கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 2,716 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25

அத்தியாயம்-16

கடியாரத்தில் இரவு பத்து மணியடித்தது.

சீதா படுக்கையறையில் உட்கார்ந்திருந்தாள். வீட்டில் எல்லோரும் உறங்கி விட்டார்கள். எங்கும் நிசப்தமாக இருந்தது. வித்யாபதி இன்னும் வீடு திரும்பவில்லை. சீதா அவனுக்காக எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஒரு வாரமாக அவன் வீட்டுக்கு வருவதற்கு இரவு ரொம்ப நேரமாகிக் கொண்டிருந்தது.

இந்திராவுக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டதில் அவன் ரொம்ப கவலைப் பட்டுக் கொண்டிருந்தான். ரத்னாவின் உதவியுடன் அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தான். முதல்நாள் அவன் ஆபீசிலிருந்து சீக்கிரமாக கிளம்பிவிட்டான். இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்தான். சீதா விழித்துக் கொண்டுதான் இருந்தாள். “இப்பொழுதுதான் வீட்டுக்கு வருவதா? உங்களுக்காகக் காத்திருப்பதற்கு எனக்கு எவ்வளவு சம்பளம் தர்றீங்க?” என்று கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை. அவளுடைய பேச்சை காதில் வாங்காதவன் போல் அறைக்குள் போய்விட்டான்.

அரைமணிக்குப் பிறகு சீதா கதவிற்கு அருகில் வந்து நின்றாள். “நான் இன்னும் எத்தனை நேரம்தான் காத்திருப்பது? என்ன செய்து விட்டேன் என்று எனக்கு இந்த தண்டனை?”

அவன் அறையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். “சீதா! தயவு செய்து இன்றைக்கு மட்டும் என்னை எதுவும் சொல்லாதே.” அந்தக் குரலில் விவரிக்க முடியாத வேதனை இருந்தது. இயலாமை இருந்தது.

“இன்று மட்டுமா? உங்களைச் சொல்லும் அதிகாரம் என்றைக்குத்தான் எனக்கு இருக்கிறது? எழுந்து கொண்டு சாப்பிட வாங்க.”

“எனக்குப் பசிக்கவில்லை.”

“உங்களுக்காக காத்திருந்து நானும் சாப்பிடவில்லை.”

“எனக்காகக் காத்திருக்க வேண்டாம்னு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்?”

“எத்தனை முறை சொன்னாலும் என் மூளைக்கு ஏறவில்லையே? உங்களுக்குப் பசியில்லை என்றால் சொல்லுங்கள். நானும் போய் படுத்துக் கொள்கிறேன். நான் மதியம் டிபன்கூட சாப்பிடவில்லை.”

தனக்காக சீதா சாப்பிடாமல் இருப்பது அவனுக்கு சரி என்று தோன்றவில்லை. மௌனமாக எழுந்து வந்தான். அவன் கைகால் கழுவிக் கொண்டு உடை மாற்றிக் கொண்டு வருவதற்குள் சீதா பரிமாறி வைத்திருந்தாள். சாதம் சூடாக இருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக சீதா சமைக்கமாட்டாள். அந்த அவசியமே இருக்காது. சமையல்காரன் இருக்கிறான். அவனுக்காக அவ்வப்பொழுது இப்படி சமையல் செய்கிறாள். அவளுக்கு சமைக்கத் தெரியும் என்ற விஷயம் அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. சந்தோஷமாகவும் இருந்தது. பெண்களுக்கு ஓரளவுக்காவது சமைக்கத் தெரிந்திருக்கணும் என்பது அவனுடைய எண்ணம்.

சீதா சில பழக்க வழக்கங்ளால் அவனைக் கட்டுப்படுத்தத் தொடங்கினாள். இரவு அவன் திரும்பும் வரையில் சாப்பிடாமல் காத்திருந்தாள். அவன் கூட வந்தால் தவிர சினிமாவுக்கோ, உறவினர் வீட்டுக்கோ போக மாட்டாள். காலையில் ஆபீசுக்குப் போகும் போது தாய் தினமும் சொல்லிக் கொண்டிருப்பாள். “மாலையில் சீக்கிரமாக வீட்டுக்கு வா. மருமகள் உனக்காக காத்திருப்பாள்” என்பாள்.

தன்னுடைய நல்ல குணத்தாலும், நயமான பேச்சாலும் சீதா சுபத்ராவையும், குழந்தைகளையும் தன்வசப்படுத்திக் கொண்டு விட்டாள். மற்ற பெண்களைப் போல் கணவன் மீது இருக்கும் கோபத்தால் மாமியாரிடம் சுணக்கம் காட்டவில்லை. இந்த வேண்டாத சுமை தனக்கெதற்கு என்று வருத்தப்பட்டுக் கொள்ளவில்லை. மாமியார் வெறும் அப்பாவி. வித்யாபதி ரொம்ப நல்லவன். அவனுடைய நல்ல குணத்திற்கு தற்சமயம் கிரகணம் பிடித்திருக்கிறது. அந்த இருள் என்றாவது நீங்கக் கூடும் என்பது சீதாவின் நம்பிக்கை.

அத்தியாயம்-17

சிறுவயது முதல் சுந்தரியின் அரவணைப்பில் வளர்ந்த சீதாவுக்கு சாமியார்களிடமும், ஜாதகத்திலும், கிரகபலத்திலும் ரொம்ப நம்பிக்கை இருந்தது. அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் சுவாமிகள் ஒருவர் இருந்தார். இந்த முறையும் அவர் இமயமலையிருந்து வந்த போது சுவாமிநாதய்யர் வீட்டில்தான் தங்கினார். பெற்றோர் இல்லாவிட்டாலும் சீதா எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தாள். அவர் வந்தால் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று பலர் வந்து தங்களுடைய பிரச்னைகளை சொல்லி தீர்வு பெற்றுக் கொண்டு போவார்கள்.

சீதா ஒரு நாள் மாலையில் அவரிடம் சென்று உட்கார்ந்தாள். வாழ்க்கையைப் பற்றி அவர் பல விஷயங்களை சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

சீதா ரொம்ப நாளாக தன் மனதில் இருக்கும் சந்தேகத்தை அவரிடம் கேட்டுவிட்டாள். “சுவாமிஜீ! நமக்கு ஒரு நபரிடம் ரொம்ப பிரியம் இருக்கிறது. ஆனால் அந்த நபருக்கு நம்மிடம் கொஞ்சம் கூட பிரியம் என்பதே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போ நாம் என்ன செய்வது?”

அவர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டுச் சொன்னார். “நாம் யாரிடமிருந்தாவது அன்பை பெற வேண்டும் என்றால் அவருக்கு விருப்பமான காரியங்களை செய்ய வேண்டும். அதுதான் சுலபமான வழி.”

“அப்படி என்றால்?'”

“உதாரணமாக ஒரு நபரிடம் உனக்கு அன்பு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள். அவனுக்கு உன்னிடம் அதுபோன்ற அன்பு ஏற்படவேண்டும் என்றால் முதலில் அவனுடைய கவனம் உன் பக்கம் திரும்ப வேண்டும். ஒரு பேச்சுக்கு அவனுக்கு புத்தகங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து அவன் கைக்கு எட்டும் விதமாக வைக்க வேண்டும். அவனுக்குக் கிடைக்காத பொருளை நீ தேடி எடுத்து வந்து அவனுக்குப் பரிசாக தரவேண்டும். அப்பொழுது அவன் மனம் உன்னால் அவனுக்குக் கிடைத்தப் பொருளை விட உன்மீது லயிக்கும். புரிந்து கொண்டாய் இல்லையா?”

புரிந்தது என்பது போல் சீதா தலையை அசைத்தாள். அந்த நிமிடம் முதல் சீதாவின் மனதில் அந்த வார்த்தைகள் எதிரொலிக்கத் தொடங்கின.

வித்யாபதியின் அன்பைப் பெற வேண்டுமென்றல் அவனுக்கு விருப்பமான காரியங்களை செய்ய வேண்டும். இதுநாள் வரையில் தான் என்ன செய்தாள்? அவனுக்கு எதிராக நடந்துகொண்டாள். அவன் தன்னிடமிருந்து மேலும் விலகிவிட்டான்.

சீதா கோடு போட்ட புடவைகளை, பெரிய பூக்கள் போட்ட புடவைகளை வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டாள். “சமீபத்தில்தானே வாங்கினாய்? இன்னும் பழசாகவில்லையே?” சுபத்ரா கேட்டாள்.

“எனக்கு அவற்றின் மீது இஷ்டம் போய் விட்டது அத்தை” என்றாள்.

சாப்பாட்டில் அவனுக்குப் பிடிக்காத உணவுவகைகள் மறுபடியும் கண்ணில் படவில்லை.

சீதாவுக்கு அத்துடன் திருப்தி ஏற்படவில்லை. ஆஸ்பத்திரியில் தனக்குத் தெரிந்த டாக்டருக்கு போன் செய்தாள். இந்திராவுக்கு வைத்தியம் பார்க்கச் சொல்லி கேட்டுக் கொண்டாள். பில்லை தான் கொடுத்து விடுவதாகவும் சொன்னாள். இந்த விஷயம் வித்யாபதிக்குத் தெரியவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாள்.

வீட்டிலும் முன்னைப் போல் எரிந்து விழவில்லை. கூடுமான வரையிலும் மௌனமாக இருந்தாள். இதுநாள் வரையில் தேவையிருந்தாலும் இல்லாவிட்டாலும் தானாக வலுவில் சென்று அவனிடம் பேசிக் கொண்டிருப்பாள். இப்பொழுது அதையெல்லாம் விட்டுவிட்டாள். அவனாக பேசினால் தவிர பதில் சொல்லாமல் இருந்தாள். சீதாவிடம் தோன்றியிருந்த இந்த மாற்றத்தை வித்யாபதி உணர்ந்துகொண்டான். சீதாவுக்கு தன்னிடம் விரக்தி ஏற்பட்டு வருகிறது என்று எண்ணி மகிழ்ந்தான்.

அத்தியாயம்-18

கட்டில்மீது படுத்திருந்த இந்திரா மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள். யாரோ குனிந்து “எப்படி இருக்கிறது?’ என்று விசாரித்துக் கொண்டிருந்தார்கள். இந்திரா முழுவதுமாக கண்களைத் திறந்து பார்த்தாள். எதிரே சற்று பூசியவாகில், சிவந்த நிறத்துடன் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். இந்திராவைப் பார்த்ததும் நட்புடன் முறுவலித்தாள். “என்னை அடையாளம் தெரிகிறதா? உங்க வித்யாபதியின் மனைவி சீதா” என்றாள்.

இந்திரா சரேலென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள். “நீங்க… நீங்க…” கலவரத்துடன் சொன்னாள்.

“படுத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை. நான் பரவாயில்லை. நான் ஒன்றும் அந்நிய மனுஷியில்லை. உங்க வித்யாபதியின் மனைவிதானே. நமக்குள் மரியாதைகள் எதுக்கு?” என்றாள்.

இந்திரா குழப்பத்துடன் பார்த்தாள். மின்சாரம் போய்விட்டது போலும். ஃபேன் நின்றுவிட்டது. இந்திராவின் முகத்தில் வியர்த்துக் கொட்டியது. சீதா எழுந்து போய் விசிறியை எடுத்து வந்து விசிறிக் கொண்டே சொன்னாள். “அவர் எப்போதும் உங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பார். அவருடைய நினைப்பெல்லாம் உங்கள் மீதுதான். சீதா! இந்திராவைப் போன்ற நல்ல மனுஷி உலகத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். இளகிய மனம் படைத்தவள். என்னுடைய நெருங்கிய சிநேகிதி. இந்திராவுடன் சிநேகம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்பார். எங்க மாமியாருக்கு இதெல்லாம் புரியவே புரியாது. அந்தக் காலத்து மனுஷி இல்லையா? அவர்களால் நம்மைப் புரிந்துகொள்ள முடியாது. ஒரு ஆணும் பெண்ணும் கொஞ்சம் பேசினால் போதும். கண்ணும் காதும் வைத்துப் பேசுவார்கள். அவருக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்பே உங்களுக்கும் அவருக்குக்கும் நல்ல அறிமுகம். கல்யாணம் ஆகிவிட்டதால் அந்த அறிமுகத்தைத் துண்டித்துக் கொள்ளத் தேவையில்லை என்று சொன்னாலும் புரியாது. வித்யாபதியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமே. தெரியுமாவது? அவரை உங்களைக் காட்டிலும் நன்றாக யாரும் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். பெருமைக்காக சொல்லவில்லை. அப்படிப்பட்ட நல்ல இதயம் படைத்தவர், பண்புள்ளவர் எனக்குக் கணவராக கிடைத்தது முன்பிறவியில் நான் செய்து கொண்ட புண்ணியம். அவருடைய சிநேகிதியாய் நீங்களும் அப்படித்தான் நினைப்பீங்க. உண்டா இல்லையா சொல்லுங்கள்.”

இந்திரா வாய்வார்த்தை வராதவள் போல் சீதாவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சீதா தன்னைப் பார்க்க வந்ததே ஆச்சரியம். அதோடு இத்தனை சரளமாக தன்னிடம் பழக முற்படுவது மேலும் அதிசயம். சீதா இந்திராவின் வியப்பை பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

“நீங்க ஆஸ்பத்திரியில் சேர்ந்த அன்றைக்கே நானும் வருவதாகச் சொன்னேன். தானே அழைத்துப் போவதாகச் சொன்னார். சொன்னாரே ஒழிய நடக்கிற காரியமா? அவருக்கு ஓய்வு ஏது? நீங்க மருந்து ஏதாவது சாப்பிடணுமா?” நினைவுப்படுத்துவது போல் சொன்னாள்.

இந்திரா தலையை அசைத்தாள். சீதா போய் மேஜைமீது இருந்த மருந்தை கொண்டு வந்தாள். “எந்த மாத்திரை? காப்சூல் எது?”

இந்திரா சொன்னாள். சீதா தண்ணீர் கொண்டு வந்து இந்திராவிடம் கொடுத்து விழுங்கச் செய்தாள். நெற்றியில் படிந்திருந்த வியர்வையை புடவைத் தலைப்பால் ஒற்றினாள்.

“உங்களிடம் ஒரு ரகசியத்தைச் சொல்லட்டுமா?” என்றாள்.

“சொல்லுங்கள்.” இந்திரா பயந்தபடி பார்த்தாள்.

“நான் இங்கே வருவதில் அவருக்கு விருப்பம் இல்லை. அதான் இதோ அதோ என்று நாட்களைத் தள்ளிக் கொண்டே இருந்தார். அந்த விஷயத்தை நானும் புரிந்துகொண்டு விட்டேன். அதான் ஓசைப்டாபமல் நானே வந்துவிட்டேன். நான் இங்கே வந்து உங்களைப் பார்த்ததாக அவரிடம் சொல்ல மாட்டேன். சொல்லணும் என்று உங்களுக்குத் தோன்றினால் சொல்லுங்கள். எனக்கொன்றும் ஆட்சேபணையும் இல்லை. நாலு திட்டு திட்டுவார். அவ்வளவுதானே” என்றாள்.

ஐயோ… அந்த அளவுக்கு நான் துணியமாட்டேன் என்பது போல் பார்த்தாள் இந்திரா.

சீதா ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாள். உட்கார்ந்திருந்த நேரத்தில் தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றித்தான் பெசினாள். வித்யாபதி தன்னை எவ்வளவு பிரியமாக பார்த்துக் கொள்கிறான் என்று விவரித்தாள். அவ்விருவருக்கும் நடுவில் கருத்து வேற்றுமையே கிடையாதாம். சாப்பிட்டால் இருவரும் சேர்ந்துதான் சாப்பிடுவார்களாம். சினிமாவுக்குப் போனால் சேர்ந்துதான் போவார்களாம். ஒருவரை விட்டு ஒருவரால் இருக்கவே முடியாதாம். இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என்று வித்யாபதிக்கு வேதனையாய் இருக்கிறதாம்.

சிரித்த முகத்துடன் இதையெல்லாம் கேட்டுக் கொள்வதற்கு இந்திராவுக்கு ரொம்ப முயற்சி தேவைப்பட்டது. அந்தப் பெண்ணைப் பார்த்தால் எந்த ஒளிவு மறைவும் இன்றி அப்பாவியாய் எல்லாவற்றையும் சொல்லுவது போல் தோன்றியது. அப்படிச் சொல்வதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

விதயாபதி சீதாவை அன்பாகப் பார்த்துக்கொள்ளும் தோரணையை சிரத்தையாக கேட்டுக் கொண்டாள் இந்திரா. அவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் சுழலத் தொடங்கின.

சீதா எழுந்துகொண்டாள். “போய் வருகிறேன். உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்க உடம்பு தேவலையானதும் கண்டிப்பாக எங்க வீட்டிற்கு வந்து ஒரு வாரமாவது ஓய்வு எடுத்துக் கொள்ளணும்” என்றாள். இந்திரா தலையை அசைத்தாள்.

சீதா போய்விட்டாள். இந்திரா சூனியத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவுதான் வேண்டாம் என்று நினைத்தாலும் சீதாவின் வார்த்தைகளே திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. வித்யாபதி சீதாவை அவ்வளவு பிரியமாக பார்த்துக் கொள்கிறானா? அவள் முகத்தைப் பார்த்தாலே புரியவில்லையா? சீதா எத்தனை அதிர்ஷ்டசாலி? தாய், தந்தை, கண் நிறைந்த கணவன். இந்திராவுக்கு சீதாவிடம் பொறாமை ஏற்படவில்லை. கடவுள்மீதுதான் கோபம் வந்தது. எல்லாவற்றையும் ஒருத்தருக்கே தர வேண்டுமா?

இந்த உலகத்தில் யாரும் இல்லாத பெண்கள் எத்தனை பெர் இருக்கிறார்கள்? ஒருத்தருக்கு அழகு, மற்றொருவருக்கு பணம், வேறொருத்திக்கு புகழ், அடுத்தவளுக்கு கணவனின் அன்பு … இப்படி ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றை வழங்கக் கூடாதா? அப்படித் தந்தால் ஒருத்திக்கு மற்றொருத்தியிடம் பொறாமை இருக்காதோ என்னவோ. தன்னிடம் இப்பொழுது என்ன இருக்கிறது? சின்ன வயதிலேயே தாய் தந்தை போய்விட்டார்கள். அக்காவின் ஆதரவில் வளர்ந்தாள். அவர்கள் நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்கள். இருந்தாலும் எத்தனை விஷயங்களில் அவர்களில் தயவுக்காக தான் காத்திருக்க வேண்டும்? பிறத்தியார் வீட்டில் இருக்கிறோம் என்ற எண்ணம் சதா அவளைத் துரத்திக் கொண்டே இருக்கும். வித்யாபதி தன் வாழ்க்கையில் வந்த பிறகு தனிமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது. அவனைப் போன்ற நபர் இருந்தால் எந்தப் பெண்ணாலும் வாழ்க்கையில் எப்படிப் பட்ட ஏற்ற தாழ்வுகளையும் சமாளித்துவிடுவாள். இப்பொழுது வித்யாபதி தனக்கு என்ன ஆக வேண்டும்? சீதாவின் கணவன். அவளுக்கு வெறும் நண்பன் மட்டும்தான்.

