முல்லையாற்றுக்கரையில் சாயங்காலம் அவருடன் நடந்து வரும் அவரது மனைவி, அந்த அம்மாளின் நிமிர்ந்த நடையில் மிளிரும் கம்பீரம் . . .

ராஜு வாத்தியாரைவிட அவருடைய மனைவி ஒரு பிடி உயரம். வாத்தியார் நல்ல சிவப்பு நிறம். உள்ளங்கைகள் செக்கச்செவேலென்று பூவிதழ்கள் மாதிரி மிருதுவாக இருந்தது நினைவு வருகிறது. அந்த அம்மாள் சற்று நிறம் மட்டுத்தான். எங்கள் ஊர்ப்பக்கம் புதுநிறம் என்பார்கள். இருந்த கொஞ்ச மாதங்களில் அவர்கள் வீட்டுக்கு வாரந்தோறும் சென்று வந்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சேரும் குமுதத்தைச் செவ்வாய்க்கிழமை கொண்டு கொடுப்பதும், வியாழன் அல்லது வெள்ளியன்று திரும்ப வாங்கி வருவதும் என்னுடைய வேலை.

இருவரும் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பங்களில் நேருக்கு நேராகப் பேசிக் கொண்டு நான் பார்த்ததே கிடையாது. பள்ளிக்கூடத்தில் சதா பேசிக் கொண்டே இருக்கும் வாத்தியார், வீட்டுக்குள் நுழைந்ததும் மௌனமாகிவிடுகிறாரே என்று தோன்றும். அவர்கள் வீட்டினுள் எப்போதுமே நிலவும் அமைதி எங்கள் வீட்டின் சூழ்நிலைக்கு நேர்மாறானது. கொண்டாட்டமாகவோ, தகராறாகவோ மனிதக் குரல்களும், பெரியக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததையொட்டி வீட்டுக்குப் புதிதாக வந்திருந்த பிலிப்ஸ் வால்வு ரேடியோவின் சினிமாப் பாட்டுகளும், சமையலறையில் எந்நேரமும் இருந்துகொண்டிருக்கும் பாத்திர ஒலிகளும் எனச் சதா ஓசையால் நிரம்பியிருக்கும் வீடு எங்களது. இந்த வித்தியாசத்தைப் பற்றி அம்மாவிடம் ஒருநாள் கேட்டேன்.

கொழந்தையில்லாத வீடு இல்லையா? நிசப்தமாத்தான் இருக்கும்.

என்று சுலபமாகச் சொன்னாள்.

சோழவந்தான்- நிலக்கோட்டையை இணைக்கும், வாகனப் போக்குவரத்து நிறைந்த, தார்ச் சாலையை ஒட்டிய வளாகத்தில் உள்ள வீடு எங்களுடையது, ஊர்க் கோடியில் ஆள் நடமாட்டமே அரிதாக இருக்கும் பகுதியில் ராஜு வாத்தியார் வீடு இருந்தது என்பது அவள் சொல்லாத இன்னொரு காரணம்.

நினைவில் பதிந்த எண்ணற்ற முகங்கள் தாமாகக் கொள்ளும் சுழற்சிவிதியின் பிரகாரம், ராஜு வாத்தியார் முகமும் விதவிதமான சந்தர்ப்பங்களில் ஞாபகம் வந்து போகும். ஆனால், அவரைத் தவிர வேறு நினைவு இல்லாதபடி மனம் குவியக் கிடைத்த சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. நான் வேலையில் சேர்ந்தது 1983 ஏப்ரல் 7ஆம் தேதி. முன்னரே சொன்னபடி, அன்றிரவில் அழுத்தமாக மேலெழுந்த ராஜு வாத்தியார் ஞாபகம் வேறு இரண்டு சந்தர்ப்பங்களிலும் தீர்க்கமாக நினைவு வந்தது.

ஒன்று, 79-ல். கல்லூரி நூலகத்திலிருந்த தனிப்பாடல் திரட்டு நூலை எடுத்துப் படித்து வந்த ஒரு நாளில், அவ்வையார் பாடியதாக எங்களுக்கு ஒரு கதைபோல விரிவாக ராஜூ வாத்தியார் சொன்ன, பேய்ச் சுவரை நிறுத்திய, பாடல் அந்தப் புத்தகத்தில் இருந்தது.

அந்தப் பாடலைப் பாடியவர் கம்பர். அவ்வையார் இல்லை. இந்தத் தகவல் தெரிந்த கணத்தில் என் மனம் முழுக்க ராஜு வாத்தியார் நிரம்பினார். அவர் சொல்லி நினைவிலிருக்கும் பழம் பாடல்கள் அத்தனைக்கும் நேர் எதிரில் மானசீகமாக நிலைகொண்டிருந்த புலவர்களின் பெயர்கள் இடம்பெயர்ந்து கொசுக்கள்போலத் தன்னிச்சையாகப் பறக்க ஆரம்பித்தன.

அதன் பிறகு, நானும் எழுதவென்று ஆரம்பித்த பின்னர், ராஜு வாத்தியாரின் அருமை வேறு ஒரு விதமாகத் தெரிய வந்தது. எங்கோ நடந்துகொண்டிருந்த அவ்வையாரையும் அந்தப் பாடலையும் கரட்டுப்பட்டி ஊருக்குள் அழைத்துவந்த தன் சிருஷ்டிகரமும், அதன்வழியே என்றும் மறக்கவியலாதபடி என் மனத்தில் பதிய வைத்த பயிற்றுவிக்கும் கலையும் வெகு விசேஷமானவையாகத் தென்பட்டன.

புரவலர்களையும் மன்னர்களையும் அரசவைகளையும் பரிசில்களையும் மாணாக்கர்களையும் விமர்சகர்களையும் எதிரிகளையும் இழப்புகளையும் தன்வசம் கொண்டிருந்த கம்பர் போன்ற காவியகர்த்தாவை விடவும், ஊரும் உறவும் அற்றுத் தனியாய்த் திரிந்த, உப்புக்குப் பாடி, புளிக்கும் ஒரு பாட்டுப் பாடிய, தேசாந்திரிக் கிழவிக்குத்தான் அந்தப் பாடல் நெருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது என்றும் தோன்றியது.

இயற்றியவர் பெயர் மட்டுமில்லை, வேறு சில பாடபேதங்களும் ராஜு வாத்தியார் கூறிய பாடலுக்கு உண்டு. நெற்கூலி கொடுத்த பெண்ணின் பெயர் நீலி அல்ல, வேலி. அவள் பிறைநுதலாள் அல்ல, வாணுதலாள் . . . இப்போது வேறு ஒரு குழப்பம் வந்துவிட்டது. ஒருவேளை ராஜு வாத்தியார் சரியாகவே சொல்லி, நான் நினைவில் ஏற்றுக்கொண்ட பதிவுகள்தாம் தவறாக இருந்திருக்குமோ என்று.

அவர் சொன்ன பாடல் மட்டுமல்ல, அவர் சம்பந்தமாக நான் அறிந்து வைத்திருந்த விதமும் கூடத் தவறாக இருக்கலாம் என்பது புரிய 2002 வரை நான் காத்திருக்க வேண்டியிருந்தது, வாத்தியார் திருநெல்வேலிக் கொச்சைவழக்கில் பேசினாலும்கூட, புதுமைப்பித்தனின் கதையிலிருந்து இறங்கி வந்தவராய் இல்லாமல், கு ப ராஜகோபாலனின் கதையிலிருந்து இறங்கி வந்தவரோ என்ற சந்தேகத்தைக் கிளப்பிய ஒரு தருணம் வரும்வரை.

அந்த முறை வந்த ஞாபகத்தில் இன்னும் முக்கியமான அம்சம் ஒன்று இருந்தது. ஒரே சமயத்தில் தத்துவார்த்தமாகவும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்ததாகவும் மனம் பிளவுகொண்டது. உலகம் மிகவும் சுருங்கிவிட்டது போன்ற சித்திரம், அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஏகப்பட்ட விஷயங்களை ஒன்றாக நான் கோத்துப் பார்ப்பதால் அது சுருங்கிவிட்ட மாதிரித் தோன்றுகிறதோ என்ற சந்தேகம் ஒருபுறம். மறு புறம், இனம்புரியாத ஒரு வேதனை மனத்தில் கனத்தது. அதற்கு முன்புவரை ராஜுவாத்தியாரை நான் நினைவுகூர்ந்த சந்தர்ப்பங்களெல்லாம் சந்தோஷத்தால் நிரம்பியவை . . .

பத்மினி தன் தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிறந்தகம் சென்றிருந்தாள். மனித வாசனை முழுக்க அற்றுவிட்டது போன்ற இறுக்கம் சூழ்ந்திருந்தது வீட்டை. நான் மட்டும் தனியாக இருந்தேனா, கொசுக்களுக்குச் சமமாகத் தனிமையும் மண்டி ரீங்கரித்தது.

பொழுதின் கழுத்தில் கை வைத்து நெட்டித் தள்ளுவதற்காக, பழைய தினசரிகள் பத்திரிகைகள் கிடந்த மர அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். ஆங்கில தினத்தாளுக்கு ஈடாகப் பெண்கள் பத்திரிகைகள் விதவிதமாகச் சேர்ந்திருந்தன. நூதனமான சமையல் குறிப்புகளுக்காக பத்மினி அவற்றை விடாமல் வாங்கிச் சேர்ப்பாள். அவளுக்கும் அவளுடைய தாயாருக்கும் நடந்த உரையாடல் நினைவு வந்தது.

விதவிதமாச் சமைச்சுப்போட்டு கொழந்தைகளுக்கு இப்பிடி நாக்கை வளத்துவிடறயே பத்தா.

அது சரி. ஒனக்கு உண்டைக் கட்டி சாதமும் ஒரு கரண்டி தயிரும் போதும். எல்லாரும் ஒன்னை மாதிரி இருப்பாளா? ஒத்தொருத்தர் ருசியும் பசியும் ஒவ்வொரு மாதிரி.

மிகப் பிரபலமான பத்திரிகைக் குழுமம் சென்ற வருடம் தொடங்கியிருந்த பெண்கள் பத்திரிகையின் பழைய இதழ் ஒன்று அகப்பட்டது. புரட்டினேன். பொதுவாக இது போன்ற பத்திரிகைகளில் இருக்கும் வழக்கமான சமாசாரங்கள்தாம், சமையல், கை வேலைப்பாடுகள், பதினாறு புள்ளி எட்டுவரிசைக் கோலம், வீட்டிலிருந்தே பணம் சம்பாதித்தல், ஜோசியம், அசட்டுத்தனமான ஓரிரு சிறுகதைகள் என்று.

ஆனால், இந்தப் பத்திரிகைகளில் வாசகர் பங்கேற்பாக வரும் பகுதிகள் சுவாரசியமாக இருக்கும். அதிலும்கூட, வெள்ளைப்படுவது, மார்பகம் விகிதாசாரக் குறைவாகச் சுருங்கியிருப்பது, விடாய்க் காலத்தில் பிறப்புறுப்பில் தாளமுடியாத நமைச்சல் என்பது போன்று மருத்துவரிடம் நேரில் சென்று ஆலோசனை கேட்க வேண்டிய விஷயங்களை நாலு வரிப் போஸ்ட் கார்டில் எழுதிப் போடும் வாசகிகள் உண்மையிலேயே வாசகிகள்தாமா, அல்லது ஆசிரியர் குழுவின் கற்பனைக்குப் பெயர் மட்டும் நல்குகிறவர்களா என்று சந்தேகமும் உண்டு. தவிர, பெண்கள் பத்திரிகையில் ஆண்களுக்கான தனிப்பகுதியோ இது என்றும் சந்தேகம்.

நான் பார்த்த இதழில், வாசகியர் தம் வாழ்வின் சில அந்தரங்கமான நெருக்கடிகளில் எடுக்க நேர்ந்த முடிவு சரியா தவறா, தொடர்ந்து தான் எந்தத் திசையில் செல்வது என்ற குழப்பத்தை முகம் தெரியாத எண்ணற்ற சக வாசகியருடன் பகிர்ந்துகொள்ளும் பகுதி ஒன்று இருந்தது. முந்தைய இதழில் விரிவாக வெளியான கடிதத்தின் சுருக்கம் இந்த இதழில் பிரசுரமாகியிருந்தது. விஷயம் இதுதான். கணவரை இழந்தவரான அறுபத்தைந்து வயது வாசகி ஒருவர். இளம் வயதில் தம்மைக் காதலித்தவர் இப்போது திரும்பவும் தன் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கிறார், தம்மோடு வாழ வரும்படி அழைக்கிறார், குழந்தைகள் அரைக் கிழமாகிவிட்ட நாட்களில், பேரக்குழந்தைகள் கல்லூரி செல்லும் நாட்களில், சமூக மரியாதையும் நெடுநாள் காதலும் எதிரெதிராய் இழுக்கும்போது தாம் என்ன முடிவெடுப்பது என்று வாசகியரிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.

இந்த இதழில் வாசகியர் வாக்களித்திருந்த விதம் அசாதாரணமானது. 97 சதவீதம் காதலருடன் வாழச் செல்லும்படி அறிவுறுத்தியிருந்தது. 3 சதவீதம் மட்டும் பலவீனமான காரணங்களைச் சொல்லி வேண்டாம் என்று கூறியிருந்தது.

தொடர்ந்து, இந்த இதழுக்கான கட்டுரைக் கடிதம். சாய்வு நாற்காலியில் சென்று உட்கார்ந்து கொண்டு சாவகாசமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள தோழியருக்கு,

முதலில் என்னைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்லி விடுகிறேன். அப்போதுதான் என் பிரச் சினை உங்களுக்கு நன்றாகப் புரியும்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். வீட்டின் செல்லக் குழந்தை. மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் அன்பானதாய் தந்தையரும் என்று ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்த இளமைப் பிராயம். அந்த நாட்களில் நான் ஏறாத மரமில்லை. நீந்தாத நீர்நிலை இல்லை. பனைமரத்தில் நான் ஏறும் வேகத்தைப் பார்த்து என் சகோதரர்களே ஆச்சரியப்படுவார்கள். பாவாடையை ஏற்றிச் செருகிக்கொண்டு கபடி விளையாடுவேன். என் பால்ய ஞாபகங்களில் நான் பாண்டியோ பல்லாங்குழியோ விளையாடியதாக நினைப்பே இல்லை.

பருவ வயதை எட்டியபோது, இத்தனைபேருடன் இருந்தபோதும், ஒருவிதமான தனிமையை உணரத் தொடங்கினேன். கிராமத்தின் தெருக்களில் ஓடியும் சாடியும் நான் தீர்த்துக்கொண்ட தினவு, என் உடம்புக்குள் ஆழ ஆழப் புதைந்து கொண்டது. உடல் வளர்வதற்கு இணையாக எனக்குள் அது வளர்ந்துகொண்டும் போனது. எவ்வளவுதான் சுதந்திரம் நிலவும் வீடாக இருந்தாலும், பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியாதது அது. ரகசியமாகக் கிளைவிரித்துப் படரும் தாவரம்போல எனக்குள் வளர்ந்து வந்தது.

இந்த நேரத்தில் எனக்குத் திருமணம் பேசினார்கள். எங்களைப் போன்ற நடுத்தர வருமானமுள்ள குடும்பம்தான். நாகரிகமான மனிதர்கள். அந்த நாட்களில் பெண்ணைப் பெற்றவர்கள் படும் பண ரீதியான சிரமத்தையோ, மனச்சிக்கலையோ சற்றும் எதிர்கொள்ளாமலே என் பெற்றோர் என்னை மணமுடித்து அனுப்பினார்கள்.

வேறொரு கிராமத்தில் நாங்கள் தனியாகக் குடியமர்ந்தோம். அவர் மிருதுவானவர். அதிர்ந்து பேசக்கூடமாட்டார். எதிராளியின் மனத்தைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பார். சுத்தத்தைப் பற்றி அபார அக்கறை கொண்டவர். தினந்தோறும் சலவை உடைதான் அணிவார். சும்மா இருக்கும் நேரங்களில் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியைச் சுத்தம் செய்துகொண்டேயிருப்பார். ஒரு தடவை சொன்னார். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையறாது நடந்துவரும் மாபெரும் போரில் இயற்கை கைக்கொள்ளும் கொடூரமான ஆயுதம் தூசிதானாம். இது தம்முடைய கண்டுபிடிப்பு அல்ல என்றும், ஏதோ ஒரு விஞ்ஞானப் புத்தகத்தில் படித்ததாகவும் சொன்னார்.

சைவப் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள்தான் நானும் என்றாலும் மசாலாப் பொருட்கள் கலந்த சமையலில் மிகவும் பிரியம் கொண்டவள். சமையலில் உப்பு புளி காரம் எண்ணெய் எல்லாமே மிதமாகத்தான் இருக்கவேண்டும் அவருக்கு. பத்தியச் சாப்பாடு மாதிரி. உறுத்தாத மெல்லிய மணம் உள்ள ஊதுபத்தியோ தசாங்கமோ சதா மணம் நிரப்பியி ருக்கும் வீடு. எல்லாமே தாறுமாறாகக் கிடக்கும் என் தாய் வீட்டின் சூழ்நிலைக்கு நேர் விரோதமாக நேர்த்தியும் அழகும் அலங்காரமும் அமைதியும் கொண்டிருந்த எங்கள் தனிவீடு முதல்நாள் முதலே வேறு யாருடைய வீடோபோலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு.

வீட்டின் சகல முனைகளிலும் நிலவிய அந்நியத்தன்மை எங்கள் படுக்கையறையையும் விட்டு வைக்கவில்லை. தாம்பத்திய வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல்தான் பார்த்துக்கொண்டார் என்னவர். உண்மையில், இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரை என்னவர் என்று குறிப்பிடும்போது மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன். அவரை நான் அடைந்தது எனது பல ஜென்மப் பேறு என்று நிஜமாகவே நம்புகிறேன்.

இவ்வளவு இருந்தும், என் அக ஆழத்தில் ஒரு பள்ளம் இருப்பது போலவும், அது நிரம்பாமலே என் வாழ்நாள் கழிந்துகொண்டிருக்கிறது என்கிற மாதிரியும் உணர ஆரம்பித்தேன். ஏழு வருடங்கள் இப்படியே கழிந்தன.

ஏழாவது வருடத் துவக்கத்தில் எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரத் தொடங்கியது. எங்கள் ஊர்ப் பக்கம் கந்த சஷ்டியை ஒட்டி சூரன் வேடம் தரித்து வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு சூரன் என் கனவில் தவறாமல் வருவான். கல்த் தொட்டியாக ஆகியிருக்கும் என் அடிவயிற்றைக் கூர்மையான சூலத்தால் குத்திப் பிளப்பான். நானானால் சிரித்துக்கொண்டிருப்பேன்.

இந்நிலையில் எங்கள் வீட்டுக்குள் நள்ளிரவில் ஒருவன் புகுந்து விட்டான். திருட வந்தவனாகத் தான் இருக்க வேண்டும். கத்தி முனையில் எங்களை நிறுத்தித் தூணோடு கட்டிப்போட்டு விட்டு, அலமாரிச் சாவியைக் கேட்டு மிரட்டினான். என் முகத்திலும் அவர் முகத்திலும் டார்ச் லைட் ஒளி பட்டுப் பட்டு விலகியபோது பார்வை கூசியது எனக்கு. கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்ததில் வந்தவனுடைய உருவமும் முகமும் ஓரளவு துலங்கியது. இளைஞன்தான். வயது இருபத்தைந்தை ஒட்டி இருக்கலாம்.

என்ன நினைத்தானோ, எதைக் கண்டானோ, சடாரென்று என்னை நெருங்கி என் கட்டுகளை மட்டும் அவிழ்த்துவிட்டான். பல்லிடுக்கில் கவ்விய கத்திக்கு மறுபுறம் மலர்ந்த முறுவல் பயங்கரமானதாக இருந்தது. பிறகு அவன் என் கணவரின் கண்முன்னே என்னை . . . என்னை . . .

இதற்காகவே வந்தவன்போல இறங்கிப்போய்விட்டான். தான் தேடி வந்ததை விடவும் அதிகமாகவே கிடைத்துவிட்டதாக உணர்ந்தானோ என்னவோ.

நான் குமுறிக் குமுறி அழுதேன். என்னவர் அருகில் அமர்ந்து ஆறுதல் சொன்னார். விபத்தில் ஒரு அங்கம் ஊனமாகிறவர்கள் கிடையாதா, இதை ஒரு விஷய மாகவே நினைக்க வேண்டியதில்லை, யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் பலவிதமாகத் தேற்றினார். சில விஷயங்களை அப்படியெல்லாம் மூடி மறைத்துவிட முடியாது என்பதுகூடத் தெரியாத அப்பாவி அவர். அவருடைய அன்பின் ஜ்வாலையில் அப்படியே பொசுங்கிவிட மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல வேறு இரண்டு பிரச்சினைகள் முளைத்தன. என்னவரின் அன்பில் ஒரு இம்மி அதிகரித்துவிட்டது போலவும், அதற்குக் காரணம் அவரால் இனி வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அந்த இரவுதான் என்றும், தன்னுடைய உபரிப் பரிவின் மூலம் எனக்கும் அதை சதா நினைவூட்டி வருகிறார் என்றும் தோன்றத் தொடங்கியது எனக்கு. எங்களுக்குள் தொடுகை என்பதே அநேகமாக நின்றுபோய் விட்டது என்பதுபோக, நான் ஒரு பிச்சைப் பாத்திரத்துடன் எந்நேரமும் அவர் முன்னால் இறைஞ்சிக்கொண்டு நிற்பதுபோல உணர ஆரம்பித்தேன்.

இரண்டாவது விஷயம்தான் இன்னும் சிக்கலானது. சூலத்தால் கல்த் தொட்டியைப் பிளக்க வந்து சேரும் கனவுச் சூரனுக்கு ஒரு முகம் கிடைத்துத் தொலைத்தது. வேளை கெட்ட வேளைகளில் கண்முன் அந்தரத்தில் மிதந்து பழிப்புக் காட்டியது.

அதிக நாட்கள் இந்தச் சித்திரவதையைத் தொடர அனுமதிக்கவில்லை நான். என்னவரைப் பிரிந்து பிறந்தவீடு திரும்பிவிட்டேன். விட்ட இடத்திலிருந்து படிப்பைத் தொடர்ந்து நானாக உத்தியோகம் தேடித்தனியாக வாழ்ந்து தீர்த்து போன ஆண்டுதான் ஓய்வு பெற்றேன். நான் பிரிந்துபோவதாக அறிவித்த பிறகுகூட ஒரு சொல் வன்மமாக உதிர்க்காத, கோர்ட் படியேறாத உத்தமரைப் பிரிந்து வந்தது தவறோ என்று சமீபகாலமாக அடிக்கடி தோன்றுகிறது. வயதாகிவிட்டதில்லையா, குற்றவுணர்ச்சியின் வேகம் தாள முடியாததாக இருக்கிறது.

வாசகிகள்தாம் சொல்ல வேண்டும், நான் செய்தது சரியா தவறா என்று.

ஆனால், அவர்களிடம் இன்னொரு உண்மையையும் நான் மறைக்க விரும்பவில்லை. எனக்குள் ஒரு பள்ளம் நிரந்தரமாக இருந்து வந்தது என்று சொன்னேனில்லையா, அது நிரம்பித் ததும்பியதும் அந்த விபத்து நடந்த இரவில்தான் . . .

பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *