கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 4,640 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10

அத்தியாயம்-1

பறவைகள் கூட்டுக்குள் அடைந்து ஆரவாரமிட்டுக் கொண்டிருக்கும் வேளை அது. சூரியன் தன்னுடைய ஆட்சியை முடித்துக்கொண்டு ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக இருள் திரைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருக்கும் நேரம்.

வேலை அழுத்தத்தினால் அலுவலகத்தில் ஏற்பட்ட தாமதம். வீட்டுக்குப் போகும் அவசரத்தில் அரக்க பரக்க ஓடும் ஜனங்கள். இருளும் வெளிச்சமும் கலந்த சூழ்நிலை.

வானத்தில் பௌர்ணமி நிலவு இரவில் ஆட்சி புரிய மெல்ல மேலே எழும்பிக் கொண்டிருந்தது. நடேசன் பூங்காவில் மரங்கள் அடர்த்தியாக இருந்த இடத்தில், அந்த மரங்களைப் போலவே நிசப்தமாய், பதுமைகள் போல் ஒரு இளைஞனும், இளம்பெண் ஒருத்தியும் அமர்ந்திருந்தார்கள்.

அவன் மரத்தில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான். அந்தப் பெண்ணின் கன்னம் அவன் முழங்காலில் பதிந்திருந்தது. அவன் கைவிரல்கள் அவள் முன் நெற்றியில் அலைபாய்ந்து கொண்டிருந்த கேசங்களை வருடி கொண்டிருந்தன. அவள் கைவிரல்கள் தரையில் பசும்புல்லை அளைந்து கொண்டிருந்தன.

ரொம்ப நேரமாய் நீண்ட யோசனையில் மூழ்கி மௌனமாய் அமர்ந்திருந்த அவ்விருவரில் அந்த இளைஞன்தான் முதல் முதலாக பேசினான்.

“இந்தூ”

“ஊம்!”

“இனி வீட்டுக்குக் கிளம்புவோமா?”

“அதற்குள்ளேயா?”

“இருட்டிவிட்டது.”

“சந்திரன் முழுவதுமாக மேலே வரட்டும். பார்த்துவிட்டுப் போகலாம்.”

அவன் சிரித்தான். சிரித்துக்கொண்டே அவள் தலையைப் பிடித்து தன் பக்கம் திருப்பிக் கொண்டான். “சற்று முன் சூரியன் அஸ்தமிக்கட்டும், போகலாம் என்றாய். இப்போ சந்திரன் முழுவதுமாக வரட்டும் என்கிறாய். திரும்பவும் சூரியோதயம் ஆகட்டும் என்பாயோ என்று பயமாக இருக்கிறது.”

இந்திரா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனை அப்படி பார்த்துக் கொண்டிருப்பதே அவளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கல்மிஷமற்ற அந்தச் சிரிப்பு, மங்கலான வெளிச்சத்தில் மின்னும் பற்கள், காற்றில் அலைபாயும் அவன் கேசம், வலிமை மிகுந்த தோள்கள், அகன்ற மார்பு. இந்திரா குனிந்து அவன் மார்பில் தலையை சாய்த்து, எல்லையில்லாத சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவள் போல் கண்களை மூடிக் கொண்டாள். அவனும் எதுவும் பேசவில்லை. மௌனமே ஒரு மொழியாய் ஒருவர் மனதில் இருப்பது அடுத்த நபருக்கு புரிந்து போய்க் கொண்டிருந்தது.

இந்திராவின் கழுத்தைச் சுற்றிலும் கையைப் போட்டு மார்போடு அழுத்திக் கொண்டான்.

“இந்தூ! நீ எவ்வளவு சீக்கிரமாக என்னை வீட்டுக்குப் போக விட்டால் நான் அவ்வளவு சீக்கிரமாக அம்மா அப்பாவிடம் இந்த நல்ல செய்தியை சொல்லி விடுகிறேன்”

“உன்னை மறுபடியும் எப்போ சந்திப்பது?”

“நாளை காலையில் ஒன்பதுமணிக்கு. நீ ஆபீசுக்குக் கிளம்பும் நேரத்தில் பஸ்ஸ்டாண்டில் சந்திக்கிறேன்.”

“நாளை காலையில் ஒன்பது மணி என்றால்…” இந்திரா விரல் விட்டு எத்தனை மணி நேரம் என்று கணக்கிட்டாள். “அப்பப்பா! எத்தனை யுகங்கள்?” என்றாள்.

அவன் சிரித்தான். “போகட்டும். நான் உங்கள் வீட்டுக்கு வந்து விடட்டுமா?”

“உன்னால் வர முடியுமா?”

“ஏன் முடியாது? ஆனால் ஒரே ஒரு தயக்கம். உங்க அக்காவின் மாமியார் இருக்கிறாள் இல்லையா. அந்த அம்மாளைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பயம். என் சந்தோஷமெல்லாம் அந்த அம்மாளின் ஒரே பார்வையில் ஆவியாகிவிடும்.”

“அதுவும் உண்மைதான். அது மட்டுமே இல்லை. நாம் மறுபடியும் சந்தித்துக் கொள்ளும் போது நாமிருவர் மட்டுமே இருக்க வேண்டும். நம்முடைய தனிமைக்கு யாரும் இடைஞ்சலாக இருக்கக் கூடாது.”

“நானும் அதைத்தான் நினைக்கிறேன். இனி கிளம்புவோம் வா.” அவன் எழுந்து கொண்டே அவளையும் எழுப்பிவிட்டான்.

இந்திரா எழுந்துகொண்டாள். ரொம்ப நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்ததால் கால் மரத்துப் போனாற்போல் இருந்தது. அவன் அவளைப் பிடித்துக் கொண்டான். இந்திரா காலை உதறினாள்.

“உன்னால் நடக்க முடியவில்லை என்றால் சொல்லு. பஸ்ஸ்டாப் வரையிலும் தோளில் சுமந்து போகிறேன்” என்றான்.

“அவசரப்படாதே. தோளில் சுமந்து போக வேண்டிய நாட்கள் எதிர்காலத்தில் எத்தனையோ இருக்கு.”

அவன் நடந்து கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் நடந்து கொண்டிருந்த இந்திரா திடீரென்று நின்றுவிட்டாள்.

”என்ன?” என்றான்.

“அதோ பார்.” வானத்தில் நிலாவை விரலால் சுட்டிக் காட்டினாள்.

அவன் ஆழமாய் நிலாவையே பார்த்தான்.

“எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள்.

“நம்மைப் போலவே சந்தோஷத்தால் பொங்கிப் பூரிப்பது போல் தோன்றுகிறது.”

“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்த மரங்கள் கூட சந்தோஷமாக தலையாட்டுவது போல் தோன்றுகிறது.”

“நம் மனம் எப்படி இருக்கிறதோ உலகமும் அப்படித்தான் நம் கண்ணுக்குத் தெரியும் இந்தூ.”

“அப்படியா! அப்போ நாம் எப்போது சந்தோஷமாக இருந்துவிட்டால் தீர்ந்தது.”

“எல்லோரும் அப்படித்தான் விரும்புவார்கள். ஆனால் கடவுள் அந்த அதிர்ஷ்டத்தை எல்லோருக்கும் கொடுத்து விட மாட்டார்.”

இந்திரா அவன் கையைப் பற்றிக் கொண்டாள். “என்னவோப்பா. மற்றவர்கள் விஷயம் நமக்கெதற்கு? நம்மைப் பொறுத்தவரையில் கடவுள் நம்மை சந்தோஷமாகத்தான் வைத்திருக்கிறார். உண்டா இல்லையா?”

அவன் தலையை அசைத்தான்.

இந்திரா அவன் கையை உற்சாகமாக ஆட்டிக் கொண்டே சொன்னாள். “நீ நம் விஷயத்தை இன்றைக்கே உன் பெற்றோரிடம் சொல்லப் போவதாய் சொன்னாய் இல்லையா. அவர்களுடைய சம்மதம் வாங்கி வந்ததுமே நான் உன்னிடம் இன்னொரு நல்ல செய்தியை சொல்லப் போகிறேன்.”

“‘என்ன அது?”

“ஊஹூம். இப்பொழுதே சொல்ல மாட்டேன்.”

“இப்போ சொல்லாவிட்டால் எப்போதுமே கேட்டுக் கொள்ளமாட்டேன்.”

“வித்யா! ப்ளீஸ்.” இந்திரா கெஞ்சுவதுபோல் பார்த்தாள்

“ஆல்ரைட். அப்படியே ஆகட்டும்.” என்றான்.

இருவரும் பஸ் ஸ்டாப் அருகில் வந்தார்கள். இந்திராவும் வித்யாபதியும் சேர்ந்தாற்போல் நின்றால் ஜோடிப்பொருத்தம் ரொம்ப நன்றாக இருக்கும். எல்லோரின் கண்களும் அவர்களை பாராட்டுவது போல் பார்க்கும். அந்த விஷயம் அவர்களுக்கும் தெரியும். அதைப் பற்றிய பெருமை இருவருக்குமே உண்டு.

“நாளை நீ பஸ்ஸ்டாப்பில் தென்படும் வரையில் என் மனம் ஒரு நிலையில் இருக்காது.” இந்திரா புடவையால் மறைத்துக் கொண்டே அவன் கையை அழுத்தினாள்.

“அந்த விஷயத்தைப் பற்றி நீ எதையும் யோசிக்க வேண்டியதில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். என்னுடைய படிப்பு முடிந்துவிட்டது. அம்மா அப்பாவிற்கு நான் மூத்த மகன். என் பேச்சை அவர்கள் தட்ட மாட்டார்கள். அதோடு வேலைக்குப் போகும் பெண் மருமகளாக வரப் போவதாக சொன்னால் யார்தான் மறுக்கப் போகிறார்கள்? எங்க அப்பாவுக்கு படித்த பெண்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.”

அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே இந்திரா ஏற வேண்டிய பஸ் வந்துவிட்டது. இந்திரா சட்டென்று ஏறிக் கொண்டாள். அவள் எங்கே விழுந்து விடுவாளோ என்று அவன் கையைப் பற்றி ஏற்றிவிட்டான். இந்திரா பஸ்ஸில் ஏறிக் கொண்டதும் அவன் கையை விட்டான். இந்திரா பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களில் பிரிவாற்றாமையானது வேதனையாய் நிழலாடியது.

“குட்நைட்!” முறுவலுடன் சொன்னான்.

“குட்நைட்!” தெளிவற்ற குரலில் சொன்னாள். அவன் பார்வை அவளுக்கு அந்த இரவின் பிரிவை தாங்கக்கூடிய தைரியத்தை அளித்தது. பஸ் புறப்பட்டு விட்டது.

அவன் ஒரு நிமிஷம் அப்படியே நின்று விட்டான். பிறகு எதிரே தென்பட்ட மிட்டாய் கடையில் அரைகிலோ பால்கோவா வாங்கிக் கொண்டான். அதை வாங்கிக் கொண்டு வருவதற்குள் அவன் ஏற வேண்டிய பஸ் வந்துவிட்டது. கூட்டம் அதிகமாக இல்லாததால் அவனுக்கு உட்காரவும் இடம் கிடைத்துவிட்டது. அவன் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தாலும் பக்கத்தில் இன்னும் இந்திரா இருப்பது போலவே இருந்தது. இந்திராவிடம் உள்ள மகிமை என்னவென்று தெரியாது. எதிரில் இல்லாத போதும் கண்ணுக்கு எதிரே இருப்பது போல் தோன்றுவாள்.

கையிலிருந்த ஸ்வீட் பாக்கெட்டை பார்த்தான். அதைப் பார்த்ததும் தாய் “எதுக்குடா? வேலை கிடைத்துவிட்டதா?” என்று கேட்பாள்.

“இல்லை அம்மா’ என்று அவன் இந்திராவின் விஷயத்தை சொல்லிவிடுவான். தாய் முதலில் ஆச்சரியமடைந்தாலும் பிறகு சந்தோஷப்படுவாள். தம்பி தங்கை எல்லோரும் “அண்ணாவுக்குக் கல்யாணம் ” என்று குதித்து கும்மாளமிடுவார்கள்.

மணியைப் பார்த்தான். நேரமாகிவிடவில்லை. அப்பா இதற்குள் சீட்டுக் கச்சேரியிலிருந்து திரும்பியிருக்க மாட்டார். அம்மா சமையலை முடித்திருப்பாள். குழந்தைகள் தட்டை எடுத்து வைத்துக் கொண்டும், டம்ளரில் தண்ணீர் எடுத்து வைத்துக்கொண்டும் இரவு உணவுக்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருப்பார்கள். அவன் பெருமூச்சு விட்டுக்கொண்டான். அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். உழைப்பதற்காகவே பிறந்தவள் போல் அவனுடைய தாய் ஒரு நிமிடம்கூட ஓய்வு ஒழிச்சலின்றி பம்பரமாய் சுற்றிக் கொண்டே இருப்பாள். இரவு நேரத்தில் தூங்கும் சில மணி நேரங்களைத் தவிர அவளுடைய கைகள் அரை வினாடி கூட சும்மா இருந்தது இல்லை. அந்த இரவு நேரத்திலும் மங்காவோ, சீனுவோ எழுந்துகொண்டால் அவர்களில் தாகத்தை தீர்த்து வைப்பதற்காகவோ அல்லது பாத்ரூமுக்கு அழைத்துச் செல்வதற்காகவோ விழித்துக் கொள்வாள்.

வித்யாபதிக்கு தாய் என்றால் ரொம்ப பிரியம். சிறுவயது முதல் தாயின் பின்னாலேயே சுற்றிக் கொண்டு எல்லா வேலைகளில் அவளுக்கு உதவி செய்து கொண்டிருப்பான். அவன் தாய்க்கு ஒத்தாசையாய் இருப்பதைப் பார்த்த உறவினர்கள் “சுபத்ரா! நீ ரொம்ப கொடுத்து வைத்தவள். உன் மகன் பெரியவன் ஆன பிறகு உன்னை ரொம்ப சந்தோஷமாக வைத்துக்கொள்ளப் போகிறான்” என்று பாராட்டுவார்கள். அந்தப் பாராட்டுகளுக்கு சுபத்ரா பூரித்துப் போவாள்.

வித்யாபதி பெரியவன் ஆக ஆக படிக்க வேண்டிய நேரம் கூடியதால் தாய்க்கு உதவி செய்யும் வாய்ப்பு குறைந்துவிட்டது. தன்னுடைய பொறுப்பை தம்பி, தங்கைகளிடம் ஒப்படைத்துவிட்டான். இன்றைக்கும் தாய் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தால் பக்கத்தில் அமர்ந்துகொண்டு பேசுவதோ, பேப்பர் வாசித்துக் காட்டுவதோ அவனுடைய பழக்கங்களில் ஒன்று. தந்தை வக்கீல் குமாஸ்தாவாக நன்றாகவே சம்பாதித்தாலும் சீட்டாடும் பழக்கம் இருந்ததால் அந்த குடித்தனத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தைகள் எல்லோரும் வளர்ந்து பெரிய வகுப்புகளுக்கு வந்துவிட்டதால் சமீபகாலமாய் பொருளாதார ரீதியாய் ரொம்ப சிரமமாகத்தான் இருந்து வருகிறது. அப்படியும் அந்த வாழ்க்கையில் இனம் புரியாத ஒரு நிம்மதி இருந்தது. வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். பரஸ்பரம் அன்பும் பிரியமும் நிலவி வந்தன. இல்லாமையால் ஏற்படும் தொல்லைகள் அவர்களை ரொம்ப பாதித்ததாகத் தெரியவில்லை.

வித்யாபதியின் வாழ்க்கையில் ஒரே ஒரு லட்சியம்தான் இருந்து. தனக்கு மனைவியாக வரப்போகிறவள் தன்னைக் காட்டிலும் தன் தாயை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் கடவுள் அவனுக்கு இந்திராவை அளித்திருந்தார். இந்திராவுக்கும் வித்யாபதிக்கும் இண்டர் படிக்கும் போது அறிமுகம் ஏற்பட்டது. அந்த அறிமுகம் கல்லூரியைப் பற்றி, லெக்சரர்களைப் பற்றி, சினிமாக்களைப் பற்றி பேசிக்கொள்வதில் முடிந்துவிட்டது. இந்திராவின் அக்காவின் கணவருக்கு விசாகப்பட்டிணத்திற்கு மாற்றலாகிவிட்டது. இந்திரா அங்கே சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டாள்.

வருடங்கள் கழிந்துவிட்டன. ஒருவரைப் பற்றி மற்றவர் முற்றிலும் மறந்து போய்விட்டார்கள். ஆறு வருடங்கள் கழித்து போன வருடம் எதிர்பாராமல் ரத்னாவின் பிறந்தநாளன்று சந்தித்துக் கொண்டார்கள். ஏறத்தாழ ஆறு வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட இருவரும் ஒருவரை பார்த்து மற்றவர் ஆச்சரியமடைந்தார்கள். முன் பின் அறியாதவர்கள் போல் வெட்கப்பட்டார்கள்.

இந்திரா பி.காம். முடித்துவிட்டு வங்கியில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். வித்யாபதி எம்.ஏ. முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். இருவருக்கும் திருமணத்திற்காக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பரஸ்பரம் விஷயங்களை பரிமாறிக் கொண்டார்கள். அந்த நிமிடமே இருவருக்கும் நடுவில் இனம் புரியாத ஏதோ ஒரு ஈர்ப்பு, நெருக்கம் தொடங்கிவிட்டன.

அதற்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்வதில் பெரிய பிரச்னை எதுவும் இருக்கவில்லை. இந்திராவுக்கு தாய், தந்தை இல்லை. அக்கா வீட்டில் வசித்து வருகிறாள். அக்காவின் மாமியார் ரொம்ப பொல்லாதவள். அத்தான் வாயில்லாத பிராணி. இந்திரா பார்க்க லட்சணமாக இருந்ததாலும், வங்கியில் வேலை பார்த்து வந்ததாலும் அவளைத் திருமணம் செய்து கொள்ள நிறைய இளைஞர்கள் முன் வந்தார்கள். இந்திராவுக்குத்தான் அவர்களில் யாரையும் பிடிக்கவில்லை.

இந்திரா வித்யாபதிக்கு நடுவில் நெருக்கம் வளர்ந்தது, சங்கோசமும், தயக்கமும் விலகிவிட்டன. ஒருநாள் இந்திரா தனக்கு வந்த வரனைப் பற்றிய விவரங்களை தெரிவித்தாள். பையன் இன்ஜினியர். நல்ல சம்பளம். சொந்தவீடு. அவன் இந்திராவைப் பார்த்ததுமே சம்மதம் சொல்லிவிட்டான்.

ஆனால் இந்திராதான் அந்த வரனை மறுத்துவிட்டாள்.

“ஏன்? உனக்குக் கணவனாக வரப் போகிறவனுக்கு இன்னும் என்ன தகுதி இருக்க வேண்டும்?” ஆச்சரியமடைந்தவனாக கேட்டான் வித்யாபதி.

“எனக்குக் கணவனாக வரப் போகிறவன் என்னைப் பார்த்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். என் சம்பளத்தைப் பார்த்து அல்ல” என்றாள்.

“அப்படி என்றால்?'”

“அந்தப் பையனின் தாயார் ‘இரண்டு வருடங்களாக சம்பாதித்துக் கொண்டு இருக்கிறாய். எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாய்’ என்று கேட்டாள். எனக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது.”

அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பைக் கண்டால் இந்திராவுக்கு ரொம்பப் பிடிக்கும்.

“என் வருமானம், சேமிப்பைப் பற்றி அவர்களுக்கு என்ன வந்தது? நீயே சொல்லு.”

“நன்றாகச் சொன்னாய் போ. இந்தக் காலத்தில் கல்யாணம் ஆக வேண்டிய பெண்களுக்கு அழகுடன் வருமானமும் ஒரு முக்கிய தகுதியாகிவிட்டது.”

“பெண்களின் வருமானத்தை ஒரு தகுதியாக நினைக்கும் ஆண்மகன் எனக்குத் தேவையில்லை சாமி.”

“அது உன்னுடைய விருப்பம்.”

நான்கு நாட்கள் கழிந்தன. வித்யாபதி அடுத்த முறை தென்பட்ட போது இந்திரா கேட்டுவிட்டாள். “இரண்டு நாட்களுக்கு முன்னால் பெண்பார்க்க போகப் போவதாக சொல்லியிருந்தாயே? போய் விட்டு வந்தாயா?”

போனேன் என்பது போல் அவன் தலையை அசைத்தான்.

“பெண் எப்படி இருக்கிறாள்?”

“நன்றாகத்தான் இருக்கிறாள்.”

“அப்போ சம்மதம் சொல்லிவிட்டாற் போல்தானா?”

அவன் குறுக்காக தலையை அசைத்தான்.

“சம்மதம் சொல்லவில்லையா? என்ன காரணம்?” வியப்புடன் கேட்டாள்.

“அவர்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் இருக்கிறார்களாம். எனக்கும் அங்கே ஏதாவது வேலை வாங்கித் தருவார்களாம். கல்யாணம் முடிந்ததும் நான் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கே போய் விட வேண்டுமாம்.”

“உண்மையாகவா? எவ்வளவு நல்ல வாய்ப்பு? நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.” உற்சாகத்துடன் சொன்னாள்.

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் கண்களில் சந்தோஷம் போன்ற உணர்வு எதுவும் தென்படவில்லை.

“என்ன பதில் சொன்னாய்?” ஆர்வத்துடன் கேட்டாள்.

“அந்த சம்பந்தம் எனக்குப் பிடிக்க வில்லை என்று சொல்லிவிட்டேன்.”

“ஏன்?”

“எனக்கு மனைவியாக வரப் போகிறவள் என்னுடைய அம்மாவை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு அதுதான் ரொம்ப முக்கியம்.”

இந்திரா தலையை அசைத்தாள். “ஆமாம். அந்த விஷயத்தை நீ ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறாய்.”

இந்திராவுக்கு அந்த நிமிடம் முதல் அவனிடம் இருந்த மதிப்பு இரு மடங்காகிவிட்டது. பிரியம் மேலும் கூடியது. வாழ்க்கையில் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல் மனிதர்களுக்கு மதிப்பு தருபவர்கள் ரொம்ப நல்லவர்கள் என்பது இந்திராவின் நம்பிக்கை.

இருவருக்கு இடையே நெருக்கம் வளரத் தொடங்கியது.

ஒரு நாள் இந்திரா கேட்டுவிட்டாள். “உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. என்ன செய்யலாம் நீயே சொல்லு.”

“இது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.” சீரியஸாக சொன்னான்.

“நாமிருவரும் கல்யாணம் செய்து கொண்டால்?”

அவன் வியப்படைந்ததாக தெரியவில்லை. ஒரு வினாடி இந்திராவை ஆழமாக பரிசீலிப்பது போல் பார்த்தான். பிறகு சட்டென்று கையைப் பற்றி அருகில் இழுத்துக்கொண்டு ஆழமாக முத்தம் பதித்தான்.

அவனுடைய பதில் இந்திராவுக்குப் புரிந்துவிட்டது. அவனுடைய சம்மதம் தைரியத்தை அளித்தது.

“இரண்டு மாதங்களுக்கு முன்பே நான் இதைப் பற்றி கேட்போம் என்று நினைத்தேன். ஆனால் என்னுடையது வேறு இனம் என்று…”

“நான்சென்ஸ்! இந்தக் காலத்தில் அந்த விதமான ஆட்சேபணையை யாரும் வைத்துக் கொள்வதில்லை. நானே கேட்கலாம் என்று இருந்தேன். ஆனால் எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.”

“என்னுடைய கண்ணோட்டத்தில் அது ஒரு தடங்கல் இல்லை.”

“தாங்க்யூ!”

அந்த நிமிடம் முதல் அவ்விருவருக்கும் நடுவில் இருந்த எல்லைக்கோடு நீங்கிவிட்டது. நட்புக்கு காதல் துணையாயிற்று. பிரியமும் நெருக்கமும் கூடின. இந்திராவுக்கு வாழ்க்கையில் நிம்மதியும் நம்பிக்கையும் ஏற்பட்டன.

இந்திரா உடனே திருமணம் செய்துகொள்வோம் என்றாள். ஆனால் அவன் சம்மதிக்கவில்லை. “எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் நம் திருமணம்.”

“உனக்கு எப்போ வேலை கிடைக்குமோ என்னவோ?”

“கொஞ்சம் பொறுமையாய் இரு. அவசரப்பட்டால் எப்படி? இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு வேளை வர வேண்டும்.”

“இது வரையில் எப்படி பொறுத்துக் கொண்டேனோ தெரியவில்லை. வரவர அக்கா மாமியாரின் தொல்லை தாங்க முடியவில்லை.” சிணுங்குவது போல் சொன்னாள். “சில நாட்கள்தானே. கொஞ்சம் பொறுமையாய் இரு.” தோளில் தட்டிக் கொடுத்தான்.

வித்யாபதி இந்திராவை வீட்டுக்கு அழைத்துப் போய் தாய்க்கு அறிமுகம் செய்து வைத்தான். படித்து வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தும் அடக்கமாக இருந்த இந்திராவைப் பார்த்தும் சுபத்ராவுக்குப் பிடித்துவிட்டது.

“இந்தப் பெண்ணை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கு. ரத்னா என்ற பெண் வருவாள் பார்த்திருக்கிறாய் இல்லையா. வெறும் சண்டிக் குதிரை” என்றாள்.

தாய் சொன்னதை வித்யாபதி தெரிவித்த போது இந்திராவின் மனம் சந்தோஷத்தில் திளைத்துவிட்டது. அவனுக்கு தாயிடம் பிரியம் அதிகம். அந்தத் தாய்க்கு அவளைப் பிடித்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

வித்யாபதிக்கு ஃபுட்கார்போரேஷனில் இண்டர்வ்யூ வந்தது. இந்திரா ரொம்ப முயற்சி செய்து யாரிடமிருந்தோ சிபாரிசு கடிதம் வாங்கி அந்த வேலை அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

“இந்தூ! உனக்கு இவ்வளவு சிரமம் ஏன்? நீ இப்படி முயற்சி செய்வது எனக்கு ரொம்ப தலை குனிவாக இருக்கிறது” என்றான் அவன்.

“நீ அந்தமாதிரி பைத்தியக்காரத்தனமான யோசனை எதுவும் வைத்துக் கொள்ளாதே. என்னால் முடிகிற காரியம் என்பதால் செய்கிறேன். அதோடு உனக்கு வேலை கிடைப்பதில் உன்னைவிட என்னுடைய சுயநலம்தான் அதிகம்.”

அவனால் பதில் பேச முடியவில்லை.

இந்திரா அடிக்கடி வித்யாபதியின் வீட்டுக்கு வரத் தொடங்கினாள். தாய் ஜாடைமாடையாக விஷயத்தை புரிந்துகொண்டாலும் கணவனிடம் சொல்லவில்லை. இந்திரா ஒரு நாள் வித்யாபதியிடம் கேட்டாள். “நமக்குத் திருமணம் ஆனபிறகு அந்த வீட்டில் நம்முடைய படுக்கை அறை?”

அவன் தலையைச் சொறிந்துகொண்டான். அந்த வீட்டில் தனியாக படுக்கையறை என்று எதுவும் இல்லை. ரயில் பெட்டி போன்று அறைகள் வரிசையாக இருந்தன.

“நான் நமக்காக வேறு வீடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

அவன் கண்களில் தென்பட்ட கேள்விக்குறியைப் பார்த்து பக்கென்று சிரித்துவிட்டாள். “கடவுளே! பயப்படாதே. நமக்காக என்றால் நம் இருவருக்காக என்று இல்லை. எல்லோருக்குமாகச் சேர்த்துதான்னு அர்த்தம். வீட்டு வசதி வாரியத்தில் நான் வீட்டுக்காக அப்ளிகேஷன் போட்டிருந்தேன். அலாட் ஆகும் போல் இருக்கிறது. அது வந்துவிட்டால் நம் எல்லோருக்கும் நிம்மதி. ஏன் அப்படிப் பார்க்கிறாய்? நான் சொன்னது உனக்குப் பிடிக்கவில்லையா?”

“அது இல்லை இந்தூ. உன்னைப் போன்ற மருமகளை அடையப் போகும் எங்க அம்மா எவ்வளவு அதிர்ஷ்டசாலின்னு யோசிக்கிறேன்”.

“சரிதான். உங்க அம்மா இதைக் கேட்டால் என்ன சொல்லுவாங்க தெரியுமா?”

“என்ன சொல்லுவாள்?”

“என் மகனைப் போன்ற ஒருவனை கணவனாக அடையப் போகிற உன்னைவிட அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என்பாள்.”

நான்கு நாட்கள் கழித்து இந்திரா அவனிடம் லேடஸ்ட் ஹேச்.எம்.டி. வாட்ச் சொண்டு வந்து காண்பித்தாள். “எப்படி இருக்கு?”

“ரொம்ப நன்றாக இருக்கு.”

இந்திர அவன் கையில் வாட்சை கட்டிவிட்டாள்.

அவன் முகத்தில் வேதனை படர்ந்தது. கம்பீரமாக இருந்துவிட்டான்.

“ஏன் இந்த மௌனம்?” என்று கேட்டாள்.

“இந்தூ! இது போன்றவை எனக்கு எவ்வளவு வேதனை தரும் என்று உனக்குத் தெரியாது. வேண்டாம் என்று சொன்னால் நீ வருத்தப்படுவாய். ஏற்றுக்கொள்ளணும் என்றால்…”

“உன் சுயகௌரவம் குறுக்கே வருகிறது. அதுதானே? வித்யா! உன்னிடம் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? நமக்கிடையே எந்த தயக்கங்களும் இருக்கக்கூடாது. போகட்டும், ஒரு காரியம் செய். இப்போ நான் உனக்காக எவ்வளவு செலவு செய்கிறேன் என்று எழுதி வைத்துக்கொள். நாளைக்கு உனக்கு வேலை கிடைத்ததும் வட்டியுடன் எனக்குக் கொடுத்துவிடு. சரிதானே?”

அவன் தலையசைத்தான்.

“நாளை நான் விசாகப்பட்டிணம் போகிறேன். வியாழன் அன்று திரும்புவேன்” என்றாள்.

“விசாகப்பட்டிணமா? எதற்கு?”

“சித்திக்கு உடம்பு சரியாக இல்லையாம். ஒரு முறை வந்துவிட்டுப் போகச் சொல்லி எழுதியிருக்கிறாள்”.

“மறுபடியும் எப்போ வருவாய்?”

“கூடிய சீக்கிரத்தில்.”

பதினைந்து நாட்கள் கழித்து,

ரத்னாவின் வீட்டில்…

இந்திரா வித்யாபதியின் முன்னால் உறுமும் வானம் போல் நின்றிருந்தாள். “உனக்குத் தெரியாது என்று சொன்னால் எப்படி நம்புவது? நீ என்ன சின்னக் குழந்தையா உங்க அம்மா அப்பா வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதற்கு?”

இந்திராவைத் தேற்றுவதற்காக பல விதங்களில் முயன்று கொண்டிருந்தான் வித்யாபதி. “இந்தூ! கடவுள் சாட்சியாக சொல்கிறேன். உறவுகாரர்கள் வீட்டிற்கு வா என்று கூப்பிட்டார்களே தவிர அங்கே பெண்பார்க்கும் படலம் இருப்பது எனக்குத் தெரியவே தெரியாது. நீ என்னை நம்பினால் நம்பு. நான் சொல்வது பொய் என்று நீ நினைத்தால் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது.”

அவன் முகத்தில் தென்பட்ட வேதனையைக் கண்ட பிறகு இந்திராவின் மனம் கொஞ்சம் சமாதானமடைந்தது. “நாம் உடனே கல்யாணம் செய்து கொண்டு விடலாம். உங்க அம்மா அப்பாவிடம் சொல்லிவிடு” என்றாள்.

அவன் இயலாமையுடன் பார்த்தான். இந்திரா அவன் அருகில் வந்து பேதையைப் போல் சொன்னாள். “வித்யா! என் பயம் என்னவென்று உனக்குப் புரியாது. நீ அந்த சுவாமிநாதய்யரின் மகளை பெண் பார்த்துவிட்டு வந்ததாக ரத்னா சொன்னது முதல் என் மனம் ஒரு நிலையில் இல்லை. பெண் பார்க்க போனதில் உன் தவறு எதுவும் இல்லைதான். நம் விஷயத்தை நீ உங்க அம்மா அப்பாவிடம் சொல்லாதவரையில் அவர்களிடமிருந்து உனக்கு இதுபோன்ற தொந்தரவு வந்து கொண்டேதான் இருக்கும். இதற்கெல்லாம் காரணம் நீதான். உங்க அம்மா அப்பா மீது எந்தத் தவறும் இல்லை. என்னைப் பற்றி நீ வீட்டில் சொல்லவில்லை. வேலை கிடைத்த பிறகு சொல்வதாக தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தால் இந்த மாதிரி சிக்கல்கள் வரத்தான் செய்யும். அதனால் இன்றைக்கே என்னைப் பற்றி சொல்லிவிடு.”

“அப்படியே ஆகட்டும் இந்தூ”

“பிராமிஸ்?”

நீட்டிய இந்திராவின் கரத்தில் அவன் தன் கையை வைத்தான். சட்டென்று இந்திரா அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டு விம்மும் குரலில் சொன்னாள். “நேற்றிரவு முதல் எனக்குப் பொட்டுத் தூக்கமில்லை. அதனால்தான் உடம்பு சரியில்லை. உடனே வான்னு ரத்னா மூலமாய் செய்தி சொல்லியனுப்பினேன்.”

“நானே வருவதாக இருந்தேன்.” இந்திராவுக்குத் துன்பம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்துவிட்டோமே என்று உள்ளூர வருந்தினான்.

“நாம் எங்கேயாவது கொஞ்ச நேரம் தனிமையில் உட்காருவோம்” என்றாள்.

“கிளம்பு” என்றான் அவன்.

இருவரும் சேர்ந்து பூங்காவிற்கு வந்தார்கள். அன்று வீட்டிற்குப் போனதுமே வித்யாபதி தன் பெற்றோரிடம் திருமண விஷயத்தைச் சொல்வதாக முடிவு செய்யப் பட்டது.

யோசனை வெள்ளத்தில் மூழ்கித் திணறிக் கொண்டிருந்த வித்யாபதி வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே நினைவு இல்லை. வெறுமே சாத்தியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான். தம்பி தங்கைகள் சாப்பிடத் தயாராக உட்கார்ந்திருந்தார்கள்.

வித்யாபதியைக் கண்டதும் மங்கா “அம்மா! அண்ணா வந்தாச்சு” என்று பெரிதாக குரல் கொடுத்தாள். “அண்ணா வந்தாச்சு. அண்ணா வந்தாச்சு” என்று மற்ற குழந்தைகளும் ஓடோடி வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

“எங்கேடா போயிருந்தாய்?” கால்களை அலம்பிக்கொண்டு புழக்கடையிலிருந்து சாப்பிடுவதற்காக வந்து கொண்டிருந்த தந்தை கேட்டார்.

தாய் வெளியே வந்து அவனைக் கண்குளிரப் பார்த்துவிட்டு உள்ளே போய்விட்டாள்.

எல்லோரையும் பார்த்தான் அவன். எல்லோரின் முகமும் மலர்ந்திருந்தன. தந்தையும் சுமுகமாக தென்பட்டார். தான் சொல்லப் போகும் விஷயத்திற்கு சூழ்நிலை அனுகூலமாகவே இருக்கிறது.

தாய் சமையலறையிலிருந்து அவன் அருகில் வந்தாள். அவன் ஸ்வீட் பாக்கெட்டை உயர்த்திக் காட்டினான்.

“அம்மா! ஒரு நல்ல செய்தி” என்றான்.

“இருடா. உன்னை விட முன்னால் நான் உனக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லப் போகிறேன்.” உள்ளங்கையில் கொண்டு வந்த சர்க்கரையை அவன் வாயில் திணித்தாள் தாய்.

“என்ன செய்தி அம்மா?” இனிப்பை சுவைத்துக் கொண்டே சந்தோஷமாக விசாரித்தான்.

“நீ எங்கே போயிருந்தாய்? உனக்காக மதியத்திலிருந்து அப்பா தேடிக் கொண்டிருந்தார். காலையில் நீ சாப்பிட்டு விட்டு அந்தப் பக்கமாய் போனதுமே சுவாமிநாதய்யர் நம் வீட்டுக்கு வந்தார். அவருடைய மகள் சீதாமகாலக்ஷ்மியுடன் உன் திருமணம் நிச்சயமாகிவிட்டது. வெற்றிலைப் பாக்கு மாற்றிக் கொண்டாகிவிட்டது.”

தாய் உள்ளே சென்று பெரிய பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்தாள். “இதோ பார். நமக்குத் துணிமணி வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு விலை உயர்ந்தவை என்று பார்.” மகனின் முகவாயைப் பிடித்துக் கொண்டு ஆட்டினாள். “எனக்கு தெரியும்டா நீ அதிர்ஷ்டசாலி என்று. நீ சிறுவனாக இருக்கும் போதே ஜோசியர் ஒருவர் சொன்னார். அடுத்த திங்கட்கிழமை விடியற்காலை நாலுமணிக்கு முகூர்த்தம் வைத்திருக்கிறர்கள். ரொம்ப நல்ல முகூர்த்தமாம்.”

வித்யாபதியின் முகம் வெளிறிப் போய்விட்டது.

“அவர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளப் போகிறோம் என்று செய்தி தெரிந்தது முதல் அக்கம் பக்கத்தில் பொறாமையால் வெந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் காதும் காதும் வைத்தாற்போல் யாருக்கும் தெரியாமல் தாம்பூலம் மாற்றிக் கொண்டு விட்டோம்.” தாய் உடைகளை கொண்டு போய் உள்ளே வைத்துக் கொண்டே சொன்னாள்.

“இனி ஊர் சுற்றுவதைக் குறைத்துக் கொண்டு வீட்டிலேயே இரு. ரொம்ப நாள் இல்லை. ஏகப்பட்ட வேலை இருக்கு. நான் ஒண்டியாய் எவ்வளவு செய்ய முடியும்?” தந்தை தாயின் பக்கம் பார்த்துவிட்டு “சாப்பாடு போடு. சீக்கிரம் போகணும் நான்” என்றார்.

தாய் உணவு பரிமாற உள்ளே போனாள்.

வித்யாபதி சிலையாய் நின்று விட்டான். அவன் கையைப் பிடித்து இழுத்த தம்பி தங்கைகள் அவனைச் சுற்றிலும் குதித்து கும்மாளமிடத் கும்மாளமிடத் தொடங்கினார்கள். ‘அண்ணாவுக்கு கல்யாணம்.”

அண்ணா! இனிமேல் உன் பெயர் என்ன தெரியுமா? சீதாபதி.” தம்பி தங்கைள் கைகொட்டி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களின் சிரிப்பும் கைத்தட்டல்களும் அவன் செவிகளைத் துளைத்தெடுப்பது போலிருந்தது.

காலடியில் நிலம் நழுவிக் கொண்டிருப்பது போல் வித்யாபதி கலவரத்துடன், குழப்பத்துடன் அப்படியே நின்றுவிட்டான்.

அத்தியாயம்-2

இந்திரா கட்டிலில் அமர்ந்திருந்தாள். ஒரு வாரத்திற்கு முன்னால் இந்திராவைப் பார்த்தவர்கள் இப்பொழுது மறுபடியும் பார்க்க நேர்ந்தால் அவள்தான் என்று நம்பவே மாட்டார்கள். கன்னங்கள் ஒட்டிப் போய், கண்கள் குழிவிழுந்துக் கிடந்தன. கனவுகள் காணும் அந்தக் கண்கள் இப்பொழுது அவற்றை தொலைத்துவிட்டாற்போல் ஒளியற்று இருந்தன. அம்முகத்தில் தற்பெருமையாய் மற்றவர்கள் நினைக்கும் சுயநம்பிக்கை இப்பொழுது முழுவதுமாக காணாமல் போயிருந்தது. தன்மீதே தனக்கு நம்பிக்கை இல்லாத மனுஷியைப் போல் தீனமாய் தென்பட்டாள்.

இந்திரா உட்கார்ந்திருந்த கட்டில் அருகில் வந்தாள் ரத்னா. கையில் ஹார்லிக்ஸ் டம்ளர் இருந்தது. “காலை முதல் எதுவும் சாப்பிடவில்லை. கொஞ்சம் ஹார்லிக்ஸாவது குடி இந்தூ” என்றாள் வேண்டுவது போல். இந்திரா விருப்பம் இல்லாதது போல் ரத்னாவின் கையை தள்ளிவிட்டாள். ரத்னா இந்த மறுப்பைக் கண்டு ஏமாற்றமடையவில்லை. மேலும் பிடிவாதமாக எப்படியாவது இந்திராவை ஹார்லிக்ஸ் குடிக்க வைக்கணும் என்று தீர்மானித்துக் கொண்டவள் போல் கட்டில்மீது உட்கார்ந்தாள்.

“இந்தூ! உன் போக்கே எனக்குப் புரியவில்லை” என்றாள்.

“என்னையே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உன்னால் எப்படி புரிந்துகொள்ள முடியும்?” பற்றற்ற குரலில் வந்தது பதில்.

“இதற்கெல்லாம் காரணம் நீயேதானே? நீயே வரவழைத்துக் கொண்டுவிட்டு இப்பொழுது உட்கார்ந்து வருந்துவானேன்? வித்யாபதி எங்கேயாவது போய் திருமணம் செய்துகொள்வோம் எனறு உன்னை எவ்வளவு தூரம் கெஞ்சினான்? நீதான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாய். அப்பொழுதே உன்னை நன்றாக யோசித்துக்கொள்ளச் சொன்னேன். நன்றாக யோசித்துத்தான் சொல்கிறேன் என்றாய்.”

“எடுத்துக்கொண்ட முடிவிற்கு நான் ஒன்றும் வருத்தப்படவில்லை ரத்னா.” “பின்னே எதற்காக இப்படி வருத்தப்படுகிறாய்?”

“கடவுள் ஏன் இப்படி செய்தார் என்றுதான்.”

“இதோ பார். இந்த இடத்தில்தான் எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வருகிறது. நீயே முடிவு செய்துவிட்டு நடுவில் கடவுளை ஏன் பழிக்கிறாய்?”

“இந்த மாதிரியான சூழ்நிலையை ஏன் உருவாக்கணும்?”

“உன் கெட்டிக்காரத்தனத்தை சோதிப்பதற்காக இருக்கும். வித்யாபதி உன்னிடம் சொல்லாமல் தன்னுடைய பெற்றொர்கள் பார்த்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு இருந்தால் அப்பொழுது இந்த மாதிரி பேசுவது நியாயம். அன்றைக்கு அவன் முகத்தைப் பார்த்தால் எனக்கே ரொம்ப பாவமாய் இருந்தது. எவ்வளவு வேதனையுடன் வந்தான்? எங்கேயாவது போகலாம் வா இந்தூ என்று எவ்வளவு கெஞ்சினான்?”

“வித்யாபதி தாயை, தந்தையை சம்மதிக்க வைத்துவிட்டு என்னை அந்த வீட்டுக்கு மருமகளாய் அழைத்துக்கொண்டு போவான் என்று நினைத்தேனே ஒழிய இந்த மாதிரி திருட்டுத்தனமாய் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வோம் வா என்று கூப்பிடுவான்னு நினைக்கவில்லை.” இந்திரா கட்டிலை விட்டு எழுந்துகொண்டாள். அவளைப் பார்த்தால் ஒரு நிமிடம் கூட உட்கார முடியாதவள் போல் நிற்க முடியாதவள் போல் சொல்லொண்ணாத துயரத்தில் துன்பத்தில் ஆழ்ந்திருப்பவள் போல் தென்பட்டாள். பக்கத்தில் இருந்த தையல் மிஷனின் சக்கிரத்தை கையால் சுழற்றிக் கொண்டே சொன்னாள்.

“ரத்னா! உனக்குத் தெரியாது. வித்யாபதிக்கு தன்னுடைய தாய் என்றால் உயிர். தன்னுடைய தாயைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளக் கூடிய பெண்தான் தனக்கு வேண்டும் என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருப்பான். அவன் மனதை நான் முழுவதுமாக அறிவேன். இப்பொழுது ஆவேசத்தில் என்னை மணந்துகொண்டாலும் பிற்காலத்தில் கட்டாயம் வருந்துவான். நான் மருமகளாய் வருவதையே விரும்பாத அவன் தாயை என்னால் எப்படித் திருப்திப் படுத்த முடியும்?”

“அந்தப் பிரச்னை எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் இல்லையா?”

“எனக்காக அவன் தன் குடும்பத்தைத் துறப்பதில் எனக்கு விருப்பம் இல்லை ரத்னா. நான் எடுத்துக் கொண்ட முடிவு சரியானதுதான் என்று நினைக்கிறேன்.” ரத்னா தோள்களை குலுக்கிக்கொண்டாள். “நீ இதைத் தியாகம் என்று நினைக்கிறாய் போலிருக்கு.”

இந்திரா அருவருப்பு அடைந்தவள் போல் பார்த்தாள். “தியாகமா? ச்சீ ச்சீ.. நடைமுறைக்கு ஏற்றாற்போல் யோசித்துப் பார்த்தேன். அவனை நான் கல்யாணம் பண்ணிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக கழியணும். அதில் எந்த அபசுருதியும் ஏற்பட்டு விடக்கூடாது. என்னைக் கல்யாணம் செய்து கொண்டதால் எதையோ இழந்து விட்டாற்போலவோ, தன் குடும்பத்தாரை பிரிய வேண்டியதாகி விட்டாற்போலவோ அவன் ஒரு நிமிடமாவது வருத்தப்பட்டால்…” இந்திரா ஒரு நிமிடம் நிறுத்தினாள். “அந்த மாதிரி திருமணம் நடப்பதை விட நடக்காமல் இருப்பதே நல்லது.”

ரத்னா இந்திராவைக் கூர்ந்து நோக்கினாள். “இந்தூ! வித்யாபதி ரொம்ப சரியாகத்தான் சொன்னான். நீ ரொம்ப பிடிவாதக்காரி. நீ பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் என்று சாதிக்கிறாய்.”

“அப்படிப் பிடிவாதக்காரியாக இல்லாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்வது ரொம்ப கஷ்டம் ரத்னா.”

அப்பொழுது பிலுபிலுவென்று இரு சிறுமிகளும், ஒரு சிறுவனும் உள்ளே வந்தார்கள். அவர்கள் வித்யாபதியின் தம்பி மற்றும் தங்கைகள். அவர்களைப் பார்த்ததும் ரத்னா “வாங்க வாங்க” என்று வரவேற்றாள். அவர்களைப் பார்த்ததும் இந்திராவின் முகம் ஒரு நிமிடம் மலர்ந்தாலும், பையனில் கையிலிருந்த அழைப்பிதழ்களைக் கண்டதும் கருத்த மேகங்கள் சூழ்ந்து கொண்டது போல் கறுத்துவிட்டது. போய் கட்டில் மீது அமர்ந்துகொண்டாள்.

“ரத்னா அக்கா! எங்க அண்ணாவுக்குக் கல்யாணம். பத்திரிகையை உங்களுக்குக் கொடுத்துவிட்டு வரச்சொன்னான்” என்றான் சிறுவன் அழைப்பிதழ்களில் ரத்னாவின் பெயரைத் தேடிக்கொண்டே. குழந்தைகள் புத்தாடை அணிந்துகொண்டு சந்தோஷமாக இருந்தார்கள். அவர்களில் பெரியப் பெண் சுமித்ரா இந்திராவைப் பார்த்ததும் உற்சாகத்துடன் “அட இந்திராக்கா! நீங்க இங்கேதான் இருக்கீங்களா? அப்படி என்றால் உங்க வீட்டுக்கு போக வேண்டிய வேலை மிச்சம்” என்றாள்.

ரத்னா காபி கலந்து எடுத்து வருவதாகச் சொல்லி அவர்களை உட்காரச் சொன்னாள். டிகாஷனுக்காக தண்ணீர் வைத்துவிட்டு வந்தவள் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“உங்களுக்கு வரப் போகிற அண்ணியைப் பார்த்திருக்கீங்களா?”

”ஓ!”

“எப்படி இருக்கிறாள்?”

“அழகாக இருக்கிறாள். சிவப்பாய், கொஞ்சம் குள்ளமாய், கொஞ்சம் பருமனாய்.”

“பருமன் இல்லை ஒல்லிதான்” என்றாள் சுமித்ரா.

“இல்லை. பருமன்தான்.”

“எங்க அண்ணியிடம் எவ்வளவு நகைகள் இருக்குத் தெரியுமா? கழுத்து, காது, கை எல்லாமே மேட்சிங் செட்தான்.”

“உங்க அண்ணாவுக்கு வரதட்சணை தருகிறார்களா?”

“அதைப் பற்றி தெரியாது. அண்ணாவுக்கு அவர்கள் வைர மோதிரம், ஃபாரின் வாட்ச் எல்லாம் தருகிறார்கள். உடைகள் எல்லாம் விலை உயர்ந்தவை. நீங்க பார்த்து கூட இருக்க மாட்டீங்க. எங்க அம்மாவுக்கு, எங்களுக்கு எல்லாம் காஞ்சீபுரம் பட்டுதான்.”

தையல் மிஷன் சக்கிரத்தின் மீது கையைப் பதித்து பதுமையைப் போல் நின்றிருந்த இந்திரா அவர்கள் முகத்தில் தென்பட்டுக் கொண்டிருந்த உற்சாகத்தை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்!

சுமித்ரா எழுந்து வந்து இந்திராவிடம் பத்திரிகையைக் கொடுத்தாள். “நீங்க கட்டாயம் அண்ணாவின் கல்யாணத்திற்கு வந்து விடுங்கள்.” பெரியமனுஷியைப் போல் சொன்னாள்.

இந்திராவுக்கு தொண்டையில் ஏதோ அடைத்துக் கொள்வது போல் இருந்தது. பேச முடியாதவள் போல் தலையை அசைத்தாள்.

“போய் வருகிறோம். இன்னும் நிறைய பேர் வீட்டுக்குப் போகணும்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.

ரத்னா காபி டம்ளர்களை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள். இந்திரா ஜன்னல் வழியாய் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்,

வெளியே காய்கறி வண்டி நின்றிருந்தது. ஒருவன் கையில் பையுடன் காய்கறி பேரம் பேசிக் கொண்டிருந்தான். “உன்னால் வாங்க முடியாது சாமி. போய் வா” என்று வண்டிக்காரன் சலித்துக் கொண்டான். அதற்குள் கார் ஒன்று அங்கே வந்து நின்றது. வண்டிக்காரன் ரொம்ப பணிவுடன் வண்டியை கார் அருகில் தள்ளிக் கொண்டு சென்றான். வேண்டிய காய்கறியை எடைபோட்டு பையில் போட்டுக் கொடுத்தான். காரில் இருந்த பெண்மணி ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். வண்டிக்காரன் பாக்கி சில்லரையை திருப்பிக் கொடுத்ததும் கணக்குக் கூட பார்க்காமல் பர்ஸில் போட்டுக் கொண்டாள். தன்மீது அந்த அம்மாள் வைத்திருந்த நம்பிக்கைக்கு வண்டிக்காரன் சந்தோஷத்துடன் பார்த்தான். கார் கிளம்பிவிட்டது. பையை பிடித்துக் கொண்டிருந்த ஒல்லி ஆசாமி திரும்பவும் வந்தான். “தக்காளி எட்டணாவுக்குக் கொடுக்கக் கூடாதா?” வேண்டுவதுபோல் கேட்டான். வண்டிக்காரன் அவனை புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்தான். பதில் கூட சொல்லாமல் வண்டியைத் தள்ளிக் கொண்டு போய்விட்டான். இந்திரா அந்த ஒல்லி ஆசாமியின் முகத்தில் தக்காளி வாங்க வேண்டும் என்ற விருப்பத்தை, வாங்க முடியாமல் போன இயலாமையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவன்மீது கோபம்தான் வந்தது. தக்காளி வாங்கும் அளவுக்கு பணம் இல்லாத போது பேசாமல் அங்கிருந்து போய் விடவேண்டும். வண்டிக்காரனிடம் பிச்சைக்காரனைப்போல் கெஞ்சுவானேன்? விலையை குறைக்க மாட்டானா என்ற எதிர்பார்ப்பு. அந்த மாதிரியான எதிர்பார்ப்பைக் கண்டால் இந்திராவுக்கு அருவெறுப்பு.

இந்திராவின் பார்வை அழைப்பிதழின் மீது நிலைத்தது. அதைப் பார்த்ததும் அன்று வித்யாபதி வந்து எங்கேயாவது போய் விடலாம் வா என்று அழைத்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

இன்னும் வித்யாபதி எதிரே நிற்பது போலவே இருந்தது இந்திராவுக்கு.

”இந்தூ! வாதாடாதே. நாம் எங்கேயாவது போய் கல்யாணம் செய்துகொள்வோம்.”

“உங்க அம்மா? அவளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“முதலில் கொஞ்சநாள் பேசாமல் இருந்தாலும், பின்னால் அம்மாவே புரிந்துகொள்வாள்.”

“உன் பெற்றோர்களை உன்னால் சம்மதிக்க வைக்க முடியவில்லையா?”

“இந்தூ! நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவர்கள் கேட்டுக் கொள்ளவே இல்லை. அந்த சீதா மகாலக்ஷ்மியைத்தான் கல்யாணம் செய்துகொள்ளணும் என்று ரகளை செய்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தால் இந்தக் கல்யாணத்தை நடக்க விடமாட்டார்கள்.”

இந்திரா யோசனையில் ஆழ்ந்தாள்.

“இன்னும் என்ன யோசனை?”

“உன்னைப் பற்றித்தான் யோசிக்கிறேன்.”

“என்னதான் யோசிக்கிறாய்?”

“அம்மா என்றால் உனக்கு எவ்வளவு உயிர் என்று எனக்குத் தெரியும். உங்க அம்மாவை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் நபர் மனைவியாக வரவேண்டும் என்ற உன் கனவும் எனக்குத் தெரியும். அந்த கனவை நினைவாக்கணும் என்று நினைத்திருந்தேன். அதை அழிக்க முற்படுவாய் என்று நினைக்கவில்லை.”

அவன் ஆவேசத்துடன் இந்திராவின் கைகளை பற்றிக் கொண்டான். “இந்தூ! ப்ளீஸ்! எது நல்லது எது கெட்டது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உன்னை இழந்து விடுவேன் என்ற பயம்தான் என்னைப் பைத்தியம் போல் ஆட்டுவிக்கிறது.”

“எனக்கு யோசிக்க அவகாசம் கொடு.”

“இப்போ யோசிப்பதற்கு சமயம் இல்லை.”

“நம் இருவரின் வாழ்க்கைகு சம்பந்தப்பட்ட மிக முக்கியமான விஷயம் இது யோசிக்காமல் எப்படி?”

இருவரும் மறுநாள் சந்திப்பதாக பேசிக் கொண்டார்கள். அடுத்தநாள் இந்திரா எடுத்த முடிவைக் கேட்டு வித்யாபதி நிலை குலைந்துபோனான்.

“என்ன? நான் அந்த அந்த சீதா மகாலக்ஷ்மியைத்தான் கல்யாணம் பண்ணிகொள்ளணுமா? இதுதானா நீ எடுத்த முடிவு? உனக்கு மூளை கலங்கிவிட்டதா?” ஆவேசத்துடன் கேட்டான்.

“மூளை இருந்துதான் பேசுகிறேன். இதோ பார். நான் வேலைக்குப் போகிறேன். வீடு வாங்கப் போகிறேன். என் வாழ்க்கை ஓரளவுக்கு செட்டில் ஆகிவிட்டது. நான் கல்யாணம் என்று பண்ணிக்கொண்டால் அதன் மூலம் நான் சுகப்படணுமே ஒழிய பிரச்னைகளிலும், சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது. நீ சொன்னது போல் நாம் இப்பொழுதே கிளம்பி ஏதாவது கோவிலில் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டு விடலாம்தான். ஆனால் அதற்குப் பிறகு? உங்க அம்மா என்னை ஒரு திருடியைப் போல் அருவெறுப்புடன் கேவலமாக பார்த்தால் என்னால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? கல்யாணம் என்று ஒன்று நடந்தால் எல்லோரின் சம்மதத்தின் பெயரில் நடக்க வேண்டும். உங்கள் குடும்பம் முழுவதும் என்னுடைய குடும்பமாகணும். உங்கள் வீட்டில் எல்லோரும் என்னை நேசிக்கணும்.”

“இந்தூ! என்னைப் பற்றி நீ யோசிக்கவே இல்லை.”

“நான் உன்னைப் பற்றித்தான் யோசிக்கிறேன். இத்தனை நாட்களாய் உன்னைப் பார்த்து வருகிறேன். உன் பெற்றோருடன், தம்பி தங்கைகளுடன் உனக்கு இருக்கும் பாசப்பிணைப்பு நான் அறியாததா? அவர்களிடமிருந்து உன்னைப் பிரிப்பது என்றால் பந்தலிலிருந்து ஒரு கொடியைக் கத்தரித்தாற் போல்தான். போகப் போக நீ எனக்கு அண்மையில் இருந்தாலும் உன் மனம் மட்டும் அவர்களிடம்தான் இருக்கும்.”

“இன்னும் ஒரு முறை நன்றாக யோசித்துப் பார்.”

“நன்றாக யோசித்துப் பார்த்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.” “நீ என் பேச்சைத் தட்டமாட்டாய் என்று நினைத்தேன்.”

“இப்போதைய உன் ஆவேசத்தைவிட நம் எதிர்காலம் ரொம்ப முக்கியம்.”

“நீ இத்தனை பிடிவாதக்காரி என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆகட்டும். இனி என்னைக் குற்றம் சொல்லாதே. இந்த முடிவு எடுத்தது நீதான்.” இந்திராவைச் சம்மதிக்க வைக்க முடியாமல் வித்யாபதி கோபத்துடன் அங்கிருந்து போய்விட்டான்.

“என்ன இந்திரா? அப்படியே நின்று விட்டாய்?” ரத்னா வந்து விசாரித்தாள்.

“ஒன்றுமில்லை.” இந்திரா கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அத்தியாயம்-3

சுவாமிநாதய்யரின் மகள் சீதா மகாலக்ஷ்மியுடன் வித்யாபதியின் விவாகம் ஆடம்பரமாக நடந்தேறிவிட்டது. சுவாமிநாதய்யரிடம் பணம் நிறைய இருந்தது. செல்வாக்கும் இருக்கிறது. அவர் எது செய்தாலும் ஆடம்பரமாகத்தான் செய்வார். அவ்வளவு பணம் இருப்பவர் தம் மகளுக்கு எந்த ஃபாரின் ரிடர்ன்ட் வரனையோ பார்க்காமல் விதயாபதியைப் போன்ற சாதாரணமான நபரை மாப்பிள்ளையாக தேர்வு செய்தது எல்லோரையும் வியப்புக்கு உள்ளாக்கியது. அதற்கு அவர் ஒரே பதில்தான் சொன்னார். “நம்மைவிட பெரிய இடத்தில் வரன் பார்த்தால் அவர்களுக்கு நாம் அடிமையாக இருக்கணும். நம்மைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களாக இருந்தால் நாம் சொன்ன பேச்சை கேட்பார்கள். நம் கண்ணசைவில் நடப்பார்கள். அதிலும் எங்க சீதா இருக்கிறாளே. ரொம்ப பிடிவாதக்காரி. அந்தப் பையன் கொஞ்சம் சாது. இதை எல்லாம் யோசித்துத்தான் நான் இந்த வரனை முடிவு செய்தேன்” என்றார். அவர் எந்த வேலையைச் செய்தாலும் யோசித்துத்தான் செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும்.

திருமணம் விடியற்காலையில் என்பதால் ரொம்ப நெருங்கியவர்களைத் தவிர வெளியாட்கள் வரவில்லை. மாலையில் ரிசெப்ஷனுக்கு நிறையபேர் வந்தார்கள். வித்யாபதியின் நண்பர்கள் எல்லோரும் மாலையில்தான் வந்தார்கள். மாநிறத்தில் உயரமாக இருந்த வித்யாபதியின் அருகில் சிவப்பாய, குள்ளமாய் பட்டுப்புடவையில், சர்வாலங்கார பூஷிதையாக சீதா பதுமையாய் காட்சி தந்தாள்.

சீதாவுக்கு சிறுவயது முதல் நகைகள் என்றாலும், பூக்கள் என்றாலும் ரொம்பவும் பிடிக்கும். தந்தையும் மகளின் விருப்பத்தை உடனுக்குடன் தீர்த்துவைப்பார். வித்யாபதியைப் பார்க்கும் போது தந்தை தந்த எல்லா அணிகலனைவிட இந்த ஆபரணம் ரொம்ப நன்றாக இருப்பது போல் தோன்றியது. சிறுவயது முதல் தனக்கு சொந்தமான எந்தப் பொருளாக இருந்தாலும் சரி ரொம்ப ஜாக்கிரதையாக காபந்து பண்ணுவது பழக்கம். உடைந்து போன பொம்மையாக இருந்தாலும் சரி பத்திரமாக ஒரு மூலையில் இருக்க வேண்டியதுதான். ஒற்றை குழந்தை என்பதால் பெரியவர்களிடம் பயபக்திகள் அதிகம். ரொம்ப செல்லமாக வளர்ந்ததால் தான் நினைத்தது முடிய வேண்டும் என்ற பிடிவாதமும் அதிகம்தான். கடவுளிடம் பயமும் பக்தியும் உண்டு. ஆசார விவகாரங்களிடம் நம்பிக்கை. சிநேகிதிகள் என்றாலும், உறவினர்கள் என்றாலும் சந்தேகம். தாயின் போதனையால் சிறுவயது முதல் சீதாவுக்கு இந்த உ;லகத்தில் எல்லோரும் தம்மைப் பார்த்து பொறாமைப் படுகிறார்கள் என்றும், தம்மிடம் உள்ள பணத்தை அபகரிப்பதற்காக திட்டங்களை தீட்டிக் கொண்டிருப்பார்கள் என்றும், அவர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அபிப்பிராயம் அவள் உடம்பில் ரத்தத்தோடு கலந்துவிட்டிருந்தது.

வித்யாபதியின் பக்கத்தில் புது மணப்பெண்ணாக நின்றிருந்தாளே ஒழிய சீதாவின் பார்வை தொலைவில் விருந்தாளிகளுக்கு பரிமாறிக் கொண்டிருந்த வேலைக்காரர்களை கண்காணித்துக் கொண்டிருந்தன. இந்தக் காலத்தில் வேலைக்காரர்களை நம்பவேக்கூடாது. வேலைக்காரர்கள் செய்யும் தவறுகளை கண்காணித்து தந்தையிடம் சொல்லி சம்பளத்தில் பிடித்துக்கொள்ளச் செய்வது அவள் வழக்கம்.

பெரும்பாலானவர்கள் வந்துவிட்டுப் போய்விட்டார்கள். ரத்னா வந்தாள். பரிசைத் தந்துகோண்டே “இந்திரா வருவதாகச் சொன்னாள். வந்துவிட்டுப் போய் விட்டாளா?” என்று கேட்டாள்.

வித்யாபதியின் முகம் சிவந்தது. ‘வரவில்லை” என்றான்.

”இந்திரா யார்?” என்றாள் சீதா. கொஞ்ச நேரமாய் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். வித்யாபதிக்கு நண்பர்களின் கூட்டம் அதிகமாகத்தான் இருப்பது போல் தோன்றியது. நிறைய பேர் வந்தார்கள். அவர்களில் இரண்டு மூன்றுபேர் “இந்திரா வரவில்லையா?” என்று கேட்டார்கள்.

“உங்களவருக்குத் தெரியும்” என்றாள் ரத்னா குறும்பாக.

வித்யாபதிக்கு முள்ளின் மேல் நிற்பதுபோல் இருந்தது. எப்பொழுதுதான் இந்த சடங்கு முடியும் என்று நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டு எரிச்சலை வலுக்கட்டாயமாக சகித்துக் கொண்டிருப்பது போல் நின்றிருந்தான்.

எப்படியோ அவன் பொறுமையை முழுவதுமாக சோதித்த பிறகு அந்த விழா முடிந்துவிட்டது. வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். நாற்காலிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

வித்யாபதியும் சீதாவும் உள்ளே வந்தார்கள். அதற்குள் சீதாவின் தாய் வந்தாள். “சீதா! கொஞ்சம் இப்படி வாயேன். சித்தி ஊருக்குக் கிளம்புகிறாளாம்” என்று அழைத்தாள். சீதா அந்த அறையைவிட்டு வெளியேறினாள்.

வித்யாபதி நாற்காலியில் களைத்துப் போனவாய் சரிந்து உட்கார்ந்தான். அவனுக்குக் கழுத்திலிருந்த மாலையைப் பிய்த்து உதறிப் போட்டுவிட்டு இந்த விலை உயர்ந்த ஆடைகளை களைத்துவிட்டு வழக்கமாக தான் போட்டுக்கொள்ளும் உடையுடன் கண்காணாத இடத்திற்குப் போய் தனியாய் உட்கார்ந்து அழ வெண்டும் போலிருந்தது.

“அய்யா! உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க.” வேலைக்காரன் வந்து சொன்னான். கெஸ்ட் யாராவது வந்திருப்பார்கள் போலும். அவன் முகத்தில் வலுக்கட்டாயமாக சிரிப்பை ஒட்ட வைத்துக்கொண்டு எழுந்து நின்றுகொண்டான்.

அறைக்குள் இந்திரா வந்தாள்.

அவன் சட்டென்று நிமிர்ந்து நின்றான்.

நீலவண்ண ஷிபான் புடைவையில் ஜரிகை வேலைபாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் புடவையில் இந்திரா தந்தச் சிலையாய் காட்சியளித்தாள். கையில் வண்ணக் காகிதத்தால் சுற்றப் பட்டிருந்த பரிசுப்பொருளை வைத்திருந்தாள்.

அறையில் வித்யாபதி தனியாய் இருந்ததையும், தன்னைப் பார்த்ததும் விரைப்பாக மாறியதையும் கவனித்த இந்திராவுக்கு என்னவோ போல் இருந்தது. வித்யாபதி இந்திராவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்திராவும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் அங்கேயே நின்று விட்டாய்? உள்ளே வா.” தெளிவற்றக் குரலில் சொன்னான்.

இந்திரா உள்ளே வந்தாள்.

அவன் இந்திராவுக்கு எதிரே வந்து நின்றான். ஏளனமும், வெறுப்பும் நிறைந்த குரலில் சொன்னான். “பார்… என்னை நன்றாகப் பார்! இப்போ உனக்கு சந்தோஷமாக இருக்கா?”

இந்திராவின் கண்களில் கிர்ரென்று நீர் சுழன்றது. எத்தனையோ சிரமபட்டு திரட்டியிருந்த தைரியமானது திடீரென்று காணாமல் போய்விட்டது. கையிலிருந்த பரிசுப்பொருளை அங்கிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு சட்டென்று திரும்பி வெளியேறப்போனாள். வித்யாபதி கையைப் பிடித்து அவளைத் தடுத்து நிறுத்திவிட்டான். அப்படியே அவளை அறையின் வாசலுக்கு திரைச்சீலைக்கு அருகில் இழுத்துச் சென்றான்.

“இந்தூ! ஏன் இப்படிச் செய்தாய்? உன் பேச்சை நான் ஏன்தான் கேட்டேன்? உன் மேல் கோபித்துக் கொண்டு நான் ஏன் இந்த பைத்தியக்காரத்தனத்தைப் பண்ணினேன்? எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. எங்கேயாவது ஓடிப் போய் விடலாம் போலிருக்கிறது.”

“விடு என்னை. என்ன இது? யாராவது வருவார்கள்.” இந்திரா கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

சீதா பூமாலையை சரி செய்துகொண்டே வேகமாக அவ்வறைக்குள் வந்தாள். சித்தியிடம் பேசிக் கொண்டிருந்த சீதாவிடம் வேலைக்காரன் வந்தான். யாரோ விருந்தாளி வந்திருப்பதாகவும், வித்யாபதியின் அறைக்கு அனுப்பியிருப்பதாகவும் சொன்னான்.

அறைக்குள் அடியெடுத்து வைத்த சீதாவுக்கு அங்கே கணவனோ, வந்திருக்கும் விருந்தாளியோ கண்ணில் படவில்லை. பேச்சுக் குரல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. ”விடு என்னை. என்ன இது? யாராவது வருவார்கள்” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

சீதா புருவங்களைச் சுருக்கி அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்பது போல் அறை முழுவதும் பார்வையால் தேடினாள். வலதுப் பக்கம் இருக்கும் அறையின் கதவுகள் லேசாக சார்த்தியிருந்தன. அதில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையின் கீழே திரைச்சீலையைத் தாண்டி நீலவண்ண ஷிபான் புடவை ஜரிகை வேலைபாடுடன் தெரிந்தது. விதயாபதியின் பேண்டும், கால்களும் தென்பட்டன. அந்தப் பாதங்களும் புடவையின் கொசுவங்களுக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தன.

“இந்தூ! ஐ லவ் யூ. என்னால் இந்த வேதனையைதத் தாங்க முடியவில்லை. நாம் எங்கேயாவது ஓடிப் போகலாம் வா. இப்பொழுதாவது என் பேச்சைக் கேள். அந்த சீதாவின் காற்றுப்பட்டாலே எனக்குக் கம்பளிப்பூச்சி ஊர்வது போல் இருக்கு. போய்விடலாம் வா.”

“உனக்கு மூளை கலங்கிவிட்டதா? என்ன பேச்சு இது? யாராவது வந்து விடப் போகிறார்கள். விடு என்னை.”

“விடமாட்டேன். யாராவது வந்தால் அவர்களிடம் சொல்லி விடுகிறேன். இந்தப் பெண்ணைத்தான் நான் காதலித்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம். எங்க அம்மா அப்பா என் உயிரை எடுத்து இந்த சீதா என்ற சனிக்கிரகத்திற்கு என்னை மணம் முடித்து வைத்து விட்டார்கள் என்று சொல்வேன்.”

“வித்யா! உனக்குக் கோடி புண்யம். என்னை விட்டுவிடு. அப்புறமாக பேசிக்கொள்வோம்.”

“பிராமிஸ்?”

“பிராமிஸ்தான். என்னை விடு.”

சீதா விருட்டென்று பின்னால் திரும்பி தன் அறைக்கு ஓடி வந்துவிட்டாள். அவள் முகம் பேயறைந்தாற் போலிருந்தது. முகம் சிவந்து உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. வெள்ளம் பெருக்கெடுத்தது போல் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

சீதா தலையிலிருந்த பூக்களைப் பிய்த்து எறிந்தாள். கழுத்திலிருந்த பூமாலையை, நகைகளை கழற்றிக் கட்டிலில் விட்டெறிந்தாள்.

போகப் போக சீதாவுக்கு அழுகை வந்துவிட்டது. அவளால் தடுக்க முடியவில்லை. கட்டிலில் குப்புற விழுந்து பெரிய குரலெடுத்து அழத் தொடங்கினாள்.

அத்தியாயம்-4

சீதாவின் தாய் சுந்தரி பழகூடை, தேங்காய் முதலியவற்றை அந்த அறையில் வைப்பதற்காக உள்ளே வந்தாள். அறைக்குள் காலடி எடுத்து வைத்தவள் கட்டிலில் குப்புறப்படுத்து அழுது கொண்டிருந்த மகளைக் கண்டதும் திகைத்துப் போனாள். கையிலிருந்தவற்றை பக்கத்தில் இருந்த கூடையில் போட்டுவிட்டு கலவரத்துடன் அருகில் வந்து மகளின் தோளில் தட்டி “என்னம்மா? என்ன நடந்தது?” என்று கேட்டாள்.

சீதா தாயின் கையை உதறித் தள்ளிவிட்டு இன்னும் பெரிதாக அழத் தொடங்கினாள். அந்த அம்மாள் மகளை அருகில் இழுத்துக் கொள்ள முயன்றாள். ஆனால் சாத்தியப்படவில்லை.

“என்னதான் நடந்தது சொல்லு? இதென்ன அலங்கோலம்? இந்தப் பூக்களை எல்லாம் ஏன் பிய்த்து எறிந்தாய்? நகைகளையும் விட்டெறிந்திருக்கிறாய்? உன்னை யாராவது ஏதாவது சொன்னார்களா?”

சீதா தாயின் கையை உதறித் தள்ளிவிடு, “நீங்க எல்லோரும் சேர்ந்து என் கழுத்தை அறுத்துட்டீங்க. என் வாழ்க்கையை நாசமாக்கிட்டீங்க. ஒரு ஏமாற்றுப் பேர்வழிக்கு என்னைக் கல்யாணம் செய்து கொடுத்தீங்க.”

சுந்தரிக்கு மகளின் வார்த்தைகள் எதுவும் புரியவில்லை. “உன் போக்கே எனக்குப் புரியவில்லை. சரியாக சொல்லித் தொலையேன்.”

சீதா எழுந்து உட்கார்ந்துகொண்டாள். இடையிடையே விசும்பிக் கொண்டே நடந்ததை எல்லாம் எடுத்துச் சொன்னாள்.

“உண்மைதானா?” சுந்தரி மூக்கின் மீது விரலை வைத்துக் கொண்டாள்.

“உண்மைதான் அம்மா. என்னைப் பார்த்தால் கம்பளிப்பூச்சி ஊர்வது போல் இருக்கிறதாம். நான் சீதா என்ற சனிக்கிரகமாம்.” சொல்லச் சொல்ல சீதாவுக்கு மேலும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

மகளின் முகத்தைப் பார்த்த சுந்தரிக்கு வயிற்றைப் பிசைந்தெடுத்தது. அவள் இந்த வரனை வேண்டாம் என்று மறுத்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் சுவாமிநாதய்யர் கேட்டுக் கொள்ளவேயில்லை. சண்டையாக இருந்தாலும் சரி, திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தாலும் சரி சம அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்று சொன்னால் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அந்த குசேலர் குடும்பத்தில் போய் பெண்ணைக் கொடுத்தால் எல்லோருமாக படையெடுத்து வந்து நம் வீட்டை கொள்ளையடித்து விடுவார்கள் என்று சொன்னால் “உனக்கொன்றும் தெரியாது. நீ வாயை மூடிக் கொண்டிரு” என்று அவள் வாயை அடைத்துவிட்டார்.

சீதா தாயின் அருகில் நெருங்கி வந்து மார்பில் தலையைப் புதைத்துக் கொண்டாள். “அம்மா! என்னை கம்பளிப்பூச்சி என்று சொல்பவர் எனக்கு வேண்டியதில்லை. அப்பாவிடம் இப்பொழுதே சொல்லிவிடு. அந்தக் கணவன் எனக்கு வேண்டியதில்லை.”

சுந்தரி மகளைக் கட்டிக் கொண்டாள். “உன் கையில் மருதாணி கூட இன்னும் அழியவில்லை. இந்த மாதிரி அபசகுனமாகப் பேசாதேம்மா. உனக்குப் போய் இவ்வளவு கஷ்டம் வருவானேன்? என் கண்ணே! உன்னை நன்றாக வைத்துக்கொள்ளும் பையன் கிடைத்தானே என்று சந்தோஷப்பட்டோம்.”

“இதெல்லாம் என்னுடைய துரதிர்ஷ்டம் அம்மா” என்றாள் சீதா.

“இல்லையம்மா. என் தலையெழுத்துதான் இது. மணப்பெண் கோலத்தில் இருக்கும் போதே என் மகளின் முகத்தில் இத்தனை வேதனையைப் பார்க்க வேண்டியிருக்கிறது.”

இருவரும் ஒருவரை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்.

அதற்குள் சுவாமிநாதய்யர் அந்த அறைக்குள் நுழைந்தார். “இதோபார். உன்னைத்தான்..” என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தவர், தாயும் மகளும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழுவதைப் பார்த்து பதறிவிட்டார். “என்ன? என்ன நடந்தது?” என்று உள்ளே வந்தார்.

அவாரப் பார்த்ததும் சீதாவும் சுந்தரியும் கட்டிலை விட்டு இறங்கினார்கள்.

சுவாமிநாதய்யர் ஒரு நிமிடம் அங்கே கீழே கிடந்த பூமாலையை, கட்டில் மீது தாறுமாறாக கிடந்த நகைகளை விநோதமாக பார்த்தார்.

“சீதா! என்ன விஷயம்? என்ன நடந்தது?” என்று கேட்டார்.

சீதா புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு மேலும் பலமாக அழத் தொடங்கினாள்.

“என்னடீ? சீதாவுக்கு என்ன நேர்ந்தது?” அவர் பதற்றத்துடன் மனைவியிடம் விசாரித்தார்.

அவள் மூக்கைச் சிந்திப் போட்டுவிட்டு மௌனமாக இருந்தாளே தவிர பதில் சொல்லவில்லை.

அவருடைய பதற்றம் அதிகரித்துவிட்டது. பதற்றம் கூடிய போதெல்லாம் அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். இப்பொழுதும் அதுதான் நிகழ்ந்தது. கண்களை உருட்டி மனைவியைப் பார்த்துக் கொண்டே “எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டால் நாலு அறை கொடுப்பேன். என்ன நடந்தது என்று சொல்லிவிட்டு அழுங்கள்” என்றார்.

சுந்தரி மகள் சொன்னதையெல்லாம் ஒன்று விடாமல் கணவரிடம் ஒப்புவித்தாள்.

அதைக் கேட்டதும் சுவாமிநாதய்யரின் முகம் ஒரு நிமிடம் வெளிறிப் பொய்விட்டது. பந்தயத்தில் தோற்றுப் போனவன் போல் முகம் களையை இழந்தது. சாதாரணமாக என்றைக்குமே அவருடைய கணிப்பு தவறியதில்லை. வித்யாபதியைப் பார்த்ததும் நல்ல பையன் என்று தோன்றியது. இன்று அவருடைய கணிப்பு தவறிவிட்டது. அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எந்த விஷயத்திலும் சட்டென்று நிலைகுலைந்து போகும் ஆசாமி இல்லை அவர். தன் மனதில் ஏற்பட்ட வேதனையை, ஏமாற்றத்தை வெளியில் தெரியாமல் சமாளித்தார்.

“இந்தச் சின்ன விஷயத்திற்கு பிலாக்கணம் பாடிக் கொண்டு உட்கார்ந்து இருந்தீங்களா? அவள்தான் சின்னவள். ஒன்றும் தெரியாது. இத்தனை வருடங்கள் என்னுடன் குடித்தனம் செய்திருக்கிறாய். அந்த அளவுக்குக் கூட இங்கித ஞானம் இல்லையா? ஒரு பக்கம் வீடு கொள்ளாமல் உறவுக்காரர்கள் இருக்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பி வைக்க வேண்டும். நேரமாகிவிட்டது. அவளுக்கு தைரியம் சொல்ல வேண்டியது போய் நீயும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு அழுகிறாயா? உனக்கு புத்தியில்லை. நல்ல வேளை. என்னைத் தவிர இந்த அறைக்குள் வேறு யாரும் வரவில்லை. கிளம்பு” என்று அவர் மனைவியின் மேல் எரிந்து விழுந்தார்.

“வழியனுப்பி வைப்பதா? நான் செத்தாலும் போக மாட்டேன்” என்றாள் சீதா.

சீதாவின் பிடிவாதம் அவருக்குத் தெரியாதது இல்லை. ஒரு வார்த்தை சொன்னால் அதையே பிடித்துக் கொண்டு சாதிப்பாள். அதட்டினால் மேலும் வீம்பு பிடிப்பாள். அதனால் அவர் இப்பொழுது நயமாகச் சொன்னார். “பாரும்மா சீதா. நீ சொன்ன இந்த விஷயத்தைக் காதாரக் கேட்டும் என்னால் நம்ப முடியவில்லை.”

“நம்பத் தேவையில்லை அப்பா. அதனால் பரவாயில்லை” என்றாள் முகத்தைத் திருப்பிக் கொண்டு.

“அது இல்லை அம்மா. உண்மையில் நீ சொன்னதைக் கேட்டு என் வயிறு பற்றிக்கொண்டுதான் எரிகிறது. நான் உனக்கு நல்ல பையனாகப் பார்த்து தேர்ந்தெடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன்? நான் பார்க்காத வரன் உண்டா? இந்த மாதிரி ஏன் நடந்ததோ எனக்குப் புரியவில்லை. நடக்கக் கூடாததுதான் நடந்துவிட்டது”

“என்னை என்னைக் கம்பளிப்பூச்சி என்று சொன்னான்.” சீதா அழுதுகொண்டே சொன்னாள்.

“என்ன வார்த்தை சொல்லிவிட்டான்? இதுவே வேறு யாராவது சொல்லியிருந்தால் அவன் நாக்கை இழுத்து வைத்து அறுத்திருப்பேன்.”

“நீங்க போய் இதையெல்லாம் சொல்லிவிட்டு நாலு வார்த்தை கேட்டுவிட்டு அவர்களை நம் வீட்டை விட்டுப் போகச் சொல்லுங்கள் அப்பா.”

அவர் அடிவாங்கினாற்போல் பார்த்தார். எப்படியோ சமாளித்துக் கொண்டு சொன்னார். “பாரும்மா. அப்படி சொல்லி விடலாம்தான். ஒரு நிமிடம்கூட ஆகாது. ஆனால் யாருக்கு நஷ்டம் சொல்லு? எல்லோரும் சிரிப்பார்கள். பார்த்துப் பார்த்து நல்ல வரன்தான் பண்ணி வைத்தான் மகளுக்கு என்று ஏளனம் செய்வார்கள். நம்மைப் பற்றி கதைக் கதையாக பேசத் தொடங்குவார்கள். நாம் செல்வாக்கு இருப்பவர்கள். நமக்கு குடும்ப கௌரவம் பெரிசு இல்லையா? உண்டா இல்லையா சொல்லு.”

சீதா ஆமாம் என்பது போல் பார்த்தாள்.

“பெரிய இடத்து மக்கள் தவறு செய்யக்கூடாது. அப்படியே செய்து விட்டாலும் காதும் காதும் வைத்தாற்போல் சரி செய்து கொண்டு விடவேண்டும். அதை விட்டுவிட்டு நடுத்தெருவுக்கு கொண்டு வரக்கூடாது.”

“இப்போ என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நான் மாமியார் வீட்டுக்கு அவனுடன் போக மாட்டேன்.”

“நானும் உன்னைப் போகச் சொல்ல மாட்டேன். மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பும் விழா மட்டும் முடியட்டும். உறவினர்கள் எல்லோரும் புறப்பட்டுப் போன பிறகு நாம் அதைப் பற்றி முடிவு செய்யலாம். நமக்குள் ஏதாவது ரகளை நடந்தால் அந்த ரகளை நமக்குள் மட்டுமே இருக்க வேண்டும். வேலைக்காரர்களுக்குக் கூடத் தெரியக்கூடாது.”

சீதா யோசித்துப் பார்த்தாள். கடைசியில் சரியென்று தலையை அசைத்தாள். தந்தை சொன்னது உண்மைதான். குடும்பகௌரவம் முக்கியம். அதற்கு இழுக்கு வரக்கூடாது. அந்த விஷயம் சீதாவுக்கு நன்றாகத் தெரியும். வீசி எறிந்த நகைகாள ஒவ்வொன்றாக எடுத்து அணிந்துகொண்டாள்.

உறவினர்கள் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து சுவாமிநாதய்யர் வித்யாபதியின் தந்தையிடம் இந்த விஷயத்தை சொன்ன போது அவர் திகைத்து நின்றுவிட்டார். மகனின் நடவடிக்கை அவருக்கு தலைகுனிவாக இருந்தது.

“இந்த இந்திரா யார்? அந்தப் பெண்ணுக்கும் உங்க மகனுக்கு எவ்வளவு நாளாக சிநேகம்?” என்று கேட்டார்.

வித்யாபதியின் தந்தை சட்டென்று சுவாமிநாதய்யரின் கரங்களைப் பற்றிக் கொண்டார். ‘சம்பந்தி! எனக்கு ஒன்றுமே தெரியாது. இந்திரா என்ற பெண் இவன் கூட படித்தவள். வங்கியில் வேலை பார்க்கிறாள். ஓரிருமுறை நம் வீட்டிற்கு வந்திருக்கிறாள். ஆனால் இருவருக்கும் இடையில் பழக்கம் எவ்வளவு தூரம் இருந்தது என்று எனக்கு ஒன்றுமே தெரியாது.”

அவர் முகத்தில் தென்பட்ட வேதனையில் பாதி நடிப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது சுவாமிநாதய்யருக்கு. தலையை அசைத்துக் கொண்டே சொன்னார். ‘சரி விடுங்க. இதில் உங்களுடைய தவறு எதுவும் கிடையாது. நீங்கள் எங்களை ஏமாற்றவும் இல்லை. பிழை எங்களுடையதுதான். பிழை என்று தெரிந்துவிட்ட பிறகு சரி செய்து கொள்ளணும் இல்லையா? அந்தப் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்.

அவனை அந்த இந்திராவின் பிடியிலிருந்து நானே தப்பிக்க வைக்கிறேன். ஆனால் நீங்க மட்டும் என்னுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்” என்றான்.

“ஐயோ… கட்டாயம். அவன் விஷயத்தில் நீங்க என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன்.”

“மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பும் சடங்கு பெயருக்கு நடக்கும். பையனை தற்போதைக்கு இங்கே வைத்துக் கொள்கிறோம். கொஞ்ச நாள் என் கண்பார்வையில் இருந்தால் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு தானாகவே வரும்.”

“சரி சரி” என்று தலையை அசைத்தார்.

“உங்க மகனிடம் ஒரு மாதத்திற்கு இங்கே இருக்கணும் என்று சொல்லிவிடுங்கள். எப்படிச் சொல்லி சம்மதிக்க வைப்பீங்களோ உங்கள் இஷ்டம்.”

வித்யாபதியின் தந்தை தொண்டைக்குழியில் ஏதோ அடைத்துக் கொண்டாற்போல் பார்த்தார். “ஆகட்டும் சரி” என்றார். அப்படிச் சொல்லும் போது அவர் குரலில் சற்று முன் இருந்த உற்சாகம் இருக்கவில்லை.

“என்னது? நீங்கள் எல்லோரும் போய்விட்டால் நான் மட்டும் இங்கே இருக்கணுமா? என்னதான் சொல்றீங்க?” வித்யாபதி எரிச்சலுடன் சொன்னான்.

“நான் எதற்காக சொல்கிறேன் என்று புரிந்துகொள். இத்தனை செல்வத்திற்கிடையில் பிறந்து வளர்ந்த பெண் நம் வீட்டிற்கு வந்து எந்த சுகத்தை அனுபவிக்கப் போகிறாள்? ஏதோ ஒரு மாதம் …’

வித்யாபதி நடுவிலேயே சள்ளென்று எரிந்து விழுந்தான். “நீங்க இந்த மாதிரி சும்மாச் சும்மா நம்பளை இல்லாதவர்கள், ஏழைகள் என்றெல்லாம் சொல்வது எனக்குப் பிடிக்கவே இல்லை. நாம் ஏழையா, பணக்காரர்களா என்று இந்தத் திருமணத்தை முடிவு செய்வதற்கு முன்னால் அவருக்கு தெரியாதாமா?”

”அது இல்லைடா. அவர்களுக்கு ஆண்குழந்தை இல்லை. மாப்பிள்ளையாய் நீ வந்ததும் வீட்டிற்கு ஆண் பிள்ளை வந்துவிட்டாற்போல் வந்துவிட்டாற்போல் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆசையை நாம் ஏன் பாழாக்கணும்? உன்னைப் பார்க்க யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் எல்லாம் நம் வீட்டுக்கு வந்தால் உட்கார்ந்து கொள்வதற்கு நாற்காலிகள் கூட இல்லை. அது மட்டுமே இல்லை. அவர் உனக்கு வியாபார விஷயங்களை எல்லாம் கற்றுத் தருவாராம்.”

வித்யாபதி வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். “எனக்கு வங்கியில் வேலை கிடைக்கப் போகிறது. அதில் சேர்ந்து கொள்கிறேன்.”

இனியும் பயனில்லை என்று தாய் இடை புகுந்தாள். “வித்யா! அப்பா சொன்னபடி கேளுப்பா. அவர்களுடைய ஆசையை நாம் கெடுக்கக் கூடாது. நாங்க கிளம்பிப் போகிறோம். நீ இரு.”

“அது இல்லை அம்மா. புது மனிதர்களுக்கு இடையில் எனக்கு என்னவோ போல் இருக்கும்.”

“புது மனிதர்கள் எப்படி ஆவார்கள்? அவர்கள் கூட இனிமேல் எங்களைப் போல் உன் மனிதர்கள்தான்.”

“நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு. நானும் உங்களுடன் வந்து விடுகிறேன்.”

“என் கண்ணில்லையா? நீ ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தாய் என்றால் உங்க மாமனாருக்குக் கோபம் வரும். அது எங்களுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும். நான் உன்னை எவ்வளவோ நன்றாக வளர்த்திருப்பதாக பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.” சொல்லும் போதே அந்தம்மாளின் கண்களில் ஈரம் கசிந்தது.

அதற்குமேல் வித்யாபதியால் பேச முடியவில்லை.

“அம்மா! பஸ் ரெடியாகிவிட்டது. எல்லோரும் ஏறியாச்சு” என்றபடி குழந்தைகள் வந்தார்கள்.

வித்யாபதியின் தாய் மகனைப் பார்த்தாள். “போயிட்டு வரட்டுமா?”

வேறு வழியில்லாதவன் போல் தலையை அசைத்தான். “நானும் நடுநடுவில் வந்து போகிறேன்” என்றான்.

“ஆகட்டும்” என்றாள்.

தாய், தந்தை கிளம்பிப் போகும் போது புகுந்த வீட்டில் தனியாக விடப்பட்ட மணப்பெண்ணைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். பெற்றோர்கள், உறவினர்கள், அவன் தம்பி, தங்கைகள் ஏறிக் கொண்டதும் பஸ் புறப்பட்டுவிட்டது.

“வாப்பா… உள்ளே வா. உள்ளே போவோம்” என்று மருமகனை அழைத்தார் சுவாமிநாதய்யர்.

அவருடன் உள்ளே நுழையும் போது மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த சீதா தென்பட்டாள். ஒரு நிமிஷம் கணவன் மனைவி இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. இருவரின் கண்களிலும் நாணமோ, ஆர்வமோ, புது மண தம்பதிகளுக்கு இடையே சகஜமாக இருக்க வேண்டிய ஈர்ப்போ கடுகளவும் தென்படவில்லை. வித்யாபதி சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதைக் கவனித்ததும் சீதாவின் கண்கள் அடியுண்ட பெண்புலியைப் போல் சீற்றம் கொண்டன.

அத்தியாயம்-5

சுவாமிநாதய்யர் வித்யாபதியை அழைத்துச் சென்று ஓர் அறையைக் காண்பித்தார். “இதோ பாருப்பா. இது உன்னுடை தனி அறை. இந்த அறைக்குள் நீயாக கூப்பிட்டால் தவிர யாரும் வர மட்டார்கள், நாங்கள் உள்பட” என்று சொன்னவர் “ரங்கா!”என்று குரல் கொடுத்தார். அந்தக் குரல் கேட்டதும் அடுத்த வினாடி “அய்யா!” என்று பதினான்கு வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் வாசலில் வந்து நின்றான். “இதோ இவன் உனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வேலைக்காரன். உனக்கு எது வேண்டும் என்றாலும் இந்த காலிங் பெல்லை அழுத்து. இவன் வந்ததும் சொன்னாய் என்றால் உடனுக்குடன் உனக்கு வேண்டியதை செய்து கொடுப்பான். அதோ புத்தகங்கள். உனக்கு இன்னும் ஏதாவது வேண்டும் என்றால் எழுதிக்கொடு. வரவழைத்துத் தருகிறேன். ரேடியோ இங்கே இருக்கிறது.” ரேடியோவைக் கொண்டு காண்பித்தார். “இதில் டேப்ரிகார்டர் கூட இருக்கு. வேண்டுமானால் ரிகார்ட் செய்து கொள்ளலாம். இது வெளிநாட்டிலிருந்து வரவழைக்கபட்டது. இதோ ஃபோம் பெட். உனக்கு வசதியாக இல்லையென்றால் சொல்லு. இலவம்பஞ்சு மெத்தைக்கு ஏற்பாடு செய்கிறேன். நீ இந்த வீட்டுக்கு செல்ல மருமகன். எதற்கும் கஷ்டப்படக் கூடாது. நாங்கள் எல்லோரும் உனக்கு வேலைக்காரர்கள்.”

இது வரையிலும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த வித்யாபதி “ச்ச… ச்ச.. என்ன பேச்சு இது?” என்றான்.

“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். உன்னை அவ்வளவு அபூர்வமாக பார்த்துக் கொள்ளணும் என்பது எங்கள் தவிப்பு. அவ்வளவுதான்.” அதற்குள் ஹாலில் ஃபோன் ஒலித்தது. போகப் போனவர் நின்றார். “இதோ பார். என் மகள் இருக்கிறாளே. அவள் என்றால் எனக்கு உயிர். அவள் பிறந்த பிறகுதான் வாழ்க்கையில் எனக்கு எல்லாம் சேர்ந்து வந்தது. அவளுடைய சந்தோஷத்திற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். எந்தக் காரணத்திற்காகவாவது அவள் கண்ணீர் விட்டாள் என்றால் எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த ஆவேசத்தில் நல்லது பொல்லாதது கூட பார்க்க மாட்டேன். வருகிறேன்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

வித்யாபதி அறைக்கு நடுவில் ஒரு நிமிடம் செயலற்று நின்றுவிட்டான். அவன் கண்கள் யதேச்சையாக அவ்வறையை நோட்டமிட்டன. அறையில் சோபா செட்டும், மெத்தென்ற படுக்கையும், தரைவிரிப்பும் இருந்தன. அலமாரி முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருந்தன. ரேடியோ இருந்தது. கூர்ந்து பார்த்தால் அந்த அறையில் இருக்கும் நபர் தனிமையைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. நன்றாக பொழுது போகும்.

இவ்வளவு பணம், வசதிகள் இதையெல்லாம் பார்க்கும் போது வித்யாபதிக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. இந்த அறை, இந்தச் சூழ்நிலை பெரிய கூண்டு போல் தோன்றியது. அவன் ஜன்னல் அருகில் சென்று கர்டெனை விலக்கிப் பார்த்தான். எதிரே மாடி வீடு ஒன்று இருந்தது. அதில் இருந்த போர்ஷன்கள் ரயில் பெட்டிகளை உயரவாக்கில் நிற்க வைத்தது போல் இருந்தன. எதிரே தென்பட்ட போர்ஷனில் கணவன் மனைவி நெருக்கமாக இருந்த காட்சி தென்பட்டது. வித்யாபதி கர்டெனை மூடிவிட்டு வந்துவிட்டான். வந்து சோபாவில் அமர்ந்துகொண்டான். தலையைப் பின்னால் சாய்த்து அப்படியே கண்களை மூடிக்கொண்டான். அவனுக்கு இந்திராவின் நினைவு வந்தது. தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி அவள் கேட்டது, தனக்கு வேலை கிடைப்பதற்காக இந்திரா பட்ட பாடு, தான் பெண்பார்க்க போயிருந்ததாக தெரிந்ததும் ஆத்திரமடைந்த நிகழ்ச்சி எல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தன. என்ன காரியம் செய்துவிட்டான் அவன்? இந்திராவைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி இறுதியில் ஏமாற்றிவிட்டான். “நான் அவளை ஏமாற்றினேனா?” மனச்சாட்சி வாதாட முயன்றது. வித்யாபதியின் மனதில் இருக்கும் அன்பானது மனச்சாட்சியை உருட்டி விழித்தது. “இந்திரா வேண்டாம் என்று மறுத்தாளா? அந்த வார்த்தைச் சொல்வதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா? அவள் ஏன் மறுத்தாள் தெரியுமா? உனக்காக, உன் மன அமைதிக்காக, உன் சந்தோஷத்திற்காக, உன் குடும்ப நலனுக்காக.”

இந்தக் காலத்தில் பெண்களை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்? இந்திரா எவ்வளவு நல்லவள்? இவ்வளவு தன்னலமற்று யாராவது யோசிப்பார்களா? அந்த நிமிடத்தில் வித்யாபதிக்கு இந்திரா ரொம்ப அபூர்வமாகத் தோன்றினாள். “ச்சீ… ச்சீ… அவ்வளவு நல்ல பெண்ணை வலுக்கட்டாயமாகவாவது கல்யாணம் செய்து கொண்டிருக்க வேண்டும். இல்லையா “எனக்குத் திருமணமே வேண்டாம். உன்னுடன் திருமணம் நடக்கவில்லை என்றால் நான் இப்படியே இருந்து விடுகிறேன்” என்று சொல்லியிருக்க வேண்டும். தன்னிடம் பெருந்தன்மை என்பது இல்லவே இல்லை. இந்திராவைக் கல்யாணம் செய்துகொள்ளும் தகுதி தனக்குக் கொஞ்சம்கூட இல்லை. அதுதான் கடவுள் இப்படி செய்துவிட்டார்.

இந்த விதமான எண்ணங்கள் வந்ததும் அவன் மனம் வேதனையால் நிரம்பிவிட்டது. தனக்கு இந்திராதான் வேண்டும். இந்தக் கல்யாணம் தன்னுடைய உடலுக்குத்தான் நடந்தது. மனதிற்கு இல்லை. அவள் உள்மனதில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது ரங்காவின் குரல் கேட்டது. “சின்னய்யா!”

வித்யாபதி திடுக்கிட்டு கண்களைத் திறந்தான்.

“சாப்பிட வரச்சொன்னாங்க.” பணிவான குரலில் சொன்னான்.

“எனக்கு பசியாக இல்லை என்று சொல்லு.”

ரங்கா போய்விட்டான். இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே திரும்பி வந்தான். “சாப்பிட வரச் சொன்னாங்க. பசித்தமட்டும் சாப்பிட்டணுமாம்.”

வித்யாபதிக்கு எரிச்சல் வந்தது. “எனக்கு பசிக்கவே இல்லை. உடம்பும் சரியாக இல்லை என்று சொல்லு.” அவன் குரலில் எரிச்சல் வெளிப்படையாய் தெரிந்தது. ரங்கா விருட்டென்று திரும்பிப் போய்விட்டான்.

ஐந்து நிமிடங்கள் கூட கழியவில்லை, சுவாமிநாதய்யர் நேரில் வந்துவிட்டார். அவர் முகத்தில் கவலை தெரிந்தது. “என்னப்பா? உடம்பு சரியாக இல்லையா? தலையை வலிக்கிறதா? ஜுரமாக இருக்கிறதா? டாக்டருக்கு போன் செய்யட்டுமா?”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. வெறும் களைப்புதான்.” அவன் கலவரத்துடன் சொன்னான்.

“இருக்காதா பின்னே? மதியம் கூட நீ சரியாக சாப்பிட்டாற்போல் இல்லை. சீக்கிரம் குளித்துவிட்டு வா. வாய்க்குப் பிடித்ததை மட்டும் சாப்பிடு போதும்.”

“எனக்கு பசிக்கவே இல்லை.”

“என் பேச்சை கேளுப்பா. இன்றைக்கு முதல் முறையாக மாப்பிள்ளை என்ற முறையில் நீ எங்களுடன் சாப்பிடப் போகிறாய். முதல்நாளே இப்படிச் சொன்னால் எனக்கு அபசகுனமாகத் தோன்றும். எழுந்து சீக்கிரம் வா.”

வித்யாபதியால் மேலும் மறுக்க முடியவில்லை. உடைகளை மாற்றிக் கொண்டு உணவு மேஜை அருகில் வந்தான். அங்கே டைனிங் ஹாலில் சுவாமிநாதய்யரும், அவர் மனைவி மற்றும் சீதாவும் அவனுக்காக காத்திருந்தார்கள். அவர்களை அதுபோல் காக்க வைத்ததற்கு அவனுக்கு வெட்கமாக இருந்தது. விதயாபதி மாமனாரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டான். எதிரே சீதாவும் சுந்தரியும் இருந்தார்கள்.

நிமிர்ந்து பார்த்தால்கூட சீதாவின் கண்களை சந்திக்க நேரும். அதனால் அவன் தலையை உயர்த்தவில்லை. தலையைக் குனிந்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

சுவாமிநாதய்யர் கேட்டுக் கேட்டு பரிமாறிக் கொண்டிருந்தார். “இதோ பார். எங்கேயாவது கூச்சப்படலாமே ஒழிய சாப்பிடும் போது கூச்சப்படக் கூடாது. இன்னும் கொஞ்சம் காய் போட்டுக்கொள்” என்று வலுக்கட்டாயமாக தட்டில் போட்டுவிட்டார். வித்யாபதிக்கு தட்டில் எதுவும் மிச்சம் வைக்கும் பழக்கம் இலலை. வேண்டியதை மட்டும் பரிமாறிக்கொண்டு சாப்பிடுவது பழக்கம். சுவாமிநாதய்யர் வற்புறுத்தி பரிமாறிக் கொண்டிருந்தால் சாப்பிட முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

“சீதா! ரொம்ப மௌனமாக இருக்கிறாயே? ஒரு வார்த்தை கூட பேசாமல் சாப்பிடுகிறாயே?” மகளைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

“ஒன்றும் இல்லை அப்பா.”

“நீ மௌனமாக இருக்கிறாய் என்றால் ஏதோ ஒரு விசேஷம் இல்லாமல் போகாது.”

சீதா சாம்பாரில் இருந்த முருங்கைக்காயை போட்டுக் கொண்டே சொன்னாள். “இந்த முருங்கைக்காயைப் பார்த்தால் முருங்கை மரம் நினைவுக்கு வருகிறது. அதன் மீது ஊர்ந்துகொண்டிருக்கும் கம்பளிப்பூச்சியும் நினைவுக்கு வந்தது. அது போகட்டும் அப்பா! கம்பளிப்பூச்சி என்றால் எல்லோருக்கு அருவருப்பு ஏன்?”

கம்பளிப்பூச்சி பற்றிய பேச்சு வந்ததும் சுவாமிநாதய்யர் வித்யாபதியின் பக்கம் ஜாடையாகப் பார்த்தார். ஆனால் வித்யாபதிக்கு அந்த உரையாடலில் மறைந்திருக்கும் பொருள் என்னவென்று புரியவில்லை. வழக்கம் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“அருவருப்பு எதற்காகவா? அது உடலில் ஊர்ந்தால் சருமம் தடித்துப் போய் ரொம்ப துன்பம் ஏற்படும். ஒரு விதமாக சொல்லப் போனால் மனிதனுக்கு அந்தப் பூச்சியைக் கண்டால் அருவருப்பு.” அதில் என்ன நகைச்சுவை இருந்ததோ தெரியாது. அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.

சீதாவும் சேர்ந்துகொண்டாள். தந்தை மகள் இருவருக்கும் ஒத்து ஊதும் சுபாவம் கொண்ட சுந்தரியும் சிரிக்கத் தொடங்கினாள். வித்யாபதிக்குச் சிரிப்பு வரவில்லை. மேற்கொண்டு எரிச்சல்தான் வந்தது. ஆனாலும் வலுக்கட்டாயமாக சிரிப்பை உதிர்த்தான். ”சாம்பார் போட்டுக்கொள்” என்றார் அவர் மாப்பிள்ளையைப் பார்த்து. “வேண்டாம். போதும்” என்றான்.

“மாப்பிள்ளைக்கு சங்கோஜம் அதிகம். அவன் அப்படித்தான் சொல்லவான், நீ பரிமாறு” என்று சமையல்காரனை ஆணையிட்டார்.

சமையல்காரன் சாம்பார் கொண்டு வந்து பரிமாறப் போனான். வித்யாபதி வேண்டாம் என்று கையை நீட்டி தடுத்தான். அவன் பரிமாறப் போனதும், இவன் கையை குறுக்கே வைத்ததும் … இந்த ரகளையில் கரண்டியில் இருந்த சாம்பார் வித்யாபதியின் உடையில் தெறித்துவிட்டது.

“அடடா” என்றாள் சுந்தரி.

“கழுதை! பரிமாறும் லட்சணம் இதுதானா? உனக்குக் கண் தெரியவில்லையா?” சுவாமிநாதய்யரின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்துவிட்டது. அந்த இடத்தில் கோபம் புகுந்துகொண்டது. வெறும் அதட்டலுடன் அது நிற்கவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் சட்டென்று எழுந்து சமையல்காரனின் கன்னத்தில் அறைவிட்டார்.

அவர் மேலும் அடிக்கப் போன போது வித்யாபதி எழுந்துகொண்டு அவர் கைகளிலிருந்து சமையல்காரனை விடுவித்தான். சுவாமிநாதய்யர் அடித்ததில் அவன் கையிலிருந்த சாம்பார் மேலும் தளும்பி மேஜைமீது சிதறியது.

“பரிமாறும் போது உடலில் பயம் இருந்தால் இது போன்ற காரியங்கள் நடக்காது. உன் திமிரை அடக்காமல் நான் சும்மா விடமாட்டேன்.”

இடி இடிப்பது போல் அவர் கத்தினார். சமையல்காரன் எதுவும் சொல்லவில்லை. தலையைக் குனிந்துகொண்டு அங்கிருந்து போய்விட்டான்.

ரங்கா ஓடி வந்து கீழே சிந்திய சாம்பாரை துணியால் துடைக்கத் தொடங்கினான்.

“தடிமாட்டு பசங்க. வயிறு நிரம்ப சாப்பாடு கிடைத்ததும் கண்கள் தலைக்கேறிவிடும். வயிறு காய்ந்தால் தவிர சாதாரணமாக இருக்க மாட்டார்கள்.”

அதற்குப் பிறகு சாப்பிடும் வேலை சீக்கிரமாக முடிந்துவிட்டது. வித்யாபதியின் மனம் முழுவதும் கலங்கிவிட்டிருந்தது. சாம்பார் சிந்தியதில் சமையல்காரனின் தவறு எதுவும் இல்லை. அப்படியும் அவனைத் தண்டித்தார். அது மட்டுமே இல்லை. அந்தப் பேச்சில், செயலில் அவனிடம் எவ்வளவு தாழ்வான எண்ணம்?

அறைக்குத் திரும்பி வந்த பிறகும் வித்யாபதிக்கு அந்த நினைவுதான் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

இந்தச் சின்ன நிகழ்ச்சியில் சுவாமிநாதய்யரிடம் எவ்வளவு அகங்காரம் குடி கொண்டிருக்கிறது என்று தெளிவாகப் புரிந்தது. அவனுக்கு ஒரு பாடம் கற்றுக் கொண்டாற் போல் இருந்தது. இந்த வீட்டில் தேவையிருந்தாலும் இல்லாவிட்டாலும் சுவாமிநாதய்யரிடம் பண்பும் பணிவும் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். தவறு தம்மீது இல்லாவிட்டாலும் இது போல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் போலும். அவருடைய தயவும் தாட்சிண்யமும் எப்படி மழையைப் போல் பொழியுமோ, வெசவுகளும் அம்பு மழையாய் பொழியும். இந்தச் சூழ்நிலையில் தன்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்று வித்யாபதிக்குத் தோன்றியது.

வித்யாபதி புத்தகத்தைப் புரட்டிக்கொண்டு சோபாவில் உட்கார்ந்திருந்தான். கடியாரத்தில் பத்து மணி அடித்தது. அவன் எழுந்து போய் கட்டில் மீது இருந்த தலையணையை எடுத்து வந்து சோபா மேல் வைத்தான். விளக்கை அணைத்துவிட்டு விடிவிளக்கைப் போட்டான். ரோஜா வண்ணத்தில் விடிவிளக்கின் வெளிச்சம் அந்த அறையில் தோற்றத்தையே மாற்றி வேறு உலகம் போல் பிரமிக்கச் செய்தது.

அவன் சோபாவில் கைகளைத் தலைக்குக் கீழே வைத்துக் கொண்டு படுத்தான். கண்களை மூடினால் போதும் இந்திரா கண்களுக்கு முன்னால் பிரத்யட்சமானாள். அவன் அறியாமல் இந்தத் திருமணம் என்ற பந்தத்தில் சிக்கிக் கொண்டு விட்டான். தன் கழுத்தில் விழுந்த இந்தச் சுருக்குக் கயிறானது இறுகுவதற்குள் அவன் கெட்டிக்காரத்தனமாய் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.

அதற்குள் காலடிச் சத்தம் கேட்டது. அவன் கண்களைத் திறந்து பார்த்தான். கதவைத் திறந்து யாரோ அறைக்குள் வந்தாற்போல் தெரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை. அவன் எழுந்து உட்கார்ந்து கொண்டான்.

“யார்?”

பதில் வரவில்லை. அவன் எழுந்து விளக்கைப் போட்டான். திரைச்சீலைக்கு அருகில் சீதா நின்றிருந்தாள்.

அவன் பதற்றமடைந்தான். அந்தப் பெண்ணை உட்காரச் சொல்லணுமா அல்லது தான் அந்த அறையைவிட்டு போய் விடணுமா? எதுவும் புரியவில்லை. சீதாவின் பார்வையில் நட்போ, வெட்கமோ எதுவும் இருக்கவில்லை. வித்யாபதி அந்தப் பெண்ணின் பார்வையைச் சந்திக்க முடியாதவன் போல் குழப்பமாகப் பார்த்தான். அதற்குப் பிறகு ஜன்னல் அருகில் சென்று முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டான்.

“நான்… நான் உங்களுடன் பேசுவதற்காக வந்திருக்கிறேன்.” தாழ்ந்த குரலில் சொன்னாள் சீதா. அந்தக் குரல் தெளிவாக இருந்தது. வித்யாபதி திரும்பிப் பார்க்கவில்லை. சொல் என்பது போல் தலையை மட்டும் அசைத்தான். சீதா அங்கே இருந்த சோபாவில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அதையும் அவன் கவனித்தான்.

சீதா தயக்கமில்லாமல் சொல்லிவிட்டாள். “அப்பா உங்களையும் என்னையும் நாளைக்கு பெங்களூருக்கு அனுப்புவதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். அந்தப் பிரயாணம் நாமிருவரும் சேர்ந்து செய்யப் போகிறோமா இல்லையா என்று உங்களைக் கேட்கத்தான் வந்தேன்.”

“எனக்கென்ன தெரியும்?”

“உங்களுக்குத்தான் தெரியணும். நீங்க எனக்கு சொல்லப் போகும் பதிலைப் பொறுத்துத்தான் அந்த முயற்சி பலிக்குமா இல்லையா என்று முடிவு செய்யப்படும்.”

அவன் கேட்டுக் கொண்டிருந்தான். சீதாவின் பேச்சில் இருந்த துணிச்சலை, தயக்கமின்மையை அவன் காதுகள் ஸ்பஷ்டமாக கவனித்துக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் நிசப்தம் நிலவியது.

சீதாவின் குரல் அந்த நிசப்தத்தைக் கிழித்தெறியும் கத்தியைப் போல் ஒலித்தது. “இந்திரா யார்?”

அந்தப் பெயரைக் கேட்டதும் அவன் உடல் விரைப்பாக மாறியது.

“நீங்க உண்மையை மறைக்காமல் சொன்னால் உங்களுக்கும் எனக்கும் இருவருக்கும் நல்லது.”

“ஒரு பெண்” என்றான்.

“அற்தப் பெண் உங்களுக்கு என்னவாகணும்?” சீதாவின் தோரணையைக் கண்டால் குற்றவாளியை விசாரிக்கும் வக்கீலை போல் இருந்தது.

வித்யாபதிக்கு ஆவேசம் வந்துவிட்டது. “என்னவாகணுமா? எப்படிச் சொன்னால் உனக்குப் புரியும்? இந்திரா என்னுடைய உயிர் சிநேகிதி. நெருங்கியவள். இன்னும் சொல்லப் போனால் எனக்கு மனைவியாகி இருக்க வேண்டியவள். மயிரிழையில் அந்த வாய்ப்பை இழந்துவிட்ட அபலை.”

இந்த முறை விரைப்பாவது சீதாவின் பங்காயிற்று. “இந்திரா உங்களுக்கு மனைவியாக ஏன் ஆகவில்லை?”

“உன்னால்தான்.”

“என்னாலா?”

“ஆமாம். என்னை உனக்குப் பிடித்திருப்பது என்னுடைய துரதிர்ஷ்டம். நீ உங்க அப்பாவின் செல்ல மகள். நீ என்னை அடையணும் என்று விருப்பப்பட்டாய். உங்க அப்பா என்னைக் கொண்டு வந்த உன் மடியில் போட்டுவிட்டார்.”

சீதா சரேலென்று எழுந்துகொண்டாள். “சீ… வெட்கமாக இல்லையா உங்களுக்கு இந்த மாதிரி பேசுவதற்கு? எங்க அப்பா உங்களைக் கொண்டு வந்து என் மடியில் போடவில்லை. உங்க அப்பாதான் எங்க பணத்தின் மீது இருந்த ஆசையில் உங்களைக் கழுத்தைப் பிடித்து அழைத்து வந்து எங்கள் தலையில் கட்டி விட்டார். இந்திராவைக் காதலித்தால் இந்த சீதா என்ற சனிக்கிரத்தை எப்படிக் கல்யாணம் செய்து கொண்டீங்க? நீங்க ஆண்மகன்தானே? அந்த அளவுக்குக் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு என்னை எதற்காக கல்யாணம் செய்து கொள்ளணும்? உங்க அப்பாவை எதிர்த்து பேச முடியாத கோழை என்று சொல்லுங்கள். இல்லை இல்லை. எங்கள் பணத்தைக் கண்டு மயங்கி விட்டீங்க. உண்மையைச் சொல்லுங்கள். என்னிடம் பணம் இல்லாவிட்டால் என்னை மணந்து கொண்டிருப்பிங்களா?”

”சீதா!”

“உங்க உண்மை சொரூபம் எனக்கு நேற்றே தெரிந்துவிட்டது. உங்களுடன் குடித்தனம் பண்ண முடியாது என்று நேற்றே அப்பாவிடம் சொல்லிவிட்டேன். ஆனால் எங்க அப்பா கேட்டுக் கொள்ளவில்லை. இந்தப் பிரயாணத்தை நீங்கதான் தடுத்து நிறுத்தணும். எப்படிப் பண்ணுவீங்களோ தெரியாது. இதைச் சொல்லத்தான் வந்தேன்.” வேகமாக வெளியேறப் போனவள் ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்த்து சொன்னாள். “இந்த உலகத்தில் ஆண்களியே ரொம்ப அதமன் யார் தெரியுமா? தான் காதலித்தப் பெண்ணை மணக்க முடியாதவனும், மணந்துகொண்ட பெண்ணை காதலிக்க முடியாதவனும்தான். இந்த இரண்டையும் நீங்க பண்ணியிருக்கீங்க. இதற்குத் தகுந்த தண்டனையை அனுபவிக்காமல் போக மாட்டீங்க” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

வித்யாபதி சிலையாய் நின்றுவிட்டான்.

– தொடரும்…

– பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனராணி அவர்களின் படைப்பு “Sithapathi” தமிழில் “சீதா(வின்)பதி” என்ற தலைப்பில்.

– சீதா(வின்)பதி (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன், முதற்பதிப்பு: 2015, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *