சுமப்பவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 7,722 
 
 

காலை மணி ஏழு. நான் கிராமத்தை நோக்கி கைக்கிளில் சென்ற போது நடுவழியில் தூரத்தில் ஒற்றை ஆளாய்த் தெரிந்த முகம் ஒன்று நடந்து வருவது போல் தெரிந்தது. உற்றுப் பார்த்தேன். அவரேதான் ஐயப்பன் கீதாரி. சுமார் பத்து வருடங்களுக்கு மேல் பார்க்காத ஆள்.

அதே நடை. அதே உடை. ஆள் மட்டும் கொஞ்சம் உடைசல் ஏன் ?

வருடா வருடம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் முதுகுளத்தூர் தாலுகா சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தங்களிடமுள்ள ஆடுமாடுகளை மேய்த்து அப்படியே பஞ்சம் பிழைக்க ஒரு கும்பல் கிளம்பும். அது காவிரிப்படுகை தஞ்சை மாவட்டம் குக்கிராமங்களில் வந்து நின்று கிராமத்து பண்ணை மிராசுகளை அண்டி அவர்களிடம் இருக்க இடம் கேட்டு தங்கி தாங்கள் கொண்டு வந்த கொடி ஆடு செம்மறி ஆடுகளுடன் உள்ளூர் ஆடுகளையும் வீடுவீடாக சென்று கேட்டு சேர்த்து ஐம்பது என்னும் எண்ணிக்கையை ஐநூறாய் உயர்த்தி கிடையாக்கி அதை எருவிற்காக வயல்களில் இரவில் மறித்து கூலி பெறுவதுதான் இவர்கள் தொழில். இவர்கள் அறுவடை முடியும் காலமான பிப்ரவரியில் வந்து ஜுனில் காவிரியில் தண்ணீர் வந்த பிறகு சென்று விடுவார்கள்.

முதன் முதலாக இந்த கீதாரி எங்கள் கிராமத்திற்கு நாலைந்து நண்டு சிண்டுகளுடன் வந்து இருக்க இடம் கேட்டு எங்கள் வீட்டுப் படியேறினார். நண்டு சிண்டுகளில் ஒன்று பெண். பத்து வயசு பாவாடை சட்டை அணிந்து கருப்பாய் இருந்தாலும் நல்ல களையாய் இருந்தது. தலையில் பனை ஓலைக் கூடை. அதில் சாமான்கள். அடுத்து நான்;கும் ஆண் பிள்ளைகள். ஒருவனுக்குப் பதினைந்து வயதிருக்கும் முகத்தில் அரும்பு மீசை இருந்தது. அவன்தான் பெரியவன் போல. அடுத்ததெல்லாம் பத்து, ஏழு, ஐந்து வயதுகள். ஆண் எல்லாம் கீதாரியின் முகசாடைகள்.

அது கோடை காலமென்பதால் அப்பா மாட்டுக்கொட்டகைப் பக்கமிருக்கும் தவிட்டு அறையை ஒழித்துக் கொடுத்து அவர்களை அங்கே இருக்கச் சொன்னார். அதுவே அவர்கள் வருடா வருடம் வந்து தங்குமிடமாயிற்று. சாமான்கள் வைக்க மட்டுமே அந்த அறை. சமையலுக்கெல்லாம் எதிரே உள்ள திறந்த வெளி. விறகு……?… வயல்வெளி வரப்புகளில் ஆடுகளுக்கு அலக்கால் வெட்டிப்போடும் நாட்டுக்கருவை, வேலிக்கருவை சுள்ளிகள். பெரியவன் தலைமையில் ஆண்கள் எல்லாரும் ஆடு மேய்க்கப் போய் விடுவார்கள். இரவுப் பொழுது மட்டும் சாப்பிட இரண்டிரண்டு பேர்களாக வீட்டிற்கு வருவார்கள். பெண்… காலையில் அவர்களுக்கு தலையில் பழையதும் தூக்குவாளிகளில் கைகளில் நீசத் தண்ணியும் எடுத்துப் போவாள். பத்துப் பதினோரு மணிக்கு வந்து வீட்டு வேலைகள் பார்த்து மாலை இரவுக்குச் சமைப்பாள். எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளுடன் கூடத்தில் ஓரமாகப் படுப்பாள்.

கீதாரிதான் குடும்பத்திற்குத் தலைவரென்பதால் மொத்த நிர்வாகமும் அவர் கையில். வயசு முப்பத்தைந்து நல்ல தாட்டீகமான உடம்பு. உருவத்திற்கேற்ற தொப்பை.. வயிறு. உடம்பில் மெல்லிய மல் துணியில் தைத்த கை வைத்த ஜிப்பா இல்லை பனியன். தோளில் அந்த அளவு மெலிசுக்குத் துண்டு. இடுப்பில் எட்டு முழ வேட்டி. அது அவிழாமலிருக்கவும் பணப் புழக்கத்திற்கும்…இடுப்பில் பட்டையாய் கை அகலத்திற்கு பச்சைப் பெல்ட். மிராசுகளிடம் பேச்சு வழக்கு, கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றிலும் இவருக்கு ரொம்ப நல்ல பெயர்.

கீதாரிக்கு மனைவி கிடையாது. கடைசி பையனைப் பெற்றுப் போட்டு விட்டு அவள் ஐந்து வருடங்களுக்கு முன் இறப்பு. அவர் வயதை உத்தேசம் செய்தும் பிள்ளைகளைச் சாக்கிட்டும் அவரது உறவினர்கள், நண்பர்கள், பெண்களைப் பெற்றவர்கள் எல்லாரும் அவரை இரண்டாம் திருமணத்தற்கு வற்புருத்த… இவர் மட்டும்…..

‘‘இதோ பாருங்கப்பு. ஒன்னைத் தொட்டக் கையால் இன்னொன்னைத் தொட எனக்கு மனசில்லே. எல்லாம் இதே வாழ்க்கை, பெண் சுகம். இது எல்லாத்தையும் விட முக்கியம் என் மனைவியைத் தவிர மத்த எவளையும் எனக்கு அந்த இடத்துல வைச்சுப் பார்க்க இஷ்டமில்லே. ஐயா ! அடுத்து வர்றதுல இன்னொரு சங்கடம். அதுக்கும் ரெண்டு மூணு பொறந்து குடும்பம் பெரிசாகி வாழ்றது கஷ்டம். அது மூத்தப் புள்ளைங்களைச் சீரமாற அடிச்சாலும் சங்கடம். அந்த வம்பே வேணாம். அப்புறம்…. இது செத்து அடுத்ததைத் தேட முடியுமா ? இப்படியே தேடிக்கிட்டிருந்தா வாழ்க்கை ? புருசன் செத்துப் போனா பொண்டாட்டிக்கு நாம புதுக்கலியாணம் பண்றோமா. இல்லே…. அந்த பேச்சையாவது எடுக்கிறோமா எதுமில்லே! அப்புறம் எதுக்கு ஆம்பளைக்கு மட்டும் அந்த பேச்சு ? எனக்கு ராமனா இருக்கவே விருப்பம். கண்ணனா இல்லே.‘‘ நல்ல தெளிவான முடிவு. அடித்துச் சொல்லி விட்டார்.

அவர்களும் விடவில்லை.

‘‘சரிங்க. எல்லாம் ஆணாய் இருக்கீங்க. சோறு கறியாக்க ஆள் ?’’ மடக்கினார்கள்.

அதற்கும் அவர் சரியாகவே பதில் வைத்திருந்தார்.

‘‘என் கூடப் பொறந்த அக்கா ஒன்னு இருக்கு சாமி. அது மூணு பொட்டைப் புள்ளைகளைப் பெத்து கஷ்டப்படுது. அதுல ஒன்னைக் கொண்டு வந்து சோறாக்க கறியாக்க வைச்சு…அப்புடியே வளர்த்து மருமகளாக்கிக்கிட்டா… எனக்கும் கஷ்டம் நீங்கும். அக்கா சுமையைக் குறைச்ச நம்மதியும் சேரும்.’’ என்றார்.

‘‘சீர் செனத்தி ?’’

‘‘மாத்து மகதானேய்யா மருமக. அது எதுக்கு !?’’

இதிலும் தெளிவு. அடுத்து யாரும் வாய்த் திறக்கவில்லை. அந்தப் பெண்தான் பத்து வயசு ரேவதி.

அம்மாடியோவ் ! அது வேலையில் வில்லி. ஒரு மரக்கால் பானையை ஒரேயடியாய் இறக்கி வடிக்கும். குழம்புக்கு கை நிறைய மிளகாய் சாந்து எங்கள் வீட்டு பெரிய அம்மியில் எட்டாமல் பெரிய குழவியை இழுக்கத் தெம்பில்லாமல் எம்பி எம்பி அரைக்கும்.. கிடை ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் கிடந்தாலும் தலையில் பானை பழைய சோறு நீசத்தண்ணியுடன் நடக்கும்.

ரேவதிக்கு பெரியவன் கட்டிக்கொள்ளப் போகிறவன் என்பதால் அவனிடம் மட்டும் கொஞ்சம் மட்டு மரியாதை. வெட்கம் நாணம் கலந்து பேசுவாள். அந்த கருப்பு முகத்தில் அவைகள் அழகாகத் தெரியும். மற்றவர்களையெல்லாம் பேர் சொல்லி அழைப்பாள். கடைக் குட்டியை ‘யேய்…. கோபு !’ கூப்பிடுவாள். குறை சொல்ல முடியாத நல்ல பெண். அவள் எங்கள் கண்ணெதிரிலேயே வளர்ந்தாள். வந்து தங்கி இருந்த எங்கள் வீட்டில்தான் வயசுக்கும் வந்தாள். ஆனால் சொல்லி சொல்லி வளர்த்த அவள் விருப்பபடியோ கீதாரி இஷ்டப்படியோ அவள் திருமணம் நடைபெறவில்லை.

சுமார் ஐந்தாறு வருடங்கள் குடும்பத்தோடு வந்த பெரியவன் அடுத்த வருடம் அப்படி வரவில்லை.

‘‘ஏன் என்னாச்சு கீதாரி ? பெரியவன் ஆடுகளைப் பத்திக்கிட்டு பின்னால வர்றானா ? நீங்க வழக்கம் போல ரயில்ல வந்துட்டீங்களா ?’’ அப்பா கேட்டார்.

‘‘இ…இல்லங்கைய்யா…..அவன் என் புள்ளையே இல்லே. தப்பிப் பொறந்த தறுதலை !’’குரல் உடைந்தார்.

‘‘புரியலை ?!….. ’’

‘‘சேர்மானம் சரி இல்லாம தாயேளி திருடனாகிட்டான். சந்தைக்குப் போனவன் ஒரு கடையில கை வைக்க கையும் மெய்யுமா புடிபட்டு செயிலுக்குப் போய்ட்டான். எனக்கு ஒரே அவமானம். என் புள்ளையே இல்லேன்னு அன்னைக்கே நிசமா எண்ணெய்த் தேய்;ச்சு தலை முழுகிட்டேன்.’’ உறுதியாக சொன்னார்.

எனக்குத் தெரிந்து கீதாரியின் இரண்டாவது முடிச்சு தீர்மானம் முடிவு இது. ஒன்று இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாதது. அடுத்து இது.

‘‘சரி. பொண்ணு ?’’ அப்பா ரேவதியை நினைவுப் படுத்தினார்.

‘‘அதுக்கும் மாத்து ஏற்பாடு இருக்கு. ரெண்டாவது மவனுக்கு முடிப்பேன்.’’

‘‘சரி வருமா ? ரேவதி பெரியவனை நெனைச்சி வளர்ந்தவ….’’

‘‘எனக்கும் அந்த பயம் இருந்துது. அதெ மனசுல வைச்சு… திருடனுக்கு வாழ்க்கைப் பட்டு பிரயோசனம் இல்லே. அவன் செயில் பாதி, திருடு, தலைமறைவு மீதின்னு நிப்பான். நிம்மிதி இல்லே. கட்டினவளுக்குத் திருடன் பொண்டாட்டி என்கிற பட்டம். வெளியில தலை காட்ட முடியாது. ஆள் எங்கேயாவது திருடி தலைமறைவானா போலீசு வீட்டை வந்துதான் கதவைத் தட்டும். விசாரணைன்னு இழுத்துப் போய் கஷ்டம் குடுக்கும். சொன்னேன். பொண்ணு சிறிசா இருந்தாலும் புத்திசாலி. நான் அந்த ஆள் திருடன்னு கேள்விப்பட்ட அந்த வினாடியே மனசு மாறிட்டேன் மாமா. நீங்க புள்ளை இல்லேன்னு பெத்த பாசத்தையே தொலைச்சி தலை முழுகியதும் அதைவிட இது பெரிசில்லேன்னு நான் மிச்சம் மீதமிருந்ததையும் துடைச்சுட்டேன். சொன்னாள். ஆகா..! மவராசின்னு எனக்கு அப்பவே அவள் கையைப் புடிச்சி குலுக்காத குறை. மனசுக்குள்ளே பாராட்டினேன்.’’ சொன்னார்.

‘ஒரு படிக்காத பாமரப் பெண்ணுக்கு என்ன மனசு ?!’ என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

அதன் பிறகு அந்த குடும்பத்தில் பெரிய மகன் பேச்சே இல்லை. இரண்டு வருடங்கள் கழித்து நானாக கீதாரியிடம்….

‘‘சிறைக்குப் போன மகன் விடுதலையா ? ’’ கேட்டேன்.

‘‘ம்ம்…. ஒரு வருசத்துல அவன் விடுதலை. ஆனா ஆள் கொலை.! உள்ளுக்குள் எங்கோ பகை போல வெளியே வந்த அடுத்த நிமிசமே வெட்டிச் சாய்ச்சுப் புட்டானுங்க. எனக்கு சாவு சேதி வந்துது. அடையாளம் மட்டும் காட்டி எனக்கும் இதுக்கும் ஒட்டும் இல்லே உறவுமில்லேன்னு சொல்லி பெத்துக்காம திரும்பிட்டேன்.’’ என்றார்.

‘அட ! என்ன ஒரு வைராக்கியம் !’ இதிலும் என் மனத் தராசில் ஒரு பிடி உயர்ந்து நின்றார்.

தன் சொல்படியே கீதாரி ரேவதியை தன் இரண்டாவது மகனுக்கு முடித்தார். ஆள் பெரியவன் அளவிற்கு அழகு நல்ல வாட்ட சாட்டமில்லையென்றாலும் பெண் அவனைச் சந்தோசமாக ஏற்றாள். அவர்களுக்கு அடுத்தடுத்த வருடம் இரு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குப் பத்து வயதாகும்வரை நான் ஊரில் இருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் கீதாரியின் மூன்றாவது பையனுக்குச் சயரோகம்… காசநோய். நெஞ்செலும்புகள் தெரிய ஆள் மெலிந்து குச்சாகிக் கொண்டே வந்தான். நான்காவதான கடைசிப் பையன் கட்டிளம் காளையாக இருந்தான்.

நான் வேலை விசயமாக வெளியூரில் தங்கி குடும்பம் குடித்தனமாகி… பத்து வருடங்களுக்குப் பின் .இடையில் வந்து போனாலும் சந்திப்பில்லை இவர்களைப் பற்றிப் பேச்செடுக்கும் அளவிற்கும் நினைவு சந்தர்ப்பமில்லை. இதோ சந்திப்பு.

ஆள் நெருங்க… சைக்கிளை ஓரமாக நிறுத்தினேன்.

அவரும் அடையாளம் கண்டுகொண்டதற்கடையாளமாக… ‘‘யாரு ராசா ஐயாவா ?’’ கேட்டு வந்தார்.

‘‘ஆமாய்யா…….’’ என்றேன்.

‘‘இப்போதான் ஊர்லேர்ந்து வர்றாப் போலயா ?’’

‘‘ம்ம்….’’

‘‘வாடகை சைக்கிளா ?’’

‘‘ஆமாம்.’’

‘‘இப்பதான் உங்க அம்மா அப்பாவைப் பார்த்துப் பேசி உங்களையும் விசாரிச்சு வர்றேன் நீங்க எதிர்க்க வர்றீக..நலமா ?’’

‘‘ரொம்ப நலம். நீங்க ?’’

‘‘இருக்கோம்ய்யா.’’

‘‘குடும்பம் ?’’

‘‘அதுவும் இருக்கு.’’

‘‘வழக்கம் போல இந்த வருசமும் வந்தாச்சா ?’’

‘‘இல்லே. இங்கே வந்து மூணு வருசமாச்சு.’’

‘‘ஏன்ன்……?’’

‘‘நீங்க வேலைக்குப் போன அடுத்த வருசம் ரேவதிப் புருசன் வயல்வெளில கிடைக்குக் காவலாய்ப் படுத்திருந்த போது பாம்பு கடிச்சி செத்தான். அடுத்தவன் காச நோய் காணாமப் போய் மாண்டான். கடைசியாவது தாக்குப் பிடிச்சி காப்பாத்துவான்னு நெனைச்சேன். அவனும் கலியாணம் முடிச்சதும் தன் பங்கு ஆடு மாடுகளை என்கிட்டே இருந்து பிரிச்சி மாமியார் வீட்டோட போயிட்டான். நான் மிச்ச ஆடுகளை வித்து ரெண்டு பேரப் பொண்ணுங்களையும் கட்டிக் குடுத்தேன். மேய்க்க எதுவுமில்லே. ஊரை விட்டு கிளம்பலே. பழகினப் பழக்கம் எல்லாரையும் பார்க்க ஆசை புறப்பட்டேன். உங்களையும் பார்த்துட்டேன் சந்தோசம் கிளம்பறேன். மருமகளைக் காப்பாத்தனும் பேரப் பொண்ணுங்க கலியாண கடன் அடைக்கனும் ஆண்டவன் அருளைப் பாருங்க சுமக்கிறவன்தான் சுமக்கனும்ன்னு விதி !’’ சொல்லி நகர்ந்தார்.

அவர் சுமை தெரிய…..எனக்குள் வலித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *