(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45
அத்தியாயம்-36
சீதா காரை ஓட்டிக் கொண்டிருந்தாள். கார் வீட்டை நோக்கிச் செல்லவில்லை. கடைத்தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தது. கடைத்தெருவில் மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. கல்யாண சீசன் என்பதாலோ என்னவோ கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
எதிரே இன்னொரு கார் வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு ஜோடி இருந்தது. அந்தப் பெண் டிரைவ் செய்து கொண்டிருந்தாள். அவன் பின்னால் சாய்ந்து கொண்டு ஒரு கையை நீட்டியபடி உட்கார்ந்திருந்தான். அவன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அந்தப் பெண் கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தாள். சீதா தானே ஒதுங்கி அவர்களுக்கு வழிவிட்டாள்.
சீதாவுக்குத் தன்னைத் தவிர இந்த உலகத்தில் எல்லோருமே சந்தோஷமாக இருப்பது போல் தோன்றியது. கல்யாணம் ஆன பிறகுதான் தந்தை அவளுக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்தார். வித்யாபதியும் கற்றுக் கொண்டான். ஆனால் ஒருநாள் கூட இருவரும் சேர்ந்து காரில் வெளியே போனதில்லை. காரோட்டிக் கொண்டிருந்த சீதாவின் கண்முன்னால் இந்திராவைத் தேற்றிக் கொண்டிருந்த வித்யாபதியின் உருவம் தான் நிழலாடிக் கொண்டிருந்தது.
சீதாவுக்கு இந்திராவின்மீது கோபம் வரவில்லை. வித்யாபதியின் மீதுதான் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்தக் கோபத்திலிருந்து ஒரு விதமான இயலாமை பனிக்கட்டியாய் இறுகத் தொடங்கியது. இந்த உலகத்தில் மனிதனை சிறைப்படுத்தி வைக்க முடியுமோ என்னவோ. மனதை சிறைப் பிடித்து வைக்க முடியுமா?
உடல்ரீதியாக சுதந்திரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதளவில் ஒவ்வொரு நபரும் சுதந்திரமானவன்தான். சீதா யோசித்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாட்களாக அவள் என்ன செய்து கொண்டிருந்தாள்? வித்யாபதியின் மனதை என்றாவது தன்னால் ஜெயிக்க முடியாமல் போய்விடுமா என்ற இறுமாப்புடன் அவனைக் கணவனாக வாழ்க்கையில் கட்டிப் போட தவித்துக் கொண்ருந்தாள். இன்று சீதாவின் கண்முன்னால் இருந்த திரைகள் விலகிவிட்டன. இந்திராவை வித்யாபதியை யாராலுமே பிரிக்க முடியாது. அவ்விருவரின் அன்புப் பிணைப்பை யாராலும் முறித்து விட முடியாது. சீதாவுக்கு இந்தத் தோல்வி விரக்தியை அளித்தது. இத்தனை நாளும் தான் கானல்நீரை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள்.
இந்திராவின் விட்டு கிரகப்பிரவேசத்திற்குப் போகவில்லை என்றால் இந்த உண்மை என்றைக்குமே தெரிந்திருக்காது. சீதாவுக்கு திடீரென்று வித்யாபதியின் மீதும், இந்த உலகத்தின் மீதும், அவனை தனக்கு மணம் முடித்து வைத்த தந்தையின்மீதும், அவனைக் கல்யாணம் செய்து கொண்டும் அடைய முடியாத தன் துரதிரஷ்டத்தின் மீதும் சொல்ல முடியாத விரக்தி ஏற்பட்டது. வித்யாபதியுடன் சேர்ந்து வாழ்வது என்பது இனி முடியாத காரியம். ஆனால், கணவனால் கைவிடப் பட்ட சீதா என்ற பழியைச் சுமந்து கொண்டு வாழ்வதும் அசம்பவம்தான். அவள் எதற்காக வாழ வேண்டும்? வாழ்ந்து என்ன செய்யப் பொகிறாள்? சீதாவுக்கு அழுகை வந்துவிட்டது. கையில் இருந்த பொருளை தரையில் வீசி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. இப்பொழுது தன் கையில் இருக்கும் பொருள் என்ன? வாழ்க்கை! இது ரொம்ப மதிப்பு வாய்ந்தது உண்மைதான். ஆனால் இப்போ இது தனக்குப் பிடிக்கவில்லை.
இந்த வாழ்க்கை அவளை கருணையின்றி துன்புறுத்திக் கொண்டிருந்தது. இனியும் வேதனைப்படக் கூடிய பொறுமையோ, சக்தியோ அவளிடம் இல்லை. சீதா காரை ஒரு பக்கமாக திருப்பினாள். எதிரே பெரிய மரம் தென்பட்டுக் கொண்டிருந்தது. சீதாவின் கைகள் விரும்பாத பொருளை ஓங்கித் தரையில் வீசுவது போல் ஸ்டீரிங்கைத் திருப்பின. மரம் பெரிய பூதம் போல் நெருங்கி வந்து கொண்டிருந்தது. சீதாவின் கண்களில் ஆத்திரம் மட்டுமே இல்லை. சந்தோஷமும் தென்பட்டது. தனக்குப் பிடிக்காத விளையாட்டுப் பொருளை சுக்குநூறாக உடைப்பது போல் காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தாள். வாழ்க்கை ரொம்ப மதிப்பு வாய்ந்தது. சீதாவின் மனம் ஓலமிட்டுக் கொண்டிருந்தது. அந்த மதிப்பு எப்போழுது? அது நமக்குப் பயன்படும்போது. மகிழ்ச்சியைத் தரும் போது. துனபம் தந்து கொண்டிருந்தால் யாரால் சகித்துக் கொள்ள முடியும்?
மரம் கைகளை நீட்டியபடி நெருங்கிவிட்டது. அதற்குள் திடீரென்று மரத்தின் பின்னாலிருந்து பத்து வயது சிறுவன் ஒருவன் வெளியே வந்தான். அவன் கையில் பட்டம் இருந்தது. காரைப் பார்த்ததும் வீலென்று கத்தினான். சீதா சரேலென்று காரை பக்கத்தில் திருப்பினாள். கார் சுழன்று பலமாக எதன்மீதோ மோதிக்கொண்டு நின்றுவிட்டது. சீதாவின் தலையில் பலமாக அடிபட்டு விட்டது. உயிர் போய்விட்டாற்போல் கண்முன்னால் இருள் சூழ்ந்து கொண்டது.
அத்தியாயம்-37
சீதா முனகிக் கொண்டிருந்தாள். அந்த முனகல் இருளடைந்த குகைக்குள்ளே இருந்து வெளியே வந்து வெளிச்சத்தைப் பார்க்க வேண்டுமென்று தவித்துக் கொண்டிருக்கும் இதய கோஷமாக இருந்தது. எங்கே இருக்கிறாள் அவள்? சீதா எழுந்து கொள்ளப் போனாள். அதற்குள் உடைந்து விழுந்த அலையைப் போல் கீழே சரிந்தாள். அவளுக்கு யார் இருக்கிறார்கள்? யாருமே இல்லை. “அப்பா… அப்பா… எங்க இருக்கீங்க? எனக்கு இங்கே பயமாக இருக்கிறது. சீக்கிரம் வாங்க.” கத்திக் கொண்டிருந்தாள். “என்னால் வர முடியாதும்மா. வித்யாபதி இருப்பான். அவனைக் கூப்பிடு.” தந்தையின் குரல் எங்கிருந்தோ கேட்டது. “அவர்… அவருக்கு நான் தேவையில்லை அப்பா. இந்திராதான் வேண்டும்.” சீதா அழத் தொடங்கினாள். “சீ… பாவி நான். என் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? அவர்கள் இருவரும் என்னை எப்படி திட்டிக் கொண்டிருக்கிறார்களோ. நான் இறந்து போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். செத்துப் போக வேண்டும்” சீதா ஹிஸ்டிரியா வந்தவள் போல் அழத் தொடங்கினாள்.
“சீதா! சீதா!” யாரோ கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
“அப்பா… அப்பா…” சீதா தன்னை அழைத்த நபரின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். “என்னை அழைத்துக் கொண்டு போய் விடுங்கள். நான் இங்கே இருக்க மாட்டேன். அம்மா!” சீதா விலேன்று கத்தினாள், உயிரே போய்க் கொண்டிருந்தாற்போல். “என் காலுக்கு என்ன ஆச்சு? வலிக்கிறதே?” அழுது கொண்டிருந்தாள்.
“சீதா! உன் காலுக்கு எதுவும் ஆகவில்லை.” யாரோ கனிவாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“இவ்வளவு வலியாக இருக்கிறதே?”
“குறைந்துவிடும். இந்த ஹார்லிக்ஸைக் கொஞ்சம் குடி.”
“ஊஹும். வேண்டாம். எனக்கு வேண்டாம் அப்பா. நான் சுகமாக இருக்கணும் என்றுதானே என்னை வித்யாபதிக்குக் கொடுத்து மணம் முடித்தீங்க. நான் அவருக்குத் தேவையில்லை அப்பா. இந்திராவிடம் அவருக்கு அளவுக் கடந்த பிரியம். எவ்வளவு பிரியம் தெரியுமா? இந்த உலகத்தில் யாருக்குமே யார் மேலேயும் அவ்வளவு அன்பு இருக்காது.”
“சீதா! ப்ளீஸ். தூங்கு.”
“ஊஹும். தூக்கம் வரவில்லை. நான் போக வேண்டும். அவர் வந்து விடுவார். நான் போய் விடவேண்டும். நம்மைப் பிடிக்காதவர்களிடம் யாராவது இருப்பார்களா? எவ்வளவு வெறுப்பான விஷயம்?”
“சீதா! நீ தூங்கு.”
“மாட்டேன். செத்துப் போகிறேன். செத்துப் போனால் எந்த வருத்தமும் இருக்காது. நிம்மதியாக இருக்கும். கணவன் விட்டு விட்டான் என்று உலகம் எள்ளி நகையாடினாலும் நமக்குத் தெரியாது. சுவாமிநாதய்யரின் மகள் சீதாவை கணவன் தள்ளி வைத்துவிட்டான் என்று எல்லோரும் பேசிக் கொண்டால் அசிங்கம் இல்லையா? வித்யாபதி என்னை ஒதுக்கி வைக்கும் வாய்ப்பை நான் ஏன் தரணும்? இந்த உலகம் என்னைப் பார்த்து சிரிக்கும்படியாக ஏன் இடம் தரணும்? நானே வித்யாபதியை விட்டு விடுகிறேன். அப்படிச் செய்தால் சீதா கெட்டவள். கணவனை விட்டுவிட்டாள் என்பார்கள். செத்துப் போகிறேன். அவ்வளவுதான்.” சீதா சிரிக்கத் தொடங்கினாள்.
“நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. இந்த அதிர்ஷ்டம் யாருக்குத் தான் கிடைக்கும்?”
சீதா ரோஷத்துடன், காளி அவதாரம் எடுத்ததுபோல் சீறினாள். “நான் எதற்கு அவரை விட்டு விடணும்? நான் என்ன தவறு செய்துவிட்டேன்? அவருக்கு அந்த இந்திராவிடம் பிரியம் இருந்தால் என்னை ஏன் கல்யாணம் செய்து கொள்ளணும்? நான் வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பேன் அப்பா.” சீதா மறுபடியும் வித்யாபதியின் கையை பலமாக பற்றிக் கொண்டாள். “நீங்க அவரிடம் நன்றாகக் கேளுங்கள் அப்பா. எங்க சீதா செய்த தவறுதான் என்ன என்று கெளுங்கள். நீ எங்களை ஏமாற்றிவிட்டாய் என்று சொல்லுங்கள். இது ஏமாற்றுவது இல்லையா? ஒரு பெண்ணைக் காதலித்து இன்னொரு பெண்ணைப் பண்ணிக் கொள்வது, திரும்பவும் மணம் செய்து கொண்ட பெண்ணை விட்டுவிட்டு காதலித்தப் பெண்ணுடன் இருப்பது. எல்லாம் இவர்களின் இஷ்டம்தானா? எவ்வளவு அரக்கர்கள்? நீங்கள் கேளுங்கள் அப்பா. இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்லுங்கள். அப்போ நான் அவரை விட்டு விடுகிறேன். அதுவரை செத்தாலும் விட மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே திரும்பவும் அழத் தொடங்கினாள்.
“லாபம் இல்லை. இதெல்லாம் உலகத்திற்கு எப்படித் தெரியும்? உன் புருஷன் உன்னை ஏன் விட்டு விட்டான் என்று கெட்டால் என்ன பதில் சொல்வேன் நான்?'”
டாக்டர் வந்தார். “எப்பொழுதுலிருந்து இப்படி புலம்புகிறாள்?”
“நேற்று இரவுலிருந்து இதே புலம்பல்தான்” என்றான் வித்யாபதி.
அவர் சீதாவைப் பரிசோதித்தார். ஜுரம் அதிகமாக இருக்கு” என்றார். ஊசி போட்டார். மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு வித்யாபதியிடம் சொன்னார். “ரொம்ப ரகளை செய்தால் எனக்குப் போன் பண்ணுங்கள். தூங்குவதற்கு மருந்து கொடுத்திருக்கிறேன். எவ்வளவு தூங்குகிறாளோ அவ்வளவு நல்லது” என்றார்.
வித்யாபதி அவருடன் கூடவே வெளியே வந்தான். காரில் ஏறப்போனவர் ஒரு வினாடி நின்று சொன்னார். “நீங்க தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.”
“சொல்லுங்கள்.”
“சீதாவின் பேச்சில் ஏதோ பயம் தெரிகிறது. நீங்க தன்னை விட்டு விடுவீங்கன்னு நினைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த பயம் சீதாவின் மனதில் ஏன் வந்ததென்று புரியவில்லை. இந்தக் குடும்பத்தின் டாக்டராக உங்களிடம் சின்ன அறிவுரை சொல்ல நினைக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் கோபத்தில் எப்பொழுதோ சொன்ன வார்த்தைகளை சீதா சீரியஸாக எடுத்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. நீங்க அந்த வார்த்தைகளை சீரியஸாக சொல்லவில்லை என்றும், அவளை விட்டுவிடப் போவதில்லை என்றும் நம்பிக்கையை அவளிடம் ஏற்படுத்த வேண்டும். அவளுடைய புலம்பலை நன்றாக கவனித்துக் கேட்டால் உங்களுக்கே புரியும். சீதா தனக்கு யாருமே இல்லை என்று நினைக்கிறாள். தந்தை இல்லாத வேதனையும் அவளை வாட்டிக் கொண்டிருக்கிறது. ரொம்ப வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.
மிஸ்டர் வித்யாபதி! நான் அன்றே சொல்லிவிட்டேன். சீதா வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது தற்கொலை முயற்சி. இன்னொரு தடவை இது போல் பைத்தியக்காரத் தனமான காரியத்தை செய்வதற்கு அவகாசம் தராதீங்க. சுவாமிநாதய்யர் மகளுக்கு எத்தனையோ நல்ல வரன்கள் வந்த போதும் மறுத்துவிட்டார். ஏன் தெரியுமா? சீதா என்றால் அவருக்கு உயிர். சீதாவை நன்றாக பார்த்துக் கொள்ளும் பையன்தான் வேண்டும் என்ற அவர் நினைத்திருந்தார். சீதாவுக்கு உங்களுடன் திருமணம் நிச்சயமானபோது, “உங்களுக்குப் பிடித்தப் பையன் கிடைத்துவிட்டானா?” என்று நான் கேட்டபோது “நான் எதிர்பார்த்ததையும் விட நல்ல பையன் கிடைத்துவிட்டான். இது சீதாவின் அதிர்ஷ்டம் இல்லை, என்னுடையது” என்று பெருமைப் பாட்டுக் கொண்டார். இப்போ இந்தச் சூழ்நிலையைப் பார்த்தால் அவருடைய நம்பிக்கை கானல்நீராகத் தோன்றுகிறது. சீதா ரொம்ப நல்லப் பெண். உங்கள் மனம் கோணாதவாறு நடந்து கொள்பவள் என்றுதான் நினைக்கிறேன். சீதாவை நன்றாகப் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை என்று நினைவுப் படுத்துகிறேன். சீதாவின் புலம்பல்கள் எனக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் இவ்வாறு சொன்னேன். ஒருக்கால் நான் தவறாகவும் புரிந்து கொண்டிருக்கக்கூடும். அதுதான் உண்மையாக இருந்தால் தயவுசெய்து வேறு விதமாக நினைத்துக் கொள்ளாதீங்க. பெரியவன் ஏதோ சொல்லிவிட்டேன் என்று நினைத்து மன்னித்து விடுங்கள்.” வித்யாபதியின் தோளில் தட்டிக் கொண்டே சொன்னார் அவர்.
“அவ்வளவு பெரிய வார்த்தைகளைச் சொல்லாதீங்க.” தெளிவற்ற குரலில் சொன்னான் வித்யாபதி.
டாக்டரை அனுப்பிவிட்டுத் திரும்பி வந்தான். அறையிலிருந்து சீதாவின் அழுகைச் சத்தம் கேட்கவில்லை. தூக்க மருந்து நன்றாக வேலை செய்கிறது போலும். சுபத்ரா சீதாவின் கட்டிலுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள்.
அவள் இந்த இரண்டு நாட்களாக பச்சைத் தண்ணீர் கூட தொடவில்லை. குழந்தைகளும் அப்படித்தான். நினைவு தப்பிய நிலையில் கையிலும் கால்களிலும் காயங்களுடன் அழைத்து வரப்பட்ட சீதாவைப் பார்த்து பயந்து போய்விட்டார்கள். “அண்ணா! அண்ணிக்கு என்னவாயிற்று?” என்று அழுது விட்டார்கள். வீட்டில் உற்சாகம் மடிந்துவிட்டது. குழந்தைகள் ஆளுக்கொரு மூலையில் போய் உட்கார்ந்திருந்தார்கள். தாய் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சும்மாவே அழுது கொண்டிருந்தாள்.
வித்யாபதி சோபாவில் உட்கார்ந்திருந்தான். சீதா வேண்டுமென்றே காரை விபத்திற்கு உள்ளாக்கியிருக்கிறாள். அதில் கடுகளவும் சந்தேகமில்லை. சீதாவுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால்? அவன் உடல் சிலிர்த்தது.
தான் ஒரு கொலையாளியாகி விட்டிருப்பான். கொலைக்காரன் இல்லையா? நிச்சயமாக கொலைக்காரன்தான். சீதாவை வலுக்கட்டாயமாகச் சாகடித்தவனாகி இருப்பான். ஆனால் எங்கேயோ கொஞ்சம் அதிர்ஷ்டம் துணையாக நின்று தன்னை அந்த பாதகத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. சீதாவின் கைகளிலும், கால்களிலும் பலமாக அடிபட்டு காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் எலும்பு எதுவும் முறியவில்லை. ஊனம் எதுவும் ஏற்படவில்லை. சீதாவின் அறையிலிருந்து மீண்டும் கூச்சல்கள் கேட்டன.
“நான் என்ன தவறு செய்துவிட்டேன்? என்னிடம் சொல்லுங்கள்.”
சுபத்ரா அவளைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். “சீதா! சும்மாயிரும்மா. தூங்கும்மா.”
“தூக்கமா? தூக்கமே வராது எனக்கு. உங்களுக்குத் தெரியுமா? உங்க மகன் என்னை விட்டுவிட்டுப் போகப் போகிறார்.”
“சீ… சீ… என்ன பேச்சு இது? ஜூரத்தில் நீ சுயநினைவில்லாமல் பேசுகிறாய்” என்றாள் சுபத்ரா.
“எங்க அப்பா இல்லாததால்தான் என்னை இப்படி ஏமாற்றுகிறார். எனக்குத் தெரியாதா?” என்றாள்.
“உங்க அப்பா அப்பா இல்லாவிட்டால் மட்டும் நான் இல்லையா? நான் சும்மாயிருப்பேன் என்று நினைத்தாயா? அவன் நாக்கை இழுத்து வைத்து அறுத்து விடுகிறேன்.”
“அவருக்கு இந்திரா என்றால்தான் பிரியம். என்னை அவருக்குப் பிடிக்கவே இல்லை.”
”எவளையோ பிடித்திருந்தால் உன்னை துன்புறுத்துவதாவது?”
“அப்படிக் கேளுங்கள் அவரை.” மறுபடியும் அழத் தொடங்கினாள்.
“உனக்கு நன்றாக குணமாகட்டும். இருவரும் சேர்ந்து நன்றாக கேட்டு விடுவோம். குழந்தைகள் மட்டும் சும்மாயிருப்பார்கள் என்று நினைத்தாயா? சண்டை போடுவார்கள். அவன் நம்மை எல்லாம் விட்டுவிட்டு எங்கே போய் விடுவானாம்?” சுபத்ரா வித்யாபதியைக் கடிந்து கொண்டதைப் பார்த்து சீதாவின் மனம் கொஞ்சம் சமாதானமடைந்தது.
ஹாலில் வித்யாபதி தலையைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். என்ன செய்து கொண்டு இருக்கிறான்? என்ன செய்யப் போனான்? சீதா தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பொறுப்பு என்ற விஷயத்தையே மறந்துவிட்டான்.
பொறுப்பை மறந்து போகும் மனிதன் ரொம்ப ஈனமானவன் என்று அவன் எப்போதும் இந்திராவிடம் சொல்லிக் கொண்டிருப்பான். இன்று தானே அந்தக் காரியத்தைச் செய்துவிட்டான். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சீதாவைத் தூண்டியிருக்கிறான். மரணத்தின் வாயிலுக்குத் தள்ளிவிட்டான். கடவுளே! அவன் மனம் குன்றிவிட்டது.
அதற்குள் போன் மணி அடித்தது. தங்கை போய் எடுத்தாள். “ஹலோ!” என்றாள். உடனே கடுமையான குரலில் “எங்க அண்ணா இல்லை. அண்ணிக்கு உடம்பு சரியாக இல்லை. அண்ணியிடம் இருக்கிறார்” என்று வைத்துவிட்டாள்.
யார் என்று அவன் கேட்கவில்லை. இந்திரா என்று தெரிந்துதான் இருந்தது. வீட்டில் குழந்தைகளையும் சேர்ந்து எல்லோரும் இந்திராவிடம் ஆத்திரம் கொண்டிருந்தார்கள். சீதாவின் விபத்திற்குக் காரணம் இந்திராதான் என்று அவர்களுக்குத் தெரிந்து விட்டது.
தங்கை அங்கிருந்து போய்விட்டாள்.
போன் மறுபடியும் ஒலித்தது. யாரும் எடுக்கவில்லை. வித்யாபதி நாற்காலியில் அப்படியே உட்கார்ந்திருந்தான். போன் கணகணவென்று மணியடித்துக் கொண்டே இருந்தது. அவன் எடுக்கவில்லை. அவனுக்கு ரொம்ப சோர்வாக இரந்தது. இதற்குப் பரிகாரம் என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. மணி அடித்து அடித்து கொஞ்ச நேரம் கழித்து போன் நின்று விட்டது.
அவன் களைத்துப் போனவனாய் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
அத்தியாயம்-38
ஒரு வாரத்திற்குப் பிறகு இந்திரா வீட்டில் உட்கார்ந்திருந்தாள். அவள் மடியில் புத்தகம் இருந்தது. ஆனால் கவனம் அதில் இல்லாதது போல் நகத்தைக் கடித்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
”இந்தூ! சமையல் முடிந்துவிட்டது. சாப்பிட வா.” அக்கா கூப்பிட்டாள்.
“எனக்குப் பசிக்கவில்லை அக்கா. நீ சாப்பிடு” என்றாள்.
“என்ன பேச்சு இது? ஒவ்வொரு வேளையும் இப்படித்தான் சொல்கிறாய். எவ்வளவு இளைத்துப் போய்விட்டாய் தெரியுமா? ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போ.” “என்னைத் தொந்தரவு செய்யாதே. எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை.” சலித்துக் கொண்டாள் இந்திரா.
“இப்போ பசி இல்லை என்றால் கொஞ்ச நெரம் கழித்து சாப்பிடு. அதற்குள் நான் உடைகளை இஸ்திரி செய்து விடுகிறேன்” என்றாள் அக்கா.
இந்திரா உட்கார்ந்திருந்தாள். பக்கத்திலேயே போன் இருந்தது. கொஞ்ச நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். புத்தகத்தை எடுத்துப் படிக்கப் போனாள். ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை. மறுபடியும் போன் பக்கம் பார்த்தவள், போனை எடுத்து நம்பரை டயல் செய்தாள். படபடக்கும் இதயத்துடன் காத்திருந்தாள். மறுமுனையில் யாரோ போனை எடுத்தார்கள்.
“ஹலோ!” உரத்தக் குரலில் கேட்டது.
“ஹலோ! மிஸ்டர் வித்யாபதி இருக்கிறாரா?” கவனமாக குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டாள்.
“இல்லைங்க.”
“ஆபீசுக்கு வந்தாரா?”
“வரலைங்க.”
“எப்போ வருவார் என்று தெரியுமா?”
“தெரியாதுங்க. ஒருக்கால் சின்னம்மாவுக்கு உடம்பு சரியாகும் வரையில் வரமாட்டார்னு நினைக்கிறேன். ஏதாவது சொல்லணுமா? உங்க பெயர்?”
இந்திரா போனை வைத்துவிட்டாள்.
இந்திரா சோபாவில் சாய்ந்தபடி அப்படியே உட்கார்ந்துவிட்டாள். அன்றைக்கு அவள் வீட்டு கிரகப்பிரவேசம் நடந்த அன்றைக்கு, சீதா தன்னையும், வித்யாபதியும் நெருக்கமாக இருந்ததைப் பார்த்துவிட்டுப் போய்விட்டாள். அரைமணி நேரத்திற்கெல்லாம் யாரோ ஓடி வந்தார்கள். வித்யாபதி ஆபீசில் வேலை பார்க்கும் மேனேஜராம். சீதாவின் காருக்கு விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தான். அதைக் கேட்டதுமே வித்யாபதி சிலையாகிவிட்டான். அவன் முகத்தில் இருந்த ரத்தமெல்லாம் வடிந்து விட்டாற்போல் இருந்தது.
பக்கத்தில் இருந்த இந்திராவிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் வந்தவனுடன் போய்விட்டான். அப்பொழுதிலிருந்து இன்று வரையில் ஒன்பது நட்கள் கழிந்து விட்டன. வித்யாபதி இந்திராவின் கண்ணில் இன்னும் படவே இல்லை.
அக்காவும், அவள் கணவனும் ஆஸ்பத்திரிக்குப் போய் சீதாவைப் பார்த்துவிட்டு வந்தார்கள். கைகால்களில் நன்றாக அடிபட்டு விட்டதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், ஊனம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட பிறகு பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
சீதாவுக்கு மட்டும் அந்த விபத்தில் ஏதாவது நேர்ந்திருந்தால் தானும், வித்யாபதியும் வாழ்நாள் முழுவதும் தவறு செய்துவிட்டாற்போல் வருத்தப்பட வேண்டியிருக்கும். தாங்க் காட்! சீதாவுக்கு ஒன்றும் ஆகவில்லை. அது தன்னுடைய அதிர்ஷ்டம்தான் என்று நினைத்துக் கொண்டாள்.
வித்யாபதியின் வருகைக்காகக் காத்திருந்தாள். ஒரு நாள் கழிந்தது. இரண்டு நாட்கள் கழிந்து விட்டன. வித்யாபதியின் ஆபீசுக்குப் போன் செய்தால் அங்கே வரவில்லை என்று சொன்னார்கள். ஒரு முறை தாங்க முடியாமல் வீட்டுக்குப் போன் செய்தாள். வித்யாபதியின் தங்கை கடுமையாக பதில் சொன்னதால் இந்திராவின் மனம் துணுக்குற்றது.
அக்காவின் வார்த்தைகளைக் கொண்டு வித்யாபதிதான் சீதாவுக்கு பனிவிடைகள் செய்துகொண்டிருப்பதாக தெரியவந்தது. வித்யாபதியின் சுபாவம் இந்திராவுக்கு நன்றாகவே தெரியும். யாருக்கு எந்த ஆபத்து வந்தாலும் உதவி செய்யத் தயாராக இருப்பான். சுயநலமில்லாமல் மற்றவர்களுக்காக பாடுபடுவான். அவனிடம் இருக்கும் இந்தக் குணம்தான் இந்திராவை ஈர்த்துவிட்டது என்று சொல்லலாம். வித்யாபதி உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் பனிவிடை செய்யட்டும். ஆனால் சீதாவுக்கு செயவது இந்திராவுக்குப் பிடிக்கவில்லை. பொறாமையாக இருந்தது. அந்த நினைப்பே எரிச்சலை எற்படுத்தியது. சிலசமயம் தான் ரொம்ப தவறாக யோசிப்பதாகத் தோன்றும். வெட்கமாகவும் இருக்கும். ஆனாலும் சரி மனதில் இருக்கும் வலி மட்டும் போகாது. அவன் வந்ததுமே தான் பட்ட வேதனை எல்லாம் சொல்லணும். எல்லாம் கேட்டுவிட்டு அவன் சிரிப்பான். “இந்தூ! உண்மையிலேயே நீ பைத்தியக்காரிதான்” என்பான்.
ஆனால் நாட்கள் கழிந்துகொண்டிருந்தன. வித்யாபதி மட்டும் வரவே இல்லை. இந்திராவுக்கு இரவும் பகலும் நிம்மதியற்று கழிந்து கொண்டிருந்தன. சிலசமயம் அப்பொழுதே புறப்பட்டு அவனிடம் போய் விட வேண்டும் போல் தோன்றும். அதற்குள் எப்படியோ சமாளித்துக் கொள்வாள். இந்திரா ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டாள். பொழுது போவதே பெரும்பாடாக இருந்தது. சிலசமயம் இந்த யோசனைகளால் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று தோன்றும்.
அதற்குள் கதவு தட்டிய சத்தம் கேட்டது.
“ஹலோ…. நீங்க வீட்டில்தான் இருக்கீங்களா? அப்பாடா, ஏதாவது மார்னிங் ஷோவுக்கு கம்பி நீட்டியிருப்பீர்களோ என்று நினைத்தேன்.” பிரசாத் சிரித்துக் கொண்டே கதவைத்தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான்.
அவன் இப்பொழுதெல்லாம் அடிக்கடி வந்து கொண்டிருந்தான். பவானிக்கும் அவனுடன் பேசுவதென்றால் பிடிக்கும். அவனும் பவானி சொல்லும் ஊர் வம்புகளை எல்லாம் சிரத்தையாக கேட்டுக் கொள்வான். முன்பெல்லாம் இந்திராவுக்கு அவன் பேச்சும், ஜோக்குகளும் எரிச்சலை தந்து கொண்டிருந்தன. சமீபகாலத்தில் கொஞ்சம் பொழுது போய் கொண்டிருப்பதால் சகித்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் எதையாவது சொல்லி சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். அவனைப் பார்த்தால் எந்தக் கவலையும் இல்லாதவன் போல் தோன்றும். தனிக்கட்டை என்பதால் பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லை. அவன் அடிக்கடி இங்கே சாப்பிடுவது வழக்கம்தான்.
அறையில் குழந்தைகளில் உடைகளுக்கு இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த இந்திராவின் அக்கா அவனைப் பார்த்ததும் வெளியே வந்து, “வாங்க .. வாங்க. நாங்க சாப்பிட உட்காரப் போகிறோம். சரியான சமயத்திற்கு விருந்தாளி உருவத்தில கடவுள் போல் வந்திருக்கீங்க. எங்களுடன் சேர்ந்து சாப்பிட்டாக வேண்டும்” என்றாள்.
“வாரத்தில் நான்கு நாட்களாவது நீங்க என்னை கடவுளாக அவதாரம் எடுக்க வைக்கிறீங்க இல்லையா? ஆகட்டும். விருந்தாளியாக இருப்பதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. வரம் கொடு என்று மட்டும் கேட்டுவிட்டால்தான் கஷ்டம்” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.
“உங்களுக்குக் கல்யாணம் ஆன பிறகு நாங்க வந்து உங்க வீட்டில் டேரா போட்டு வட்டியும் முதலுமாக வசூல் செய்து கொள்கிறோம். கவலையை விடுங்க” என்றாள் பவானி.
“நீங்க வாங்க. ஆட்சேபணை இல்லை. ஆனால் கல்யாணம் ஆகணும் என்று சாபம் மட்டும் கொடுத்து விடாதீங்க” என்றான்.
“ஏன் அப்படி?”
“அது அப்படித்தான். அதற்கு மேல் நீங்க கேட்கக் கூடாது.”
“இதென்னது? ஏற்கனவே உங்களைப் பற்றி அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்னிடம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள் தெரியுமா? நேற்று பக்கத்து வீட்டு வரலக்ஷ்மி கேட்டாள். அவளுடைய மகளை நீங்க ஒரு தடவைப் பார்க்கணுமாம்.”
“ஐயோ! அந்த மாதிரி ஆபத்து எதையும் கொண்டு வராதீங்க. அப்படி சொன்னால் நான் இந்த வீட்டுப் பக்கமே இனி வரமாட்டேன்.” கையெடுத்துக் கும்பிட்டான். “ஏன்? கல்யாணமே பண்ணிக்கொள்ள மாட்டீங்களா?”
“பண்ணிக்கணும் என்று இல்லை.”
‘”ஏன்?”
“சிலபேர் ஜாதகம் அப்படின்னு வையுங்கள். நீங்கள் பரிமாறினால் சாப்பிடலாம்.”
“இதோ ஒரு நிமிடம்.” பவானி சமையல் அறைப்பக்கம் சென்றாள். இந்திரா அவனைக் கூர்ந்து பார்த்தாள். எந்தவிதத்திலும் குறை இல்லாத இவனுக்குத் திருமணத்தில் விரக்தி ஏற்படுவானேன்?
“நீங்க அப்படிச் சந்தேகத்தோடு பார்க்க வேண்டாம். சமயம் வரும்போது காரணத்தைக் காட்டாயம் சொல்கிறேன். நான் உங்கள் வீட்டிற்கு இவ்வளவு சுதந்திரமாக ஏன் வருகிறேன் தெரியுமா? உங்க வீட்டில் யாருமே கல்யாணத்தைப் பற்றிய பேச்சை எடுக்க மாட்டீங்க என்றுதான்” என்றான்.
பவானி மூன்று பேருக்கும் பரிமாறினாள். “வாங்க சாப்பிட” என்று அழைத்தாள்.
இந்திரா “எனக்கு பசி இல்லை அக்கா” என்றாள்.
“பார்த்தீங்களா? எப்போதும் இந்தப் பாட்டுத்தான்” என்றாள் அக்கா.
“அவள் கொடுத்து வைத்தவள். கனவுகளை சாப்பிட்டுக் கொண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறாள்” என்றான் சிரித்துக் கொண்டே.
“இது என்ன தியரி?” என்றாள் இந்திரா.
“இல்லையா பின்னே? எப்பொழுது பார்த்தாலும் வேறு உலகத்தில் இருப்பது போல் யோசனையில் இருப்பீங்க. ஒரு சின்ன அறிவுரை. கனவுகள் மனிதனின் காலத்தைக் கற்பூறமாகக் கரைத்துவிடும். கனவுலகில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை கையால் ஆகாதவர்கள் என்பேன். வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்து யதார்த்த உலகில் வாழ்ந்து சந்தோஷமாக இருப்பவர்கள் தான் புத்திசாலிகள். நீங்க புத்திசாலிதான் என்று நான் நம்புகிறேன். நீங்க சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் ஒரு பேச்சுக்காக நானும் மாட்டேன்னு சொல்ல வேண்டியிருக்கும். வாழ்க்கையில் எதை இழந்தாலும் சாப்பிட முடிந்த போது அந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பது என்னுடைய கொள்கை. வாங்க ப்ளீஸ்.”
“எனக்குப் பசியே இல்லை.”
“மறுபடியும் அதையே சொல்லாதீங்க. சொன்னேன் இல்லையா, நானும் சாப்பாட்டை துறக்க வேண்டியிருக்கும் என்று.”
“நீங்க சாப்பிடுங்கள். அக்கா உங்களுக்குத் துணை இருக்கிறாளே?”
“நீங்க வராத குறை குறைதானே?”
“பரிமாறிவிட்டேன். வாயேன் இந்தூ.”
அவர்கள் திரும்பத் திரும்ப கூப்பிடுவது இந்திராவுக்கு சந்கடமாக இருந்தது. வேறு வழியில்லாம்ல் எழுந்து வந்தாள்.
“சீதாவுக்கு எப்படி இருக்கு?” சாப்பிடும் போது பவானி கேட்டாள்.
“பரவாயில்லை. நன்றாகக் குணமடைய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமாம். இப்பொழுதுதான் எழுந்து உட்கார்ந்து கொள்கிறாள். ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் எங்க சீதாவைத்தான் சொல்லணும். எவ்வளவு நல்ல கணவன்! முன் பிறவியில் தங்கப் பூக்களால் பூஜை செய்திருப்பாளாய் இருக்கும். வித்யாபதி அவளை கண்ணின் இமை போல் பார்த்துக் கொள்கிறான். மேலோட்டமாக பார்த்தால் சீதா என்றால் அவனுக்கு அவ்வளவு அன்பு இருப்பது போல் தெரியாது. அவ்வளவு விட்டேற்றியாய், பட்டும் படாமலும் இருப்பான். நானே ஆச்சரியப்பட்டு விட்டேன் என்றால் நம்புங்கள். நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி சீதா என்று சொன்ன போது என்ன செய்தாள் தெரியுமா?” அவன் பொரியலைப் பரிமாறிக் கொண்டே நிறுத்திவிட்டு சீரியஸாக பார்த்தான்.
“என்ன செய்தாள்?” கேட்டாள் பவானி ஆர்வத்தை அடக்கிக் கொள்ள முடியாமல்.
“ஹோவென்று அழுதுவிட்டாள். மை காட்! அந்த அழுகையைப் பார்க்கணும் நீங்க. ஆனால் அது சந்தோஷத்தின் வெள்ளம் என்று வையுங்க. நான் தோளில் தட்டிவிட்டு “சீதா! நீ வெறும் அசடு. அத்தான் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதில்லை என்றுதானே நீ கவலைப்படுகிறாய்? இப்போ பார்த்தாயா, உன் மேல் அவருக்கு எவ்வளவு பிரியம் என்று? சில ஆண்கள் அன்பை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். சிலர் அட்டகாசமாய் வெளிப்படுத்துவார்கள். அதுதான் வித்தியாசம் என்றேன். அடடா! இந்திரா பாதியிலேயே எழுந்து விட்டாளே?” கலவரத்துடன் கேட்டான்.
“வாய் கசக்கிறது. சாப்பிட பிடிக்கவில்லை என்று சொன்னேனே?” சுருக்கமாக சொன்னாள்.
பிரசாத் பவானி வற்புறுத்தியதன் பெயரில் சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டான். சாப்பாடு ஆன பிறகு பிரசாத் இந்திராவிடம் கேட்டான். “பிரசாந்த் தியேட்டரில் லவ் ஸ்டோரி ஓடுகிறது. போகலாமா?”
“நான் வரவில்லை” என்றாள் இந்திரா.
“ஏன்?”
“தலை வலிக்கிறது.”
“சினிமாவுக்கு வந்தால் தலைவலி போய்விடும். நான் கியாரண்டி தருகிறேன்.”
“போகவில்லை என்றால்?”
“நீங்க எவ்வளவு தோப்புக்ரணம் போடச் சொல்றீங்களோ போடுகிறேன்.”
“நீங்க தோப்புக்கரணம் போட்டால் எனக்கென்ன லாபம்?”
“வேறு என்ன செய்யச் சொல்றீங்க? அதையாவது சொல்லுங்கள்.”
“ஒரு வாரத்திற்கு நீங்க இந்த வீட்டுப் பக்கம் வராமல் இருக்கணும்” என்றாள் இந்திரா.
“கடவுளே!” இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டான்.
“ஊஹூம். என்னால் முடியாது” என்றான். அவன் முகத்தைத் தீனமாக வைத்துக் கொண்டே சொன்ன வார்த்தைகளைக் கேட்டு இந்திரா பக்கென்று சிரித்துவிட்டாள்.
‘”ஏன்?”
“ஆமாம். உண்மைதான். ஏன்? நான் எப்போதுமே அதைப்பற்றி யோசிக்கவே இல்லை.” அவன் எழுந்து கைகளைக் கட்டிக் கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயிலத் தொடங்கினான்.
“ஏன் என்றால் நீங்கள் எனக்கு சிநேகிதியைப் போல் தோன்றுகிறீங்க. பாலைவனம் போன்ற என் வாழ்க்கையில் நீங்கள் சோலையாக இருக்கீங்க. உங்க வீட்டுக்கு வந்தால் எனக்கு ஏனோ சந்தோஷமாக இருக்கும். வேறு எங்கே போனாலும் ஏதோ ஒரு தொல்லை. கடன் கேட்பார்கள். இல்லையா கல்யாணம் கார்த்தி என்று உயிரை எடுப்பார்கள். இந்த இரண்டுமே எனக்கு ரொம்ப இடைஞ்சலாக இருக்கும். நீங்க பெண்ணாக இருந்தாலும் அனாவசியமாக வெட்கப்பட்டுக் கொண்டு இருக்க மாட்டீங்க. இந்த வீடு உங்களுடையது. உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. அக்காவும் குழுந்தைகளும் கூட என்னிடம் அன்பாக இருக்கிறார்கள். ஒருவேளை எனக்கே தெரியாமல் இதெல்லாம் என்னை உங்கள் பக்கம் ஈர்க்கிறதென்று நினைக்கிறேன்.”
அவன் இந்திராவுக்கு எதிரே சோபாவில் உட்கார்ந்து கொண்டே சொன்னான். “இன்னொரு உண்மையை வெளிப்படையாகச் சொல்லட்டுமா? கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் போதும். உடனே இங்கே ஓடி வந்து விடணும் போல் இருக்கும். இங்கிருந்து போனதுமே திரும்பவும் எந்த சாக்கில் இந்த வீட்டுக்கு வருவது என்று வழியைத் தேடிக் கொண்டிருப்பேன்.” சொல்லும் போதே அவன் முகம் சீரியஸாக மாறிவிட்டது. அவன் முகத்தில் தென்பட்ட நேர்மையை, தயக்கமின்மையைப் பார்த்ததும் இந்திராவின் முகத்தில்கூட சிரிப்பு மறைந்து போய் கம்பீரம் வந்து சூழ்ந்து கொண்டது.
“நான்… நான் ஏதாவது தவறாகப் பேசிவிட்டேனா?” கேட்டான் அவன்.
“இல்லையே?”
“நீங்க திடீரென்று சீரியஸாக மாறியதைப் பார்த்ததும் எனக்கு பயமாக இருந்தது.”
இந்திரா சிரித்தாள். அந்த சிரிப்பில் ஏதோ வேதனையை மறைத்துக் கொள்வது போல் தோன்றியது.
அன்று மாலை எல்லோரும் சேர்ந்து சினிமாவுக்குப் போனார்கள். பிரசாத் எப்போதும் அப்படித்தான். ஒருவேளை அந்த வீட்டில் சாப்பிட்டாலும், அந்த வீட்டில் இருக்கும் எல்லோரையும் அழைத்துச் சென்று அதற்கு நான்கு மடங்காக ஹோட்டலில் சாப்பிட வைப்பான். குழந்தைகளுக்கு அவன் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஏன் என்றால் அவர்களுக்கு சமமாய் அவனும் ரகளை செய்து கொண்டிருப்பான்.
சினிமாவிலிருந்து வந்த பிறகு பிரசாத் போய்விட்டான். இந்திரா படுத்துக் கொண்டாள். அவளுடைய எண்ணங்கள் திரும்பவும் வித்யாபதியைச் சுற்றி வந்தன. அந்த யோசனைகள் வந்ததுமே அவள் மனதில் மறுபடியும் கவலை குடிக் கொண்டு விட்டது.
அத்தியாயம்-39
சீதாவுக்கு விழிப்பு வந்தது. நெற்றிப்பொட்டு விண் விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்தது. உடம்பு வலி தாங்க முடியாததாக இருந்ததால் “அப்பா… அம்மா..” என்று முனகிக் கொண்டிருந்தாள். நாக்கு வரண்டு விட்டது. “தாகம்…” ஹீனமான குரலில் கேட்டாள். யாரோ நகர்ந்த ஓசை கேட்டது. “இதோ தண்ணீர்.”
மேற்கூரையைப் பார்த்துக் கொண்டிருந்த சீதாவின் கண்கள் அந்தக் குரல் ஒலித்த பக்கம் திரும்பின. வித்யாபதி கையில் தண்ணீர் டம்ளருடன் நின்றிருந்தான்.
“தாகம்.”
“குடிக்கத் தண்ணீர் இதோ.”
சீதா கையை நகர்த்தப் போனவள் வீலென்று கத்தினாள். அவள் கை பாரமாக அசைக்க முடியாமல் இருந்தது.
வித்யாபதி கட்டில் மீது உட்கார்ந்து கொண்டான். சீதாவின் கழுத்தின் கீழே கையைக் கொடுத்து மெதுவாக எழுப்பினான்ன. சீதாவின் உதடுகளுக்கு அருகில் டம்ளரை நீட்டினான். சீதா கடகடவென்று குடித்துவிட்டாள். தொண்டை ஈரமானதும் கொஞ்சம் உயிர் வந்தாற்போல் இருந்தது.
“இப்போ எப்படி இருக்கு?”
“தலை வெடித்துவிடும் போல் இருக்கு.”
அவன் சீதாவின் நெற்றிப்பொட்டை விரல்களால் அழுத்தத் தொடங்கினான். சீதா முனகிக் கொண்டிருந்தாள். அந்த முனகல் சீதாவின் பிரமேயம் இல்லாமல், உடல்வலி தாங்க முடியாமல் தானாகவே வெளிவருவது போல் இருந்தது.
சீதாவின் தலை அவன் தோளில் சாய்ந்து இருந்தது. அவ்வளவு உபாதையிலும் சீதாவுக்கு அவன் செய்யும் இந்த பனிவிடைகள் சங்கடமாக இருந்தன. அவனைத் தள்ளி விடுவதற்காக கையை உயர்த்தப் போனாள். ஆனால் சாத்தியப்படவில்லை. “என் கைக்கு என்னவாகிவிட்டது?”
“ஒன்றும் ஆகவில்லை.”
“நகர்த்த முடியவில்லை. உடைந்து போய்விட்டதா? நான் ஊனமாகிவிட்டேனா?” சீதா அழத் தொடங்கினாள்.
“சீதா!” அந்த அழைப்பு ரொம்ப கனிவாக இருந்தது. “உன் கைக்கு ஒன்றும் ஆகவில்லை. சில நாட்களில் அதுவே சரியாகிவிடும். அனாவசியமான பயத்தால் மனதைப் பாழடித்துக்கொள்ளாதே.” நயமான குரலில் சொன்னான்.
“நான் எதற்காகப் பிழைத்துக் கொண்டேன்?” சீதாவுக்கு மேலும் அழுகை வந்தது.
அவன் கை சீதாவின் தலையை வருடிக் கொண்டிருந்தது. நெற்றிப்பொட்டை விரல்களால் நீவி விட்டுக் கொண்ருந்தான். சீதா நகரப் போனாள்.
“பரவாயில்லை. உட்கார்” என்றான் அவன்.
“என்னைத் தொடாதீங்க. நான்… நான் கம்பளிப்பூச்சி.”
அவன் வியப்புடன் புரியாதவன் போல் பார்த்தான்.
“நமக்குக் கல்யாணம் ஆன அன்றைக்கு நீங்கள் இந்திராவிடம் சொன்னீங்க. திருமணமான அன்று கணவன் வாயிலிருந்து புகழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்கணும் என்று எந்த மனைவியும் ஆசைப்படுவாள். நான் பெற்ற பாராட்டு இது. ஒருக்கால் எந்தப் பெண்ணுமே இவ்வளவு நல்ல பாராட்டை கேட்டிருக்க மாட்டாளோ என்னவோ?”
அவன் புருவம் முடிச்சேறியது. அவனுக்கு நினைவு வந்துவிட்டது. அவன் அந்த வார்த்தைகளை அந்த நிமிஷமே மறந்து போய் விட்டிருந்தான். இரண்டு வருஷங்கள் ஆகியும் சீதா இன்னும் மறக்கவில்லை போலும். அவன் வெட்கத்தால் தலை குனியவில்லை. கோபத்தால் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் இல்லை. மலர்ந்த முகத்துடன் சொன்னான். “சீதா! கம்பளிப்பூச்சியின் இன்னொரு நிலை அழகான பட்டாம்பூச்சி என்று தெரிந்தவர்கள் யாருமே அதை அருவருப்பாக நினைக்க மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு கட்டத்தில் கம்பளிப்பூச்சியைப் போன்ற நிலையை தவிர்க்க முடியாதோ என்னவோ. கம்பளிப்பூச்சியைப் பார்த்து இளப்பாக நினைக்கிறவர்கள் ரொம்ப முட்டாள்கள், அப்பாவிகள். அது போகட்டும் தலைவலி எப்படி இருக்கிறது?”
“குறையவில்லை.”
“தூங்குவதற்கு முயற்சி செய்.”
“தூக்கம் வர மறுக்கிறதே? மனதில் என்னென்னவோ யோசனைகள். பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.”
“ஒரு நிமிஷம் இரு.” வித்யாபதி சீதாவை ஜாக்கிரதையாக பின்னால் சாய்த்து, தலையணைகளை சரி செய்து விட்டுப் போனான். அவன் மேஜைமீது இருந்த டேப்ரிக்கார்டரை இயக்கினான். அதிலிருந்து மந்திரஸ்தாயில் சிதார் வாத்திய இசை ஒலிக்கத் தொடங்கியது. அது காதிற்கு இனிமையாக, மனதை அமைதிப் படுத்துவது போல் இருந்தது.
வித்யாபதி திரும்பவும் வந்தான். “இப்படி உட்கார்ந்துகொள்.” சீதாவைப் பிடித்துக் கொண்டு தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான். மெதுவாக விரல்களால் நெற்றிப்பொட்டை அழுத்தத் தொடங்கினான்.
அவன் சிசுரூஷை செய்ய வேண்டாமென்றும், மறுக்க வேண்டும் என்றும் சீதாவுக்குத் தோன்றியது. “வேண்டாம். விட்டுவிடுங்கள். எனக்காக சிரமப்படாதீங்க. மற்றவர்களுக்காக நீங்க ஏன் இவ்வளவு சிரமப்படணும்?”
அவன் பேசவில்லை. சீதா ஆவேசமாகச் சொன்னாள். “எனக்குத் தெரியும். எங்க அப்பா இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வைத்து நம் இருவரில் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார். ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்கிறோம் என்று அவருக்குத் தெரியாது. உங்களுக்கு இந்திராவிடம் பிரியம் இருப்பது அப்பாவுக்குத் தெரியாது. என்னால் கச்சிதமாக சொல்ல முடியும்.”
“சீதா! இப்போ அதெல்லாம் எதற்கு?”
“நான் எவ்வளவோ தடவை உங்களுக்கு இந்த விஷயத்தை சொல்லணும் என்று நினைத்தேன். ஆனால் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.”
“நீ தூங்குவதற்கு முயற்சி செய்.”
“என் எண்ணங்கள் என்னைத் தூங்கவிடவில்லை.”
“சரி போகட்டும். அந்த மியூசிக்கைக் கேளு.”
“என் தலையிலேயே அதைவிட பயங்கரமான மியூசிக் இருக்கிறது.”
அவன் பதில் பேசவில்லை.
சீதா கொஞ்சம் பொறுத்துச் சொன்னாள். ‘நமக்குத் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இரண்டு வருடங்கள்!’ சீதா சிரித்தாள். “இரண்டு வருடங்கள் நான் உங்களுடன் குடித்தனம் நடத்தினேன், மனம் இல்லாத வெறும் உடலோடு. எவ்வளவு உயர்ந்த ஜாதகம் என்னுடையது!”
“சீதா நான் போய் விடட்டுமா?”
“போங்கள். நீங்க இருப்பீங்கன்னு நான் ஆசைப்பட்டால்தானே வருத்தம் ஏற்படுதற்கு? போய்விடுவீங்க என்று எனக்குத் தெரியும். நன்றாகத் தெரியும். நான்… நான் செத்துப் போயிருந்தால் எவ்வளவு சந்தோஷப் படுவீங்கன்னு கூட நன்றாகத் தெரியும்.”
“சீதா!” அவன் குரல் ஆக்ரோஷமாக வெளிவந்தது. “அப்படிச் சொல்லாதே. ப்ளீஸ் அப்படிச் சொல்லாதே.” வேதனை நிரம்பிய குரலில் சொன்னான்.
“எங்கே? உங்கள் நெஞ்சின் மீது கையை வைத்து அந்த வார்த்தையைச் சொல்லுங்கள். சனியன் ஒழிந்ததுன்னு நீங்கள் நிம்மதியாக இருந்திருப்பீங்க இல்லையா?”
“நான் இப்போ எதைச் சொன்னாலும் உனக்குப் பொய் என்றுதான் தோன்றும். நாம் அப்புறமாக பேசுவோம். நீ படுத்துக்கொள்.”
“ஹும். நம் வாழ்க்கையில் இன்னும் அப்புறம் என்ற பேச்சுக்கு இடமிருக்கிறதா?”
வித்யாபதி பதில் சொல்லவில்லை. சீதா அழத் தொடங்கினாள். அந்த அழுகையில் இயலாமையும், சுய அபிமானமும் கலந்திருந்தன. “நான் உங்களுக்குத் தேவையில்லை என்று எனக்குத் தெரியும். தெரிந்தும் இந்த இரண்டு வருடங்களாக உங்களைப் பிடித்துக் கொண்டு போராடினேன். எதற்காக? கௌரவத்திற்காக. குடும்ப கௌரவத்திற்காக தன்மானத்தையும், ரோஷத்தையும் கொன்று புதைத்துவிட்டேன்.”
”சீதா!”
“முந்தா நாள் என் சிநேகிதி ஒருத்தி வந்தாள். இந்திராவைப் பற்றிக் கேட்டாள். உண்மைதான் என்று ஒப்புக்கொண்டேன். அவள் என்ன சொன்னாள் தெரியுமா? “சீதா! உனக்கு வெட்கம் மானம் இல்லையா? உன்னை விரும்பாதவனுடன் குடித்தனம் செய்கிறாயா? சீ.. சீ.. பெண் இனத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தி விட்டாய். இதைவிட சாவதே மேல் இல்லையா?” என்றாள். உண்மைதான். சாவதே மேல். ஆனால் விரும்பியபோது அந்த சாவுகூட உங்களைப் போலவே என்னைவிட்டு ஓடிப் போய்விட்டது. நான் என்ன செய்யட்டும்?”
“சீதா! சீதா ப்ளீஸ்.” வித்யாபதி கட்டிலில் அமர்ந்துகொண்டு சீதாவை அருகில் இழுத்துக் கொண்டான். சீதா அவனைத் தள்ளிவிட முயன்றாள். ஆனால் அவன் சீதாவை விடவில்லை. “சீதா… சீதா ப்ளீஸ்…” அவன் இதழ்கள் தெளிவற்று உச்சரித்துக் கொண்டிருந்தன. கட்டுத்தறியை அவிழ்த்துக் கொண்டு ஓடிய கன்றுக்குட்டியை அணைத்துக் கொண்டு தடவிக் கொடுத்து வழிக்குக் கொண்டு வர முயலும் யஜமானியைப் போல் இருந்தான் அவன். கொஞ்ச நேரம் கழித்த சீதா சோர்ந்து போய் அவனுக்கு அடங்கிவிட்டாள்.
அவன் எதுவும் பேசவில்லை. சீதா அப்படியே இருந்துவிட்டாள். சீதாவுக்கு திடீரென்று அவன் கைகளுக்கு இடையில் ஏதோ நிம்மதியிருப்பது போல் தோன்றியது. ஜென்மத்தில் ஒரே ஒரு முறையாவது இந்த அனுபவம் கிடைத்துவிட்டது.
கொஞ்சமும் பிடிக்காத தனக்கே இவ்வளவு பனிவிடை செய்கிறானே? இவ்வளவு மென்மையாக பார்த்துக் கொள்கிறானே? இந்திராவை இன்னும் எவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டிருப்பான்? சீதாவுக்கு ஒரு நிமிடம் அவனைத் தள்ளிவிட வேண்டும் என்று பலமாகத் தோன்றியது. அடுத்த வினாடி இன்னும் நெருங்க வேண்டும் போல் இருந்தது. அவன் சீதாவின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிரந்தான். அந்தத் தொடுகை ரொம்ப சுகமாக இருந்தது. அவள் அனுபவித்த வேதனை, வலி எல்லாம் அந்த ஸ்பரிசத்தில் கரைந்து விட்டாற்போல் இருந்தது. சீதாவுக்கு அந்த நேரத்தில் தான் மேலும் மேலும் துரதிரஷ்டசாலி என்றே நினைக்கத் தோன்றியது.
அத்தியாயம்-40
பிரசாத், இந்திரா பார்க்கில் நடந்து கொண்டிருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை. மதியமே பிரசாத் வீட்டுக்கு வந்திருந்தான். பார்க்கத் தகுந்தாற்போல் சினிமா எதுவும் இருக்கவில்லை. பார்க்கிற்குப் போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருப்போம் என்று கிளம்பினார்கள். பவானியின் கணவன் ஊரில் இல்லை. அவளும் குழந்தைகளும் கூட வந்தார்கள்.
பார்க்கில் மரத்தடியில் குளிர்ச்சியாக இருந்தது. குழந்தைகள் புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பவானி தெரிந்தவர்கள் யாரோ தென்பட்டதும் அவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
“கொஞ்ச நேரம் இப்படியே நடந்து போய் வருவோமா?” என்றான் பிரசாத்.
இந்திரா கிளம்பினாள். இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள். குழந்தைகள் ஓடிக் கொண்டும், ரகளை ரகளை செய்து கொண்டும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களையே கண்ணிமைக்காமல் பார்த்த பிரசாத் பெருமூச்செறிந்தான்.
”என்ன விஷயம்?” கேட்டாள் இந்திரா.
ஏதோ யோசனையில் இருந்த அவன் திடுக்கிட்டு இந்திராவின் பக்கம் திரும்பினான்.
“ஏன் அப்படி ஆழ்ந்து பெருமுச்சு விட்டீங்க?”
“அந்தக் குழந்தைகளைப் பாருங்கள். அவர்களைப் பார்க்கும் போது வாழ்க்கையில் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அந்த முடிவு தவறு என்று தோன்றும்.”
“ஆமாம். நீங்க வேலையில் செட்டில் ஆகி இவ்வளவு நாளாகிவிட்டதே? கல்யாணம் ஏன் பண்ணிக்கொள்ளவில்லை?” என்று கேட்டாள் இந்திரா.
“பண்ணிக்கொள்ளும் யோகம் இல்லை.” அவன் நெற்றியைத் தொட்டு காண்பித்தான்.
“ஏன் அப்படி?”
“அது அப்படித்தான்.”
“காரணத்தை விவரமாகச் சொல்லக் கூடாதா?”
“ஏன் சொல்லக் கூடாது? கேட்டுக் கொள்வதற்கு உங்களுக்குப் பொறுமை வேண்டுமே தவிர. சில சமயம் நம் கஷ்டத்தைச் சொல்லிக்கொள்ளும் தவிப்பில் எதிராளியை போரடித்துவிடுவோம். அதுதான் என் பயம்.”
இந்திரா சிரித்தாள். “அந்த மாதிரி பயம் எதுவும் வேண்டாம். சில சமயம் நம் வாழ்க்கையில் நமக்கே தாங்க முடியாத சலிப்பு ஏற்படும். மற்றவர்களின் பிரச்னைகளைக் கேட்டால் கொஞ்சம் சமாதானமாக இருக்கும். சொல்லுங்கள்.”
“இங்கே உட்கார்ந்து கொள்வோமா?” அவன் கேட்டான்.
இந்திரா தலையை அசைத்தாள். இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். அவன் சொல்லத் தொடங்கினான்.
“நான் எங்க மாமாவிடம் வளர்ந்தேன். எங்கள் பொருளாதார நிலைமை சிறு வயதிலிருந்தே நன்றாக இல்லை. அவர் என்னுடைய மாமா என்ற பெயர்தானே ஒழிய எங்க அம்மா அவர் வீட்டில் வேலைக்காரியைப் போல் இருந்து வந்தாள். மாமிக்கு எங்களைக் கண்டால் பிடிக்காது. இளப்பம். ஒருக்கால் இந்த உலகத்தில் இல்லாதவர்கள் எல்லோருமே அதுபோல்தான் நடத்தப் படுவார்களோ என்னவோ.
ஏனோ நம் சமுதாயத்தால் ஏழ்மையைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அம்மாவுக்குக் கணவன் இல்லை. நான் ரொம்ப சின்னவன். மாமாவின் ஆதரவைத் தவிர எங்களுக்கு இந்த உலகத்தில் வேறு போக்கிடம் இல்லை. மாமாவுக்கு ஒரே மகள். பெயர் சுஜாதா. ரொம்ப நல்லவள். அவள் ஒருத்தித்தான் எங்களை வெறுக்காமல் இருந்தாள். கனிவாக நடந்து கொள்வாள். நாங்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனோம். சுஜாதா என்றால் எனக்கு உயிர். அவளுக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். எனக்கு வேலை கிடைத்த பிறகு நாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்வதாக முடிவு செய்திருந்தோம். எனக்கு வரும் சம்பளத்தில் சிக்கனமாக குடித்தனம் நடத்தி என்னை எவ்வளவு சந்தோஷமாக வைத்துக் கொள்ளப் போகிறாள் என்று சுஜாதா சொல்லும் போதே என் மனம் புல்லரிக்கும். இருவரும் குடும்பம், குழந்தைகள் என்று ஏதேதோ கனவுகள் கண்டோம்.
ஆனால் மாமா, மாமியின் எண்ணங்கள் வேறு விதமாக இருந்தன. வேறு வரனைப் பார்த்தார்கள். அவன் ஜில்லா கலெக்டர். அவனுடைய அப்பா பெரிய போலீஸ் ஆபீசர். தங்கைகள் வெளிநாட்டில் இருந்தார்கள். ஆனால் சுஜாதா அவனைப் பண்ணிக் கொள்ள மாட்டேன் என்றாள். என்னைத்தான் பண்ணிப்பேன் என்று சொல்லிவிட்டாள். மாமா சுஜாதாவை எதுவும் சொல்லவில்லை. என்னைத் தனியாக அழைத்து கண்டபடி திட்டினார். பாம்புக்கு பாலை ஊற்றி வளர்ந்ததாக குற்றம் சாட்டினார். மாமியோ ஒரு படி மேலேயே போனாள். சொத்துக்கு ஆசைப்பட்டு சுஜாதாவை வலையில் போட்டுக் கொண்டு விட்டதாக பழித்தாள். சுஜாதாவைக் கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கச் சொல்லி மாமா கேட்டுக் கொண்டார். இதையெல்லாம் கேட்டதும் அம்மாவும் அழத் தொடங்கினாள். சுஜாதா அந்த கலெக்டர் வரனை பண்ணிக்கொள்ளாமல் தடுத்தால் விஷம் அருந்தி செத்துப் போவதாக சொன்னாள். மாமா, மாமி, அம்மா மூவரும் என்னை உலுக்கி எடுத்தார்கள். நான் யோசித்தேன். மாமி சொன்னது உண்மைதான். என்னைப் பண்ணிக் கொண்டால் சுஜாதாவுக்கு என்ன சுகம் இருக்க முடியும்? அந்த வரனைப் பண்ணிக் கொண்டால் வாழ்க்கை ராஜயோகமாக இருக்கும். என்னைப் பண்ணிக் கொண்டால் எல்லா விதத்திலேயும் வறுமைதான். சுஜாதா என்றால் எனக்கு உயிர். அவள் சுகமாக இருக்க வேண்டுமென்றால் என்னால் இந்த தியாகம் கூடவா பண்ண முடியாது? காதல் என்றாலே தியாகம்தான் என்று தோன்றியது. எல்லாம் யோசித்துவிட்டு நான் சுஜாதாவை அந்த வரனுக்கு ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினேன். அவளுடைய பெற்றோரை விரோதித்துக் கொண்டு நம்மால் சந்தோஷமாக இருக்க முடியாது என்று சொன்னேன்.”
“சுஜாதா என்ன சொன்னாள்?”
“என்னை நன்றாகத் திட்டினாள். நான் கையாலாகாதவன் என்றாள். கோழை என்றாள். தன்னை எங்கேயாவது அழைத்துப் போய் கல்யாணம் செய்து கொள்வதை விட்டுவிட்டு வேண்டாத வார்த்தைகளைச் சொல்வதாக பழித்தாள். இனி ஜென்மத்தில் என் முகத்தில் முழிக்க மாட்டேன் என்றாள். என்னைக் காதலித்தது தான் செய்த பெரிய தவறு என்றாள்.”
“அப்புறமாக என்ன நடந்தது?”
“சுஜாதாவின் கல்யாணம் அந்த கலெக்டர் பையனுடன் நடந்தது.”
“சுஜாதா அப்புறம் உங்களுடன் பெசினாளா?”
“ஊஹூம். ஒரு வருடம் வரை பேசவே இல்லை. என்னைப் பார்த்தாலே வெறுத்து ஒதுக்கினாள். அவள் கணவனுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட்டது. மூன்று வருடங்களுக்குப் பிறகு பிறந்த வீட்டுக்கு வந்தாள். இரண்டு குழந்தைகள். என்னுடைய பழைய நட்பை மறந்துவிட்டாள். வேடிக்கை என்னவென்றால் இப்போ என்னுடன் நெருக்கமாக பேசுகிறாள். கல்யாணம் ஏன் பண்ணிக் கொள்ள மாட்டேங்கிறாய் என்று சத்தம் போடுகிறாள். அதோடு வாழ்நாள் முழுவதும் எனக்கு நன்றியுடன் இருப்பாளாம். நான் அவளுக்கு அவ்வளவு நல்லது செய்தேனாம். நான் வற்புறுத்தியிருக்காவிட்டால் அந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்து இருக்க மாட்டாளாம். அவள் கணவர் ரொம்ப நல்லவராம். வாழ்க்கையில் காதல் என்பது கன்னிப்பெண் ஒருத்தி காணும் கனவுதானாம். நடைமுறைக்கு வந்துவிட்டால் அந்த கனவு கரைந்து போய்விடுமாம். எப்போ பார்த்தாலும் அவள் கணவன், குழந்தைகள் பற்றிய பேச்சுதான்.”
“இப்போ உங்களுக்கு என்ன தோன்றுகிறது?”
“இந்திரா! என் மனதைப் பற்றி எனக்கே புரியவில்லை. அப்போ தியாகம் பண்ணுவதாக நினைத்துக் கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தேன். இப்போ சுஜாதா தன் கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்கும் போது எதையோ இழந்து விட்டாற்போல் தோன்றுகிறது. சுஜாதா எனக்குக் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் வாழ்நாள் முழுவதும் கல்யாணமே பண்ணிக் கொள்ளக் கூடாது என்று இருந்தேன். சுஜாதா சந்தோஷமாக இருக்கிறாள். என்னைப் பற்றிய நினைப்பே இல்லை அவளுக்கு. நான் மட்டும் ஏன் இப்படி தனியாக இருக்கணும் என்று தோன்றுகிறது.”
“நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளுங்கள்.”
“அதுகூட அவ்வளவு எளிது என்று தோன்றவில்லை. எனக்குப் பிடித்த மாதிரி பெண் கிடைக்கணும். சுஜாதாவின் விஷயத்தில் பொறாமைப்பட்டு என் வாழ்க்கையை நரகமாக்காமல், என்னைப் புரிந்து கொள்பவளாக இருக்க வேண்டும். புரிந்து கொள்வது மட்டும் போறாது. என்னை இந்த ஏமாற்றத்திலிருந்து மீட்கக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும். அப்படிப் பட்ட பெண்ணுக்காகத் தேடுவது பேராசை என்று தோன்றுகிறது. என்னால் எந்தப் பெண்ணுடனும் நட்பு வைத்துக் கொள்ள முடியுமே தவிர காதலிக்க மட்டும் முடியாது.”
இந்திராவுக்கு அவன் மனதில் இருக்கும் போராட்டம் நன்றாகப் புரிந்தது.
பவானி வந்து அழைத்தாள். “இந்திரா! கிளம்புவோமா?”
இந்திரா எழுந்து கொண்டாள். பிரசாதும் எழுந்து கொண்டான். இந்திராவுக்கு அவனைப் பார்க்கப் பார்க்க ஒரு விஷயம் புரிந்தது. இந்த சிரிப்பும், ஜோக் செய்வதும் ஒரு திரை மட்டும் தான். உள்ளுக்குள் பிரசாத் கம்பீரம் நிறைந்தவனாக இருக்கிறான். வாழ்க்கையைப் பற்றி சீரியஸாக யோசிக்கும் சுபாவம் கொண்டவன்.
வீட்டுக்கு வந்தார்கள். சாப்பிட்டுவிட்டு படுத்தார்கள். ஏனோ தெரியவில்லை, இந்திராவுக்கு உறக்கம் வரவில்லை. இரவு பதினோரு மணியாகிவிட்டது. இந்திரா படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். அதற்குள் போன் மணியடித்தது. இந்திரா திடுக்கிட்டாள். இந்த நேரத்தில் வித்யாபதியைத் தவிர வேறு யாரும் போன் பண்ண மாட்டார்கள். சரேலென்று கட்டிலை விட்டு இறங்கி பரபரபோடு போனை எடுத்து ”ஹலோ!” என்றாள்.
“ஹலோ! இந்திராதானே?” பிரசாதின் குரல் கேட்டது.
“ஆமாம்.” அவன் குரலைக் கேட்டதும் சாதாரணமாகிவிட்டாள்.
“சாரி, டிஸ்டர்ப் செய்து விட்டேனா?”
“இல்லை.”
“நீங்க இன்னும் தூங்க வில்லை என்று உங்கள் குரலிலிருந்தே தெரிகிறது” என்றான் அவன்.
அந்த கமெண்டை கேட்காதது போல் இருந்தாள். “சொல்லுங்கள். என்ன விஷயம்?”
“ஒன்றும் இல்லை. எனக்குத் தூக்கம் வரவில்லை. உங்களுக்குப் போன் செய்தேன். ஏனோ பார்க்கில் மனம் விட்டு என் கதையெல்லாம் உங்களிடம் சொன்ன பிறகு என் மனதில் இருக்கும் பாரம் குறைந்து விட்டாற்போல் தோன்றுகிறது. நீங்க எனக்கு மேலும் நெருங்கியவராகத் தோன்றுகிறது.” அவன் குரல் எப்படியோ இருந்தது. “ஒரு முறை கை நழுவவிட்டால் காதலை மறுபடியும் பெற முடியாதோ என்னவோ. நட்பைப் பெற முடியும் என்று. சரிதானே?”
“எனக்குத் தெரியவில்லை.” அவள் முணுமுணுத்தாள்.
“உங்களுக்குத் தெரியாது என்று எனக்குத் தெரியும். நான் சொன்னது என்னைப் போல் அனுபவம் அடைந்தவர்களுக்கு மட்டும்தான் புரியும். குட்நைட்.”
“குட்நைட்.” இந்திரா போனை வைத்துவிட்டாள்.
இந்திரா வந்து படுத்துக் கொண்டாள். அவனுக்குத் தன்னைப் பற்றி, வித்யாபதியைப் பற்றி தெரியுமா தெரியாதா? தெரிந்தாலும் பரவாயில்லை. தெரியவில்லை என்றாலும் எதுவும் குடி மூழ்கிப் போகப் போவதில்லை. இந்திரா பெருமூச்செறிந்தாள். வித்யாபதி இன்றுகூட போன் செய்யவில்லை. அவள் மனம் பாரமாகிவிட்டது. பிரசாதின் வருகையால் அவளுக்கே தெரியாமல் கொஞ்சம் பொழுது போய்க் கொண்டிருந்தது. இல்லாவிட்டால் நாட்கள் எவ்வளவு பாரமாக இருந்திருக்மோ? மேற்கூரையைப் பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்தாள். தூக்கம் வரவில்லை.
– தொடரும்…
– பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனராணி அவர்களின் படைப்பு “Sithapathi” தமிழில் “சீதா(வின்)பதி” என்ற தலைப்பில்.
– சீதா(வின்)பதி (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன், முதற்பதிப்பு: 2015, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.