தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
கிரிஜா காபித்தூளை அடைத்து, ஃபில்டரில் கொதி நீரை ஊற்றி விட்டு, ரொட்டித் துண்டுகளுக்கிடையில் ‘சீஸ்கறி’யைப் பொதிந்து, வாட்டும் கூட்டுக்குள் நெய் தடவி மூடித் தீயில் வாட்டுகையில் மணம் எட்டுருக்குப் பரவுகிறது.
“அம்மா, ஜமேதாரி வந்திருக்கா!” என்று அறிவித்துக் கொண்டு சாரு சமையலறைக்குள் வருகிறாள். “ஹை, எனக்குக் கொஞ்சம் சீஸ் கறிம்மா!” என்று கையில் அவள் அனுமதி இன்றியே எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஒடுகிறாள்.
“காலங்காத்தால, பல்லுக்கூடத் தேய்க்காம…சை!”
பன்னிரண்டு வயசுக்கு எந்தப் பொறுப்பும் தெரியாத தீனிப்பட்டறை! உடம்பு பக்கவாட்டில் வளாச்சி பெற்று ‘விகாரம்’ என்று சொல்லும் எல்லைக்குப் போயாகி விட்டது.
“ஏ, கழுதை! குருவியை வேடிக்கை பார்க்கிறியே? வந்தனாவுக்கு வாசக்கதவைத் திறந்து விடு? உள்வழியே வந்து ‘கச்சடா டப்பாவை’ எடுத்துக்கட்டும்!”
“பாட்டி ரூம்ல எழுந்து உக்காந்திண்டிருக்கா!”
இது எச்சரிக்கைக் குரல். பாட்டியின் அறையில் இருந்து மொட்டை மாடிக்கும், அவளுடைய குளியலறைக்கும் வரலாம். மொட்டை மாடியில்தான் ‘கச்சடா டப்பா’ எனப் பெறும் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. சாப் பாட்டுத் தட்டுக்களில் இருந்து கழிக்கப் பெறும் கறிவேப்பிலை, முருங்கை சக்கை, பழத்தோல் போன்ற எச்சிற் குப்பைகள் இடம்பெறக் கூடிய குப்பைத் தொட்டி, உள்புறம் இடம் பெறக் கூடாது என்பது பாட்டியின் சட்ட திட்டம். கீழ்ப்புறம் விசையுள்ள மூடித்திறக்கக் கூடிய சுகாதாரமான குப்பைத் தொட்டிதான் என்றாலும் அதற்குரிய இடம் வெளிப்புற மூலை. அதை அன்றாடம் துப்புரவு செய்ய வரும் துப்புரவுக்காரியும் வீட்டுக்குள் வரக்கூடாது என்பது பாட்டியின் இன்னொரு சட்டம்.
வந்தனாவை “ஜமேதாரி” (ஜிம்மேதாரி) என்று சொன்னாலே கோபித்துக் கொள்வாள். ‘என் பேரைச் சொல்!” என்று ஆணையிடுவாள். அதுவும் நியாயம். அவள் குப்பை எடுத்துச் செல்பவளாகவா தோற்றமளிக்கிறாள்?
பளிச்சென்ற குங்குமப் பொட்டும், வாரிய கூந்தலும், சிறிதும் அழுக்கு ஒட்டாமல் பூத்துக் குலுங்கும் ஸல்வார் கமீஸுமாக, புத்தம் புதிய மலர் போல் இருக்கிறாள். கால்களிலுள்ள செருப்பைக்கூட வாயிலிலேயே கழற்றி விட்டுத் தான் நீண்ட நடை கடந்து வருகிறாள்.
தன் கைவாளியில் குப்பையைக் கவிழ்த்துவிட்டு, தொட்டியைச் சுத்தம் செய்ய, கிரிஜா தண்ணி கொண்டு வந்து ஊற்றுகிறாள். துப்புரவாக வடித்து, அடியில் ஒரு காகிதமும் போட்டுவிட்டு, துடைப்பமும் வாளியுமா வந்தனா போகிறாள்.
மணி ஆறரை அடித்தாயிற்று. பெரிய பெண் கவிதா இன்னமும் எழுந்திருக்கவில்லை. பத்தாம் வகுப்பு!
ஏழரைக்குள் வீட்டை விட்டுக் கிளம்பியாக வேண்டும்.
“சாரு, கவிய எழுப்பு! ‘அஞ்சுமணிக்கு எழுப்பு, அஞ்சரைக்கு எழுப்பு’ம்பா, எழுப்பினா எழுந்திருந்தாதானே?’
வேலைக்காரி வருவதற்கு ஒன்பது மணியாகும். அதற்குள் வந்தனா வந்துபோன இடத்தைத் தண்ணிர் தெளித்துத் துடைக்கிறாளா மருமகள் என்று கிழவி பார்த்துக் கொண்டிருப்பாள்.
கிரிஜாவுக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று முள்ளாய் நெருட பெருக்கித் துடைக்கிறாள்.
வந்தனா ‘வாஷ்பேஷின்’ குளியலறை நெடுகிலும் நன்றாகச் சுத்தம் செய்வாள். ஆனால் இந்த மாமியாரின் ஆணை அவை எல்லாவற்றையும் மருமகளுக்கு ஒதுக்கி யிருக்கிறாள். குளித்து, மடியில்லாத சமையல் ஒன்று முடித்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளின் தந்தை வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறார். அடுத்த வாரம் திரும்பி விடுவார். அதுவரையிலும் அந்த நெருக்கடிக்கு விடுதலை. குளிரலமாரியில் முதல் நாளைய குழம்பும் கூட்டும் இருக்கிறது. அவற்றைக் கொதிக்க வைத்து, சோறு மட்டும் குக்கரில் பொங்கி வைத்து, இவர்கள் சாப் பாட்டை முடிக்கலாம். பகலுக்குத் தான் சீஸ்கறி ஸாண்ட் விட்ச் பண்ணி டப்பிகளில் போட்டாயிற்று.
கடைக்குட்டி பரத்துக்கு எழுந்து வந்ததும் அம்மாவைக் கட்டிக் கொண்டாக வேண்டும், இவனுக்கு ஒன்பது வயது தான். பள்ளிக்கூடம் தொலைவிலில்லை.
“அம்மா, எனக்கு கிரெயான் கலர் வேணும். மிஸ் கொண்டு வரச்சொல்லி இருக்கா…”
“அதுக்கு இப்பத்தான் சொல்றதா? போனவாரம் ஒரு கலர் பாக்ஸ் வாங்கிக் குடுத்தேனே, அது எங்கே?”
சாரு எடுத்துண்டு போய் ஒடிச்சிட்டா…”
“பொய்…பொய்மா…இவன் என் ஜாமட்ரி பாக்ஸ்ை எடுத்து ஒடச்சி வச்சிட்டு பொய் சொல்றான்…”
இந்த மாதிரித் தகராறுகளைப் பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் தான் கொண்டு வருவார்கள். இவர்கள் வெளியேறி சந்தடி அடங்கிய பின்னரே, மாமியார் காலைக் கடன்களை முடிக்க வருவாள்.
மூன்று படுக்கையறைகளும், இரண்டு குளியலறைகளும் கொண்ட இந்த முதல் மாடிக் குடியிருப்புக்குச் சுளையாக மூவாயிரத்தைந்நூறு வாடகை. இந்தியத் தலைநகரில், அரசுக் குடியிருப்புக்கள் முக்கியத்துவம் பெற்றவை. இந்த வாடகையை, அவர்களுக்காக அவன் சார்ந்திருக்கும் வியாபார நிறுவனம் கொடுக்கிறது. மூவாயிரத்தைந்நூறு ரூபாயை வீட்டு வாடகையாகக் கொடுக்கவும் இன்னும் பல வசதிகளை அளிக்கவும் முன்வரும் அளவுக்கு அவள் கணவனின் வாணிப மதிப்பு உயர்ந்தது…ஆனால்…?
பெண்கள் பள்ளி சென்ற பிறகு வந்து பார்க்கையில், மூத்த பெண் கவிதா பாட்டியின் குளியலறையில் துணிகளை விசிறி இருப்பதைப் பார்க்கிறாள். குளித்திருக்க மாட்டாள். சோம்பேறி. மாலையிலோ, இரவிலோ குளிப்பாள்… ‘க்ளோஸெட்’டை ஃப்ளஷ்’ செய்யக் கூடாது?
கிரிஜா ஆத்திரமும் அருவருப்புமாகச் சுத்தம் செய்கிறாள்.
மாமியாருக்குக், கெய்ஸ்ரைப் போட்டுவிட்டு, கடைக் குட்டிப் பையனைப் பள்ளிக்கு அனுப்பச் சித்தம் செய்கிறாள்.
மாமியார் காலைக் கடன்களை முடித்து, நீராடி வெளிவரக் குறைந்த பட்சம் முக்கால் மணியாகும்.
பரத்துக்குக் காலை நேரத்தில்சாப்பாடு இலகுவில் உள்ளே செல்லாது. பாட்டி, அப்பா சலுகையில் இன்னமும் குழந்தையாக, அம்மாவைச் சாதம் ஊட்டச் சொல்கிறான். அவனைக் கீழே தெருவிலிறங்கும் வரையிலும் புத்தகப் பை சுமந்து கொடுத்து, தெருக் கோடியில் செல்லும் வரை நின்று ‘டாடா’ காட்ட வேண்டும். தெருத் திரும்பினால் பள்ளியின் பஸ் வரும்.
பிறகு மேலே வந்து, மாமியாரின் தெய்வங்களுக்கு, முன் இடம் துடைத்து, கோலம் போட வேண்டும். கீழே, வீட்டுச் சொந்தக்காரன் மல்ஹோத்ரா, வாசலில் மலர்ந்த பிச்சி, மந்தாரை, ஒன்றிரண்டு செம்பரத்தை மலர்களைக் கொய்து வைத்திருப்பான். முதியவளின் ஆசாரங்களில் மிகுந்த மரியாதை உள்ளவன். அவனுக்கு எழுபது வயசிருக்கலாம். மனைவி இல்லை. மூன்று மகன்கள்-மருமக்கள் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகக் கீழ்ப் பகுதியில் வாழ்கிறார்கள்.
அவனுடைய மருமகள் ஒருத்தியும் மாமனாருக்கு வேலை வைக்க மாட்டார்கள். வாயிலில், மனிதர் நடமாட இடமின்றி ஒரு அம்பாஸ்டரும், மாருதியும் போர்த்துக் கொண்டு வீட்டுச் சொந்தக்காரரின் அந்தஸ்தைப் பறையடிக்கின்றன!
உதவுபடிக்கு, மூன்று பிள்ளைகளுக்கும் இரு சக்கர வாகனங்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு நேபாளத்து வேலைக்காரன். அடுப்பு வேலை. மேல் வேலை எல்லாம் செய்வான். வேலைக்காரி நிருபா எட்டுமணிக்குத்தான் வருவாள்.
கிரிஜா குழந்தைகள் துணிகளைச் சேகரித்துக் குழாயடிக்குக் கொண்டு வருகையில, கீழே முற்றத்தின் பக்கம் இரண்டாம் மருமகள் நீண்ட வீட்டங்கியுடன் கை நகத்துக்குச் சிங்காரம் செய்து கொண்டிருக்கிறாள், ஒரே மகன் ‘டுன்’ பள்ளியில் படிக்கிறான்.
“குட்மார்னிங் ஆன்டிஜி…”
“குட்மார்னிங்” என்று சொல்லும் கிரிஜாவுக்குச் சிரிப்பு வரவில்லை.
அவளுக்கு இவளை ‘ஆன்டி’ என்று சொல்லும் அளவுக்கு வயது குறைவா? இல்லை, சொல்லப் போனால், அந்தப் பெண்கள் அனைவரும் மேற்கத்தியப் பூச்சு நாகரிகத்தில் மீதப்பவர்கள். குட்டை முடி, உதடு. நகங்களில் பளிர்ச் சிவப்பு, வெளியே செல்லும்போது உடுத்தும் சேலையிலும் அடக்க மில்லாத எடுத்துக்காட்டு மோகங்கள் என்று ஆடம்பரமாக வாழ்பவர்கள். ஆனால் ஒருத்தி கூட முழுசாகக் கல்லூரிப் பட்டம் எடுத்தவளில்லை. ஆனால் அவளுடைய தோற்றத்தில் கிரிஜாவின் எம். ஏ. பி. எட். பட்டம் இருந்த இடம் தெரியாமல் அழுந்தியே போய் விட்டது.
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள நேரமில்லை என்பது முற்றிலும் உண்மையன்று. ஆனால் பார்த்துக் கொள்ளும் ஆர்வமும் மனமும் எங்கோ தொலைந்து விட்டன. இவளுடைய மடிச் சேலைத் துணிகள், மாமியாரின் ஒன்பது கஜ நார்மடிப் பட்டு எல்லாம் உயர நடையின் நீண்ட கொடி யில் காய்கின்றன. அதனால் தான் வந்தனா அங்கு வருவதற்குத் தடை.
கொம்பில் தன் சேலை-பாவாடை முதலிய துணிகளைக் கொண்டு போய் வெளியில் வைத்துக்கொள்கிறாள்.
நீராடி ஈரம் சொட்டும் சேலையுடன் மடித் துணிகளை எடுத்துக் கொண்டு தலை துவட்டிக் கொள்ள வேண்டும். ஈரக் கூந்தலைச் சுற்றிய துண்டும் மடிச் சேலையுமாக மாமியாருக்கு. உலர் புடவை கொண்டு போகிறாள் இன்னொரு குளியல றையில். —
அப்போது தான் பொட்டு வைத்துக் கொள்ள மறந்தது. நினைவுக்கு வருகிறது.
கண்ணாடியைப் பார்த்து அவசரமாக ஒரு பொட்டை, குங்குமச் சிமிழ் திறந்து தொட்டு வைத்துக் கொள்கிறாள். வயிற்றில் கபகபவென்று பசி, எரிச்சல் கிளர்ந்தெழுகிறது.
நறுக்கென்று சீஸ் பொதிந்த மொறு மொறு ஸாண்ட் விச்சை எடுத்துக் கடித்துக் கொண்டு, நாற்காலியில் சாய்ந்து சூடான காபியைச் சிறிது சிறிதாக ரசித்துப் பருகினால்…. வெட்டு!
“கிரி.. புடவை கொண்டு வரியாம்மா…?”
“இதோ வந்துட்டேம்மா!”
கைப் புடவை, துண்டு இரண்டையும் குளியலறைக் கதவடியில் கொண்டு வந்து நீட்டுகிறாள்.
பரங்கிப் பழமாகப் பழுத்துத் தொங்கும் மார்பும் வயிறும், ஈரத் துணிக்குள் ஒட்டித் தெரிய, லேசாகப் பூசியப் பூச்சுப் போல் வெண்முடி படர்ந்த தலையும், கிரிஜாவுக்குப் பார்த்துப் பழகிய இரக்கத்தைத் தோற்றுவிக்கும் வடிவம்.
கடந்த பதினேழு வருஷங்களாக இவளைப் பூச்சியாக்கி வைத்திருக்கிறாள் என்ற உணர்வும் கூடவே இணைந்து எரிச்சலின் இழையைத் தோற்றுவிக்கிறது.
சேலையைச் சுற்றிக் கொண்டதும் மெள்ளக் குளியலறையை விட்டு வருகிறாள். விபூதிச் சம்புடம், மடி நீர்ச் செம்பு எல்லாம் சுவாமி அலமாரிக்கு அருகில் வைக்கப்பட்டிருக் கின்றன.
“குழந்தை ஸ்கூலுக்குப் போயிட்டானா?”
“ம்…”
“ராத்திரியெல்லாம் லொக்கு லொக்குனு இருமித்தே, மருந்து குடுத்தியா?”
“ம்”
“விளக்கேத்தி வச்சுட்டுப் போ. இன்னிக்குக் கிருத்திகை யாயிருக்கு, துளிப் பாயாசம் வேணா வை…”
அத்தியாயம்-2
வேலைக்காரி மணி அடிக்கிறாள். எல்லா வீடுகளிலும் பாத்திரம் துலக்கும் தொட்டி, சமையலறையில் தான் இருக்கும். இந்த வீட்டிலும் சமையலறையில் இருந்தாலும், கேட்டுக் கொண்டதன் பேரில் வெளியே ஒரு தொட்டியும் குழாயும் பின் பக்க வராந்தா போன்ற சிறு பகுதியில் வைத்துக் கொடுத்து விட்டு மூவாயிரத்தை மூவாயிரத்தைந் நூறாக மாற்றினான் வீட்டுக்காரன்.
வேலைக்காரி துலக்கிய பாத்திரங்களை மீண்டும் நீரூற்றிக் கழுவிக் கவிழ்த்து வடிந்த பிறகே உள்ளே எடுத்துச் செல்லலாம். சிறுவர் உடைகளை அவள் துவைத்துப் பிழிந்து மொட்டை மாடியில் உலர்த்தினால், அவளே மாலை நான்கு மணிக்கு வந்து எடுத்து மடித்து வைப்பாள். பள்ளிச் சீருடைகளை அவளே எடுத்துச் சென்று மாலை வரும் போது பெட்டி போட்டுக் கொண்டு வருவாள்.
தலை போனாலும் கிரிஜா, குழந்தைகளின் துணிகளையோ, வேறு மடியில்லாத திரைச் சீலை போன்ற துணிகளையோ தொடலாகாது. மாமியார் இரவு ‘ஆகாரம்’ பண்ணி முடியும் வரையிலும், இவள் பெண்களின் மேல் பட்டுக் கொள்ளவும் கூடாது. பரத்துக்கு மட்டும் விலக்கு. துணி படாமல் தொடலாம். ‘பொன் முடிந்த’ துணிக்கும், புத்திரனுக்கும் தீட்டு இல்லை!
“தீதிஜி இன்று சாயங்காலம் நான் வர மாட்டேன்!”
பாத்திரங்களைச் சுத்தமாக கழுவி துடைத்துக் கவிழ்த்த வண்ணம் வேலைக்காரி மாயா சொல்கிறாள்.
“ஏன்?’’
“குழந்தைக்கு உடம்பு சரியில்லை தீதிஜி, டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போகணும்!”
“என்ன உடம்பு? நேத்துத் தெரு நாயைத் தொட்டு விளையாடிட்டிருந்தான். உனக்கு எத்தனைநாள் அந்த நாயைத் தொட விடாதேன்னு சொல்றேன், மாயா? அது சொறி நாய்!”
“ஹா, சொன்னா கேக்கறதில்ல தீதிஜி. ராத்திரியெல்லாம் காச்சல்…சீட்டு வாங்க ஒரு ரூபா தரணும் தீதிஜி!”
ஒரு ருபாய் பாரமில்லை. மதியம் துணி மடிக்க அவள் வரவில்லையென்றால், இவளே இப்போது அவற்றைப் பிழிந்து உலர்த்த வேண்டும்!
மாயாவுக்குக் கதவைச் சாத்திவிட்டு, மடியாகச் சாதம் பருப்பு குக்களில் வைத்துச் சமையலைத் தொடங்குகிறாள். பாயாசம் வைக்கச் சொல்லி உத்தரவாகி இருக்கிறது. இவள் துணிகளைப் பிழிந்து உலர்த்தி விட்டு, நிவேதனத்துக்குச் சித்தமாகப் பாயாசத்தையும் முடிக்கிறாள்.
ஜபம், பாராயணங்கள் எல்லாம் முடிந்து தெய்வங்களுக்கு நிவேதனமும் ஆகும் நேரத்தில் வாசலில் மணி அடிக்கிறது.
இந்நேரத்தில் யார்… வருகிறார்கள்?
கிரிஜா வாசற் கதவைத் திறக்கிறாள். பம்மென்று கூந்தல் எழும்ப அலங்காரக் கோலத்தில், கிள்ளி எடுக்கச் சதையில்லாமல் மல் வெடவெட என்று உயர்ந்து…
“என்ன கிரி? என்னைத் தெரியலையா?…கல்பனாவின் தங்கை ரத்னா. உங்க மாமியாரின் பேத்தி!”
கிரிஜா ஒரு சிரிப்பை நெளிய விடுகிறாள். ‘ஓ…அடையாளமே தெரியாமே இளச்சிப் போயிட்டே… தலையை வேற எப்படியோ பண்ணிட்டிருக்கே… வா வா…”
“நீ வரோதேன்னாலும் வரத்தான் போகிறேன். வந்துட்டேன்…”
தோளில் கையைப் போட்டுக் கொள்கிறாள். கிரிஜா கூசி உதறும் வகையில் குறுக்கிக் கொள்கிறாள். “ஏய், என்ன மாமியார் மடியா? எப்படி இருக்கா பாட்டி?”
கைப்பெட்டியை முன் அறையில் வைக்கிறாள். முன் அறையின் கம்பளங்களையும் மூலை அலங்காரங்களையும் சுவரில் தொங்கிய ‘பதிக்’ ஒவியங்களையும் நடுவில் தொங்கிய படிக விளக்குகளையும் பார்த்து பிரமிக்கிறாள்! “வாவ்…! ஃபன்டாஸ்டிக்! கல்பனா தான் அட்ரஸ் குடுத்தா. அவ ரெண்டு மாசம் முன்ன ஆபீஸ் வேலையா வந்திருந்தாளாமே…?”
“ஆமாம் ஒரு நாள் ஃபோன் பண்ணினா…பிள்ளை, அவன் அப்பா, ரெண்டு பேரையும் உன் மாமா சொன்னார்னு ராத்திரிச் சாப்பிடக் கூட்டிட்டு வந்தா. அவன் சவூதிலேந்து வந்து இங்கே ஏதோ இன்டஸ்ட்ரீஸ் ஆரம்பிக்கணும்னு வந்தாப்ல…”
“இப்ப குடும்பமே சரியில்லே. அவன் திடீர்னு நீ பொட்டு வச்சிக்கற, கோயிலுக்குப் போற, நாளைக்கு என் பையனுக்கு கல்யாணம் பண்ணணும்னா நீ இப்படி இருந்தா எப்படின்’னு வம்பு பண்றான் போல. இவளோ நல்ல வேலை, பதவி. ‘போடா போ, உன் பணமும் வேண்டாம். குடும்பமும் வேண்டாம்’னு வர வேண்டியது தானே?வெளிலசொல்லிக்கல…வேதனை… எல்லாரும் ரோக்ஸ், ராஸ்கல்ஸ்…பதினைஞ்சு வருஷத்துக்குப் பிறகு, இப்ப ப்ளேட்ட, மாத்திப் போடறான், பணத்திமிர் இவளவ்வளவு படிப்புக்கூட அவனுக்குக்கிடை யாது, வெறும் மெக்கானிக்காத்தான் இருந்தான். ஏதோ போனான் நல்ல பணம் வந்திருக்கு. இப்ப, நீ தலையில துணியப் போட்டுக்க, பேரை மாத்திக்கன்னு நிர்ப்பந்தம் பண்றான்…”
கிரி பேசவில்லை. கல்பனா கல்லூரியில் அவளுக்கு ஒரு வருடம் இளையவள். அவள் கல்லூரி நாட்களில் வீட்டுக்கு வருவாள். இவளுக்கும் தந்தையில்லை; அவளுக்கும் தாய் மட்டுமே இருந்தாள். அந்த சிநேகத்தில், நாலைந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இருதாய்மாரும் எங்கோ கோவிலில் சந்திக்கையில்தான் கிரிஜாவுக்கு இந்த வரனைக் கொண்டு வந்தார்கள்.
கல்பனாவின் தந்தை, பாட்டியின் முதல்தாரத்தின் மகன். தகப்பனார் உயிருள்ள போதே சொத்தைப்பிரித்துக் கொண்டு சென்று, குடித்துக் குடித்துத் தீர்த்துவிட்டான். பிறகு நோய் வாய்ப்பட்டுச் செத்தான். தந்தை இருந்த நாட்களிலேயே இவர்கள் குடும்பம் தொடர்பில்லாமல் பங்களுரோடு போய் இருந்தது. பின்னரே கல்பனாவின் தாய், தன் சகோதரன் குடும்பத்துடன் அண்டி வந்து, தையல் தைத்துக் கொடுத்து, குழந்தைகளைப் படிக்க வைத்தாள். இரண்டு பேரும் பெண்கள்!
“நீ… என்ன பண்ணிடிருக்கேம்மா, இப்ப?”
“நான் எம். ஏ. ஸோவியாலஜி பண்ணினேன். இப்ப பி. எச்.டி. பண்ணிட்டிருக்கிறேன். இங்க யுனிவர்சிட்டில என் கைட் இருக்காரு. கொஞ்சநாள் தங்கி ஃபீல்ட் வொர்க் பண்ணனும், வந்திருக்கிறேன்…சாமு, ஆபீசுக்குப் போயாச் சாக்கும்?”
“ஜப்பான் போயிருக்கிறார். வர புதன்கிழமை வரார்.”
“நான் நேத்தே வந்துட்டேன். எங்கம்மாவோட கஸின் ஒருத்தர் இங்கே கரோல்பாக்ல இருக்கார். அந்த அட்ரஸ் குடுத்து அங்கதான் அம்மா போகச் சொன்னா, பாவம், அவங்களே ‘பர்சாதில்’ இருக்காங்க. ரொம்ப சின்ன போர்ஷன். சரின்னு-காலம இந்த அட்ரஸத் தேடிட்டு வந்துட்டேன்…”
“உள்ள வா, குழந்தைகள் ரூமில தங்கிக்கோ…”
கிரிஜா அந்த அறைப்பக்கம் இந்த ‘மடி’ நிலையில் போக மாட்டாள். குளிப்பதற்கு முன் துணிகளை வாரிவந்து, ஒழுங்கு செய்வாள். விசாலமான அறையில் மூன்று கட்டில்கள் இருக்கின்றன. திறந்த புத்தக அலமாரிகள், பெரிய படிப்பு மேசை, காலெட்கள் மேசைமீதும், கட்டில்மீதும் இரைந்து கிடக்கின்றன. ரேடியோ கிராம் துளசி படிந்து மேலே கண்ட கண்ட பொருட்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறது.
சாந்துக் குப்பி, புத்தகம், குரோஷே ஊசி எல்லாம்…
“பாட்டிக்குச் சாதம் போடணும் ரத்னா. நீ குளிக்கணு மானால் பாத்ரூம் இங்கேயே இருக்கு. குளிச்சிக்க.”
“ஹாய்…நீ இப்பவும் நடுங்கிட்டிருக்கியா? பாட்டி மடி மடின்னு இன்னும் உயிரை வாங்குறாளா?”
“அதெல்லாம் கேட்காதே. நான் இங்க வந்து இப்ப நிக்கிறது தெரிஞ்சா, சாப்பிட மாட்டாள்!”
“பட்டினி கிடக்கட்டும்! நீ ஏன் பயந்து சாகனும்?”
கிரியின் அடி நெஞ்சில் எங்கோ போய் அந்த வினா நெம்புகோல் போடுகிறது.
“மாமா ஒண்ணும் சொல்ல மாட்டாரா?”
“ஹம்…அதானே முக்கியமான ‘பாயிண்டா’ இருக்கு!”
“ம்…மேல் சாவுனிஸம்! கிரி. நீங்க இப்படிக் கோழையா இருப்பதாலதான் அவங்க மேலேயே இருக்காங்க…” கிரி பேசாமல் திரும்புகிறாள்,
பூசை வழிபாடு முடித்து, விழிகளை உறுத்துப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறாள் மாமியார். இலை போட்டு சாப்பாடெடுத்து வைக்க வேண்டும்.
“யார் வந்திருக்கா?”
“ரத்னா!”
வெறுப்பை உமிழும் பார்வையுடன் தலைத்துணியை இழுத்து இறுக்கிக் கொள்கிறாள். இது ஒரு கோபத்தை வெளியிடும் செயல்.
“வந்தா, அவளோட பேசிண்டு நின்னயாக்கும்! இங்க எதுக்கு வந்திருக்கு? சாதியில்லை சனமில்லைன்னு எவனையோ கூட்டிண்டு அக்கா வந்தது; இப்ப , தங்கை எவனைக் கூட்டிண்டு வந்திருக்கு? அசத்துக்கள். நம்ம வீட்டுல ரெண்டு பொங்களை வச்சிட்டிருக்கிறோம். இதுக சகவாசம் என்னத்துக்கு? தாலியில்லை, மூக்குத்தியில்லை…?”
அவள் இங்கே தங்க வந்திருக்கிறாள் என்று தெரிந்தால் என்ன சொல்வாளோ? எல்லாம் போக இவள் எதற்கு அஞ்சு கிறாள்? இந்த வீட்டில் கிரிக்கு உரிமை இல்லையா?
பதில் பேசாமல் இலையைக் கொண்டு வந்து போடுகிறாள்.
கிருத்திகை…பாயாசம், சாதம், பருப்பு, நெய், தயிர், கத்தரிக்காய் துவையல், ரசம், வாழைக்காய் கறி எல்லாம் கொண்டு வந்து பரிமாறுகிறாள். குடிக்க இளஞ்சூடாக வெந்நீர்…
ரத்னா குளியலறையில் நன்றாகக் குளித்து, துணி துவைத்து, ரயிலழுக்கு, மேலழுக்கெல்லாம் போக்கிக் கொண்டு அலசிப் பிழிந்த உடைகளுடன் வெளியே வருகிறாள். பூப் போட்ட வீட்டங்கி அணிந்திருக்கிறாள்.
மொட்டை மாடிக் கம்பியில், தனது சால்வார் கமீஸ், பாவாடை மற்றும் உள்ளாடைகள், ஒரு சேலை எல்லாவற்றையும் உலர்த்துகிறாள். முடியைக் கட்டிய துணியால் துவட்டி, குட்டை முடியை ஷாம்பு மணம் காற்றில் கலக்க, ஒன்றோடொன்று இழை ஒட்டாமல் தட்டி ஈரம் உலரச் செய்கிறாள்.
“இந்த வீடு சொந்தமா கிரி?
“ஹ்ம். வாடகை. மூவாயிரத்தைந்நூறு!”
“ஹாவ்! கம்பெனி குடுக்கும்! பாட்டி சாப்பிட்டாச்சா?”
“ஆமாம். வா, உனக்கும் சாப்பாடு வைக்கிறேன்…”
சாப்பாட்டறை மேசையின் மீது, விருந்தினர் பீங்கான் தட்டுக்களில் ஒன்றை எடுத்து வைத்து கிரி பரிமாற முன் வருகிறாள்.
“வாட் அபெளட் யூ?”
“நீ சாப்பிடு, உனக்கு போட்ட பின் சாப்பிடுவேன்…”
“ஏன் சாதம் பத்தாமல் குக்கர் வச்சிருக்கியா? அப்ப ஆகட்டும், சேர்ந்து சாப்பிடுவோம்?”
“ஒ…இல்லடீ!”
கிரி சொல்லு முன் ரத்னா சமையலறைக்குச் சென்று பார்க்கிறாள். மடிச் சமையல், பாத்திரங்கள், குழம்பு, ரசம். எல்லாவற்றையும் திறந்து பார்க்கிறாள். பிறகு அவளே ஏதோ ஒரு தட்டைக் கொண்டு வந்து வைக்கிறாள். அந்தக் கையுடன் குளிரலமாரியைத் திறந்து, குளிர்ந்த நீர்ப் பாட்டிலை எடுத்து மேசைமீது வைக்கிறாள். ஊறுகாய்கள்…. தயிர்…
“ஹாய், இது என்ன ஊறுகாய் கிரி?”
“ஸ்விட் நெல்லிக்காய். நீ உட்காரு, நான் பரிமாறுவேன்.”
“நத்திங் டுயிங். ஏன் என்னுடன் சாப்பிடக்கூடாதா? இவக்கா எவனையோ கட்டிண்டா, நீ சாப்பிடக் கூடாதுன்னு மாமியார் சொன்னாளா?”
உண்மையில் இவள் வருகையில் தனது பல நாளைய வெறுப்பும் பொருந்தாமையும் ஓர் எல்லைக்கு வந்து விடுமோ என்று கிரி இப்போது அஞ்சுகிறாள்.
“உனக்கென்ன பிடிவாதம்?…அந்த அழுக்குச் சமையல் அறையில் கீழ உட்கார்ந்து, எல்லோருக்கும் எல்லாம் வைத்து விட்டு மிச்சம் மீதியைக் கொட்டிக் கொண்டு சாப்பிட, நீ நாலு கால் இனமா? நீ எதற்காக எம். ஏ. பி, எட். பண்ணி, எட்டு வருஷம் வேலையும் பண்ணினே? அந்த கிரிஜா எங்கே போனாள்? இந்த மொட்டைக் கிழத்துக்கு ஏன் இப்படிப் பயப்படனும? உனக்குச் சிந்திக்கும் அறிவு இல்லே? ஓ…கமான் கிரி…?”
இப்படி அவளிடம் யாராவது ஒரு நாள் பரிவு காட்டி இருக்கிறார்கள்? பெற்ற பெண் குழந்தைகள், கணவன், மாமியார்-?
எல்லோருக்கும் அவள் கடமைப்பட்டவள். பிரசவ காலத்தில் கூடத் தாயார் வந்து இருபத்திரண்டு நாட்கள் மட்டுமே இருந்திருக்கிறாள். பிறகு மெள்ள மெள்ள அவள் தன் வேலை, குழந்தை வேலை என்று கவனித்துக் கொள்வாள். இரண்டு மாசங்களில் முழு ‘சார்ஜை’யும் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
அந்தக் காலத்தில் அவள் கணவனுக்குச் சென்னையில்தான் அலுவலகம் இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளும் சேரிக் குழந்தைகள் போல் உடம்பில் துணியில்லாமல் இருக் கும். கிரிஜாவுக்குத் தன் சிநேகிதிகளோ. மாணவிகளோ எவரேனும் வந்துவிட்டால் வெட்கம் பிடுங்கித் தின்னும்!
பிறகு குழந்தைகளைக் கண்டித்துத் தன்னைத் தொடக் கடாது என்று பழக்கப்படுத்தினாள். பெண் குழந்தைகள். அவர்களுக்கு இளமையில் தாயின் அன்பான அரவணைப்பும் தொட்டுணரும் மகிழ்ச்சிகளும் அந்த இளம் பருவத்தில் மறுக்கப்பட்டன! இப்போது ஆண்குழந்தை என்று ‘பரத்’துக்கு அந்தக் கண்டிப்பு இல்லை! துணி படாமல் தெர்டலாம். தொட்டாலும் பிள்ளைக் குழந்தை!
“ஸ்வீட் நெல்லிக்காய் வொண்டர்ஃபுல்…கிரி! என்ன சும்மா ஷ்… என்ன இது? எதுக்குக் கண்ணிர் விடறீங்க? இதுதான் எனக்குப் பிடிக்கல…”
கிரி வெட்கத்துடன் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். தட்டை இழுத்துக் கொண்டு பரிமாறிக் கொள்கிறாள்.
“…நீங்க எக்ஸ்லண்ட் குக் கிரி. சாம்பாரும், இந்த சீஸ் கறியும் பிரமாதமாயிருக்கு. இதுல என்ன போட்டிருக்கிறீங்க?
“வேறும் வெங்காயமும் பட்டாணியுந்தான்.”
மேசையில் இவளுடன் அமர்ந்து, எச்சிலுமில்லை, பத்து மில்லை என்று எல்லாவற்றையும் ஒரே கையினால் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதை மாமியார் எழுந்து வந்து பார்த்து விடுவாளோ என்ற குற்ற உணர்வு முள்ளாகப் பிடுங்குகிறது.
ரத்னா ஒரு கையால் தட்டைப் பிடித்துக்கொண்டு சோற்றைத் துவையலுடன் கலந்துகொண்டு, அதே கையினால் சாம்பாரையும் எடுத்து ஊற்றிக் கொள்கிறாள். ரசித்துச் சாப்பிடுகிறாள்.
“இப்படிச் சாப்பிட்டு… வருஷங்கள் இருக்கும்…ரொம்ப நல்ல காம்பினேஷன் இந்த சாம்பாரும் துவையலும்!”
பாராட்டுக்களை அள்ளிச் சொரிகிறாள். கிரி தனது சாப்பாட்டை ஐந்தே நிமிடங்களில் முடித்துக் கொள்கிறாள். ஆனால் அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு, கபட மற்ற அவள் தன்மையினால் கவரப்பட்டவளாக அமர்ந்திருக் கிறாள், வாழ்க்கையை நேராக நின்று அறை கூவல்களைச் சமாளிக்கும் துணிவு அவளிடம் இருக்கிறது. தான் மட்டும் ஏணிப்படி அஞ்சிக் குறுகிக் கூனிப் போக வேண்டும்…?
தட்டைச் சுந்தமாகத் துடைத்துவிட்டுக் கை விரல்களை யும் நாக்கால் நக்கிக் கொண்டு ரசிக்கிறாள் ரத்னா.
“கொஞ்சம் தயிரும் சாதமும் போடட்டுமா?”
“ஒ…நோ…வயிறு ஃபுல் கிரி. இனிமேல் இடமில்லை…”
“பாயசம் சாப்பிடு…?”
“ஓ!, அது வேற இருக்கா? சரி கிண்ணத்தில் கொஞ்சமாக விடுங்க!”
கிரியும் சிறிது கிண்ணத்தில் ஊற்றிக் கொள்கிறாள்.
நெள… டெல் மீ கிரி, உங்க அறிவு, உங்க திறமை எல்லாம் இந்தச் சமையலறைச் சேவகத்தில் முடங்கி இருக்கே. கிரி, ஆர் யூ ஹேப்பி வித் திஸ் லைஃப்?”
கிரிக்கு மீண்டும் கண்ணிர் கொப்புளிக்கிறது. வேதனை யுள்ள இடத்தை நேரடியாகக் குத்திக் கொண்டு வருகிறாள் ரத்னா. —
“…இந்த கிழத்தை, மொட்டைத், தலையைக் கண்டால் எப்படி ஆத்திரம் வருதுங்கிறீங்க? இதுவே போயி தலைய மொட்டையடிச்சிட்டு வந்திருக்கு. சாமிகளைப் பார்க்கணும்னு. கிரி எனக்கு இதுக ஸைகாலஜியே புரியல. அப்பெல்லாம். அந்தக் காலத்தில தாத்தா செத்துப் போனப்ப இவளுக்கு அதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு காவலா நின்னாராம். நான் சின்னவ, எனக்கு அவ்வளவா விவரம் தெரியல, உண்மையில எங்கப்பா அம்மாவை தாத்தாவை விட்டுப் பிரிச்சு, அடிச்சி விரட்டியதே இவதான். அப்பா பேரிலே தப்பு இருந்திருக்கும். இல்லேங்கல; ஆனாலும் இவளுக்கு என்னிக்குமே குடிலமான எண்ணந்தான். சிரிச்சே பார்த்ததில்ல…பாட்டின்னா, கிட்ட வராதே தொடாதேன்னு பயந்தான்…”
“இப்ப இதெல்லாம் எதுக்கு ரத்னா? நீ எழுந்து கையலம்பு…!”
“கை கழுவுறது கிடக்கட்டும். உங்களைப் போல எம் ஏ. பி. எட். படிச்சி சுயமா எட்டு வருஷம் வேலை செய்யிறவ, இவளுடைய முட்டாள்தனமான ஆசாரத்துக்கு உட்படுவாளா? இது என்ன மடி. ஆட்களை வதைச்சிட்டு? இவ பிள்ளை, அங்கே இங்க போறானே, மாட்டுக் கறியும், பன்னிக் கறியும் சாப்பிடாமலா இருப்பான்? உங்களை இப்படி வதைக்கிறது மட்டும் என்ன நியாயம்?”
“அடீ, ரத்னா…கத்தாதே. அவ காதுல விழுந்துடப் போகுது…இப்ப எதுக்கு ரகளை வீணா?”
இனிப்பும் கரிப்புமாகக் கண்ணிர் பொங்கச் சுண்டி எறிகிறாள். ரத்னாவைத் தழுவிக் கொள்ள வேண்டும்போல் இருக்கிறது. இந்த ஈரமற்ற மடிக் கூட்டில் மனித சிநேக மில்லாமல் தவிக்கும் அவளுக்கு, சிநேகத்தின் இழைகள் இன்னும் தாபத்தைக் கிளர்த்துகின்றன. –
“கேட்கட்டுமே…? அப்படியானும் இந்த மாமியார், பெரிய அறிவாளி இண்டலக்சுவல், ஏகப்பட்ட சமூக-பதவிப் பொறுப்புக்களை ஏற்றவர். அவருக்கு ஊழியம் செய்வது ஒரு கடமை என்றிருந்தாலாவது, நாம் ஒப்பலாம். அதுவும் கூட நாம் தன்மானத்தைக் கொல்ல வேண்டியதில்லை. ஆனா… இங்க என்ன? நீங்க எவர் வீட்டுப் பெண்ணோ? இவ பையன் தாலிக் கட்டியதால அடிமை…அம்மா முன்ன ஒருக்க மட்ராசில வந்தப்ப பார்த்தாளாம். கவிதாவும் சாருவும் பாவம், உடம்பிலே துணியில்லாமே மழைத் தண்ணியிலே அலைஞ்சு நெஞ்சு கட்டியிருக்கு. ஒரு கம்பளிச்சட்டையை பாந்தமில்லாம போட்டி வச்சிருக்கா’ன்னு வேதனைப்பட்டாள்…இந்த யுகத்தில் எந்தப் பொண்ணானும் உங்களைப் போல் இருப்பாளா?”
“டெல்லிக்கு வந்தப்புறம் கொஞ்சம் மட்டு. பரத்துக்கு ஒண்ணுமே கட்டுப்பாடு இல்லை.”
“புள்ள சாதிக்கப்பெ போறான். இவ புள்ள ஒரு பெண்ணைக் கட்டி அவளை வதைக்க முழு அதிகாரமும் குடுத்திருக்கான்ல? கிரி, சாமு ஒண்ணுமே சொல்ல மாட்டானா?”
“… ஐயோ! எங்கம்மா வயசானவ. அவ இருக்கிற கொஞ்ச வருஷம் நாம் அவ இஷ்டப்படி தான் நடக்கணும்னு கல்யாணம் ஆன அன்னிக்கே சொல்லிட்டார்…”
கொஞ்ச காலம்னு நூறு வயசு அவ ஜம்முனு கொடுங்கோல் ராணியா இருப்ப. நீங்க இருக்க மாட்டீங்க! அற்பாயுசில தேஞ்சு போயிடுவீங்க! அவ புள்ள தெரிஞ்சுப்பானா! நான் இப்ப வந்து, கேக்காமயா இருப்பேன்?”
“ரத்னா, ப்ளிஸ், நீ பாட்டில எதையானும் சொல்லிட்டுப் போயிடாதேடீ! குடும்ப ‘ஹார்மனி’ முக்கியம்…”
“அந்த ‘ஹார்மனி’ நீங்க வெறும் பூச்சியா, மீெஷினா உழைக்கிறதிலதான் இருக்குன்னா, அது கேவலம். எல்லா சுரங்களும் ஒத்து இணைஞ்சாத்தான் ‘ஹார்மனி’ங்கற அம்சம் வரும். ஒரே பார்வையில் ‘ஹார்மனி’ கிடையாது!”
ஒரே போடாகப் போட்டு விட்டு ரத்னா எழுந்து செல்கிறாள்.
அத்தியாயம்-3
பகல் மூன்றடிக்கப் போகிறது. மாவரைக்கும் கிரைண்டர் பழுதாகிக் கிடக்கிறது. ‘எலெக்ட்ரிஷிய’னுக்கு நேரில் போய்ச் சொல்லிக் கூப்பிட்டு வரவேண்டும். நேரமில்லை.
அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்து, தேன் குழல் பிழிந்து கொண்டிருக்கிறாள் கிரி. ரத்னா சற்றே படுத்து எழுந்து முற்றத்துத் துணிகளை எடுத்து மடிக்கிறாள். ரோஜா மாமி வருகிறாள் போலிருக்கிறது. இலேசான வெளிநாட்டு ‘சென்ட்’ மணம் காற்றில் தவழ்ந்து வருகிறது.
சமையலறையிலிருந்து வெளிப்பட்டு, கிரி சாப்பாட்டுக் கூடம் கடந்து மொட்டை மாடிக்குச் செல்லும் வாயிலில் நின்ற படியே பார்க்கிறாள். அங்கிருந்து பார்த்தால் மாமியார் அறை தெரியும். மருதோன்றிச் சிவப்பில் பட்டுச் சேலை தெரிகிறது. இவள் மட்டும் வந்தால் நேராக மாமியாரின் அறைக்குப்போய் விடுவாள். பிரதான வாசலில் வந்து மணியடிக்கும் சமாசாரம் கிடையாது. அந்த அறைக்கு மாடிப்படியில் இருந்து நேராகப் போய்விடலாம்.
“இப்ப மூணு நா சேர்ந்தாப் போல லீவா இருந்தது. போக முடியல, எங்கும். யாராரோ வெளிலேந்து வந்திருக் காப்பல. அசைய முடியாதுன்னுட்டார். அடுத்த வாரம் தான் பார்க்கணும்…”
“எனக்குக்கூட பார்க்கணும்னு இருக்கு எல்லாத்துக்கும் குடுப்பின வேணும் ரோஜா. நினைச்சாப்பல எங்க நடக்கறது.”
“உங்களுக்கென்ன பாட்டி, சாமு வந்ததும் கார்லயே ஒரு நடை போயிட்டு வந்துடலாமே? இல்லாட்டா இருக்கவே இருக்கு எங்க கூட வந்துடுங்கோ!”
“என்னமோ, பெத்த பெண்ணுக்கு மேல நீதான் கவனிச்சிக்கிற?”
“இது என்ன பிரமாதம்? உங்களப் பார்க்கறது எனக்கென்னவோ தாயாரப் பார்க்கிறாப்பில இருக்கு, பெரியவாளுக்குச் செய்யக் குடுத்து வச்சிருக்கணும். கோதுமைப் பாலெடுத்து இதை கிளறினேன், ஆறித் துண்டு போடக்கூட நிற்காம அவசரமா இத்தனை டப்பியில போட்டு எடுத்துண்டு வரேன். வாயில போட்டுண்டு பாருங்கோ…இவாள்ளாம் கோவாவும் பன்னிரும் கடையில வாங்கிப் போடுவா. உங்களுக்குத் திங்கறதுக்கில்ல. அதுக்காக நான் தனியாவே ரெண்டு பாக்கெட் பாலை வாங்கிக் கோவா கிளறினேன்…”
மாமியார் அவள் கொண்டு வந்து கொடுக்கும்: பண்டத்தை வாயில் போட்டுக் கொள்கிறாள்.
“நீ பண்றதுக்குக் கேக்கணுமா ரோஜா? பத்து விரலும் பத்துக் காரியம். அம்ருதமாக இருக்கு…” கிரிக்குப் பொறுக்க வில்லை. அந்த வாயிற்படியில் போய் நிற்கிறாள்.
“மாமி எப்ப வந்தாப்பல? உங்களுக்கு அம்மாவப் பார்த்துட்டுப் போனாப் போறும்…!”
“உனக்குத்தான் சிநேகிதி யாரோ வந்திருக்காப்பல… ‘பிஸி’யாக இருக்கே?”
துணி மடித்த கையுடன் ரத்னா அப்போது உள்ளே வருகிறாள்.
“பாட்டி! என்ன? எப்படியிருக்கிறீங்க? நான் உங்க பேத்தி ரத்னா…!”
பாட்டி அவளை ஏற இறங்கப் பார்த்துத் தலைத்துணியை ஒர் அசைப்புடன் இறங்கிக் கொள்கிறாள்.
“அதான் வந்து எட்டு மணி நேரம் கழிச்சுக் குசலம் விசாரிக்கிறியாக்கும்? எங்க வந்தே இப்ப?”
“இங்கே இருக்க வந்திருக்கிறேன். ஏன், வரககூடாதா பாட்டி?”
பேஷா இருக்கு. உன் சித்தி இருக்கா, ஈஷிண்டு எல்லாம் செய்வா. என்னை எதுக்குக் கேக்கற? என் வீடா இது? நான் ஒரு மூலைல யாரு வம்பும் வேண்டாம்னு தான் ஒதுங் கிட்டேனே?”
“ஐயய்யோ? நீங்க ஏன் பாட்டி ஒதுங்கணும்? ராணி மாதிரி அதிகாரம் பண்ணுறிங்க… ஒதுங்குவானேன்…”
“கேட்டியாடி ரோஜா அக்கிரமத்தை? நான் ராணி மாதிரி அதிகாரம் பண்ணுறேனாம்? ஏண்டியம்மா? உங்கம்மா சொல்லிக் கேக்கச் சொன்னாளா? எந்தனை நாள் என் அதிகாரத்தில் இருந்தா?”
“எங்கம்மாவ நான் சொல்லல…
அவள் அடுத்து பேசு முன், கிரி அஞ்சிக் கொண்டு அங்கிருந்து அகலுகிறாள்.
பாவம்! சித்திக்கு உங்களைக் கண்டு எத்தனை பயம் பாருங்க!”
“போடி அசத்து… அவளுக்கு என்ன பயம்? எட்டுருக்கு சாமர்த்தியக்காரி. எங்கிட்ட வாயை மூடிண்டு நடிக்கிறாள். அவன் என்னமோ நிக்க நேரமில்லாம எங்கியோ சாப்பிட்டு எங்கேயோ தங்கி அலையறான். அந்தக் காலத்துப் போல என்ன கஷ்டம் இப்ப வீட்டுக் காரியம்? எல்லாம் சுவிச், காஸ் அடுப்பு. நிமிஷமா ஆகற பிரஷர் குக்கர். வெய்லுக்குக் கூலர், குளிருக்கு ஹீட்டர். என்ன கஷ்டம் இவாளுக்கு?”
“அதான் மத்தியானத்திலேயே படுக்கையில போயிப் படுத்துக்கறா. எனக்கு என்னமோ புடிக்கிறதில்லை. என்ன ஏன் முன் ரூமுக்கு வரதில்லைங்கறாளே? இந்த சோபா, குஷன்…எவால்லாமோ உக்காரற எடத்தில எப்படி உக்கார? இங்க இந்த பிரம்பு சேர்தான் என் மனசுக்குப் பிடிக்கறது. எங்க வீட்டிலும் எனக்குன்னு பிரம்பு பின்னின சோபா-அம்மாவோடதுன்னு அதுல யாரும் உக்கார மாட்டா?” என்று ரோஜா மாமி ஒத்துப்பாடுகிறாள்.
“ரெண்டு பொண்ணு. அதிலயும் கவி மேஜராயாச்சு. ஒண்ணு தெரியல. எதானும் சொன்னா, போ பாட்டி, வா பாட்டிங்கும். ஆனால் மனசு கிடந்து அடிச்சிக்கிறது; தங்கம் என்ன விலை, வயிரம் என்ன விலை! இதுகளக் காது மூக்கு ஒக்கிட்டு காலாகாலத்தில கட்டி வக்கணுமேன்னு…இவாளப் பாரு!அக்காக்காரி…சொல்லப்படாது. எவனையோகட்டிண்டு குடும்பத்துக்கே அநாசாரமாயாச்சு. இவ…வயசு முப்பதா யாச்சு…ஒரு கட்டா காவலா கிடையாது…எனக்கு. ஏண்டாப்பா இதெல்லாம் பாக்கணும்னிருக்கு! ஒரு எச்சிலா, திட்டா, ஒரேழவுமில்ல. நூறு வியாதி ஏன் பிடுங்கித் தின்னாது? பரத்துக்கு ஒன்பது வயசாகல. பிள்ளைக் குழந்தை கண்ணாடி போறனும்ங்கறா…இப்பவே, இப்படி அநாசாரம் கலந்தா?” முட்டாக்கை இழுத்துக் கொண்டு முதியவள் வெறுப்புடன் திரும்புகிறாள்.
கிரிஜா, பாட்டிக்குப் பூரி இட்டுக் கொண்டிருக்கையில் குழந்தைகள் வந்து விடுகிறார்கள். ரத்னாவைக் கண்டதும் இரண்டு பெண்களுக்கும் ஒரே சந்தோஷம். அவர்கள் அறை யில் இவளால் ரசிக்க முடியாத மேற்கத்திய ரஞ்சக இசை முழங்குகிறது. ட்ரம் அதிரும் ஒசை குதித்துக் குதித்து இளைஞர் பாடும் குதுகலம்.
“என்னம்மா டிபன்?”
“பூரி பண்ணிருக்கேன். தேங்குழல் இருக்கு…”
“போம்மா, போர்? வெஜிடபிள் பஃப் பண்ணிலியா?…”
“இருந்த பட்டாணியக் காலம சீஸ் கறிக்குப் போட்டுட் டேண்டி…! பால்ல போட்டுத் தரேனே?”
“வேனாம் போ!”
காபியை மட்டும் பருகிவிட்டுப் போகிறார்கள். சற்றைக் கெல்லாம் மூவரையும் கூட்டிக் கொண்டு ரத்னா வெளியே செல்கிறாள்.
ஆறு ம்ணிக்குள் மாமியார் பலகாரம் முடிந்துவிடும். பாவில் நனைத்த பூரியுடன் கிரிஜா மாமியாரை உபசரிக்கப் போகிறாள். கிழவி கைகால் சுத்தம் செய்து கொண்டு நெற்றியில் புதிய விபூதியுடன் வாசல் பக்கம் உட்கார்ந்து வெளியே பார்க்சிறாள்.
“அம்மா… பூரி எடுத்துக்கறேளா?”
“எனக்கு வேண்டாம்…!”
தலை திருப்பலைக் கண்டதும் சுர்ரென்று கிரிஜாவுக்கு. பற்றிக் கொள்கிறது. விழுங்கிக் கொள்கிறாள். “ஏன் வேண்டாம்?”
“வேண்டாம்னா பின்னையும் பின்னையும் ஏன்னு என்ன கேள்வி? தினம் தினம் தின்ன்றாது. எங்கையில பண்ணிக்க முடியாதபோது என்ன வேண்டியிருக்கு? எனக்கு நீ உபசாரம் பண்ண வேண்டாம். போ!”
ஒரு பிரளயமாகும் ஆவேசம் அவளுள் கிளர்த்தெழுகிறது.
“நான் அவா மேல இவா மேல பட்டிருப்பேன். முழுகித் தொலைக்கலங்கறேளா” என்று சொற்கள் வெடித்து வரத் தயாராக இருக்கின்றன. உதட்டைக் கடித்துக் கொள்கிறாள். கிரிஜா பொறுப்பாள். ஆனால் அரணை உடைத்து விட்டால் பிறகு சமரசத்துக்கு இடமில்லை. அரண் அவளை உள்ளே இழுக்கிறது. தள்ளிக் கதவைச் சாத்துகிறது.
சமையலறையில் கொண்டு வந்து அவற்றைத் திரும்ப வைக்கிறாள். ரத்னாவும் குழந்தைகளும் வரும் கலகலப்பு செவிகளில் விழுகிறது.
“ஹாய் மம்மி! உனக்கு வெஜிடயிள் பஃப் கரம் கரமா வாங்கிட்டு வந்திருக்கிறோம் ..”
“சாதாரணமாக என்றேனும் அவர்கள் வெளியில் சென்று இதுபோல் எதையேனும் வாங்கி வந்தால் கிரிஜா ஒதுங்கிக் கொள்வாள். “போதும் மேலே வந்து விழனுமா? உள்ள கொண்டு வை!…” என்பாள்.
குழந்தைகளோடு தானும் இம்மாதிரி ஒரு குழந்தையாக உண்டு களிக்கும் நாட்கள் இவள் குடும்பத்துக்கு வரவே யில்லை.
“கிரி, குழந்தைகள் ஆசையா அம்மாவுக்கு வாங்கிட்டு வந்திருக்காங்க. வாங்கிச் சாப்பிடு. அடி மக்குகளா, பிளேட் வச்சு எல்லாருக்கும் எடுத்து வையிடி!”
சாரு தட்டுக்களைக் கொண்டு பரப்புகிறாள்.
கார சமோசா, மலாய் பர்ஃபி.
ரத்னா, சர்பத்தைக் கலக்கி ஐஸ் துண்டு போட்டு வைக் கிறாள். “எனக்கு ரோஸ்மில்க் ஆன்டி!” என்று பரத் அவளை ஒட்டிக் கொள்கிறான்.
கிரிஜா எல்லோருடனும் உட்கார்ந்து மகிழ்ச்சியில் கலந்து கொள்கிறாள். முன் அறையில் அமர்ந்து தொலைக் காட்சியில் வரும் தொடர் நிகழ்ச்சியைப் பெண்களின் கூச்சலான விமரிசனங்களுடன் ரசிக்கிறாள். நத்தைக் கூட்டை உடைத்துக் கொண்டு அவள் அவளாக இருக்க முயன்றாலும் ஏதோ ஒர் இடி-மழைக்கு வானம் கறுத்து எங்கோ முணுக் முணுக்கென்று மின்னல் ஒளி வயிர ஊசி பளிச்சிடுவது போல் உணர்வில் ஒர் அச்சம் தோன்றிக் கொண்டிருக்கிறது.
– தொடரும்…
– சுழலில் மிதக்கும் தீபங்கள் (சமூக நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1987, தாகம், சென்னை.
நன்றி: https://www.projectmadurai.org/