(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பெற்ற தாய்க்குப் பிள்ளை மீது பாசம் என்பது அதிசயமா! ஆனால், பூவனத்துக்கு முத்து என்றால் உயிர். மூத்தவள் ராஜியை விட, முத்து மீது கூடுதல் பிரியம். வித்தியாசமான விசேஷமாக ஒரு பிடிப்பு. ஆறு வயசு முத்து, பூவனத்தின் அண்ணன் சாயல் அதுதான், அந்த விசேஷமான பாசம்.
பூவனம் பாவாடைச் சிறுமியாக இருக்கும்போது, மாட்டு வண்டியில் பருத்தி மருகைகளை பாரமேற்றி விட்டு, கயிற்றை இழுத்துக் கட்டுகிற போது, பாரத்தோடு வண்டி வாரி, அதற்குள் சிக்கி நசுங்கிச் செத்துப் போன அண்ணனின் அதே அச்சு. அதே கண்கள்… அதே நெற்றி… சுபாவம் கூட அதுதான்.
அண்ணனின் மறுபிறப்பு. சின்ன வயது இழப்புச் சோகத்தை இட்டு நிரப்பிய பொக்கிஷம். மனசுக்கே விளங்காத மன ஆழத்தில் உறைந்து கிடக்கிற உணர்வுகளுக்கு உயிர் தருகிற உயிர்வடிவம்.
முத்துவைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குள் ஒரு உல்லாசம். ஆர்வப் பரபரப்பு. அளவுக்கு மிஞ்சிக் கொஞ்சத் தூண்டுகிற ஏதோ ஓர் உத்வேகம்.
சிந்திச் சிதறிக் கொண்டு சில்மிஷங்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்த மகனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். வேலைக்குப் போகணும் என்பதைக் கூட மறந்தவளாக… அவள். அவளது மனசின் உலகத்தில்…
“அம்மா… நாஎருமையை அவுத்துவுடப் போறேம்மா… வெளியிலிருந்து ராஜியின் சப்தம், அவளை இங்கு கொண்டு வந்தது.
“ஆங்…சரி சரி, பாத்து, அடியே, மாட்டை ஒழுங்கா மேச்சுட்டுவா. செனைமாடு. வேற மாடு ஏதாச்சும், முட்டி கிட்டி விடாம, பாத்து மேய். வேற எவன் புஞ்சையிலேயும் மேய விட்டுராதேடி… சும்மாவே நமக்குப் பொல்லாத நேரம். அதுவேற வம்பு. மதியம் திரும்பி வந்து தம்பியை பார்த்துக்கடி…’
எதிரொலி இல்லை. அவிழ்த்து விட்டவுடன் ஓடிய மாட்டைத் தொடர்ந்து வீதிக் கோடிக்குப் போய் விட்டாள், ராஜி.
“முத்து, பள்ளிக்கூடம் போறீயாடா?”
“ம்”
”அம்மா வேலைக்குப் போய்ட்டு வாரேன். என்ன கண்ணு. நல்லா படி. யார் கூடயும் சண்டை கிண்டை போடாதே. இந்தா பத்து பைசா. கடையிலே ஏதாச்சும் வாங்கிக்க. என் செல்லம்?”
சாப்பிட்டு முடித்த மகனுக்கு மேல் சட்டையைப் போட்டுவிட்டாள். புத்தகம், சிலேட்டுப்பையை எடுத்துத் தந்தாள்.
“போறீயாடா கண்ணு?”
“ஆகட்டும்மா…”
என்ன நினைத்தாளோ… மகனை வாரியணைத்து, கண்டமேனிக்கு முத்தமிட்டாள். அர்த்தம் விளங்காத வார்த்தைகளை மிழற்றிக் கொஞ்சினாள். முத்து, விளங்காமை யுடன் பூவனத்தைப் பார்த்தான். அவள் முகம் பூரித்து மலர்ந்து கிடந்தது.
வீதியில் நடந்து செல்லும் முத்துவின் அழகைப் பார்த்த அவள் மனசுக்குள் ஆயிரம் பூவனங்கள்… ஒளியும் மணமும் துலங்குகிற வண்ண ஜாலப் பூவனங்கள்…
பெருமூச்சோடு கதவைச் சாத்தினாள். களை சுரண்டியோடு, தூக்குச்சட்டியோடு பூவனம் கூலி வேலைக்குக் கிளம்பினாள்.
நாராயணசாமி நாயக்கர் மிளகாய்த் தோட்டத்தில் களை வெட்டப் போகணும். ‘பொழுதாயிடுச்சு’ன்னு கூப்பாடு போடுவாகளோ…
நடையை எட்டிப் போட்டாள். தெருவுக்குள் விழுந்து, ஒரு சந்தைக் கடந்து, மற்றோர் வீதியில் நுழைந்து, ஊர்க் கீழ்கோடிக்கு வரும்போது, காலை வெய்யில் முகத்தில் சுள்ளென்று விழுந்தது.
‘அடியாத்தே… பொழுது உசக்கே வந்துருச்சே…’ மனசின் பதைப்பு, கால்களுக்குப் புரிந்தது. முன்னைவிட வேகமாக இயங்கின. ஒரு மஞ்சள் கட்டிடத்தைக் கடந்தாள்.
விவசாயிகள் கூட்டுறவு நாணயச் சங்க அலுவலகம், இந்த ஊர் உழவர்களுக்கு விவசாயத்திற்குப் பணக்கடனும், உரக்கடனும் கொடுத்து உதவியது என்பதெல்லாம், நொறுங்கிப் போன குடும்பக் கிழவனின் நினைவைப் போல ரொம்பப் பழைய சமாச்சாரம். இப்போதெல்லாம்… அது வெறும் ரேஷன் கடைதான். சீனி, மண்ணெண்ணை… அரிசி.
‘அரிசி ரேசன்லே போட்டு மாசம் ரெண்டாக போகுதே… அதுக்குப் பெறகு போடலியே… ஏன்? கடையிலே அரிசி கேட்டா கிலோ நாலு நாப்பதுங்கிறான். அஞ்சு ரூவாய்க்கு கூலி வேலை செஞ்சு பொழைக்குற நம்மளை மாதிரி ஏழைப் பட்டதுக்களுக்கு அந்த விலைக்கு வாங்கவா முடியுது? வேக மாட்டாத செவப்பரிசியாயிருந்தாலும்… ரேசன் அரிசின்னா… அது ஒரு மாதிரிதான்… போட்டா நல்லதுதான். போட மாட்டேங்குறாகளே…”
நினைவுகள் தன்போக்கில் கூடுகட்டிக் கொண்டிருக்க… கால்கள் திசைநோக்கித் தன் போக்கில் நடை போட்டுக் கொண்டிருந்தன.
நிறை நிறையாகப் பிடித்து களை வெட்டு சாய்ந்து கொண்டிருந்தது. மதிய வெய்யிலைப் பொருட்படுத்தாமல் பெண்கள் பேச்சும், சிரிப்புமாய், கேலியும் கிண்டலுமாய், ஊர்ப் பொரணிகளைப் பேசிக்கொண்டு களை வெட்டினர். இடுப்பு ஆற்றுவதற்கு நிமிர்ந்த ஒரு பெண், “சொஸைட்டியிலே கூட்டமாயிருக்கே” என்றாள்.
பூவனம் நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆமாடி… ஆணும் பொண்ணுமா நெறையா நிக்குறாகளே!”
“முந்தா நாள் லாரியிலே அரிசி மூட்டை வந்து எறங் குச்சு. கிளார்க்கு இன்னைக்கு வந்து அரிசி போடுவாரோ… என்னவோ”
“இருந்தாலும் இருக்கும்… காலையிலே கூட… அரிசி எடை போடுறகணேசன், ‘கிளார்க் வந்தாலும் வருவாரு. அரிசி போடுவாரு’ன்னு சொன்னான். ”
பூவனத்துக்குள் ஒரு மெல்லிய திகில்…
”ஐயய்யோ…ரேசன்லே அரிசி வாங்கணுமே. கையிலே யிருந்த இருவது ரூவாயை கடைப் பாக்கிக்கு காலையிலே தானே குடுத்தேன். ரேசன்லே அரிசி போடுவாகன்னு தெரிஞ் சிருந்தா… அந்த ரூவாயை குடுக்காம வைச்சிருக்கலாமே… இப்ப யாரு கிட்டே போய் கைமாத்து கேக்குறது…?”
“வேலை முடிய நாலு மணியாயிடுமே. அதுக்குப் பிறகு வீட்டுக்குப் போய்… வீடு வீடுக்கு கைமாத்துக்கு அலைஞ்சு… நேரமாயிடுமே… அது வரைக்கும் ரேசன் போடுவாகளா? மூடிட்டுப் போயிடுவாகளோ…”
அச்சுறுத்துகிற நினைவுகள். பூவனத்திற்குள் பயம் கலந்த கவலைகள். ஒன்றை முந்திக்கொண்டு ஒன்றாக எண்ணங்கள் ஓட்டம். மனசெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் புகையாக அடைத்துக் கொள்ள இயங்கிக் கொண்டிருந்த களைசுரண்டி ஒரு மிளகாய்ச் செடியை ‘சதக்’ கென்று வெட்டிச் சாய்த்து விட்டது.
‘அட’ என்று துணுக்குற்றாள்.
‘புஞ்சைக்காரி பாத்தா… நாலு வார்த்தை நாற வார்த்தையா பேசுவாளே…’ பயத்துடன் அவசரமாகச் செடியைப் புழுதிக்குள் அமுக்கி, காலால் மண்ணைத் தள்ளிவிட்டு, அடுத்த பாத்திக்குள் பிரவேசித்தாள். குனிந்த உடம்பு நிமிர நேரமில்லை. இடுப்பு கடுக்கிறது. உள்ளங்கை கள் ரத்தம் கன்றி வலியெடுக்கிறது.
பசலிக் கீரையையும், கோரப் புல்லையும் புழுதியோடு வெட்டியெறிந்து கொண்டு பூவனம் முன்னேறினாள், சக பெண்களுக்கு ஈடாக. மனசுக்குள் ரேசன்… அரிசி யார்கிட்டே ரூவா கேக்குறது என்ற நினைவோட்டங்கள்.
நம்பிக்கைகள்… சந்தேகங்கள் இரண்டும் மாறி மாறி மனசில் ஊசலாடி, கடைசியில் விதியை நொந்து முணு முணுத்துக் கொண்டாள்.
‘அட இழவே, ரெண்டு மாசம் கழிச்சு ரேசன்லே அரிசி போடுதாக. அதையும் வாங்கக் குடுத்து வைக்கலியோ… முடியாமப் போயிடுமோ…
உச்சியிலிருந்து பொழுது மேற்கில் இறங்க இறங்க… பூவனத்துக்குள் பதைப்பு. மனசுக்குள் ஏதேதோ மயக்கங்கள்… சஞ்சலங்கள்…
வேலை முடிந்தவுடன் வழக்கம்போல் மாட்டுக்கு புல் அரிக்கவில்லை. கொழை ஒடிக்கவில்லை. வெருளிப் பாய்ச்சலில் (குடையைக் கண்டு மாடு வெருண்டு பாய்கிற வேகம்) ஊருக்குள் வந்தாள். சுரண்டியையும், தூக்குச் சட்டியையும் போட்டுவிட்டு தாகத்துடன் தண்ணீரைக் குடித் தாள். கொஞ்சம் தெம்பு.
நாராயணசாமி நாயக்கர் வீட்டுக்கு வேகமாகப் பாய்ந்தாள். அந்தப் பரபரப்பிலும்… மனசு முத்துப் பயலைத் தேடிப் பருந்துப் பார்வையாகப் பார்த்தலைந்தது.
‘இன்னைக்கோட எட்டுநா சம்பளம் தரணும். நாப்பது ரூவா. இதை குடுத்தாலாச்சும் போதும். ஒரு சீட்டுக்கு எட்டு கிலோ அரிசி. கிலோரெண்டு ரூவா எழுவது பைசா. மொத்தம் எம்புட்டு ஆகும்? அந்தா இந்தான்னு இருவத்தி அஞ்சுக் குள்ளே வருமா…’
மனசுக்குள் கணக்குகள்… நம்பிக்கைகள்… பிரார்த்தனைகள்…
நாயக்கர் வீட்டில் மகள்தான் இருந்தது.
“என்ன பூவனம்?”
“ஐயா இல்லியா? சம்பளம் வாங்கணும். ரேசன் வாங்கணும்.”
“சங்கரன் கோவிலுக்கு பணம் வாங்கப் போயிருக்காக. ராத்திரி வருவாக. காலையிலே வந்து வாங்கிக்கோயேன்…”
பூவனத்துக்குள் ஒரு பூச்சி ஊர்ந்தது. நம்பிக்கையின் கொழுந்துகளை அரிக்கிறது.
“அதுக்கில்லேம்மா… ரேசன் வாங்கணும். வேற துட்டு இல்லே. இதை நம்பித்தான்-”
“சரி, இப்ப என்ன செய்ய முடியும்? ஐயா வந்தாத்தானே எதுவும் நடக்கும்.’
முற்றுப்புள்ளி கருப்பாக விழுந்து விட்டது. வெட்டுப் பட்ட மிளகாய்ச் செடியாக முகம் வாடிப் போனாள் பூவனம். ஆனாலும், அசந்துவிடவில்லை. ஏழ்மையின் தாழ் மட்டத்தி லும் வாழ்வோடு மல்லுக் கட்டுகிற பழகிப்போன பரம்பரை வைராக்யத்தோடு… கடைக்கு ஓடினாள்.
“என்னம்மா, தம்பி இல்லியா?”
“என்ன, அவுகளைத் தேடுதீக?”
”காலையிலே இருபது ரூவா குடுத்தேன். அது இப்ப வேணும். ரேசன் வாங்கணும். பொழுதாவது…”
“அவுக ராசபாளையம் சரக்கு வாங்கப் போயிருக்காக. ஆமா… நீங்க கடைப் பாக்கிதானே குடுத்தீக…?”
“பாக்கிதான். இப்ப ரேசன் வாங்கணும். அவசரம்”
‘ம்ம்… அப்படியா! அவுக வரட்டும்”
கடைக்காரியின் குரலிலிருந்த அலட்சியமும் ஏளனமும் பூவனத்துக்குள் ஊசிகளாகப் பாய்ந்து தைத்தன. கண்ணுக்குத் தெரியாத மாயச் சாட்டையின் சுளீரிடுகிற சுழற்சி. மனசுக்குள் ரத்தம். வலி.
கண்ணுக்குள் முட்டி உறுத்துகிற கண்ணீரை தன்மானத்துடன் விழுங்கிக் கொண்டாள். மனசு கிடந்து அடித்துக் கொண்டது. ஏங்கியது. ரேசன் வாங்க முடியாதோ… ரூவா கெடைக்காதோ…
தெருவில் கன்றுகளுடன் எருமைகள் வரத்தொடங்கி விட்டன. பால் பீய்ச்சி ஊற்றப் போகிறார்கள். மணி அஞ்சாகிப் போச்சே… கிளார்க் கதவைப் பூட்டிட்டுப் போயிடுவாரோ…
பதைப்பு… சோர்வு… பரபரப்பு… மனசு தாளாமல் திணறியது.
பால் சொஸைட்டி செக்ரட்டரியிடம் ஓடினாள் பூவனம். மனசு முத்துவைக் கூட மறந்துவிட்டது.
“பால்ச்சாமி, ஒரு இருபது ரூவா குடு. பாலூத்துறதுலே புடிச்சுக்கோயேன்.”
“அதெப்படி? நீங்க ஊத்தற பாலுக்கும் மேலே வெதையும் புண்ணாக்கும் வாங்கிட்டீக. இன்னும் எந்த ரூவாயிலே போயி பிடிக்க?”
“ரேசன் வாங்கணும் பால்ச்சாமி, அவசரம்…” “உங்க அவசரத்துக்கு நா என்ன செய்ய?”
பூவனத்துக்குள் ஆடிக் கொண்டிருந்த சுடர், பொசுக் கென்று அணைந்துவிட்டது. ‘இனி யார்கிட்டே போய் கையேந்துறது? அவுக இருந்திருந்தா… ஓடியாடி, நாலுபேரை பாப்பாக. கேப்பாக. நா தாலியறுத்த முண்டை. நாதியத்தவ. யாருகிட்டே கேக்குறது? யாரு குடுப்பாக?”
விரக்திக்குள் விழுந்த மனசு, நைந்து துவண்டு விட்டது. எதிரில் முழுக்க இருட்டு, ஏகமாய் இருட்டு.
கைத்துப் போய், கசிந்து போன மனசின் அழுகை, கண்ணுக்கு வரத்துடித்துக் கொண்டிருந்தது. முட்டிக் கொண்டு வந்தது. கையறு நிலைமையும், கதியற்ற தன்மையும் அவளை உள்ளுக்குள் வதைத்துக் கொண்டிருந்தது. எங்கோ வனாந்தரத்தில் மனித வாடையில்லாத காட்டுப் பயங் கரத்தில் – சிக்கிக் கொண்டதைப் போன்ற ஒரு அவல உணர்ச்சி!
மஞ்சள் வெய்யிலையும், மேற்குத் தொடர்ச்சி மலை முதுகை உரசிக் கொண்டிருக்கும் சூரியனையும் பீதியுடன் பார்த்தாள்; ‘கிளார்க் பூட்டிட்டுப் போயிடுவாரே.’
சோர்ந்து களைத்துப்போன மனசு. ஓய்வுக்கு ஏங்கிய கால்கள். கடுப்பாய் கடுக்கிற இடுப்பு. முத்துவை நினைக்க நேரமில்லை.
‘போகவே கூடாது’ என்று நினைத்திருந்த அக்கா வீட்டுக்குள் ஓடினாள். வேறு புகலில்லை.
அக்கா கொடுத்த ரூவாயோடு, வீட்டுக்குள் உருட்டி, புரட்டி இருப்பதைப் பொறுக்கிக் கொண்டாள். சீட்டையும், பெட்டியையும் தூக்கிக் கொண்டாள். எதிர்ப்பட்ட ஒருத்தி யிடம் கேட்டாள்.
“சீட்டுக்கு எம்புட்டு ரூவா ஆகுது?”.
“இருபத்தோரு ரூவா அறுவது பைசா.”
எண்ணிப் பார்த்தாள். பத்து பைசா குறைந்தது.
“இந்தா பத்து பைசா. சீக்கிரமா ஓடு. நேரமாச்சு. பூட்டிட்டுப் போனாலும் போயிருப்பாரு…”
பூவனத்தின்காலுக்கு இறக்கை முளைத்துக் கொண்டது. அடித்துப் பறந்தது. உடம்பெல்லாம் இறுதி நேரப் பரபரப்பு. பூட்டியிருப்பாரோ… மனசைப் பிடித்தாட்டிய பேய்த் திகில். அந்நேரம்தான்…
புழுதி அப்பிய உடம்போடு ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்டான், சிறுவன் முத்து. “யம்மா,துட்டு குடும்மா… துட்டும்மா… குடும்மா…”
“பொறுடா… அரிசி வாங்கிட்டு வாரேண்டா”
“ஆமா… துட்டுக்குடு குடுத்துட்டுப் போ…”
அவன் சிணுங்கலைக் கேட்க இது நேரமில்லை. பெட்டியும் சீட்டுமாக ‘வேகு வேகு’ என்று நடக்க துவங்கி னாள். முந்திச் சேலையை பிடித்து இழுத்துக் கொண்டே அழுது அரற்றிக்கொண்டே…
“யம்மா… ச்சீய்… துட்டு குடும்மா… துட்டும்மா…” என்று முத்துவும் தொல்லை செய்தான்.
அவள் அவளாக இல்லை. சூழ்நிலை உஷ்ணத்தில் சூடேறிப் போயிருக்கிறாள். மகனின் அழுகையும் இரைச்சலும் எங்கோ தூரத்தில் கேட்பதைப் போல மனசில் ஒரு உணர்வு. அதைக்கூட தாங்காத மனசு எரிச்சலும் கோபமுமாய்…
மகனைத் திட்டக் கூட நேரமில்லாமல், பரபரப்பாய் ஓடினாள்.
அதோ மஞ்சள் கட்டிடம். கதவைச் சாத்திக் கொண்டு கிளார்க், அரிசி எடை போடுகிற கணேசனுடன் பேசிக் கொண்டு..
மனசுக்குள் குப்பென்று ஒரு தீ!
பூவனம் சட்டென்று வேகமெடுத்து விரைய, முந்திச் சேலையை பிடித்துக் கொண்டு வந்த முத்து, அந்த சுழல் இழுப்பைத் தாங்காமல் குப்புற விழுந்தான். சத்தம் போட்டு அழுதான்.
இதையெல்லாம் பார்க்க இதுவா நேரம்? ஒரே குறியில் பாய்ந்தாள். வெருளிப் பாய்ச்சல் வேகம்.
முகமெல்லாம் வேர்வைப் பெருக்கு… அப்பிய சோர்வு… கண்களில் தவிப்பு… காய்ந்து போன உதடுகள்… காலெல்லாம் களைவெட்டுப் புழுதி.
கிளார்க் பூவனத்தைப் பார்த்தார்.
“என்னம்மா…?”
“அரிசி வேணும்”
“எல்லாம் முடிஞ்சு போச்சு… காலையிலேருந்து போட்டுக்கிட்டிருக்கேன். இந்நேர வரைக்கும் முடியலியாக்கும்? முடிஞ்சு போச்சு”
“வேலைக்குப் போய்ட்டு வந்து… ரூவா பாத்துட்டு வர நேரமாயிடுச்சு.ஐயா… குடுங்க”
“அதெல்லாம் முடியாதம்மா… டயம் முடிஞ்சு போச்சு. நானும் ஏழு மைல் சைக்கிள் மிதிச்சு ஊருக்குப் போகணும். இப்பவே இருட்டிப் போச்சு. போம்மா… அடுத்த வாட்டி வாங்கிக்க.”
விழுந்த முத்து அப்போதுதான் எழுந்து அவளிடம் வந்து சேர்ந்தான். அழுகையோடுதான்.
பூவனம் முகம் கறுத்துப் போனாள். இத்தனைப் பாடுகளுக்குப் பிறகும் ஏற்பட்டுவிட்ட தோல்வியை ஏமாற்றத்தை – இழப்பை ஜீரணிக்கமாட்டாமல் துவண்டாள். கண்களில் குத்துண்ட பறவையின் வேதனை. குற்றுயிராக துடிக்கிறதுடிப்பு…
மனசெல்லாம் தவிக்கிற எதிர்பார்ப்போடு கிளார்க் முகத்தைப் பார்த்தாள். அவர் திருப்பிக் கொண்டார். கதவை இழுத்துப்பூட்டத்துவங்கினார்.
அந்நேரம்… முத்து அவளின் கால்களைப் பிடித்துக் கொண்டு வீலென்று அழுதான். அவள் மனசின் கைப்பு, கசப்பு, தோல்வி, ஏமாற்றமெல்லாம் ஒன்று திரண்டு எரிச்சலாக வடிவமெடுக்க… பார்வை தாழ்த்தி மகனைப் பார்த்தாள்.
அவனை இடது கையால் விருட்டென்று இழுத்தாள். எரிந்த மனசு வலது கையில் இறங்க… அந்தப் பிஞ்சின் முதுகிலும் கன்னத்திலும் மடேர் மடேர் என்று அறைந்தாள். பூவனம் பூவனமாக இல்லை. தீவனமாகி விட்டிருந்தாள். முத்து துள்ளித் துள்ளி விழுந்தான். துடித்தான்.
“சனியனே… வந்து வந்து காலைக்கட்டிக்கிட்டு… நானே பரிதவிச்சுக்கிட்டிருக்கேன்-” உதடுகள் புலம்ப… கை மாறி மாறி விளையாட, அந்தப் பறவைக் குஞ்சு துடித்துக் கதறியது. பூவனத்திடமிருந்து பிய்த்துக் கொண்டு, உதைபட்ட பந்தாக ஓடினான். கிலி பிடித்துப் போய் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான். கிளார்க் திகிலடைந்து போனார்.
“ஏம்மா… நீயெல்லாம் பெத்த தாய் தானா? புள்ளையை இப்படிப் போட்டு ஏம்மா கொல்லுறே?”
“ஏங் கொடுமை”
“நேரத்தோட அரிசி வாங்குறதுக்கில்லாம…புள்ளையைப் போட்டு இப்படி அடிக்கிறீயே… பாவம், பச்சைப் புள்ளை! அவனுக்கென்ன தெரியும்… கணேசா, இந்தம்மாவுக்கு அரிசியைப் போட்டனுப்பு. கொண்டாம்மா ரூவாயை…”
வனாந்திர அவலத்தில் புதைந்து கிடந்த பூவனம் வீடு திரும்பும்போது அவள் மனம், வெள்ளம் வடிந்த ஆற்று மணலைப் போல சுத்தமாக பூர்ண நிறைவாக இருந்தது. நீண்ட மனச் சோதனைகளுக்குப் பிறகு கிட்டிய சின்னவெற்றி, ரொம்ப ஆறுதலாக இருந்தது. கொஞ்சம் குதூகலமாகக் கூட இருந்தது.
மனசுக்குச் சிறகு முளைத்துக் கொண்டது. மேகமில்லாத நிர்மலவானத்தில் நிச்சிந்தையோடு சிரமமில்லாமல் மிதந்தது.
வீட்டை நெருங்கினாள். திண்ணை தெரிந்தது. மனசு பகீரென்றது. கிட்ட வந்தாள். விரலைச் சூப்பிக் கொண்டு முத்து தூங்குகிறான். கன்னத்தில் கண்ணீர்க் கறை. தூக்கத்திலும் ஏங்கி ஏங்கி விம்முகிற பரிதாபம்…
சுயம். சுயம்… சுயம்…
சுமந்து பெற்றவளுக்கு குலை பதறியது. உடம் பெல்லாம் அதிர்ந்து நடுங்கியது. அரிசிப் பெட்டியை அவசர மாய் இறக்கினாள். அவள் மனசை ஒரு சோக வெள்ளம் அடித்துப் புரட்ட… மனசெல்லாம் ஓலமிட்டுக்கதற… மகனை வாரியெடுத்து அணைத்துக் கொண்டாள்.
கூடப் பிறந்த அண்ணனின் மறு பிறப்பு. சின்ன வயது இழப்புச் சோகத்தை இட்டு நிரப்பிய பொக்கிஷம். மனசுக்கே விளங்காத மன ஆழத்தில் உறைந்து கிடக்கிற உணர்வுகளுக்கு உயிர் தருகிற உயிர்வடிவம்…
‘இந்தப் பாதகத்தி முண்டைக்கு அந்நேரம் மனசவிஞ்சி போச்சே… ஏம் பூச்செண்டை போட்டு அடிச்சு நொறுக் கிட்டேனே… ஏங்கையில புத்து பெறப்பட…’
தன்னைத்தானே சபித்துக் கொண்டு… கோவெனக் கதறினாள். சுயமாகக் கதறினாள். உள்ளிருந்து வந்த கதறல் அவள் அவளாக… தாயாக…
அம்மாவின் அழுகையையும் கோலத்தையும் கண்டு, விளங்காமல் திகைத்துப்போய்… அலங்க மலங்கப் பார்த்தான் மகன்.
சூழ்ந்து நின்று கைகொட்டிச் சிரித்தது, வாழ்க்கை.
– ஜனரஞ்சனி, 29-3-86. 1000 ரூ. முதல் பரிசுக் கதை.
– சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987, கங்கை புத்தக நிலையம், சென்னை.