சுழலில் மிதக்கும் தீபங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2024
பார்வையிட்டோர்: 1,888 
 
 

தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

இன்றும் மாயா குழந்தைக்கு உடல் நலமில்லை என்று துணி துவைத்து உலர்த்தாமல் போய் விட்டாள். கிரிஜா முற்றத்துத் துணிகளை எடுத்து மடித்து வைக்கையில் ரோஜா மாமி வந்திருக்கும் குரல் கேட்கிறது.

“கேட்கவே சங்கடமாயிருக்கே! நீங்க என்ன, பஞ்சபட்சம் பரமான்னமா கேட்கறேள்? ஏதோ இத்தனை உப்புப் பண்டம், சுத்தபத்தமா இருக்கணும்னு பழகியிருக்கேள். அதுக்காக பட்டினி கிடக்கும்படி விடுவாளா? மாமி, உங்ககளுக்குச் செஞ்சு நான் குறைஞ்சு போயிடமாட்டேன். நீங்க தாயாரைப் போல. சாயங்காலம், நான் ஒரு நடை வந்து, ஏதோ பத்தில்லாத பலகாரமா, பூரியோ, கேசரியோ, அவல் கஞ்சியோ கொண்டு குடுத்திட்டுப் போவனே…?”

கிரிஜாவுக்குத் திக்கென்று நெஞ்சில் இடிக்கிறது. ரத்னா யுனிவர்சிடிக்குப் போய்விட்டாள். குழந்தைகளும் இல்லை. இப்படி ஒரு திருப்பமா முந்தையநாள் நிகழ்ச்சிக்கு?

“அவ என்ன செய்வா, ரோஜா? அந்தத் தறுதலை, ஏதோ கெடுதலுக்கு வந்து சேர்ந்திருக்கு. கிரி இல்லாட்டா இத்தனை வருஷத்தில, இப்படி, ஒண்ணும் ஆகாரமில்லாத படுத்துக்க விட்டதில்ல. சந்தேகமா இருந்தா, குளிச்சிட்டு வந்து பண்ணிக்குடுப்ப. இப்ப இது என்ன காலத்துக்கு வந்திருக்கோ தெரியலே…கவிதாவும் சாருவும் எட்டிப்பார்க்காதுகள். அதுங்க டிரஸ்ஸும் கண்ராவியும்! குதிராட்டம் வளர்ந்து, கவுனப் போட்டுண்டு கடத்தெருவெல்லாம் சுத்தறதுக. நேத்து, நான் பட்டினி. அவாள்ளாம் கடையில போயி என்னத்தையோ வாங்கி வச்சிண்டு, அதென்ன சிரிப்பு, கத்தல், கும்மாளம்? இப்படி கிரி கிரிசை கெட்டுப் போவான்னு நான் நினைக்கல. இன்னும் என்ன வெல்லாம் பார்த்துண்டு நான் உக்காந்திருக்க்ப் போறேனோ…?”

‘த்ஸொ…த்ஸொ…பாவம், நீங்க கண்கலங்கினா எனக்கு மனசே எப்படியோ வேதனை பண்றது! என்னமோ சொல்வா, அந்தக்காலத்திலே, புருஷன் இல்லாத புக்ககக் கொடுமைன்னு’ இது பிள்ளை இல்லாத மாட்டுப் பெண் கொடுமையா? வ்யசாணவாளப் பட்டினி போட்டுட்டு, எப்படி மனசு வந்தது? நான் கூப்பிட்டுக் கேக்கறேனே…?”

“ஐயோ, வேண்டாம்மா, ரோஜா, அவன் ஊரிலேந்து வந்தா இப்படி இவ்வளவுக்கு இருக்க மாட்டா. அந்தச் சனியன முதல்ல அடிச்சி வெளில துரத்தச் சொல்றேன்…”

இதற்கு மேல் கிரிஜாவினால் பொறுக்க முடியவில்லை.

“என்ன மாமி, நானே வந்துட்டேன். கேளுங்க என்னன்னு?” ரோஜாமாமி, பளிச்சென்று ஒரு சிரிப்பை மலர விடுகிறாள். “ஏம்மா, மாயா வரலியா? நீயே துணி மடிக்கிற?” சுருதியே மாறிவிட்டது. பளிர் குங்குமம், போலிச் சிரிப்பு. சதை சுருங்கிப் பழுத்த முகத்தில் என்ன மேக்கப்? கூந்தல் சாயம், இயற்கைப் புருவங்களை அழித்து பென்சிலால் வளைத்துக் கொண்டு, கிழக்குரங்கு, வேடம் போட்டுக் கொண்டு, போலியாகச் சிரிக்கிறாள். கிரிக்கு எரிச்சல் கிளர்ந் தெழுகிறது. “ஏன், மாயா வரலியா?”

“…நேத்து, பூரியும் பாலும் பண்ணிக் கொண்டு வந்தா வேண்டாம்னு சொல்லிட்டு உங்ககிட்ட இப்ப பட்டினி போட் டான்னு சொல்றார்… நீங்க, நிசம்னு நினைப்பீங்க…”

ரோசமும், துயரமும் துருத்திக் கொண்டு வந்து குரலை நெகிழச் செய்கின்றன, கிரிஜாவுக்கு. அவளைப் போல் வாழைப்பழ ஊசியாகப் பேசத் தெரியவில்லை.

“இதபாரு, கிரி. மனசில எதையும் வச்சுக்காம சொல்லிடறது நல்லது. இவ யாரு இந்த வீட்டு விஷயத்தில் தலை யிடன்னு நீ நினைக்கலாம். நீ இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்ன நான் இங்க பெண்ணாய்ப் பழகினவள். உன் மாமனார் என்னை மூத்த பொண்ணுன்னுதான் சொல்வார். ஏன், இந்த டில்லியில், எங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடறப்ப, இவ வீட்டில்தான் கொண்டு விட்டா, அப்புறம்தான் நான் தனிக்குடித்தனமே போனேன். அப்ப ராமகிருஷ்ணபுரமே கட்டியாகல. இந்த இடமெல்லாம் காடு. தை மாசம் எங்கப்பா என்னைக் கூட்டிண்டு வரச்சே, குளிர் நடுக்கிறது.மாமி அன்னிக்கு ஒரு அவியல் வச்சு தேங்காய்பால் பாயசமும் வச்சிருந்தா, பாரு, இன்னிக்கும் நாக்கை விட்டு அந்த ருசி பிரியலே. நவராத்திரி ஒம்பது நாளும் இங்கத்தான் இருப்பேன். இவாளுக்குப் பெரிய குவார்ட்டர்ஸ், கர்ஸான் ரோடில. அவர் ஸ்கூர்ட்டர்ல கொண்டு விட்டுட்டு ராத்திரி வந்து கூட்டிண்டு போவார். அவர் முதமுதல்லே மூணுமாசம் ஜப்பானுக்குப் போனப்ப, நான் இவகூடத்தான் இருந்தேன். சாமு ஸ்கூலுக்குப் போகு முன்ன சாப்பிடமாட்டான், படுத்துவான். ரொட்டியத் தட்டி ஊறுகாயத் தடவி டப்பில வச்சுக்குடுப்பேன்.”

இந்த உறவுத் தொடர்பு சலுகைகளை வெளியே வீசி, ‘உனது உரிமைக்குமேல் எனக்குச் சலுகை’ என்று நிலை நாட்ட முயலுகிறாள் ரோஜாமாமி!

“அந்த நாளிலும் மாமி மடிதான். இந்தக் குளிரில் மாமா எழுந்து தனுர்மாச பூசை பண்ணுவார். மாமி பொங்கல் பண்ணுவாள். விடியரப்ப காம்பவுண்டில கோலம் பிரமாதமா இருக்கும்…”

“இதெல்லாம் இப்ப எதுக்கடீ, ரோஜா? அப்ப வாழ்ந்தது பொய்யும், இப்ப வாழுவது மெய்யுமாப் போச்சு…! ஆச்சு, அவர் போயி இருபது வருஷம் ஆகப்போறது.”

“சரயு கல்யாணத்துக்கு இருந்தா, சாமு எம். ஏ. சேர்த்திருந்தானா, படிச்சு முடிச்சிட்டானா?”

“அவன்தான் மெட்றாசில ஸி.ஏ. பண்ணிட்டிருந்தானே…? ஒரே நாழி அஸ்தமனம் ஆயிட்டது. கிடந்தாரா, கொண்டாரா?…”

கிழவி இதைப் பலமுறைகள் சொல்லிக் கேட்டாலும், அதன் சோகம் இப்போதும் கிரிஜாவுக்குப் புதிதாகக் கேட்பது போல் நெஞ்சைத் தொடுகிறது!

“மஞ்சளும் குங்குமுமா முன்னாடி போகக் குடுத்து வைக்கல. இப்படி ஒரு பாழும் ஜன்மம்…!” அளிந்த பழமான கண்களில் நீர் தளும்புகிறது.

புடவைத் துண்டத்தினால் கண்களைத் துடைத்து கொள்கிறாள்.

“அவள் சிறிசு. வருத்தணும்னு எனக்கு ஆசையா? இப்பல்லாம் தலை வச்சிண்டு, ரவிக்கையும் செருப்பும் போட்டுண்டு, எங்கவாண்ணாலும் எப்பவாண்ணாலும் சாப் பிட்டுண்டு எல்லாரும் இருக்கா. எனக்குக்கூடத்தான் சரயு கல்யாணம் ஆகறதுக்கு முன்னே இந்தக் கோலம் வாண்டாம்னு எல்லாரும் சொன்னா, இருந்தேன், சபையில வர முடியுமோ? அது அப்பவே போயாச்சு. முள்ளுமேல இருக்காப்பல இருந்தது, இந்த முடி ஈரம்-ஒரு துளி நீர் பூமில தெறிச்சால், அவர் பதினாலாயிரம் வருஷம் ரெளரவாதி நரகத்தில் தவிப்பாளாம். அந்தப் பாவத்தை நான் சுமக்கணு மோடி அம்மா? பொண்ணாப் பிறந்த ஜன்மாவில வேற என்ன இருக்குன்னு ராமேசுவரம் போய்த் தொலைச்சிண்டு வந்து, பெரியவாகிட்டத் தீர்த்தம் வாங்கிண்டேன்…? அவளக் கஷ்டப்படுத்த வேண்டியிருக்கு. இன்னும் பிள்ளைப்பேறு வயசு மாறல. ஸ்நானம் பண்ணாத்தான் மடி. ரோஜாக்குன்னா அதெல்லாம் தாண்டியாச்சி…”

இனி மேல் இல்லை, இல்லை-என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, கிரிஜாவின் பகுத்துணர்வு மங்கி: அறிவு குழம்ப, நெகிழ்ந்து போகிறாள்.

அத்தியாயம்-5

“உள்ள வாங்க அபு! கமின்!” கிரிஜா ரத்னாவின் குரலில் கைவேலையை விட்டு, வெளியே வந்து பார்க்கிறாள். உயரமாக, மூக்குக் கண்ணாடி, பிடரியைத் தொட்டுப் புரளும் முடி, முன்பக்கம் லேசாக இருகோணங்கள் உள்ளடங்க முதிர்ச்சி காட்டும் நெற்றி, ஜிப்பா, ஜோல்னாப் பை என்று ஒர் இளைஞன் நிற்கிறான்.

“வாங்க ஆன்டி, இவர் அபு…இவரும் என்னைப் போல் ஒரு ப்ராஜக்ட் பண்ணுறார். இவர், கிரி ஆன்டி…”

அவன் கை குவிக்கிறான்; கிரி புன்னகையுடன் தலை யசைத்து வரவேற்று முன்னறையில் உட்காரச் சொல்கிறாள்.

“…உங்க காஃபி நேர்த்தியைச் சொல்லிக் கூட்டிட்டு வந்தேன் கிரி ஆன்டி.”

சிரிஜா மென்மையாகப் புன்னகை செய்கிறாள்.

“உங்களைப் பற்றி ரத்னா நிறையவே சமாசாரம் சொன்னாள்!” அவன் தமிழில்தான் பேசுகிறான்.

கிரிஜா உள்ளே வந்து, காபி கலக்கச் சித்தமாகிறாள்.

சாரு டான்ஸ் சிளாசுக்கும், கவிதா சிநேகிதி வீட்டுக்கும் போயிருக்கிறார்கள். பரத் மேல்மாடியில் மல்ஹோத்ரா பையனுடன் பட்டம் விடுகிறான். கிரிஜா, மாமியாருக்கு சொஜ்ஜி கிளறி வைத்திருக்கிறாள். ரத்னா எல்லாம் தெரிந்து கொண்டே உள்ளே வந்து, குளிரலமாரியைத் திறக்கிறாள்.

“கிரி, எதானும் கொறிக்க இருக்கா?”

“இங்க டப்பாவில் தேன்குழல் இருக்கு பார்!”

“ஹாய், சொஜ்ஜியா ஏலக்காய் மணம் வருதேன்னு அதானே பார்த்தேன்.”

சற்றும் தயங்காமல் தட்டில் இரண்டு கரண்டியளவு வைத்துக் கொண்டு தேங்குழலையும் நொறுக்கிப் போட்டுக் கொள்கிறாள். இரண்டு தட்டுக்களையும் ஏந்திக் கொண்டு செல்கிறாள்.

“என்னைக் கேட்கக்கூடாதா, ரத்னா?”

திரும்பிப் பார்க்கிறாள்.

“உன் பாட்டி நேற்று பட்டினி கிடந்தாள் இன்று ரகளை?” அவள் பேசாமல் சிரித்த வண்ணம் முன்னறைக்குப் போகிறாள். தட்டுக்களை அங்கு கொண்டு வைத்துவிட்டு மீண்டும் குளிர் நீரெடுக்க வருகிறாள்.

“ரத்னா, உன்னால் என் நிலைமையைப் புரிஞ்சிக்க முடியாது. என் குடும்ப அமைதியில் நீ தலையிடாதே!”

“தலையிட்டுத்தான் ஆகனும் கிரி ஆன்டி. நீங்க தனி மனுஷி இல்லை. ஒரு மொத்த சமுதாயத்தின் அங்கம். அறிவுப் படிப்புப் படிச்சு, கற்பிக்கத் தெரிஞ்சவங்க. உங்க அறிவு, திறமை, எல்லாம் இப்படி முட்டாள்தன மடிக்கூட்டில் பலியா சணுமா? மனுஷருக்கு மனுஷர் வேற்றுமை காட்டும் இது நிச்சயமா தருமமும் இல்லை, மண்ணும் இல்லை. தன்னையே எப்போதும் உயர்த்திப் பிடிச்சுகிட்டு மத்தவங்களைக் காலில் தேய்க்கும் கருவம் இது. ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணே விரோதியாகும் முட்டாள்தனம்!”

“நீ இப்படி இரண்டு நாள் வந்து எதையானும் சொல்லி விட்டுப்போ, நாளைக்கு உன் சித்தப்பா வந்தால், அவருக்கு அவம்மாவை எதிரிடுவதே பிடிக்காது!”

“அவர் வரட்டும். அப்ப நான் சொல்றேன். நீங்க வாங்க. அபு உங்ககிட்ட பேசனும்னிருக்கிறார். அவர் பிராது. என்ன தெரியுமா? உங்களைப்போல் படிச்சிட்டு, அந்த அறிவு எதுக்கும் பயனாகாம சமூத்திலே முடங்கிப்போற சக்திகளைப் பத்தி ஸ்டடி. பண்றது. நமக்கு இப்ப தேவையான ஆராய்ச்சி…”

கிரிக்கு மலை உச்சியின் விளிம்புக்குப்போவது போல் தானிருக்கிறது.

சற்றைக்கெல்லாம் காபியை எடுத்துக்கொண்டு போகிறாள்.

அபு எழுந்து ஒரு பணிவுடன் காபிக் கிண்ணத்தை எடுத்துக் கொள்கிறான்.

“உக்காருங்க ஆண்டி!” ரத்னா கையைப் பற்றி கோபாவில் உட்காரச் செய்கிறாள். மேலே படிக விளக்கு வெளியே யிருந்து திரையினுள்டே வரும் மாலைநேர ஒளியில் மின்னுகிறது. அறையின் நேர்த்தியான இளம் நீலமும் பச்சையும் தெரியும் பூங்கோலம் ஒட்டிய சுவர்களும், பதித்த அலமாரியின் கண்ணாடியினுாடே தெரியும் கலைப்பொருள்களும், இவளுக்கே அந்நியமாகத் தெரிகின்றன.

சுவரில் தொங்கிய ஒரு ‘பதிக்’ ஒவியத்தை அவன் சுட்டுகிறான்.

“இது…எங்க வாங்கினிங்க?”

“நாங்க வாங்கல. ஒரு ஃபாரின் சிநேகிதர் ‘பிரசண்ட்’ பண்ணினதா நினைப்பு.”

“…இது பாலி ஆர்ட்னு நினைக்கிறேன்…”

“ஒ…! நான் இதெல்லாம் கவனிக்கிறதே இல்ல…”

“அட்லீஸ்ட், இது இராமாயணக் காட்சின்னாலும் தெரிகிறதில்ல?”

“அதுதான் அநுமார் முகம் பளிச்சினு இருக்கே?” என்று ரத்னா சிரிக்கிறாள்.

“அது அதுமார்தானா..?” கிரி உற்றுப் பார்க்கிறாள். என்ன மடத்தனம்? அப்படிக்கூட இவள் கவனித்துப் பார்த்திருக்கவில்லை. அநுமாரில்லை என்றால்…?

“உங்களுக்குப் புரியல? இது சுக்ரீவன், இராமர், லட்சுமனர்…பின்னே மரங்கள் சுக்ரீவனிடம் ராமர் தன் வில் திறமையை காட்டும் இடமாக இருக்கலாம்.”

கிரிஜா உற்றுப் பார்க்கிறாள், மீண்டும்.

இராமன் அம்பை எடுத்துப் பூட்டச் சித்தமாக இருக்கும் ‘பாவம்’ தெரிகிறது. மரங்கள் ஏழைத் துளைத்துக் காட்டும் இடமோ?

“நான் இத்தனை நாள்-அதாவது அது வந்து இரண்டு வருஷத்துக்கு மேல் இருக்கும். இப்போதுதான் நீங்கள் சொன்ன பிறகு உற்றுப் பார்க்கிறேன்…” அவளுக்கு நாணமாக இருக்கிறது.

“உங்களுக்குப் பார்க்க வேண்டும்னு தோன்றக்கூட இல்லையா?”

“ஹம்…ஒரு காலத்தில் ‘பதிக்’ கிளாசுக்குப் போய் கத்துக்கக் கூடக் கத்துக்கிட்டேன்…ஆனால்…அதெல்லாம் போன ஜன்மமாயிட்டது…”

மீண்டும் வெளிறிய புன்னகை

“நீங்க… ஏழெட்டு வருஷம் டீச் பண்ணிட்டிருந்ததா ரத்னா சொன்னாள். கல்யாணத்துக்குப் பிறகு வேலை வேண்டாம்னு விட்டுட்டீங்களா?”

“கல்யாணத்துக்கு முன்பே அப்படிக் கண்டிஷனா?”

“…அ…அதெல்லாம் அப்படி ஒண்னும் இல்லை.”

“பின்ன நீங்களா விட்டுட்டீங்களா?”

கிரிக்கு ஏதோ பேட்டிக்கு முன் சங்கடப்படுவதுபோல் இருக்கிறது!

அந்தக் காலத்தில், எட்டு வருஷம் அவள் வேலை செய்த காலத்துச் சாதனையை யார் எண்ணினார்கள்? அவள் செங்கற்பட்டுக்கு அருகே ஒரு கிராமத்தில் வேலை ஏற்றுச் சென்றதும், எந்த வசதியுமில்லாமல், பள்ளிக்கூடத்துக்கு நல்ல பெயர் வாங்கியதையும் அங்கே இருந்தே எம். ஏ. ஆங்கில இலக்கியம் எழுதித் தேர்ந்ததையும் யார் பாராட்டினார்கள்?

“என்னம்மா, எங்கோ கிராமப் பொந்தில் போய் இவள் வேலை செய்வது? இங்கே பட்டணமாக இருந்தாலானும் சட்டுனு வரன் இருந்தால் அவளைப் பார்க்க வசதியாக இருக்கும்…” என்று தான் அண்ணன் குதித்தான். அக்காவோ, “இவளை யார் எம்.ஏ. எடுக்கச் சொன்னது? போஸ்ட் கிராஜுவேட் பண்ணினவனைன்னா இனிமேல் பார்க்கணும்” என்றாளாம்! “வயசு முப்பதாகிறதே! தாலி கழுத்தில் விழலியே” என்று அம்மா மாய்ந்து போனாள்.

“துர்க்கைக்கு ராகுகால அர்ச்சனை பண்றேன். ஆடி மாசம் வெள்ளிக்கிழமையில். நீ வந்து ஒரு வெள்ளியிலானும் எலுமிச்சம் பழ விளக்கேற்றி வை. சுவாமிகளே சொல்லி யிருக்கார், வர தைக்குள் கல்யாணம் ஆகும்னு என்று கடிதத் துக்கு மேல் கடிதம் அனுப்பினாள்.

அந்தச் சூழலில், அந்தப் பராமரிப்பில், அந்த நம்பிகைப் போஷாக்கில், இவளுக்கு அறிவு பூர்வமான சிந்தனை எப்படி உதிக்கும்?

தலைமை ஆசிரியர், வயது முதிர்ந்தவர். விடுப்புக்கும் தடையில்லை. ஒரு வெள்ளிக்கிழமை, எலுமிச்சம்பழ முடியைத் திருப்பி நெய்யூற்றி, சந்நிதியில் விளக்கேற்றி வைத்தாள்.

தனக்கு வரப்போகும் கணவன், முரடனாக, குடிகாரனாக, குரூபியாக இருக்கலாகாது என்று மட்டும்தான் அவளால் எண்ண முடிந்தது. சம்பாதித்த பணத்தைத் தன் பெயருக்கு வங்கியில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கத் துணிந்திராத அவள், அந்த அரண் களை மீறி எப்படிச் சிந்தித்திருக்க முடியும்?

“பையன் ஸி. ஏ. பண்ணிட்டு அமெரிக்காவில் போய் மானேஜ்மென்ட் டிகிரி வாங்கியிருக்கிறான். இரண்டு பிள்ளை, ஒரு பெண். பெரியவன் கனடாவில் இருக்கிறான். இவன் இரண்டாவது. பெண்ணுக்குக் கல்யாணமாகி, குழந்தைகள் இருக்கின்றன. ஒரே மாமியார், பிக்குப்பிடுங்கல் இல்லை. கையில் காவில் என்று கேட்கவில்லை, போடு வதைப் போட்டு ஸிம்பிள் மாரியேஜ் பண்ணுங்கள் போதும்’ என்று அந்தம்மா சொல்லிட்டா…” என்று வாயெல்லாம் பல்லாக அம்மா மகிழ்ந்து போனாள்.

கல்யாணத்துக்கு முதல் நாளே, மாமியார் இவரை அழைத்து வரச் சொல்லி, தன்னுடைய ஒன்றேகால் காரட் தோட்டையும் இரட்டை மூக்குக்குமான பேசரி, முத்து மூக்குத்திகளையும் போட்டுக் கொள்ளச் சொல்லிக் கொடுத் தாள். அப்போது இவள் ஒன்றை மூக்குதான் குத்தியிருந்தாள். எடுப்பான மூக்கு “இன்னொரு மூக்கைக் குத்திண்டு, முத்து மூக்குத்தியையும் போட்டுக் கொள்” என்று சட்டமிட்டாள். இந்த வயிரங்கள். பிறந்த வீட்டுச் சுற்றத்தை வியப்பால் வாய் பிளக்கச் செய்துவிட்டன.

“கிரிஜா மாமியாரைப் போல் கிடைக்கணுமே? மாட்டுப் பெண்ணை கண்ணை இமைகாப்பது போலக் காப்பாள்! வரதுக்கு முந்தி எந்த மாமியார் வைரத் தோட்டையும் மூக்குத்திகளையும் தூக்கிக்குடுப்பா? தோடு மட்டுமே இருப துக்குக் குறையாது…” என்று சொல்லிச் சொல்லி, எந்தக் குறையுமே கிடையாது என்று தீர்த்துவிட்டார்கள்.

“அவனுக்கு அஞ்சாயிரம் சம்பளமாம் வேலையை விடணுமான்னு கேப்பாளா?” என்று அதையும் இயல்பாகத் தீர்த்து விட்டார்கள். கல்யாணம் ஆன புதிதில் சில ஆண்டுகள் பம்பாயில் இருந்தார்கள். பிறகு சென்னைல் பரத் பிறக்கும் வரையில் வாசம். அடுத்து டெல்லிக்கு வந்து விட்டார்கள். மாமியார் காலம் காலமாகப் பழகிய ஊர்-நட்பு

“என்ன, நான் கேட்டதுக்கு நீங்க பதிலேசொல்லலியே? வேலைய நீங்களாத்தான் விட்டீங்களா?”

“அப்படி ஒரு கேள்விக்கே இடமில்ல. கல்யாணமாகல – வேலை. கல்யாணமான பிறகு பொருளாதாரத் தேவையு மில்லை. இவர் பம்பாயில் இருந்தார். அதைப்பத்தி எண்ணவே சந்தர்ப்பம் இல்ல…”

“ரொம்பச் சரி, பம்பாய் ஒரு காரணம். ஆனா, உங்களுக்கே இப்படி பி. ஜி. எல்லாம் பண்ண ஆர்வமா இருந்ததெல்லாம் ‘இன்வால்மெண்ட்டே’ இல்லாம செய்ததுன்னு இப்ப ஒத்துக்க முடியுமா?”

“ஒ…அதெப்படிங்க சொல்லுவது? அப்ப, ரொம்ப ‘என்தூஸியஸ்டிக்’கா, டீச்சிங் மெதட்ல, ஒவ்வொரு லெவல்லயும் சோதனையே பண்ணியிருக்கிறேன். அங்க ரொம்பக் குழந்தைகள் பின்தங்கிய வகுப்பு. நல்ல ‘ரிஸ்ல்ட்’ கொண்டு வந்திருக்கிறேன். ஒரு குழந்தை பாருங்க, தாய், ஒரு திருடி, தகப்பன் ஒரு குடிகாரன். அவளுக்குப் பெற்றோராலேயே ‘ப்ராப்ளம்.’ அம்மாவே பெண்ணைத் திருடச் சொல்லுவா. கெளரவமா இருக்க இந்தப் பள்ளிக்கூட யூனிஃபார்ம்! போலீசில புடிச்சிட்டுப்போய் இந்தப் பள்ளிக் கூடத்துப் பெண்ணுன்னு சொன்னதும், ஸ்கூலுக்கே கேவலம்னு அவளுக்கு டி. ஸி கொடுக்க ஹெட்மாஸ்டர் பிடிவாதமா இருந்தார். அவளை நான் தனியாக வச்சிக்கிட்டு, பிரச்னையை அவ அம்மாவையே கூப்பிட்டுப் பேசினேன். இரண்டு வருஷம் அவுளுக்குச் சொல்லிக்குடுத்தேன். டென்த் பாஸ் பண்ணிட்டுப் போனா.”

“வொன்டர்ஃபுல் ஆன்டி! நீங்க, இப்ப வெறும் அடுப்புப் பூச்சியாயிட்டீங்களே!” தூண்டிக் கொடுத்ததும் பொலபொல வென்று ஆற்றாமை சரிகிறது.

“இப்ப. நானா. நானான்னு ஆயிட்டது. என் குழந்தைகளுக்குக் கூடச் சொல்லிக் கொடுக்க முடியாத நிலை. கவிதா, இங்கிலீஷ்ல நாற்பது மார்க் வாங்கியிருக்கு. கோச்சிங் கிளாசுக்குப் போறா நினைச்சால் கஷ்டம்தான்…”

“இது அப்பட்டமான உரிமைப் பறிப்புன்னு தோணலியா உங்களுக்கு?”

“தோணினால் என்ன செய்யலாம்? இட் இஸ் டு லேட்…”

“பெட்டர் லேட் தேன் நெவர்…” என்று ரத்னா அவள்கையைப் பற்றுகிறாள்.

“இப்ப என்ன பண்ணலாம்? இந்த வீட்டுப் பொறுப்பை யார் ஏற்பார்கள்?”

“உங்களைப் போல் இருக்கிறவர்கள், சொந்தக் குழந்தை களுக்கும் அந்நியமாகும் நிலைமையில் இருப்பது பரிதாபம் தான். உங்க வீட்டில் மாட்டியிருக்கும் படம் பற்றித் தெரிய வில்லை. ஒரு சமூக விஷயம் பற்றித் தெரியாது. வாழ்க்கையின் ஒரு பொது ஓட்டத்திலிருந்து ஒதுங்கிய ஒரு அன்றாட நியமத்தில் நீங்கள் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறீர்கள். இது முழுதும் தேவைதானா, என்பதை நீங்கள் ஏன் நினைத்தும் பார்க்கவில்லை? பெரிய பெண்சக்தி இப்படி வீட்டுக்குள் முடங்கி வீணாகப் போவதைப் பற்றிச் சிந்தியுங்கள். இந்தச் சமுதாயத்தின் குறைபாடுகள், துன்பங்கள், இதெல்லாவற்றிலும் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று ஏன் எப்போதுமே நீங்கள் உணரவில்லை?”

அவன் சற்றே ஆறுதலாகக் காபியை எடுத்துப் பருகுகிறான்.

“ரத்னா சொன்னது போல் மிகவும் நன்றாக இருக்கிறது…” புன்னகை செய்கிறான்.

“…என்னை மன்னித்து விடுங்கள்…குழப்பி விட்டு விட்டேன?”

‘ஒ…நோ. இல்லை. இந்த அதிருப்தி என்னுள் ஆழப் புதைந்துதான் இருக்கிறது. ஆனால்…ஆனால்…பொருளாதாரத் தேவை இருந்தால்தான் பெண் வேலைக்குப் போகலாம் என்ற நினைப்புதான் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர்களிடையே இருக்கிறது. அது ஒரு உரிமை என்றோ, இல்லையேல், அறிவு பூர்வமான மலர்ச்சியும், ஆளுமையும் அவசியம் என்றோ யாரும் நினைப்பதில்லை. சின்னச் சின்ன வட்டத்துக்குள்ளேயே செக்கு மாடாய் முடிந்து போக வேண்டி இருக்கிறது.”

“ஆல் ரைட்…நான் ஒரு…சின்ன ‘கொஸ்சினரை’க் கொடுக்கிறேன். அதைக் கொஞ்சம் படித்து. உங்களுக்கு ஆறுதலான நேரத்தில் பதில் எழுதிக் கொடுப்பீர்களா? இது வெறும் சடங்கல்ல. எதானும் உருப்படியாக ‘மோடிவேட்’ பண்ணனும்னுதான் ஆசை…”

தன் ஆபயிலிருந்து நீண்ட டைப் செய்யப்பட்ட காகிதம் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுக்கிறான். மேலெழுந்த வாரியாகப் பிரித்துப் பார்க்கிறாள்.

பெயர், வயசு, படிப்பு தகுதிகள்…பிறந்த இடம், வகுப்பு… குடும்பநிலை பற்றிய கணிப்பு, கூட்டுக் குடும்பமாதனிக் குடும்பமா-அது பற்றிய கருத்துக்கள், இவள் திருமணத்தில் வரதட்சணை உண்டா, சுயச் சார்பு விவரம்-ஆண்-பெண் குழந்தைகளின் வளர்ப்பு முறை பற்றிய விவரம், இவள் கருத்து, கற்புநிலை பற்றிய கருத்து, பெண்ணின் பொதுவாழ்வைப் பாதிக்கிறது என்பதில் அநுபவம், குடும்பத் தில் ஆணும் பெண்ணும் சமஉரிமை பெறுவது என்பது செயல் ரீதியாகச் சாத்தியமா-ஆணின் இயக்கம் குடும்பத்தில் எந்த விதமாக இருந்தால் சமஉரிமை பெறலாம் என்று கருதுகிறாள். இப்படி, பலபல வினாக்கள்.

அபு விடை பெற்றுக் கொண்டு போகிறான். ரத்னா அவனுடன் தெருமுனை வரையிலும் செல்கிறாள். கரி அந்தத் தாளைப் பத்திரமாகச் சுவாமி அலமாரியின் பக்கம் பெட்டிக்கடியில் வைத்துவிட்டு, குளியலறைக்குள் செல்கிறாள்.

ரத்னா உள்ளே நுழைகையில், கிரி, ஈரச்சேலையைப் பிழிந்து உலர்த்துகிறாள்.

“கேட்டது இராமாயணம். இடிப்பது பெருமாள் கோயிலா? என்ன அக்கிரமம் இது. கிரி ஆன்டி?”

அவளைப் பார்க்காமலே கிரி பதிலளிக்கிறாள்.

“ரத்னா கூட்டை உடைச்சிட்டா, பிறகு அதில் இருப் பதில் அர்த்தமில்லை. அதனால், உடனே செயலாக்க முடியாது…எதையும்.”

ஆம். கிரி ஒரு முடிவுக்கு வருவதென்பது எளிதல்ல. வந்தால், பின் வாங்கல், விட்டுக் கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது…

அத்தியாயம்-6

கணவன் ஊரிலிருந்து வந்திருக்கிறான் என்றால், கிரிக்கு அவன் அழுக்கு உடைகளைச் சுத்தம் செய்யும் வேலை கூடுதலாகும்!

அவனே ஒருதரம் சொன்னான். ஏதோ ஒரு செமினாருக்கு மிலஸ் மேனன் சென்றிருந்தாளாம். “ஒரு சேலை இஸ்திரி போட நம்ம ஊர் கணக்குக்கு நாற்பது ரூபாய் ஆகிறது. சாம், நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள்” என்று கேட்டாளாம். அது பற்றி எனக்குக் கவலை இல்லை, இங்கே நான் ஒண்ணுமே பண்ண வேண்டாம். பத்து நாட்கள் தானே. ஊரில் கொண்டுபோய் போட்டால் என் மிஸஸ், எல்லாம் சரியாக்கி வார்ட்ரோபில் வைத்து விடுவாள்” என்றாராம். மூன்று, மாசம் போல் சென்றிருந்தபோது என்ன செய்தார் என்று அவனும் சொல்லவில்லை. இவளும் கேட்கவில்லை.

அவன் உடைகளைப் பெட்டி போடக் கொடுத்து வந்து, அவற்றை அலமாரியில் வைக்கையில், அலமாரியை ஒழுங்காக வைக்க, எல்லாவற்றையும் எடுக்கிறாள். மேல் தட்டில் ஒரு புதிய அலங்கார வேலைப்பாடமைந்த பெட்டி இவள் கண்களில் படுகிறது. பவள வண்ணத்தில் பச்சை எனாமல் பூ வேலை செய்யப் பெற்ற அலங்காரப் பெட்டி. ஒரு சிறிய ப்ரீஃப்கேஸ் போல் இருக்கிறது.

“ஏது…? இதுபோல் ஒரு பெட்டி முன்பு கிடையாதே?… வாங்கி வந்திருக்கிறாரா? சொல்ல மறந்து போனாரா?’

பெட்டியை எடுக்கிறாள். மரப் பெட்டி போல் கனமாக இருக்கிறது.

பூட்டு சாவித் துவாரம் கூட வேலைப்பாடமைந்த வில்லையால் மூடப் பெற்றிருக்கிறது. ஆனால் சாவியில்லை; திறக்கவும் முடியவில்லை.

இதுவரையிலும் அவளுக்குத் தெரியாத இரகசியம் எதுவும் அவனிடம் இல்லை என்று நம்பி இருக்கிறாள். இது… இது என்னவாக இருக்கும்?

பிறகு வேலை ஒடவில்லை. பெட்டி, புழுவாகக் குடைகிறது.

அதில் ‘ஃபான்ஸியாக’ அழகுப் பொருள் ஏதேனும் இருக்குமோ? ஊரிலிருந்து வந்தபோது அவள் தானே பெட்டியைக் காலி செய்து துணிகளை எடுத்து ஒழுங்கு செய்தாள்?

ரத்னா அன்று காலையிலேயே விடுதிக்குச் செல்வதாகக் கூறிப் போய் விட்டாள். ஆனால் பிறகு வருவாள். இவள் வினாத்தாளைப் பூர்த்தி செய்து வாங்கிப் போக, சாமுவிடம் பேச வருவாள். அபுவைக் கூட்டி வந்தாலும் வருவாள். அபு கிறிஸ்தவனா? ஏப்ரஹாமா? இல்லை…அபுபக்கர்.. ஆபத் சகாயம்…எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்-வித்தியாசமானவன்.

பெரியவள் கற்பகத்தின் தாறுமாறான வாழ்க்கைக் குழப்பம் நெஞ்சின் நினைவுகளை முட்டுகிறது. சீராக இருக்கும் குடும்ப அமைதி… இது அமைதியா? உண்மையில் கிரி, நீ மகிழ்ச்சியும் உற்சாகமுமாக இருக்கிறாயா?… ஆனால், சாமு தாயாருக்காக இவளை அடிமையாக வைத்திருந்தாலும், வேறு விதமான கெட்ட பழக்கங்களோ, நடத்தைப் பிசகானவனோ அல்ல அவர்களுள் எந்த விதமான ஒளிவு மறைவுக்கும் இடமில்லை-இல்லை. இருந்திருக்கவில்லை. ஆனால் எப்போதும் அவள் தானன்றோ விட்டுக் கொடுக்கிறாள். அவளுக்கு உடல் நிலை சுகமில்லை என்றாலும் கூட, அவள் வேலையை அவன் வந்து செய்ய வந்திருக்கிறானோ? அந்த நாளிலும் அவன் அரச அதிகார நிலை மாறியிருக்கிறதோ? ‘டாக்டரிடம் போனாயா?’ என்று கேட்க மறந்து புேவான். இவளே டாக்டரிடம் ஒட வேண்டும். மருந்து வாங்கி வந்து சாப்பிட்டு உடலைக் காத்துக்கொண்டு உழைக்க வேண்டும். ஆனால்…அவனுக்கு ஒரு தலைவலி வந்தால்கூட, தாங்க மாட்டான். வீடு இரண்டு படும்!

தொலைபேசி மணி ஒலிக்கிறது.

“ஹலோ கிரி தானே…? நான் சாயங்கால ஃப்ளைட்ல பாம்பே போறேன். அங்கேருந்து திருவனந்தபுரம் போயிட்டு வருவேன். ரெடியா எல்லாம் எடுத்து வை. வந்ததும் கிளம்பி விடுவேன். ஒரு வாரத்துக்கான டிரஸ் வேண்டி யிருக்கும்.”

அவ்வளவுதான்.

இதுபோன்ற அவசியங்களுக்குத்தான் அவனைப் பொருத்தமட்டில் அந்தக் கருவி பயன்பட்டிருக்கிறது.

வந்ததும் வராததுமாக, அதை இதை அங்கங்கு விசி விட்டுப் பறப்பான்.

இவள் பார்த்துப் பார்த்துத் தேவையானதைச் செய்ய வேண்டும். ஜூஸோ? காபியோ எது கேட்பாரோ? சாப்பாடு வேண்டுமோ, வேண்டாமோ?

வீடு என்றாள் பறப்பு. அவசரம்…வெளியில் ஆசுவாசம், நிம்மதி.

குளிர்சாதன அலுவலக அறையில் கழுத்துச் சுருக்கைத் தளர்த்திக் கொண்டு அவன் உட்கார்ந்திருப்பதைக் கற்பனை செய்கிறாள்.

அழகான அந்தரங்கச் செயலாளர்…நகச்சிவப்பும், உதட்டுச் சாயமுமாக வெட்டு!

சாமு அந்த மாதிரியான சபலக்காரணில்லை… சரியே!

ஆனால் அந்தப் பெட்டி?

நல்ல வேளையாக, அவன் புறப்பட்டுச் சொல்லுமுன் சமயம் வாய்க்கிறது. அவள் அலமாரியின் பக்கம் நின்று அருகில் குளித்துவிட்டுத் தலை வாரிக் கொள்ளும் அவனிடம், “ஆமாம்! இது என்ன பெட்டி? ஏதானும் ஃபான்லி சாமானா? வாங்கிட்டு வந்து சொல்வவேயில்லை?” என்று கேட்கிறாள்.

அவனும் புரியாதவனாக, “எது…?” என்று கேட்கிறான்.

பெட்டியை வெளியிலெடுத்துக் காட்டுகிறாள்.

“ஒ இதுவா? ரோஜா மாமி குடுத்து வச்சிருக்கச் சொன்னாளாம். ஸ்டேட்ஸ் போறாளோ என்னமோ? விவேக்குக்குக் கல்யாணம் நிச்சயமாகும் போல…”

‘இதென்ன புதிசா இருக்கு? ரோஜா மாமிக்கு அவங்க வீட்டில இல்லாத பந்தோபஸ்தா இங்க? பாங்க் லாக்கர் எங்க போச்சு? தாகூர் அவின்யூல கோட்டையாக வீடு…ஸெக்யூரிட்டி ரொம்ப நாளா இருக்கும் சமையல் சாம்பசிவம்…இவர்களை மீறி என்றுமில்லாமல் இதென்ன புதிசு? அப்படி என்ன விலை மதிப்புள்ள சாமான்? நகையா..?’

-நாவில் இவ்வளவு சொற்களும் வரவில்லை.

“இது என்னவாம்? நகையா?”

அவன் உடனே எரிந்து விழுகிறான். இத பாரு, தொண தொணங்காதே. எனக்கு நேரமாச்சு. என்ன வச்சிருக்கே? சப்பாத்தியா, ரைஸா?”

“ஏணிப்படி எரிஞ்சு விழனும்? சப்பாத்தி, ரைஸ், சமயலறை மட்டும்தான் எனக்கு. அதிகப்படி ஒண்னும் கேட்கக் கூடாது! உங்கம்மா எது செஞ்சாலும் அது சரி. நான் ஏன் என்னன்னு கேட்டா, கோபம் வந்துடும்!”

“முனு முணுத்துக் கொண்டு அகலுகிறாள். தாழ்மைப் படுத்தும் இந்த நடப்பு அவளை ஆயிரம் நெருஞ்சி முட்களாக மாறிப் பிடுங்குகின்றன.

தட்டில் சோற்றைப் போட்டு மேசையில் வைக்கிறாள். குளிர் நீரை எடுத்து வைக்கிறாள். மேசையில் டக்கென்று உறைக்கிறது.

“ஏய், கிரி…என்ன?… என்ன முணுமுணுக்கிற?…”

அவள் பேசவில்லை.

அவன் அருகில் வந்து உறுத்துப் பார்க்கிறான். “என்னடீ முகம் வெங்கலப்பானையா இருக்கு?”

நான் ஒண்ணும் முணுமுணுக்கல. நான் பேசக்கூடாது. பேசினா… உங்களுக்கு ஆத்திரம் வரும் பேசாமலே ‘என்னடி!’ நான் மெஷின்!”

அழுகை கொப்புளிக்கக் கத்தி விட்டுத் திரும்புகிறாள்.

அவன் சோற்றுத் தட்டைத் தூக்கி எறிகிறான். தண்ணீர் குப்பியை வீச, அது உடைந்து சிதறுகிறது.

“எப்படியும் சுடுகாடாப் போங்க! எப்ப வீட்டுக்கு வந்தாலும் சிரிப்புக் கிடையாது. முணுமுணுக்கிறா. இல்லாட்டா அடுப்பில் வேத்து ஒழுகிட்டு நிப்பா! சை! கடனேன்னு தண்டமா எதையானும் செஞ்சு வைக்கிறது. இன்னிக்குப் பகல்ல லஞ்ச் வச்சிருந்தியே, ஏக உப்பு. ஸ்பூனைக் காணல…”

“என்னமோ ஒருநாள் மறந்துட்டேன். அதுக்கு வாய் வார்த்தை இல்லையா?”

“வாய் வார்த்தை இல்லாம இப்ப யாருடீ குத்தறாப்பல கொட்டினா? இத பாரு? நீ என்னமோ நாம்தான் இந்த வீட்டைத் தலைமேல் சுமந்து தாங்கறோம்னு நினைச்சிட்டு இஷ்டப்படி நடக்கிறாப்பல்த் தெரியுது. எனக்கு இந்த மறைமுகம் எல்லாம் பிடிக்காது. எங்கம்மாவையோ, என்னையோ பிடிக்கலன்னா புறப்பட்டுப் போ! வீட்டை நாங்க மானேஜ் பண்ணுவோம்! என் நிம்மதியைக் கெடுக்க வேண்டாம்!”

அவன் அவள் தயாராக்கி வைத்த கைப்பெட்டியுடன் வெளியேறுகிறான்.

…சீ! மனிதர்களா இவர்கள்?

பதினேழு வருஷம் அடிமைச் சேவகம் செய்து, குழந்தைகளைப் பெற்று வளர்த்த இவளுக்கு ஒரு பேச்சு, ஒரு குரல் எழுப்ப உரிமை இல்லையா? அப்படியும் உரத்த குரல்கூட இல்லை. அந்த ஒரு பிசிறைக்கூட பொறுக்க முடியாத ஒரு கூடு இது…? ரத்னா கூறினாற் போன்று, இது எவ்வளவு மோசமான கடுமையான, வெளிக்குத் தெரியாத அடக்கு முறை? வசதியான வீடு, நவீனமான வாழ்க்கை வசதிகள் என்ற ஆடம்பரங்கள். ஒரு பெண்ணுக்குத் தன் உரிமைக் குரலின் இலேசான ஒலியைக்கூட எழுப்ப விடாத அழுத்தங்கள் வேறென்ன?

கூலிக்கு வைத்த ஆளிடம் கூடத் தவறு நேர்ந்தால் கேட்க முடியவில்லை.

ஸ்பூன் வைக்க மறந்தது. உப்பு அதிகமாகி விட்டது இரண்டு மன்னிக்க முடியாத குற்றம். இந்த வீட்டை அவள் தாங்கவில்லை.

ஒரு நொடியில் உதறிவிட்டுப் போயிருக்கிறான். சோற்றை எடுத்து வீசி, நீர்க்குப்பியைப் போட்டு உடைத்து…!

அவள் உழைப்பை, அவள் உள்ளுணர்வை அவள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சத்தியத்தை உதாசீனமாக உடைத்தெறிவது போல நொறுக்கி விட்டுப் போய் இருக்கிறான்!

அவள் காலையிலிருந்து இரவு கண் மூடும் வரை யாரை முன்னிட்டு ஆணி அடித்த நிலையில் சுழன்றாளோ, அந்த அவன், அவளைத் துரும்பை விடவும் கேவலமாகக் கருதியிருக்கிறான், அவனுக்குக் கோபம் வரும்; அவன் கோபம் அவள் அறிந்ததுதான். அவனிடம் பச்சாதாபம் கிடையாது என்ப தையும் அவள் உணர்ந்திருக்கிறாள். அவளுக்குப் பொறுமை பெரிது. ஆனால் இப்போது?

அந்த பொறுமையின் அரணில் தீப்பிடிக்கிறது!

திறந்த அலமாரி, விசிறிய சாப்பாட்டுத் தட்டு, உடைந்த கண்ணாடித் துண்டுகள்…

இதையெல்லாம் இப்போது அவள் சுத்தம் செய்ய வேண்டும்!

“அம்மா…என் ஷார்ப்பனரைக் காணல…” என்று பரத் வருகிறான்.

“அங்கியே இரு? உங்கப்பா, உடைச்சுப் பரத்திட்டுப் போயிருக்கார்?”

“அம்மா, டான்ஸ் மாஸ்டர் உங்கிட்ட என்னமோ அட்ரஸ் கேட்டாராமே? நீ அப்பாக்கிட்டக் கேட்டுச் சொல்றேன்னியாமே?”

“அங்கியே நில்லு…கண்ணாடி உடஞ்சிருக்கு. உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணி அவரையே கேட்கச் சொல்லு!”

எல்லாவற்றையும் பெருக்கிக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்; செய்கிறாள். குழந்தைகளுக்குச் சாப்பாடு போட்டு சமையலறையை கழுவித் துடைத்து, படுக்கை போட்டு…

எதுவுமே நடக்காதது போல் மாமியார் பேசாமலிருக்கிறாள்.

நல்ல வேளை, இந்தப் பிரளயத்துக்கு முன் அவள் உபசாரம் முடிந்து விட்டது! படுக்கையில் உட்கார்ந்து அந்த வினாத்தாளை எடுத்துப் பார்க்கிறாள். தனது கூண்டு வாழ்வின் புதிய பரிமானங்கள் காடைப்பTதி அழுத்துகின்றன. வெகுநேரம் உறக்கம் பிடிக்கவில்லை.

இந்தக் கூண்டில் தொடர்ந்து சுழல வேண்டுமா என்ற கேள்வி மெல்லியதாக எழுப்பி உறக்கம் கலைய, அது வலுவுள்ளதாக உயிர்க்கிறது!.

காலையில் பழக்கமான இயந்திரமாக இயங்குகிறாளே ஒழிய, உள்ளத்தில் வேறு சிந்தனைகள் உயிர்த்து இயங்குகின்றன! குழந்தைகளுடனோ, மாமியாருடனோ அவள் எதுவுமே பேசவில்லை. இந்த வீட்டில் தனக்கு எந்தப் பற்றுதலும் இல்லை என்ற மாதிரியில் இயங்குகிறாள்.

அந்த வினாத்தாளைப் பூர்த்திச் செய்து, ரத்னாவின் ஹாஸ்டலைத் தேடிக் கொண்டு சென்று கொடுத்து விட்டு, ஒரு மாறுதலுக்கு இரண்டு நாட்கள் வீட்டை விட்டுப் போக வேண்டும் என்ற ஒர் ஆவா, மூர்க்கமாக அவளுள் இடம் பெறுகிறது!

மாயா குளியலறையில் துணி கசக்குகையில், கிரிஜா தொலைபேசியைச் சுழற்றி, ரத்னாவிடம் தொடர்பு கொள்ள முயலுகிறாள்.

மணியடித்துக் கொண்டே இருக்கிறது. யாரும் எடுக்க வில்லை.

அவள் மொட்டை மாடிப்பக்கம் வருகையில் மாமியார் வாயிற்படியில் நின்றவாறு “காஸுக்கு ஃபோன் பண்ணினியா? ஸிலிண்டர் எடுத்து இருபது நாள்கூட ஆகலியே?” என்று கேட்கிறாள்.

அப்பப்பா எப்படி வேவு பார்க்கிறாள்? பிள்ளை கத்தியது உடைத்தது, பரத்தியது எல்லாம் தெரியும். ஆனால் ஒரு வார்த்தை கேட்க வேண்டுமே?

காதிலும் மூக்கிலும் இவள் சுமக்கும் வயிரங்கள் அவமானச் சின்னங்களாக அழுத்துகின்றன.

‘கூட்டுக்குள் இருப்பதை உணர அவகாசமில்லாமல், உணராமல் இயங்குவது சுமையில்லை. நீ கூட்டுக்குள் இருக்கிறாய் என்ற உணர்வு அறிவுறுத்தப் பெற்ற பிறகு, ஒரிரண்டு நாட்களேனும் அந்த விடுதலையை அநுபவித்தாக வேண்டும் என்ற உந்துதலில் ஒவ்வொரு விநாடியும் சித்திரவதையாக இருக்கிறது.

வயிரங்களைக் கழற்றி வைத்து விட்டாள். காதில் ஒரு சிறு திருகாணியும் கழுத்தில் தாலிச் சங்கிலியும் கையில் ஒற்றை வளையலும் கடிகாரமும் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

இரண்டு புடவைகளும் உள்ளாடைகளும் ஜிப் பையில் வைத்துக் கொள்கிறாள். மாயா வந்து போயாயிற்று; மாமியார் சாப்பிட்டாயிற்று.

தனது தேவைகளை வெளி வராந்தாவில் வைத்து, பிரதானமாக கதவைச் சாத்தி உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, கடைக்குப் போகும் பாவனையில் மாமியார் அறைக்கு வருகிறாள்.

“ஏன், தோடு மூக்குத்தியக் கழட்டிட்டே?”

“அழுக்காயிருக்கு…கழட்டி வச்சேன்…நான் கடைக்குப் போயிட்டு வரேன்…”

பதிலை எதிர்பார்க்காமல் அவள் வெளியேறுகிறாள். பையுடன் படியிறங்கி விடுவிடுவென்று தெருவில் நடக்கிறாள்.

சாலை பஸ் நிறுத்தத்தில் திருமதி மூலே, குழந்தைகளுடன் நிற்கிறாள்.

புன்னகைப் பரிமாறல். பளிச்சென்று மஞ்சள் சல்வார் கமீஸில் எதிர்வீட்டு சுஷ்மா வருகிறாள். “ஆன்டி, எங்கே ஏர் பேகுடன் கிளம்பினர்கள்?”

“ஒரு ஃபிரண்டைப் பார்க்க…”

“ஸ்பிக் மே கே’ ப்ரோகிராம்…ஸவுத் இன்டியன் மியூஸிக்…! ஆன்டி. வரீங்களா? கவிதாகிட்ட இன்விடேஷன் குடுக்கிறேன் ?”

“யார் கச்சேரி.. ?”

“யாரோ வயலின் பர்ஃபாமென்ஸ்…”

“குடு…”

இதற்குள் மினி பஸ் ஒன்று வந்து நிற்கிறது.

இடித்துப் பற்றி ஏறி உட்காரும் பழக்கமும் கூட இவளுக்குப் போதாது.

இந்த நிறுத்தத்தில் நிற்க மனமின்றி ஏறி விடுகிறாள்.

அது பழைய டில்லி ரயில் நிலையம் வரை செல்லும் ஊர்தி.

சீட்டு வாங்கிக் கொண்டு, ஒரு குண்டன் சர்தார்ஜியின் அருகில் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொள்கிறாள்!

– தொடரும்…

– சுழலில் மிதக்கும் தீபங்கள் (சமூக நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1987, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email
ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *