சீமா காலையில் விழிப்பதற்குத் தாமதம் ஆகிவிடும். வக்கீல் தொழில் பார்த்தால், இப்படி நேருவது சகஜம்தான். பகல் முழுசும், நேரம் நீதிமன்றத்தில் போய்விடும். அதற்குப் பின்னர், கட்சிகாரர்களுடன் வழக்குச் சம்பந்தமாய் பேச ஆரம்பித்தால், முடிப்பதற்கு நடுச்சாமம் கடந்துவிடும். பிறகு தூங்கி விழிப்பதற்கு, தாமதமாவது வாஸ்தவம்தான்.
படுக்கையில் ராகேஷ் இன்னும் இருக்கிறாரா எனக் கண்ணைத் திறக்காமல் தடவிப் பார்த்தாள். ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே எழுந்துப் போயிருந்திருப்பார் போலிருந்தது. படுக்கைக் கதகதப்பு இல்லாமல், குளிர்ந்துப் போயிருந்தது. எழுந்து, டிரஸ்சிங் டேபிளுக்கு ஓடினாள். எதிர்பார்த்த படியே ஒருதாளில் குறிப்பு இருந்தது. ‘நான் டெல்லிக்குக் காலை சதாப்தியில் செல்கிறேன். நீ அசந்து தூங்கி கொண்டிருந்தாய். எழுப்ப மனசு வரலை. நாளை மாலை லக்னோ திரும்பிடுவேன். குட் ஸ்லீப், மை டியர் ஸ்வீட்டி.. – ராகேஷ்’
‘என்னை எழுப்பி இருந்திருக்கலாம். பொண்டாட்டியைத் தாங்கறாராம்..’ எனச் செல்லமாய் கோபித்துக் கொண்டாள். வேலைக்காரி காபிக் கொண்டு வரலை. என்னாச்சு இவளுக்கு? சமையலறைக்குப் போய் பார்த்தாள். சமையல் பண்ணப் போவதற்கான அறிகுறியே தென்படலை. தானே காபி கலந்துக் குடித்தாள். குடித்ததும், பரபரப்பாகி விட்டாள். வழக்குச் சம்பந்தமான கட்டுகளைச் சரி செய்தாள். சோனாலி வழக்கு மட்டும்தான் இன்று நிலுவை. சோனாலி அப்படியே நெஞ்சில் வந்து நிறைந்து நின்றாள். ‘பாவம், அவ ஒரு எம்.சி.ஏ. பட்டதாரி. தினமும் பலமணி நேரம் கணணியோட போராடி, ஜீவனத்துக்காகச் சம்பாதிப்பவள்.
புருஷன், கேட்ட வரதட்சணையைக் கொடுக்க முடியலை. விவாகரத்து வழக்கு, இப்ப நடக்குது. வரதட்சணை வரலை என்று விவாகரத்துக்கு இப்பல்லாம் கோர்டில் யாரும் காரணம் சொல்வதில்லை. சொன்னால், தூக்கி உள்ளே வச்சிடுவாங்க. அதான், அவளது நடந்ததையில் குற்றம் சொல்கிறான் அவ புருஷன்’
குளித்து முடித்துக் காலை டிபன் தயாராய் இருக்குமென வந்தாள். மறுபடியும் சமையலறையில் எந்த வேலையும் நடந்ததற்கான குறியே இல்லை. ‘என்னாச்சு பிரேமாவுக்கு?’
“என்ன பிரேமா? ஒடம்புக்கு முடியலையா? டிபன் ஏன் தயாராகலை?”
“ஒடம்பு கல்லு மாதிரிதான் இருக்கு. இன்னைக்குக் கர்வா சௌத். அதான் ஏதும் பண்ணலை”
“கர்வா சௌத்தா? அப்படின்னா என்ன?” சீமா தமிடிநப் பெண். டில்லிக்கு வந்தவிடத்தில், ராகேஷைக் காதலித்து, கைப்பிடித்து, அவனோடு லக்னோவில் செட்டிலானவள். படித்தப் படிப்பு வீணாகிவிடக் கூடாது என்று, குடும்பநல நீதிமன்றத்தில் பிராக்டிஸ் பண்ணுகிறாள். மொத்தத்தில், அவளுக்கு இந்த வடஇந்திய பண்டிகையில் எல்லாம் அவ்வளவு பரிட்சயமில்லை..
“என்னம்மா! இது தெரியாதுங்கிறீங்க? புருஷன் ஆயுளோடும், உடல்நலத்தோடும் இருப்பதற்காக, எல்லா பத்தினிப் பெண்களும் விரதம் இருந்து கொண்டாடுற பண்டிகைம்மா இது”
“இதை நேற்றே சொல்லி தொலைச்சிருந்தால், ராத்திரியே ஜாஸ்தி சாப்பிட்டு வச்சி இருந்திருப்பேன். இப்பவே எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுது. இப்படியே பசியோடு நான் கோர்டுக்குப் போனா, அங்கே மயக்கம்தான் போட்டு விழுவேன். நான் மயக்கம் போட்டது மட்டும் எனது ராகேஷிக்கு தெரிந்தால், அவருக்கு மாரடைப்பே வந்துடும். எப்படிப் பார்த்தாலும், நான் கர்வா சௌத் விரதம் இருந்து என் உடம்பைக் கெடுத்துக் கொள்வது, என் புருஷனுக்கு நல்லதைத் தரப் போறதில்லை. பிரேமா, போய் எனக்கு ஒரு ஆம்லெட்டாவது போட்டு எடுத்துட்டு வா” என நகைச்சுவைத் தொனிக்க சீமா சொன்னாள்.
“உங்க தமிடிநநாட்டில் இந்தக் கர்வாச்சௌத் எல்லாம் கொண்டாட மாட்டாங்களா?” என நம்ப முடியாதவள் போல் கண்களை அகல விரித்து, உதட்டைப் பிதுக்கி கேட்டாள் பிரேமா.
“எங்க தமிடிநநாட்டுலே பொண்டாட்டி உடல்நலம் நல்லா இருக்கணும்னு புருஷன்மார்கள்தான் ஒரு நாள் விரதம் இருந்து, பூஜை பண்ணி கொண்டாடுவாங்க!” என்றாள் கிண்டலாய் சீமா.
ஆம்லெட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, சோனாலி வீட்டிற்குள் வருவதற்குச் சரியாக இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து, சீமாவின் காரிலேயே நீதிமன்றத்திற்குப் போவதாய் இன்று ஏற்பாடு.
“சோனாலி.. வா, நீயும் ஆம்லெட் சாப்பிடேன். ஓ! நீ வெஜ் இல்லே? வெறும் பிரட்டில் ஜாம் வச்சு தரச் சொல்லட்டுமா?”
சோனாலிக்கு தர்மசங்கடமாய் போய் விட்டது. “இல்லே, மேடம்.. எதுவும் வேணாம். இன்னைக்கு நா விரதம் இருக்கேன். கர்வா சௌத் இல்லீயா?” சீமா அவளை விநோமாய் பார்த்தாள். “நீ விவாகரத்து பண்ணப் போறே! அப்படி இருந்தும் கர்வா சௌத்தா?” புரிந்து கொள்ள முடியாமல் கேட்டாள்.
சோனாலி சிரித்தாள். “மேடம், நாங்க இப்படிதான் எங்கப் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டிருக்கிறோம். கர்வா சௌத்தைக் கடமை மாதிரி செய்வோம். ஆனால் அடுத்த வருட கர்வா சௌத்திற்குள், எனக்கு விவாகரத்துக் கிடைச்சிடும். அப்ப நான் இந்த விரதம் இருக்க வேண்டியதில்லை” என்று சொல்லி, வெறுமையாகச் சிரித்தாள்.
“விரதம்னாலும் கனிவகைகள் சாப்பிடலாம். தப்பில்லை” என்று பிரேமா சோனாலிக்கு ஆப்பிளும் கொய்யாப்பழமும் பறிமாறினாள். “பேரீச்சம்பழமும் இருக்கு. அதையும் கொண்டாறட்டா?”
“விரதம் இருக்கிறதுனு முடிவெடுத்துட்டா, நான் எந்த விதிவிலக்கும் எடுத்துக் கொள்வதில்லை. பச்சைத்தண்ணீ கூட குடிக்க மாட்டேன்” என்று சொல்லி அனைத்தையும் உறுதியாய் மறுத்த சோனாலி, கண்ணீர் வடித்தாள்.
பெண்நீதிபதி நீதிமன்றத்திற்கு வர தாமதமாகி விட்டது. கர்வா சௌத்திற்காக விசேஷ பூஜைகள் ஏதும் வீட்டில் பண்ணிட்டு வராங்களோ, என்னவோ?
காலத்தாமதமாய் நீதிமன்றம் வந்த நீதியரசி, “கர்வா சௌத்துக்கு விரதம் இருக்கிறேன். ஆகவே என்னிடம் வழக்கமாய் இருக்கும் உற்சாகத்தை இன்று எதிர்பார்க்க முடியாது. வழக்காட இருக்கும் சீமாவும் பெண் என்பதால், விரதத்தின் கஷ்டம் புரியும். ஆகவே என்னோடு ஒத்துழைத்து, சீக்கிரமே வழக்கை முடிப்பார்கள் என நம்புகிறேன்” என சொல்லிப் பெரிதாய் சிரித்தார்.
அதற்குள் இடைமறித்து சில வழக்கறிஞர்கள், கர்வா சௌத்தை முன்னிட்டு, தனது கட்சிகாரர்கள் சிலர் தாங்கள் விண்ணபித்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற விரும்புவதாகவும், அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்கள். அதைத் தொடர்ந்து அமளி, சந்தோசம். விவாகரத்து ரத்தானது குறித்து, சிலர் இனிப்பு கொடுத்து விமர்சையாகக் கொண்டாடி மகிடிநந்தார்கள். சீமாவைத் தவிர விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கும் பெண்கள் உட்பட எந்த பெண்களும், இந்த இனிப்பை எடுத்துக் கொள்ளவில்லை. அனைவரும் கர்வா சௌத் இருக்கிறார்களாம்.
“இது கட்டாயப்படுத்தி வழக்கை வாபஸ் பண்ண வைக்கிற உத்தி மாதிரி எனக்குத் தோன்றுது. இங்கே எந்த பெண்ணும் மனப்பூர்வமாய், விவாகரத்து வழக்கை வாபஸ் பெற ஒப்பு கொண்டிருந்திருக்க மாட்டாள்” என்று வெறுப்பாய் சோனாலி சொன்னாள்.
சோனாலி சொன்னதைப் பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கஸ்தூரிபாய் என்பவள், “நீங்க சொல்றது வாஸ்தவம்தான். ‘பாரத் கலாச்சார மண்டல்’ என்ற அமைப்பினர், காலையிலேயே இங்கே வந்து நின்னுட்டு, விவாகரத்துப் பெறுதல் என்பது மேலைக் கலாச்சாரம, நாம் அதற்குப் பலியாயிடக் கூடாதுனு சொல்லி, கர்வா சௌத்தை முன்னிட்டு, என் விவாகரத்து மனுவையும் வாபஸ் வாங்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. நான்தான் முடியாதுனிட்டேன். வக்கீலுக்கு பீஸ் கொடுக்கிறதுக்குக் கூட பணமில்லை.. எப்படி வழக்கை நடத்தப் போறேனு நாங்க பாக்கதானே போறோம்னு சவால் விட்டுட்டு போறாங்க” என்று சொன்னாள்.
வற்றலாய் நின்று கொண்டிருந்த, கஸ்தூரிபாயை பார்க்கவே, பரிதாபமாக இருந்தது.
“இன்னைக்குப் பீஸ் கொடுக்கலைனு என் கேஸை நடத்துறதுக்கு என் லாயர் கூட கோர்டுக்கே வரலை.. அவர் வராட்டா என்ன, என் வழக்கைக் கூப்பிட்டால், நானே நீதியரசியிடம் என் நிலைமையைச் சொல்லி, வாய்தா கேட்பேன்” என்று சொல்லி, அவள் சிரித்தாள்.
நீதியரசியோ தெய்வநம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் பல விவாகரத்து வழக்கு வாபஸ் பெற்றது குறித்து படுசந்தோசத்தில் இருந்தார்கள். “கர்வா சௌத்துக்கு எவ்வளவு சக்தி இருக்குனு பாருங்க” என்று நீதிமன்ற வளாகத்துலேயே உற்சாகமாய் சொல்லி, புளங்காகிதம் அடைந்தார். இருந்தாலும் இனிப்பு வழங்கிய போது, இனிப்பை மட்டும் தொடவில்லை.
நீதிபதியாய் இருந்தாலும், பெண்ணாச்சே?
கொண்டாட்டம் அடங்கிய பிறகு, நீதியரசியின் கவனம், சீமாவை நோக்கித் திரும்பியது.
“என்னம்மா சீமா! உன் கட்சிக்காரி சோனாலி ரொம்பதான் சோர்ந்து போயிருக்கா போலிருக்குது. கர்வா சௌத் விரதம் இருக்காளா? அவளும் விவாகரத்து மனுவை வாபஸ் பண்ணிக்க வேண்டியதுதானே? அவ புருசனுடன் நான் பேசி. சமாதானம் பண்றேன்” என பரிவுடன் சொன்னார்.
சீமா புன்னகைத்தாள். “இல்லை மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே! என் கட்சிகாரரை நடத்தைக் கெட்டவள் என அவர் கணவர் குற்றம் சாட்டிய பிறகு, அவருடன் வாடிநவதில் எந்த அர்த்தமும இல்லை என அவர் கருதுகிறார். நான் என் வாதத்தை முன் வைக்க அனுமதிக்க வேண்டும்”
எதிர்த்தார் போல், சோனாலியின் கணவன், முகேஷ் நின்றிருந்தான். முகம் வாடி வதங்கிப் போயிருந்தது. இருந்தாலும், அவன் ஆண். வரதட்சணை கேட்டு, கொடுமைப் படுத்துகிறான் என்று புகார் கொடுத்து, தன்னையும் தன் குடும்பத்தாரையும் பதினைந்து நாள் ஜெயிலில் உட்கார வைத்தவள் இந்த சோனாலி. அவளை எப்படிச் சும்மா விட முடியும்?
அதற்குள் சோனாலி பசியால் துவண்டு, தனக்கு முன்னாலுள்ள மேஜையில் தலைத் துவண்டாள். “சோனு. என்னாச்சு உனக்கு? காபியாவது வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா?” என சீமா பதறினாள்.
“வேண்டாம், மேடம். என்ன ஆனாலும் பரவாயில்லை. விரதத்தை நான் கைவிடுவதாய் இல்லை. நீங்க உங்க வாதத்தை ஆரம்பீங்க” என்றாள் சோனாலி.
அரைமணி நேரத்திற்குள், விவாதம் முடிந்தது. அடுத்து எதிர்தரப்பு வக்கீல் தன் வாதத்தை முன்வைத்தார். பின்னர் சீமா அதற்குப் பதில் அளித்தாள். தீர்ப்பை அடுத்தவாரம் சொல்வதாய்,
நீதியரசி சொன்னார். பின்னர் கஸ்தூரிப்பாய், அழைக்கப் பட்டாள். தனது வக்கீல் தனது வழக்கை எடுத்துக் கொள்ளாததால், தனது வழக்கைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். தான் இலவச சட்ட மையத்தை அணுகி அடுத்தவாரத்திற்குள் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்வதாய் அவள் உறுதியளித்தாள். அத்தோடு நீதிமன்றம் கர்வா சௌத்தை முன்னிட்டு, சீக்கிரமே நிறைவு பெற்றது.
வெளியே வரும்போது, முகேஷ் காறித் துப்பினான். “இந்த தேவடியா முண்டை யாருக்காக கர்வா சௌத் இருக்காளோ?” என்றான். பக்கத்தில் இருந்த அவரது வழக்கறிஞர் சன்னமாய் புன்னகைத்தார். சீமாவையும் சோனாலியின் அருகில் பார்த்ததும், அவர் தனது சிரிப்பை அடக்கிக் கொண்டார்.
“மிஸ்ரா, உங்க கட்சிக்காரரை நாகரீகமாய் நடந்து கொள்ள சொல்லுங்கள். இல்லை என்றால், அவருடன் சேர்த்து, உங்களைப் பற்றியும் நீதிபதியிடம் புகார் செய்ய வேண்டி வரும்” என்று சீமா ஆத்திரத்தில் கத்தினாள்..
உடனே மிஸ்ரா, “முகேஷ், என் முன்னால் வைத்து சோனாலியை அவமானகரமாய் பேசுவதாய் இருந்தால், உங்கள் வழக்கை வேறு வழக்கறிஞரை வைத்து நடத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அவரைக் கண்டித்தார். சீமா அவரது கண்ணில் இருந்து மறைந்ததும், அவர் முகேஷை பார்த்து கண்ணடித்து மறுபடியும் சிரித்தார்.
சோனாலிக்காக சீமா எலுமிச்சை சாறு கொண்டு வரச் செய்திருந்தாள். “வேண்டாம் மேடம். நான் விரதம் இருப்பது என்று முடிவெடுத்தால், அதில் எந்தவிதச் சலுகையையும் எடுத்துக் கொள்வதில்லை” எனச் சொல்லி, அதை உட்கொள்ள சோனாலி மறுத்தாள்.
“சோனாலி, தரக்குறைவாக பேசும் இந்த ஆணுக்காகவா இப்படி விரதம் இருக்கே?”
சோனாலி இலேசாய் சிரித்தாள். “இல்லை மேடம். அவன் என் கணவன் இல்லைனு என்னைக்கு விவாகரத்து மனுவில் கையெழுத்து போட்டேனோ, அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன். ஆனாலும் என்ன செய்ய? தீர்ப்பு வருற வரைக்கும், அவன்தானே சமூகத்தின் முன் என் கணவன்? அதுவரைக்கும், நான் கர்வா சௌத் விரதம் இருந்துதானே ஆகணும்? அப்பதானே நம்ப கலாச்சாரம் காப்பாற்றப்படும்? இப்படிப் போதிச்சு போதிச்சுதான், என் அப்பா அம்மா என்னை வளர்த்திருக்காங்க. என்னால் அதை எப்படி மீற முடியும்?” எனச் சொல்லி, கண்ணீர் விட்டாள்.
“இல்லை சோனு. நீ இப்ப ரொம்ப டயர்டா இருக்கே. எதையாவது சாப்பிடுவது இப்ப உனக்கு எனர்ஜி ொராமப அவசியம்” எனக் கூறி, உடனே ஒரு பன் பட்டரையும் சீமா வரவழைத்தாள். பக்கத்தில் நின்று கஸ்தூரிபாய், சோனாலிக்குக் காற்று வீசிக் கொண்டிருந்தாள்.
சுயநினைவுக்கு வந்த சோனாலி, தன் எதிரே இருந்த பன் பட்டரையும், தூரத்தில் நின்று அவளைப் பரிகாசமாய் பார்த்துக் கொண்டிருந்த முகேஷையும் மாறி மாறிப் பார்த்தாள். முகேஷின் ஏளனச் சிரிப்புக்குள், சம்பிராதயத்தை இந்தப் பெண்கள் அவ்வளவு எளிதில் மீற முடியுமா என்ற சவால் இருந்தது.
சோனாலி வெறி பிடித்தார் போல் பன்னைக் கடித்து சாப்பிட்டாள்.
அவள் சாப்பிட சாப்பிட முகேஷின் முகம் சுருங்கி கொண்டே போவதைப் பார்த்து உள்ளுக்குள் ரசித்தாள். முகேஷ் அப்படியே நொடிந்து போய், தனது இருக்கையில் அமர்ந்தான். ‘இவனோடு சண்டை போடவாவது, நான் பலத்துடன் இருக்கணும்.. என் பலம்தான், அவனது பலவீனம்’ என சோனாலி தனக்குள் நினைத்துக் கொண்டாள். கஸ்தூரிபாய் அவளை ரொம்ப பாராட்டினாள். “இப்படிதான் பெண்கள் தைரியமாய் ஆம்பிளைக்குப் பதிலடி கொடுக்கணும்” என்றாள்.
கூடவே “எனக்கும் ஒரு பன் பட்டர் முடிஞ்சா வாங்கித் தாங்களேன், அம்மாமார்களே! வாங்கிச் சாப்பிட காசு இல்லாமல்தான், நான் கர்வாச் சௌத் விரதம் இருக்கிறேன்” என்றாள் அந்த கஸ்தூரிபாய்.
சீமாவும், சோனாலியும் ஸ்தம்பித்து நின்றார்கள்.