தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16
அத்தியாயம்-10
வீட்டை விட்டு வெளியேறும்போது, ஒரு அடங்காத முட்டல், உந்தல் அவளைத் தள்ளி வந்தது. கங்கை ஒட்டம், மனதுக்குப்பிடித்த சூழல் என்று தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு வந்தாள். இப்போது அந்த விடுதலையின் பரபரப்பு ஒயாமலே, எதிர்காலம் என்ன என்ற பிரச்னையாக அவளுள் விசுவருபமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவள் வீட்டை விட்டு ஒடி வந்துவிட்டாள் என்று, ரோஜாமாமி அவள் தற் பெயராகிய பளிங்குப் பாண்டத்தைப் போட்டு உடைத்து விடுவாளோ என்ற அச்சம் இழையாக அலைக்கிறது. போயும் போயும், எந்த ஆடம்பரச் சூழலை வெறுத்தாளோ அங்கேயே வந்து சேருவாளோ?
ஹரிகி பைரியில் இப்போதும் கூட்டம், நீராடும் கலகலப்பு, குழுமிக் கொண்டிருக்கிறது. தூய மஸ்லின் உடையணிந்த ஒரு வங்க மூதாட்டி, வரிசையாக வறியவர்களுக்கு அன்னதானம் செய்கிறாள். அடுக்கான ரொட்டி; அகலமான பித்தளைப் பாத்திரத்தில் மஞ்சளாக ‘தால்’ (பருப்பு) ஒவ்வொருவருக்கும் நான்கு ரொட்டிகளும் இரண்டு கரண்டி பருப்புமாக ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள். வேலையற்று, இந்த கங்கைக் கரையிலும் அழுக்கைச் சுமந்து கொண்டு வேடம் போட்டுப் பிச்சை பெறும் கும்பல்…பிச்சை பெறுவதற்குச் சுத்தமாக இருக்கலாகாது..?
அருவருப்பாக இருக்கிறது. நான் பெரியவள், நான் கொடுப்பவள் என்ற அகங்காரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் வருக்கம் கங்கையின் தூய்மையையும் மாசுபடுத்து கிறதென்று நினைத்துக் கொள்கிறாள். இந்த மக்களே இல்லாத கங்கைக்கரை, ஆதிநாட்களில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முயலுகிறாள்.
‘ருஷிகேச்… ருஷிகேச்…என்று பஸ்காரன் ஒருவன் கூவியழைக்கிறான்.
இங்கு நிற்பதற்குப் பதில் பொழுதைக் கழிக்கச் செல்லலாமே என்று தோன்றுகிறது. நிறுத்தி ஏறிக்கொள்கிறாள்.
சாலையில் செல்கையில் எந்தப்பக்கம் நோக்கினாலும் பசுமை கொள்ளை கொள்கிறது. கங்கை கண்பார்வையை விட்டு மறைந்து போகிறது. ஆனால் அவள் வண்மையில் வஞ்சகமில்லாத பசுமை, சரத்காலமல்லவா? அருவிகள் ஆங்காங்கே சுரந்து வருகின்றன. புல்வெட்டுபவர்கள், கூவி வேலை செய்யும் எளிய பெண்கள், வறுமையை இந்த வண்மையிலும் அகற்ற முடியவில்லையே என ஏக்கத்துடன் ஆங்காங்கு தென்படும் குழந்தைகள். குழந்தைகளால்தான் வறுமை, குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லும் சிவப்பு முக்கோண அழுக்குச் சுவர், என்று காட்சிகள் ஒடுகின்றன.
அவளுள் ஒர் ஆசை உயிர்க்கிறது. இந்த எளிய குழந் தைகள்.வறுமைக்கு நீங்களே காரணம் என்று குற்றம் சாட் டப்படும் குழந்தைகளைத் தீண்டி, நலம் செய்து, படிப்பித்து… இப்படி ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக…ஒ.அவள் யாருக்கும் கட்டுப்படாமல் இங்கு வாழ வரமாட்டாளா?.
இந்தச் சூழலில் ஒரு சிறிய பள்ளிக் கூடம். இந்த மக்கள் ஆத்மார்த்தமாக வழங்கக் கூடிய அன்பு.
மனசை இனிய கனவுகளில் இலயிக்க விடுகிறாள். ஊர்தி கங்கைக் கரையைக் காட்டுகிறது. மீண்டும் மறைந்து போகிறது. வெளியில் மிக உக்கிரமாக விழும் பொட்டலில் தகர அடுக்குகளாய் நெருங்கியுள்ள வாகனங்களிடையே குலுக்கிக் கொண்டு நிற்கிறது.
கிரிஜா குலுங்கினாற்போல் பார்க்கிறாள்.
ஒ…இந்த ஊர் இவ்வளவு நாகரீகமடைந்து விட்டதா? இருமருங்கும் கங்கை தெரியாதபடி அடைத்துக்கட்டிய கட்டி டங்கள், சாக்கடைகள், இரைச்சல்கள், மனித மந்தைகளாகச் சந்தைக் கூட்டங்கள்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இவள் ஆசிரியர் களுடன் பயணம் வந்தாளே, அப்போது எவ்வளவு அழகாக இங்கே அமைதி ஆசிரமங்கள் திகழ்ந்தன? ஒ, அந்த ஆசிரமங் கள் இந்நாள் எங்கே மறைந்தன? பெரிய சாலை. நீள நெடுகச் செல்கிறது. உயர உயர விடுதிகள், குளிர்சாதன அறைகள், வசதி மிகுந்த படுக்கைகள், உணவு. வாருங்கள் என்றழைக்கும் ஆடம்பர விடுதிகள்…
கங்கைத்தாயே! நீ எங்கு மறைந்தாய்? பிரச்னைக்கு முடி வென்று அவள் எங்கே வந்து நிற்கிறாள்? வெயிலின் உக்கிரம் தாளவில்லை. காலையிலிருந்து நல்ல உணவு உண்டிராததால் பசி வயிற்றைக் கிண்டுகிறது. இந்தச் சாலையில் இவள் ஏறி உணவு கொள்ளும்படியான விடுதிகள் தெரியவில்லை. துணிக்கடை, பாத்திரக்கடை, எலக்ட்ரானிக் சாமான்கள் விற்கும் கடைகள்…பழக்கடை ஒன்றில் நான்கு பழம் வாங்கிக் கொள்கிறாள்.
‘கங்காஜி காகினாரா…கஹா… ங் ஹை’
ஸீதா ஜாயியே! ஸீதா… நேராக… நேராகப் போ…
அவள் நடக்கிறாள், நடை வேகத்தில் எண்ணங்கள் விரட்டியடிக்கப் பெறுகின்றன. –
கங்கைக்கரை எங்கே? இவள் பிரச்னை எப்படி முடியும்? திரும்பிப் போக வேண்டுமா வேண்டாமா? அவளுடைய வாழ்வின் இன்றையப் பிரச்னையின் முடிவு… கங்கைக்கரை கள்…கரும்புகை கக்கும் டெம்போக்கள், லாரிகள், நடக்க இட மில்லாதபடி நெருக்கிக் கொண்டிருக்கின்றன. மக்கள் இங்கே அம்ைதியைக் குலைத்துக் கொண்டு வந்து வந்து போகிறார் கள். இங்கு இருக்க அமைதி நாடி வரவில்லை. ஓ, ஒரே நாளில் கங்கோத்ரி, யமுனோத்ரி, உத்தரகாசி, எல்லாம் பார்க்கலாம் என்று பறந்து கொண்டு வந்து, தங்கள் வசதிப் பெருமைகளைக் காட்டி விட்டுப் போகிறார்கள்…
இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்… கங்கா… ஆமாம்… இவளைவிட இரண்டு வயது பெரியவள். அவள் பாட்டு டீச்சராக வந்திருந்தாள். தெற்குச் சீமைக்காரி. தாமிரபரணி யில் விழுந்து நீந்திய பழக்கம். ஹரித்துவாரத்தில் அவளைப் பெரியவர்கள் யாரும் நீந்தவிடவில்லை.
‘அடி, இங்கே நீஞ்சிக் காட்டுறேன்’ என்று குதித்தாள்.
‘உன் சுண்டைக்காய் தாமிரபருனி இல்லைடி கங்கை வாயை மூடு! பத்திரமாய் எல்லாரும் ஊர்போய்ச் சேரனும்!’ என்று தலைமை ஆசிரியரின் மனைவியான பர்வதம்மா அதட் டினாள். எல்லோரும் இக்கரையில் வண்டியை விட்டிறங்கி, பார்த்துக்கொண்டே லட்சுமணன் ஜுலா தொங்குபாலத்தில் நடந்து அக்கரை சென்றார்கள்… அந்தக் கரை, எவ்வளவு அமைதியாக இருந்தது!
ஆசிரமம்போல் ஒரு விடுதி. ஒரு பண்டிட் நடத்தினான். அவனிடம் இருபது பேருக்கும் உணவு தயாரிக்கச் சொல்லி விட்டு, இவர்கள் கங்கையில் நீராடினார்கள். அப்போது, இந்த கங்கா, சேலையை வரிந்து கட்டிக் கொண்டு, ஆழ்ந்து நீலமாகத் தெரியும் கங்கைமடுவில் குதித்துவிட்டாள்.
அடிபாவி…! கங்கா!…வாடி…!…
எல்லாரும் அடிவயிற்றில் திகிலுடன் எப்படிக் கத்தினார்கள்! அவள் உண்மையிலேயே எவ்வளவு துணிச்சல்காரி! அவர்கள் குழுவில் அந்தத் துணிச்சல் எவருக்கும் இருந்திருக்க வில்லை.
ஏன்? இப்போது நினைத்தால் கூட அற்புதமாக இருக்கிறது. அவள் அந்த மடுவில் நீந்திவிட்டு, அலர்ந்த தாமரை போல் முகத்தைக் காட்டிக்கொண்டு வந்தாள். பெரிய இலைப் படகில் ஒளித்திரியாய் காட்சியளித்தாள்.
‘நீ கெட்டிக்காரி. துணிச்சல்காரி ஒப்புக்கறோம். இனி இந்தப் பரீட்சை வேண்டாமடி பாவி!’ என்றாள் முதிய பாகீரதி டீச்சர். பிறகு…பிறகு…
நெஞ்சு முட்டுகிறது. கல்யாணமென்று போனாள். வேலையை விட்டுவிட்டாள். நாலைந்தாண்டுகளுக்குப் பிறகு, சென்னைக் கைத்தறிச் சந்தையில் அவள் புருஷனையும் மூன்று பெண்களையும் அறிமுகம் செய்வித்தாள்.
‘மூணும் பொண்ணுடி…’ என்று ஒர் அழுகைச் சிரிப்பாகச் சிரித்தாள்.
‘நீதான் அற்புதமான நீச்சல்காரியாச்சே, கங்கா? பொண்ணானால் என்ன?’
‘தண்ணில நீஞ்சலாண்டி…’ என்று அரைகுறையாக நிறுத்திவிட்டு அந்த இயலாமைச் சிரிப்பையே நெளிய விட்டாள்.
‘நீ இன்னும் தனியாத்தான் இருக்கியாடி?…’ இவள் அப்போது தனியாகத்தான் இருந்தாள்.
‘ஜாலி…டி’ என்று சொன்னாள் பிறகு ஆறுமாசங்களில் இவள் கேள்விப்பட்ட செய்தி…
‘கிரி, நம்ம கங்கா இல்ல? செத்துட்டாளாம்டி, பாவி, நாலாவது உண்டாயிட்டாளாம். போயி ஏதோ மருந்துச் சாப்பிட்டு ஏடாகூடமாயி. ஹேமரேஜ்ல…’
அம்மம்மா…
கங்கையே அழுவது போல் நெஞ்சு முட்டிப் போகிறது. ‘நான்காவது பிள்ளையாக இருக்கவேண்டும் என்று கணவன் சொல்லிச் சொல்லி ஆணை போட்டிருப்பானோ? ஏன் சிதைத்துக் கொள்ளப் போனாள்? பெண்ணாயிருந்துவிடுமோ என்று சிதைத்துக் கொண்டிருப்பாளோ?
கங்கைமடுவில் அவள் முகம் காட்டிக் கொண்டு செல்வது போலிருக்கிறது. அப்படியே அன்று போயிருந்தால்கூட, இலைப்படகின் ஒளித்திரிபோல் நினைவில் நின்று கொண்டி ருப்பாள். இப்போதோ, வாழ்க்கையாகிய ஓட்டத்தில், சுழிலில் நலிந்து மோதி, பேதையாக, கோழையாக…
கங்கைப் பெருக்கில் சுடரணைந்தது மட்டுமில்லை. படகே கவிழ்ந்து போன இடம் தெரியாமல் மூழ்கிவிட்டது போல்… அழிந்துபோனாள்.
நெஞ்சு முட்டுகிறது. அபு கொடுத்த வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வி இருக்கிறது.
‘திருமணமானபின், வாழ்வின் மொத்தமான பிரதான ஒட்டத்தில் இருந்து விலகி, ஒரு தனிக் கூட்டில் உங்கள் ஆளுமையைக் குறுக்கிக் கொள்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?’..
ஆம். திருமணமும் பிள்ளைப் பேறும் பெண்ணின் வாழ்வை மலரச் செய்யும் மங்கலங்கள்தாம். ஆனால் அந்த மங்கலங்களே இவள் சக்தியை, சாரத்தை உரிமையுடன் சூறையாடுகின்றன. பெண் பிறப்பதும் பிள்ளை பிறப்பதும் இவள் ஒருத்தியைச் சார்ந்த நிகழ்வுகளா?…இவளே, மூன்றாவதாக ‘பரத்’தைப் பெற்றிராமல், பெண்ணைப் பெற்றிருந்தால்…!
அவனைச் சுமந்த நாட்களில் அந்த அச்சம் இவளுக்கும் இருந்ததே? கணவன், அவனைச் சார்ந்த வெகுஜன மதிப்பீடுகள், எல்லாம் பெண்ணுக்கு விரோதமாகவே செயல் படுகின்றன. o
கீழெல்லாம் சதக் சதக்கென்று ஈரம். கரையோர்ப்பாதை ஒற்றயடிப்பாதையாக, ஏற்றமும் இறக்கமுமாகக் குறுகிப் போகிறது… கும்பல் கும்பலாக மக்கள். டிரக் ஒன்று மேலே மலைச் சாலையோரம் எழுப்பப் பெறும் கட்டிடத்துக்கான சாதனங்களைக் கொண்டு ஏறுகிறது…
கிரிஜா, நடு ஒட்டமான மக்கள் பாதையிலிருந்து விலகி உயரமான மேடொன்றில் ஏறுகிறாள். ஏதோ ஒரு பழைய ஆசிரமத்தின் சிதைந்த கட்டிடங்கள் தெரிகின்றன.
ஒம்..ஔஷதாலயா, கோசாலா, என்ற மங்கலான சுவர் எழுத்துக்களும் வளைவு வாயில்களும், ஆசிரமம் ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கின்றன. அங்கிருந்து பார்க்கையில் கங்கையின் எதிர்க்கரை நன்றாகத் தெரிகிறது.
பழைய சிமிட்டி ஆசனமொன்றில் கிரிஜா அமருகிறாள், பையிலிருந்த பழங்களை எடுத்து உண்ணத் தொடங்குகிறாள்.
அத்தியாயம்-11
ஏம்மா, தமிழா?
அசரீரி கேட்டாற் போலிருக்கிறது. பின்புறமாகத் திரும்பிப் பார்க்கிறாள். பஞ்சுப் பிசிறுகளாக நரைத்த முடி; காலம் உழுதுவிட்ட எண்ணற்ற கீற்றுக்களைத் தாங்கும். முகம், காவிச் சேலை; ரவிக்கை… உயர்ந்த வடிவம் கூனிக் குறுகவில்லை.
‘தமிழாம்மா?’
‘ஆமாம், பாட்டி…!’
‘எங்கேந்து வந்திருக்கே…?’
‘… ஊரெல்லாம் மதுரைப் பக்கம். இப்ப டெல்லில இருந்து வந்திருக்கிறேன்…”
‘நீ மட்டுமா வந்திருக்கே?’
‘தெரிஞ்சவாகூட வந்தேன்…அவங்கள்ளாம் இங்க முன்னமே வந்துட்டுப் போயிட்டா. இன்னிக்கு ஏதோ பூஜைன்னு ஹரித்துவாரத்தில் தங்கியிருக்கா. நான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்…நீங்க…இங்க வந்திருக்கிறீங்களா பாட்டீ?…’
மூதாட்டி பல்லில்லா வாயைக் காட்டிச் சிரிக்கிறாள்.
‘நான் இங்க வந்து அம்பது வருஷம்கூட இருக்கும். ! வருஷமெல்லாம் யார் கண்டது? கங்கை ஒடறா. வாழ்க்கை ஒடுறது…”
‘ஓ…?’ வியப்புத் தாளவில்லை.
‘நீங்க…அத்தனை வருஷத்துக்கு முன்னன்னா… எப்படி…’
‘எப்படின்னா…நேந்துடுத்து. அப்ப இங்கே சாமிஜி, இருந்தார். இப்பவும் ஆசிரமம் மேலே பெரிசா கட்டி, ரூமெல்லாம் தங்கக் கட்டியிருக்கா. மிஷன் நடக்கிறது. ஆனா…ஆதியில சாமிஜி வந்த நாள்ல இதோ இந்தக் குடில்ல தான் இருந்தார்…?’
‘நீங்க உங்களுக்கு எந்த ஊரோ…?’
‘எப்போதோ ஊர்… மதுரைப் பக்கம்னுதான் பேரு. இப்ப இதுதான் சொந்தம்.’
கிரிஜா மலைத்துப் போய் பார்க்கிறாள். அவளையொத்த வயசுகூட இருக்காது, அத்தனை ஆண்டுகளுக்கு முன்னால், அப்படியானால்…வாழ்க்கை நீரோட்டத்தை விட்டு விலகி, துறவறம் என்று இங்கே வந்து ஒதுங்க இவளுக்கு உந்து சக்தியாக இருந்தது எது? திருமணமாகாமல் அக்காலத்தில் இருந்திருக்கலாகாது. திருமணம் முடிந்து கைம்பெண்ணாக இருந்தால்…
‘ஏம்மா? உன்னைப் பார்த்தால் களைப்பாகத் தெரியறது. எதானும் சாப்பிட்டயோ?…’
கிரிஜா புன்னகை செய்கிறாள். ‘இப்பத்தானே பழம் சாப்பிட்டேன்?’
‘…பழம்தனே? சாதம் எதானும் சாப்பிட்டியோன்னு கேட்டேன்…’
‘இங்க எதானும் ஒட்டல் இருக்கா?’
‘ஒட்டல் கிடக்கட்டும். நீ உள்ளே வா, ஒருபிடி மோரும் சாதமாச் சாப்பிடு!’
கிரிஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
கெளரியம்மாள் பயணத்தில் இசைந்து ஃபிளாஸ்கைத் திறந்து காபி கொடுத்தாள். அதுவே அதிகமாக இருந்தது. இப்போது முன்பின்னறியாத இடத்தில், முன்பின்னறியாத மூதாட்டி, ‘உள்ளே வா, ஒருபிடி சாப்பிடு’ என்று கூப்பிடுகிறாள்.
‘முன்பின் அறியாதவர்கள் உணவுப் பொருளோ தின்பண்டமோ கொடுத்தால் சாப்பிடாதீர்கள். கீழே ஏதேனும் பார்சல், அல்லது சிறு பெட்டி போன்ற பொருள் இருந்தால் எடுக்காதீர்கள்…!’ இதெல்லாம் அண்மைக்கால எச்சரிக்கைகள். ஆனால், முன்பின் நினைத்திராத விதமாக, அவள் ஒரு சீரான ஒடுக்கத்திலிருந்து விடுபட்டு இந்த முடிவு தெரிவிக்க கரையில் நிற்கையில் இப்படி ஒர் அநுபவ மலர் எடுத்துக் கொள்’ என்று வருகிறது.
‘ஏம்மா? இவயாரோ, எதுக்குப் போகணும்னு பார்க் கறியா? தயங்க வேண்டாம், வா… நானொன்னும் ‘பஞ்சபட்ச பரமான்னம்’ வச்சிருக்கல. ஒரு மோரும் சோறும் ஊறுகாயும் தான்…’
‘…நீங்க சாப்பிட்டாச்சா…?’
‘நான். ஆயிட்டுது. உள்ள வா…’
கிரிஜா வாயிற்படியில் கிழவி தரும் செம்பு நீரால் கால்கை கழுவிக் கொள்கிறாள். நீள் சதுர ஒற்றைக்குடில். மூலையில் அவள் பார்த்தறியா மண் அடுப்பு சிறு அலு மினியம் வட்டையில் உள்ள சோற்றை ஒரு தட்டில் போட்டு குடுவை ஒன்றிலிருந்து கெட்டியான மோரை ஊற்றுகிறாள். உப்பும் எலுமிச்சை ஊறுகாயும், அந்த உணவை அவளுக்கு இது காறும் அநுபவித்தறியா சுவையுள்ளதாகச் செய்கின்றன.
திருமணமானபின் இத்தனை ஆண்டுகளில் பிரசவித் திருந்த நாட்களில் தாயும், மாமியாரும் சாப்பாடு போட்டிருக் கிறார்கள், ஆனால் அதுகூட இத்தகைய பரிவாய் சுவைத்ததில்லை.
‘பாட்டி, நான் இவ்வளவு ருசியுள்ள சாப்பாடு சாப்பிட்ட தேயில்லை. இது என் நாற்பத்தாறு வயசின் சொல்ல முடியாத நிறைவு தரும் அநுபவம்…’
‘…சில நாளில் இப்படித்தான் யாருக்கேனும் சாப்பாடு போடணும்னு தோணும். தோணினால் கூப்பிடுவேன். இன்னிக்கு என்னமோ, இந்தப் படியில் உட்கார்ந்திருந்தேன், நீ மேலே ஏறி வந்தது தெரிஞ்சது. சந்தோஷமாயிருந்தது…’
‘பாட்டி, நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க, நான் படிச்சுப் பட்டம் வாங்கி, எட்டு, பத்து வருஷம் போல டீச்சர் உத்தியோகம் பண்ணினேன். கல்யாணம் பண்ணிட்டு பதினேழு வருஷமாச்சு டில்லியில்தான் இருக்கிறேன்… மேலெழுந்தவாரியா பார்த்தால் ஒரு குறைவும் இல்லை. ஆனா…நான் அப்ப ஒரு சின்ன ஊரில நானாக ஒரு வேலை செய்து கொண்டு இருந்தபோது இருக்கும் ஒரு நிறைவு இதில் இல்லை. உங்களைப் பார்க்கிறப்ப, நீங்களே, என்னை வந்து பசியோட இருக்கே, சாப்பிடுன்னு சொல்வது எப்படி இயற்கையாகத் தோணித்தோ, அப்படி இதையும் சொல்லலாம்னு எனக்குத் தோணுது…பாட்டி, நீங்க எப்படி இந்தக் கரையில் வந்து ஒதுங்கினர்கள்? நம்மில் ஒராண் இப்படி குடும்பம் வேண்டாம்னு வந்துட முடியும். குடும்பம்ங்கறது அவனை எப்பவுமே பாதிக்கறதில்ல. அவன் செளகரியத் துக்காகத்தான் மனைவி, பிள்ளை, குட்டி, எல்லாம். அவர் அவன் செளகரியத்துக்கு இல்லேன்னா, உதறிடலாம். ஆனா. பெண்ணால அப்படி உதற முடியுமா? சொல்லுங்கோ, பாட்டி!’
“நீ சொல்றது சரிதான். ஆனா….சில சந்தர்ப்பங்கள் அப் படி ஒதுக்கிடும்மா. இங்கெல்லாம் கங்கையில் தீப ஆரத்தி எடுப்பாளே, அப்ப நான் குழந்தையாய் வேடிக்கை பார்ப்பேன். நடு ஒட்டத்திலேருந்து எப்படியோ கரையில வந்து மோதும் ஒவ்வொரு தீபம் சில சமயம், நம்மைப் போலன்னு அந்தக் காலத்தில் நினைச்சிப்பேன். எங்க பிறந்த வீடு நாகப்பட்டினத்துங்கிட்ட ரொம்ப ஏழை. நாங்க ஏழெட்டுப் பேர். நான் அஞ்சாவது பொண். என்ன செய்வா? மதுரைப் பக்கத்திலேருந்து வந்து மூணாந்தாரம்னு கேட்டா, கல்யாணமா யிட்டது. அப்ப ஒண்ணும் உலகமே தெரியாது. இங்கே வந்தால் மூத்தாள் பிள்ளைகள் ரெண்டு பேருக்குக் கல்யாணமாயிருக்கு. பெரிய குடும்பம். எங்க வீட்டில வயிற்றுக்கில்லைன்னாலும் ஒரு சுதந்தரம் உண்டு. எம்பாட்டுக்கு ஆற்றில் குளத்தில் குளிப்பேன், கோயிலுக்குப் போவேன். யாரானும் ஏதானும் வேலை சொன்னால் செய்வேன். இங்கே வாடி, போடின்னு அந்த மூத்தாள் பிள்ளை அதட்டுவான்…ஒண்ணும் சொல்லிக்கிறாப்பல இல்ல. அதோட, அவன் நடத்தை வேற எனக்குப் பயமாகிவிட்டது. புருஷரோ, கல்யாணம்னு பண்ணிண்டாரே ஒழிய, பகல்ல சாப்பாடு போடறப்ப பார்த்தாதான் உண்டு. சித்தப்பிரமை புடிச்சாப்பல இருப்பார். இப்படி ஒரு ரெண்டு மாசம் தானிருக்கும். அப்ப இந்த சுவாமி எங்க ஊரில் வந்து தங்கி, காலை வேளையில, பஜணை பண்ணிண்டு போவார். மூணு நாளைக்குமேல தங்கமாட்டாராம் இவர். அந்த சுவாமி கிட்ட ரொம்ப ஈடுபாடா, பிட்சைக்குக் கூட்டிண்டு வந்தார். அப்பதான் இங்க இந்த ஆசிரமம் கட்டறா. சாமிஜி இவரிடம் அங்க வந்து சிலநாள் தங்குங்கோன்னு சொன்னார்னு நினைக்கிறேன். என்னைக் கூட்டிண்டுதான் வந்தார். அப்ப, இங்கே பாதையே கிடையாது. இப்படி ஹரித்துவாரத்தில் வண்டியை விட்டிறங்கி, சத்திரத்தில் மூட்டையை வச்சிட்டு ஸ்நானம் பண்ணப் போனோம். கையைப் புடிச்சுட்டு ஸ்நானம் பண்ணுங்கோன்னா. அப்பிசி மாசம் தீபாவளிக்கு முன்னே இருகரையும் பெருகும்.கங்கை கை இழுத்தது.
ஆனா, நான் நல்ல பலசாலி. இழுத்துட்டேன். எல்லாருமாகக் கரையில் என்னையும் சேர்த்து இழுத்தா. இந்தப் பக்கத்தில் கங்கையில் யாரானும் நழுவிட்டாக் கூடக் காப்பாற்ற மாட்டாளாம். ‘கங்கா மாதா வே ஜாதா?’ன்னு அதையே பாக்கியமாச் சொல்லிடுவா…அப்ப என்னமோ இழுத்துட்டா. அவருக்கு மூச்சே இல்லை… போயிட்டார்…
உலக இயக்கங்களே நின்று, சந்தடியற்ற ஒரு சூழலுக்குள் முன்பின் தொடர்பற்று, அவளும் அந்தக் கிழவியும் மட்டும் இருப்பதாகத் தோன்றுகிறது.
பாட்டி சட்டென்று மெளனமாகிறாள். அந்த மெளனத் தைக் கலைக்க கிரிஜாவுக்கு மனமில்லை.
‘இதோ இங்க…ஓம்…ஔஷதாலயான்னு போட்டிருக்கே, பார்த்தியா?’
‘ஆமாம்?’
‘அங்கே…அவருக்குப் பிறகுதான் பவானந்தான்னு வச்சிட்டு பெரிய சாமிஜி இந்த ஆசிரமத்தில சேர்த்தார். அப்ப இருபது இருபத்திரண்டு வயசுப்பிள்ளை. தேசத்துக்காக புரட்சிப் பண்ணக் கிளம்பி, இப்படி ஒதுங்கினதாச் சொல்வார். அப்ப எனக்கு இருபத்தஞ்சு வயசு, எங்களை இழுத்துப் போட்டவர் அவர்தான்.இவருக்கு மூச்சுப் பேச்சில்லைன்ன உடனே, அவர்தான் சிகிச்சை எல்லாம் செய்தார். அடுப்பில் சூடுகாட்டி ஒத்தடம் குடுத்து, மூலிகைப் புகைகாட்டி… ம், ஒண்ணும் பிரயோசனம் இல்லை. கங்கைக் கரையில் உடம்பைப் போட்டிருப்பாளா?…எல்லாம் ஆயிட்டது, ஊருக்கு அப்புறம்தான் காகிதம் போட்டார்கள். அந்த நிலையில் மூத்தாள் பிள்ளை புறப்பட்டு வந்தான். அந்த…பிரும்மசாரி ஆசிரமத்துப் பிள்ளையைப் பார்த்து அவன் பேசின. பேச்சு…சிவ, சிவா, சொல்லக்கூடாது. அத்தோட என்னை அழைச்சிண்டு போக அவன் வந்திருந்தான். நான், அவன் கண்ணில் படாமல் இந்தக் கரையில் ஒளிஞ்சு ஒளிஞ்சு நடந்து, காடாயிருந்த ‘இந்த இடத்துக்கு, வந்தேன். பெரிய சாமிஜியிடம் சொல்லி
‘நீ போக வேண்டாம். இங்கே இரு…!’ன்னார்.
அவ்வளவுதான் இங்கேயே இருக்கேன்…’ சொல்வது போல் இவ்வளவு எளிதா என்று கிரிஜாவுக்குத்தோன்றுகிறது.
‘இப்ப இந்த ஆசிரமத்தில் யாரும் இல்லையா? உங்கள்…தப்பாக நினைக்காதீர்கள் பாட்டி, நீங்கள் ரொம்பவும் தைரியசாலின்னு தோணறது. ஒர் இளம் வயசுப் பெண், இங்கே துறவிகளுடன், பிரும்மசாரிகளுடன் தங்குவது எளிதாக இருக்காதே? பிரச்சனை இருந்திருக்குமே? – ஸ்வாமிக்கே கெட்டபேர் வருமே?…’
பாட்டி சிரிக்கிறாள்.
‘வெள்ளம் பெருகும்போது, பெரிய பெரிய மரங்களைக் கூட வேரோடு சாய்ச்சிட்டுப் போறது தான். அந்தப் பாவி மூத்தாள் பிள்ளை என்னை அழைச்சிட்டுப் போய் தலையைக் கோலம்பண்ணி,மூலையில் வச்சுக் குலைக்கணும்னு . நினைச்சான். ஏன்னா, அவன் இஷ்டத்துக்கு நான் வளையல இல்லையா?…ஊரில் போய் என்னென்ன கதை கட்டினானோ? அதெல்லாம் என் காதிலவிழல…பெரிய ஸ்வாமி… நீ உக்காந்து இருந்தியே அங்கதான் நான் முதல்ல பார்க்கிறப்ப உட்கார்ந்திருந்தார். பெண்களை இப்படிப் பண்றது மகாபாவம். அதுக்கு எந்த சாஸ்திரத்திலும் உண்மையாக ஒப்புதல் கிடை யாது. சாஸ்திரம்ன்னு இவங்க சொல்றதெல்லாம் மனுஷன் பண்ணினது தானேம் பார். இவா ஆசிரமத்தில் நிறைய, பெண்கள் வந்து இந்த மாதிரி சேவைபண்ணத் துறவறம் வாங்கிட்டிருக்கா. ஆனால் நாந்தான் முதல். இந்த பிரும்மசாரி சொன்னேனே? அவர் ஆயுர்வேதம் படிச்சவர். மூலிகைகள் கொண்டு வந்து மருந்தெல்லாம் தயாரிப்பார். நானும் அவரும் இங்க சுத்தி இருக்கும் கிராமமெல்லாம் கால் நடையாவே போவோம். அநுபவத்தில் பலதும் கத்துண்டேன்.காச்சல், சொறி, சிரங்கு, பிரசவம், கண்வலி, காதுவலின்னு பார்க்கவும் மருந்து போடவும், பழகினப்ப ஜன்மாவில இதுக்கு மேல என்ன வேணும்னு தோணும். ராத்திரில பனிக்குளிரில், கணப்பைப் போட்டுண்டு இப்படீ உட்கார்ந்திருப்பேன். அவரை பிஷக்பாபான்னும் என்னை மாதாஜின்னும் சொல்லுவா, ஆசிரமத்துக்குப் பணக்காரர் ஏழை எல்லாரும் வருவா. இப்பப் போல, காரிலும் பஸ்ஸிலும் வந்து பாத்துட்டுப் போறதுக்கில்லாம, தங்கி அந்த அமைதியை அனுபவிக்க வருவா…’
‘இப்ப அந்த பிஷக் பாபா இல்லையா?…’
‘காலமாயிட்டார். எட்டு வருஷமாயிட்டது. இப்ப எங்கிட்ட மருந்து கேட்க வரா ஒண்னுரெண்டு கிராமத்துக்காரா. அவர்போனப்புரம் ஒண்ணு ரெண்டு வருஷம் அதை இதை நினைவு படுத்திண்டு எப்பவானும் யாரானும் கேட்டாச் சொல்லுவேன். இப்பதா மூலைக்கு மூலை டாக்டர் போர்டு இருக்கே?…’
‘நீங்க அப்புறம் தெற்கே போகவேயில்லையா?’
“ஏன் போகாம? கன்யாகுமரி வரையிலும் நடந்தே யாத்திரை போயிருக்கிறோம், ஆனா ஒண்னு சொல்றேன்: எனக்கு இங்கே கிடைக்கும் நிம்மதி எங்கும் இல்லை. இங்கயும் எங்க காலம், அந்த யுகம் போயிட்டுது. இப்ப சாமிஜி பேரில மிஷன்னு பெரிய அமைப்பா வச்சு நடத்தறா மேல பாரு பெரிய கட்டிடம், பிரார்த்தனை மண்டபம் எல்லாம் இருக்கு, இவா மிஷன் ஆஸ்பத்திரி கூட உள்ள டவுன்ல கட்டியிருக்கா. பெரிய பெரிய பணக்காரா, அக்கரையில் குடீர் கட்டி வச்சிருக்கா, அவாளுக்கு அப்பப்ப வந்து தங்க…எல்லாம் மாறிப்போயிட்டது. ஆனா…இப்பத்து நடைமுறைக்கும். அப்போதைய லட்சியத்துக்கும் சம்பந்தமே இல்லைம்மா…!’
கிரிஜா கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். ‘தனது பிரச்னையைப் பற்றி இந்த மூதாட்டியிடம் சொன்னால்…’
‘பாட்டி, படிச்சுப் பட்டம் வாங்கின எங்களை எல்லாம் விட நீங்கள் அறிவாளியாகப் பேசுகிறீர்கள்… நீங்க உங்களுக்கு இந்த அமைதிக்கரையில் கூட மனிதர் வந்து குலைச்சிட்டுப் போறதை நேராகப் பார்க்கிறீர்கள். இப்பத்து வீடுகள்: குடும்பங்கள் எப்படியிருக்குமோன்னு நினைச்சுப் பார்க்கறேளா?’
‘நினைச்சுப் பார்க்கிறதென்ன? லோகமே பணத்துல இருக்கு. அதனால, பெண்ணாகப் பிறந்தவள் அதிகம் கஷ்டப் படுகிறாள். இவளுக்குப் பணமும் சம்பாதிக்கணும்னு கடமை வந்து சுமக்கிறாள். இல்லாட்டா, அத்தனையும் சதையாக மாப்பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிண்டு காரில போறா. இங்க ‘குடீரு’க்கு வர பணக்காராளைப் பார்ப்பேன். அப்பதோணும். ஏண்டி, பிறந்த வீட்டிலேந்து அது கொண்டு வரல. இது கொண்டு வரலேன்னு அடிச்சுத் துரத்தும் கொடுமை இன்னும் இருக்கு. கங்கையில் விழுந்து சாகிறதும் கூடத்தான் இத்தனை வருஷத்தில பார்க்காமலில்லை…’
‘பாட்டி, நான்…உங்ககிட்ட மனம் திறந்து சொல்றேன். இங்க நான் ஆறுதலுக்காக வந்தேன். குடும்பத்தில் இரண்டு பெண்ணும் ஒரு ஆணும் குழந்தைகள். பணம் வசதி இருக்கு. ஆனா, காலமேந்து ராவரை, உடம்பு உழைப்பு. மெஷின் போல. ஒரு பக்கம் கட்டுக்களே இல்லாமல் ஒடப்பார்க்கும். தலைமுறை. இன்னொரு பக்கம், ஸ்டவ் திரியை நனைத்து உலர்த்து என்று சொல்லும் மாமியார். இந்த இரண்டுக்கும் கட்டுப்பட்டுப் பூச்சியாகப் போயாச்சு. ஆனால், இப்ப, இந்தக் கூட்டில் மனுஷத் தன்மையே இல்லைன்னு புரியறது. என்னால் இருக்கமுடியல. நான் பதினைந்து வருஷம் படிச்சு, பத்து வருஷம் கற்பிச்சு, அறிவாளியாக என்னை மலர்த்திக் கொண்டவள். கல்யாணம் என்ற அமைப்புக்குள், கீழ்ப்படியும் ஒன்றைத்தவிர வேறு எதற்கும் உனக்கு இடமில்லை என்பது சரியா?…நான் எப்படி அங்கு இருக்க? நீங்கள் சொன்னிர்கள், ஒன்றும் தெரியாத நான், என் அநுபவத்தில் எத்தனையோ கற்றுக் கொண்டேன்னு. அன்றாட சமையல், சுத்திகரிப்பில் கூடக் காலத்துக்கும் வசதிக்கும் ஏற்ற புதிய வழக்கங்கள் வரக் கூடாது. பழைய மரபை சுமந்து கொண்டே இருக்க வேணும்னா, என்ன செய்ய? இந்த மாதிரி ஒரு பிரச்னையை நீங்கள் நினைத்திருப்பீர்களா?” வெயிலின் கடுமை மாற மேகம் மூடிக்கொள்கிறது.
பாட்டி அரைக்கண் மூடி அநுபவிப்பவளைப்போல அவள் பேச்சுக்களைச் செவியுறுகிறாள்.
“உன் பேரென்னவோம்மா, ஒண்னு சொல்றேன். பிரச்னை, பிரச்னைன்னு நினைச்சிண்டே இருந்தா குழம் பிண்டே இருக்கணும். சுவாமிஜி சொல்வார். பொறுக்கலன்னா எழும்பிப் போராடு; தெளிந்துகொள், இரண்டிலொன்னு முடிவு செய்துடனும், அந்த முடிவைப்பத்திப் பிறகு அலட்டிக்கப்படாது. அப்படி, பிரச்னை பிரச்னைன்னு, சிக்கலிலிருந்து விடுபட நமக்குச் சக்தி இருக்குன்னு தைரியமில்லாமலேயே உசிரை மாய்த்துக்கறதே, ரொம்பக் கோழைத் தனம் பார். அன்னிக்கு படிப்பும் அநுபவமும் இல்லாத எனக்கு திடீர்னு அவர் செத்ததும் பிரச்னைதான் வந்தது. அப்புறமா கேள்விப்பட்டு என் அத்திம்பேர் கூட வந்திருந்தார். பிறிசு, நீ வாழ்நாள் முழுக்க ஊரார் அவதூறுக்கு இப்படி இருப்பியா? வந்துடுன்னார். எல்லாத்துக்கும், அந்தப் பிரும்மசாரிதான் காரணம்ன்னார். அவரை எனக்கு அப்ப உள்ளும் புறமுமாத் தெரியாதுதான், ஆன்ாலும் ஒரு முடிவு. என்ன வந்தாலும் ஊருக்குப் போறதில்லை. பிறந்தகத்து இல்லாமை, புக்கத்துக் கொடுமை, எல்லாத்துக்கும் மேல புருஷனை இவளே கங்கையில் அமுக்கிக் கொன்னுட்டான்னு சொல்லப்போகும் நாக்குகள்…இதெல்லாம் தீர்மானமாகக் கிடுத்து…திரும்பிப் போறதாக முடிவு செஞ்சிருந்தாலும், ஏன் வந்தோம்னு பின்னால் நொந்துகொள்வதாக இருக்கக் கூடாதுங்கறதுதான் என் நிச்சயம்…’
வானம் கறுத்துக்கொண்டு வந்து தொங்குகிறது, கங்கையின் பரப்பும் மக்கள் கலகலப்பும் மங்கிப்போகின்றன. தான் உயிரை மாய்த்துக் கொள்ள வந்ததாக இவர் எண்ணி விட்டாரோ என்று நினைத்து அவள் உள்ளுர நானமடைகிறாள்.
‘மழை கொட்டும்போல இருக்கு. இங்க தங்கப்போறி யாம்மா…’
‘ஒ. இல்லை பாட்டி. நான் திரும்பிப் போகணும். ஒர் ஆறுதலுக்காக, தெளிவு தேட, பரபரப்பில் இருந்து விடுபட்டு வந்தேன். உங்களை மறக்கவே மாட்டேன். எனக்கு வெறும் வயிற்றுக்கு மட்டும் அன்னமிடல. கவி பாரதி சொன்னார். ஞான உணவும் தோள் வலியும்னு அது ரெண்டும் தான் நமக்கு தைரியம். நம்பிக்கை…அந்த ரெண்டும் எனக்கு உங்க்கிட்ட வந்ததில கிடைச்சிடும்னு கிளம்பிப் போறேன்…”
‘போயிட்டு வாம்மா…நம்மாலானது ஒண்ணுமில்லேன்னு நினைக்காம. நம்மாலும் ஆகும்னு நினைச்சிண்டு போ! அவளுக்குத் தெளிவு துலங்குகிறது.
பிரச்னை பிரச்னை என்று சிக்கிக் கொண்டதாக, யாரோ வந்து கரையேற்றவேண்டும், விடுவிக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? மாமியார், அவளும் ஒரு பெண். இந்த மடிக்கூடு வெறும் அர்த்தமற்ற போலிச் சடங்குகள். உள்ளும் புறமுமான மனிதத்துவத்தை விரட்டிவிடும் கொடுமைகள் என்று எடுத்துச் சொல்லேன். அந்த வீட்டில் உனக்கும் ஒரு உரிமை உண்டு. அவன் சொல்லியதால் மாற்றம் காண வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? உன் குழந்தைகளின் நல்ல மன வளர்ச்சியில் உனக்கு உரிமையும் பொறுப்பும் உண்டு… பின்னர்…
விடுவிடென்று இறங்குகிறாள், அவள் ஒரு முச்சக்கர ஊர்தியில் அமரும்போது மழை ‘சோ’ என்று கொட்டுகிறது. திரும்பி வருவதற்குக் கரையோர டெம்போக்களில் ஒன்றிலேயே அமர்ந்துவிடுகிறாள். மெழுகுச்சீலைத் திரையைத் தொங்கவிட்டிருக்கிறான். அப்படியும் மழைச்சாறல் உள்ளே வந்து சேலையை நனைக்கிறது. எட்டுப்பேர் நெருக்கி உட்காரக்கூடிய இருக்கைகளில், பதின்மூன்று பேர்களுக்கு இடம் கெர்டுக்க மழையின் நடுவே ஊர்தியை நிறுத்துகிறான்…மருந்துத் தொழிற்சாலை நிறுத்தத்தில், ஒர் இளம் பெண்ணும் அவள் கணவனும் ஏறுகிறார்கள். புதுமணத் தம்பதியாகத் தோன்றுகிறது. நெற்றிச் சிந்துாரமும், விரல் நுனிகளின் சாயமும், அரக்குச் சிவப்பில் சரிகை நூலால் பூவேலை செய்த சேலையுமாக, கதகதப்பாக இவளுடன் நெருங்கிக் கொள்ள, கணவன் அவளோடு ஒன்றிக்கொள்ள அமருகிறார்கள்.
பெண்ணின் கைப்பையோடு, அவன் வைத்துக்கொண்டிருக்கும் தினசரியும் இணைந்து அவள்மீது படுகின்றன. இந்தி தினத்தாள்தான். ஆனால், கொட்டை எழுத்துத் தலைப்பு அவள் கண்களைக் கவருகிறது.
விமானத்தில் தீப்பிடித்தது…! வியாழக்கிழமை பம்பாயில் இருந்து திருவனந்தபுரம் கிளம்பிய விமானம்…இதற்குமேல் மடிப்பில் தெரியவில்லை. கிரிஜாவினால் இதற்குமேல் எதுவும் சிந்திக்க முடியவில்லை. ‘அந்தப் பத்திரிகையை இப்படிக் கொடு…முழுசும் பார்த்துவிட்டுத் தருவேன்’ என்று சொல்ல நா ஒட்டங்கள் யாவும் அந்த எழுத்துக்களின் பின்னணியில் அழிந்துபோகின்றன. விமானத்தில் தீப்பிடித்து…
பம்பாய் சென்று அங்கிருந்துதானே திருவனந்தபுரம் செல்வதாகச் சொன்னான்!
ஓ! அவள் கிளம்பி வந்ததற்கு இப்படி ஒரு தண்டனையா? அங்கு குழந்தைகள்… ஆம். குழந்தைகளுக்கு அவளை விட்டால் யார் துணை?… ஏறத்தாழப் பதினெட்டு வருஷங்கள் அவனின் நிழலில் அண்டி அவனுக்குப் பணி விடைகள் செய்து, மூன்று மக்களைப் பெற்றிருக்கிறாள் இந்தப் பந்தம், அகன்று விடுமோ? ஏதேனும் ஆய்விடுமோ? ஆய்விட்டால்…? ஹரிகிபைரி வரும் வரையில் கிரிஜா விக்கித்துப்போய் உட்கார்ந்து இருக்கிறாள்.
மழைவிட்டு வானம் வெளிவாங்கி இருக்கிறது. முதலில் கிரிஜா இங்கே இறங்குவதாகத்தானிருந்தாள். ஆனால் இப்போது. அந்தத் தம்பதி இறங்குமிடத்தில் இறங்குவதாகத் தீர்மானிக்கிறாள்.
ரயில் நிலையத்துக்கருகில் அவர்கள் இறங்குகின்றனர். இறங்கும்போது, அந்தப் பத்திரிகையை அவள் அவர்களிடம் கேட்குமுன், அவன் கைப்பெட்டியை எடுக்கையில் அது விழுகிறது. கீழே விழுந்த அதைக் கிரிஜா சட்டென்று எடுக் கிறாள்.
‘…கொஞ்சம் பார்த்துவிட்டுத் தரட்டுமா?…’ அவர்கள் பதிலுக்குக் காத்திராமல் அவசரமாகப் பிரிக்கிறாள். விமானப் படம் போட்டிருக்கிறது. ஐந்து பேருக்கு லேசான காயம். விமானம் பழுதுற்றதை உடனே கண்ணுற்றுவிட்டதால் பம்பாய் விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் பெற்றது…
திருப்பிக் கொடுத்து விடுகிறாள். ‘தாங்க்யூ …!’
‘நீங்கள் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் பஹன்ஜி!’
‘வேண்டாம்…ஒரு சிறு செய்தி பார்க்கவேண்டி இருந்தது. பார்த்துவிட்டேன்…’ தண்ணிர்பட்டுக் கரையும் ஒவியங் களாய் மனப்பரப்பில் இறுக்கங்கள் கலைகின்றன…
சிறிது நேரத்தில் அவள் ஆடிப் போனாள். இவளா தைரியசாலி? அன்பு, காதல், தெய்வீகம் என்றெல்லாம் கதைகளில், சினிமாக்களில் எப்படி மிகைப்படுத்துகிறார்கள்? அப்படி அவள் சாமுவை விட்டுப்பிரிய முடியாதபடி ஒன்றி விட்டாளா?… நிச்சயமாக இல்லை. திருமணம் செய்த நாளிலிருந்து, அவளுடைய சுதந்திரத்தன்மையைப் பிரித்த தனால், கூட்டுக்குள் அடைபட்டு, ஆளுமையை ஆணி வைத்து இறுக்கினாற்போல் குறுகிப் போயிருக்கிறாள். இதில் குழந்தைகளின் நிராதரவான தன்மைதான் இரக்கத்தினால் அவளை ஒட்ட வைக்கிறது… குழந்தைகளே இல்லை என்றால், அவள் விடுபட்ட பறவை…சாமுவின் மீது உள்ள கரிசனம் அல்லது அக்கறை, குழந்தைகளை முன்னிட்டதுதான்…
ஒருவாறு தேறியவளாக ஒரு தேநீர் கடையின் பக்கம் நின்று, தேநீர் கேட்கிறாள்.
இதெல்லாம், அவள் செய்யக்கூடாத செயல்கள். எளிய யாத்ரீகரும், கூலிக்காரர்களும் குழுமும் தேநீர்க்கடை. பெரிய வட்டையில் பூரி பொரித்து வைத்திருக்கிறான். மண் அடுப்பில் கணகணக்கும் ‘கொய்லா’ கரியின் சுவாலையில் இரும்புச் சட்டியில் பால்கோவாவுக்கான பால் காய்கிறது எண்ணெயும் மிளகாயும் மிதக்கும் கிழங்கு சப்ஜியை ஒரு வட்டையில் இருந்து எடுத்து பூரியில் ஊற்றி யாருக்கோ அழுக்குப்படிந்த துணி உடுத்திய ஆள்கொண்டு போகிறான். மாமியாருக்குத் தெரிந்தால்…?
‘சாய், மாதாஜி…!’
மாதாஜி என்ற சொல்லுக்குரியவள் தான்தான் என்று புரிந்ததும் சட்டென்று பார்க்கிறாள். புதிய மண் கிண்ணத் தில் ஆவி பறக்கும் தேநீரை நீட்டுகிறான்.
‘கித்னா..?’
‘ஸாட்… பைசே’…அறுபது பைசாவைக் கொடுத்துவிட்டு: தேநீரை அங்கேயே ருசித்துப் பருகுகிறாள். நிறையச் சர்க்கரை போட்டிருக்கிறான்.
பாலங்கடந்து அப்பால் கங்கைக் கரையின் பக்கம் அமர்ந்து மாலை முழுவதையும் கழிக்கிறாள். மாலை மங்கி தீபங்கள் சுடர்பொரிய கங்கைக்கரை விழாக்கோலம் கொள்கிறது. எழுந்து வருகிறாள்.
‘…அடிம்மா? இன்னிக்கு முழுக்க எங்க போயிட்டே?… காலம வந்தாளே, அவா வாதபூஜை பண்ணா. பிட்சை பண்ணா. வகை வகையா எல்லாம் பண்ணிச் செலவழிச் சிருக்கா, எங்கிட்ட வந்து காலம உங்ககிட்ட நின்னுண்டிருந் தாளே ஒரு பொண்ணு, அவ எங்கேன்னு கேட்டா… தெரியுமே இங்கதா எங்ககூட தாஇருக்கான்னேன். ‘தெரியுமா உங்களுக்கு அவளை…!ன்னு கேட்டதுக்கு, ரொம்பப் பழக்கம் அசப்பில அவளாட்டம் இருந்தது. மறுபடி பார்த்துப் பேசறதுக்குள்ள போயிட்டா. பூஜையிலேயும் காணலை… ன்னா… இன்னொன்று கேட்டியாம்மா? இவருக்கு, அவா ஏதோ துரத்து உறவாம். பேசிண்டே இருக்கச்சே பூதப் பாடின்னு சொன்னா. யாரு, எவா, எங்க அம்மான் வழிப் பாட்டனார் ஊராச்சேன்னு விசாரிச்சால், அவர், இவருடைய மாமாவுக்கு மச்சினனின் அத்தானாம். உறவு கிடக்கட்டும், ஒட்டி ஒட்டிண்டு துளி கருவமில்லாமல் அவளே பந்தி விசாரிச்சு, அவ்வளவு நேர்த்தியா எல்லாம் பண்ணினா இப்பத்தான் காரில் போறா. ராத்திரி யாரோ வெளிநாட்டுக் கார்ன் வரானாம். டில்லில இருக்கணுமாம்…
கெளரி அம்மாள் வாயோயாமல் ரோஜாமாமியைப் புகழுகிறாள். வயிரங்களும் பட்டும். காரும், மினுக்கான பேச்சும், சிரிப்பும் எப்படி எல்லோாையும் மயங்க வைக்கின்றன?
‘நாளைக்குக் காலம கொண்டு பேரும் புறப்பட்டு அமெரிக்கா போறோம். பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயம் பண்றோம், இல்லாட்டா, நம்ம வீட்டில வந்து தங்கிட்டுப் போகணும்னு கூப்பிடுவேன். யார்யாரெல்லாமோ வந்து தங்கறான்னு ரொம்பச் சொன்னா. இன்னொருதரம் வரச்சே கண்டிப்பா இங்க வந்து தங்கணுமின்னு அட்ரஸ் எழுதிக் குடுத்திருக்கா…’
கிரிஜா அப்படியே நின்று கேட்கிறாள். ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது. காலை ஃபிளைட்டில் ஊருக்குப் போய் விடுவார்கள். இவள் ஊர் திரும்பும்போது, அவளும் வந்து ஏதும் கலவரம் நிகழாது…
பொழுது விடிந்ததும் காலை நீராடலும் உணவும் முடித்துக் கொள்கிறார்கள் கெளரியம்மாள் ஈரச்சேலையைக் கூட உலர்த்திக் கொள்கிறாள் க்டையில் சென்று பேரம் பேசி, கங்கைச் செம்புகள். ஸிந்துாரம், அப்பளக் குழவி என்று அவள் வாங்கிக் கொள்ள கிரிஜா உதவி செய்கிறாள்.
‘பெற்ற பெண்ணைப்போல் பழகிட்டே. ஏதோ போன ஜன்மாவிலே விட்டகுறை தொட்ட குறை போல இருக்கு. நீயும் எங்க கூட வரத்தானே போறே?’
‘ஆமாம், மாமி, அஞ்சு நாள் லீவெடுத்தாச்சு …’ என்று கிரிஜா சிரிக்கிறாள். ஒரு தெம்பும் தெளிவும் வந்ததற்கு இப்போது கூடியிருக்கிறது. இரவு ரயில் வண்டியிலேறி, விடியும் போது டில்லி சென்றால், வெளிச்சத்தில் வீடு செல்வது வசதி யாக இருக்கும் என்று கிரிஜா சொல்கிறாள்.
திரும்பும் பயணத்தில் கெளரி அம்மாளும் கிழவரும் உறங்கிவிடுவதால், பேச்சுக்கே இடமில்லை.
அத்தியாயம்-12
‘மாமி உங்களை உங்கள் விலாசத்தில் கொண்டு விடணுமா?…’
வேண்டாண்டியம்மா, நீ இவ்வளவு ஒத்தாசை பண்ணினதே பெரிசு ஆச்சு. நாளைக்குச் சாயங்காலம் வண்டி ஏறணும். நீ ஒரு ஆட்டோ மட்டும் புடிச்சு உக்காத்தி வச்சுடு. கரோல் பாகில, அந்தப் பெரிய ரோட் இருக்கே, அங்கேந்து போற்ப்ப எனக்கே அடையாளம் தெரியும். பக்கத்தில பால் பூத் இருக்கு…’
ஒர் ஆட்டோவைப்பேசி அவர்களை ஏற்றிவிடுகிறாள்.
‘பத்திரமாப் போயிட்டு வாம்மா…உங்கிட்ட அட்ரெஸ் வாங்கிக்கணும்னு நினைச்சேன். பாத்தியா?”
கிரிஜா புன்னகை செய்கிறாள். ‘நாங்க வீடுமாறிடுவோம். மாமி எங்கிட்ட உங்க அட்ரஸ் இருக்கே. காகிதம் போடறேன் நானே. உங்க ஊரில வந்து உங்களைப் பார்த்தாலும் பார்ப்பேன்…”
‘திவ்யமா வா, போயிட்டு வரோம்…! .
ஆட்டோ வட்டமடித்தாற் போல் சென்று சாலையில் மறையும் வரை அங்கே நின்று பார்க்கிறாள். காலைப் பொழுதின் சுறு சுறுப்பு. பள்ளிச் சிறாரின் சீருடைகளும், மலர் முகங்களுமாய்த் தெருவோர நடைபாதைகளில் மலர்ந் திருக்கிறது. இந்நேரம் அவள் குழந்தைகளும் பள்ளிக்குக் கிளம்பியாக வேண்டும்.
மதன நகர் செல்லும் பஸ்ஸைத் தேடி, ஏறி அமருகிறாள். அமைதியாகவே இருக்கிறாள்.
பஸ் இவளுக்குப் பரிச்சயமான வட்டத்துள் நுழைய நாற்பது நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. நடைபாதைப் பழக்கடைகள் உள்புறம் கட்ையோரங்களில் நிற்கும் சொகுசுக்காரர்கள், வண்மை கொழிக்கும் மக்களின் தேவைக்கான பல பல பொருள்களும் விற்கும் அங்காடிகள்…
பஸ்ஸிலிருந்து அவள் இறங்குகையில் ஸ்கூட்டரில் வரும் சிவலால் பையன் பார்க்கிறான். ‘நமஸ்தே ஆண்டி’ ஊருக்குப் போயிருந்தீர்களா?
‘ஆமாம், எங்கே ஃபாக்டரிக்கா?’
சகஜமாகப் பேசுகிறாள்.
முனிசிபாலிடி பள்ளிக்குச் செல்லும் ஏழைக் குழந்தை களின் அணி ஒன்று சாலையை கடந்து போகிறது. ‘ஆன்டி’ என்று ஒரு குரல்.
ஒ, மாயாவின் பையன் தனு…!சாதாரணமாகக் குரல் கொடுத்துக் கூப்பிட மாட்டான். இவளைக் காணவில்லை என்று வீட்டில் கலவரம் நிகழ்ந்திருக்க வேண்டும். இளநீல குடிதார்பைஜாமாவில் சுஷ்மா கல்லூரிக்குக் கிளம்பிச் செல்கிறாள். தெரிந்த முகம். பளிச்சென்று ஒரு சிரிப்பு; நின்று பார்வை. ‘மார்னிங்…!’ இவளுடைய தெரு…வழக்கம் போல், எந்த நேரத்திலும் உண்ட களைப்பின் சோம்பலைக் காட்டும் படி காட்சி அளிக்கும். ஒவ்வொரு சுற்றுச் சுவருக்குள்ளும் பூதங்களைப் போல் மூடிக்கொண்டு இரண்டு மூன்று கார்கள் ‘கண்ணாடி பதித்த பெயர்ப்புரைகள்…‘சந்தனா’வின் சொந்தக்காரி, பிதுங்கி விழும் வெண் சதையுடன் வாசலுக்கு நேராகக் காலையுணவு அருந்துகிறாள். இந்தத் தெருவை இவ்வளவு நின்று நிதானமாக இவள் பார்த்ததில்லை. பழைய பிரிகேடியர் விக்ரம்கிங், வாயிலிலுள்ள அழகுக் செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறான். இவளுக்குப் பேசிப் பழக்கமில்லை. என்றாலும் நின்று ஒரு மலர்ச்சியுடன் பார்க்கிறான்.
‘ஓ கவி கி மா? ஊருக்குப் போயிருந்தீர்களா?…’ என்று ஸூனு ஓடி வந்து கேட்கிறாள். எதிர்வீட்டு மருமகள், ஏதோ அலுவலகத்தில் ரிஸப்ஷனிஸ்ட். ‘ஒ…ஆமாம்…’ ஆயிற்று. வீட்டு வாசலில் பத்திரிக்கை படிப்பவன் கதவு ‘கிளிக்’கென்று செய்யும் ஓசை கேட்டு எட்டிப்பார்க்கிறான்.
‘ஆயியே! ஆயியே!…எங்கே போயிருந்தீர்கள்? வீடு ஒரே அமர்க்களமாயிட்டது?…’
அவள் நிற்கவில்லை. விடுவிடென்று படி ஏறுகிறாள். கதவு திறந்தே இருக்கிறது. ஒருவரும் பள்ளிக்குச் செல்ல வில்லை. பரத் தான் முதலில் இவளைப் பார்க்கிறான்.
அம்மா என்று ஓடிவருகிறான். ‘அம்மா வந்துட்டா! அம்மா வந்துட்டா…’
‘அம்மா? நீ கெட்டுப்போயிட்டே, இனிமே வர மாட்டேன்னு சொன்னா. எப்படிம்மா கெட்டுப் போனே?…’
நெஞ்சில் கத்தரிபட்டுத் துண்டானாற்போல் துணுக்கென்று நோகிறது. குரல்கேட்டு, கோடுபோட்ட பைஜாமா அங்கியுடன். முகச்சவரம் செய்யும் கோலத்துடன் சாமு நடையில் வருகிறான். அவள் உறுத்துப் பார்த்தாள். ‘குழந்தை கிட்ட யார் இப்படிச் சொன்னது?’
‘அம்மா…வந்துட்டா, கிடைச்சுட்டா, அம்மா கெட்டுப் போகல…’ அவள் பரத்தின் தலையைத் தடவிக் கொண்டு, நிற்கிறாள். ஏனோ அவன் பார்வையின் கடுமை அவள் சரளத்தைத் தடுத்து நிறுத்துகிறது.
‘எங்கே போயிட்டு வரே?…’
‘ஹரித்துவாரம் போயிருந்தேன். குழந்தைகிட்ட இப்படியா இரண்டர்த்தச் சொவ்லெல்லாம் சொல்லுவது!’
‘பின்ன எப்படியடி சொல்ல? தொலைஞ்சு போனா கெட்டுப் போனான்னுதானே சொல்லனும்?’
இவனுடைய இந்தக் குரலை அவள் இதற்குமுன் கேட்டதில்லை. ஆணைகளான கட்டுக்களைத் தகர்த்தால் என்ன பலன் தெரியுமா என்று கிளர்ந்து வரும் குரல். அந்தக் குரலில் கவிதாவும், சாருவும்கூடச் சமையலறையில் இருந்து ஒடி வருகிறார்கள். குழந்தைகள் இருவரும் வண்ணமிழந்து பொலிவிழந்து காட்சியளிக்கின்றனர். கவிதாவின் மாக்ஸியில் எண்ணெய்ப் பிசுக்கு, மஞ்சள் கறை எல்லாம், அவள்தான் சமையல் வேலை செய்கிறாள் என்று அறிவிக்கின்றன. சாருவின் விரலில் ஒரு துணிசுற்றிய காயம் ஊகிக்க முடிகிறது.
‘ஹாய் அம்மா, எங்கம்மா போயிட்ட? கிச்ச்ன்ல வேலை செய்யுங்கடி கழுதைகளான்னு அடிக்கிறார்மா. அப்பா? கீழ பன்டியோட அம்மா டிக்குவ அனுப்பிச்சு, ரொட்டியும் சப்ஜி யும் பண்ணிக்குடுக்கச் சொன்னா, ஒரு நாளக்கி. அவன் கிச்சன்ல வரக்கூடாதுன்னு பாட்டி கத்தறா. ரத்னாக்கா வந்தா. அவளைப் புடிச்சி பாட்டியும் அப்பாவும் திட்டினா. ரத்னாக்கா சொல்லித்தான் நீ ஒடிப்போனியாம்!.ரத்னாக்கா அப்பாகிட்ட ரொம்பச் சண்டை போட்டாள்…’ என்று சாரு குழந்தை போல் ஒப்புவிக்கிறாள்.
‘உள்ள போங்கடி கழுதைகளா! ரெண்டு பேரையும் எங்கானும் போர்டிங்ல கொண்டுத் தொலைக்கணும். ஒடிப் போயிட்டு இந்த வீட்டில நுழைய, என்ன துணிச்சல் இருக்கணும்? அரித்துவாரம் போனாளாம், அரித்துவாரம். எங்கிட்ட காது குத்தறா. எதுக்கடி போன இப்ப அரித்துவாரம்?’
‘இத பாருங்க, குழந்தைகளை வச்சிட்டு இப்படிப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.’
அவன் ஒரெட்டு அவளை அறைவது போல் முன்னே வருகிறான்.
‘பல்லை உடைப்பேன், நாயே. என்னடி உரிமைப் பேச்சுப் பேசறே? ஒடிப்போயி எங்கோ சீரழுஞ்சு வந்துட்டு? எனக்கு வெளியில் தலை நீட்ட முடியல…’
பாட்டி இப்போது மெள்ள எட்டிப் பார்க்கிறாள். ‘வாண்டாண்டா, சாமு. நமக்குப் பாவம் வேண்டாம். அநாவசியமா ஏன் கோபப்பட்டு வார்த்தையக் கொட்டரே? பால் சிந்தியாச்சு. அவ சாமான், துணிமணி எடுத்துண்டு போறதானா போகட்டும்…’
அடிபாவி… !
அடிவயிற்றிலிருந்து சுவாலை பீறிட்டு வருகிறது. பரத் மருண்டு போய் அழுகிறான்.
‘அம்மா..! நீ திரும்பிப் போயிடுவியா?…சாமு, பிள்ளையைப் பற்றி இழுக்கிறான். ‘உள்ளே போ… ராஸ்கல், அம்மா வாம் அம்மா. யாரது அம்மா இங்க? வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாத ஒரு ஜன்மம் அம்மாவாம்!…’
‘சாமு நீ பேசாம இரு சித்த, வாயிலிருந்து கீழ விழுந்துடுத்து, எத்தனை நல்ல பண்டமானாலும் திருப்பி எடுத்து முழுங்க முடியறதா? குழந்தைகள் எப்படி அல்லாடிப் போயிடுத்து மல்ஹோத்ரா, பிள்ளைய விட்டு பாவம் நேத்து ஆஸ்பத்திரில எல்லாம் தேடிட்டு வரச் சொன்னான். எங்கிட்ட, ஏண்டீம்மா கடைக்குப் போறேன்னுதானே சொல்விட்டுப் போன? இத, கடைக்குப் போயிருக்கா, வந்துருவ, வந்துருவன்னு பார்த்தா வயத்தில புளிகரைக்கிறது. வரவேயில்ல. குழந்தைகள் வரா, மாயா வரா, கடைவீதி, மார்க்கெட்டெல்லாம் சல்லடை போட்டுத் தேடியாச்சு. என்னன்னு நினைக்க? நான் என்ன செய்வேன்? இவனோ ஊரில் இல்ல. ரோஜாக்கு போன் போட்டு, அவ ஒடி வந்து, இவனுக்கு போன் போட்டு, அடுத்த பிளேனில அடிச்சுப் புடிச்சிண்டு வந்தா என்னத்தைன்னு செய்ய? அன்னிக்குக் காலம யாருக்கோ ஃபோன் பண்ணினாப்பா, காஸுக்கான்னு கூடக் கேட்டேன். பதில் சொல்லலன்னேன். இத்தனை பெரிய டில்லிப் பட்டணத்தில் எங்க போய்த் தேட?’
‘அம்மா, உன்னை வாயிலே துணியடச்சு, குண்டுக் கட்டாக் கட்டிக் காரில வச்சுக் கடத்திட்டுப் போயிட்டாங்க களா? அப்பிடித்தானேம்மா, அந்த சினிமால கூட வந்தது..? பதின்மூன்று வயசுப் பெண்ணின் யதார்த்தமான சிந்தனை, அவளுள் நெகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறது.
‘அவளக்கடத்திட்டுப் போயி என்ன பண்ணுவாங்க! இவளே தானே ஒடியிருக்கா. கொஞ்ச நாளாவே போக்கு சரியில்லாமதானிருந்தது. ஆனா இவ்வளவுக்குத் துணிஞ் சுடுவன்னு நான் நினைக்கல…ஏண்டி நிக்கற எம்முன்னால? எந்த எண்ணத்தோட நீ போனியோ, அதே கையோட திரும்பிப் போய்க்கோ. நீ இந்த ஒரு வாரமா எங்கே இருந்தே, எங்கே போனேன்னு நான் ப்ரோப் பண்ண போறதில்ல. நீ ஒரு வேளை வராமலே இருந்தா தேடிட்டிருப்பேன். இனிமே விசாரிக்கிறதே அசிங்கம். எனக்கு மானக்கேடாயிட்டுது. போலீஸ் கமிஷனர்கிட்ட நான் எந்த முகத்தை வச்சிட்டு என் பெண்சாதி வந்துட்டான்னு சொல்லுவேன்? என் மானம் கப்பலேறியாச்சு!’
ஒரு பேய்க் கையால் முகத்தில் அறைப்பட்டாற் போல் இருக்கிறது.
எத்தனை இயந்திர மயமான இராட்சதத் தாக்குதல்? எரிவாயு அடைப்பானை மூட மறந்து போய், காலையில் தீக்குச்சி, கிழிக்குமுன், அது ஆளை அடிக்கப் பற்றிக் கொள் வது போன்ற கதைதானா இது? அப்படி இப்படி மறந்து போய் மின் இணைப்பைத் தொட்டு விடுவது போன்றது தானோ, இவள் குடும்ப அரண்களும்? இவன் ஏன் இவ்விதம் நடந்து கொள்ள நேர்ந்தது என்று நினைக்கும் அளவுக்குக் கூட அவள் ‘மனித’ மதிப்பைப் பெற்றிருக்கவில்லையா? குடும்ப மானம் என்பது அவள் தாங்கிக் கொண்டிருக்கும் நீர்க்குமிழியா?
“என்னடீ மனிதத்தன்மையைக் கண்டுவிட்டாய், பெரிய…மனிதத்தன்மை? நானும் ஊரில இல்லாதபோது, அம்மாவிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டுப்போகற அளவுக்குக் கிரிசை கெட்ட உனக்கு நான் என்னடி மனிதத் தன்மையைக் காட்டனுங்கறே?’
‘உன்னை மறுபடி இங்கே வீட்டில் கூட்டி வச்சுக்கற அளவுக்கு நான் மழுங்கிப் போயிடல. உன்னைக் கட்டின தோஷத்துக்கு உனக்கு என்ன அழனுமோ, அதை வக்கீல் மூலமா ஏற்பாடு பண்ணிடறேன். நீ உன் இஷ்டப்படி போய்ச் சேர். இங்க இருந்து என் குழந்தைகளுக்கு எதிர்காலம் இல்லாமல் பண்ணிடாதே. இந்த ஏரியாவிலேயே இப்ப, எனக்கு வெளில தலைநீட்ட முடியாது…’
கார் வந்து நின்ற ஓசை கேட்கவில்லை. ரோஜா மாமி வருகிறாள்.
‘வந்துட்டாளா?… எனக்கு மனசே கேட்கல சாமு, மல்ஹோத்ராவுக்கு போன் பண்ணினேன். வந்துட்டா ஒரு கால்மணியாறதுன்னான். சரி விசாரிச்சுப்போம்னு உடனே வந்தேன்…’
ஒ…இவர்கள் நேற்று ஃப்ளைட்டில் அமெரிக்கா போகவில்லையா?…பேச்செழாமல் நிற்கிறாள்.
‘ஏம்மா, கிரி, உனக்கே இது சரியாயிருக்கா? குழந்தைகள் தவிச்சுப் போக; வயசானவ, அள்ளு அள்ளாக் குலுங்கி அழறா. என்னடீ செய்வேன் ரோஜா, இப்படிப் பேர் வாங்கி வச்சுட்டுப் போயிட்டாளேன்னு. சாருதான் பாவம், யார் யாரோ ஸ்நேகிதா வீட்டுக்கெல்லாம் ஃபோன் பண்ணி, மம்மி அங்க வந்தாளா ஆன்டி, கடைக்குப் போறேன்னு போனாங்க, காணலை.ன்னு’ கேட்டுண்டிருந்தது. ஒரு தாயாராகப் பட்டவள் செய்யற செயலா இது?…அந்தப் பொண், ரத்னா, அது வேற தடியனாட்டம் ரெண்டு சிநேகிதனைக் கூட்டிண்டு வந்து பாட்டியை நாக்கில் நரம்பில்லாமல் பேசித்து. இந்த வயசுக்கு அவருக்கு இதுவேனுமா? முதல்நாள் அவளை இங்க பார்க்கறப்பவே அவல்லாம் இந்த வீட்டுக்கு வரக்கூடிய உறவில்லன்னு தோணித்து. எப்படிச்சொல்ல? ஸிகரெட்டப் புடிச்சிண்டு போறதுக. எல்லாம் வெளிப்படை. ஏதுடா நமக் கும் பதினாறு வயசுப் பெண்ணிருக்கு, இந்த மாதிரி ரகங் களைச் சேர்க்கலாமச்ன்னு நீதானே தாயாராக லட்சணமா ‘கட்’ பண்ணனும்? ஒருநாள் கிழமை, பாவாடை உடுத்திக்கோ, தாவணி போட்டுக்கோன்னு நாமதான் சொல்லணும். நான் ஏன் சொல்றேன்னு நினைச்சுக்காதே சாமு, பளிச்’னு ஒரு குங்குமம் நெத்தில வெச்சுக்கறதில்ல. நாகரிகமா இருக்க வேண்டியதுதான். எனக்குந்தான் வீட்டில வராத விருந் தாளியா? ஆனால் என் நியமம், பூஜை, விட்டுடமுடியுமா? ஒரு வெள்ளி, செவ்வாய். மலைக்கோயிலுக்குப் போய் வந்தா என்ன? நீ பண்ணிக் காட்டினால்தானே குழந்தைகளுக்கு வரும்? அதுகளை வச்சிட்டே, பாட்டி மடி, ஆசாரக் குடுக் கைன்னா அதுகளுக்கு மதிப்பு வருமா? நீ ஊரில் இல்ல. உன் அம்மா, பாதிநா ராப்பட்டினிதான்…’
இவளால் இதற்குமேல பொறுக்க இயலவில்லை. அவளுடைய வயிரங்கள் பெரிய குங்குமம், சாயம் பூசிய கறுப்பு முடி, மின்னும் பட்டு எல்லாம் வெறுப்பைக் கிளர்த்திக் கொண்டு வருகின்றன.
“…மாமி உங்களுக்கே இது நல்லாயிருக்கா? ஒரு குடும்பத்தின் நடுவே புகுந்து, இப்படிப் பிரிக்கிறது உங்களுக்கு அழகா? எத்தனை நாள் பட்டினி போட்டேன், பார்த்தீர்கள்?”
‘உனக்கேனம்மா கோபம் வரது? குழந்தைகளை, நாம் தான் நல்லவழியாகக் கொண்டு போகணும். ஒரு ஆடி வெள்ளி, தைவெள்ளின்னு சொல்லி மடி, ஆசாரமா இருக்கச் சொல்லிக் குடுக்கணும்னுதானே சொல்றேன்!…’ கிரிஜா என்ன சொல்கிறோம் என்பதறியாமல் அடிவயிற்றிலிருந்து கத்துகிறாள்.
‘உங்க விழுப்பு, மடி எல்லாம் போலி! தங்கமும் வயிரமும் கடத்திட்டு வந்து, வரி கொடுக்காமல் ஏமாற்றி, பிறத்தியார் வீட்டில் குடுத்துப் பதுக்கி வைக்க, ஒண்ணும் தெரியாத கிழவியை உபயோகிக்க வேஷம் போடுறீங்க! என் குழந்தை களுக்கு வேஷம் போடற மடி தேவையில்ல!’
சாமு பாய்ந்து வந்து அவள் முகத்தில் அறைகிறான்.
‘என்னடி சொல்ற? திமிரெடுத்து எவன் வீட்டிலோ தங்கிட்டு வந்து நிக்கற நாய். என்னடீ பேசற… ?’ கிரியின் கண்களில் தீப்பறக்கிறது.
“இத, பாருங்க! அநாவசியமாக வாயைக் கொட்டாதீங்க! நான் எங்கும் ஒடிப் போகல. நீதான் இந்த வீட்டைத் தாங்கறதா நினைச்சிக்க வேண்டாம்ன்னு என்னை ஒரு விநாடியில் தூக்கி எறிஞ்சு, சோத்தை வீசி எறிஞ்சிட்டுப் போனிங்க! அப்ப உங்கம்மா, இந்த மாமி, யாரும் எனக்கு நியாயம் சொல்ல வரல. நான் வெறும் மழுக்குண்ணிப் பொம்மையில்ல. என் படிப்பு, அறிவு, மனுஷத்தன்மை எல்லாத்தையும் வெட்டிச் சாய்ச்சிட்டு கண்ணை மூடிட்டு உடம்பால் உழைக்கும்படி, சவுக்கடியைவிட மோசமான உள்ளடியினால் கட்டாயப்படுத்தினர்கள். இல்லாட்ட, பதினெட்டு வருஷம் இந்த வீட்டில் அச்சாணியாக உழன்றவளுக்கு நீங்கள் என்ன மதிப்பு கொடுத்தீர்கள்? அது அன்னிக்கு எனக்கு பொறுக்கல. நீங்கள் என்ன செய்தாலும் நான் முழுங்கிட்டு மெஷினாக இருக்கணும்னு பொறுக்காம அன்னிக்கு மனசு விட்டுப் போச்சு. கங்கையைப் பார்க்கப் போனேன். இந்த மாமியும்தான் என்னைப் பார்த்தாள். ஏன் சும்மா இருக்கறீங்க? பிச்சை பண்ணி வைக்க வந்தேள் என்னைப் பார்க்கலியா? இப்படி அபாண்டமா, நாவில் வராத அவதூறுகளைச் சொல்லலாமா?”
‘என்னது? உன்னைப் பார்த்தேனே? நான் எங்க உன்னைப் பார்த்தேன்? என்னைப் பொய்ச்சாட்சி சொல்ல இழுக்காதேம்மா? உன் மூஞ்சிய அன்னிக்கு இங்க வந்தப்ப பார்த்ததுதான், இப்ப பார்க்கிறேன்…’
பெண்ணுக்குப்பெண் காலை வாரிவிட்டு யமனாக நிற்கும் கொடுமையில் கிரிஜா விக்கித்துப் போகிறாள்.
‘மாமி…! நீங்க என்னைப் பார்க்கல! அந்தக் கெளரி அம்மா, பூதப்பாடி உறவுன்னுகூடச் சொன்னதாகச் சொன் னார். அவாகூடப்போய், அவாகூடத்தங்கி அவாகூடத்தான் காலம வந்து இறங்கினேன். நீங்ககூட நம்மாத்துல தங்க லாம். ஆனா நாளை ஃப்ளைட்ல அமெரிக்கா போறோம். குழந்தை கல்யாணம் நிச்சயமாகப் போறதுன்னு சொன்னேளாம்…’
‘ஐயோ என்னென்ன கதை கட்டுகிறாள், பாருங்கோம்மா! சாமு, இத்தனைக்கு வந்தப்புறம்…நம்ம சிநேகமெல்லாம் நீடிக்கறதுக்கில்ல. என்னமோ ஒரு பாசம், பழகின தோஷம் வந்து வந்து பெரியவ பெத்தவ மாதிரின்னு ஏதோ உப்பிலிட்டது. சர்க்கரைன்னு கொண்டு கொடுப்பேன். இனிமே எனக்கென்ன? உங்க வீடு.’
ரோஜா மாமி திரும்பினால் விடுவார்களா!
‘ரோஜா நீ எதுக்குடி வருத்தப்படற! அந்த நாள்ளயே நான் படிச்சு வேலை பண்ற பொண் வேண்டாம்னு இதுக்குத் தான் பயந்தேன். எங்கபெண் படிச்சாப்பலவே காட்டிக்க மாட்டா, பாருங்கோன்னு இவம்மா சொன்னா, இருக்கவும் இருந்தா. இப்ப என்ன போறாத காலமோ, எதெதுகளோ வந்து குழப்பி, திரிய விட்டாச்சு…எல்லாம் என்னால் வந்தது தான். நான் ஒருத்தி மடி ஆசாரம்னு இல்லாம இருந்தா, இஷ்டம்போல போயிண்டிருக்கலாம்…’
‘அம்மா, இத்தனைக்குப் பிறகும் இங்க வந்து இவ இருக்கறதுங்கறது சரிப்படுமா? நீ ஏன் வருத்தப்படறே? இவளுடைய உள்விஷம் எனக்குத்தான் தெரியாமல் போச்சு அவ எங்க வேணாப் போயிக்கட்டும்…ஆமாம்…’ அவன் வெடுக்கென்று உள்ளே செல்கிறான்.
கிரிஜாவினால் இனியும் இந்த வீட்டில் எப்படி இருக்க முடியும்? நாற்பத்தாறு வயசு, மூன்று குழந்தைகளுக்குத்தாய். இவள் குடும்பத்தைவிட்டுப் போனால், உடல் பரமான மாசு களை வீடுவதுதான் நியாயமா? அந்த மாசு ஆணுக்குக் கிடையாது. இல்லை? ஒரு மனிதப்பிறவியான பெண்ணை, இயந் திரத்தையும் விட மேர்சமாக நடத்த ஒர் ஆணுக்கும்.அவனைச் சார்ந்தவர்களுக்கும் உரிமை வழங்கும் ஒர் அமைப்புத்தான் குடும்பம், இந்த மையமான அதிகார உரிமை குவியலை மாற்றமாட்டோம் என்றால், அவள் வெளியேறித்தான் அதைச் சீராக்க முனையவேண்டும்.
அவள் படிகடக்கையில், அம்மா.நீ போறியாம்மா…? என்று பரத் ஓடிவருகிறான். கவிதா நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்புகிறாள். சாரு தந்தைக்கு அஞ்சி ஒதுங்கி நின்றாலும் உதடுகள் துடிக்கின்றன.
‘ஏய், எல்லாம் உள்ள போங்க! பரத். இங்க வா! நீ அம்மா அம்மான்னு போனா ஒண்ணும் கிடையாது. ரிமோட் கன்ட்ரோல் ப்ளேன் வாங்கிட்டு வருவேன். ரோபோ வாங்கித் தருவேன். அம்மாவோட போனால் ஒண்ணும் கிடையாது!’ ஒரு கையில் பிள்ளையைப் பிடித்துக்கொண்டு அவன் ஆசை காட்டி நிபந்தனை விதிக்கும் நேரத்தில் அவள் விடுவிடென்று தெருவில் இறங்கிப் போகிறாள்.
யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
– தொடரும்…
– சுழலில் மிதக்கும் தீபங்கள் (சமூக நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1987, தாகம், சென்னை.