கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 2,990 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

அத்தியாயம்-31

பிரசாத் சீதாவின் விட்டுக்கு வந்தான். அவன் வரும் போது சீதா சமையல்காரனிடம் இரவு சமையலுக்கான ஏற்பாடுகளைப் சமையலுக்கான ஏற்பாடுகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.

“சீதா” பிரசாத் அழைத்தான். பழக்கப்பட்ட அந்தக் குரலைக் கேட்டதும் சீதா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். பிரசாதைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.

“நீயா? இந்த ஊருக்கு வந்து பதினைந்து நாட்கள் ஆகிறது. இப்பொழுதுதான் நினைவுக்கு வந்தோமா?” என்றாள்.

“அது இல்லை சீதா! ரயிலை விட்டு இறங்கியதும் நேராக இங்கேதான் வருவதாக இருந்தேன். ஆனால்…”

”ஆனால்?”

“ஏற்கனவே துக்கத்தில் இருக்கிறாய். உன்னை எப்படி தேற்றுவது என்று தெரியாமல்..”

சீதா பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு வலிய வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் “கண்ணில் படாமல் இருந்து விட்டாய். அப்படித்தானே? சின்ன வயது முதல் உன் போக்கே இதுதானே? உட்கார். சித்தி எப்படி இருக்கிறாள்?”

“அம்மாவுக்கு என்ன? அம்மாவும் அவளுடைய கடவுள்களும் நலமாக இருக்கிறார்கள்.”

“நீ?”

“என்கென்ன? நானும் என் சினிமாக்களும் நிம்மதியாக இருக்கிறோம்.”

சீதா பக்கென்று சிரித்துவிட்டாள். “உன் பேச்சு கொஞ்சம் கூட மாறவே இல்லை.”

“நீ மட்டும் மாறிவிட்டாய் தெரியுமா?”

“நானா? என்ன மாறிவிட்டேனாம்?”

“கொஞ்சம் இளைத்திருக்கிறாய். பெரியமனுஷ தோரணை தென்படுகிறது. அதைவிட பெரிய மாற்றம் எதுவும் இல்லை. சீதா! உன்னைப் பார்த்து ஒரு வருடமாவது ஆகியிருக்கும். இந்தக் காலத்தில் கல்யாணம் ஆன பெண்களைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்குக் கல்யாணம் ஆனால் நாளைக்கே பாட்டியை போல் காட்சி தருகிறார்கள். நீ கொஞ்சம்கூட மாறவே இல்லை.”

“மாறிவிட்டாய் என்று இப்பொழுதுதானே சொன்னாய்?” சீதா சிரித்தாள்.

பிரசாத் தலையைச் சொரிந்து கொண்டான். “ஒரு விதமாக பார்த்தால் மாறினாற்போலவும் இருக்கு.”

“போகட்டும் விடு. காபி குடிக்கிறாயா? ஹார்லிக்ஸா?”

“அம்மா எதிரில் இருந்தால் ஹார்லிக்ஸ். இல்லாவிட்டால் காபி.”

“உன் குறும்பு கொஞ்சம் கூட மாறவேயில்லையடா.” சீதா உள்ளே போய் சமையல்காரனிடம் காபிக்கு சொல்லிவிட்டு வந்தாள்.

அதற்குள் குழந்தைகள் வந்தார்கள். “அண்ணி! என்னுடைய ஹோம்வர்க் முடிந்து விட்டது. நான் டி.வி. பார்க்கலாமா?” என்று கேட்டாள் பெரியவள்.

“ஓ…” என்றாள் சீதா. குழந்தைகள் சந்தோஷமாக ஓடினார்கள்.

“யாரிந்த வால்கள்?”

“என் நாத்தனார்கள் மற்றும் மைத்துனனும்.”

“இவர்களும் இங்கேதான் இருக்காங்களா?”

“ஆமாம். மாமனார் போய் விட்டார் இல்லையா. வந்து உட்கார். வேறு என்ன விசேஷம்?” என்றாள். சீதாவுக்கு யாராவது நெருங்கியவர்களைப் பார்த்தால் உயிர் வந்தாற்போல் இருக்கும். அந்த கொஞ்ச நேரம் தனிமை மறந்து போகும். பிரசாத் ஒன்றுவிட்ட சித்தியின் மகன். சின்ன வயதில் தாயுடன் சேர்ந்து இந்த வீட்டிற்கு அடிக்கடி வந்திருக்கிறான். பிரசாதின் தாய்க்கு கடவுள் பக்தி அதிகம், பூஜை, கோவில்கள் என்று ஜபம் செய்து கொண்டிருப்பாள். இவன் ஒரு சினிமா பைத்தியம். சுவாமி போட்டோவைப் பார்த்தால் இந்த நடிகர் இந்த வேஷத்தைப் போட்டால் பொருத்தமாக இருக்கும் என்று கமெண்ட் அடித்து தாயிடமிருந்து வெசவுகளை வாங்கிக் கட்டிக்கொள்வான்.

பிரசாத் சீதா உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். பேச்சுவாக்கில் பிரசாத் “உன்னைவிட முன்னால் அத்தான் என்னை குசலம் விசாரித்துவிட்டார்” என்றான்.
“அதெப்படி?”

“அவர் முந்தா நாள் வங்கிக்கு வந்திருந்தார். என்னைப் பார்த்ததாக சொல்லவில்லையா?”

சீதாவின் பார்வை ஒரு வினாடி கோப்பையின்மீது நிலைத்தது. “சொல்லவில்லையே? அவருக்கு மறதி அதிகம். இருந்தாலும் உங்க வங்கிக்கு ஏன் வந்தார்? அங்கே எங்களுக்கு அக்கவுண்ட் எதுவும் இல்லையே?” என்றாள்.

“இந்திரா என்று ஒரு பெண் இருக்கிறாள். அவளை அத்தானுக்குத் தெரியுமாம். என்ன வேலையாக வந்தார் என்று தெரியாது. அவசரமாக கிளம்பிப் போய்விட்டார்.”

சீதாவின் உடல் விரைப்பாக மாறியது. “இந்திராவை உனக்கு நன்றாகத் தெரியுமா?”

“நன்றாகத் தெரியும். ரொம்ப நல்ல பெண்” என்றான்.

இந்திராவின் பெயரைக் கேட்டதும் பிரசாதின் முகம் பிரகாசமடைந்ததை சீதா கவனிக்காமல் இல்லை. “இந்திராவை எனக்கும் தெரியும். உங்க அத்தான் மூலமாக என்று வைத்துக்கொள். ரொம்ப நல்ல சுபாவம். நான் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. நாளை ஆபீசுக்குப் போனால் நான் விசாரித்ததாக சொல்லு” என்றாள்.

பிரசாத் உற்சாகத்துடன் தலையை அசைத்தான்.

அதற்குள் அங்கே இருவர் வந்தார்கள். சிரித்துப் பேசிக் கொண்டு, ஒருவர் கரத்தை மற்றவர் பிடித்துக் கொண்டும் வந்தார்கள். இளம் வயதில் இருக்கும் புதுஜோடி. அவர்கள் நேராக அறைக்குள் நுழையப் போகும் போது சீதா குரல் கொடுத்து அழைத்தாள். பிரசாதை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். “மாமாவின் மகன் மோகன். அவன் மனைவி சுமதி. மோகன்! சித்தியின் மகன் பிரசாத்” என்றாள். அப்படியா என்பது போல் இருவரும் பிரசாதைப் பார்த்தார்கள்.

”உட்காருங்கள்” என்றாள் சீதா. மோகன் உட்கார்ந்து கொண்டான். அந்தப் பெண் உட்காரவில்லை. அவன் நாற்காலியின் பின்னால் நின்று கொண்டாள்.

சீதா சொன்னாள். “இவர்களுக்குத் திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகிறது. பெங்களூரிலிருந்து இந்த ஊரை சுற்றி பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள். நான்கு நாளாகிறது. நான்தான் இன்னும் ஒரு வாரம் இருக்கச் சொன்னேன்.”

அதற்குள் அந்தப் பெண் அவன் தோளில் கிள்ளினாள். அது பிரசாதின் கண்ணில் பட்டுவிட்டது. மோகன் அந்த குறிப்பை புரிந்த கொண்டாற்போல் சட்டென்று எழுந்து கொண்டான். “வருகிறேன். அப்புறமாக சந்திக்கிறேன்” என்று அந்தப் பெண்ணைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தான். உடனே கதவுகள் சாத்திக்கொண்டன. கைகளை கோர்த்தபடி போய்க் கொண்டிருந்தவர்களை அந்தப் பக்கமே கழுத்து திரும்பி விட்டது போல் பிரசாத் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சீதா அவன் செயலைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டே “புதிதாக திருமணம் ஆனவர்கள் இல்லையா?” என்றாள்.

”ஆனால் மட்டும்?” என்றான் பிரசாத்.

அவர்கள் அறைக்குள் போனார்களோ இல்லையோ சிரிப்புச் சத்தம் கேட்டது. “விடு என்னை, சொன்னால் கேட்க மாட்டாயா?” என்று பெண்ணில் குரல் கேட்டது. பதிலுக்கு அவன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் தெளிவாக காதில் விழவில்லை.

தொடர்ந்து அந்தப் பெண்ணின் சிரிப்புச் சத்தம் கேட்டது. சீதா சட்டென்று ஏதோ வேலை இருப்பது போல் அங்கிருந்து போய்விட்டாள்.

சற்று நேரம் கழித்து சமையல் அறையில் இருந்த சீதாவிடம் வந்தான் பிரசாத்.” சீதா! இந்த கூத்தை எல்லாம் நீ எப்படித்தான் சகித்துக் கொள்கிறாய்?” என்றான். ”கூத்தா? எதைச் சொல்கிறாய்?” வியப்புடன் கேட்டாள்.

”அதுதான்.” தொலைவில் சாத்தியிருந்த கதவுகளைப் பார்த்துக் கொண்டே அருவருப்புடன் சொன்னான்.

“அதுவா? புதிதாக திருமணமானவர்கள், அதில் தவறு என்ன இருக்கு?”

“தவறு இல்லையா? மற்றவர்களின் வீடு என்று கூடப் பார்க்காமல்…”

“புதிதாக கல்யாணம் ஆனவர்கள். அவர்கள் உலகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவுமே கண்ணுக்குத் தெரியாது. காதிலும் விழாது” என்றாள் பெரியமனுஷ தோரணையில்.

“அப்பப்பா… என்னதான் புதிதாக மணம் ஆனவர்கள் என்றாலும் இவர்களுக்கு மட்டும்தான் கல்யாணம் ஆகி இருக்கிறதா இந்த உலகத்தில்? நீ எப்படித்தான் சகித்துக் கொள்கிறாயோ இந்தக் கூத்தை?” அருவருத்துக் கொள்வதுபோல் சொன்னான்.

அதற்குள் அறையிலிருந்து மறுபடியும் சிரிப்பு சத்தம் கேட்டது. இனி தாங்க முடியாதவன் போல் பிரசாத் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டான்.

சீதாவுக்கு அந்த இளம்ஜோடியில் போக்கு அருவருக்கத் தக்கதாகத் தோன்றவில்லை. சமையல்காரனிடம் அவர்களுக்குக் காபி வேண்டுமா என்று கேட்கச் சொல்லி உத்தரவிட்டாள்.

சமையல்காரன் போனான். சீதா பார்த்துக் கொண்டுதான் இருந்தான். சமையல்காரன் கதவைத் தட்டினான்.

“யாரு?” உள்ளே இருந்து அவன் கத்தினான்.

“நான்தான் சமையல்காரன். உங்களுக்குக் காபி வேணுமான்னு அம்மா கேட்கச் சொன்னாங்க.”

“வேணும்.”

“வேண்டாம்.” இரண்டு குரல்களும் ஒரே நேரத்தில் கேட்டன.

“வேணுங்கறேன்.’

“இப்போ வேண்டாங்கறேன்.”

“எனக்கு வேண்டும்.”

“எனக்கு வேண்டாம்.”

“என் மேல் உனக்கு பிரியம் இருக்கா இல்லையா?”

“இருக்கு”

“அப்படி என்றால் காபியை விட்டு விடுங்கள்.”

“என் மீது உனக்கு அன்பு இருந்தால் நீயும் குடி.” சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.

“தம்பி… நான் போய் சமையலைக் கவனிக்கணும். சட்டுன்னு சொல்லுங்கள்.”

“வேண்டும். இரண்டு காபி.” கத்தினான்.

“அப்பப்பா… என்ன மனிதர்களோ? லேசில் பதில் சொல்லி விட மாட்டார்கள்.” சலித்துக்கொண்டே சொன்ன சமையல்காரன் சீதாவைப் பார்த்ததும் நின்றுவிட்டான்.

சீதா தானே சுயமாக காபி கலந்து இரண்டு கோப்புகளில் ஊற்றிச் சமையல்காரனிடம் தந்து “கொடுத்துவிட்டு வா” என்று அனுப்பினாள்.

சீதாவுக்கு மோகனை, அவன் மனைவியைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. எரிச்சல் ஏற்படவில்லை. ஆமாம், புதிதாக மணமானவர்கள் சுற்றிலும் உள்ள உலகத்தையே மறந்து போய் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களைப் பார்க்கும் போது அவளுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது.

அவர்கள் ஊருக்குக் கிளம்புவதாக சொன்ன போது, “உங்கள் வீட்டைப் போலவே நினைத்துக் கொள்ளுங்கள். கூச்சப்பட வேண்டாம்” என்று வற்புறுத்தி தங்க வைத்தாள்.

அத்தியாயம்-32

வித்யாபதிக்கு மட்டும் அவர்கள் இருந்தது ரொம்ப இடைஞ்சலாக இருந்தது. உணவுவேஜையின் அருகில் லேசில் சாப்பிட்டுவிட்டு எழுந்து போக மாட்டார்கள். ஒரே ரகளை. ஒருவர் தட்டிலிருந்து ஒருவர் எடுத்துச் சாப்பிடுவார்கள். அவன் ஏதாவது சொன்னால் உடனே அந்தப் பெண் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்வாள். அவன் கெஞ்சுவான். ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டே இருப்பார்கள். வித்யாபதிக்கு அவர்களின் நடவடிக்கை எரிச்சலைத் தந்தது.

அவனும், சீதாவும் இரவு சாப்பாட்டை முடித்துக் கொணட பிறகு கம்பெனி கணக்கு வழக்குகளை பார்ப்பதற்காக பைல்களை எடுத்து வைத்துக் கொண்டான். அறையிலிருந்து சிரிப்பும் சத்தமும், கும்மாளமும் கேட்கத் தொடங்கிவிட்டது.

வித்யாபதி பைல்களை மூடிவிட்டு “எனக்கு தூக்கம் வருகிறது” என்று அங்கிருந்து போய்விட்டான். சீதா அதே இடத்தில் ஆழ்ந்த யோசனையில் மூழ்கிவிட்டாற்போல் உட்கார்ந்திருந்தாள். கல்யாணம் ஆனவர்கள் என்றால் மோகன், சுமதியைப் போல் இருக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்? ஒருவரைவிட்டுப் பிரிந்து இன்னொருவர் ஒரு வினாடி நேரம்கூட இருக்க மாட்டார்கள்.

நேற்று மோகன் ஏதோ வேலையாய் கடைத்தெருவுக்கு போயிருந்தான். போன காரியம் முடியவில்லை போலும். ஒரு மணி நேரம் தாமதமாக வந்தான். அதற்குள் சுமதி குட்டிப் போட்ட பூனையாய் வாசலுக்கு உள்ளுக்கும் நடையாய் நடந்தாள். “அக்கா! அவருக்கு ஒன்றும் ஆகியிருக்காது இல்லையா? இத்தனை தாமதம் செய்ய மாட்டாரே? ஏதாவது விபத்து நடந்திருக்குமா?” என்று கலமரமடைந்தாள்.

“சீ… சீ… என்ன பேச்சு இது? ஏதாவது காரணத்தினால் தாமதமாகியிருக்கும். நீ கவலைப்படாதே” என்று தைரியம் சொன்னாள் சீதா.

மோகன் வந்துவிட்டான். க்ஷேமமாகத் திரும்பி வந்த அவனைப் பார்த்ததும் சுமதியின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்த போதிலும் உடனே முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு விருட்டென்று அறைக்குள் ஓடிப் போய்க் கதவைச் சாத்திக் கொண்டாள்.

அவன் வந்து அரைமணி நேரம் கெஞ்சிக்கூத்தாடி மன்னிப்பு கேட்டுக் கொண்ட பிறகுதான் கதவைத் திறந்தாள் அவள்.

வித்யாபதியும் அங்கேயேதான் இருந்தான். சுமதி கதவைத் திறந்தாள். வித்யாபதி மற்றும் சீதா அங்கே இருப்பதையும் பொருட்படுத்தாமல் மோகன் சுமதியை அணைத்துக் கொண்டே உள்ளே சென்று கால்களால் உதைத்து கதவைத் தாழிட்டான். சீதாவும் வித்யாபதியும் ஆளுக்கொரு பக்கமாக நின்றுகொண்டு தோட்டத்தில் இருந்த செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அரைமணி நேரம் கழித்து வித்யாபதி ப்ரீப்கேசுடன் வெளியே வந்தான். “நான் ஆபீசுக்குப் போகிறேன். இரவு வரமாட்டேன்” என்றான்.

சீதா அவனைத் திரும்பிப் பார்த்தாள். “ஏன்?” என்று கேட்டாள் வியப்புடன். “இரவு மட்டுமே இல்லை. இவர்கள் இங்கே இருக்கும் வரையிலும் வரப் போவதில்லை” என்றான்.

“நன்றாக இருக்கிறது நீங்க சொல்வது. இது ஒரு சாக்கு. நடுவில் அவர்கள் என்ன செய்து விட்டார்கள்?” கூண்டில் நிற்க வைத்து கேட்பது போல் கேட்டாள்.

“நாலு நாளாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு அருவருப்பாக இருக்கு” என்றான்.

“ஏன்? எதற்காக? அவர்கள் என்ன தவறு செய்து விட்டார்கள்? ஒருவரைக் கண்டால் மற்றவருக்குப் பிடித்திருக்கு. சந்தோஷமாக இருக்கிறார்கள். அது தவறா? கல்யாணம் ஆனவர்கள் எப்படி இருக்கணும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள். உங்களுக்கு அது கிடைக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறதா?” ஏளனம் செய்வது போல் சொன்னாள் சீதா.

“சீதா!!” கத்தினான் அவன்.

“இவர்கள் இருக்கிறார்கள் என்ற சாக்கு எதற்கு? வங்கியில் பிரசாத் இருப்பதால் இந்திராவைச் சந்திக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு போங்களேன்? ஆபீசுக்கு போகும் சாக்கில் ஏதாவது ஹோட்டலில் சந்தித்துக் கொள்ளலாம். சொல்லுங்கள். எத்தனை நாட்கள் அப்படி இருந்தால் உங்களுடைய மோகம் தீரும்?”

“வாழ்நாள் முழுவதும். சரிதானா?”

சாட்டையடி வாங்கியது போல் சீதாவின் முகம் சுண்டிவிட்டது. அவன் போய்விட்டான். அவள் அழுதுகொண்டே அந்த இடத்தில் நின்றுவிட்டாள்.

சுவர் கடியாரம் பன்னிரெண்டு மணி அடித்து ஓய்ந்தது. சீதா திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

வித்யாபதி கிளம்பிப் போய் மூன்று மணி நேரமாகிவிட்டது. அவன் ஆபீசுக்குதான் போனானா? இந்திராவிடம் போயிருப்பானா? சீதா எழுந்து போய் ஆபீசுக்குப் போன் செய்தாள். ஒரு முறை மணியடித்ததும் மறுமுனையில் ரிசீவர் எடுக்கப்பட்டு “ஹலோ” என்று வித்யாபதியின் குரல் கேட்டது.

சீதாவின் இதயத்தில் இருந்த பாரம் இறங்கிவிட்டாற்போல் இருந்தது. “ஹலோ” அவன் திரும்பவும் சொன்னான். சீதா மெதுவாக போனை வைத்துவிட்டாள்.

ஒரு நிமிஷம் கழித்து போன் கணகணவென்று ஒலித்தது. சீதா எடுத்து “ஹலோ” என்றாள்.

மறுமுனையிலிருந்து வித்யாபதியின் குரல் தெளிவாக கேட்டது. “ஏன் பேசாமல் வைத்துவிட்டாய்? நான் இங்கேயேதான் இருக்கிறேன். எங்கேயும் போகவில்லை. நீ எப்போ வேண்டுமானாலும் போன் செய்யலாம்” என்று வைத்துவிட்டான்.

சீதாவின் மனம் இலேசாகிவிட்டது. போனை வைத்துவிட்டாள். கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அத்தியாயம்-33

ரிசல்டுகள் வெளிவந்துவிட்டன. குழந்தைகள் பாஸ் பண்ணிவிட்டார்கள். அவர்களின் உற்சாகம் கரைப் புரண்டு ஓடியது. சீதா மைத்துனனை அழைத்து “சீனூ! உங்க அண்ணா ஆபீசில் இருக்கிறார். மோகனும், சுமதியும் காலையில் கிளம்பிப் போய்விட்டார்கள் என்று போன் பண்ணு” என்றாள்.

“ஓ… அப்படியே…” சீனூ ஆபீசுக்கு போன் செய்து மோகன், சுமதி போய்விட்ட விவரத்தைத் தெரிவித்துவிட்டு, தான் பாஸ் செய்ததை சந்தோஷமாகச் சொன்னான். அவன் வார்த்தை முடியும் முன்பே சுமித்ரா போனை இழுத்துக் கொண்டு “அண்ணா! நானும் பாஸாகிவிட்டேன். ரிசல்ட்ஸ் நாளை காலையில் பேப்பரில் வரும். என் பிரண்ட் முன்னாடியே தெரிந்து கொண்டு சொன்னாள்” என்றாள். சின்னவள் மங்காவும் தான் பாஸாகிவிட்ட விவரத்தைத் தெரிவித்தாள்.

“ஓ.கே. ஓ.கே. நான் உடனே கிளம்பி வருகிறேன். ஸ்வீட்ஸ் வாங்கிக் கொண்டு வருகிறேன். தயாராக இருங்கள்” என்றான் வித்யாபதி.

அரைமணி நேரம் கழித்து அவன் வீட்டுக்கு வந்த போது எல்லோரும் உணவு மேஜைக்கு அருகில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். வித்யாபதி ஸ்வீட் பாக்கெட்டைத் திறந்து ஒவ்வொருத்தருக்கும் “கங்கிராட்சுலேஷன்ஸ்” என்று

சொல்லிவிட்டு அவர்கள் வாயில் ஊட்டிவிட்டான். அவர்களைப் பாரக்கும் போது வித்யாபதிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

ஏற்கனவே உணவு மேஜையில் எல்லாம் எடுத்து வைக்கப் பட்டிருந்தது. சீதா எல்லோருக்கும் பரிமாறத் தொடங்கினாள். வித்யாபதி கைகால் அலம்பிக் கொண்டு வந்தான். குழந்தைகள் வந்து அமர்ந்தார்கள்.

“அண்ணா! அண்ணிக்கு மட்டும் ஸ்வீட் கொடுக்க மாட்டாயா?” என்றான் ரவி.

“நான் இல்லை. நீ தான் தரணும்” என்றான் வித்யாபதி முறுவலுடன்.

“ஊஹூம். நீயேதான் தரணும்.”

“சீனூ! எனக்கு ஸ்விட் பிடிக்கவே பிடிகாகது” எனறாள் சீதா.

“பிடிக்காது என்றாலும் விட்டு விடமாட்டோம்.” சீனூ சுமித்ராவுக்கு ஜாடைக் காட்டினான். குழந்தைகள் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து சீதாவை வித்யாபதி அருகில் இழுத்துக் கொண்டு வந்தார்கள். “அண்ணிக்கும் கொடு அண்ணா.”

வேறு வழியில்லாமல் வித்யாபதி பாக்கெட்டிலிருந்து ஸ்வீட்டை எடுத்து சீதாவின் கையில் தரப் போனான்.

“கையில் தரக்கூடாது. எங்களுக்குக் கொடுத்தாற்போலவே வாயில் கொடுக்கணும்” என்று பிடிவாதம் பிடித்தாள் சுமித்ரா. வித்யாபதி ஒரு நிமிடம் தயங்கினான். பிறகு சீதாவின் வாயில் ஊட்டினான்.

வேறுவழியின்றி சீதா சாப்பிட வேண்டியதாயிற்று.

சீதா வந்து சாப்பிட உட்கார்ந்து கொண்டாள். “ஒரு நிமிஷம் இரு அண்ணி.” சமித்ரா உள்ளே ஓடினாள். எல்லோரும் என்னவாக இருக்கும் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சமித்ரா ஓடி வந்தாள். அவள் கையில் எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற ஜார்ஜெட் புடவை இருந்தது.

“அண்ணி! உனக்கு எம்பிராய்டரி புடவை என்றால் பிடிக்கும் இல்லையா? நான் எம்பிராய்டரி செய்த புடவை இது. நான் பாஸ் செய்தால் அண்ணிக்குக் கொடுக்கணும் என்று நினைத்திருந்தேன்” என்று மடியில் வைத்தாள்.

“ஏய்? என்ன இது?” என்றாள் சீதா.

சுமித்ரா சட்டென்று சீதாவின் கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு “எப்போதும் நீதான் எங்களுக்குத் தருகிறாய். இதை மறுக்காதே ப்ளீஸ்” என்றாள்.

அதைப் பார்த்ததும் சீனூ உள்ளே போனான். அவன் கையில் மரத்தினால் ஆன பொம்மை வீடு ஒன்று இருந்தது. “அண்ணி! நான் பாஸானால் இதைத் தரணும் என்று தயார் செய்தேன்” என்றான்.

சின்னவள் மங்கா ஒயரால் பின்னிய கூடையைக் கொண்டு வந்தாள். ”அண்ணி! இது என்னுடைய பரிசு” என்றாள்.

“என்ன? உங்களுக்கு மூளை ஏதாவது கலங்கிவிட்டதா?” சீதா கோபித்துக் கொண்டாள்.

”அண்ணி! நீதானே சொன்னாய், நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் போது அந்த சந்தோஷத்திற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று” என்றாள் சுமித்ரா.

சுபத்ரா பூச்சரத்தை எடுத்து வந்து சீதாவின் தலையில் வைத்துக் கொண்டே “மறுக்காதே சீதா. வாங்கிக் கொள், மறுத்து அவர்கள் மனதை நோகடிக்காதே. குழந்தைகள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதால்தான் உன்னைப் போன்ற அண்ணி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறாள். அவர்களை விட நான் இன்னும் அதிர்ஷ்டசாலி. என் மருமகள் தங்கம்” என்று கன்னத்தை வழித்து திருஷ்ட்டி கழித்தாள்.

சீதாவின் கண்களில் திடீரென்று கண்ணீர் பொங்கி வந்தது. வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டாள்.

வித்யாபதி வியப்புடன் குழந்தைகளையும் சீதாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நிமிடத்தில் அவர்களைப் பார்க்கும் போது ஒருவரிடம் மற்றவர்களுக்கு பிரியம் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது. குழந்தைகளுக்கு சீதாவிடம் எவ்வளவு பிரியம் இருக்கிறதோ புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் எல்லோரும் ஒரு கட்சி போலவும் தான் மட்டும் தனித்து விடப்பட்டது போலவும் தோன்றியது.

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வித்யாபதி எல்லோரையும் கூர்ந்து பரிசீலித்துக் கொண்டிருந்தான்.

அன்று மாலை சுபத்ரா மகனிடம் சொன்னாள். “ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் சீதாவின் நன்றிக்கடனை நம்மால் தீர்க்க முடியாது என்று தோன்றுகிறதுப்பா. குழந்தைகளையும் என்னையும் எவ்வளவு நன்றாக கவனித்துக் கொள்கிறாள் தெரியுமா? இந்த வீட்டுக்கு வந்த பிறகு வேதனை என்றால் என்னவென்றே மறந்து போய்விட்டோம். உலகத்தில் சீதாவைப் போன்ற மருமகள்கள் இருப்பது ரொம்ப அரிது. நீ அந்த கம்பெனி விவகாரத்தில் மூழ்கி தம்பி தங்கைளைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. சீதா அன்றாடம் அவர்களுடைய படிப்பு பற்றி விசாரிப்பாள். மார்க்குகள் சரியாக வாங்கினார்களா, பள்ளிக்கூடம் ஒழுங்காக போகிறார்களா எல்லாம் அவளுடைய கண்கானிப்புதான். கேட்டால் “உங்க அண்ணா பேக்டரி விஷயங்களைப் பார்த்துக் கொள்கிறார். தம்பி, தங்கைகளின் படிப்பை அசிரத்தை செய்து விட்டேனோ என்று ஒருநாளும் அவர் வருத்தப்பட்டுக் கொள்ளக் கூடாது” என்பாள். அவர்கள் எது கேட்டாலும் வாங்கித் தருவாள். ஆனால் படிக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டாள். சினிமாவுக்குப் போகணும் என்றாலும் எல்லோரும் சேர்ந்துதான் போகணும். சாப்பாடு விஷயமும் அப்படித்தான். யாருக்காவது முடியவில்லை என்றால் மற்றவர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.”

வித்யாபதி வெளியில் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். தலை வாரிக் கொண்டிருக்கும் போது, ஷர்ட் பித்தான்கள் போட்டுக் கொண்டிருக்கும் போது தாய் சொன்ன வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தான். சீதாவுக்கு பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்த தம்பி, தங்கைகள் அவன் கண்முன்னால் நிழலாடிக் கொண்டிருந்தார்கள். சீதா தன் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தது உண்மைதான். ஆனால் அம்மா, தம்பி தங்கைகளின் வாழ்க்கையுடன் அவள் சந்தோஷம், நெருக்கம் பின்னிப் பிணைந்துவிட்டது. அவனுக்கு முதல் முறையாக உண்மை ஒன்று விளங்கினாற் போல் இருந்தது.

சீதாவை விட்டு என்றாவது போய் விடவேண்டும் என்பது அவனுடைய சங்கல்பம். தான் போக நேர்ந்தால் தன் மனிதர்களும் தன்னுடன் வராமல் இருக்க முடியாது. அப்பொழுது சீதாவுடன் பிணைந்திருக்கும் இந்த பந்தம் என்னவாகும்? அவனுக்கு ரொம்ப குழப்பமாக, தலைகால் புரியாதது போல் இருந்தது. சீதா என்றால் அம்மாவுக்கு உயிர். சுமித்ரா, சீனூ, மங்காவிற்கு எல்லையில்லாத பிரியம். எது எப்படி இருந்தாலும் சீதா குழந்தைகளை ஒரு வழிக்குக் கொண்டு வந்து விட்டாள். அது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

சீதாவிடம் ஏதாவது ஒரு நல்ல வார்த்தை சொல்லுவது தன்னுடைய கடமையாக நினைத்தான். அவன் ஆபீசுக்குப் போகும் முன் ஹாலில் யாரிடமோ போனில் பேசிவிட்டு அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த சீதாவைப் பார்த்துக் கொண்டே “சீதா!” என்று அழைத்தான். சீதா நின்றுவிட்டாள். அவன் வாயிலிருந்து தன் பெயரைக் கேட்டதும் சொல்ல முடியாத சந்தோஷம் ஏற்பட்டது. சட்டென்று ஓடிப்போய் அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொள்ள வேண்டும் என்ற உவகை ஏற்பட்டது. ஆனால் அதற்குள் ரோஷம் தலை தூக்கியத. என்ன யோசிக்கிறாள் அவள்? தன்னிடம் கொஞ்சமும் பிரியமும், ஆதரவும் இல்லாத நபரின் நெருக்கத்தை விரும்புகிறாள். சீ.. சீ.. தன்னுடைய தன்மானமும், ரோஷமும் எங்கே போய்விட்டன? சீதா இந்தப் பக்கம் திரும்பினாள். அந்த முகத்தில் எண்ணங்களின் கொந்தளிப்பு அடங்கி வெறுமையாய் இருந்தது.

“சீதா! நான் உனக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான்.

சீதா நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் மெலிதாக வியப்பு தென்பட்டது. ‘எனக்கா? எதற்கு நன்றி?’ என்ற கேள்வி தொக்கி நின்றது.

“குழந்தைகள் எல்லோரும் பாஸாகிவிட்டார்கள். அவர்கள் படிப்பில் அத்தனை கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் நீ தான் என்று அம்மா சொன்னாள். தாங்க்ஸ்.”

சீதாவின் முகம் சிவந்துவிட்டது. கண்களில் கோபம் புஸ்ஸென்று சீறியது. கோபத்தை அடக்கிக் கொண்ட குரலில் சொன்னாள். “நீங்க ஒன்றும் எனக்கு தாங்க்ஸ் சொல்லத் தேவையில்லை. நீங்க பேக்டரியைப் பார்த்துக்கிறீங்க. உங்களுக்கு அவர்களை கவனிக்க நேரம் இருக்காது என்று எனக்குத் தெரியும். அதான் அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். அதனால் எங்க பேக்டரியைப் பார்த்துக்கொள்வதற்கு நான் உங்களுக்கோ, உங்க தம்பி தங்கைகளின் படிப்பபைப் பார்த்துக் கொண்டதற்கு நீங்க எனக்கோ நன்றிக்கடன் பட வேண்டிய தேவை நமக்கிடையே இல்லை என்று நினைக்கிறேன்.”

வித்யாபதி துணுக்குற்றாற்போல் பார்த்தான்.

‘”அது மட்டுமே இல்லை. உங்க அம்மாவிடமும் அம்மாவிடமும் ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். என் சொத்திலிருந்து நான் அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை. உங்க மகன் கொடுக்கும் பணத்திலிருந்துதான் அவர்களுடைய செலவுகளை சமாளிக்கிறேன் என்று. அவள் பெரியவள். பழங்காலத்து மனுஷி. தன்னையும், குழந்தைகளையும நான்தான் தாங்குவதாக நினைத்துக் கொண்டு பூரித்துப் போகிறாள். அவர்கள் எல்லோரும் என்னைச் சேர்ந்தவர்கள் என்றும், நான் அவர்களைச் சேர்ந்தவள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும், என் இடம் எங்கே என்று. நான் என்னுடைய கடமையைச் செய்கிறேன். அதைவிட வேறு ஒன்றும் இல்லை. என் வாழ்க்கையே ஒரு நாடகமாகிவிட்டது. ஒரு விஷயம் என்னவென்றால் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு தங்களுடைய போர்ஷன் எப்போ முடியும் என்று தெரிந்திருக்கும். எனக்குத்தான் அது எப்போ என்று தெரியவில்லை.” சீதா பதிலுக்காக காத்திருக்காமல் அங்கிருந்து போய்விட்டாள்.

வித்யாபதி ரொம்ப நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவன் மனதில் போராட்டம் தொடங்கி விட்டிருந்தது. சீதா தான் எதிர்பார்த்ததை விட தொலைவிலேயே இருந்து வருகிறாள். ஆனால் அப்படி இருப்பது அவளுடைய விருப்பத்தின் பெயரில் அல்ல. அவனுக்கு இஷ்டம் என்பதால் அந்தக் காரியத்தைச் செய்கிறாள் என்று தெளிவாகப் புரிந்தது. வித்யாபதி சுபாவத்திலேயே யாருக்கும் வேதனையைத் தரக் கூடியவன் இல்லை. தன் காரணமாக யாருக்காவது துன்பம் ஏற்பட்டால் அவன் மனம் தவியாய் தவிக்கும். இப்பொழுதும் அதுதான் நடந்து கொண்டிருந்தது. சீதாவைத் துன்புறுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை. இதற்கு பரிகாரம் ஒன்றே ஒன்றுதான். தான் தொலைவிற்குப் போய் விட வேண்டும். ஆனால் சீதா போக விட மாட்டாள்.

அத்தியாயம்-34

இந்திராவின் பெயரில் ஹவுசிங்க போர்ட் வீடு கிடைத்துவிட்டது. இந்திரா நல்ல நாள் பார்த்து ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், எளிமையாக புதுவீட்டிற்குக் குடி போகத் திட்டமிட்டிருந்தாள். ஆனால் ஆபீசில் கூட வேலை பார்ப்பவர்கள் சும்மா இருக்கவில்லை. கிருகப்பிரவேசத்தை ரொம்ப கிராண்டாக நடத்தித்தான் ஆகணும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். பிரசாத் இந்த விஷயத்தில் ரொம்ப தீவிரமாக இருந்தான். “இந்திரா! கிரகப்பரவேசம் யாருக்காக இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும். அந்த விழா வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக என்றும் நிலைத்திருக்க வேண்டும்” என்றான்.

இந்திராவின் அக்கா பவானியும் கிருகப்பிரவேசம் ஆடம்பரமாகத்தான் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினாள். அதுநாள் வரையில் சிடுசிடு என்று இருந்தவள் இப்பொழுது திடீரென்று இந்திராவிடம் பாசத்தைப் பொழியத் தொடங்கினாள். ‘வயதில் பெரியவள். உன் நல்லது கெட்டதைப் பற்றி உன்னைவிட அதிகமாக யோசிப்பதால் சில சமயம் கண்டிப்பாக நடந்து கொள்கிறென். என்னைவிட்டால் உனக்கு யார் எடுத்துச் சொல்லப் போகிறார்கள்? இந்த வீடு கிடைத்தது உன் அதிர்ஷ்டம் இல்லை. குழந்தைகளின் அதிர்ஷ்டம். அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் தெரியுமா? பள்ளிக்கூடம் ரொம்ப அருகில் இருக்கிறது. மதியம் சாப்பிட வந்து விடலாம். அத்தானுக்கும் ஆபீசு கிட்டேதான் இருக்கு. நம் கஷ்டங்கள் மலையேறிவிட்டன” என்று கடவுளுக்குக் கும்பிடு போட்டாள்.

இந்திரா பதில் பேசவில்லை. பவானி பிரசாதின் துணையோடு தானே கிரகப்பிரவேசத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டாள். அழைப்பிதழ்களை அச்சடித்தார்கள். அதில் இந்திரா அக்காவின் பெயரும், அவள் கணவர் வாசுவின் பெயரும் இருந்தன. “இந்திராவின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு உங்களை அழைக்கிறோம்” என்று அழைப்பிதழ் அவர்கள் பெயரில் இருந்தது.

இந்த வீடு இந்திராவிற்கு யார் மூலமாக வந்ததென்று பிரசாத் சொல்லி பவானிக்குத் தெரியவந்தது. உடனே சீதாவிடம் எல்லையில்லாத அபிமானம் ஏற்பட்டு விட்டது. கூப்பிடப் போகிறவர்களின் பட்டியலில் சீதாவின் பெயரை முதலாவதாக எழுத வைத்தாள். “ரொம்ப புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதாக நினைக்காதே. இந்திராவுக்குத் தெரிந்தால் எரிந்து விழுவாள்” என்றான் பவானியின் கணவன் வாசு.

“சும்மாயிருங்கள். உங்களுக்கு ஒன்றும் தெரியாது. நான் சீதாவிடம் கொஞ்சம் சுவாதீனத்துடன் பழகத்தான் முடிவு செய்திருக்கிறேன். நாம் அவர்கள் வீட்டுக்கும், நம் வீட்டுக்கு அவர்களும் வந்து போய்க் கொண்டிருந்தால் கணவனைக் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளச் சொல்லி சீதாவுக்கு நான் அறிவுரை சொல்ல முடியும்” என்றாள் பவானி.

பவானி, வாசுவும் சேர்ந்து பிரசாதுடன் சீதாவை அழைப்பதற்காக போயிருந்தார்கள். பவானியை சீதா ஏற்கனவே ஒரு முறை பார்த்திருக்கிறாள். அவளிடம் இந்திராவின் ஜாடை நன்றாகவே தெரிந்தது. பிரசாத் அறிமுகம் செய்து வைக்கும் முன்பே “வாங்க. சௌக்கியம்தானே?” என்று வரவேற்றாள். “உட்காருங்கள்” என்று உபசாரம் செய்தாள்.

பவானி சீதாவின் நெற்றியில் குங்குமத்தை இட்டுவிட்டு அழைப்பிதழைக் கொடுத்தாள். “எங்களுடைய இந்த சந்தோஷத்திற்குக் காரணம் நீங்கதான். என் தங்கை இந்திரா இனி தினந்தோறும் வீட்டில் விளக்கை ஏற்றிவிட்டு உங்களைத்தான் நினைத்துக் கொள்ளணும். உங்களுடைய உதவி மட்டும் இல்லையென்றால் வீடு எங்களுக்குக் கிடைத்திருக்காது” என்றாள், தடபுடலாக நன்றியைத் தெரிவித்தபடி.

“நான் என்ன செய்துவிட்டேன்?” என்றாள் சீதா. அவர்களை உட்காரச் சொல்லி காபி வழங்கி உபசரித்தாள்.

‘அத்தை!’ என்று குரல் கொடுத்து சுபத்ரா வந்ததும் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள். சுபத்ரா அவர்களுடன் பேசுவதற்கு அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அதற்குள் அங்கே சுமித்ரா, சீனூ, மங்கா வந்தார்கள்.

“அண்ணி! சினிமாவிற்கு டிக்கெட்ஸ் ரிசர்வ் செய்வதாக சொன்னீங்களே?” என்றான் சீனூ.

சீதா அவர்களை உட்காரச் சொல்லி பவானிக்கு அறிமுகம் செய்து வைத்தாள். “பவானி அக்காவுக்கு எங்களை ஏற்கனவே தெரியும்” என்றாள் சுமித்ரா.

பவானியும், வாசுவும் கண்ணிமைக்கவும் மறந்து போனவர்களாக சீதாவின் வீட்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நீங்க கட்டாயம் வரணும். வராவிட்டால் என்மீது ஆணை” என்றாள் பவானி. கண்டிப்பாக வருவதாக சீதாவிடம் வாக்கு பெற்றுக் கொண்ட பிறகுதான் பவானி கிளம்ப முற்பட்டாள்.

“சீதா வருவதாகச் சொல்லிவிட்டால் கண்டிப்பாக வருவாள். வாக்குத் தவறவே மாட்டாள்” என்றான் பிரசாத்.

மூவரும் கிளம்பும் போது சீதா டிரைவரை அழைத்து அவர்களை இறக்கிவிட்டு வரச்சொல்லி ஆணையிட்டாள்.

வீட்டுக்கு வந்ததும் வாசு சொன்னான். “என்ன மரியாதை? என்ன மரியாதை? சீதா ரொம்ப நல்லப் பெண்ணாக இருக்கிறாள்” என்று பாராட்டினான்.

“பணம் இருப்பவர்கள் எது செய்தாலும் பெருமையாகத்தான் இருக்கும். என் தங்கை இந்திரா மட்டும் நல்லவள் இல்லையா? யாருக்காவது ஏதாவது பிரச்னை வந்தால் அவள் உதவி செய்வது போல் யாராலும் செய்ய முடியாது” என்றாள் பவானி.

கணவன் சீதாவின் புகழ் பாடுவதைக் கேட்ட போது பவானிக்கு எரிச்சல் மண்டியது. சீதா நல்லப் பெண்தான். அதை பவானியும் மறுக்கவில்லை. ஆனால் கணவன் புகழ்பாடும் அளவுக்கு ரொம்ப அபூர்வம் ஒன்றுமில்லை. அவர்கள் மரியாதைகள் செய்து தங்களுடைய கௌரவத்தை அதிகப்படுத்திக் கொள்வார்கள். அது ஒரு யுக்தி என்பது பவானியின் எண்ணம்.

‘இத்தனை நல்ல மனைவியை வைத்துக் கொண்டு அந்த வித்யாபதி இந்திராவின் பின்னால் சுற்றுவானோன்? கொஞ்சம் கூட மூளை இல்லை அவனுக்கு’ என்று நினைத்துக் கொண்டான் வாசு.

சீதாவை போய் அழைத்துவிட்டு வந்த செய்தியைச் சொன்னதும் இந்திராவுக்குக் கோபம் வந்துவிட்டது. “எதற்காக அழைத்தாய்? என்னிடம் ஒரு வார்த்தையாவது சொன்னாயா?” என்றாள் கோபமாக.

“ரொம்ப அழகாகத்தான் இருக்கு. இதென்ன பெரிய விஷயமா உன்னிடம் கேட்டு செய்வதற்கு? கூப்பிடவில்லை என்றால்தான் நீ கோபித்துக் கொள்ளணும். என்னவோ நினைத்தேன், ஆனால் அந்த சீதா எவ்வளவு நல்லவள் தெரியுமா?” என்று தொடங்கி தான் போனது முதல் திரும்பி வந்தவரையில் நடந்ததை எல்லாம் விலாவாரியாகச் சொன்னாள்.

“சரி, விடு” என்றாள் இந்திரா எரிச்சலுடன்.

சீதா எல்லா மருமகள்களைப் போல் மாமியாரிடம் சண்டை போட மாட்டாள். அவர்களுடன் ஒற்றுமையாய், நெருக்கமாக இருப்பாள். தான் எந்த விதமாக வித்யாபதியின் வாழ்க்கையுடன் ஒன்றிப் போக வேண்டும் என்று கனவு கண்டாளோ அந்த அதிர்ஷ்டம் சீதாவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்திராவுக்கு எப்படியோ இருந்தது. தன் தாயை, கூடப் பிறந்தவர்களை நல்ல விதமாக பார்த்துக் கொண்டிருக்கும் சீதாவை நேசிக்காமல் வித்யாபதி எப்படி இருப்பான்? அவன் சுபாவம் தனக்கு நன்றாகவே தெரியும். யாராவது தனக்கு கடுகளவுக்கு செய்தாலும் மலையளவுக்கு செய்ததாக நினைத்துக் கொள்வான். நன்றியைக் காட்டுவான்.

வீடு தன் பெயரில்தான் இருக்கிறது. பணம் கட்டியதும் அவள்தான். ஆனால் சந்தோஷமோ, சந்தடியோ எல்லாமே பவானி மற்றும் குழந்தைகளுடையதாகத்தான் இருந்தது. எல்லோரும் அது பவானிக்குக் கிடைத்த வீடு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திரா பெருமூச்சு விட்டுக் கொண்டாள். பவானி இனிமேல் வித்யாபதியை ஒன்றும் சொல்ல முடியாது. இந்த வீடு தனக்கு என்று இருந்தால் இனி மேலாவது தானும் வித்யாபதியும் சேர்ந்து இருக்கலாம்.

இந்திராவின் பிடிவாதம் அதிகரித்தது. வித்யாபதிக்கு கல்யாணம் ஆனால் மட்டும் என்ன? அவன் மனம் தனக்கு மட்டும்தான் சொந்தம். தான் அவன் திருமணத்தைப் பற்றி அதிகமாக யோசித்துக் குழம்பாமல் இருப்பதுதான் சரி என்று நினைத்தாள்.

இந்திரா முடிவு செய்து கொண்ட நாழிகூட ஆகவில்லை, அந்த முடிவுகள் சிதறி சின்னாபின்னம் ஆவதற்கு, அவன் திருமணமானவன் என்ற உண்மையை ஜீரணித்துக் கொள்வதற்கு. திருமணம் முடிந்த அவன் வாழ்க்கையில் எந்த விதத்தில் தன்னுடைய உரிமையை நிலைநாட்டுவது என்று இந்திரா பல விதமாக யோசித்துக் கொண்டிருந்தாள். தனக்கு வேண்டியது வித்யாபதி மட்டும்தான். உலகத்திற்காக அவனை விட்டுக் கொடுக்க முடியாது என்று திரும்பத் திரும்ப நினைக்கத் தொடங்கினாள்.

அத்தியாயம்-35

இந்திராவின் வீட்டு கிருகப்பிரவேசம் நினைத்ததை விட கோலாகலமாக நடந்தேறியது. அழைத்தவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். வந்தவர்களை பவானியும் அவள் கணவனும் வரவேற்று உபசாரம் செய்தார்கள். பிரசாதும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டே பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்தான்.

சீதா, வித்யாபதி வந்தார்கள். சீதாவுடன் சேர்ந்து வந்த வித்யாபதியைப் பார்த்ததும் இந்திராவின் மனதில் இருந்த சந்தோஷம் ஆவியாகிவிட்டது. சீதா இந்திராவுடன் கலகலப்பாக பேசினாள். உடல்நலத்தைப் பற்றி விசாரித்தாள். வெள்ளி முலாம் பூசிய லக்ஷ்மி சரஸ்வதி படங்களை பரிசாகக் கொடுத்தாள். அவற்றைப் பார்த்த எல்லோரம் நன்றாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்கள்.

பவானியும், வாசுவும் சீதாவை தேவைக்கு அதிகமாகவே உபசரித்துக் கொண்டிருந்தார்கள். பவானி அடிக்கடி “இந்த வீடு கிடைத்தது சீதாவின் தயவுதான்” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பட்டுப்புடவையை உடுத்திக் கொண்டு, தலை நிறைய பூவைச் சூடிக் கொண்டு, கழுத்தில் முத்துச் சரத்துடன் நாற்காலியில் அமர்ந்திருந்த சீதா அங்கே எல்லோரின் பார்வையையும் காந்தம் போல் ஈர்த்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாததுபோல், கணவனின் அன்பைக்கூட அதிகாரத்துடன் பெறக்கூடிய இல்லாள் போல் மிடுக்காக உட்கார்ந்திருந்தாள். வித்யாபதி முடிந்த வரையில் சீதாவை விட்டு தொலைவில் இருப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் வாசு அடிக்கடி அவனை அழைத்துக் கொண்டு சீதாவின் பக்கத்திலிருந்து நகரவிடாமல் செய்து கொண்டிருந்தான். வித்யாபதிக்கு அது ரொம்ப இடைஞ்சலாக இருந்தது.

தொலைவில் இந்திரா தனியாக நின்றபடி விருந்தாளிகளை உபசரித்துக் கொண்டிருந்தாள். இந்திராவின் முகத்தில் உற்சாகமே இருக்கவில்லை. அக்கா வற்புறுத்தியதால் காலையில் தலைக்குக் குளித்துவிட்டு பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். இந்த வீட்டுக்காக தானும், வித்யாபதியும் எத்தனை கனவுகளைக் கண்டிருப்பார்கள்? அன்றைக்கு அப்ளிகேஷன் பாரத்தை நிரப்பும் போது, அவன் சோபாவில் பின்னால் சாய்ந்துகொண்டு கால்மீது கால் போட்டு அமர்ந்திருந்தான். தான் அவன் மடியில் சாய்ந்துகொண்டு அப்ளிகேஷன் பாரத்தில் கையொப்பமிட்டாள். போட்டு முடித்த பிறகும் அவள் எழுந்திருக்கவில்லை.

“இந்தூ! என்ன யோசிக்கிறாய்?” என்று அவன் கேட்ட பொழுது “இந்த காகிதத்தின் மீது எனக்கு வீடு தெரிகிறது. இதோ இது வராண்டா, இது நம் அறை, இது குழந்தைகளின் அறை, இங்கே சாப்பாட்டு மேஜை” என்று விரலால் கோடிட்டுக் காண்பித்தாள்.

“அந்த நாள் என்றுதான் வருமோ?” என்றான் அவன் விரலால் அவள் தலையை வருடிக்கொண்டே.

“சீக்கிரமாகவே வரும்” என்றாள் இந்திரா ஆழ்ந்த நம்பிக்கையுடன். “அப்போ முதலில் திருமணம். பிறகு கிரகப்பிரவேசம். இருவரும் அருகருகில் நின்றுகொண்டு எல்லோரையும் வரவேற்போம். வருகிறவர்கள் நம்மைப் பார்த்து என்ன சொல்வார்கள் தெரியுமா?”

“என்ன சொல்லுவார்கள்?” முறுவலுடன் கேட்டான்.

“ஜோடிப்பொருத்தம் பிரமாதம் என்பார்கள்.”

அப்படியா என்பது போல் பார்த்தான். இந்திரா வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாலும் அவள் மனம் மட்டும் கடந்த கால நினைவுகளைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது. கடவுள் தன்னுடைய கனவுகளைக் கண்டு மேலிருந்து சிரிக்கிறார் போலும். “பைத்தியமே! நீ கனவுகளைக் கண்டாய். அவை வெறும் கனவாகவே இருந்து விடும்” என்று.

இந்த உலகத்தில் சிலருடைய ஜாதகங்கள் அப்படித்தான். விரும்பியது எதுவும் நடக்காது. எண்ணங்களுக்கும் வாழ்க்கைக்கும் ஒத்துப் போகாது. வாழ்க்கையின் பாதை வேறு. மனம் விரும்பும் பாதை வேறு. எந்தச் சில அதிர்ஷ்டசாலிகளுக்கோ விரும்பியது அப்படியே நடக்கும். இந்திராவின் பார்வை ஒரு நிமிடம் சீதாவின் மீது நிலைத்தது. பொறாமைப்படக் கூடாது என்று நினைத்தாலும் சீதாவின் அதிர்ஷ்டத்தை நினைக்கத் தோன்றியது. சீதாவால் எப்படி இங்கே வர முடிந்தது? எல்லோருடனும் சிரித்துப் பேச அவளால் எப்படி முடிகிறது? அதுதான் இந்திராவுக்கு வியப்பாக இருந்தது.

சீதாவை, வித்யாபதியை ஜோடியாய் பார்க்கப் பார்க்க அவள் மனம் பாரமாகிவிட்டது. தான் நினைத்தது என்ன? நடக்கிறது என்ன? யாருக்கு வேண்டும் இந்த வீடு? இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் எதற்காக? இந்திராவுக்கு அங்கிருந்த தொலைவிற்கு ஓடிப் போக வேண்டும் என்று தோன்றியது.

மேனேஜர் சொல்லிக் கொண்டிருந்தார். “இந்திரா! உனக்கு வேலை இருக்கு. வீடும் அமைந்துவிட்டது. இனி வாழ்க்கையைச் சொந்தமாக்கிக் கொள்ள ஒரு புருஷன்தான் வேண்டும். எங்களுக்கு கல்யாண விருந்து எப்போ தரப் போகிறாய்?”

இந்திரா பதில் சொல்லவில்லை.

“எல்லோரும் முதலில் கல்யாணம் செய்து கொண்டு அப்புறமாக வீடு அமைத்துக் கொள்வார்கள். நம் இந்திரா மேடம் முதலில் கிரகப்பிரவேசம் செய்திருக்காங்க. இந்தக் காலத்து பெண்கள் இலலையா. முதலில் வாழ்க்கையில் வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து கொண்ட பிறகு கணவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்” என்றான் பிரசாத். எல்லோரும் சிரித்தார்கள்.

“நீ சொன்னதும் சரிதான்” என்றார் அவர்.

“ஆமாம், பெண்களின் வாழ்க்கை முன்னைப் போல் இல்லையே. இந்தக் காலத்துப் பெண்கள் ஆண்களைப் போல் வேலைக்கும் போய்க் கொண்டு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. அப்படிப் பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளணும் என்றால் ஆணும் சில விஷயங்களில் சமாதானத்திற்கு வரணும். அவனுக்கு பொருளாதார ரீதியான பாரம் பாதியாக குறையும் போது வீட்டு வேலை பளுவையும் பகிர்ந்து கொள்ள முன் வரணும்” என்றார் ஒருவர்.

பந்திச் சாப்பாடு முடிந்தது. பவானியும் வாசுவும் சேர்ந்து கட்டாயப்படுத்தி சீதாவையும், வித்யாபதியையும் அருகருகில் உட்கார வைத்தார்கள். பரிமாறும் போது இந்திராவுக்குத் துணையாக பிரசாதும் பரிமாறினான்.

“என்னப்பா? இவன் போக்கைப் பார்த்தால் இந்திராவைச் சொந்தமாக்கிக் கொள்வான் போல் தெரிகிறதே?” யாரோ சொன்னார்கள். அந்த வார்த்தைகள் சீதாவுக்கும் வித்யாபதிக்கும் தெளிவாக கேட்டன. சீதா கடைக்கண்ணால் அவன் பக்கம் பார்த்தாள். அவன் முகத்தில் எந்த மாற்றமும் தென்படவில்லை.

இந்திரா தொலைவில் நின்று விட்டாள். இவ்விருவருக்கும் பரிமாற தானாக முன்வரவில்லை. வாசுவும், பவானியும் விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

“நீங்களாவது சொல்லுங்க. உங்க மனைவி சரியாக சாப்பிட மாட்டேங்கிறாள். சங்கோஜப்படுகிறாள்.” என்றான் வாசு.

“அந்த மாதிரி சொல்லுவதும், கேட்டுக் கொள்வதும் எங்களுக்கு இடையில் பழக்கமில்லை” என்றாள் சீதா.

“அந்யோந்யமாக இருந்து, இருவருடைய கருத்தும் ஒன்றாக இருந்துவிட்டால் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?’ என்றாள் ஒரு அம்மாள்.

வித்யாபதி பந்தியிலிருந்து சீக்கிரமாக எழுந்து கொண்டான். சாப்பாடு முடிந்ததும் எல்லோரும் கும்பல் சேர்ந்து சேர்ந்து கொண்டு கொண்டு அரட்டை அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்திரா பூஜை அறையில் வெற்றிலைப் பாக்கை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். வித்யாபதி அங்கே வந்தான். இந்திரா பார்க்காதது போல் சும்மாயிருந்தாள்.

“சீக்கிரமாக சாப்பிடு இந்தூ” என்றான். இந்திரா மௌனமாக இருந்தாள். “உன்னைத்தான்” என்றான் அவன்.

“எனக்கு … எனக்கு இன்று பசிக்கத்தான் செய்யுமா? சந்தோஷத்தால் வயிறு நிரம்பிவிட்டது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்” என்றாள்.

“அப்படிச் சொல்லாதே இந்தூ! ப்ளீஸ்.”

“வேறு என்ன சொல்வது? இந்த வீடு வேண்டும் என்று நான் ஏன்

ஆசைப்பட்டேனோ நீ மறந்து விட்டாய். என்னால் மறக்க முடியவில்லை. இந்த வீட்டை நான் எதற்காக வாங்கினேன்?” இந்திரா தலையைச் சுவரில் சாய்த்து, துக்கத்தை அடக்கிக் கொள்வது போல் இதழ்களை இறுக்கினாள்.

“இந்தூ” அவன் அருகில் வரப் போனான்.

“நில். அருகில் வராதே. உன்னைப் பார்த்தால் எனக்கு அருவருப்பாக இருக்கு. அக்கா உங்களை மரியாதைக்காக அழைத்தாள் என்று வைத்துக் கொண்டாலும் நீ எதற்காக வந்தாய்? என் மனைவிதான் இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தாள் என்று பெருமையடித்துக் கொள்ளவா? இந்த வீட்டுக்காக ஃபாரத்தை நிரப்பும் போது நாம் என்ன நினைத்துக் கொண்டோம்? இப்போ நடந்தது என்ன?” இந்திரா திடீரென்று அழத் தொடங்கினாள்.

“இந்தூ”

“என் கனவுதான் எத்தனை பயங்கரமாக பொய்த்துவிட்டது? நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று எனக்கு இந்த தண்டனை? நீ என்னிடம் சொன்னது எல்லாம் பொய்தான். சீதாவிடம் உனக்கு உண்மையிலேயே அன்பு இருக்கிறது. உன் அன்பில் அந்தப் பெண்ணுக்கும் நம்பிக்கை இருகிறது. அதனால்தான் இப்படித் தைரியமாக என் முன்னால் வர முடிந்தது. நான்தான் வடிகட்டின முட்டாளாக இருக்கிறேன். என்னுடன் உறவைத் துண்டித்துக் கொள்ளவும் மாட்டாய். என்னிடமிருந்து விலகியும் இருக்க மாட்டாய். என்னை சித்ரவதை செய்கிறாய். போ … போய்விடு. நாமிருவரும் சந்தித்துக் கொள்வது இதுதான் கடைசி.” இந்திரா தலையை சுவற்றில் மோதிக் கொண்டிருக்கையில் சட்டென்று வித்யாபதி வந்து அவளைப் பிடித்துக் கொண்டான். “இந்தூ… இந்தூ… ஆவேசப்படாதே. ப்ளீஸ்.” அவன் இந்திராவை மார்போடு அணைத்துக் கொண்டு தேற்றத் தொடங்கினான். இந்திரா திடீரென்று அவன் கைகளுக்கு இடையில் சிறு குழந்தையாய்த் துவண்டு போய் அழத் தொடங்கினாள்.

அதற்குள் பவானி, சீதா அங்கே வந்தார்கள்.

“இந்தூ! எங்கே இருக்கிறாய்? சீதா கிளம்புகிறாளாம்” என்று சொல்லிக் கொண்டிருந்த பவானியின் கண்கள் திடீரென்று நிலைகுத்தி நின்று விட்டன. அங்கே பூஜை அறையில் வித்யாபதி இந்திராவை அணைத்துக் கொண்டிருப்பது போல் நின்றிருந்தான். சீதாவும் சிலையாக அப்படியே நின்றுவிட்டாள். சீதாவைப் பார்த்ததும் அவன் மெதுவாக இந்திராவை விட்டு விலகி நின்றான்.

ஒரு வினாடி சீதாவின் பார்வையும், அவன் பார்வையும் பின்னி பிணைந்தாற்போல் நிலைத்து விட்டன. பவானி தடுமாறினாள். பதற்றமடைந்தாள். “நான்… நீங்கள்… வெற்றிலைப்பாக்கிற்காக…” என்றாள்.

“இங்கே இருக்கு. எடுத்துக்கொள்.” இந்திரா மெதுவாக முணுமுணுத்தாள். பவானி உள்ளே சென்று வெற்றிலைப் பாக்கு தட்டை எடுத்துக் கொண்டே இந்திராவையும்

வித்யாபதியையும் ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றாள்.

பவானி ஹாலுக்குத் திரும்பி வந்த போது சீதா அங்கே இல்லை. பிரசாதிடம் கேட்டால் கிளம்பிப் போய் விட்டதாகத் தெரிவித்தான். பவானி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

– தொடரும்…

– பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனராணி அவர்களின் படைப்பு “Sithapathi” தமிழில் “சீதா(வின்)பதி” என்ற தலைப்பில்.

– சீதா(வின்)பதி (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன், முதற்பதிப்பு: 2015, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *