சுண்ணாம்பு குணம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 978 
 
 

“கண்ணு சிங்காரி, இன்னைக்கு காட்டுக்குள்ள ஆடு, மாடு ஓட்டீட்டு போக வேண்டாம். நேத்தைக்கு ரங்கசாமி சொன்ன மாப்பளப்பையன் ஊட்லிருந்து உன்னையப்பொண்ணுப்பாக்க வாராங்களாமா…

செவல மாட்டுப்பால பால்காரனுக்கு ஊத்தீட்டு, அது எளங்கன்னு பாலு காபிக்கு பிருத்துப்போகும். நாட்டு மாட்டுப்பாலக்கறந்து ஊட்டுக்கு வெச்சுப்போடு. அந்தப்பாலுதான் காபித்தண்ணிக்கு ருசியா இருக்கும். நாம் போயி ஊருக்குள்ள இருக்கற ராமசாமி மளிகக்கடைல வெத்தல, பாக்கு, சுண்ணாம்பு வாங்கியாறேன். உங்கொம்மாகுட்ட விசயத்த சொல்லி மைசூர்பாகும், சோள முறுக்கும் பண்ணிப்போடச்சொல்லு. என்ன நாஞ்சொல்லறது…” நடந்து கொண்டே அவசரமாக கூறிச்சென்ற தந்தை நஞ்சப்பனின் சொல்லுக்கு மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள்.

சிங்காரி கூச்ச சுபாபம் கொண்ட பெண். திருமணப்பேச்சை எடுத்தாலே ஓடிச்சென்று வீட்டிற்குள் கதவைச்சாத்தி விடுவாள். நான்கு முறை பெண் பார்க்க மாப்பிள்ளைகள் வந்தும் அவள் அவர்களைப்பார்க்க விரும்பாததால் அவளாக சொல்லும் வரை திருமணப்பேச்சே எடுக்க வேண்டாம் என அவளது பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

தனது அத்தை மகள் திருமணத்துக்கு ஒரு வாரம் சென்று வந்த பின்பு தானும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்ததால் தன் தாயிடம் கூற பெற்றோரும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

“மாப்பிள்ளை நல்ல பாட்டாளி. நாலு அனப்பு தண்ணி பாயுது. கரண்டு மோட்டாரு வெச்ச தனிக்கெணறு. ஒரே பையன். சீமை ஓடு போட்டுக்கட்டுன ரெட்டக்கோப்பு ஊடு. உள்ள பெரிய ஆசாரம், தனியாப்படுக்கறதுக்குன்னு சௌரியம் கெடக்குது. வெளிய தானிங்காயப்போடறதுக்கு காரைக்களம் இருக்குது. நக நட்டுக்கேக்குல. பொண்ணக்கட்டிக்கொடுத்தாப்போதும்னு சொல்லிப்போட்டாங்க. பையன் மயிலக்காளையாட்ட நல்லா முறுக்கமா உன்ற புள்ள மரிக்கொழுந்து ஒசரத்துக்கு இருப்பான். சோடிப்பொருத்தம் அம்சமா, ஊரு கண்ணுப்படற மாதர இருக்கும்ங்கிறேன்” என பக்கத்து தோட்டத்து பங்காளி ரங்கசாமி தந்தையிடம் சொன்னதைக்கேட்டதிலிருந்து தனக்குத்தானே மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே இருந்தாள்.

“கண்ணாலமே வேண்டாம்னு கதவச்சாத்துனவ ஒரு வாரம் ஊருக்கு போயிட்டு வந்ததும் மந்திரிச்சுட்ட மாதர தன்னப்போல இப்புடிச்சிரிக்கிறா… முத்திப்போக்கறதுக்குள்ள மூணு முடிச்சுப்போட்டறோணும்…” தாய் சுந்தரியும் தனக்குத்தானே பேசிக்கொண்டாள்.

“மா…மா…. அம்மா….”

“என்ன விசிஞ்சொல்லு…”

“அய்யன் ஊருக்குள்ள வெத்தல, பாக்கு, சுண்ணாம்பு வாங்கப்போயிருக்குது…”

“அதென்ன அது, இதுன்னு…. ஆடா? மாடா? போயிருக்கறாருன்னு சொல்லறது….”

“சேரி…. போயிருக்கறாரு….”

“வெத்தல, பாக்கு, சுண்ணாம்பு வாங்கப்போயிருக்கறாருன்னா ஏதோ நல்ல விசியந்தா. உன்னையப்பொண்ணுப்பாக்க மாப்பிள்ளையூட்டுக்காரங்க வரப்போறாங்க. ராத்திரி வெடிய வெடிய கவுளி ஈசானத்துல வாய மூடாமச்சொல்லிச்சில்ல…. நட, நட. சீக்கிரமா மைசூர்பாகும்மு, முறுக்கும்மு செஞ்சு போடறேன்” 

“இன்னைக்கு நானே பண்ணறேன்….”

சொன்ன சிங்காரி ஆர்வமாக தாயின் வேலையில் தானும் பங்கெடுத்துக்கண்டாள்.

“பையன உருமாலையக்கொஞ்சம் கழட்டச்சொல்லறீங்களா…? தலைல சொட்ட, கிட்ட இருக்குதான்னு பாக்கோணுமில்ல” சுந்தரி சொல்ல அவசரமாக துண்டை தலையிலிருந்த மாப்பிள்ளையும் எடுக்க, தலை முடியைப்பார்த்ததும் நம்பிக்கை‌ வந்தது பெண் வீட்டினருக்கு.

“நீங்க பையனச்சோதிச்ச மாதர நானும் பொண்ணு முடிய இழுத்துப்பாத்து சோதிச்சுப்போடோணும். நெச முடியா… ஒட்டு முடியான்னு” என மாப்பிள்ளையின் சகோதரி கூற , ஓடிச்சென்று பெண்ணின் தாய் சுந்தரி தனது பெண்ணின் முடியை இழுத்துக்காட்ட சிரிப்பலை எழுந்தது.

“காப்பி நல்லா இருக்குது…” என மாப்பிள்ளை கூற, “ஏ மைசூர்பாகும், முறுக்கு மட்டும் மாப்பிள்ளைக்கு கசக்குதாக்கு… ஏன்னா அது நாஞ்சுட்டது… மாமியாள நல்லா வெச்சுட்டாத்தா காலம்பூரா நல்ல சோறு கெடைக்கும்னு ஆருஞ்சொல்லிக் கொடுக்கிலியா மாப்ளே…?” என சுந்தரி கேட்க,  “அதெல்லாந் தெரிஞ்சாலுமு கட்டிக்கப்போறவ ஒத்துக்காம கண்ணாலமெப்படி நடக்குமத்த… அதுதான் உங்க மகளப்பாராட்டிப்போட்டேன்…” என்றதும், “மாப்ள நல்ல வெவரசாலின்னு ஒத்துக்கறேன்” என கலாய்த்தாள் சுந்தரி.

“மாமியாளும், மருமகனும் பேசுனாப்போதுமா…? காப்பித்தண்ணியக்கொடுத்த புள்ள வாயில ஒரு வார்த்த பேச்சு வரலியே…ஊமையா இருந்துட்டா நாளைக்கு தொணைக்கு மாமியாளைவா கூப்புட்டுக்க முடியும்….?” என மாப்பிள்ளையின் சகோதரி கேட்க, வீட்டிற்குள் அழைத்துச்சென்று சிங்காரியுடன் பேச வைத்ததும் மகிழ்ச்சியுடன் சகோதரி வருவதைப்பார்த்து தானும் மகிழ்ந்தான் மாப்பிள்ளை மணி.

“எல்லாஞ்சேரி மாப்பிள்ளைக்கு மொகத்தப்பாத்து பொண்ணப்புடிச்சுப்போச்சு. வெத்தல, பாக்கு, சுண்ணாம்பக்கொண்டு வரச்சொல்லுங்க. மாப்பிள்ளையப்பெத்தவங்க எங்களுக்கு பொண்ணப்புடிக்கோணுமில்ல….?” மாப்பிள்ளையின் தந்தை கூறியதும் பெண் வெற்றிலை பாக்கை கொண்டுவந்து, அதன் மேல் சிறிதளவு சுணாணாம்பு வைத்தவுடன் மாப்பிள்ளையின் தந்தைக்கும், உடன் வந்தவர்களுக்கும் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

“கையறுத்தாலும் சுண்ணாம்பு குடுக்க மாட்டா கஞ்சப்பிசினாறி ன்னு சொல்லுவாங்க. கஞ்சத்தனம் இல்லீனாலும் பொளைக்க முடியாது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம்னு வாழ்ந்தா வாயக்கட்டி, வயத்தக்கட்டி வாங்கி வெச்ச வயக்காட்ட வித்து முழுங்கிப்போடுவா வார மருமகப்புள்ளன்னு தான் பொண்ணுப்பாக்கப்போனா வெத்தலைக்கு சுண்ணாம்பு குடுக்கறத வெச்சு குணத்தக்கண்டு புடிச்சாங்க. நானும் நாலு பொண்ணப்பாத்துப்போட்டுத்தா இங்க வாரேன். கண்ணாலமான உடனே மருமக பேர்ல என்ற சொத்தப்பூராத்தையும் எழுதி வெக்கப்போறேன். ஏன்னா அவ கட்டிக்காப்பாத்திப்போடுவா” என மாப்பிள்ளையின் தந்தை சொல்ல, ஈசான்யத்தில் அவர் சொல்லை வழி மொழிவது போல் கவுளியும் சொல்ல, கடவுள் உத்தரவு என நம்பி பெண்ணுக்கு பூ வைத்து உறுதிப்படுத்திச்சென்றனர் மாப்பிள்ளை வீட்டினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *