கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 4,104 
 

இன்றைக்கு ஏழாவது நாள்; வேலையில்லாத ஏழாவது நாள். அவன் எந்த வேலையும் செய்யாமல் ஒருபோதும் இப்படி ‘சும்மா’ இருந்ததில்லை. அலுவலகத்தில் மட்டுமல்ல, விடுமுறையென ஒரு நாள் வீட்டில் இருந்தால்கூட புத்தகங்களை அடுக்கி வைப்பது, மேஜை டிராயரில் பல நாட்களாக போட்டு வைத்திருந்த இன்சுரன்ஸ் கட்டிய இரசீதுகள், சொசைட்டி மெய்ண்டனன்ஸ் இரசீது, கரண்ட் பில், கேஸ் பில், தொலைபேசி பில் இன்னும் பிற எல்லாம் எடுத்து அதற்கான கோப்புகளில் வைப்பதென, ஏதாவதொரு வேலையை செய்துகொண்டே இருப்பான். தொடர்ந்து ஏழாவது நாள் வீட்டிலேயே இருக்கிறான். இந்த ஏழு நாட்களில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டு வளாகத்தைச் சுற்றி சிறிது நேரம் நடை பழகுகிறான். தவிர எல்லா நேரமும் வீட்டிலேயே இருக்கிறான். அலைபேசியை தொடுவதற்குக் கூட அவனுக்கு பயமாக இருந்தது. வாட்ஸ் ஆப், முகநூல், டிவிட்டர் என ‘கொரோனா’ நிறைந்து வழிகிறது. எந்த நாட்டில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர், எத்தனைபேர் நோயின் பிடியிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்பினர், எத்தனை பேர் இறந்து போயினர் என்பது முதற்கொண்டு ‘கொரோனா’ எப்படி பரவுகிறது, அது நம்மை அண்டாமல் எப்படி தற்காத்துக் கொள்வது என்பதிலிருந்து அறிவுரையாக, எச்சரிக்கையாக அலைபேசியின் கொள்ளளவைத் தாண்டி நிரம்பி வழிகிறது. அலைபேசியை கையில் எடுக்காமல் அச்சத்துடனேயே அதை பார்த்துக் கொண்டிருந்தான். தொலைக்காட்சியைப் பார்க்கலாம் என்றாலோ அமைச்சர் அவ்வப்போது வந்து பேசிக்கொண்டே இருக்கிறார். புள்ளி விவரங்களை பட்டியலிடுகிறார். தனித்திருங்கள், அச்சப்படத் தேவையில்லை என்பதோடு தனது உரையை முடித்துக் கொள்கிறார். இடைப்பட்ட நேரங்களில் மருத்துவர் முதல் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள், ஆலோசகர்கள் என யார், யாரோ வந்து எதையாவது அபத்தமாக உளறிக்கொண்டே இருக்கின்றனர்.

முதல் நாள் நன்றாகத் தூங்கலாம் என நினைத்தான். என்றைக்கெல்லாம் நன்றாகத் தூங்கலாம் என நினைக்கிறானோ, அன்றைக்குத்தான் சீக்கிரமாக எழுந்து கொள்கிறான். அன்றும் அதுபோலவே ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விட்டான். மீண்டும் தூங்கலாம் என நினைத்து, போர்வையை இழுத்து மூடினான். தூக்கம் வரவில்லை. கண்களில் எந்த கலக்கமும் இல்லை; துலக்கி வைத்த அகல் விளக்கென பளிச்சென இருந்தது அது. முழுமையான தூக்கமில்லையெனில் அதுபோல உணரமுடியாது. இனியும் ஏன் படுத்திருக்க வேண்டும் என்பதுபோல் எழுந்துகொண்டான். மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். எழுப்புவதா, வேண்டாமா என்று யோசித்தான். மனைவியை எழுப்பாமல் முகப்புக் கூடத்தில் வந்து அமர்ந்துகொண்டான். இரண்டு புறாக்கள் பால்கனி சுவரில் வந்து அமர்ந்தது. அதன் கண்கள் சிகப்பு மஞ்சள் நிறத்தில் இருந்தது. முழு வெள்ளை நிறத்தில் ஒரு புறாவின் கழுத்தில் மட்டும் அடர் சாம்பல் நிறத்திலும், இன்னொரு புறாவின் கழுத்தின் மேல் பக்கம் மட்டும் கருப்பு நிறத்திலும், பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது. பால்கனியின் உட்பக்கமாக மேற்கூரைவரை புறாக்கள் உள்ளே வர முடியாத வகையில் வலை கட்டப்பட்டிருந்தது. வலைக்கு அந்தப்புறமாக சுவரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு வருவதும், போவதுமாக உள்ளே வருவதற்கு முயன்று வலைகளுக்குள் மூக்கை நுழைப்பதும், வெளியே எடுத்துக் கொள்வதுமாக உள்ளே நுழைய முடியாமல் தத்தளித்தன. ஒரு முனையிலிருந்த கொக்கியிலிருந்து வலையை எடுத்து வலையின் முனையை சுருட்டி புறாக்கள் உள்ளே வருவதற்கு வழியை ஏற்படுத்தினான். அதனருகில் வந்த புறாவும் அலகை உள்ளே விடுவதும், வெளியே எடுப்பதுமாக தயங்கி நின்றது. அவன் வீட்டிற்குள் சென்று ஒரு தட்டில் கொஞ்சம் அரிசியும், பாசிப் பயிரும் எடுத்து வந்தான். அதற்கு முன்பே புறாக்கள் இரண்டும் உள்ளே பால்கனிக்குள் வந்திருந்தது. பிறகு கிண்ணத்தில் பாதியளவு தண்ணீர் நிறைத்துக் கொண்டுவந்து வைத்தான். இரண்டு புறாக்களும் மகிழ்சியாக விளையாடிக்கொண்டே பசியாறின. புறாக்களின் சத்தம் கேட்டு இன்னும் சில புறாக்கள் வந்து சேர்ந்தன. அவன் மனைவி டீயோடு வந்து நின்றாள். ஏதோ சொல்ல வந்தவள், பின் பேசாமல் சென்றுவிட்டாள். அவன் சிரித்துக்கொண்டான்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை, இரண்டு மாதங்கள் இருக்கும். படுக்கை அறையின் வெளிப்பக்கம் இருந்த பால்கனியில் புறாக்கள் கீச், கீச்சென சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. தூக்கம் கலைந்து போன எரிச்சல். “வல போட்டிருக்கல, பெறகு எப்படி புறால்லாம் உள்ள வருது”, என மனைவியிடம் கேட்டான். “நான் ஆசாரிய வரச் சொல்லுங்க, சைடுல வலையில்லனு, எத்தன நாளா சொல்லிட்டே இருக்கேன், கேக்கிறீங்களா? புறாவெல்லாம் உள்ள வந்து அசிங்கப்படுத்துது. ஒரு நா கழுவலனாலும் திட்டு, திட்டா, காஞ்சு போகுது, கழுவி தீரல…” என்றாள்.

“சரி, சரி நாளைக்கே வரச்சொல்றேன்” என்றான். அந்த ‘நாளை’ இன்றுவரை வரவேயில்லை.

சற்று நேரத்திற்கெல்லாம் காலை சிற்றுண்டி தயாராகியிருந்தது. இட்லியும், சட்டினியும் கொண்டுவந்து வைத்தாள். மகன் தனக்கு தோசைதான் வேண்டுமென்றான். திரும்பவும், அடுப்பை பற்றவைத்தாள். மகள் தக்காளிச் சட்னி வேண்டுமென்றாள். அப்போதுதான் அவனும் கவனித்தான்.

“ஆமால, தக்காளிச் சட்னி வக்கலையா?” என்றான்.

“இல்ல, வீட்ல தக்காளி இல்ல… நேத்து கடையில எல்லாரும் நாலுகிலோ, அஞ்சுகிலோனு வாங்கிட்டுப் போயிட்டங்களாம்… தீந்து போச்சுன்னு சொல்லிட்டாங்க, இன்னைக்கு கடத்தெறக்கவும் போய் வாங்கணும்” என்றாள்.

மதியம், சோறும், சாம்பாரும். அவன் “சோறு போடு” என்றுதான் கேட்பான். ‘ஒயிட் ரைசுக்கோ? ஸ்டீம் ரைசுக்கோ’ அவன் இன்னும் மாறவில்லை. அதென்ன ஒயிட் ரைஸ் என நினைப்பான். உணவு விடுதிகளில் அப்படிக் கேட்பவர்களை விநோதமாகப் பார்ப்பான். அதிலென்ன நாகரிகம் வாழ்கிறதென அவனுக்குத் தெரியவேயில்லை. முருங்கைக்காய் சாம்பார் மணம், வீடெங்கும் நிறைந்தது. உள்ளங்கையைக் குவித்து கைநிறைய சாம்பார் வாங்கி குடித்தான். நாக்கு வலமும், இடமுமாக சுழன்று சாம்பாரின் ருசியை முழுமையாக அனுபவித்தது. எந்தனை நாட்களுக்குப் பிறகு நிதானித்து, ருசித்து சாப்பிட வாய்த்திருக்கிறது என நினைத்துக்கொண்டான். பகல் மூன்று மணியை கடந்தும் மதிய உணவு அவனுக்காகக் காத்திருக்கும். சிலநாட்களில் மதியம் கொண்டுபோன உணவை சாப்பிடாமல் அப்படியே திருப்பிக் கொண்டு வந்திருக்கிறான். மூணரை, நாலு மணிக்கு அவன் சாப்பிடுவதைப் பார்த்த அனைவரும் “இவ்வளவு, தாமதமாக ஏன் சாப்பிடுகிறாய்?” எனக் கேட்பதுண்டு. பதில் எதுவும் சொல்லமால் அவன் அந்தக் கேள்வியை கடந்து செல்வான்.

நான்கு நாட்கள் கடந்தது தெரியவேயில்லை. ஐந்தாம் நாள் பொழுது போவது கடினமாக இருந்தது. எவ்வளவு நேரம்தான் தூங்கிக் கழிப்பது? பகலில் தூங்குவது சலிப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு வெகு நேரம் வரை உறக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்தான். பிறகு எப்போது தூங்கினான் என அவனுக்கே தெரியவில்லை. காலையில் எழுந்து பல் துலக்கும்போது, தலையில் முடி சிலுப்பிக் கொண்டிருந்ததைக் கண்ணாடியில் பார்த்தான். தலையில் இலேசாக தண்ணீர் தெளித்து சீவினான். முன் நெற்றி தாண்டி முடி படிந்தது. இடது கையால் முடியை அழுத்திப் பிடித்துக்கொண்டு மீசையை ‘ட்ரிம்’ செய்யும் கத்திரியால் வாகாக முடியை வெட்டினான். பிறகு மேல் பக்கமாக தூக்கி சீவி இரண்டு விரலுக்கிடையில் கோதி, விரலுக்கு மேலிருந்த முடியை வெட்டினான். முன்பொரு முறை அதைபோல் வெட்டி ஒன்றும் சரிவராமல் பார்பர் ஷாப்பில் போய் சரிசெய்து கொண்டது நினைவில் வந்தது. நல்ல வேளை இன்றைக்கு அதுபோல எதுவும் ஆகவில்லை. இல்லையென்றால் இன்னும் இருபது நாட்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. நேற்று இரவுதான் எட்டு மணிக்கு பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி இருபத்தொரு நாட்களுக்கு தேசிய ஊரடங்கை அறிவித்தார். குளித்துவிட்டு வெளியே வந்தான். ‘அன்னைக்கு எட்டு மணிக்கு வந்து நோட்டல்லாம் செல்லாது, எல்லாம் ஏ.டி.எம். வாசலில் நில்லுங்கள் என்றார், இன்னைக்கு யாரும் வெளியே போகாதீங்க, வீட்க்குள்ளேயே இருங்கன்னு சொல்லி, கணக்கை நேர் செய்து விட்டார் பிரதமர்’ என யாரோ வாட்சப்பில் அனுப்பிய மீம்சை இரசித்துப் படித்தான். அதே வேளையில் இந்த ‘கொரோனா’ என்ன செய்யப் போகிறதோ என்ற கலக்கமும் உண்டானது. வல்லரசு நாடுகளே செய்வதறியாது விழி பிதுங்கும்போது இவ்வளவு மக்கள் திரள்கொண்ட நாம் என்ன செய்யமுடியும்? தொழில் நுட்பம், தொழில் நுட்பம் என்பதெல்லாம் வெறும் பேச்சுதானா? இயற்கைக்கு முன்பு மனித சக்தி ஒன்றுமில்லையோ? இயற்கை தன்னை மீண்டும், மீண்டும் நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறதோ? இது இயற்கையா, செயற்கையா? தேசிய பேரிடர் என கேள்விப் பட்டுள்ளோம், இது உலகப் பேரிடராகவல்லவா இருக்கிறது. இதிலிருந்து மனித குலம் எப்படி மீளப்போகிறது? மருத்துவமும், இயற்கையும் ஒரு வழியை கண்டு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மதியத்திற்கான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது. அவன் அடுப்படிக்குச் சென்றான்.

“என்ன கொழம்பு?” என மனைவியிடம் கேட்டான்.

“சுண்டல், கத்திரிக்கா போட்டு புளிக் கொழம்பு வக்கப்போறேன்… ஏன், வேற எதவாது வேணுமா?”

“இல்ல, வேணாம்”

இந்த சமையல்தான் வேண்டும் என அவன் எப்போதும் கேட்பதேயில்லை. அதே சமயம் சமையல் என்றைக்கு அதிகம் ருசியாக இருக்கிறதோ, அன்றைக்கெல்லாம் ‘சமையல் நல்லா இருக்கு’ என்று சொல்லவும், பிடிகவில்லையன்றால் ‘இன்னைக்கு சரியில்லை’ என்று சொல்லவும் தவறியதில்லை. அவள் இரண்டையும் ஒன்றுபோல எடுத்துக் கொள்வாள்.

“இன்னைக்கு நான் கொழம்பு வக்கட்டுமா?” என ஏதோவொரு ஆர்வத்தில் கேட்டான்.

“சும்மா, அங்கிட்டுப் போங்க…”

“நீ சொல்லித் தா, நான் கொழம்பு வக்கிறேன்… “

“சொன்னா கேக்கமாட்டிங்களா?… போங்கனா…”

“எனக்கு கொழம்பு வக்கத் தெரியாதுன்னு நெனச்சயா?”

“பொங்கல் வீட்டுல இருக்கும்போது, நாந்தான் சமையல் செய்வேன். புருஜீல்லாம் சூப்பரா செய்வேன் தெரியுமா?! கொழம்பு கூட நல்லா வப்பேன்; என்ன, இப்ப எல்லாம் மறந்து போச்சு… சொல்லித் தந்தா எப்பவாது உதவும் தானே?”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், இடத்தக் காலி பண்ணுங்க, எனக்கு நெறைய வேல கெடக்கு…” என்றவாறு தோளைத்தொட்டு திருப்பி வெளியே தள்ளி விட்டாள்.

மாலை நான்கு மணிவாக்கில் குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே சிறிது நேரம் நடந்துவிட்டு வரலாம் என நினைத்து வெளியே வந்தான். வெளியே போகக் கூடாது என காவலாளி தடுத்தார். அப்படி வெளியே செல்வதாக இருந்தால் குறிப்பேட்டில் எங்கேப் போகிறோம் என குறித்துவிட்டு செல்லவும். அதுவும், “அனாஜ் லேனேக்கா, தவா லேனேக்கா தூ ஜா சக்தே சாயப்” என இந்தியில் சொல்லவும், அவன் “இல்லை, நான் சும்மா கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வரலாம் என்றுதான் வந்தேன்” எனக் கூறினான். “டிக்கே சாயப், ஆப் என்ரி கர்க்கே ஜாயியே” என்றதும் மருந்து வாங்கப் போவதாக குறிப்பேட்டில் குறித்துவிட்டு வெளியே வந்தான். நான்கு நாட்களுக்குப் பிறகு வெளிக்காற்று அவன் முகத்தில் பட்டது. குடியிருப்பு வளாகத்திலிருக்கும் பூங்காவிற்கு சென்றான். எப்போதும் குழந்தைகள், வயதானவர்கள், நடைபழகுபவர்கள் என மனித வாசத்தை சுவாசித்துக்கொண்டிருக்கும் பூங்கா சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறுவதாகத் தோன்றியது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இரண்டு, மூன்று பேர் பூங்காவில் இருக்கும் மரப் பெஞ்சில் அமர்ந்திருந்தனர். செருப்பை கழற்றிவிட்டு வெறும் காலில் மண் தரையை ஸ்பரிசித்தான். பூமித்தாயின் குளிர்ச்சி அவன் உடலெங்கும் பரவியது. நின்ற இடத்திலேயே காலை மாற்றி, மாற்றி குழந்தையைப்போல குதித்தான். இந்த ஐந்து நாட்களில் இப்போதுதான் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தான். அரை மணி நேரம் பூங்காவிற்குள் நடை பழகிவிட்டு மருந்து கடைக்குச் சென்று சளி மாத்திரை கேட்டு வாங்கிகொண்டு வீடு திரும்பினான்.

“அம்மா, எனக்கு பாவ் பாஜி…” உள்ளறையில் இருந்து மகன் குரல் கொடுத்தான்.

“எனக்கு, நூடுல்ஸ்…” அண்ணனுக்குப் போட்டியாக தங்கை வந்தாள்.

“இப்பதான், துணியெல்லாம் தொவச்சு, காயப்போட்டுட்டு அப்பாடானு உக்காந்தேன், அதுக்குள்ள பொறுக்கலையா?”

“ஏதாவது, ஒண்ணு கேளுங்க, ஆளுக்கு ஒண்ணு கேட்டா எப்படி?” இருவரும் தங்களுக்கு எது தேவையோ அதில் உறுதியாக இருந்தார்கள். அவன், இருவரையும் வெளியே அழைத்தான். “என்ன வேணும்?” எனக் கேட்டான்.

“பாவ் பாஜி” – மகன்.

“நூடுல்ஸ்…” – மகள்.

இன்னைக்கு ஒண்ணு, நாளைக்கு ஒண்ணு ரெண்டுபேரும் சேந்து சாப்பிடுங்க. அதற்குள் அவள் அடுப்படிக்குச் சென்றிருந்தாள். மகனும், மகளும் அப்பாவிடம் தலையாட்டிவிட்டு அடுப்படிக்குச் சென்று அம்மாவிடம் ‘குசு, குசு’ வென பேசிவிட்டு வந்தனர். சிறிது நேரத்தில் ஒரு தட்டில் பாவ் பாஜியும், ஒரு தட்டில் நூடுல்சும் வந்தது. அவன் என்ன என்பதுபோல மனைவியைப் பார்த்தான்.

“இன்னைக்கு ‘பாவ் பாஜி’ செய், நாளைக்கு ‘நூடுல்ஸ்’ செய்னு ஓங்க மகன் சொல்றான்.”

“இன்னைக்கு ‘நூடுல்ஸ் செய்’, நாளைக்கு ‘பாவ் பாஜி’ செய்னு மக சொல்றா” என்றாள், அவன் பார்வையின் பொருள் புரிந்தவளாக.

இரவு உணவு முடித்து, தொலைக் காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மனைவி, ‘கொரோனா’விலிருந்து தப்பிக்க (முடியுமா எனத் தெரியாது) மஞ்சள் கலந்த பாலைக் கொண்டுவந்து தந்தாள். எதிரே இருந்த சுவர் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்றைக் காட்டியது அது. அதற்குப் பின்னும் அடுப்படியில் சத்தம் கேட்கவும் புத்தகத்தை வைத்துவிட்டு அடுப்படிக்குச் சென்று பார்த்தான். வாஷ் பேசின் முழுதும் நிரம்பிக் கிடந்த பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள் அவள்.

இன்று ஏழாவது நாள் காலையில் எழுந்து வந்து பால்கனியில் சாய்வு நாற்காலியை போட்டு உட்கார்ந்தான். சூரிய ஒளி அவன் முகத்தில் பட்டு சிதறுகிறது. உடலெங்கும் இளஞ்சூடு பரவுகிறது. கண்கள் கூசவும், கண்களை மூடிக்கொள்கிறான். நினைவுகளெல்லாம் கண்களுக்குள் படமாக விரிகிறது. அவன் தனக்குத் தானே மென்மையாக சிரித்துக்கொள்கிறான், சோகத்தின் ரேகைகள் படர்கிறது. கிராமத்து வீட்டின் பின்புறமிருந்து பந்தலில் படரும் அவரைக் கொடியை நினைத்துக்கொண்டான்.

‘அக்கரையில் என் தோட்டம், காடு, வயல்கள்

இக்கரையில் என் வீடு, வாழ்வு, மனசு

எதிரே நதி’.

அண்ணாச்சி விக்ரமாதித்யன் கவிதை நினைவுக்கு வருகிறது. எதிரே கடக்க முடியாத பெரு வெளியில் நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. அவன் மூடிய கண்களுக்கப்பால் அக்கரை எங்கோ வெகு தொலைவில் தெரிகிறது. அது கணந்தோறும் நகர்ந்துகொண்டேயிருக்கிறது. ‘எல்லையில்லா இடத்தை நோக்கி அது நகர்கிறதோ?’ என்ற கேள்வி எழுந்தது. இது எதுவும் தனக்கு ஒன்றுமேயில்லை என்பதுபோல் அவன் மனைவி அடுப்படியில் வேலை செய்துகொண்டே இருக்கிறாள். அவன் மனைவியைப் பார்க்கிறான், இவ்வளவு நாளும் நாம் ‘சும்மா’தான் இருந்திருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்கு முதன்முறையாக தோன்றியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *