அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16
அத்தியாயம்-13
பொதுத் தொலைபேசி எப்போதும் ஒழுங்காக இயங்கிய தில்லை. இவளுக்கும் பழக்கம் இல்லை. எனினும் தபால் அலுவலகத்தை ஒட்டிய தொலைபேசி அது. சில்லறைமாற்றி வைத்துக்கொண்டு ரத்னாவின் பல்கலைக்கழக விடுதி எண் ணுக்கு அவள் சுழற்றுகிறாள். உடனே கிடைக்கவில்லை. நாலைந்து தடவைகள் முயன்றபிறகு மணி அடிக்கிறது. ‘ஹலோ…’ என்ற ஆண்குரல் கேட்கிறது. இவள் நம்பரைச் சொல்கிறாள் ‘…எஸ்.திஸ் இஸ் அபு ஸ்பிக்கிங்! ‘ஓ..நா… நான் ரத்னாவின் ஆண்டி’, கிரிஜா பேசுகிறேன். ரத்னா இல்லையா?’
‘…அவ…எம். பி. ரோட் ஹாஸ்டலுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாளே? உங்க வீட்டுப்பக்கம்தான்.’
‘..எனக்கு அவசரமா. அவ ஹெல்ப் வேண்டியிருக்கு சந்திச்சுப் பேசணும். கொஞ்சம் வழி சொல்கிறீர்களா? பஸ் எந்த பஸ்னு சொன்னாத் தேவலை…’
‘ஷூர்…உங்கபக்கத்திலேந்து ட்ரிபிள் ஃபோர்…நாலு நாலு நாலு பஸ் போகும்-விமன் ஹாஸ்டல் ஸ்டாப்பிங்கே இருக்கு…நீங்க வீட்டிலேந்துதானே பேசுகிறீக?…
‘இல்ல’ பப்ளிக் பூத். உங்க கொஸ்ச்சினருக்கு நாலஞ்சு நாளுக்குள்ள விரிவா பதில் எழுதித் த்ரேன்…நீங்க…முடிஞ்சா. ரத்னாவுக்கு ஃபோன் பண்ணி நான் வரேன்னு சொல்லுறீங்களா?…இங்க… கனெக்ஷன் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கும் போல…’
சொல்றேன். நீங்க வேற ஏதானும் ஹெல்ப் வேணும்னா சொல்லுங்கம்மா!’
‘சொல்றேன்…பின்னால. தாங்க்ஸ்…’
வாங்கியை வைத்து விட்டுச் சிறிது தொலைவு நடந்து சென்று, பஸ் நிறுத்தத்தில் நிற்கிறாள். கையில் அதிகப் பணம் இல்லை. அன்று ஐநூறு ரூபாய் மட்டுமே கைப்பையில் எடுத்துக் கொண்டிருந்தாள். இனி, ஒவ்வொரு காசையும் எண்ணிச் செலவழிக்க வேண்டும். ஆட்டோவுக்குச் செலவு செய்யக் கூட கணக்குப் பார்ப்பவளாக, பழைய கிரிஜாவாக எண்ணிக் கொள்கிறாள்.
பஸ்ஸிலேறி பெண்கள் விடுதி நிறுத்தத்தில் வந்து இறங்குகிறாள்.
உயர்ந்த சிவப்புக் கட்டிடம். மூன்றடுக்குகள் இருக் கின்றன. நான்காவது மாடிக் கட்டிட வேலை நடக்கிறது. ரத்னாவின் அறை இரண்டாம் மாடி…இருநூற்று மூன்று எண்.
அவள் வந்து கதவை இடிக்கையில், ‘ஸ்கர்ட் ப்ளெவுஸ்’ அணிந்து, வெளியே செல்லத் தயாராக இருந்த பெண்ணொருத்தி கதவைத் திறக்கிறாள்.
இவளைக் கண்டதும் முகம் மலர்ந்து, ப்ளிஸ் கம் இன்- இப்பதான் அபு ஃபோன் பண்ணிச் சொன்னார். ஜஸ்ட் நெள, ரத்னா கொஞ்சம் வெளியே போயிருக்கிறாள். இத இப்ப ஒரு மணிக்கு வந்து விடுவாள்…ப்ளீஸ்…கம்..’ வரவேற்கிறாள். ஆறுதலாக இருக்கிறது. நடுத்தெரு வெயிலிலிருந்து ஒரு நிழலுக்கு வந்திருக்கிறாள். அலமாரியில் இருந்து, ஆரஞ்சுச் சாற்றை எடுத்துக் கலக்கிக் கண்ணாடித் தம்ளருடன் நீட்டுகிறாள் அந்தப் பெண்.
ருஷிகேசத்துக் கிழவியை நினைத்துக் கொள்கிறாள். மூன்றாம் மாடியிலிருந்து ஜன்னல் வழியே துாரத்துப் பசுமை தெரிகிறது. ஒவ்வொரு துளியாக அவள் ரசித்துப் பருகுவதைக் கண்ணுற்ற அந்தப்பெண், ‘ஹாவ் ஸம் மோர்…!’ என்று இன்னொரு தம்ளர் கலந்து வைக்கிறாள். கிரிஜா புன்னகையுடன் ஏற்கிறாள். மேலே விசிறி சுழல்கிறது. இரண்டு பேர் தங்கும் அறை அது.
‘நீங்கள் அவளுடன் இந்த அறையில் இருக்கிறீர்களா..?’
‘…ஆம்…ஐ’ம் ஆனி…’ என்று அறிமுகம் செய்து கொள்கிறாள். புன்னகையுடன்.
‘நீங்கள் வெளியில் கிளம்பிட்டிருந்தீங்க போலிருக்கு…’
‘ஆமாம். நீங்கள்… செளகரியமாக இருங்கள்…இதோ பாத்ரூம்…நான் பையனிடம் சொல்லிட்டுப் போறேன். பிரேக் ஃபாஸ்ட் கொண்டு வருவான் ரத்னா லஞ்ச் அவருக்கு முன்ன வத்துருவா…ரூம் சாவி இதோ…ஒகே. வரட்டுமா?…’
கிரிஜா ஆறுதலுடன் தலையசைக்கிறாள்.
ஆனி சென்ற பிறகு சில நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு நடந்த நிகழ்ச்சிக்களை மறக்க முயலுகிறாள்.
ஒருபெண், எத்தனை வயதானாலும், என்ன நிலையானாலும், வீட்டரணை விட்டால், தறிகெட்டுப் பாலுணர்வின் உந்ததுலினால் தன்னை மாசுபடுத்திக்கொண்டு விடுவாள் என்ற தீர்மானமான, அருவருக்கத்தக்க கருத்தைக் கல்லாய் நிலைப்படுத்தியிருக்கிறார்கள். எந்த வயசானாலும், கணவன் தவிர்த்து ஒரு பெண் எந்த ஆண்மகனுடனும் பேசவோ, பழகவோ, ஒன்றாக நடக்கவோ நேர்ந்தால், அந்த ஒரே கோணப்பார்வைதான் பதிக்கப்படுகிறது. இந்தப் பார்வை ஆணைக் கட்டுப்படுத்தாது.
இத்தனை ஆண்டுகள் படித்து, பெண் பொருளாதார சுதந்திரம் பெற்றபின் உள்ள நிலையா இது? எந்த உண்மை யும் ஒரு சோதனைக் கட்டத்தில்தான் குதித்து வெளி வருகிறது. சாமு அவள்மீது வைத்திருக்கும் மதிப்பை வெளி யாக்கி விட்டான். இனி அந்தக் குடும்பத்துடன் அவளால் எவ்வாறு ஒட்டிக்கொண்டு இருக்கமுடியும்?
ஆனால்…கவிதா, சாரு…
நெடுநேரம் கூரையை வெறித்துக் கொண்டு அவள் கிடக்கிறாள். பையன் அவளுடைய பிரேக்ஃபாஸ்ட் உணவைக் கொண்டுவந்து கதவைத் தட்டும் போதுதான் புதிய கரையில் ஒதுங்கியிருக்கிறோம் என்று நினைவு வருகிறது. எழுந்து கதவைத் திறக்கிறாள், டோஸ்ட், ஜாம் வெந்தமுட்டை, சூட்டுக் குப்பியில் காபி முதலியவை வைத்துக் கொண்டு வந்திருக்கிறான். முட்டை வேண்டாம் எடுத்துச் செல் என்று கூறுகிறாள். ஆனால் அவனுக்கு அது புரிய வில்லையோ என்னவோ?…தட்டை எடுத்துச்செல் என்று சொல்வதுபோல், ‘இருக்கட்டும் பின்னால் வருகிறேன்’ என்று போகிறான்.
குளியலறையில் சென்று புத்துணர்வு பெற்று வந்து சேலைமாற்றிக் கொள்கிறாள். இந்த அறையில் ஈரச்சேலை உலர்த்த வசதி கிடையாது. கூடுமான வரையிலும் அறை துப்புரவாக இருக்கிறது. இருவரும் பகிர்ந்து கொள்ள ஒரு பெரிய இரும்பு அலமாரி…பதிக்கப்பெற்றிருக்கிறது. மேசைக்கு இருபுறங்களிலும் இழுப்பறைகள் இருக்கின்றன. அலங்காரக் கண்ணாடி, நடுவில் பவுடர், நகப்பாலிஷ். போன்ற ஒப்பனை சாமான்கள் இருக்கின்றன. இன்னொரு சிறு மேசை எழுது வதற்குப் பயன்படும்; சாப்பிடுவதற்கும் பயன்படும்போலும்!
மூலையில் ஒரு மண் கூசாவும், மொட்டையான உலோகத் தம்ளரும் துப்புரவாக இருக்கின்றன. இரு கட்டில்களுக்கும் நடுவே இருக்கும் மெத்தென்ற விரிப்பு – பூ வேலை செய்த, பருத்தி ரகம்தான். உள்ளே பேர்ட்டுக் கொள்ளும் ஸிலிப்பர்கள் இரண்டு ஜோடிகளும் அந்த கட்டிலுக்குக் கீழே இருக் கின்றன. வராந்தாவைப் பார்த்த ஜன்னலின் சிறு திண்ணை யில் சில புத்தகங்கள்…ஒரு பெரிய சிப்பி ஒட்டில் சாம்பல் குவியல்…அவளுள் ஒரு குலுக்கல்.
ஸிகரெட்டையும் புடிச்சிட்டுப் போறது…!
ரோஜாமாமி கூறியது நிசம்தானா? கட்டவிழ்ந்து உண்மையில் அவள் எந்தக் கும்பலிடையே வந்திருக்கிறாள்?
இவர்களுடைய சுதந்தரம், ஆண் பெண் எந்தக் கட்டுப் பாடின்றியும் உறவு கொள்வதும், மதுவருந்துவதும், புகைப்பதும் என்ற அரண்களைத் தகர்ப்பதும்தானா. உண்மையில்’ இந்தக்குற்றச் சாட்டுக்கள், உண்மைதானா?
ஒராயிரம் கேள்விகள் மொய்க்கின்றன.
சாம்பற் குவியலிலே, வெண்மையாக சிகரெட்டின் ஒரு துண்டு போல் கிடக்கிறது…இருக்கலாம்.
வெட்ட வெளிக்காற்றில் குளிர்ச்சியும் உண்டு; தூசியும் தவிர்க்க முடியாததுதான். ரொட்டித் துண்டுகளையும் குப்பியி லிருந்த தேநீரையும் காலி செய்கிறாள். அடுக்கில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் பிரிக்கிறாள். ‘ஸூஸான் க்ரிஃத்ஸ் எழுத்துக்களில் இருந்து பொறுக்கு மணிகளாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட கட்டுரை, கவிதைகளின் தொகுப்பு. ‘விமன்ஸ் பிரஸ்’ வெளியிட்டது.
எடுத்துப் பிரித்துத் தலைப்புகளைப் பார்க்கிறாள்-
பெண்-தாய்மை-பெண்-சமயம்-
கருச்சிதைவு-பாலுணர்வுச் சிக்கல்கள்-போர்னோகிராஃபி …இன்றைய தலைமுறையினரை ஆட்டிப் படைக்கும் பிரச்னைகளே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன நூலில்.
பெண்ணுரிமைக் கோணத்தில் இப்பிரச்னைகள் சமூகத் தில் எவ்வாறு ஆழ்ந்து போய் அவளைப் பாதிக்கிறதென்று ஆசிரியை பல நிரூபணங்களுடன் விவாதிக்கிறாள் என்பவை மாதிரிக்கு அங்கும் இங்குமாகப் பார்த்துப் புரிந்து கொள்கிறாள்.
அமெரிக்காவில், கருச்சிதைவுக்கு அங்கீகாரமில்லை என்ற நிலையில், கட்டுப்பாடற்ற வாழ்வில் பாதிக்கப்பெற்று சுமக்கும் பெண்ணொருத்தி தன் சுமையைக் கழிக்க அனு பவிக்கும் கொடுமைகளை விளக்கிக் கொண்டு போகிறாள்.
தொடர்ந்து படிக்க முடியவில்லை.
நெஞ்சு இறுகிப் போகிறது.
நாகரிக நாட்டிலே, நாகரிக உலகிலே, பெண் இந்த நிலையிலும் வெறும் தோலும் சதையுமாகவே. சீரழிக்கப் படுகிறாள் என்ற விவரங்களை சீரணிக்க முடியவில்லை.
ஊடே, இந்த நாட்டிலும் இந்தப் பெருநகரிலும், நமக்குத் தெரியாத எத்தனை கோரங்கள் நாகரிக அலங் காரப் பூச்சுக்கும் சுதந்தரத்துக்கும் அப்பால் ஒவ்வொரு பெண்ணையும் ஆட்டி அலைக்கழிக்குமோ என்ற அச்சம் குளிர்திரியாக ஓடுகிறது. அறையில் கடியாரமில்லை. இவள் கைக்கடியாரம் நின்று போயிருக்கிறது. இது மிகப் பழைய கடிகாரம், இவள் திருமணத்துக்கு ருக்மணி டீச்சரும் பாகீரதி டிச்சரும் பகிர்ந்து கொண்டு வாங்கிப் பரிசளித்த ‘ஸூஜா தா கடியாரம்.
மணி இன்னும் ஒன்றடித்திருக்காது?…
கதவு ஒசைப்படுகிறது.
ரத்னாவின் பேச்சுக் குரல்…
கதவைத் திறக்கிறாள். ஆர்கண்டிச் சேலை விறைத்த நிலையில் ஜோல்னாப் பையுடன் ரத்னா;
ஹலோ…
ரத்னா சிரிக்கிறாள். முதுகைத் தட்டுகிறாள். “அபு வந்திருக்கிறார். கீழே போகலாமா?”
பேசிக் கொண்டே இறங்குகிறார்கள்.
அபுவை லைப்ர்ரி சென்டரின் அருகே தற்செயலாகப் பார்த்தாளாம்.
கீழே வட்டமான பார்வையாளர் கூடத்தில் நிற்கிறான்.
“நீங்க பேசிட்டிருங்க. நான் லஞ்ச் கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்…” அவர்களை உட்கார வைத்து விட்டு அவள் உள்ளே செல்கிறாள்.
“அறிவாளியாக இருக்கக் கூடிய ஒவ்வொரு மணமான பெண்ணுக்கும், சராசரி பழைய மரபுக் குடும்ப ஆணுடன் வாழும் வாழ்க்கையில் நியாயம் கிடைப்பதில்லை என்ற கூற்று… நிரூபணமாகி விட்டது இல்ல!…”
“இப்படி ஒரு திருப்பம் நான் நிச்சயமா எதிர்பார்க்கல. எனக்கு மூச்சு முட்டும் இந்த உழைப்பு நெருக்கடியில் அலுத்து வரும் சோர்வில், ஒர் இடைவெளி வேண்டும், தெளிவு வேண்டும் என்றுதான் போனேன். அதை நான் அவர்களிடம் கேட்டுப் பெறமுடியாதுன்னு தெரிஞ்சு போனேன்…ஆனால், ஏன் என்னன்னு தெரிஞ்சிக்கக்கூட இடமில்லாமல் சேற்றை வாரி இறைத்து, வெளியே துரத்தினார்கள் என்றே சொல்லலாம்…” அவன் ஒன்றுமே பேசவில்லை…சிறிது நேரத்துக்குப் பின் ஆழ்ந்த குரலில்,
“நீங்க…நிச்சயமா முடிவா வந்துட்டீங்களா?” என்று கேட்கிறான்.
“எதுவும் புரியல..”
“எனக்கு ஒரு ஸிஸ்டர் இருந்தா. இந்த ஊரில் சுதந்திரமாகப் படித்துப்பழக வளர்க்கப்பட்ட அவளை, எங்கோ நாகப்பட்டினத்துக்குப் பக்கம், பண்ணை, வீடு, மாடு மந்தை பிஸினஸ்னு கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள். என்னை விட நாலைந்து வயசு பெரியவள். அவள் செய்த குற்றம் புருஷனைவிட அதிகம் படித்தது மட்டுமில்லாமல் அறிவாளியாகவும் இருந்ததுதான். பெண் பண்ணைச் சீமாட்டியாக இருப்பாள் என்று என் பெற்றோர் நினைத்தார்கள். அம்மை வார்த்துக் குளிர்ந்து போனான்னு, நாங்கள் சேதி வந்து போவதற்குமுன் மண்ணோடு ஆக்கிவிட்டார்கள். என்…என் ஆத்திரத்துக்குக் காரணம் நீங்கள் தெரிஞ்சுக்கணும்னு சொல்றேன்…!”
“நீங்க ஒண்ணுமே செய்யமுடியல?”
“என்ன செய்ய? பெண்களுக்குக் கல்யாணம் என்றால் வெறும் வளமையுள்ள இடம் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்கள், அவள் அழகு, பணம், அடங்கிப் போகும் இயல்பு மட்டும் குறியாக்குகிறார்கள், அது இல்லை என்றால், நீதி செத்துப் போகிறது. சகோதரி, ரத்னா இப்ப ஒரு சர்வேயில் ஈடுபட்டிருக்கிறாள். இங்க, இந்த நாட்டில், இப்ப அதிகமாக வியாபாரம் ஆகும் பொருள், ஏற்றுமதியாகும் பொருள் என்ன தெரியுமா?…பெண்தான். உடல்னு உச்சரிக்கவே எனக்கு மரியாதைக் குறைவாக இருக்கிறது. நீங்கள் திடுக்கிடக் கூடிய தகவல்களை ரத்னாவிடம் கேட்பீர்கள்!”
“உங்க ரெண்டு பேருக்கும் சப்பாத்தி. சப்ஜி, தயிர் கொண்டு வரச் சொல்றேன். வாங்க, டைனிங் ஹாலிக்கு!”
ரத்னா அழைக்கிறாள்.
“வாட் அபெளட் யூ?” “நான் ஒரு மணிக்கே முடிச்சிட்டேன்…அது சரி, இப்ப என்ன செய்யப்போறீங்க கிரி?”
“அவள் தலைகுனிந்து கீழே விரலால் நெருடிய வண்ணம், மெளனமாக இருக்கிறாள்.
“என்ன நடந்தது, இன்னைக்குக் காலையில?”
கிரிஜா, சுருக்கமாக, அவன் கிளம்பிச் சென்ற நேரத்திலிருந்து, ரோஜா மாமியின் பெட்டி விவரம் உட்பட எடுத்துரைக்கிறாள்.
“பூ…ரெய்ட் தான் பேப்பரில் எல்லாம் வந்து சந்தி சிரிச்சாச்சே? ஸோ, சாமுவும் இதில் இன்வால்வ்ட்?…”
“அதென்னமோ தெரியாது. எனக்கு இப்ப, கவிதாவையும் சாருவையும் பத்தித்தான் கவலை. அந்தக் குழந்தைகளை தாயும் பிள்ளையுமா, எப்படி நடத்துவான்னு நினைக்கவே முடியல…இப்ப. இப்ப, நான் அங்கே இருந்து வெளியே வந்ததுக்குக் காரணமே, அவங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைக்கணும், ஸெல்ஃப் ரிலயன்டா, அறிவினால் மேம் பட்டவர்களாக வளர்க்கணும்னு. இந்த பாஷ், ஸ்கூல்: காலேஜ் இதுவெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. பயமா யிருக்கு…”
‘பையனைப் பற்றிக் கவலை இல்லையா, பஹன்ஜி?…’
“…அவனை விடமாட்டாங்க. ரோபோ வாங்கித் தரேன்: ரிமோட்கன்ட்ரோல் பிளேன் வாங்கித் தரேன், அம்மாவை மறந்துடுன்னு காலமே சொல்லிட்டிருந்தார். நான் ஏன் போனேன், என்மனம் எப்படி நொந்து போயிற்று என்பதை அறியத் துளியும் மனமில்லாமல், உடனே சேற்றை வாரி இறைத்து, இந்த வீட்டை விட்டுப்போ என்று துரத்துபவர்கள்…மனிதர்களா?…பிள்ளையையும் அதே போல் வளர்ப்பான் …”
‘நீங்க இவ்வளவுக்கு ஆண் எதிர்ப்பாளராக இருக்கக் கூடாது பஹன்ஜி?’ அபுவினால் இப்போது சிரிப்பை வர வழைக்க முடியவில்லை.
‘ரத்னா…எனக்கு உடனடியா ஒருவேலை, தங்குமிடம் வேண்டும். வக்கீல் மூலமாக என் சிடுக்கைத் தீர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எனது சர்ட்டிஃபிகேட், போன்ற பேப்பர்கள், துணிமணியெல்லாம் முதலில் எடுத்திட்டு வரணும். அதுக்கெல்லாம் நீங்க ஹெல்ப் பண்ணனும்…”
“டோன்ட் வர்ரி. அதெல்லாம் பாத்துக்கறோம். நீங்க * ஒருவாரம் அமைதியாக ரெஸ்ட் எடுங்க…!’
“ரெஸ்ட் எடுக்கத்தானே போறேன்! படகு கரைக்கு வந்தாச்சு…”
“சாப்பிடுங்க முதலில்…”
முற்றிலும் புதிய சூழ்நிலைக்குக் கிரிஜா தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறாள்.
அத்தியாயம்-14
மாலைநேர நெருக்கடியில் பஸ்ஸில் இருந்து இறங்குவதே கடினமாக இருக்கிறது. சாலையோரங்களில் புழுதி பறக்குமளவுக்கு வெயில் தொடர்ந்து காய்கிறது. பெண்கள் விடுதி நிறுத்தத்தில், கலகலவென்று இறங்கிப் படிகளில் ஏறும் o சில பெண்களுக்குக் கிரிஜா பார்த்தால் சிரிக்குமளவுக்குப் பழகி யிருக்கிறாள். யாரிடமும் யாரும் திருமண அந்தஸ்தை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், உள்ளே ஆண்கள் யாரும் வருவதில்லை. அபுகூட அன்று மேலே வர வில்லையே? வருபவர்கள் கீழே உள்ள பார்வையாளர்கள் வட்டத்தில் மட்டுமே இருக்கலாம். சாப்பாட்டுக் கூடத்தில், விருந்தினராக அழைத்து வரலாம்…அங்கு, சுருள் சுருளாகப் புகைவிடும் வனிதையர் புதிதில்லை. உடையணிவதிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனி, பத்து நாட்களாக இவளுக்கு இடத்தைக் கொடுத்துவிட்டு வெளியே எங்கோ உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறாளாம்.
இரண்டாம் மாடி ஏறிப்போகுமுன் முட்டி வலிக்கிறது. இலேசாக மூச்சு இறைக்கிறது. எதிரே புரளும் நீண்ட விட்டங்கியில், அழிந்த சாயமும் கிறங்கிய கண்களுமாக ருனோ இறங்கிப் போகிறாள். ஆல்கஹால் வாசனை நாசியில் படுகிறது. i.
இங்கு எல்லாம் சர்வ சகஜம்…
கதவுச்சாவி இருக்கிறது. திறந்து கொண்டு உள்ளே செல்கிறாள்…
கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறாள்.
எப்போதும் அணியும் பொன்வடமில்லை. சிறுசிறு சிவப்பு மணிகளாலான மெல்லிய சரம், அழகாகத்தானிருக்கிறது.
இரண்டு மூக்குத்துவாரங்கள். ‘விடுதலை’ என்றறிவிக் கிறது. செவிகளில் சிறுதிருகாணி மட்டும் போட்டிருக்கிறாள்.
கைப்பையைத் திறந்து, கற்றை நோட்டுக்களை எண்ணிப் பார்க்கிறாள். ஆயிரத்தைந்நூறு…வங்கி…ரசீது…
தனக்குத் திருநீர்மலைக்கோயிலில், சாமு அந்தச் சங்கிலியைப் போட்ட நேரம் நினைவில் வருகிறது. அது ஒன்றுதான் அவளே சம்பாதித்துச் சேர்த்துச் செய்து கொண்ட பொன்னகை. கல்யாணத்துக்கென்று அவள் பணத்தில்தான் தாலிக்கொடி பண்ணக் கொடுத்தார்கள். அதன்மீது எத்தனை புனிதம் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது! பொற்சங்கிலி, தனியாக மஞ்சட்சரட்டுத்தாலி என்று இரண்டு போட்டுக் கொண்டிருந்தாள் வெகுநாட்களுக்கு. பரத் பிறந்த பிறகு வெறும் தங்கக் கயிற்றுத்தாலி மட்டும் போட்டுக்கொள்வதென்றுவிடுத்தாள். ரோஜாமாமி அதைத்தான் குறிப்பாகச் சொல்லிக் காட்டினாள். இப்போது, இந்த அவசரத்துக்கு அது உதவு கிறது. வங்கியில் வைத்துப் பணம் வாங்கியிருக்கிறாள்.
ஆனி வருகிறாள்.
“ஹலோ-?…சித்தரஞ்சன் பார்க் போனிங்களா கிரிஜா?”
“பார்த்தேன் மதர். ஃபர்ஸ்ட்லேந்து வேலைக்கு வாங் கன்னா…இப்ப ஃபோர் ஹன்ட்ரட்தான் அவங்களால குடுக்க முடியுமாம். எல்லாம் ஜுக்கி ஜோப்டி சில்ட்ரன், ரிஃப்யூஜி சில்ட்ரன்னாங்க.’’ –
“ஹா…ஃபர் த ப்ரஸண்ட் ஒத்துக்குங்க. உங்க வீட்ல எல்லாரும் பார்த்து ஏற்பாடு பண்ணியிருக்கோம். உங்க ஸ்ர்ட்டிபிகேட், மற்ற சாமான்களெல்லாம் கொண்டு வந்து குடுத்திடறதாச் சொல்லி இருக்காங்க. மதர் இன்லா…என்ன அப்படி அழுவுது?”
கிரிஜாவுக்கு இது எதிர்பாராத செய்தி.
“அவங்க யாரும் இல்லை. உங்க மதர் இன்லா, மிஸ்டர் சாமிநாதன் தான் இருந்தாங்க. நம்ம லாயர் பிரகாஷ்தான் பேசினார். சட்டுனு இப்ப டைவர்ஸ்னு ஒண்ணும் முடியாது… அவங்க திங்ஸ்’ல்லாம் கொண்டு வந்து குடுத்திடணும்னு கேட்டோம். சரின்னிருக்காங்க…”
“வேற ஒண்னும் சொல்லல…!”
“ஏன்? காம்பரமைஸ் பண்ணிக்கவா?”
ஆனி சிரிக்கிறாள். கிரிஜாவினால் சிரிக்க முடியவில்லை.
மதர் இன்லா எதுக்கு அழுதாங்க?
ரத்னா வருகிறாள். இவள் தோற்றத்தைப் பார்த்ததும் “வெரிகுட்…?” என்று ஆமோதித்து முதுகில் தட்டுகிறாள்.
“கிரிஜா, நீங்க ரொம்ப ஃபார்வர்டாயிட்டீங்க. நம்ம அழுக்கு மரபுகளைத் தூக்கி எறிஞ்சிட்டீங்க! நான் ஒரு தமிழ் சினிமா பார்த்தேன். பேரு நினைப்பில இல்ல. அவ டைவர்ஸ் பண்ணிட்டு வேற ஊருக்கு வரா. வந்த இடத்தில் பழைய காதலன் அடுத்த வீட்டில், இவளையே நினைச்சு உருகிட்டிருக்கிறான். சந்திக்கிறார்கள். கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். காதலன் சொல்கிறான்-உன் கழுத் தில் இருக்கிறதே அந்த…அவன் போட்டது. அதை நீக்கிவிடு. என்று.இவள் இவளால் அதைக் கழற்ற முடியவில்லை. அது புனிதமானது. மிகப்புனிதமானது. மனப்போராட்டம். அதை நீக்க முடியவில்லை. காதலனை மறுத்துவிடுகிறாள். விவாகரத்துக்குப் பிறகும் அவன் கட்டிய அது புனிதமாகக் கருதப்படுகிறது கிரிஜா, சபாஷ் ….”
கையைக் குலுக்குகிறாள் ரத்னா.
அந்தக் கதாநாயகிக்கு இரண்டு வயசு வந்த பெண்கள் இருந்தார்களா என்று கேட்கத் துடிக்கிறாள் கிரிஜா.
‘…சரி, இப்ப இதைக் கொண்டாடணும். ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவோம்…வா. ஆனி…?’
ரத்னா அவளையும் இழுத்துக் கொண்டு போகிறாள்.
அவள் சென்ற ஐந்து நிமிடத்துக்குள் உள்ளே…நார் மடிப்பட்டு முட்டாக்கு தெரிகிறது…மாயா…மாயா ஒரு பெட்டியைச் சுமந்துகொண்டு வந்து வைக்கிறாள். “தீதிஜி..?” என்று பெரிதாக அழுகைக்குரல் கொடுக்கிறாள். கிரிஜா திடுக்கிட்டாற்போல் நாற்காலியை இழுத்து நகர்த்தி விட்டு மரியாதையாக (பழக்க தோஷம்) நிற்கிறாள்.
“உட்காருங்கம்மா!”
“உட்காறதுக்கு என்ன இருக்கு? சர்ட்டிபிகேட், உன் சாமான் எல்லாம் இருக்கு…பாத்துக்கோ…ஆயிரங்காலத்துப் பயிர்னு நினைச்சேன். ஒரு நாழில அவச் சொல்லைத் தெறிச்சிட்டுப் போயிட்டே. புருஷனாகப்பட்டவன் கோபத் தில், நீ என்ன கிழிச்சேன்’னு சொல்றதுதான். அதை எல்லாம் மனசில, வச்சுக்கலாமா? உனக்கென்ன குறை வச்சிருந்தது? காசு பணம் குறைவா, நீ அதை செலவழிச்சே, இதை செல வழிச்சேன்னு சொன்னமா? ஒரு தீபாவளின்னா ஆயிரம் ஆயிரத்தைந்நூறு என்று புடவை வாங்கிக் குடுக்கலியா? உனக்கு என்ன செளகரியக் குறைவு இருந்தது?…இப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுக்கிறவன், கோபம் வந்தா பேசறது தான். பெண்ணாகப்பட்டவள் வணங்கித்தான் போகணும். குடும்பங்கறது. அதுதான். அந்தப் பொறுமைதான் பெண்ணை உசத்தறது. பதினெட்டு வருஷம் வாழ்ந்து அனுபவிச்சவ, ஒரு நிமிஷமா அதை முறிச்சிட்டு, வெளில தலைகாட்ட முடியாத மானக்குறைவை ஏற்படுத்திட்டு ஒடிப்போவாளா?… என்னமோ, ரெண்டு பெண்ணை வேறு வச்சிட்டிருக்கோம். அதுகளுக்கு ஒரு கல்யாணம் காட்சி எப்படி ஆகுமோன்னு உருகிப்போயிட்டான். அதை உத்தேசிச்சானும் நீ இப்படி தரக்குறைவா நடந்திருக்க வேண்டாம்…”
கிரிஜாவுக்கு முகம் சிவக்க ஆத்திரம் பொங்கி வருகிறது,
“நான் என்ன தரக்குறைவா நடந்துட்டேன்? நீங்க ஒயாம எம்மேலே சகதிய வாரி எறியும்படி என்ன பண்ணிட் டேன்…?”
“இன்னும் என்னடியம்மா பண்ணனும்? ஆனானப்பட்ட சீதையையே லோகம் பேசித்து. அக்கினிப் பிரவேசம் பண்ணினப்புறமும், உனக்கு ஒண்ணுமில்ல. துடைச்சுப் போட்டுட்டுக் குடும்பத்தைவிட்டு ஒடிப்போயிட்ட, இருக்கிற வாளுக்கு மானம் மரியாதை இல்லை…?”
“இதைச் சொல்லத்தான் இங்க வந்தீங்களா?…’
“உன் சாமானெல்லாம் இருக்கு பாத்துக்கோ, கண்டதுகளும் வந்து மானம் மரியாதை இல்லாம கத்தறது. மானமா இருந்தோம், அது போயிட்டது. எல்லாம் இருக்குன்னு இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டுத்தரச் சொன்னான்…”
பெட்டியைத் திறக்கிறாள். அட்டை ஃபைலில் அவளுடைய கல்வித் தகுதி மற்றும் சான்றுகள்…அதன்மேல்
பத்தாயிரத்துக்கு ஒரு செக். அதை எடுத்து வெறித்துப் பார்க்கிறாள்.
“இதென்ன, நாய்க்குப் போடும் எலும்புத்துண்டா?… எடுத்திட்டுப்போங்க!” விசிறி எறிகிறாள்.
அவள் குரலின் கடுமையில் மாமியார் பின்னடைத்திருக்க வேண்டும். வீசிய காகிதம் அவள்மேல் விழுகிறது. குத்தப் பட்ட செருக்கை விழுங்கிக்கொண்டு வெளியேறுகிறாள். மாயா “தீதீஜி…!” என்று கண்ணிரைக் கொட்டியவளாகப் போகிறாள்.
கிரிஜா வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள்.
ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்கள்.
எந்த அரவமும் செவிகளில் விழவில்லை. ரத்னாவும் ஆனியும் இன்னுமா ஐஸ்கிரீம் வாங்கி வருகிறார்கள்? எங்கே போனார்கள்?…
அத்தியாயம்-15
ஏதோ நினைத்துக்கொண்டவளாக அவள் வராந்தாவுக்கு வந்து கீழே பார்க்கிறாள். அந்த முன் வாயில் நடை பாதையை ஒட்டி, ஒரு கூட்டம் கூடியிருக்கிறது. சைக்கிள்கள் ஸ்கூட்டர்கள் போகவில்லை.
ஏதேனும் விபத்தா?…ஆனால் விடுதிச் சுற்றுச்சுவருக் குள்ளும் கூட்டம் நிறைந்திருக்கிறது?
கப்பென்று நெஞ்சைப் பிடித்துக்கொள்கிறது ஓர் அச்சம்
ரத்னாவும் ஆனியும் ஏதேனும் விபத்தில்… கதவைப் பூட்டிக்கொண்டு பரபரவென்று விரையும் போது, படிகளில் உதிரிகளாகப் பெண்கள்; இந்தியிலும் ஆகிங்லத்திலும் பரிதாபச் சொற்களின் பிசிறுகள்.
“க்யாஹவா? கெளன்…”
“ஒ, ருனோ……ஸி ஜம்ப்ட் ஃப்ரம் த ஸ்கன்ட் ஃப்ளோர்.”
“ருனோ?…அவளை இப்போதுதானே வெளியிலிருந்து வரும் போது மூன்றாம் மாடிப் படிகளில் சந்தித்தாள்?… ருனோ…இன்றைக்கெல்லாம் இருந்தால் இருபது வயதிருக் குமா?…இளமை மாறாத முகம். எங்கோ ரிசப்ஷனிஸ்டாக வேலை பார்த்ததாகச் சொல்வார்கள்…
எதற்காக இந்த நேரத்தில் மாடியிலிருந்து குதித்தாள்? போதையா? தெரியாமல் செய்து விட்டாளா?
ஆண்டவனே, ஆண்டவனே என்று மனம் கூவுகிறது. ஆணியும் ரத்னாவும் ஒருகால் அங்குதானிருப்பார்கள்…கீழே போய்ப் பார்க்கிறாள்.
ஆனியைக் காணவில்லை. ரத்னா உயரமாக இருக்கிறாள். கூட்டத்தைப் பின்னால் போகும்படி விலக்கிக் கொண்டிருக்கிறாள்.
குப்புற விழுந்தவளுக்கு முதல் சிகிச்சை செய்து கொண்டி ருக்கிறார்கள் இரு பெண்கள்.
சற்றைக்கெல்லாம் ஆம்புலன்ஸ், போலீஸ் வண்டிகள் தென்படுகின்றன. ரத்னா இவளைப் பார்த்து விட்டு ஓடி வருகிறாள்.
‘கிரி…அன்ஃபார்ச்சுனேட்…நாங்க வர கொஞ்சம் நேரமாகும். நோ ஹோப்…பிழைப்பான்னு தோணலே…’
வெரி ஸாரி கிரி…பெரிய இடத்துப்பெண். அம்மா இல்ல. அப்பா ஒரு குடிகாரன். மட்டமான ஆள். இதைக் கவனிக்கிறவர் யாருமில்ல. வீட்டிலே வேற ஒரு பெண் பிள்ளையைக் கொண்டு வச்சிட்டான். இது பாய்ஃப்ரண்ட் அது இதுன்னு கெட்ட பழக்கங்களுக்கெல்லாம் அடிமையா யிட்டது. இப்ப பாரு, பாய்ஃப்ரண்ட் வந்தானாம். அவங்க கூடப் பேசிட்டு வெளியே நின்னாளாம். எல்லாரும் பார்த்தேங் கறாங்க…”
“நான்கூடப் பார்த்தேன் ரத்னா…வேகமாகப் படியிறங்கிப் போனாள்…”
“ரொம்பக் கஷ்டமா இருக்கு…பை த பை வாசலில் கார் நின்னுது. உன் ஹப்பி இருந்தான். மாமியார் மேல வந்தாளா?
“ஆமாம். எல்லாம் குடுத்துட்டா…”
“ஒ. கே. நான் வரேன்…நீங்க போயி ரெஸ்ட் எடுத்துக்குங்க!” ரத்னா விரைகிறாள்.
உடலை எடுத்துக் கொண்டு சென்ற பின்னரும் பெண்கள் ஆங்காங்கு நின்று அவளைப் பற்றியே பேசுகிறார்கள்…
அத்தியாயம்-16
கிரிஜாவுக்கு ஆணி அடித்தாற்போல் ஒரே வரிதான் ஆழ்ந்து பதிகிறது.
அம்மா இல்லை. அப்பா குடிகாரன். வீட்டில் யாரோ ஒரு பெண் பிள்ளையைக் கொண்டுவந்து விட்டான்…
கவிதா…கவிதா… வயசு வந்த பெண்…கட்டுப்பட்டே பழக்கப் படுத்தியிராத பெண்…
இப்போது கட்டுப்படுத்துவார்கள். அவளைக் காப்பி போடச் சொல்வார்கள். ‘மடிப்’ பழக்கம் கட்டுப்பாடாக்கப் படும். பள்ளிக்குச் சென்று வருதல் கண்காணிக்கப் பெறும். அடோலஸண்ட் ஏஜ்-குமரப்பருவம். படிக்கும் பள்ளியோ ஆடம்பர வாழ்க்கை வாழும் செல்வர் வீட்டுச் சிறுவர் சிறுமியர் உள்ள பள்ளி…
இந்த எண்ணங்களிலிருந்து விடுபடவே முடியவில்லை.
எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை. கதவை இடிக்கிறார்கள், ஆனால் இவளால் கதவைத் திறக்க எழுந்து செல்ல முடியவில்லை. கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கிறாள்.
கிரி…கிரிஜா, எழுந்திருந்து கதவைத் திறவுங்கள்…கவி… கவிதாபாத்ரூம்ல கெய்ஸர் ஆக்ளிடன்டாகி செத்துட்டாளாம். எழுந்து. ஐயோ…ஐயோ, ஐயோ, கவிதா…!
அடிவயிறு சுருண்டி கொள்ள அலறுகிறாள், ஆனால் கண்களையே திறக்க முடியவில்லை. எழுந்து கதவை எப்படித் திறப்பாள்?
கிரி…? திரி..!
கதவை உடைக்கிறார்கள் ரத்னா, ரத்னாதான்.
“ஐயோ, இவர்கள் பேச்சைக் கேட்டுத்தானே சலனமடைந்தாள்?
கவிதா, கவியம்மா, ஒருநாள் கூட உன்னை அடுப்படியில் விட்டதில்லையே. கெய்ஸர் பிளக் சரியில்லாமல் இருந்திருக்க வேண்டும். தகப்பனும் பாட்டியும் கவனித்திருக்க மாட் டார்கள்…வாழும் வசதியாம் இது யாருக்கு வேண்டும்?… கவி…கவி…
கதவை உடைக்கிறாள், கிரி. கிரிஜா! வாட் ஹேப்பன்ட் டு ஹர்?..
முகத்தில் தண்ணிர் வந்து விழுகிறது.
சட்டென்று விழிப்பு வரக் குலுங்கி எழுந்திருக்கிறாள்.
கதவைத் திறக்கிறாள்.
‘என்ன கிரி…? என்ன?’
‘கவி.. கவிதாவுக்கு என்ன ஆச்சு? என் குழந்தை எப்படி இருக்கா?’
‘கவிதாவுக்கு ஒண்ணுமில்லியே…? ஸ்கூலுக்குப் போயிட்டியிருப்பா…ஏதானும் கனவு கண்டீங்களா?’
ரத்னா சோர்ந்து போயிருக்கிறாள். இரவு முழுவதும் உறங்கியிருக்கவில்லை என்று புரிகிறது.
‘பாடி போஸ்ட்மார்ட்டம் பண்ணிரிப்போர்ட் வர்ல. ஆனி இருக்கா- ருனோவோட பிரதர். பாவம், வந்து அழுவுறான். உங்களுக்கு இது ஸிரிஸா பாதிச்சிருக்கும். அன்ஃபார்ச்சுனேட் காதல் காதல்னு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டு கோழையாப் போறதுங்க. கண்ட போதைக்கும் அடிமையாகி, அந்த பாய்ஃப்ரன்ட் ஏமாத்திட்டான்னு உயிரை விட்டிருக்கு, ஒரு பக்கம் உங்க மாமியார் மடி கேஸ்…இன்னொரு பக்கம் இப்படி….
தலையில் கை வைத்துக்கொள்கிறாள்.
‘சே…!’
கிரிஜா சிறிதுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு, குளியலறை யில் சென்று பல்துலக்கி முகம் கழுவிக்கொள்கிறாள்…
வெளியே சென்று பையனை அழைத்து சூடாக இரண்டு தேநீர் கொண்டு வரப் பணிக்கிறாள்.
‘கிரி, உங்களை இது ரொம்பப் பாதிச்சிருக்கும்…’
“…அ. ஆமாம். ஆனால்.. நான் அதனால் மூட்டையைக் கட்டிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வாலை இடுக்கிக் கொண்டு குழையும் நாயின் நிலையில் போய் நிற்கமாட்டேன். நான் உங்களைப்போல் வெளியில் இருந்தால்தான், ‘ருனோக்கள்’ உருவாவதைத் தடுக்க முடியும்…’
ஒ. கிரி, அப்ப.. மாமியார் உங்ககிட்ட, ‘நடந்தது நடந்து போச்சு, வந்துடு’ன்னு கூப்பிடலியா?’
‘அந்தப் பேச்சே இல்லை ரத்னா. அப்படி அவள் சொல்லி யிருக்கும் பட்சத்தில், கீழே காரில் அமர்ந்தவன் என்னைச் சந்திக்க விரும்பியிருந்தால், நான் ஒரு வேளை மனம் இறங்கிப் போயிருந்திருப்பேன் என் குழந்தைகளை உத்தேசித்து. ஆனால்… அவன் செருக்கு, அம்மாவிடம் பெண்ணாப் பிறந்தவள் என்ற என் நிலையை உறுதியாக்க நான் பண்ணினது மன்னிக்க முடியாத தப்புன்னு சொல்லி, பெரிய மனிதத்தன்மையாக ஒரு பத்தாயிரம் ரூபாய் ‘செக்’கையும் கொடுத்து அனுப்பியிருந்தான். நான் செக்கை வீசி எறிஞ்சேன்…’
ரத்னா மெளனமாக இருக்கிறாள்.
‘ஸ்ர்ட்டிஃபிகேட் எல்லாம் வந்துடுத்து. என் சேலைகளைக் குடுத்து அனுப்பி இருக்கிறார்கள்…நகைகளைத் தான் கழட்டி முன்பே வைத்து விட்டேன்…’
‘போ, ரத்னா, முகம் கழுவிட்டு வா, டீ வந்துடுத்து…’
ரத்னா எழுந்து செல்கிறாள்.
கிரிஜா தான்படுத்த படுக்கையை ஒழுங்காக்கி, அறையைப் பெருக்குகிறாள்.
மணி ஏழரைக்கு மேலாகியிருக்க வேண்டும். தெருவில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் அணி அணயாகத் தென்படுகின்றனர்.
கவிதாவைப் போலவே பருமனாக ஒரு பெண் நீலம் வெள்ளைச் சீருடையில் போகிறாள்…
பார்த்துக்கொண்டே நிற்கிறாள். கனவு கூர்முள்ளாக வருத்துகிறது. கவிதா ருனோவைப்போல் போகக்கூடும். வாய்ப்புக்கள் உள்ளன. குமரப்பருவம்… வீட்டுக் கண்டிப்பு. அம்மா கெட்டவள் என்ற உருவேற்றல்கள்…
‘கிரி, என்ன பார்க்கறிங்க? டீ ஆறிப்போயிட்டுது…’, அவள் உள்ளே வருகிறாள். தேநீரைப் பருகுகிறாள். ரத்னா கைப்பையிலிருந்து ஒரு பாக்கெட்டை எடுக்கிறாள். சந்தனத் தூள்… சுகந்த சந்தனத்துள்…கோபுர வடிவிலான வில்லை ஒன்றைக் கிளிஞ்சல் போன்ற அந்தக் கிண்ணத்தில் வைக் கிறாள். ஒரு சிறு துண்டுக் காகிதத்தை நன்றாகச் சுருட்டி தீக்குச்சியில் காட்டிப் பற்ற வைத்து, அந்த ‘கோன்’ வில்லையைக் கொளுத்துகிறாள். சன்னமாக நெளிந்து வளைந்து பாம்பின் அசைவைப் போல் புகை எழும்புகிறது.
‘சந்தன வாசனை வருதா, கிரி?…’ என்று கேட்டுக் கொண்டு சன்னல் கதவை மூடுகிறாள்.
சந்தன மணம் குப்பென்று பரவவில்லை. மெல்லிய திரி இழையாக முகர வேண்டி இருக்கிறது.
கலப்படம் பண்ணி ஏமாத்தறாங்க. ஐஸ்கிரீம் வாங்கணும், கொண்டாடனும்னு போனமா?…இதை வாங்கிப் பையில் போட்டுட்டோம், அதுக்குள்ள, ‘விமன்ஸ் ஹாஸ்டல்ல மாடிலேந்து குதிச்சிட்டாங்கன்னு யாரோ சொல்லிட்டுப் போனாங்க, அடிச்சுப் புரண்டுட்டு வந்தோம்… ராத்திரி முழுசும்…ஆஸ்பத்திரி, போலீசுன்னு…எப்படியோ ஆபிட்டுது. இந்த வாசனை சந்தனமேயில்லை…’ ரத்னா அதிருப்தியுடன் எழுந்திருக்கிறாள்.
‘ரத்னா…நான் வந்தன்னிக்கு இந்த ஆஷ்ட்ரே, சாம்பல், எல்லாம் பார்த்தப்ப, நீங்க சிகரெட்டுக் குடிக்கிற வங்கன்னு நினைச்சேன். பொசுங்கின காகிதச்சுருள் இப்ப போட்டிருக்கிற அதில, அத சிகரெட் துண்டுன்னும் நினைச்சேன். ரோஜா மாமி நீங்கள்ளாம் தெருவோட சிகரெட் குடிச்சிட்டுப் போகும் சாதின்னு கேவலமாகச் சொன்னாளா, எனக்கு உறுத்திட்டே இருந்தது.’
ரோஜ மாமி எல்லாம் சொல்லுவா. இனிமே நீங்களும் எல்லாம் பழக்கமாயிட்டீங்க, பிரஷ்டம் பண்ணினதுக்கு நியாயம் இருக்கும்பா. ஒரு பக்கம் பொய்யில்ல. இந்த ஹாஸ்டல்லயே எல்லாம் பார்ப்பீங்க. ஆனா, ருனோவைப்போல் மன முதிர்ச்சியில்லாத நிலையில் அப்படி விழறவங்கதான் – சகஜம். இது ஒரு எஸ்கேபிஸ்ம். இந்த ரோஜா மாமி வீட்டில போனா அந்த மாமியே மட்டரகமான ஸெக்ஸ் புத்தகங்களைத் தான் படிச்சிட்டிருப்பா, பார்டிலயும் கலந்திட்டு குடிக்கவும் பழிக்கப்பட்டிருப்பா. தமிருல யெளியாற இத்தனை மட்டப் புத்தகங்களும் மட்ட சினிமாக்களும் இந்த ஆசாரக் கும்பலால் தான் போஷிக்கப்படுகின்றன. ஏன்னு நினைச்சுப் பாத்திருக். கிறீங்களா, கிரி?
ஏன்னா அவங்களும் ஏதோ ஒரு வகையில் சுயமா இருக்க முடியாதபடி அழுத்தப்பட்டவங்க முடி, ஆசாரம், மதம், இல்லாட்ட நேர்மாறாக உடல்பரமான விவகாரங்கன்னு போலித்தனமான எல்லைக்குள் தங்களை ஏமாற்றி கொள்ளுவாங்க.’ கிரி வாய் திறந்து பேசவில்லை.
‘ரொம்பப் பேர் விடுதலை, நாகரிகம்னா, அறிவுன்னே புரிஞ்சுக்கல. கிரி, நாம யாருக்கும் விரோதிகளல்ல. ஆனால், நாம் நாமாக இருக்க சமுதாயத்தில் அநுமதிக்காத சக்திகளோடு போராட வேண்டியிருக்கு…நாம் இப்படிச் சிந்திக்க ஆரம்பிச்சதனால, எதிர்ப்புச் சக்தி ரொம்ப மூர்க்கமா அழுத்த வருது. ஆண்வர்க்கம் இவ்வளவு கொடுமையா முன்னல்லாம் நடந்திருக்கலன்னு தோணுது…கிரிஜாவின் மனவெழுச்சி குபிரென்று வெளிக்கிளம்புகிறது.
‘ரத்னா, எனக்குக் கவியையும் சாருவையும் நினைச்சா சங்கடமாயிருக்கு. என் தொடர்பு அவங்களுக்கு வேணும். அவங்க சுதந்தரமா, நல்ல அறிவோடு வளரனும். நான் குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டாலும், அவங்க…அவங்களை விட முடியாது…’-
கண்ணிர் மல்குகிறது.
ரத்னா அவள் கையைப்பற்றி மெல்ல அழுத்தினாள்.
…நிச்சயமாக…நம் போராட்டம் இனிமேல்தான் ஆரம்பம்…’
சந்தன வில்லை, அற்பமான சாம்பற் குவியலாகி விட்டது. ரத்னா சன்னல் கதவுகளை நன்றாகத் திறந்துவிடுகிறாள்.
(முற்றும்)
– சுழலில் மிதக்கும் தீபங்கள் (சமூக நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1987, தாகம், சென்னை.