வித்யாபதி அன்று ரொம்ப தாமதமாக வந்தான். மதியம் சீதா அவனுக்கு போன் செய்து பேக்டரிக்கு வரப் போவதாக சொல்லியிருந்தாள். ரொம்ப நேரம் காத்திருந்தும் வராததால் வீட்டுக்குப் போன் செய்தால் “வீட்டில் இல்லை. கிளம்பி நேரமாகிவிட்டது” என்று தாய் சொன்னாள். வழியில் எந்த சிநேகிதியாவது தென்பட்டிருப்பாளாய் இருக்கும் என்று ஆபீசிலேயே உட்கார்ந்திருந்தான்.

ஐந்து மணியாகும் போது சீதா போன் செய்தாள். சிநேகிதியைப் பார்க்க போயிருந்ததாகவும் அங்கேயே நேரமாகிவிட்டதாகவும் சொன்னாள். “என்னால் வர முடியவில்லை. வரப் போவதில்லை” என்று போனை வைத்துவிட்டாள்.

வித்யாபதிக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது. இப்படி இடைஞ்சல் ஏற்படுத்துவதில் சீதா ரொம்ப கெட்டிக்காரி. அவன் ஆஸ்பத்திரிக்குப் போனான். இந்திரா தனியாக உட்கார்ந்து இருந்தாள். வந்ததும் கேட்டான். “எப்படி இருக்கிறாய்?” தினமும் வருவது போல் இந்திரா அவனுக்கு அருகில் வரவில்லை. மௌனமாய் எங்கேயோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் கண்களில் சந்தோஷம் பளிச்சிடவில்லை.

“மருந்து சாப்பிட்டாயா?”

எங்கேயோ பார்த்தபடி தலையை அசைத்தாள். வித்யாபதிக்கு அந்த மௌனம் புரியவில்லை. அவனால் மேற்கொண்டு தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாற்காலியைவிட்டு எழுந்து வந்து இந்திராவுக்கு எதிரே நின்றான்.

“இந்தூ! என்னவாகிவிட்டது? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான். இந்திரா பதில் பேசவில்லை.

“சொல்லு இந்தூ! என்ன நடந்தது? நான் என்ன தவறு செய்துவிட்டேன்?” உரத்தக் குரலில் கேட்டான்.

இந்திரா தலையைத் திருப்பி நேராக அவன் கண்களுக்குள் பார்த்தாள். அவன் கண்களில் வேதனை தெரிந்தது. இந்திரா மேலும் தீவிரமாக அவன் இதயத்தின் அடித்தளத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுப் பிடித்து விடவேண்டும் என்பது போல் உற்று நோக்கினாள். இதெல்லாம் நாடகம்தானா? இந்திராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவன் யார்? வித்யாபதி இல்லையா? இல்லை சீதாபதி! சாட்சாத் சீதாவின் கணவன். அதை இத்தனை நாளாக தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படி தன்னை மயக்கிவிட்டான் அவன். இந்திராவுக்கு அவன் மீது கோபம் வரவில்லை. தன்மீதே தனக்குக் கோபம் வந்தது. திருமணம் ஆனபிறகு அவன் வேற்று மனிதனாகிவிட்டான். தன்னுடையவன் என்று எப்படி எண்ணிவிட்டாள்? இந்திராவுக்கு அழுகை வந்தது. மென்மையான உணர்வு ஏதோ தகித்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட வேதனை அது.

“இந்தூ” அவன் குரல் கனிவாக ஒலித்தது. நெருங்கி வந்தவன் அவள் தலையை மார்போடு அணைத்துக் கொண்டான். “என்ன நடந்தது சொல்லு?”

“ஒன்றும் நடக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை.”

“பின்னே ஏன் இப்படி வருத்தப்படுகிறாய்?”

“புத்தி இல்லாமல். எனக்குக் கொஞ்சம் கூட புத்தி இல்லை.”

“என்ன இந்திரா இது?”

அவன் குரலுக்கு உருகிவிட்டாள். இனியும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை அவளால். சீதா வந்து விட்டுப் போனாள் என்று சொல்லி விடுவோம் என்று நாக்கு நுனி வரையிலும் வந்துவிட்டது. சீதாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. திட்டுவானாமே? ஏன்? சீதா என்னிடம் ஏன் வரக்கூடாது? வந்தால் தவறு என்ன? அவன் பண்ணுவதெல்லாம் தெரிந்து விடப் போகிறதே என்றா? ஊஹும், சீதா வந்ததாக சொல்லக் கூடாது. சொன்னால் வீட்டுக்குப் போனதும் திட்டுவான். பிறகு சீதா வர மாட்டாள். வித்யாபதியைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சீதாவிடம் அறிமுகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

“இந்தூ! ஏன் இப்படி மௌனமாக இருக்கிறாய்?”

“ஒன்றும் இல்லை” என்றாள் இந்திரா.

பிறகு இந்திரா அவனிடம் உரையாடினாள். ஆனால் இருவருக்கும் இடையே ஏதோ குறுக்குச் சுவர் இருப்பது போலவே வித்யாபதி உணரத் தொடங்கினான். அவன் மனம் கலவரமடைந்தது. இந்திரா ஏன் இப்படி இருக்கிறாள் என்று புரியவில்லை.

அவன் இரவு ரொம்ப நேரம் கழித்து வீடு திரும்பினான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சீதா கேட்டாள். “இந்திரா எப்படி இருக்கிறாள்?”

தூக்கிவாரிப் போட்டாற்போல் ஆச்சரியமாக பார்த்தான் வித்யாபதி. சீதா சாதத்தை அளைந்து கொண்டே சொன்னாள். “சொல்லுங்க. பரவாயில்லை. இந்திராவிடம் எனக்கு எந்த பொறாமையும் இல்லை. அவளை உங்களுடைய சிநேகிதியாய் மதிக்கிறேன். என் கோபம் ஏதாவது இருந்தால் உங்கள் மீதுதான். இந்திராவிடம் அல்ல.”

அந்த வார்த்தைகளுக்கு வாயடைத்துப் போனாற்போல் பார்த்தான் வித்யாபதி.

அத்தியாயம்-19

வித்யாபதி பழச்சாறைப் பிழிந்து டம்ளரில் எடுத்து வந்தான். இந்திராவின் தோளைப் பிடித்து எழுப்பி உட்கார வைப்பதற்காகக் குனிந்தான்.

“வேண்டாம்.” இந்திரா தானே சிரமப்பட்டு சக்தியைத் திரட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்துகொண்டாள். தலைச் சுற்றுவது போல் இருந்தது. கையால் கண்களை அழுத்திக் கொண்டே “அம்மா!” என்றாள். வித்யாபதி இந்திராவின் தலையை, முதுகை தடவிக் கொடுத்தான். பழரசத்தை அவன் உதட்டருகில் வைத்த போது விருப்பம் இல்லாதவள் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். டம்ளரை கையில் வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த மேஜையின் மீது வைத்தாள்.

“குடி” என்றான் அவன்.

“குடிக்கணும் போல் இல்லை.” தெளிவற்ற குரலில் சொன்னாள்.

“குடிக்காவிட்டால் சோர்வாக இருக்கும்.” நயமான குரலில் சொன்னான்.

“குடித்தால் வாந்தி வரும்.” உள்ளூர நினைத்துக் கொண்டாள் இந்திரா.

வித்யாபதி கெஞ்சினான். வற்புறுத்தினான். ஆனாலும் பலன் இருக்கவில்லை. இந்திராவை அந்த வேளை பழச்சாறு மட்டுமே இல்லை, மருந்துகளைக் கூட சாப்பிட வைக்க முடியவில்லை அவனால்.

இந்திராவிடம் ஏதோ மாற்றம் தெரிகிறது. அது ஏன் வந்தது என்றுதான் புரியவில்லை. யாராவது வந்தார்களா? ஏதாவது சொன்னார்களா? இந்திராவின் சுபாவம் அவனுக்கு நன்றாகத் தெரியும். யாராவது ஏதாவது சொன்னால் எதிர்த்து நின்று சண்டை போட மாட்டாள். “என் விஷயம் உனக்கு எதற்கு?” என்று குரலை உயர்த்த மாட்டாள். தனக்குள்ளேயே சுருங்குவது போல் மௌனமாக இருந்து விடுவாள்.

அவன் ஏறக்குறைய ஒரு மணி நேரம் அங்கே இருந்தான். இந்திராவுக்கு மருந்து கொடுப்பதற்காக அவன் இரண்டு மூன்று முறை கைகடியாரத்தைப் பார்த்துக் கொண்டான். அவனுடைய அந்தச் செய்கை இந்திராவுக்கு வேறு விதமான எண்ணத்தைத் தோற்றுவித்தது. வீட்டுக்குப் போவதற்காக அவசரப் படுகிறான் என்று நினைத்துவிட்டாள்.

‘சீதாவை எங்கேயாவது அழைத்துச் செல்வதாக சொல்லியிருப்பான். அதுதான் மணியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்று எண்ணிவிட்டாள்.

“நீங்க கிளம்புங்கள்” என்றாள்.

”நானா? ஏன்? எதற்கு? யாராவது இப்போ வரப் போகிறார்களா?” என்றான் விளங்காதவன் போல்.

“யார் வரப் போகிறார்கள்? யார் இருக்கிறார்கள் எனக்கு?” பின்னால் சாய்ந்து படுத்துக் கொண்டே சொன்னாள். அவள் குரலில் வெறுப்பு தொனித்தது.

அவன் ஒரு நிமிடம் இந்திராவை உற்று நொக்கினான்.

இந்திரா மேற்கூரையைப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.

“இந்தூ”

‘”ஊம்.”

“என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?” அவள் தலைமீது கையை வைத்துக் கொண்டே கேட்டான்.

”ஒன்றும் இல்லை.”

“என்னிடமிருந்து உன்னால் மறைக்க முடியுமா?” நிஷ்டுரமாக சொன்னான்.

விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திரா தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் பொறுமையின்மையும், வேதனையும் கலந்திருந்தன. ‘என்னிடமிருந்து நீங்க மட்டும் மறைக்கவில்லையா?’ என்ற குற்றச்சாட்டும் வெளிப்பட்டது. அவன் குழப்பமடைந்தான். இந்திராவுக்கு என்னவாகிவிட்டது?

“நீங்க வீட்டுக்குப் போய்க் கொள்ளுங்கள்” என்றாள்.

“போகச் சொல்லி நீ சொல்லணுமா? எனக்குத் தெரியாதா? உன் பேச்சே இன்றைக்கு வித்தியாசமாக இருக்கிறது?” என்றான் அவன்.

”எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது போதுமா?” எழுந்து உட்கார்ந்துகொண்டே ஆவேசமாக சொன்னாள்.

”இந்தூ” அவன் எழுந்து வந்து சட்டென்று தோள்களைப் பற்றிக் கொண்டான். இந்திரா அவனை உதறி விட்டாள். “என்னை விட்டு விடுங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கட்டும். நீங்க போய் விடுங்கள். நீங்க எனக்காக இரக்கப்பட தேவையில்லை.”

அவன் பதில் பேசவில்லை. இந்திராவின் வார்த்தைகளில் இருந்த பொருளைக் கண்டுபிடிக்க முயலுவது போல் மௌனமாக இருந்தான்.

“எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. நீங்க எனக்கு உதவி செய்தீங்க. உங்களுக்கு என்னுடைய நன்றி. இனியும் எனக்காக சிரமப்படத் தேவையில்லை. தயவு செய்து போய் விடுங்கள். ப்ளீஸ்.” கைகளைக் கூப்பினாள்.

அவன் அந்தக் கைகளைப் பற்றிக் கொண்டான். “இந்தூ! இன்றைக்கு உனக்கு என்னவாகிவிட்டது?” ஆவேசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது போல் ஒலித்தது அவன் குரல்.

“ஒன்றும் ஆகவில்லை. எனக்குத் தெம்பு வந்துவிட்டது. சுயஉணர்வு வந்துவிட்டது. உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்ற உண்மை புரிந்து விட்டது. போங்கள். நிம்மதியாக இருங்கள்.” அவனுடைய தோள்களைப் பிடித்து தள்ளிவிட்டாள்.

அவன் கட்டிலை விட்டு எழுந்துகொண்டான். இந்திராவை வியப்புடன் பார்த்தான். பிறகு அங்கிருந்து நிசப்தமாக போய்விட்டான். இந்திரா அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

அழுகை திடீரென்று நின்று விட்டது. வித்யாபதி போய் விட்டான். தான் போகச் சொன்னதும் போய்விட்டான். அவனுக்கு உண்மையிலேயே தன் மீது விருப்பம் இருக்கும் என்றால் அப்படி போய் விடுவானா? போகத்தான் முடியுமா? உடல்நலமின்றி, சோர்வுடன் இருக்கும் இந்திராவை அந்த நேரத்தில் ஒரு விதமான இயலாமை, தாங்க முடியாத தனிமை சூழ்ந்துகொண்டது.

