சீனக் கிழவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 12,229 
 
 

எம்.குமாரனின் அதிகம் பேசப்பட்ட கதை இது. மலேசியச் சிறுகதைகள் குறித்து பேசும்போது இக்கதையையும் ‘முக்கியமான’ வரிசையில் வைக்கிறார்கள். எம்.குமாரனை இறுதியாகச் சந்திக்கச் சென்ற போது அவர் நாவல் குறித்து மட்டுமே பேச முடிந்தது. இலக்கியத்துடன் இடைவெளி விட்டிருக்கும் ஒருவரிடம் அவர் படைப்பின் பலவீனத்தை சடாரென முன் வைப்பது சரியில்லை என அச்சிறுகதை குறித்து பேசாமல் இருந்துவிட்டேன். எனக்கு உவப்பான நாவல் குறித்து மட்டுமே பேசினேன். இன்றும் நான் சந்திக்கும் பல நண்பர்கள் சீனர் தோற்றத்தில் உள்ளனர். அவர்களின் பரம்பரையில் ஏதோ ஒரு தலைமுறையில் இந்தச் சீனக்கிழவனுக்கு நேர்ந்த துக்கமான பகுதி இருக்கலாம். அந்த நினைவைத் தவிர இக்கதை இன்றெனக்கு எவ்வனுபவத்தைத் தருகிறது என்றே கேட்டுக்கொள்கிறேன். எளிதான… அதிகம் உணர்ச்சிகளைக் கொட்டாத அவரின் நாவலிலிருந்து இச்சிறுகதை அதிகமும் மாறுபடுகிறது. வாக்கியங்கள் தேம்பி அழுகின்றன. சிறுகதை எழுதப்பட்டக் காலக்கட்டம் தமிழரல்லாதவர்களின் வாழ்நிலை போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, எம்.குமாரனின் இச்சிறுகதையை வல்லினத்தில் மறுபிரசுரம் செய்கிறோம்.

——————————————————————————–

நீண்டு வளைந்து மேடும் பள்ளமும் நிறைந்த செம்மண் சாலையினூடே அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தான் அந்தச் சீனக்கிழவன் லிம். அறுபது வயதுக்கு மேலாகியும் ஏதோ ஓர் இலட்சிய வேட்கையுடன் உழைத்துக் கொண்டிருக்கிறான். எல்லாருக்கும் அவன் ஓர் அனாதை. அவனைப் பொறுத்தவரை அது உண்மையல்ல. உறவு சொல்ல ஒரு ஜீவனுண்டு. ஆனால், அந்த ஜீவனுடன் உறவு கொண்டாட இன்று அவனுக்கு உரிமையில்லை. உரிமையை வலியுறுத்தவும் அவன் விரும்பவில்லை. உரிமையைக் கைவிடவும் மனம் இடந்தரவில்லை.

மனத்தில், காலத்தால் விழுந்த வடுவுடனும் கூனிக் குறுகிய உடலுடனும் அந்தச் செம்மண் சாலைக்குரிய கமுண்டிங் தோட்டத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அவனுடைய தோளில் ஒரு சாக்குப்பை அதில்தான் வாங்கும் பொருட்களைச் சேர்த்துத் தூக்கிக்கொண்டு ‘மெயின் ரோட்டில்’ நிறுத்தி வைத்துள்ள ‘சைக்கிளு’க்குக் கொண்டுபோவான். பின்னர் மெல்ல மெல்ல சைக்கிளை மிதித்து ஐந்து மைல் தொலைவிலுள்ள நகரத்துக்குக் கொண்டுபோய் விற்பான். லிம்மின் வியாபாரம் இதுதான்; போத்தல்கள், தாள்கள், இரும்பு வகையறாக்கள், இன்னும் பல பழைய சாமான்கள். மாதக் கடைசியில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் லிம் சொல்லிவைத்தாற்போல் குறிப்பிட்ட நேரத்திற்குப் போய்விடுவான். தோட்ட வேலை முடிந்து எல்லாரும் வீடு திரும்பும் நேரத்தில்தான் லிம் அந்தத் தோட்டத்திற்குப் போவான்.

அந்தச் சீனக் கிழவனிடம் குடித்துத் தீர்த்த காலிப்புட்டிகளையும், நசுங்கிப் போன அலுமினியப் பாத்திரங்களையும் விற்ற எத்தனை பெண்கள் கொண்டை ஊசியும், ‘ரோல்ட்கோல்ட்’ செயினும் வாங்கியிருக்கிறார்கள்? அவர்களெல்லாம் அந்தச் சீனக் கிழவனைச் சில்லறைக் காசுக்காக எதிர்ப்பார்த்திருக்கும் போது ஒரே ஓர் உயிர்மட்டும் அன்புக்காக காத்திருக்கும். பரிவுடன் அவன் பார்க்கும் பாசப் பார்வைக்காகக் காத்திருக்கும். அந்த உயிருக்குரியவர்…

தொலை தூரத்திலிருந்து கமுண்டிங் தோட்டத்திற்கு வந்து பழைய சாமான்கள் வாங்குவது மட்டுமல்ல அவனது தொழில். தனக்காகக் காத்திருக்கும் அந்த ஜீவனுக்காகவே அவன் அங்கு வருவான்.

லிம் ஸ்டோரைக் கடந்து சென்று கொண்டிருந்தான். ஸ்டோரிலிருந்து எல்லாப் பால்வெட்டுத் தொழிலாளிகளும் திரும்பியிருந்தனர். தன்னுடைய வருகை தாமதமாகிவிட்டதா என்ற ஐயத்துடன் நிமிர்ந்து நோக்கி நடந்தான். தொலைவில் தன் அன்புக்கும், பாசத்துக்கும் உரிய உருவம் காண்டாக் கம்பும் வாளியுமாக நின்றுகொண்டிருந்தது. கிழவன் புதுத் தெம்புடன் வேகமாக நடந்தான்.

லிம், தன் பாசத்துக்குரிய லட்சுமியின் அருகில் நெருங்கி விட்டான். மிக அருகில் நெருங்க முடியாமல் பத்தடி தொலைவில் நின்று, லட்சுமியை ஏறிட்டுப் பார்த்தான். கண்களில் பாசத்தின் பிரதிபலிப்பாக நீர் துளிர்க்கிறது. தனக்காகத்தானே அவள் இங்கு கால்கடுக்க காண்டாக் கம்பும் வாளியுமாக நின்று கொண்டிருக்கிறாள்? கிழவனுக்கு நெஞ்சமெல்லாம் பூரிப்பு; ஒரு நிறைவு. லட்சுமி இருக்கும்வரை லிம் எப்படி அனாதையாவான்? தன்னுடைய எல்லாமாக அந்தப் பெண் தெய்வம் இருக்கிறதே!

லட்சுமியைக் காண ஆவலுடன் வந்தவன், அவளைக் கண்டதும் எதுவும் பேச முடியாமல் நின்றான். அவளும் பேசவில்லை. உழைத்து உழைத்துத் துரும்பாக இருபத்து மூன்றாவது வயதிலும் நாற்பது வயது கிழவிபோல் ஓடாக நிற்கும் அந்தக் காட்சி அவனுடைய உழைப்புக்கே சவால் விடுவது போல் தோன்றியது. அவள் இன்னமும் தன் மகளாக இருந்திருந்தால் இப்படி துன்பப்படவிட்டிருப்பானா? அவள் இப்படியெல்லாம் சமூகத்துடனும் வாழ்வுடனும் போராடி உயிர்வாழ வேண்டிய நிலைமையை உண்டு பண்ணியதே அவன்தானே!

யாரோ தொலைவில் வருவது தெரியவே லட்சுமி புன்னகையுடன் அகன்றாள். கண்ணில் ஊறிய கண்ணீர் வற்றாமலும் உதிராமலும் இமைக்குள் தொக்கி நின்றது. லிம், அவள் போவதையே நோக்கிக் கொண்டிருந்தான். லட்சுமியும் அடிக்கொரு தரம் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்று மறைந்தாள். இப்படி இன்று மட்டுமல்ல, கடந்த ஓராண்டு காலமாக – மாதந்தோறும் இதே நிலைதான். ஒரு தடவை பேசியிருக்கிறான். பின்னர் பேசியதில்லை. பேசவேண்டாமென்று கேட்டுக் கொண்டவளே லட்சுமிதான். காலத்தால் அழிக்கப்பட்ட உறவைப் புதுபிக்க வேண்டாம்; அது நடக்கக் கூடாத ஒன்று. அதைச் சமூகமும் ஏற்காது. அதற்கு அஞ்சியே இருவரும் சூழ்நிலைக்கு ஏற்ப நடக்க வேண்டியுள்ளது. அந்த நிலைமையை ஏற்படுத்தியவன் இதே லிம்தான்.

ஏறத்தாழ இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் லிம்மின் ஆறாவது குழந்தையாகப் பிறந்தவள் இந்த லட்சுமி இன்று தமிழ் பெண்ணாக வளர்ந்துவிட்டாள். அன்று வறுமையின் பிடியிலிருந்தபோது, தான் பணிபுரிந்த தானாராத்தா தோட்டத்திலேயே குப்பம்மாள் என்ற விதவைக்கு விற்றுவிட்டான் லிம். இரண்டாவது உலகப்போர் ஓய்ந்துக்கொண்டிருந்த அந்த நாளில் வயிற்று கஞ்சிக்காக விற்றான். ஜப்பான்காரன் ஆட்சி அஸ்தமித்த பின் லிம்மின் மனைவி இன்னொருவனுடன் சகவாசங் கொண்டு ஐந்து குழந்தைகளுடன் சென்றுவிட்டாள். எல்லாவற்றையும் இழந்த லிம், தானாராத்தா தோட்டத்தை விட்டுச் சென்று, பைத்தியக்காரனைப்போல் அலைந்தான்.

ஐந்து ஆண்டுகள் அலைந்து திரிந்தும் தம் மனைவி மக்களைக் காணக்கிடைக்காமல் விற்றுவிட்ட தன் செல்வத்தைக் காண தானாராத்தா தோட்டத்திற்கே வந்தான். குப்பம்மாளிடம் ஒரு தமிழ்ச் சிறுமியாக – லட்சுமியாக – வளரும் தான்பெற்ற – விற்ற குழந்தையைக் கண்ணாரக் கண்டான். தன் நெஞ்சத்துள் திளைத்தெழும் பாசத்தை அந்தக் குழந்தையிடம் பொழியத் துடித்தான். சில நேரங்களில் ‘குழந்தையை ஏன் விற்றோம்’ என்ற நினைவு வரும்போது யாருக்கும் தெரியாமல் மனச்சுமை குறையுமட்டும் அழுவான். தன்னுடையது என்று நினைத்திருந்ததெல்லாம் இழந்த பின் இன்னொருவருக்குக் கொடுத்ததில் ஆசை வைக்கலாமா? தான்பெற்ற குழந்தையாக இருந்தென்ன செய்வது? பிச்சை போட்ட காசு தன் காசாக இருந்தாலும் பிச்சைக்காரனிடமிருந்து திரும்பிப்பெற, போட்டவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஒன்று மட்டுமே அவனால் செய்ய முடிந்தது. குழந்தைக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கிக் கொடுத்தான். அதுவும் எத்தனை நாளைக்கு? ஒரு நாள் குப்பம்மாள் மனந்திறந்து சொல்லிவிட்டாள். பாசத்தின் பிரதிபலிப்பைக் குப்பம்மாவால் உணர முடிந்திருந்தாலும், தன் குலக்கொழுந்தாக, தன்னுடைய வாரிசாக வளரும் குழந்தையிடம் அவன் பாசங்காட்டி மனத்தைக் கெடுப்பதற்கு இடங்கொடுக்க முடியுமா? அவன் வீட்டுக்கு வந்து பார்ப்பதையும் செல்லங்காட்டுவதையும் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?

லிம் எதுவும் பேச உரிமையற்றவனாக விலகி இருந்துவிட்டான். லட்சுமி ஓடி விளையாடுவதையும், வளர்ப்புத் தாயுடன் போவதையும் வருவதையும் பார்த்துப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவான். அந்த அழகான குழந்தையாவது தன்னிடம் இருந்திருக்க கூடாதா? லிம்முக்கு நாளாக நாளாக மனத்தில் இதே வேதனை அதிகரித்தது. ஆறாவது குழந்தையை விற்றதால்தான் தொடர்ந்து துன்பத்தைக் கொடுக்கிறாரா ஆண்டவன்? ஐந்து குழந்தைகள் பாரமானதால்தானே ஆறாவது குழந்தையை விற்க மனந்துணிந்தது. இன்னும் பெற்றுத்தர வேண்டியவளும், பாரமாக இருந்த அந்த ஐந்து குழந்தைகளும் இப்போது எங்கே?

லட்சுமியைப் பார்த்துக்கொண்டிருந்தால் நெஞ்சில் பல வேதனைகளும், விரக்தியும் தோன்றும் என்பதால் அந்தத் தோட்டத்தையே விட்டு வேறு தோட்டத்துக்குப் போய்விட்டான். போன பின்னும் தன் இரத்தத்தில் பிறந்த மகளைக் காண இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த தோட்டத்திற்குச் சென்று பக்கத்து வீட்டிலிருந்து கொண்டு லட்சுமியைப் பார்ப்பான். அப்படிப் பார்ப்பதிலேயே தன் வாழ்நாளின் ஒரு பகுதியைக் கழித்தான்.

லட்சுமி வளர்ந்தாள். வளர்ந்து சுய அறிவும் வந்ததும் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரும் அந்தச் சீனன்தான் ‘அப்பா’ என்பதைச் சொல்லி விட்டார்கள். லட்சுமி அதைப் பெரிதுபடுத்தாவிட்டாலும் பருவம் எய்தியப்பின், தன்னை விற்ற பின்னும் பாசத்தால் உந்தப்பட்டு பார்க்கவரும் அந்த சீனனிடம் லட்சுமிக்கு அனுதாபம் துளிர்விடத்தான் செய்தது. வெறும் அனுதாபம் மட்டும்!

லட்சுமி அனுதாபத்துடன் பார்க்கும் பார்வை அவனை மெய்சிலிர்க்கச் செய்யும். தன்னை இனங்கண்டு கொண்டாளே தன் மகள்! விற்றாலும், வேறிடத்தில் வளர்ந்தாலும் – தமிழ்பெண்ணாக வளர்ந்தாலும் – எல்லா உயிர்க்குமுள்ள இரத்தப்பாசம் இருக்கத்தானே செய்யும்!

லட்சுமியின் வளர்ப்புத்தாய் குப்பம்மாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டாளாம். அதன்பின் லட்சுமியை தோட்டத்தில் உள்ளவர்களெல்லாம் சேர்ந்து முடவன் முனியாண்டிக்குக் கல்யாணம் செய்துவைத்து விட்டதும், அவன் எங்கோ அழைத்துச் சென்றுவிட்டான் என்பதையும் அறிந்து மிகவும் வேதனைப்பட்டான். தன் அன்பின் சின்னமாக இருந்த ஓரே ஒருத்தி – அந்த மகளைக் கண்டு மனதில் எழும் பாச வெறியைத் தணித்ததெல்லாம் இனி ஏது? இனி யாரிடம் அன்பு காட்டுவது?

பக்கத்திலுள்ள தோட்டங்களுக்கெல்லாம் சென்று விசாரித்தான். அன்பிற்குரிய அந்த ஜீவனைக் காணமுடியவில்லை. அவள் எங்கு போனாளோ, என்ன துன்பத்தில் இருக்கிறாளோ? அவள் எங்கிருந்தாலும் நலமாக வாழவேண்டும். அதுதான் லிம்மின் ஆசை லட்சுமியை ஒவ்வொரு நாளும் நினைத்து மனமுருகினான். லட்சுமியிடம், இடைக்காலத்தில் வளர்ந்த பாசம் மனைவியையும் ஐந்து பிள்ளைகளையும் மறக்கச் செய்துவிட்டது. இனி ஒரே ஒருத்தி அவளை இறப்பதற்குள் காணக் கொடுத்து வைத்துவிட்டால்…

வயதான பின் லிம் பழைய சாமான்கள் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டான். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஐயாயிரத்துக்கு ‘இன்ஷுரன்ஸ் பாலிஸி’ எடுத்தான். ஏதோ ஒரு நம்பிக்கையில் மாதந் தவறாமல் பணம் செலுத்தி வந்தான்.

பழைய சாமான் விற்கும் தொழிலில் ஈடுபட்ட பின் ஒருநாள் கமுண்டிங் எஸ்டேட்டுக்குச் சென்றபோது லட்சுமியைக் கண்டு விட்டான். நான்கு ஆண்டுகள் தேடியும் கிடைக்காத செல்வம் கண்ணெதிரே உருக்குலைந்து நிற்பதைக் கண்டு மனமுருகி அழுதான். லட்சுமியிடம் அவன் சொன்ன வார்த்தை : ‘நான் வாழ்வது உனக்காக’.

அதைக் கேட்டபோது லட்சுமி கண்கலங்கிப் போனாள். தனக்காக அந்தச் சீனக் கிழவன் வாழ்கிறானா? நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் அனுதாபத்துடன் பார்த்தவள் அன்று உண்மைப் பாசம் மிளிரப் பார்த்தாள்; மிகுந்த பாசத்துடன்.

லிம், அந்தத் தோட்டத்தில் விசாரித்த வரைக்கும் லட்சுமியைப் பற்றிக் கிடைத்த செய்திகள்: மூன்று குழந்தைகள் இருக்கின்றனவாம். லட்சுமி பால்மரம் வெட்டித்தான் முடவனான கணவனைக் காப்பாற்ற வேண்டுமாம். அவன், மனைவி சம்பாதிப்பதைக் குடித்துத் தீர்ப்பானாம். அவனிடம் சொல்லாமல் வெளியே போனால் நையப்புடைப்பானாம். இதெல்லாம் அறிந்து தான் விற்ற மகளின் துயர வாழ்க்கைக்காக இரங்கினான்; வேதனைப் பட்டான். வேறு என்ன செய்ய முடியும்? எந்த வகையில் லட்சுமிக்கு உதவுவது? பணம் கொடுத்தால் சந்தேகப்படுவார்களோ?

லட்சுமிக்கு எதுவும் உதவ முடியாவிட்டாலும் அவளைக் காண விரும்பியே மாதமொரு முறை அந்தத் தோட்டத்துக்குப் போவான். அதை அவளும் எதிர்பார்ப்பாள். சந்தித்தால் இருவரும் எதுவும் பேசிக்கொள்வதில்லை. கண்களால் தம் மனவுணர்ச்சிகளை பரிமாறிக்கொண்டு விடைபெறுவார்கள். லட்சுமியைப் போயும் போயும் ஒரு முடவனுக்குக் கட்டிவைத்து விட்டார்களே என்று நினைத்து வருந்துவான் லிம்.

ஒருநாள் லட்சுமியை பார்த்தபின் வியாபாரத்துக்குப் போன வீட்டில் எதிர்பாராமல் முனியாண்டி லிம்மை அடையாளங் கண்டுகொண்டு ஏதேதோ சொல்லியிருக்கிறான். முனியாண்டி தானாராத்தா தோட்டத்திலிருந்தபோது லிம் வந்து போவதை அறிந்திருந்தான். அதனால் முடியுமட்டும் இந்தத் தோட்டத்துக்கு வரக்கூடாது என்று லிம்மிடம் சொல்லிவைத்தான்.

லிம் சரியென்று ஒப்புக்கொண்டாலும் அதை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. லட்சுமியும் லிம்மும் சேர்ந்து பேசுவதோ பழகுவதோ அந்தத் தோட்டத்திலுள்ளவர்கள் அறிந்தால் சந்தேகப்படக்கூடும் என்பது முனியாண்டியின் எண்ணம். அவனுடைய எண்ணத்தையும் மீறி பாசம் வெற்றிநடை போட்டது. மாதா மாதம் தன் மகளைக் காணவே லிம் வருவான். குறிப்பிட்ட இடத்தில் லட்சுமி நின்றிருப்பாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள்.

இன்றும் அவர்கள் சந்தித்துப் பிரிந்தார்கள். அடுத்த மாதமும் சந்திப்பார்கள்.

மாதம் ஒன்று கடந்தது. லிம் சாக்குப் பையுடன் அதே செம்மண் சாலையினூடே நடந்துக்கொண்டிருந்தான். மனவிதானத்தில் மகிழ்ச்சி நிரம்பிய உணர்வு. உடலில் ஒருவித தெம்பு. தன் மகளைக் காண ஆவலுடன் நடந்தான். குறிப்பிட்ட இடத்தை நெருங்கிவிட்டான். அவளிடம் இன்று மகிழ்ச்சியான ஒரு செய்தி – சொல்ல வேண்டும் அதைக் கேட்டதும் லட்சுமி மகிழ்வாள். மனம் விட்டு மகிழ்வாளா? இல்லை, சொல்ல முடியாது; ஒருகால் அதிர்ச்சியையும் தரலாம்.

குறிப்பிட்ட இடத்தில் வழக்கமாக நிற்கும் லட்சுமியை அன்று காணோம்! லிம் துணுக்குற்றான். மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் சுழல ஆரம்பித்தன. லட்சுமியைக் காணோமே, ஏன்? உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்குமா? அப்படி இருந்தாலும் எப்படிப் போய் சந்திப்பது? முனியாண்டி முரடனாயிற்றே!

சோர்ந்து போன உள்ளத்துடனும் தளர்ந்துபோன உணர்ச்சியுடனும் லயத்தை நோக்கி நடந்தான். இனி என்றைக்குமே தனக்கு முகத்தைக் காட்டாமல் இருந்து விடுவாளா? சமூகத்துக்கு அஞ்சி அப்படியொரு முடிவுக்கு வந்துவிட்டாளா?

லயத்திலே ஒரு வாடிக்கை வீட்டின்முன் உலகத்தையே பறிகொடுத்தவன் போல் நின்றான். சில்லறைக் காசுக்காக அந்த வீட்டுக்காரி நாலைந்து புட்டிகள் கொண்டு வந்தாள்.

சீனக் கிழவன் அதைப் பரிதாபத்துடன் பார்த்து, “வேண்டாம்; குடிக்க கொஞ்சம் தண்ணீர்” என்று செய்கையிலே காட்டி வாசலுக்கு முன்னுள்ள தூணில் சாய்ந்தான். ஒரு சில வினாடிகள்தான் கடந்திருக்கும். வீட்டுக்காரி தண்ணீர் கொண்டு வந்தபோது…

அந்தச் சீனக் கிழவன் விழி செருகிக் கீழே சாய்ந்திருந்தான். வீட்டுக்காரி அலறிவிட்டாள். கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.

லட்சுமிக்கும் செய்தி எட்டியது. “ஐயோ பாவம், அந்த போத்தல்கார சீனக் கிழவன் செத்துப்புட்டானாண்டி” என்று பக்கத்து வீட்டு மாரியாயி ‘வேடிக்கை’ பார்க்கப் போகுமுன் சொல்லிவிட்டு சென்றாள்.

லட்சுமி உள்ளத்துக்குள் அழுதாள், முனியாண்டி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பொங்கி வரும் துயரத்தை அவளால் நிறுத்த இயலவில்லை.

“நான் போய்ப் பார்த்துட்டு வரட்டுங்களா?”

“போயேண்டி போ, உன் அப்பன்கிறதை ஊருக்கெல்லாம் சொல்லிட்டு வா, மானங்கெட்டவளே, தூ…”

லட்சுமி ஒன்றும் பேசவில்லை. மனதுக்குள் கேவிக் கேவி அழுதாள்.

மாரடைப்பால் இறந்துபோன சீனக் கிழவனின் சடலத்தைப் போலிஸ் வந்து எடுக்கும் போது மாலை இருட்டிக்கொண்டிருந்தது. பாவம், அவன் தன்னை அனாதையல்ல என்று நினைத்து ஏமாந்துவிட்டானே! விட்டுவிட்ட ஒரு பொருளை மீண்டும் பெறத் துடிப்பது போல் அவன் பைத்தியக்காரத்தனமாக லட்சுமியிடம் பாசங்காட்டி வந்தானே! உரிமை இல்லையென்று அறிந்த பின்னும் அவன் பாசங்காட்டினான்! வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தபின் கண்ணெதிரே காணும் லட்சுமியிடம் அவன் மௌனபாசங் காட்டினான். யாரிடமும் லட்சுமியைத் தான் விற்ற மகள் என்று சொல்லவில்லை. அதற்கான உரிமையைச் சமுதாயம் அங்கீகரிக்காவிட்டாலும் இயற்கை அதை மீறிச் சென்றுவிட்டது. இன்று லட்சுமியின் வாழ்க்கை வளம்பெற அவன், தன் இரத்தத்தை நீராக்கி ‘இன்ஷுரன்ஸ்’ கட்டினான். அந்தப் பணம் லட்சுமிக்குச் சேரவேண்டுமென்று எழுதியிருக்கிறானே உலகம் உறவுமுறையில் ஏற்காவிட்டாலும் அன்பளிப்பென அதை ஏற்காதா?

அப்பாவியாக, தூய மனத்தினனாக லட்சுமியிடம் பாசங்கொண்டு வலம்வந்த அவனின் முகத்தை இறுதியாகக் காண லட்சுமிக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவள் கணவனால் தடுக்கப்பட்டு விட்டாள். ஆனால்….

லட்சுமியின் பேரில் ‘இன்ஷுரன்ஸ்’ பணம் வரும்போது அதை அவளுடைய கணவன் தடுப்பானா?

– மார்ச் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *