(இதற்கு முந்தைய ‘பக்கத்து வீடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)
மித்தத்தில் கை காலை கழுவிக்கொண்டு கூடத்திற்கு வந்து சாப்பிடுகிற நேரம் வந்துவிட்டதா என்று கடிகாரத்தைப் பார்த்தார் சபரிநாதன்.
சாப்பாட்டுக்கு இன்னும் அரைமணிநேரம் இருந்தது. ஊஞ்சலில் அமர்ந்து யோசனையோடு பிடரியைச் சொறிந்தார். மனம் எரிச்சலாக இருந்தது. அதென்னவோ வரவர அவரால் சின்ன விஷயத்தைக்கூட சகித்துக்கொள்ள முடிவதில்லை. ஓய்ச்சல் இல்லாமல் மனசு ஒரு மாதிரியாக அலை பாய்ந்தபடியே இருக்கிறது. இதனால் அவரின் ரத்தக்கொதிப்பு அதிகமாகி விடுகிறது. இந்த அழகில் பெண்டாட்டிக்கு தெரியாமல் வேறு அதற்கான மாத்திரைகள் சாப்பிட வேண்டியதாகிறது…!
சபரிநாதனுக்கு சுப்பையாவின் ஞாபகம் வந்தது. காந்திமதி அவனை கண்கொட்டாமல் பார்த்தது அவரை வெறுப்பேற்றியது. அவன் பக்கத்து வீட்டிற்கு வந்து தங்கப்போவது ஒரு கெட்ட சகுனமாகவே அவர் மனசுக்கு தோன்றியது. அவரையும் அறியாமல் ஒரு பயம்வேறு தலைக்குள் ஊடுருவி பரவியது.
“இலை போடட்டுமா, சாப்பிடறீங்களா?” ராஜலக்ஷ்மி கேட்டாள்.
“ஆமா பெரிய விருந்து சாப்பாடு சமைச்சி வச்சிருக்கே! கூப்பிட வந்திட்டே, போ வாரேன்.” எரிச்சலுடன் சொன்னார்.
இது ராஜலக்ஷ்மியை மிகவும் காயப்படுத்தியது.
எழுந்து சென்று சபரிநாதன் சாப்பிட உட்கார்ந்தார். பெருமாளின் ஏழெட்டுப் பெயர்களை உரக்கச் சொல்லியபடி இலையைக் கழுவினார். எத்தனைக்கு எத்தனை எரிச்சலாக இருக்கிறாரோ அத்தனைக்கு அத்தனை அவர் கூப்பிடும் பெருமாள்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
இரண்டு கரண்டிகள் நிறைய இலையில் வைக்கப்பட்ட கொத்தவரங்கா பருப்பு உசிலியை நுனி விரல்களால் அள்ளி வாயில் போட்டுக் கொண்டதும், “இவ்வளவு எண்ணை விடக்கூடாதுன்னு எத்தனையோ வாட்டி சொல்லியாச்சி. ஒனக்கு மண்டையிலே ஏறவே மாட்டேங்கு. வாயில போட்டா சீனி கணக்கா உடனே கரையணும்; தொட்டா பூவாட்டம் பொல பொலன்னு உதிரணும். வாய்க்கு ருசியா நீ உசிலி பண்ணத் தெரியறதுக்கு முந்தி நான் போயே சேந்திடுவேன் போல இருக்கு.”
“இப்படி சமைச்சாத்தான் டேஸ்ட்டா இருக்கும்னு நீலாக்கா சொன்னாங்க.” ஹீனமான குரலில் பதில் வந்தது.
“கிழிச்சா அவ. உசிலின்னா என்னன்னு தெரியுமா அவளுக்கு? நீலாக்கா சொன்னாளாம்… சரி சரி ரசத்தை ஊத்து.”
ராஜலக்ஷ்மி ரசத்தை தெளிவாக ஊற்றினாள். சபரிநாதனுக்கு ரசத்தைக் கலக்கக்கூடாது.
“ரசத்ல ரெண்டு கல் உப்பு ஜாஸ்தி. இதையும் நீலாக்கா சொல்லிக் கொடுத்தா போல…”
சாப்பாட்டு நேரத்தில் அவருடைய வார்த்தைகள் இப்படி அடுப்பில் விழுந்த மிளகாயாகத்தான் வெடிக்கும். போதாதற்கு இன்று சுப்பையா விவகாரம் வேறு. அதனால் காரம் அதிகம். சபரிநாதனின் மனசுக்குள் அழகிய இளம் மனைவி என்ற பிரேமை எல்லாம் வடிந்து விட்டன. மாறாக கொஞ்சம் கொஞ்சமாக ஒருவிதமான பகை உணர்ச்சி அவர் மனதில் வேர்விடத் தொடங்கியிருந்தது.
மோர் ஊற்றியபோது, “மோரை இன்னைக்கு நான் தாளிக்கச் சொல்லலையே?”
“எனக்காகத்தாண்டா கெழவா மோரைத் தாளிச்சேன்.” என்று பதிலடி கொடுக்க ராஜலக்ஷ்மிக்கு ஆசைதான். ஆனால் பல்லைக் கடித்தபடி கொஞ்சம் சத்தமாக “எனக்காக தாளிச்சிட்டேன்.. தாளிக்கக்கூடாதா?” என்று கேட்டாள். “என்ன சத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா வருது?” என்று பதிலுக்கு உறுமினார். தன் மேட்டு விழிகளை உயர்த்திப் பார்த்தார். நிசப்தமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அதற்குமேல் அப்போதைக்கு பேச்சு எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று சபரிநாதனுக்குத் தோன்றியது.
சுப்பையா சங்கர் சிமெண்டில் சேரப்போவது, பக்கத்து வீட்டில் தங்கப்போவது எல்லாம் திம்மராஜபுரத்து மக்களுக்கு சுவாரசியமான வம்பாகப் பேசப்பட்டது. இந்த வம்பினால் சுப்பையா ஒரு முக்கியஸ்தனாகிப் போனான். இது சபரிநாதனுக்கு இன்னும் எரிச்சலை அதிகமாக்கியது.
ஆனால் இந்த எரிச்சலை கடுகளவுகூட ஊர்க்காரர்கள் யாரிடத்திலும் காட்டிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருந்தார் சபரிநாதன். காட்டினால் அவருக்குத்தான் அது அசிங்கம்! சுப்பையாவின் வருகைக்காக ஒருவித துயரத்துடன் அவர் காத்திருந்தார. அதே சமயம், அவனின் வருகை ராஜலக்ஷ்மிக்கும், காந்திமதிக்கும் ஒருவிதமான கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.
முதலில் ராஜலக்ஷ்மியின் மனநிலை:
இளமையே இல்லாத வயோதிக மயமாகிப் போயிருந்தது அவளது ‘இளம்’ உலகம்! பணக்காரக் கணவர் என்ற எண்ணத்தில் வாழ வந்த அவளுக்கு வாழ்வு அமைந்தது என்னவோ வயோதிகக் கணவரோடுதான். அவளைச் சுற்றிலும் சபரிநாதனின் வயோதிக மூச்சே அனலென வியாபித்திருந்தது. அந்த அனலில் அவளின் மனம் புழுங்கி வியர்த்துக் கிடந்தது.
ஒரு இளைஞனை பார்வையில் காட்டக்கூட பயந்து எல்லா விதத்திலும் முதுமையையே ராஜலக்ஷ்மியின் மன நிலையிலும் திணிக்க முற்பட்ட சபரிநாதனின் கள்ளக் கிழத்தனம் அவளுடைய மனசில் இளமையின் சூழலுக்கான ஏக்கத்தை உண்டுபண்ணி விட்டது. கல்லிடைக்குறிச்சியில் கூட அவள் ஏழை இளம் பெண்ணாகத்தான் இருந்திருக்கிறாள். இந்த ஏமாற்றத்தையும் சபரிநாதனின் மோசடிகளையும் ராஜலக்ஷ்மியால் தாங்க முடியவில்லை. சபரிநாதனைக் கல்யாணம் செய்து கொண்டதின் தவறு எல்லா விதத்திலும் அவளை வதைத்தது.
ஒரு இளைஞனின் தோழமைக்கும் இளம் சூழலுக்கும் ராஜலக்ஷ்மியின் மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது. இந்த ஏக்கம் கலந்த மனச் சூழலில்தான், ராஜலக்ஷ்மியின் வயோதிகச் சிறைக் கூடத்தின் வாசலில் வந்து மொத்த இளைஞர்களின் அழகுப் பிரதிநிதியாக சுப்பையா வந்து நின்றான். சுப்பையாவின் வருகையால் அவள் சூழ்ந்திருந்த வயோதிக அனல் சரேலெனக் கலையும் என்கிற ஆசை அவளுள் துளிர்விட்டது.
சபரிநாதனின் முதுமை அதன் கிழ நகங்களால் அவ்வப்போது அவளைப் போட்டுக் கீறி காயப் படுத்தியது. ராஜலக்ஷ்மியால் இந்தக் காயங்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முதலில் கொஞ்சம் திசை தெரியாமல் கலங்கினாள். ஆறுதலுக்காக சுப்பையாவின் இளமையான தோற்றத்தை, அவனது வருகையை எண்ணிக் கொள்வாள்.
ஒரு உண்மை அவளுக்குக் கண்கூடாகத் தெரிந்தது. சுப்பையா வந்து தங்கப்போகும் நாட்களால் சபரிநாதனின் கிழத்தன்மை மேலும் மேலும் ஆக்ரோஷப்பட்டு அவளை வார்த்தைகளால் காயப்படுத்தலாம். அதற்கு ஒரு பதிலாக ராஜலக்ஷ்மியும் சபரிநாதனை காயப்படுத்த மெனக்கிட வேண்டியதில்லை. அந்தக் காயத்தை சுப்பையாவின் அழகும் இளமையும் ரொம்ப சாதாரணமாக செய்து முடித்துவிடும். அதற்காகவாவது முதலில் சுப்பையா திம்மராஜபுரம் வந்து சேரவேண்டும்.
அடுத்து காந்திமதியின் மனநிலை:
கற்பனைகூட செய்திராத அழகே உருவாக சுப்பையா அவளுடைய வீட்டின் எதிரே நின்றபோது காந்திமதிக்கு கனவு காண்பது போல இருந்தது. அவளுக்குப் பிடித்த ஒரு சினிமா நடிகனைப்போல இருந்தான் அவன். அந்த நடிகனுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரகசியமான ஏக்கம் காந்திமதியின் மன ஆழத்தில் ரொம்ப நாளாக இருந்து கொண்டிருந்தது. அந்த ஏக்கத்தைத் தீர்க்கத்தான் சுப்பையா வரப்போகிறான் என்று நம்ப ஆரம்பித்து விட்டாள்.
அன்று திண்ணையில் உட்கார்ந்து சுப்பையா மோர் குடித்துக் கொண்டிருந்தபோது, சுத்தமாகச் சவரம் பண்ணப் பட்டிருந்த அவனுடைய பச்சையம் படிந்த முகவாய் காந்திமதியைப் பாடாய்ப் படுத்தியது! அவன் காது நுனிகளில் படிந்திருந்த செம்மையும் அவளின் மோகத்தைக் கிளறின.
புருஷன் செத்துப்போன பிறகு காந்திமதிக்கு வாழ்க்கையில் ஆண் வாசனையே அற்றுப் போயிருந்தது. ஊரில் இருந்த எந்த இளைஞனும் அவளுடைய மனதில் ஆணாகப் பதிவு பெறவே இல்லை. திம்மராஜபுரம் அவளுக்குப் பெண்கள் மயமானதாக கசகசத்து வியர்த்துப் போயிருந்த போதுதான் திடீரென சபரிநாதனின் கள்ளப் பார்வை அவளுள் சின்ன மனச்சுகம் கொடுப்பதாக இருந்தது. ஆனாலும் அவர் ஒரு ஊமை ஆண்மகனாகத்தான் உலவிக் கொண்டிருந்தார். ஒன்றும் இல்லாததற்கு ஊமைப்பிள்ளை போதும்போல் இருந்ததென்னவோ உண்மை!
அந்த ஊமைப்பிள்ளை வேற ஒருத்தியிடம் பேசத் தொடங்கி விட்டதும், கிடைத்துக் கொண்டிருந்த ஊமைச்சுகமும் கத்தரிக்கப்பட்டுவிட, காந்திமதியின் பாலுணர்வு நாடிகள் அதிரத் தொடங்கிவிட்டன! அந்த அதிர்வில் அவளைச்சுற்றி அப்பிக் கிடந்த பெண்களை காந்திமதி வெறுக்கவும் கோபிக்கவும் ஆரம்பித்து விட்டாள். உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் கூச்சல் போட்டு பெண்களோடு சண்டைபோடத் தயாராக இருந்தாள். அப்படி இருந்தபோதுதான் பச்சையம் படிந்த முகவாயுடன் சுப்பையா அவளுடைய வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு மோர் குடித்தான்…
சுப்பையா என்னமோ மோர் குடித்துவிட்டு எழுந்து போய்விட்டான். ஆனால் இங்கே இவள் உடம்பெல்லாம் மோக முட்கள் தைத்துப் போய்க் கிடந்தாள். சும்மா சும்மா குப்புறப் படுத்துக் கிடந்தாள். ஈரச்சேலை மாதிரி சுப்பையாவின் நினைப்பு அவளின் உடம்போடு உடம்பாக ஒட்டிக் கிடந்தது.
சுப்பையா இனி திம்மராஜபுரத்தில்தான் இருக்கப் போகின்றான் என்கிற நினைப்பு காந்திமதியின் முதுகுத்தண்டில் நீர் வழிய வைத்துக் கொண்டிருந்தது. அவளுடைய உலகத்திற்குள் ஆண் ஒருத்தன் நுழைகிறான். அதுவும் அழகான ஆண்! அவனை தவற விட்டுவிடவே கூடாது என்று தீர்மானித்தாள் காந்திமதி. ஒரே ஒருமுறைதான் என்றாலும் கூட சுப்பையாவிடம் அவளுடைய உடம்பை அள்ளிக் கொடுத்துவிட வேண்டும். அவளின் உடலை அவன் கடித்துக் குதறினாலும் பரவாயில்லை! பாலுறவின் மூலம் அவளை சுப்பையா படுகொலையே செய்தாலும்கூட சந்தோஷம்தான் அவளுக்கு! இதன் மூலம் காந்திமதிக்கு இரண்டு சந்தோஷங்கள். ஒன்று, அவளுடைய கட்டை வேகும்! இரண்டாவது சபரிநாதனை அவள் பழி தீர்த்துக்கொண்ட மாதிரியும் இருக்கும்!
இதற்காக புயல் நேரத்துக் கடல்போல பொங்கி நுரைத்து சுப்பையாவின் வருகைக்காகக் கரையோர தோணியாகக் கிடந்தாள் காந்திமதி…!
இப்படியாக இந்த இரண்டு பெண்களும் சுப்பையாவின் வருகைக்காக நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள்…