கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 10,773 
 
 

தாயோடு அறுசுவை போம். தந்தையொடு கல்வி போம். தான் பெற்ற சேயோடு தனக்கிருந்த செல்வம் போம் என்று பாடிய முன்னோர்கள் இன்றிருந்திருந்தால் தான் பிறந்த நாட்டோடு தனக்கிருந்த மதிப்புப் போம் என்று நிச்சயமாகப் பாடியிருப்பார்கள். அப்படியொரு கேவல நிலைக்கு வந்து விட்டேனே என்ற நினைப்பு வரும்போதெல்லாம் அவரையும் அறியாமல் கண்கள் குளமாகிவிடும் துரைரட்ணத்துக்கு.

என்ன துரைரட்ணம் மகள் டெலிபோன் ஏதாவது எடுக்கிறவளோ? என்று கேட்கும் நண்பர்களின் கேள்வியில் தொனிப்பது ஏளனமா ? அல்லது இரக்கமா? என்று அவருக்குப் புரிவதில்லை. நீங்கள் கவனமாக இருந்திருக்க வேணும் என்று தொடங்கி அவமானத்தில் உருட்டி எடுப்பவர்களுக்குப் பயந்து அவர் அதிகம் வெளியில் வருவதில்லை.

பத்தொன்பது வயது மூத்த பிள்ளை. கனடாவுக்கு கூப்பிட்டு மூன்று வருடங்கள் கூட முழுமையாக முடியவில்லை. படிக்க விட்டதற்குப் பரிசாக தலைகுனிவைத் தான் தரப் போகுது என்று யாருக்குத்தான் தெரியும்? வளர்ப்புச் சரியில்லை. அதனாலே தான் போட்டுது என்று சனங்கள் கதைக்குது. உண்மை அதுவல்ல. ஓடின அன்று கூட காலையில் எழுந்து அப்பாவுக்கும் தங்கைமாருக்கும் சாப்பாடு செய்து வைத்து ஊதுபத்தி கொழுத்திச் சாமி எல்லாம் கும்பிட்டுப் போட்டுத் தான் பிள்ளை போனவள்.

ஒரு யாழ்ப்பாணத்துப் பொம்பிளைப் பிள்ளையைப் பெற்றார் எப்படி வளர்ப்பினமோ அப்படித்தான் வளர்த்தது. என்ன செய்யிறது, இந்தப் பிள்ளையாலே கவலைப்பட வேணும் என்று விதி இருக்கும்போது யாரையும் குற்றம் சொல்லுவதில் பலனில்லை.

பக்கத்து வீட்டுக் காயத்திரி. ஓவிசியர் ராசதுரையின்ரை மகள். ஊரிலும் இவள் ராஜியோடை தான் படித்தவள். இங்கும் ஒன்றாகப் போய் வந்தவள். தகப்பன் நிறை தண்ணிக் காரனாக இருந்தாலும் ஒழுங்காகப் படிச்சு வங்கியில்; வேலையாகி அடுத்த மாதம் கல்யாணமும் நடக்கப் போகுது. இந்தப் பிள்ளைதான் அவசரப்பட்டு வேறு நாட்டுக்காரனோடை போட்டுது.

காயத்திரி நீ கூட மாமா ராஜி இப்படிச் செய்யப் போறாள் என்று ஒரு வார்த்தை சொல்லாமல் மறைச்சுப் போட்டாய் என்று அவர் கேட்டதற்கு துரை மாமா கடைசி வரைக்கும் நாங்கள் ஒருவரும் ராஜியை சந்தேகப்படவில்லை. ராஜி சும்மா பழகுது என்று தான் நான் நினைச்சேன். ஊரிலேயும் இங்கேயும் எத்தனையோ பெடியளின்ரை பிரச்சினை வந்தும் தானும் மாட்டுப் படாமல் எங்களுக்கும் புத்தி சொல்லுறது ராஜி. அதின்ரை கூடாத காலமோ என்னவோ தான் இப்படிச் செய்து போட்டுது மாமா என்று அந்தப் பிள்ளை கண் கலங்கியதும் தெருவென்றும் பார்க்காமல் வாய் விட்டு அழுது விட்டார் துரைரட்ணம்.

இஞ்சையப்பா இரவு பத்து மணிக்குப் பிறகு இவள் ஆருக்கோ டெலிபோன் எடுத்து சிரிச்சுக் கதைக்கிறாள். சிரிப்பைப் பார்த்தால் பிழையான சிரிப்பாய்த் தெரியுது. எனக்கு யோசினையாய்க் கிடக்குது. ராஜி பிழையாய் நடக்க மாட்டாள் என்ன?
இன்னும் ஒரு வருடப் படிப்புத்தானே. முடிஞ்சதும் கெதியாகப்; பிடிச்சுக் கட்டிக் கொடுத்துப் போட வேணும். பிறகு உதெல்லாம் சோலி கண்டியளோ.

ஆடி அமாவாசை விரதத்துக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டே மனைவி பவளம் முதன் முதலாக மகள் மீது குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்திய போது நடுங்கிப் போனார் துரைரட்ணம்.

பிள்ளைகளின் குற்றங்குறைகளில் எதை கணவனுக்குச் சொல்ல வேண்டும். எதைச் சொல்லக் கூடாது என்பதையெல்லாம் ஒன்றுக்கு நாலு தடவைகள் யோசித்துக் கதைக்கிறவள் பவளம். அவளே சிவப்பு வெளிச்சம் காட்டும் பொழுது வெறுமனே ஒதுக்கி விட மனது வரவில்லை. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இங்கே ஊர் மாதிரி நூல் பிடிக்கேலாதப்பா.

படிக்க விட்டால் சினேகிதங்கள் போனுகள் வரத்தான் செய்யும். ராஜி அப்படிப்பட்ட பிள்ளை இல்லை. என்ரை பிள்ளைகள் அப்படி நடக்காதுகளப்பா என்று சொன்னவர் பின்னேரம் வேலைக்குப் போகும் போது மனம் பொறுக்காமல் மகளைப் பிடித்துக் கேட்டும் விட்டார்.

ராஜி இஞ்சே வா. என்ன நீ யாரோ வேறை நாட்டுக்காரனோடை மணித்தியாலக் கணக்கிலே ரெலிபோன் கதைச்சுக் கொண்டு இருக்கிறாய் என்று அம்மா சொல்லுறா. கனடாவிலே தமிழ்க் குடும்பங்களிலே நடந்து கொண்டு வாற சீரழிவுகள் தெரியுந்தானே. வடிவாய் யோசிச்சு நட.

கலகலத்துச் சிரித்தாள் ராஜி;. அப்பா இனிப்பிலே தான் எறும்பு மொய்க்கும். நெருப்பிலே மொய்க்குமா? அம்மா படிக்காதவ. அப்படித்தான் கதைப்பா! மனதைப் போட்டுக் குழப்பாமல் போட்டு வாங்கோ.

மகள் சாப்பாட்டுப் பையைத் தூக்கி தந்ததும் ஏன் அப்படிச் சொன்னேன் என்று ஒரு காலத்தில் தன்னையே நொந்து கொண்டவர் தான். இன்று காலமெல்லாம் நொந்து கொண்டிருக்கிறார்.

அக்கா படிச்சு இந்தக் குடும்பத்துக்கு வாங்கித் தந்த பெயர் காணும். நீங்கள் இருங்கோ வீட்டிலே என்று மற்றப் பிள்ளைகளுக்கு ஒருநாள்; சொன்ன போது அப்பா அக்கா மாதிரி நாங்கள் நடக்க மாட்டோம் என்று அவர்கள் திருப்பிச் சொன்னதும் வேதனையின் உச்சிக்கே போய் விட்டார் அவர்;.

குணத்திலே அவளின்ரை கால் தூசிக்குக் கூடச் சமமில்லாத நீங்கள் எல்லாம் என்ரை பிள்ளையைக் குற்றம் சொல்லுறியளோ. என்ரை பிள்ளை எவ்வளவு நல்லது என்று எனக்குத் தான் தெரியும். அவர் மனம் சொல்லிக் கொண்டது. எல்லாருமே அவருக்குப் பிள்ளைகளாக இரு;ந்தாலும் அவளிடம் மட்டும் தனியொரு பற்று.

ஒரு நாள் மாலை. வேலைக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் துரைரட்ணம். அவரின் சாப்பாட்டுப் பையிலே முட்டை பொரித்துப் புரட்டிய இடியப்பத்தையும் சுடுதண்ணீர்ப் போத்தலையும் வைக்கும் போது மகள் கேட்டாள்

அப்பா உங்களை ஒன்று கேட்பேன்;. சரி என்று சொல்லுவீங்களா? நீங்கள் சரி என்று சொன்னால் தன் நான் சொல்லுவேன்.

சரி என்ன என்று சொல்லு ராஜி

அப்பா நான் வேலைக்குப் போகப் போறேன். ஊரிலே பெரிய மாஸ்டரா இருந்த நீங்கள் இப்படி கண் முழிச்சுக்கொண்டு செக்குருட்டி காட் வேலைக்கெல்லாம் போய் விடிய வாறது எனக்கு விருப்பமில்லை அப்பா. அது இந்த வயதுக்கு இயலாத வேலை என்று எனக்கு வடிவாகத் தெரியும். அம்மாவுக்கும் உங்களை நினைச்சுக் கவலை. எனக்கும் தானப்பா. நீங்கள் அம்மா தங்கச்சி ஆட்களைப் பார்த்துக் கொண்டு வீட்டிலே இருங்கோ. நான் நல்ல வேலை ஒன்று தேடுறன் என்ன? கொஞ்ச நாளிலே ரஜனியும் வேலை தேடி எடுத்தாள் என்றால் பிரச்சனை இல்லை.

அம்மாடி! அப்பாவுக்கு உழைச்சுக் குடுக்க வேணும் என்ற நினைப்பு இருக்கே அதுவே நீ உழைச்சுத் தந்ததுக்குச் சரி; ராஜி;. குஞ்சு! நீ படிக்க வேணும். பல்கலைக்கழகம் போக வேணும். பிறகு வேலைக்குப் போகலாம். நீ என்னைப் பற்றி யோசிக்காதே.

எனக்கு ஊரிலும்; பள்ளிக்கூடம் தான். இங்கேயும் அதுதான். ஆனால் வேலை தான் வித்தியாசம்;. கடவுள் அந்த அளவுக்காவது கருணை காட்டினாரே என்று நிறைவாக இருக்கிறேன். போ போய்ப் படி. இனிமேல் உனக்கு இந்த வேலை நினைப்பு வரக் கூடாது சரியோ? ஒருவேளை அப்பா கிழவனாய்ப் போட்டார் என்று யோசிக்கிறியோ?

போங்கோ அப்பா நீங்கள். நான் அப்படி நினைக்கேல்லை. அப்பா நித்திரை முழிச்சுக் கஸ்டப்படுறதைப் பார்த்தால் எங்களுக்குக் கவலை இருக்காதோ?

நீ இருக்கேக்கை எனக்கு என்ன கஸ்டம்?

உங்களோடை கதைக்கேலாது அப்பா. சரி சரி கவனமாய்ப் போட்டு வாங்கோ. ஒன்பது மணிக்கு மருந்தைக் குடியுங்கோ என்ன. பேர்ஸ் கண்ணாடி எல்லாம் எடுத்தியளோ? வாசிக்கப் பேப்பர்? விடிய மழை அப்பா கவனம் வாறது! குடையை பிடிச்சுக் கொண்டு லைட்டைப் பார்க்காமல் கடந்து போடாதையுங்கோ என்ன?

இது நல்ல விளையாட்டுத் தான். கட்டிக் கொடுத்த பிறகும் அப்பாவின்ரை மடியிலே தான் கிடப்பேன் என்று இவள் நிக்கப் போறாளப்பா. போற இடத்திலே வீண் பிரச்சனை தான் வரப்போவுது இருந்து பாருங்கோ! நிறைவோடு சிரிப்பாள் பவளம் படுக்கையில்!

ஏன் உனக்குப் பொறாமையாகக் கிடக்குதே! அவள் முடிச்சுப் போனால் நானும் அவள் இருக்கிற வீட்டுக்குப் போய்விடுவேன். கஞ்சி என்றாலும் அவளின்ரை கையாலே குடிச்சால் போதும். நீயும் மற்றப் பிள்ளைகளும் இந்த வீட்டிலே இருங்கோ. அவள் போனால் இந்த வீட்டிலே பிறகு என்ன சந்தோசம் இருக்கப் போவுது?

பழைய நினைவுகள் சிலவேளை மனதை உருக்கியெடுக்கும். இப்போதெல்லாம் அவரால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை. நேர் கோட்டில் எழுத முடிவதில்லை. காது கூட ஒத்துழைக்க மறுக்கிறது. வேலைக்குப் போய்த் திரும்பி வருவதற்குள் தெருவில் ஒரு கார் என்றாலும் நின்று ஒலியெழுப்பி முறைத்து விட்டுச் செல்லத் தவறுவதில்லை. அந்த அளவுக்குப் பார்வை. அப்படியிருந்தும் போய்த் தான் வருகிறார். காசு வேணும். இருக்கிற இரண்டு பிள்ளைகள் ரஜனி ராகினியோடு பவளத்தையும் பராமரிக்க வேணும். வீட்டு மொல்க்கேச்ஸ் கட்ட வேணும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பொழுது விடிந்ததும் விடியாததுமாக அந்த டெலிபோன். அதைத் தொடர்ந்து பரபரப்பு. கண்விழித்தவர் படுக்கையை விட்டு எழ முன்னரே இஞ்சருங்கோ ராஜி வருகுதாம். மனைவி பவளத்தின் குரல் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்து ஒலித்தது.

இஞ்சை ஏன் வாறாளாம்? என்றவர் எழுந்து கலண்டர் திகதியைக் கிழித்தார். பின்னேரம் அட்டமி நவமி. ஐயோ இந்தப் பிள்ளை வேளைக்கு வந்திட வேணும்;. சின்ன அறைக்குள் அம்மாவும்; மற்றப் பிள்ளைகளும் என்னவோ கூடிக் கதைப்பது கேட்கிறது. என்ன என்று அவர் கேட்கவில்லை. அப்பா அக்காவோடை ஒரு குட்டித்தம்பியும் வாறான். இளைய மகள் ரஜனி சொன்னதும் இதென்ன மடம் என்று நினைச்சுக் கொண்டாளாமோ? என்று கேட்டபடியே எழுந்து வேலைக்குப் போகும் பையில் இனிப்பு ஏதாவது இருக்குதா என்று பார்த்து திருப்திப்பட்டு;க் கொண்டார்.

மகள் விசயத்தில் ஆரம்பத்தில் அவர் காட்டிய விரோதம் பலருக்கும் தெரிந்தது. டேய்! துரைரட்ணம் என்று பெயர் சொல்லி அழைத்துப் புத்திமதி சொல்லக் கூடிய முதியவர் ஒருவரைப் பிடித்துக் கூட முயன்று பார்த்தாள் பவளம். ஐயா கொலை செய்தவனைக் கூட நான் மன்னிப்பேன். களவும் உந்தச் செய்கையும் எனக்குச் சத்திராதி கண்டியளோ. என்ரை பிள்ளை செத்துப் போச்சுது அவ்வளவு தான் என்று முடிவாகச் சொன்னவர் இன்று நெகிழ்ந்து கொடுப்பதறகும் காரணம் உண்டு.

துரை மாமா நான் ராஜியைக் கண்டனான். அவன் விட்டுப் போட்டுப் போட்டான். பாவம். கைக்குழந்தையோடை மெற்ரோ கவுஸ்க்கு விண்ணப்பிக்க வந்தவள். மெலிஞ்சு தடி மாதிரி இருக்கிறாள் மாமா. எங்கையோ பக்ரறியிலே வேலை செய்யுறாளாம். அப்பா அம்மா என்னை எல்லாம் மறந்து போனியோ என்று கேட்டன். நான் கேட்டது கவலை போல. கொஞ்ச நேரம் பேசாமல் நின்று போட்டு இல்லை அதெல்லாம் முடிஞ்சு போன கதை என்றாள். அப்பாவும் அம்மாவும் உன்னை நினைச்சு இன்றைக்கும் கலங்கிக் கொண்டு இருக்கினம். நீ உப்பிடிச் சொல்லுறாய் என்று நல்ல பேச்சுக் குடுத்தன். கேட்டுக் கொண்டு பஸ்சுக்கு போறாள். டெலிபோன் நம்பர் தந்தவள் இந்தாங்கோ என்று காயத்திரி சொன்ன வார்த்தைகள் அவரின் வைராக்கியக் கோட்டையைச் சிதைத்து வேதனைக் குவியலாக்கி விட்டன.

பிள்ளே! இந்த வீடு ஆரின்ரை வீடு மோனை. அவளுக்கென்று வாங்கின வீடு தானே. வந்து இருக்கச் சொல்லு. அவளுக்கு எங்களோடை இருக்கப் பிடிக்காட்டில் நாங்கள் இடம் மாறிப் போறம் என்றும் சொல்லு என்ன. ஏன் மோனை இந்தச் சின்ன வயசிலே வீடு தேடி அலைய வேணும்? வேலை செய்ய வெணும்? இருட்டு என்றால் முற்றத்திலும் இறங்காதவள் எப்படி தனிய சீவிக்கிறாளோ என்று யோசிக்கவே என்னவோ செய்யுது. அம்மா! எப்படியாவது அவளுக்கு புத்தி சொல்லி கூட்டிக்கொண்டு வா மோனை.

அப்பா அக்கா என்ற இளைய மகளின் வார்த்தையும் கார்ச் சத்தமும் கேட்டுத் துள்ளி எழுந்தார் துரைரட்ணம். வாசலிலே நிறுத்தி வைத்து நாலு கேள்வி கேட்க வேண்டும் என்ற நினைப்பு வருவதற்கு முன்னரே மூன்று வருட இடைவெளி விட்டுக் கேட்ட அப்பா என்ற அந்தக் குரல் அவரின் வைராக்கியத்தையே நொருங்கச் செய்து விட்டது. சிலையாக நின்றார்.

அதே சிரிப்பும் துடிதுடிப்பும். இருபத்து மூன்று வயதிலேயே சோகத்தின் விளிம்பைப் பார்த்து விட்டதற்கு அறிகுறியாக ஆங்காங்கே வெள்ளிக் கம்பியைச் செருகியது போன்ற பின்னல். இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே தாயின் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிலத்தில் இழுபடும் குழந்தை. அதைப் பொருட்படுத்தாது ராக்ஸிக்கு காசு கொடுக்கும் மகள். இவற்றையெல்லாம் விட மகளின் நெற்றியிலே புள்ளியாகத் தெரிந்த சிவப்புப் பொட்டைத் தான் பார்த்துக் கொண்டு நின்றார் துரைரட்ணம். எல்லாமே கனவு போல இருந்தது அவருக்கு.

வாங்கோ அப்பா என்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் மகளின் பின்னே சென்று சோபாவில் அமர்ந்தார். மகளின் பார்வை அம்மாவிடம் திரும்பியது. துரைரட்ணம் குழந்தையைப் பார்த்தார். சுருண்ட வெள்ளை மயிர். பூனைக் கண். கைநீட்டிக் கூப்பிட்டார். வந்தான். தூக்கி மடியில் இருத்திக் கொண்டார். பெயரைக் கேட்டார் ஆங்கிலத்தில. அஜித்!

அப்பா அவனுக்குத் தமிழ் தெரியுமப்பா. தேவாரங்கள் கூடத் தெரியும்! அம்மா ஆட்களுடன் அறையில் இருந்து கொண்டே சொன்னாள் ராஜி. மனதிலே பாரம் இறங்கியது போல இருந்தது அவருக்கு. வேலைக்குக் கொண்டு போகும் பையிலிருந்து ரொபி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.

பிள்ளைகள் இந்தக் குழந்தைக்கு சாப்பிட ஏதாவது குடுங்கோவன். பாவம் என்று அவர் சொன்னதும் ராஜி நீ வாறாய் என்றதும் ரஜனி புட்டு அவிச்சது. குழந்தைக்குத் தான் என்ன சாப்பாடு செய்யுறது என்று யோசிச்சுக் கொண்டிருக்கிறம். காயத்திரி சொல்லிச்சுது பால்போல வெள்ளைப் பிள்ளை என்று. அதுதான் எங்களி;ரை சாப்பாடு சாப்பிடுமோ தெரியாது என்று போட்டு இருக்கிறம். ராகினியை விட்டு பிஸ்ஸா ஏதாவது வாங்கிக் கொடுக்கட்டோ? என்றாள் பவளம்.

சும்மா போங்கோ அம்மா. அவன் இடியப்பம் புட்டு எல்லாம் சாப்பிடுவான். வேணும் என்றால் முருக்கங்காய் காய்ச்சிக் குடுத்துப் பாருங்கோ வடிவாய்க் காந்திச் சாப்பிடுவான் என்றாள் ராஜி. துரைரட்ணம் பெருமூச்சு விட்டார். கடவுளே என்று நிறத்தைத் தவிர மற்றதெல்லாம் ஒத்துப் போய்விட்டால்?

ரஜனி! என்ன மோனை சாப்பாடு ஏதாவது கட்டினியோ? வேலைக்கு நேரமெல்லோ போவுது என்றார் இளைய மகளிடம் துரைரட்ணம். அப்பா என்றாள் ராஜி. அவள் கண்ணிலே கண்ணீர். சாப்பாட்டுப் பையுடன் சேர்த்து அவரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு அழுதாள். அப்பா நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம். நான் இப்ப வேலை செய்யுறன் அப்பா. இனி உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.

என்னுடைய அப்பா என்னைப் பேசுவார். அடிப்பார் என்று நினைச்சுக் கொண்டு வந்தேன். நீங்கள் எதுவுமே கேட்காதது அடிக்கிறதை விடக் கொடுமையாகக் கிடக்குது அப்பா. என்னாலே தாங்க முடியல்லே. நீங்கள் இப்படி என்னை நடத்தினால் நிச்சயமாக நான் செத்துப் போவேன். இது அப்பா மேலே சத்தியம். ராஜி அழுதுகொண்டே சொன்னாள்.

ராஜி உன்மேலே எனக்கு ஒரு கோபமும் கிடையாது. நீ படிக்க வேணும் என்று ஆசைப்பட்டேன். நீ படிக்கல்லே. கல்யாணம் கட்டினாய். வேறு இனத்திலே கட்டின சிலதுகள் நல்ல ஒற்றுமையாகத் தான் இருக்குதுகள்! நீ ஒற்றுமையாய் இருக்கல்லே. சின்ன வயசிலே பிள்ளை. ஒன்றுக்கு முன்னாலே போட்ட சைபர் மாதிரி எந்தவொரு செய்கையும் உன்னை உயர்த்தி விடல்லே. காரணம் பாதை பிழை. அதனாலே பயணமும் பிழை. கலாச்சாரம் அது இது என்று உன்னோடை கதைச்சு பொய்யான வியாக்கியானம் செய்யவும் நான் விரும்பல்லே.

காரணம் இன்னும் கொஞ்சக் காலத்திலே சில பிள்ளைகளைத் தவிர இதைத்தான் பல தமிழ்ப் பிள்ளைகள் செய்யப் போகினம்! அதை எப்படித் தடுப்பது? தடுக்க எல்லாப் பெற்றாருக்கும் விருப்பந் தான். எப்படியம்மா தடுப்பது? உன்னைப் பார்! எப்படியெல்லாம் வளர்த்தேன். தடுக்க முடிஞ்சுதா?

தமிழ் இனத்தை விட மற்றச் சாதிகளிலே கல்யாணம் முடிப்பது பரவாயில்லை என்று நினைக்கக் கூடியதாகவும் பல குடும்பங்களிலே சில இளம் தமிழ் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொண்டு பிரச்சனைப் படும் போது அதைப் பார்த்துப் பயந்து நீங்கள் மாற்று வழி தேடுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

எப்பவும் ஒரு சமுதாயத்திலே ஏற்படுகின்ற கலாச்சார மாற்றத்துக்கு அதற்கு முந்திய காலத்திலே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வித்துக்கள் இரகசியமாகத் தூவப்பட்டு இருக்கும். அந்த வித்திலே ஒன்றுதான் நீ! இது உனது பிழை இல்லை! ஆற்றிலே உன்னை இறக்கி விட்டு கால் நனையாமல் பார்த்துக் கொள் பிள்ளை என்று நான் சொன்னால் நீ தான் என்ன செய்யிறது? அதனாலே தான் உன்னைப் பேசவில்லை. அடிக்கவில்லை.

நடந்தது நடந்து போச்சு. இப்பவும் உன்மேலே எனக்கு இருக்கிற பாசத்தாலே ஒன்று சொல்லுறன். குழந்தையோடு வந்து நின்றாலும் நீ எனக்குக் குழந்தை தான்! அதனாலே நீ வேலையை விட்டுப் போட்டு தொடர்ந்து படி. என்ரை மூன்று பொம்பிளைப் பிள்ளைகளோடை உன்னுடைய பிள்ளையையும் நாலாவது என்று நினைச்சு நான் வளர்க்கிறேன். எனக்கு வேலைக்கு நேரம் போட்டுது. போய் முகத்தைக் கழுவிப் போட்டு சாமியைக் கும்பிடு. இனியாவது ஒரு நல்ல வாழ்க்கையைக் காட்டச் சொல்லிக் கேள் என்ன அம்மா சரியோ? அழாதே!

மகளின் கண்ணீரைத் துடைத்து அதே கையால் கன்னத்தையும் வருடி விட்டு நடந்தார் துரைரட்ணம். இப்பொழுது அவர் கண்களில் கண்ணீர் முத்துக் கட்டியிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *