சீர்வரிசை..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 2,788 
 
 

தன் நிலை, சொல்லையும் மீறி பிரம்மாண்டமான துணிக்கடையில் நுழைந்து விலை உயர்ந்தரக துணிகளைப் புரட்டிப் பார்க்கும் மனைவி மாலாவை நினைக்க வருத்தமாக வந்தது சந்திரகுமாருக்கு.

இவ்வளவிற்கும் துணிகள் இவளுக்கில்லை. இவள் அண்ணன் மகள் சுருதிக்கு.

‘பெண் பூப்பெய்திவிட்டாள், இந்தத் தேதியில் சடங்கு!’ என்று சேதி வந்ததுமே ஆட ஆரம்பித்து விட்டாள்.

“என்னங்க…?”

“என்ன…?”

“இதோ பாருங்க. நம்ம கஷ்ட நஷ்டம் பார்க்கக் கூடாது. சுருதி அண்ணனுக்கு ஒரே பொண்ணு. செல்ல மகள். நான் அவளுக்கு ஒரே அத்தை. பார்க்கிறவங்க மூக்கு மேல விரலை வைக்கிறா மாதிரி சிறப்பா செய்யனும்.”

“என்ன செய்யனும்….?”

“குறைச்ச விலையில இல்லாம நடுத்தர விலையில் நல்ல பட்டுப் புடவை எடுக்கணும். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சைன்னு… பழ வகைகளில் மூணு தட்டு , அப்புறம் சாக்லேட் ஒரு தட்டு,வாழைப் பழம் ஒரு தட்டு, வெற்றிலைப் பாக்கு ஒரு தட்டு, சோப்பு, சீப்பு, கண்ணாடி , வளையல், நகப்பாலிஷ்ன்னு அது ஒன்னு… இப்படி ஏழு தட்டு வரிசைகள் வச்சு அசத்தனும்.”

“ஏதாவது நகை நட்டுக்கு உண்டா..?”

“ரெண்டு பவுனுல ஒரு சங்கிலி போட்டா கவுரவமாத்தானிருக்கும்…! வேண்டாம் விடுங்க. இப்போதைக்கு இவ்வளவு போதும்…”

“ஏன் மாலா ! எட்டாவது படிக்கும் சின்ன பொண்ணு. ஊரைக் கூட்டி, உறவுமுறையை அழைத்து விருந்து வைத்து ரொம்ப விரிவா செய்யிறதே எனக்குப் பிடிக்கல. அறியாப் பொண்ணு. அது மனசைப் பாதிக்கும். நாளைக்குப் பள்ளிக்கூடம் போகும்போது… அக்கம், பக்கம், அவள் தோழிகள் அவளை ஒரு மாதிரியாய் பார்ப்பாங்க..”

“அப்படியெல்லாம் பார்க்க மாட்டாங்க. எல்லா பொண்ணுங்களும் இதை முடிச்சிதான் வந்திருப்பாங்க.”

“இப்படி கலாட்டா செய்து பொண்ணு மனசைக் கலவரப்படுத்த வேணாம்ன்னு பெத்தவங்க முடிவெடுத்து பத்து நாட்களுக்குத் தலையில தண்ணி ஊத்தி , தீட்டு கழித்து பதுவிசா வர்ற பெண்களும் இருக்கு.”

“அந்த சமாச்சாரமெல்லாம் நமக்குத் தேவை இல்லே. அண்ணன் செய்யறார். நாம அத்தை, மாமன் முறையில நடைமுறை செய்யறோம். அவ்வளவுதான். !”

“சரி விடு. சுருதி வெடவெடன்னு ஒல்லியா இருப்பா. புடவை உயரம்தான் இருப்பாள். பட்டுப்புடவைத் தேவையா…?”

“உயரம் எத்தனையா இருந்தா உங்களுக்கென்ன.. ? ஐயாயிரம் பத்தாயிரம் போகுதேன்னு கவலையா..?”

“அதில்லே மாலா. . பட்டுப்புடவை எடுத்தா அவள் கட்டிக்க வாய்ப்பில்லே. நல்ல சுடிதார் ரெண்டு எடுத்து வைத்தால் அவள் உடுத்திப்பாள் உதவியாய் இருக்குமே..?”

“எடுக்கலாம் வரிசை நிறக்காது. எதுக்கும் அண்ணன், அண்ணியைக் கேட்டு அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்.”

“உடனே கேளேன். நானும் அதுக்குத் தேவையான பணம் புரட்டனும்….”

பார்த்தாள்.

“என்ன பார்க்கிறே..? மாச சம்பளத்துல வண்டி ஓடுது. சேமிப்பு என்கிறது ஒரு நாலாயிரம் ஐயாயிரம் இருக்கும். அதைத் தாண்டினால் உன் கழுத்துல கை வைக்கனும். ஒரு பவுன் செயின் அடகிற்குப் போகனும். இப்போ எல்லாம் ஐயாயிரம், பத்தாயிரத்துக்கெல்லாம் வங்கிப் பக்கம் போகமுடியாது. இருபது, முப்பதைத் தாண்டனும். அதனால் அடகு கடைக்குத்தான் போகனும். அநியாய வட்டி.! “நிறுத்தினான்.

அவள் கழுத்தில் கை வைக்க வேண்டும் என்கிற வார்த்தைகள் காதில் விழுந்த போதே மாலா முகம் மாறியது. அடகு கடை, அநியாய வட்டி என்றதும் இன்னும் மாறி, முகம் கலவரமாக….

கைபேசி எடுத்து உடனே அண்ணனைத் தொடர்பு கொண்டாள்.

“சுடிதார் சம்மதமா ? “கேட்டாள்.

அப்புறம்… அண்ணன் கைபேசி அவன் மனைவிக்கு மாறியது போல…

“அண்ணி ! சம்மதமா…? “கேட்டாள்.

அதற்கு அவள் ஏதேதோ பேசினாள். இது குறித்துதான் பேசினாளோ, இல்லை… சரி என்று சம்மதம் சொல்லி வேறு விசயங்கள் பேசினாளோ என்னவோ தெரியாது. ஐந்து நிமிடங்கள் பேசி முடித்து…

“சுடிதார் சம்மதம்ங்க…”சேதி சொன்னாள்.

“என்ன விலையில எடுக்கலாம்..?”

”எல்லாம் ஐயாயிரத்திலேயே முடிச்சுக்கலாம்.”

“சென்னைக்குப் போகிற நம்ம போக்குவரத்து செலவு ஆயிரம் சேர்த்துக்கோ..?”

“அதிலும் ஆயிரம் குறைச்சலா..? நாலாயிரம்தானா…?”

“அவள் கலியாணத்துக்கு அதிகம் செய்யலாம்…?”

“எங்கே செய்யிறது…..? அப்போ… நம்ம புள்ளைங்க வளர்ந்து நிக்கும். படிப்பு செலவு, அது இதுன்னு தலைக்கு மேல கத்தி தொங்கும் .”

“நியாயம்தான் ! சங்கிலியைக் கழட்டு..!”

கழற்றவில்லை. மாறாக..

“ஏங்க…? “அழைத்தாள்.

“என்ன…?”

“உங்ககிட்ட ஐயாயிரம்தான் இருக்கா…?”

“ஆமா..?”

”மேல ஆயிரம், ரெண்டாயிரம் புரட்ட முடியாதா..?”

“ஏன் கேட்கிறே..?!”

“இல்லே… அண்ணன் வீட்டுக்கு நாம போனா.. தாராளமா செலவு செய்யுது. அப்பா, அம்மா திதிக்குப் போனால்…எனக்குப் புடவை துணிமணிகள் எடுத்துத் தருது. அப்புறம்… பொங்கல், தீபாவளின்னு ஐநூறு, ஆயிரம் வரிசைப் பணம் அனுப்புது. இன்னும் கொஞ்சம் தாராளமாய் செய்தால் நல்லா இருக்கும் தோணுது.”

“வழி இல்லே மாத்ரு.”

”சரி. “அரைமனதாகச் சம்மதித்தாள்.

இதோ கடையில் புகுந்து…..

‘ சிலவட்டுக் காசு வைத்திருப்பாளோ..?! ‘ இவனுக்குள் ஓடியது.

பெண்களுக்கே உள்ள ஆசை. புரட்டிப் புரட்டிப் பார்த்து 1500 ரூபாயில் ஒரு தரமான சுடிதார் எடுத்து வந்தது இவனுக்கு இதமாக இருந்தது.

அடுத்து…..பிள்ளைக் குட்டிகளுடன் போய் இறங்கினார்கள்.

சோமு வீடு கல்யாண வீட்டை விட அமர்க்களமாய் இருந்தது.

அண்ணியின் தாய் வீட்டு சீர்வரிசை, சீதனத்தை விட இவர்கள் சீர்வரிசை சிறிது கம்மியாக இருந்தாலும் எடுப்பாக இருந்தது.

விருந்தும் தடபுடலாக இருந்தது.

விழா முடிந்து, அமர்க்களம் முடிந்து இரவு படுக்கை.

சந்திரகுமார் மனைவி மக்களுடன் அறையில் படுத்திருக்க…

சோமுவும், பூங்கொடியும் கூடத்தில் அமர்ந்து வந்திருந்த சீர்வரிசை, அன்பளிப்புகளையெல்லாம் பிரித்து ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார்கள்.

அன்பளிப்பொன்றைப் பிரித்துக் கொண்டிருந்த பூங்கொடி ….

“என்னங்க…? “தன் வேலையை நிறுத்தி கணவனை அழைத்தாள்.

அவனும் தன் வேலையை நிறுத்தி….

“என்ன..? “என்றான்.

“பொறந்த இடத்துல…. பொம்பளைப் புள்ளைங்களுக்கு அள்ளி அள்ளி இறைச்சாலும் பெத்துக்கிட்டுப் போகத்தான் ஆசைப்படுவாங்களேத் தவிர செய்ய மனசு வராது ! “என்றாள்.

“புரியல…?!”

“உங்கத் தங்கச்சியைச் சொல்றேன்.”

விழித்திருந்த கணவன் மனைவி சந்திரகுமார், மாலா துணுக்குறார்கள்.

காதுகளைத் தீட்டிக்கொண்டார்கள்.

“அவளுக்கென்ன…?”

“தங்கச்சிக் குடும்பம் தலையைக் கண்டால் துள்ளிக் குதிக்கிறீங்க. அவளுக்குத் துணிமணிகள் எல்லாம் எடுத்துக் கொடுத்துத் தாராளம் காட்டுறீங்க. பதிலுக்கு அவள் சீர்வரிசையைப் பாருங்க… தாராளமில்லே..”

மாலா கோபப்பட்டு பொசுக்கென்று எழுந்தாள்.

சந்திரகுமார் அவள் கையைப் பிடித்து இறுக்கி அடக்கினான்.

அடுத்து சோமு குரல்.

“நீ மட்டும் என்ன..? அப்பன் ஆத்தாள் வீட்டுக்குப் போனால் அள்ளி இறைக்கிறீயா..? இல்லே… அண்ணன் தம்பிகளுக்குத்தான் வாரி வழங்குறீயா…? காசு இருந்தாலும் பொத்திக்கிட்டுப் பொய் பெத்துக்கிட்டுதானே வர்றே. ?!

பூங்கொடி ! கடனை உடனை வாங்கி…செய்து கஷ்டப்படுறதுல இல்லே பாசம் நேசம். அதெல்லாம் பகட்டு. வருமானத்துக்குத் தக்க செலவு செய்து சீரும் சிறப்புமாய் இருக்கிறதுதான் வாழ்க்கை. என் தங்கச்சி அப்படி இருக்காள். சந்தோசப்படு!” சொன்னான்.

பூங்கொடியிடமிருந்து மறு பேச்சில்லை.

அண்ணனை நினைக்க மாலாவின் கண்களிலிருந்து குபுக்கென்று ஆனந்தக் கண்ணீர்.

சந்திரகுமார் அவளை அணைத்துத் துடைத்தான்.

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *