அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம்-7
சாலை ஓரங்களை, கரிய அழுக்குத் தகர ட்ப்பாக்களை மனசில் உருவகப்படுத்திக் கொண்டு வெளியூர் பஸ்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன.
பகல் நேரத்துச் சூரியன், உக்கிரமாக வருத்துகிறது. துணி வியாபாரிகளும், பழ வியாபாரிகளும் இன்னும் வயிற்றுப் பிழைப்புக்காக இஞ்சி முரபாவிலிருந்து ஈறு வாங்கி வரை யிலும் விற்கும் சிறு பொருள் விற்பனையாளரும் கூவும் ஒலிக், கசகசப்புக்கள் செவிகளை நெருக்குகின்றன.
ஆப்பிள் கொட்டிக் கிடக்கும் காலம். வண்டிக்காரன் ஒருவன் அவளை வாங்கச் சொல்லிக் கூவி அழைக்கிறான்.
கிலோ ஐந்து ரூபாய் என்று பேசி வாங்கிப் பைக்குள் போட்டுக் கொள்கிறாள்.
இங்கே நடமாடும் வர்க்கத்தில் இவளைச் சட்டென்று இனம் புரிந்து கொண்டு எங்கே போகிறீர்கள் என்று கேட்க வர மாட்டார்கள்.
கிரிஜாவுக்குப் பய உணர்வும் இல்லை; ஏமாற்றி விட்ட தான எண்ணமும் இல்லை.
முற்றிய நெற்றியில் துளி நீர் பட்டு வெடித்தாற்போல் அவள் அப்போதைக்கு ஒர் ஆசுவாசம் தேடி, அந்தக் கூட்டை விட்டு வந்திருக்கிறாள். இயல்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு பஸ்ஸாகப் பார்த்துக் கொண்டு வருகிறாள்.
டேராடுன்- ருஷி கேசம்- ஹரித்துவாரம்- ரூர்க்கி மீரட்…
இரண்டாண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் காரில் ஹரித்துவாரம், ருஷிகேசம் முதலிய இடங்களுக்கும் பின்னர் காசி, கயை என்றும் சென்றிருந்தார்கள்.
எங்கே போனால் என்ன? மாமியாருக்காக இவள் அடுப்புத் தூக்க வேண்டும். புண்ணியப் பயணம். விடுதலை உணர்வுடன் எதையும் அநுபவிக்க இயலாத மாறுதல்.
அவள் பள்ளியில் வேலை செய்யச் சேர்ந்த முதல் வருஷத்தில், பள்ளித் தலைமை ஆசிரியரான முதியவர், ஒரு வட இந்திய யாத்திரைக்கு அந்த வருஷக் கோடை விடுமுறையில் ஏற்பாடு செய்திருந்தார். ஆறு ஆண்களும், பதினெட்டுப் பெண்களும் சேர்ந்த அந்தக் குழுவில், கிரிஜாவைப்போல் ஐந்து பேர் மணமாகாதவர்கள்.
மற்றவர்கள் கணவன் மனைவியர். நடுத்தர வயதினரும், நடுத்தர வயசைக் கடந்தவர்களும் இருந்தார்கள்.
கிரிஜா, தானும் போகிறேன். ஆயிரத்தைந்நூறு செலவாகிறது என்று கூறியபோது அண்ணன் வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டான்.
“ஆயிரத்தைந்நூறுக்கு ரெண்டு மூணு சவரனாலும் வாங்கலாமே. நாளைக்குக் கல்யாணமானால், போகாமலா இருக்கப் போறே இப்ப எதுக்குடி, அண்ணா சொல்றதும் சரிதானே” என்று அம்மாவும் அவனுக்கு ஒத்துப் பாடினாள்!
“எல்லோரும் போகறப்ப, நான் மட்டும் போகக் கூடாதா? எனக்கொண்ணும் சவரன், நகை வேண்டாம்!’ என்றெல்லாம் முரண்டி, பிடிவாதம் பிடித்து, கெஞ்சி அம்மாவைக் கரைத்து அவள் அந்தப் பயணத்துக்கு அவர்களைச் சம்மதிக்க வைத் தாள்.
கிண்டலும் கேலியுமாக, உமா, கங்கா, பார்வதி சாவித்திரி, அவள் எல்லோரும் எப்படி அநுபவித்தார்கள்! வயசான தலைமை ஆசிரியர் தம்பதியையும் மற்றவர்களையும் குழந்தைகள் போல் சீண்டிக் கொண்டும் பாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஏறக்குறைய ஒரு மாசம் விடுதலையைப் பூரணமாக அநுபவித்த பயணம் அது.
ஹரித்துவாரத்தில் அவர்கள் ‘மதராசி தர்மசாலா’ என்றழைக்கப்பட்ட விடுதியில் தங்கினார்கள். கங்கை பின் வாயிலை அலம்பிக் கொண்டு ஒடும்.
இரண்டாம், மூன்றாம் மாடி முகப்புக்களில் அமர்ந்து கங்கையின் ஒட்டத்தைப் பார்த்தபடி காலம் காலமாக உட்கார்ந்திருக்கத் தோன்றியது!
நினைவில் சில நிமிடங்கள் தோய்ந்து நிற்கிறாள்.
கங்கையின் ஒட்டத்தைப் பார்த்துக் கொண்டே கடந்த காலம் நிகழ்காலம் கட்டுப் படுத்தாத விடுதலையில் அவள் அமைதியாக இருந்த பின், தெளிந்து தன் பிரச்னைக்கு முடிவு காணலாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க இயலாது. குடும்பம்…மெல்லிய இழைகளால் மக்களையும் சுற்றத்தையும் இணைக்கும் நிறுவனம். இது காலம் காலமாக வந்த மரபில் பின்னப்பட்டது. இன்று இராட்சத முட்புதராக அது பெண்ணினத்தை வருத்துகிறதென்றால்…? முதலே தவறா…?
“ஏம்மா? இது ஹரித்துவாரம் போற பஸ்தானே?”
சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள்.
ஒரு முதிய தமிழ்ப் பெண்மணி, வயசான தன் கணவா அவர்களைப் போலவே தோற்றமளிக்கும் பெட்டியுடனும் பையுடனும் நிற்கிறார்கள்.
“ஏம்மா, தமிழ் போல இருக்கியே? தமிழர்தானே? இது ஹரித்துவாரம் போறதா?”
“ஆமாம், போகும், வாங்கோ…”
முதியவரின் கைப்பெட்டியை வாங்கிக் கொண்டு பஸ்ளில் அறர் சொல்கிறாள், பெரியவருக்குக் கண் பார்வை துல்லிய மில்லை போலிருக்கிறது. அவரையும் ஏற்றி விடுகிறார்கள். வசதியாக ஒரு மூன்று பேர் இருக்கையில் அமர்ந்து கொள்கின்றனர்.
“நீயும் அங்கதான் போறியாம்மா? ஆமாம் நீங்க எங்கேருந்து வராப்பல…?”
“நாங்க மதுரைப்பக்கம், கிராமம்…டில்லிக்கு வந்து அஞ்சு நாளாயிட்டது. தூரத்து உறவுகாரப் பையன் கரோல் பாலெ இருக்கான். கொண்டு ஏத்திவிட்ணும்னா, ஆபீசில லீவு கிடைக்கல. ஆட்டோ வச்சிட்டுப் போங்கோ. அவனே பஸ் நிறுத்தத்துல கொண்டு விட்டுடுவான். ஹரித்துவாரத்துக்கு அரை மணிக்கொரு பஸ் போறது, சிரமமில்லைன்னு சொன்னான். நாம்ப கேட்டா யார் லட்சியம் பண்ணிச் சொல்றா? இந்த பஸ் போகும்ன்னா, ஆனா இங்கிலீஷில வேற என்னவோன்னா போட்டிருக்கு? எச் எழுத்தில்லையே, இந்தி படிக்கத் தெரியாது…நல்ல வேளை, நீ தமிழ் பேசற வளாக் கிடைச்சே…ஏதோ ஸ்வாமி இருக்கார்!” அம்மாள் பொரிந்து தள்ளுகிறார்.
பருமனும் வெள்ளை மஸ்லின் சேலைக்கட்டுமாக, குஜராத்திப் பெண்கள், ஆண்கள், முக்காடும், முன்வகிற்றுக் குங்குமக் கீற்றுமாக உத்தர்ப்பிரதேசத்துப் பெண்கள், உச்சியில் குடுமி இழைகள் தனித்து இலங்க, கிராமத்து ஆடவர், குழந்தைகள் என்று பஸ் நிறைந்து விடுகிறது.
கிரிஜா இத்தகைய உலகத்துக்கு ஒரு காலத்தில் பழக்கப் பட்டிருந்தாள். இப்போது மீண்டு வந்திருக்கிறாள். என்றுமே இத்தகைய சூழலுக்கு இவள் அந்நியப்பட மாட்டாள்.
“எத்தனை மணிக்குக் கிளப்புவானோ?”
“கித்னே பஜேகோ பஸ் நிகல் தி ஹை”?
“ஏக் கண்டேகோ…” என்று அடுத்த வரிசைக்காரன் மறு மொழி கொடுக்கிறான்.
ஸாடே பாங்ச்…சே…பஜேகோ…பஹீஞ்ச்தீ!
“ஆறு மணிக்குள்ள போயிடும்மா…?”
“இருட்டறதுக்குள்ள போயிட்டாத் தேவல. எங்கிட்ட ஒரு லெட்டர் வாங்கிக் குடுத்திருக்கிறான் அந்தப் பிள்ளை, பூரீ மடத்துக்குச் சொந்தமான சத்திரத்தில தங்கிக்கலாம்னு. மூணு நாள் சாப்பாடும் போடுவாளாம். நீ எங்கே போறேம்மா வேலையாயிருக்காப்பல..?”
“…ஆ…டீச்சரா வேலை பாக்கிறவதான். இப்ப டெல்லில இருக்கேன். சும்மா ஒரு ஆறுதலா ரெண்டு நாள் ஹரித்து வாரத்தில் தங்கி கங்கையைப் பார்க்கணும்னு தோணித்து, வரேன்…” எங்க தங்குவியோ?…
“…சிநேகிதா இருக்கா. எங்கானும் இல்லாட்ட தரும சாலாவில தங்கணும். அதொண்ணும் கஷ்டமில்ல மாமி!”
வண்டியோட்டியும் நடத்துனரும் வந்து விட்டார்கள்.
இறுக்கங்களைக் கரைத்துக் கொண்டு பஸ் நகரைக் கடந்து செல்கிறது. யமுனைப்பாலம். யமுனையில் தண்ணிர் பெருகி ஒடுகிறது.
‘யமுனைத்தாயே! கிருஷ்ண கிருஷ்ணா! ஜலத்தைப் பார்க்கவே பரவசமா இருக்கு. கிருஷ்ணா, கோதாவரி, எல்லாம் ராத்திரில முழிச்சிண்டு பார்த்தேன். நர்மதை வந்ததுன்னா, எனக்கு எதுன்னு தெரியல. கோடிச்சுக் கோடிச்சு, ஆயுசின் கடைசிக் கட்டமா ஊன்.ரவிட்டுக் கிளம்பி வந்துட்டோம். இதுவரையும் எப்படி எப்படியோ சிரம மில்லாம எல்லாம் பார்த்துட்டோம். பத்ரிக்குப் போகணும்னு ஆசைப்படல. அரித்துவாரம் ருஷிகேசம் பார்த்து கங்கையில ஸ்நானம் பண்ணனும்! ரொம்ப இழுக்கும். ஜாக்கிரதையா சங்கிலியப் புடிச்சிண்டு குளிக்கனும்னா. ஸ்வாமிகள் வேற இப்ப அங்க இருக்காளாம்…!”
அந்தம்மாள் வாயோயாமல் பேசுவது இவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.
மீரட்டில் வண்டி நிற்கையில், பையைத் திறந்து ஒரு பிளாஸ்கை எடுக்கிறாள். காப்பியை மேல் மூடியில் ஊற்றி, கனவனிடம் “காப்பி குடிச்சுக்குங்கோ!” என்று கொடுக்கிறாள். அவருக்கு மூடி பிடிக்கக்கூட கை நடுங்குகிறது. இவளே பிடித்துக் கொண்டு குடிக்கச் செய்கிறாள்.
பிறகு உள்ளேயிருக்கும் சிறிய மூடி போன்ற பிளாஸ்டிக் ‘கப்’பில் சிறிது காப்பியை ஊற்றி கிரிஜாவிடம் நீட்டுகிறாள்; “இந்தாம்மா நீயும் ஒருவாய் குடிச்சுக்கோ.”
“நீங்க குடிங்க மாமி! என்கிட்டே பழம் வாங்கி வைச்சிருக்கேன்.”
“இருக்கட்டும். நிறைய இருக்கு-காபி. அத்தனையுமா குடிக்கப் போறேன்? ஆளுக்குக் கொஞ்சம்…டில்லியிலே பால் ரொம்ப நன்னாயிருக்கு…”
கிரிஜா தட்ட முமுடியாமல் காபியை வாங்கிப் பருகுகிறாள்.
இப்படிப் பரிவுடன் யார் அவளுக்கு காபி ஊற்றிக் கொடுத்திருக்கிறார்சுள்? அந்த இதமே அதன் சுவையாக நாவில் பரிமளிக்கிறது!
இரண்டாவது பாகம்
ஹரித்துவாரம் சென்றடையும்முன் முதியவள் கிரிஜாவுக்கு மிக நெருக்கமானாற் போன்று ஒட்டி விடுகிறாள்.
பழைய கிராம முன்சீபு பரம்பரையாம். முதியவள் ஆறு குழந்தைகள் பெற்றாளாம். ஒன்றுகூடத் தங்கவில்லை. ஆறு மாசம், இரண்டு வயசு, நான்கு வயசு, என்று வளர்த்து மூன்று பிள்ளைகளும், பிறந்த உடன் இரண்டு பெண்களையும் இருபது நாளில் வயிற்றுப்போக்கு வந்து, ஒரு பெண்னையும் பறிகொடுத்தாளாம்.
கிழவருக்கு முன்சீபு என்கிற அதிகாரச் செருக்கும். ஆணவமும் சாதித் திமிரும் அதிகம் உள்ளவர் என்பதை அவள் பேச்சில் இருந்து உணர முடிகிறது. மாமியார் தொண்ணுறு வயசு வாழ்ந்து இவளை வறுத்தெடுத்தாள். இவருடைய அதிகாரம்… சாதி காரணமாக, கிராமத்தில் பட்ட துன்பங்களும் இடிபாடுகளும் விவரிப்பதற்கில்லை. ஒரு பழைய வீடும், கறம்பை தட்டிய பூமியும் கொஞ்சம் உடமைகள். அவற்றை மைத்துனர் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். அவனிடம் பெற்ற பணத்தைக் கொண்டுதான் வாழ்க்கையின் பயனாகக் கருதும் இந்த கங்கை யாத்திரைக்கு இவள் வந்திருக்கிறாள்.
‘இப்ப பொட்டிப்பாம்பாக, சாதுவாட்டம் உட்கார்ந்திருக்காரேன்னு நினைக்காதேம்மா! வச்சிண்டே சொல்றேன். அம்மா பேச்சைக் கேட்டுண்டு விறகு கட்டையால அடிச்சிருக்கார்…சாதிகெட்டபய, அந்தத் தாசில்தாரன்னார். அவன் சஸ்பென்ட் பண்ணி வச்சிட்டான், ஆயிரம் காரணம் சொல்லி …ஒரு கஷ்டமா, ரெண்டு கஷ்டமா?…
கிழவர், முழு வழுக்கையாய்ச் சுருங்கி, கண் பார்வையும் மங்கிவிட்ட நிலையில் நடுக்கமும் குறுக்கமுமாக ஒரு பழுப்புச் சட்டை, பழைய கம்பளித் துண்டுக்குள் ஒடுங்கி, மனைவியே ஊன்று கோலாக, துணையாக, ஆதரவாக உட்கார்ந்திருந்கிறார்.
சாமு….அவனை இப்படிக் கற்பனை செய்ய முடியுமாக் கிழவரின் யுகம் அது வேறு: இது வேறு.
அந்தக் காலத்தில் சாதிச் செருக்கு, பரம்பரை அதிகாரத் திமிர் இருக்கலாம். இப்போது. இது பணத்திமிர்-பணச் செருக்கு. ஆடம்பரம்…
விறகுக் கட்டையால் அடித்தவனை இன்னமும், அதை காப்பதுபோல் o பாதுகாக்கிறாள். அது கொடுத்திருக்கும் வினாத்தாளைப்பற்றி இவளிடம் சொன்னால், என்ன எதி ரொலி இவளிடம் இருந்து வரும் என்று கிரி நினைத்துப் பார்க்கிறாள்.
புருஷனாகப் பட்டவன், துாலமாகவும் சூக்குமமாகவும் அலைகடல் துரும்பாய் ஆக்கப்படும் பெண்ணுக்கு அடைக்கல்ம் என்று அவளுள் பதிக்கப்பட்டிருக்கிறது. அடிப்பதும் அழுத்து வதும் அதிகாரம் செய்வதும் அவன் உரிமை; சேவிப்பதும், பூசிப்பதும், பாதுகாப்பதும் இவள் கடமை. இந்தம்மாளுக்கு இந்தக் கணவன் இல்லையென்றால் சொத்துமில்லை; பத்து மில்லை. புருஷனை விலக்கினால் மைத்துனருமில்லை. அவர் மக்களுமில்லை. பிள்ளையில்லை. பெண் இருந்தால்கூட இவர்களுக்குச் சொந்தமில்லை: அவள் தன்னைக் கட்டியவனுககு அடிமையாவாள்.
ஹரித்துவாரத்துக்கு வந்து நிற்கையில் அந்திமயங்கும் நேரம். கிரிஜாவுக்கு இந்தி தெரிந்திருப்பது இவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. ஒரு ரிக்ஷாவைப் பேசுகிறாள்.
‘நீயும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகத்தானேம்மா வந்திருக்கே? எங்ககூட இருந்துக்கோயேன்? எனக்கு அவாளை இவாளைப் பார்த்துக் கேட்க வேண்டாமே?…’
இந்தச் சொல்லுக்குக் காத்திருந்தாற்போல இன்னொரு ரிக்ஷாவையும் பேசுகிறாள்.
முன்பு தங்கிய அதே விடுதிதான். இந்நாள் கைமாறி இருக்கிறது. பின்புறத்துப் படிகளில் கங்கை பெருகி ஓடுகிறது. சில்லென்ற நீர் பட்டதுமே உடல் சிலிர்க்கிறது: உள்ளத்தில் அது உணர்வின் வெள்ளமாகப் பாய்கிறது.
தீப ஆரத்தி விடும் நேரம்.
கெளரி அம்மாள், கணவரைப் படியில் உட்கார்த்தி வைத்து, புனித கங்கையைச் செம்பால் எடுத்தி ஊற்றி நீராட்டுகிறாள்.
கிரிஜா, அவர்கள் மூட்டைகளுடன் பையை வைத்து விட்டு வெளியே வந்து, அகன்ற படித்துறையில் அமர்ந்து கங்கையின் ஓட்டத்தில் ஒன்றிப் போகிறாள்.’கடந்த காலம், நிகழ்காலம் என்ற உணர்வுகள் கரைகின்றன.
அத்தியாயம்-8
காலையில் அவர்கள் இருவரும் எழுந்திருக்கும் முன் கிரிஜாவுக்கு விழிப்பு வந்து விடுகிறது. பல்லைத் துலக்கி விட்டு மாற்றுச் சேலையை எடுத்துக்கொண்டு ‘ஹரி கிபைரி’யை நாடி நடக்கிறாள். கங்கையை ஒட்டிய சந்தில் உள்ள கடைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியக் கலாசாரத்தின் இழைகள் சமயத் தறியில்தான் பின்னப் படுகின்றன. பெண்கள் விரும்பும் அணிமணிகள், சேலை துணிகள், பாத்திரங்கள், யாத்திரீகர்களுக்குத் தேவையான பெட்டிகள், மற்றும் கங்கைநீர் முகர்ந்து செல்ல உதவும் அலுமினியத் தூக்குகள், பித்தளைச் செம்புகள், பிளாஸ்டிக் கேன்கள் பூசனைக்குரிய பல்வேறு வெங்கலப்படிமங்கள்… என்று முடிவேயில்லை; மிட்டாய்க் கடைகளில் புதிய நெருப்பு புகைகிறது. புதியபால் வந்து இறங்குகிறது. ஏற்கெனவே ஒரடுப்பில் பெரிய இரும்பு வாணலியில் பால் காய்கிறது…சந்து நெடுகிலும் மக்கள். இனம் புரிந்து கொள்ளும் படியான மொழி பல்வேறு பிரதேச மக்களின் கலவையாக நீண்டு செல்கிறது, சந்து. குடும்பத்தவர், துறவியர், இளைஞர், முதியோர், அப்போது தான் இரயிலில் வந்து இறங்கியவர் களாக மூட்டை முடிச்சுக்களைச் சுமந்தவர்கள், இந்தக் கரைதான் வாழ்வே என்று ஊறிப் போனவர்கள்…
‘ஹரியின் பாதங்க’ளென அழைக்கப் பெறும் படித் துறையின் மேல் சலவைக்கற்றரையின் சிறு சிறு கோயில்களும் ஈரம்பிழியும் மக்களும், பிச்சைக்காரரும் தருமதாதாக்களும் பணியாளரும் குழுமும் கட்டம்.
கிரிஜாவுக்கு இந்த முகமறியாக் கூட்டம் தன்னை மறந்த மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது.
மாற்றுச் சேலையை ஒரு படியில் வைக்கிறாள். நீராடி முடித்த ஒரு வங்க மூதாட்டி அமர்ந்திருக்கிறாள். ‘இது இங்கே இருக்கட்டும்…!’
அவள் தலையை ஆட்டி ஆமோதிக்கிறாள். படிகளின் மேல் நிற்கையிலேயே கங்கையின் இழுத்துச் செல்லும் வேக ஒட்டம் மனசுள் அச்சத்தை ஊட்டுகிறது. குளம் போல் தடுக்கப்பட்ட நிலையிலும் இந்த ஒட்டம் காலை வைத்தால் இழுக்கிறதே? அப்பால் சங்கிலிக் கட்டைகள் தாங்கிகள் எதுவும் மிச்சமில்லை. எல்லாவற்றையும் பெருகி வரும் கங்கை அடித்துச் சென்று விட்டதோ? சேலையை வரிந்து கொண்டு இவள் தயங்கியவாறு இறங்குகிறாள். இழுப்பு…
அருகிலே, பெரிய ஒட்டுக் குங்குமத்துடன் ஒரு குஜராத்தி நங்கை கோலாகலமாக ஒரு மூதாட்டியின் கையைப் பற்றிக் கொண்டு நீராட உதவுகிறாள்! ‘ஆவோஜி ஆவோ..!’
இரண்டு மூன்று நான்கு பேர்களாகக் கைகளைப் பற்றிக் கொண்டு ஒட்டத்தைச் சமாளித்து மூழ்கி எழுந்திருக்கின்றனர். இந்த வளையத்தை விடாமல் வைத்து இயக்கும் நங்கையின் உற்சாகத்துக்கு அளவேயில்லை. அவள் கணவனோ, சகோதரனோ தெரியவில்லை. ஓர் இளைஞன், நீராடலுக்கு இடையே படியில் அமர்ந்து காட்சிகளை ரசிக்கிறான்.
கிரிஜா தயங்கி நிற்பதைக் கண்டு, ‘ஆவோஜி ஹாத் பகட்லியே!’ என்று ஊக்குகிறான். ‘ஆவோஜி! ஆவோஜி!’ என்று நங்கை கைநீட்டிக் கோர்த்துக் கொள்கிறாள்.
மூழ்கு…! மூழ்கு….! கங்கை.. கங்கையே இது என்ன புத்துணர்வு? இதுதான் பேரின்பமோ? எல்லாத் துன்பங்களையும், எல்லாக் குழப்பங்களையும் அடித்துச் சென்று தெளிவும் துலக்கமும் தரும் இந்த ஒட்டம். இதில் போகாமல் பத்திரமாக இருக்கிறோம் என்ற கைப்பிணைப்புக்கள்.
மூழ்கி…! மூழ்கி…!
இவர்களைப் பிணைத்துக் கொண்டு நீரில் ஆடும் நங்கைக்குத் தலை முழுகத் தெரியவில்லைதான். ஆனால், ஆவோஜி ஆவோஜி! என்றழைத்துப் புதிய புதிய மக்களை வட்டத்தில் கோர்க்கிறாள். இளைஞர், சிறுமி, முதியவர். எல்லோருடைய அச்சத்தையும் விரட்டும், கை ஆதரவாய்ப் பிணைக்கிறாள். இங்கே மொழியும் இனமும், பிராந்தியமும் அடிபட்டு, ஒரே ஒட்டத்தில் சங்கமமாகின்றன.
இந்த நிமிடங்களாகிய நேரம். இந்த கைப்பிணைப்புக்கள் தரும் பத்திர உணர்வு. இந்த ஓட்டம். இந்தப் புத்துணர்வு தரும் நீராடல்.எல்லாம் சத்தியம். இங்கு தாழ்ந்த சாதி: உயர்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர், கிழக்கு மேற்கு வடக்கு, தெற்கு எதுவும் இல்லை. கரையில் ஏறியபின் மீண்டும் வந்து இந்தக் கைப்பிணைப்பில் இணைகின்றனர்.
‘…இதோ இருக்காளே? ஏம்மா? ஒருவார்த்தை சொல்விட்டு வரக்கூடாதா?…’
கிரிஜா திரும்பிப் பார்க்கிறாள்.
கெளரியம்மாள், கணவனைக் கையைப்பற்றி அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.
‘நீங்க, மாமா எழுந்து, அவரைக் கூப்பிட்டு வர நேர மாகும்னு நான் வந்துட்டேன். உங்களுக்கு வழி தெரிஞ்சதில்லையா?…’
‘…இங்கியும் இழுப்புத்தானே இருக்கு….?’
இதற்குள் குஜராத்திப் பெண்ணின் உற்சாகம் பஞ்சாபிக் காரிக்குத் தொற்றிவிட, ஆயியே… ஜி…’ என்று கையை நீட்டுகிறாள்.
‘மாமி, இப்படி வாங்கோ, கையைப் புடிச்சிட்டு நாலைஞ்சு பேராக ஸ்நானம் பண்ணுறது ரொம்ப சுகமாயிருக்கு. கங்கைக் கரைக்கு வந்து செப்பில் முகர்ந்து விடுவதா? மாமா? வாங்க! மாமி கையெப் பிடிச்சுக்குங்கோ…’
உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகிறது. இந்த வளையத் தில் இப்போது கிழவரின் மறு கையைப் பற்றிக் கொள்ள ஒர் இளைஞன் வருகிறான், அவன் மனைவி மறுகை. இடையில் இரு தம்பதியரையும் இணைக்கும் கிரிஜா-மூழ்கி மூழ்கி அந்தப் பரவசத்தில் திளைக்கின்றனர்.
கெளரி அம்மாள் ‘கங்கே, யமுனே, சரஸ்வதி, காவேரி, பவானி என்று எல்லா நதிகளையும். சங்கமிக்க வைக்கும்படி சொல்லிச் சொல்லி மூழ்குகிறாள். நீரோட்டம் புதுமையாக வருகிறது; புதிதுபுதிதாக மனிதர்கள் இணைவதும், கரையேறு வதும் புத்துணர்வின் அலைகளாய்ப் பிரவகிக்கின்றன.
கிரிஜா பழைய கிலேசங்கள் சுத்தமாகத் துடைக்கப்பட, தன்னைப் புதிய கன்னியாக உணருகிறாள்.
மூன்று நாட்கள் கங்கை நீராடலும் கரையில் திரிதலுமாக ஒடிப் போகின்றன. விடுதலையின் இன்ப அமைதியைக் சூழந்தைபோல அநுபவிக்கிறாள்.
அத்தியாயம்-9
நான்காம் நாள் மாலையில் கிரிஜா, பாலத்தருகில் படித்துறையில், கால்களை நீரில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். சின்னஞ்சிறு இலைப்பகுதிகளில், பூக்களின் இடையே, தீப ஒளிகள் மிதந்துவரத் தொடங்குகின்றன. ஒ… மாலை ஆரத்தி…
காவித் துறவியானாலும், கட்டழகியானாலும், பஞ்சுப் பிசிறுகளாய் நரைத்துத் தேய்ந்த கிழவியானாலும்,
இந்தத் தீப வழிபாட்டை நீர்ப்பெருக்குக் காணிக்கை யாக்குகின்றனர்.
அந்தத் தீபங்கள் இலை, மலர், சுற்றிலும் முழுக்கும் நீர், என்றாலும் இலைநடுவே சில ஒளித்திரிகள் சங்கிலியை அறுக்கும் வேக ஒட்டத்திலும் சுழிப்பிலும் அணையாமல் செல் கின்றன. பாலம் கடந்து சுழற்சியிலும் வீழ்ச்சியிலும் கூட அணையாது செல்லும் தீபங்கள் பாலம் கடந்து வந்தாலே அவற்றைக் குழந்தைபோல் வாழ்த்துகிறது உள்ளம்.
நாள்முழுதும் அவசரத்திலும் பரபரப்பிலும் திரியும் இளம் தலைமுறையினரை நினைக்கிறாள்.
கவியும் சாருவும் அறையில் எப்போதும் பரபரப்பான ‘ட்ரம்’ ஆட்டபட்ட இசையைப் போட்டுக்கொண்டு பழகுகிறார்கள். அமைதியாக இருத்தல், போர் என்று அலுப்பூட்டுவதாகக் குடைகிறது. தந்தை ‘வாக்மன்’ செட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த அமைதி கூட்டாத வெளி இசையைக் காதுக்குள் வாங்கி வேறு அநுபவிக்க வேண்டுமா? அதைப் போட்டுக் கொண்டு, பாடம் படிக்கிறாள்…அந்தக் குழந்தைகள் வாழ்க்கையாகிய இந்த நீரோட்டத்தில்,எதிர்காலமாகிய ஒளித்திரியை எப்படி ஏந்திச் செல்லப் போகிறார்கள்?
‘டிச்சர்…? நீங்க கிரிஜா டீச்சரில்லே?…’
திடுக்கிட்டாற் போல கிரிஜா திரும்புகிறாள். கூப்பிட்ட இளைஞன், வற்றி மெலிந்த உடலில் முப்புரி நூல் ஒட்டாம லிருக்க ஒற்றைச் சுற்று வேட்டியுடன் காட்சியளிக்கிறான். கருவலான உடல்வாகு. மொட்டையான தலையின் உச்சியில் வட இந்தியச் சமயாசாரச் சின்னமான இரண்டொரு முடி நீட்டிக் கொண்டிருக்கிறது.
‘யாரப்பா..? எனக்குப் புரியலியே?…’
‘நீங்க கிரிஜா டீச்சர் தானே?’
‘ஆமாம்.?’
‘நான்தான் டீச்சர், தருமராஜன், நீங்க தருமம்னு கூப்பிடுவேள்… சாவித்திரி மாமி பிள்ளை… நினைப்பில்லையா…?’
‘ஒ…!’
அவனுடைய தாய் நினைவில் வருகிறாள். வரிசையாக எட்டுக் குழந்தைகளுக்குத் தாய். புரோகிதப் பரம்பரையில் வந்து, ‘சரஸ்வதி’யின் பார்வையை எந்த வகையிலும் பெறாமல், வெறும் தீனிப் பட்டறையாக வயிறு வளர்த்து, அதன் காரணமாக நோயிலே வீழ்ந்த தந்தை. அவனுடன் எட்டுக் குழந்தைகளையும் காப்பாற்ற, கல்லுரலைக் கட்டி இழுத்து, அப்பளக் குழவியை ஒட்டி, இரும்புலக்கை பிடித்து, தன்னைக் கரைத்துக் கொண்டிருந்த அந்த அன்னை-கிரிஜாவுக்கு அவ்வப்போது வந்து உதவுவாள். இந்தத் தருமனுக்கும் இவன் சகோதரி விமலுவுக்கும் கல்வி பயிற்றும் பொறுப்பை அவள் ஏற்றிருந்தாள்.
விமலு தட்டிமுட்டி ஒன்பது வரை தேறி வந்தாள். இவன் ஏழையே தாண்டவில்லை.
‘அம்மா செத்துப் போயிட்டா டீச்சர். அப்பாவும் அப்பவே போயிட்டார். நாணா கல்யாணம் பண்ணிண்டு பங்களூர் போயிட்டான். விமலுதான் கான்வெண்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. சிவகாமி, சச்சு, ராஜூ எல்லாரும் ஊரில் இருக்கா, நான் இப்படி ஸ்வாமிகளோட வந்துட்டேன்…’
‘…இங்க நீ என்ன பண்ணுவே? வெறும சாப்பாடு போடுவாளா?’
‘இல்ல உச்சர், எடுபிடியா ஏவிய காரியமெல்லாம் செய்யனும்…நீங்க டில்லிலேந்து வந்திருக்கேளா டீச்சர்…?’
‘ஆமாம்…’
‘நீங்க ஸ்வாமிகளக் கிட்டப் பார்த்துப் பேசினேளா டிச்சர்…?’
அவள் தண்ணிரைப் பார்க்கிறாள். இந்த சத்தியங்களுக் கப்பால் எந்த நினைப்பும் எனக்கு இல்லை என்பதை எப்படிச் சொல்வது?
‘நீங்க வாங்க டீச்சர். நான் கிட்டக் கூட்டிட்டுப் போய்த் தரிசனம் பண்ணி வைக்கிறேன்…’
தன்னாலும் அவளுக்கு ஏதேனும் செய்ய முடியும் என்ற ஆர்வம், அவன் முகத்தில் ஒளிவிடுகிறது.
‘இருக்கட்டும்பா, சந்தோஷம். நான் வரப்ப சொல்றேன்…’
‘…நான்…அதோ, அந்தக் கட்டிடத்தின் முன்புற ரூமில் தான் அநேகமா இருப்பேன்…பூஜையின்போது வாங்கோ டீச்சர்…!’
வாழ்க்கை எந்தெந்த வகைகளில் மனிதர்களைத் திசை திருப்புகின்றன! இந்தப் பையனின் மனித நம்பிக்கையை மதிப்பதற்காகவேனும் அவள் அவன் சொல்லும் பூஜைக்குப் போகவேண்டும்!
அன்று கெளரியம்மாளும் கணவரும் இரவு உறங்க வர நேரமாகிறது.
‘ஏம்மா? உன்னைத் தேடினேன். காணலை, ருஷிகேசம் போயிட்டு வந்தோம். கங்கையை எங்கே பார்த்தாலும் அவ்வளவு அழகாயிருக்கு. அக்கரைக்கும் இவரை நடத்திக் கூட்டிண்டு போனேன். கோவிலெல்லாம் பார்த்தாச்சு…நாலு நாள் முழுசாயிட்டுது. ஒரே ஒரு குறைதான் ஆனால்…’
‘என்ன மாமி?…கங்கைக் கரைக்கு வந்துட்டுக் குறை யோடு போறது?’
சுவாமிகளக் கிட்டத்தில் பாக்கணும். இவருக்கு ரெண்டு வார்த்தை பேசணும்னு ஆசை. எங்க மாமனார் இருக்கறச்ச எங்க ஊருக்கு வநது பூஜையே நடந்திருக்கு. முன்சீப்போ இல்லையோ? எல்லாம் இவா கைதான். அவர் பேர் சொன்னாலே சுவாமிகளுக்குத் தெரியும். சொல்வி ஆசிர்வாதம் வாங்கிக்கணும்னு …’
‘ஒ, இதுதானா மாமி?…நாளக்கிக் காலம நான் ஏற்பாடு செய்யறேன். இங்க ஒரு பையன் இருக்கிறான். அவன் என் பழைய ஸ்டுடன்ட். கஷ்டமேயில்லை…!’
மறுநாள் காலையில் ஏழரை மணிக்குள் நீராடல், காபி எல்லாம் முடித்துக் கொண்டுவிட்டார்கள். தட்டில் சீப்புப் பழம், கற்கண்டு என்று காணிக்கைப் பொருட்களை ஏந்திக் கொண்டு தருமராஜன் குறிப்பிட்ட விடுதிப் பக்கம் வருகிறார்கள். கிரிஜா உள்ளே செல்கிறாள்.
‘தருமராஜன் இருக்கிறாரா…’
அது அலுவலக அறை போலிருக்கிறது. மூக்குக் கண்ணாடிக்காரர் ஒருவர், தரைச்சாய்வு மேசையின் பக்கமிருந்து அவளை ஏறிட்டுப் பார்க்கிறார்.
‘தருமராஜனா? … அப்படி இங்கு யாரும் இல்லை… நீங்க யாரு?… எங்கேருந்து வராப்பல?’
‘நா…ன் எனக்கு…டெல்லிலேந்து இப்ப வரேன்…’ அவள் தயங்கிச் சொல்லி முடிக்குமுன் உள்ளிருந்து தருமனே வந்து விடுகிறான்.
‘அடடா, வாங்க உச்சர், வாங்க!… சுவாமிகளப் பார்க்கணுமா?’
‘இவனைத்தான் கேட்டேளா.. அவருடைய ஆர்வம் விழுந்து விடுகிறது. ஏண்டா, உன்பேர் தருமராஜனா?. இவன அசட்டுப் பிச்சன்னு கூப்பிட்டாத்தான் தெரியும்; இவனுக்கு இப்படி நேர்மாறாக ஒருபேரை ஏத்திவச்சா…?
‘நீங்க வாங்க உச்சர்…! அவா…எங்க டீச்சர், மாமா, பெரிய… டீச்சர். இங்க டில்லில இருக்கா…’
‘சரி சரி கூட்டிண்டுபோ.’
கிரிஜா, கெளரியம்மாள், நியம ஆசாரங்கள் துலங்கும் கோலத்துடன் அவள் கணவர் ஆகியோருடன் அவன்முன் செல்கிறாள்.
சுவாமிகள் வீற்றிருக்கும் இடத்தில் கைகட்டி வாய் பொத்தி இருவர் உடன் இருக்கின்றனர். அவருக்கு முன் அடுக் கான கோப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வேறொருவர் அவர் வீற்றிருக்கும் பலகையின் கீழ், பணிவாக, அவர் பணிக்கும் உத்தரவுகளை ஏற்று கோப்புக் கடிதங் களுக்குப் பதில் எழுதச் சித்தமாக அமர்ந்திருக்கிறார். ஜன்ன லாகத் தெரியும் வாயிலின் முன் இவர்கள் நிற்கின்றனர். கெளரியம்மாளின் கணவர், ஏதோ வடமொழி சுலோகத்தை முணமுணப்பைவிட உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக் கிறார். சுவாமிகளுக்கு முன், பணிவும் குறுகலுமாகக் கூனிக் கைகுவித்து தருமன் நிற்கிறான். ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் என்று ஒடுகின்றன. இவர்கள் நிற்பதை அறிந்தாற் போலவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. கிரிஜா தருமனின் செவியில் சுெகிசுக்கிறாள்.
‘தருமா, இப்ப நேரமில்லைன்னா, பின்னாடி பார்க்கலாமே?’ அவன் சாடையாக, ‘இப்ப முடிஞ்சிடும் டீச்சர்… என்று சொல்வதற்குள் ஒராள் ஒரு மூட்டை அரிசியைச் சுமந்து கொண்டு வந்து காணிக்கைபோல் வைக்கிறான். அந்தச் சிறு சார்ப்பில் தட்டுத்தட்டாக, ஆப்பிள், கொய்யா. மாதுளை, வாழை என்று கனிகள் வருகின்றன. கற்கண்டு, பாதாம், திராட்சை, பறங்கி, பூசணி, வெண்டை, பருப்பு, போன்ற சாமான்கள் வந்து நிறைகின்றன. கூடவே சானல் சென்ட் மணம்…ஒ…ரோஜாமாமியும் அவள் கணவரும்தான்!
கிரிஜா திடுக்கிட்டாற்போல் ஒரமாக ஒண்டிக் கொள்கிறாள். எப்படி நிகழ்ந்ததென்றே தெரியாமல் சுவாமிகள் முகம் மலரத் திரும்பிப் பார்க்க, அவர்கள் இருவரும் விழுந்து வணங்குகின்றனர். ரோஜாமாமி, வயிரங்கள் டாலடிக்க, சாயம் பூசிய கூந்தல், நீராடிய ஈரத்துடன் பூ முடிச்சாய்ப் புரள, சாதியை அறிவுறுத்தும் ஆசாரச்சேலைக்கட்டுடன், பணிவாக நிற்கிறாள்.
‘மலைபோல வந்தது, ஸ்வாமி அநுக்ரகத்தால் பணிபோல போயிட்டுது…’
மாமி கண்ணிர் தழுதழுக்கக் கரைகிறாள்.
‘எல்லாரும் க்ஷேமந்தானே?’
‘ஆமாம், குழந்தைக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு; பெண்ணும் ஸ்டேட்ஸ்லதான் இருக்கா’
‘ராமகிருஷ்ணன்னு… யு. எஸ். ஏ. ல. இருக்கார். அவர் பொண்…பெரியவா ஆசீர்வாதம், தோணித்து, பார்க்கணும் பிட்சை பண்ணி வைக்கணும்னு…’
மாமாவும் மாமியும் விழுந்து பணிய, சுவாமிகள் குங்கும அட்சதை பிரசாதம் கொடுத்து ஆசி வழங்குகிறார்.
நெருக்கி அடித்துக் கொண்டு நிற்காமல் கிரிஜா வேறொரு பக்கம் நகர்ந்து கொள்கிறாள். இந்த அட்சதைப் பிரசா தத்தை கெளரி அம்மாளும் வாங்கிக் கொள்கிறாள்… மடமட வென்று சாமான்கள் அகற்றப்படுகின்றன.
‘எல்லாரும் நகருங்கோ சுவாமிகள் பூஜைக்குப் போகிறார்…!’ விரட்டி அடிப்பதுபோல் ஒரு காவலாளி அந்தச் சிறு சார்ப்பில் யாரும் நிற்காதபடி விலக்குகிறான்.
கிரிஜா வெளியே வந்து விட்டாள். முக்குக் கண்ணாடி எழுத்தர் யாரிடமோ சொல்வது காதில் விழுகிறது.
‘ஸ்டீல் ஸெகரிடரியா இருந்து இப்பதா ரிடயர் ஆகி எதுக்கோ சேர்மனா இருக்கார். அவா, அந்தம்மா, ரெண்டு பேருக்கும் ரொம்ப ஈடுபாடு. அந்தம்மாவும் சும்மா சொல்லக் கூடாது, எப்ப போனாலும் டில்லில சாப்பிடாம விடமாட்டா, ரொம்ப தாராளம். பணம் பதவி இருக்கிறவாகிட்ட இப்படி ஒரு குணம் பார்க்க முடியாது… என்றவர் குரலைத் தாழ்த்திக் கொண்டு, இப்ப ஸி. பி. ஐ. ரெய்டுன்னு ஒண்ணச் சொல்லி வேண்டாதவாளுக்கு ஒரு பேர்க்குழப்பம் கொண்டுவரது வழக்கமாப் போச்சு… இவா தெக்குத்திக் காரான்னு பொறாமை புடிச்சவன் எவனோ கிளப்பி விட்டுட்டான். ஒரு சுக்குமில்ல… கைங்கர்ய சிரோமனின்னு படடமே குடுத் திருக்கே? அவாளுக்குச் சோதனைன்னு வரதுதான் சகஜமாப் போயிட்டுது… அதான் தோணித்து, ஒடனே காரைப் போட்டுண்டு பிட்சை பண்ணி வைக்கணும்னு ஓடி வந்துட்டா…’
கிரிஜாவுக்குக் கால்கள் அங்கேயே நிலைக்கின்றன.
ஸி. பி. ஜ. ரெய்ட்…மூளையில் மின்னல்கள் பளிச்சிடுகின்றன. அந்தச் சிவப்பு வேலைப்பாட்டுப் பெட்டி-அதில் என்ன இருந்திருக்கும்? அதனால்தான் அது இவர்கள் விட்டுப் பீரோவில் இடம் பெற்றதோ? சாமுவுக்குத் தெரிந்து தான் இந்த மறைப்பு நடந்திருக்கும். பெட்டியில் இருப்பவை. பல இலட்சங்கள் அல்லது கோடி பெறத் தகுந்தவையாக இருக்க வேண்டும்-என்னவாக இருக்கும்?
திடீரென்று குளிர் சிலிர்ப்பாக ஒருணர்வு அவளை உந்தித் தள்ளுகிறது. ரோஜாமாமி அவளைப் பார்த்திருப்பாளோ? இங்கே சந்தித்துக் குற் றவாளியாக அவளை இட்டுப்போகும் ஒரு சந்தர்ப்பத்துக்கு இடம் எப்படிக் கொடுக்க விடுவிடு வென்று அவள் வெளியேறுகிறாள். கெளரியம்மாளையும் கணவரையும் நினைத்தால்கூடப் பிரச்னை கிளம்பிவிடுமோ என்று தோன்றுகிறது. நிச்சயமாகப் பழமை வாதியான அந்த அம்மாள், இவள் வீட்டைவிட்டு வந்திருப்பதை ஆமோதித்திருக்கமாட்டாள். இவள்மேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் சரிந்துவிழக்கூடிய சந்தர்ப்பம் நேரிடும். இவள் காது மூக்கில் இல்லாமல், வெறும் சங்கிலிக் கொடியுடன் பொட்டு வைத்துக் கொண்டு வந்திருக்கிறாள். கல்யாணமாயிருக்கோ என்று கேட்கவில்லை. கெளரி அம்மாள் இங்கிதம் அறிந்தவள்தான். தங்கள் காரியத்தை மட்டும் பார்த்துக் கொண்டு போகிறார்கள். அநேகமாக மறு நாளே அவர்கள் ஊர் திரும்பக்கூடும்.
இப்போது கிரிஜா என்ன செய்யப் போகிறாள்?
– தொடரும்…
– சுழலில் மிதக்கும் தீபங்கள் (சமூக நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1987, தாகம், சென்னை.