வித்யாபதி போய் விட்டான். வெளியில் கார் அவனுக்காகக் காத்திருக்கும். சீதாவின் கணவன் காரில் வராமல் நடந்து வருவானா? பஸ்ஸுக்காக தவமிருப்பானா? கார் என்பதால் பத்தே நிமிடங்களில் வீட்டுக்குப் போய் விடுவான். அங்கே சீதா அவனுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். சீதாவுக்குக் கணவனிடம் எத்தனை பிரியம் என்று அவள் பேச்சிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

“என்னங்க? ஏன் எப்படியோ இருக்கீங்க?” என்று கேட்பாள். ஒருக்கால் அவன் மடியிலேயே உட்கார்ந்திருப்பாளோ என்னவோ.

“அந்த இந்திராவுக்கு என்ன ஆகிவிட்டதோ தெரியவில்லை. இன்றைக்கு ஒரே அழுகை’ என்று சொல்வானாய் இருக்கும்.

இந்திரா தன்னையே வெறுத்துக் கொண்டாள். அவனுடைய நாடகத்தைக் கண்டு பிடிக்க முடியாத தன் அசட்டுத்தனத்திற்கு அழுகை வந்தது. அவளுக்குத்தான் எத்தனைத் தனிமை? வித்யாபதியின் காரணமாக அன்புடன் பேணி வந்த அக்காவுக்கும் தூரமாகிவிட்டாள். தான் கொண்டு வந்த வரன்களை எல்லாம் மறுத்துவிட்டு, பிடிவாதமாக கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லாமல் இருந்து விட்டதால் அக்காவுக்கு தலைகால் புரியாத அளவுக்குக் கோபம் வந்தது. கடைசியில் “என் பேச்சைக் கேட்காத பொழுது என் வீட்டில் மட்டும் இருப்பானேன்? வெளியில் போய்க் கொள்” என்று சொல்லிவிட்டாள்.

அந்த வார்த்தையை வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகும் அங்கேயேதான் இருந்து வந்தாள். எத்தனை வெட்கங்கெட்டவள்? அக்கா சொன்னதும் உண்மைதான். அக்கா வீட்டில் இருக்க வேண்டும் என்றால் அவளுடைய சொல்லுக்குக் கட்டுபட்டுத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டை விட்டுப் போய்விட வேண்டும். அவள் இவ்விரண்டையுமே பண்ணவில்லை. வந்த வரன்களை எல்லாம் மறுத்துக் கொண்டிருந்தாள்.

வித்யாபதி என்றால் தனக்கு இஷ்டம். இஷ்டம் மட்டும்தானா? உயிர்! அவனைத் தவிர வேறு ஆண்மகனின் நிழல் பட்டால் கூட அருவெறுப்பாக இருக்கும். அவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணமாகி விட்டது. சீதாவுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறான். நாளைக்கே குழந்தைகள் பிறப்பார்கள். அவன் வாழ்க்கை திசை மாறி விட்டது. தன்னுடைய நிலை என்ன? அக்காவின் கத்தல்கள் யதார்த்தமாகிவிடும்.

அன்று ஒருநாள் வங்கியில் வேலை பார்க்கும் வரனை வேண்டாமென்று சொல்லி விட்டபோது அக்கா எரிந்து விழுந்தாள். “பாவிமகளே! உனக்கு இப்போ எதுவும் தெரியாது. இன்னும் சில நாட்கள் போனால் வயது ஏறிவிடும். அப்பொழுது உன் முகத்தைக் கூட யாரும் பார்க்க மாட்டார்கள். அப்போ வாழ்க்கையில் நீ இழந்தது என்னவென்று புரியும். நாங்கள் எல்லோரும் திருமணம் செய்து கொள்ளவில்லையா? எங்களுடையது காதல் கல்யாணமா? நாங்கள் சந்தோஷமாக இல்லையா? காதல் கத்திரிக்காய் எல்லாம் கல்யாணத்திற்கு முன்னால். கழுத்தில் மூன்று முடிச்சு விழுந்த பிறகு எந்த ஆண்மகனும் ஒன்றுதான். பெண்ணுக்கு முக்கியமாக வேண்டியது வீடும் குழந்தைகளும்தான். அந்த வித்யாபதி கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட்டான். ஏதோ பழைய அறிமுகம் இருப்பதால் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். என்றாவது ஒருநாள் வருவதை நிறுத்திவிடுவான். அப்பொழுது உன் நிலைமை என்ன? ஏற்கனவே உனக்கும் அவனுக்கும் நடுவில் ஏதோ இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. நான் இந்த பையனை சம்மதிக்க வைப்பதற்கு எவ்வளவு பூசி மெழுகினேன் தெரியுமா? ஊரார் வேண்டாத பழியைப் போட்டார்கள் என்று அவனை நம்ப வைத்தேன். அவனை சம்மதிக்க வைப்பதற்குள் எனக்கு உயிரே போய் விடும் போல் இருந்தது.”

இந்திரா அமைதியாக அக்கா சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டாள்.

“ஏன் பதில் சொல் மாட்டேங்கிறாய்?” கத்தினாள் பாரதி.

“என்ன பதில் சொல்லட்டும் அக்கா? நான் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று முன்பே சொல்லிவிட்டேன்.”

“செய்துகொள்ளாமல் என்ன செய்யப் போகிறாய்?”

“இந்த உலகத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளாத பெண்கள் எத்தனை பேர் இல்லை?”

“நீயும் அவர்களில் ஒருத்தியாக இருக்கப் போகிறாயா?”

அக்காவுக்கு எப்படி எடுத்துச் சொல்வதென்று அவளுக்குப் புரியவில்லை. வித்யாபதியைத் தவிர வேறு யாரையும் தன்னால் கணவனாக ஊகித்துக் கொள்ளவும் முடியாது என்று சொன்னால் வெறும் பேத்தல் என்பாள். ஒருவனைக் காதலித்து அவனுடைய அன்பையும் பெற்று கனவு மாளிகையை கட்டி, அதில் அவனுடன் குடித்தனம் நடத்தித் தான் அடைந்த சந்தோஷத்தை எப்படி விவரிக்க முடியும்? வாழ்க்கையில் இருவரும் கணவன் மனைவியாக முடியவில்லை. ஆனால் அந்தக் கனவு மாளிகையைக் கலைத்துவிட்டு மற்றொருவனுடன் குடித்தனம் நடத்துவது தன்னால் இயலாத காரியம். ஏதோ ஒரு கல்யாணம் என்று இயந்திரகதியில் செய்துகொள்ளும் சடங்கு தனக்குத் தேவையில்லை. கல்யாணம் செய்து கொண்டால் அதன் மூலம் தனக்கு எல்லா விதமாகவும் சந்தோஷம் கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்காதபோது கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வித்யாபதி அனுபவித்துக் கொண்டிருக்கும் நரகம்தான் தனக்குத் தெரியுமே? என்று நினைத்தாள். எவ்வளவு பைத்தியக்காரி அவள்?

அவன் நரகவேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அவளுக்குத் திருப்தி. அந்தத் திருப்தியில்தான் சந்தோஷத்தைப் பெற்று வந்தாள். தன்னிடம் கிடைக்கும் சந்தோஷத்தை அவன் அந்தத் திருமணத்தின் மூலம் பெற முடியவில்லை என்ற போது அவள் மனதிற்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. அவனுக்காக இப்படியே இருந்து விடவேண்டும் என்று தோன்றியது. அக்காவின் கோபத்திற்கு ஆளாகிவிட்டாள். ஊராரின் பழிச்சொற்களை தாங்கிக் கொண்டாள். அவனுக்கு முன்னால் இதெல்லாம் துச்சம் என்று நினைத்தாள்.

எல்லோரையும் ஒதுக்கிவிட்டு அவன் பக்கம் வந்தாள். அவன் என்ன செய்தான்? நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு பக்கம் மனைவியுடன் சந்தோஷமாக குடித்தனம் நடத்திக் கொண்டே, தன்னிடம் வந்து எந்த சுகமும் இல்லை என்பது போல் பேசுகிறான். சீதா இன்று வந்து தன் கண்களைத் திறந்துவிட்டாள்.

“போ” என்றதுமே போய்விட்டான். தன்னிடம் உண்மையான அன்பு இருந்தால் அப்படி போயிருப்பானா?

இந்திராவுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. யார் இருக்கிறார்கள் தனக்கு? யாரும் இல்லை. யாருமே இல்லை. இந்த நிமிடம் தான் இறந்து போனாலும் யாருக்கும் பாதிப்பு இருக்காது. தன்னுடைய இந்த நிலைமைக்குக் காரணம் அவனைக் காதலித்ததுதானே? இந்திராவுக்கு பட்டாபி சித்தப்பாவின் நினைவு வந்தது. அவருடைய மகன் கார் விபத்தில் இறந்து போய்விட்டான். எட்டு வருடங்களாகிவிட்டது. இப்பொழுதும் அவர் தன் மகனைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார். வீட்டுக்கு யார் வந்தாலும் அவனைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார். இறந்து போன மகன் திரும்பவும் வரமாட்டான் என்று அவருக்கும் தெரியும். இருந்தாலும் அவனுடைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய நிலைமையும் அதே போல்தான் இருக்கிறது. தம் இருவரின் பாதைகள் பிரிந்து போய்விட்டாலும் அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டு அந்த நினைவுகளிலேயே வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறாள். அதுதான் சுகம் என்று பாவிக்கிறாள்.

வாசலில் காலடியோசை கேட்டது. விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்த இந்திரா அழுகையை நிறுத்தி கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். வாசலில் வித்யாபதி நின்று கொண்டிருந்தான். அவனுடன் டாக்டரும் இருந்தார்.

“என்ன? ரொம்ப ரகளை செய்யறீங்களாமே?” டாக்டர் அருகில் வந்தார். இந்திராவுக்கு வெட்கமாக இருந்தது, வித்யாபதியை போகச் சொல்லிவிட்டு கோழையாக தான் நடந்து கொண்டதற்கு.

டாக்டர் வந்து பரீட்சை செய்தார். “ரிலாக்ஸ் பேபி… ரிலாக்ஸ். எதற்காக இவ்வளவு வருத்தப்பட்டுக் கொள்றீங்க?” என்றாள்.

இந்திராவுக்கு அவர் வார்த்தைகள் காதில் விழவில்லை. வித்யாபதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் போகவில்லையா? தன்னை விட்டுவிட்டு வீட்டிற்குப் போகவில்லையா? வியப்புடன் பார்த்தாள்.

டாக்டர் மருந்து கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவர் போனதும் வித்யாபதி வந்து கட்டில்மீது உட்கார்ந்தான். “இந்தூ! டாக்டர் சொன்னதை கேட்டாயா? நீ எதற்காகவோ வருத்தப் படுகிறாய் என்கிறார்.”

இந்திரா பதில் சொல்லவில்லை. தலையணையில் சாய்ந்துகொண்டபடி பார்த்தாள்.

“சொல்லு. என்னிடம் கூடவா ஒளிவு மறைவு? நான் உனக்கு வேற்று மனிதனா?”

அடுத்த நிமிடம் இந்திரா எழுந்து வந்து அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு சிறு குழந்தையைப் போல் விசும்பத் தொடங்கினாள்.

“சொல்லு.” அவன் மீண்டும் கேட்டான். இந்திராவின் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் வெளி வந்தது. அந்த வினாடி தெளிவாகப் புரிந்துவிட்டது. தான் அனுபவித்த இந்த வேதனை அவனால் ஏற்பட்டது இல்லை. தானாக உருவாக்கிக் கொண்டது.

அவனும் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. அவளுடைய ஊமை வேதனையைப் புரிந்து கொண்டாற்போல் மௌனமாக இருந்துவிட்டான். கொஞ்ச நேரம் கழித்து இந்திரா மெதுவாக கேட்டாள். “நீங்க இந்த மாதிரி ஆஸ்பத்திரிக்கு வருவது சீதாவுக்குத் தெரியுமா?”

“தெரியும்.”

“ஒன்றும் சொல்ல மாட்டாளா?”

“ஏன் சொல்லப் போகிறாள்? சொன்னால் மட்டும் நான் பொருட்படுத்துவேனா?” ஒரு நிமிடம் கழித்து இந்திராவின் தலையை வலுக்கட்டாயமாக உயர்த்திக் கொண்டே கேட்டான். “எதற்காக இப்படிக் கேட்கிறாய்?”

இந்திரா தலையை நிமிர்த்த விடவில்லை. “சும்மாதான்.”

“இது போன்ற யோசனைகளுடன் மனதைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறாயா?”

மார்போடு அணைத்துக் கொண்டான்.

“உங்களுக்குத் திருமணமாகிவிட்டது. நீங்கள் இப்படி என்னைப் பார்க்க வருவது நன்றாக இருக்குமா? சீதா என்ன நினைப்பாள்? உலகம் என்ன சொல்லும்?”

“சீதாவுக்கு என்னைப் பற்றி எல்லாம் தெரியும். உன்னைக் கண்டால் எனக்குப் பிடிக்கும். ஊரார் சொல்வதற்கு முன்னால் நானே அந்த விஷயத்தை சொல்லிவிட்டேன். என்னுடன் சண்டை போட்டால் தனக்குத்தான் நஷ்டம் என்று சீதா புரிந்துகொண்டு விட்டாள். சமாதானமாக போவதற்கு முயற்சி செய்கிறாள். நாமும் கொஞ்சம் டயம் தரவேண்டும். பெண்ணாக இருந்தும் நீயே உலகத்தைப் பொருட்படுத்தாத போது நான் மட்டும் லட்சியம் செய்வேனா? உன்னைவிட உலகம் எனக்கு முக்கியம் இல்லை. சீதாவை நான் கல்யாணம் செய்து கொண்டேன். அவ்வளவுதான். என் வாழ்க்கையில் என் குடும்பத்தார் இருப்பது போலவே நீயும் இருக்கிறாய். உங்களை நான் விட்டுவிட முடியாது என்று சீதா இந்நேரம் புரிந்து கொண்டிருப்பாள்.”

“பின்னே சீதாவுடன் சண்டை வராதா?”

”ஏன் வராது? காதலர்களுக்குள் சண்டை வந்தால் உலகமே தலைகீழாகி விட்டாற்போல் இருக்கும். மற்றவர்களுடன் சண்டை வந்தால் கோபம் வருமே ஒழிய மனம் கலங்கிப் போகாது. உன் அக்காவுடன் சண்டை போடுவதற்கும் என்னுடன் மனஸ்பாபம் ஏற்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீ கவனிக்க வில்லையா? என்னை நம்பு.” தலையைத் வருடிக் கொண்டே சொன்னான். “மனிதர்களுக்கு இடையில் நம்பிக்கையை மிஞ்சிய பந்தம் இருக்காது. வேத மந்திரங்களுடன் போடும் மூன்று முடிச்சுக்களை விட இருமனங்களுக்குள் போடப்படும் இந்த முடிச்சு வலிமையானது என்று நான் நம்புகிறேன்.”

இந்திராவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சீதாவின் வார்த்தைகள் ஒரு விதமாக கலங்கடித்தால் வித்யாபதியின் வார்த்தைகள் வேறு விதமாக கலவரப் படுத்திக் கொண்டிருந்தன.

சீதாவின் வார்த்தைகள் இருவருக்குமிடையே இருந்த காதல் மாளிகையைத் தகர்த்தெறிய பார்த்தால் வித்யாபதியின் வார்த்தைகள், செயல்கள் அந்த பயங்கரமான ஆபத்திலிருந்து தப்பிக்க வைப்பது போல் இருந்தது.

அவன் கரங்களுக்கிடையில் இந்திராவுக்கு விவரிக்க முடியாத நிம்மதி ஏற்பட்டது. மனதில் ஏற்பட்ட நம்பிக்கை தந்த அமைதி அது. உலகத்தாரின் எதிர்ப்பை சமாளிக்கக் கூடிய தெம்பை ஊட்டும் அனுசரணை அது.

அந்த வினாடியில் இந்திராவுக்கு தான் அதிர்ஷ்டசாலியா துரதிரஷ்டசாலியா என்று புரியவில்லை. அவனுடைய காதலை பெற முடிந்தது. ஆனால் அவனைக் கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லை.

அத்தியாயம்-20

இந்திராவை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். அக்காவும் அத்தானும் வந்து வீட்டிற்கு அழைத்துப் போனார்கள். அன்று மாலை இந்திரா வீட்டுக்குப் புறப்படும் முன்னால் வித்யாபதி பெருமூச்சு விட்டுக் கொண்டே சொன்னான். “இந்தூ! யாராக இருந்தாலும் ஆஸ்பத்திரியில் இருந்துவிடணும் இருந்துவிடணும் என்று விரும்புவது சரியில்லைதான். ஆனால் எனக்கு ஆஸ்பத்தியிலிருந்து வீட்டுக்குப் போகிறாய் என்று நினைத்தால் கவலையாக இருக்கிறது. இங்கே என்றால் நான் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து உன்னைப் பார்க்கக் கூடிய சுதந்திரம் இருந்தது. இனிமேல் உன்னைப் பாரக்கணும் என்றால்…”

இந்திரா அவன் வேதனையைப் புரிந்துகொண்டாற்போல் கையை அழுத்தினாள். அவன் ஆபீஸ் போன் நம்பரைக் கொடுத்தான். “நீ உங்க தெருக்கோடியில் உள்ள கடையிலிருந்து காலை பத்தரை மணிக்கு, மதியம் ஒரு மணிக்கு, மாலை ஐந்துமனிக்கு தினமும் போன் பண்ணு. அந்த நேரத்தில் நான் எவ்வளவு வேலை இருந்தாலும் சரி எங்கேயும் போகாமல் ஆபீசில் இருக்கிறேன். பில்லை கட்டிவிட்டேன். வேளை தவறாமல் மருந்துகளை சாப்பிடு.” வித்யாபதி இந்திராவின் கையை இழுத்துக் கொண்டு மார்போடு அழுத்திக் கொண்டான். “இந்தூ! இந்த உடம்பு உன்னைச் சேர்ந்தது இல்லை. என்னைச் சேர்ந்தது. நான் உன்னிடம் ஒப்படைத்த பொருளை பேணி காப்பது போல் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள். ஹார்லிக்ஸ் குடி. பழரசம் அருந்து. உங்க அக்கா ஏதாவது சொன்னால் அழுதுகொண்டு படுத்துவிடாதே. அவள் சார்பில் யோசித்துப் பார். அவளுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்தேன். அந்த எரிச்சலில் ஏதோ சொல்லிவிட்டாள் என்று நினைத்துக்கொள்.” அவன் ஆள்காட்டி விரலைக் உயர்த்திக்கொண்டே சொன்னான். ‘இதோ பார். நீ ஒரு வேளை போன் செய்யாவிட்டாலும் சரி, நான் நேராக உங்க வீட்டுக்கே வந்து விடுவேன். உனக்கு இங்கேயே திரும்பவும் மாற்றல் கிடைப்பதற்காக முயன்று வருகிறேன். அநேகமாக அடுத்த மாதம் கிடைத்துவிடும். அதுவரையிலும் நீ லீவிலேயே இருந்து விடலாம்.”

இதைக் கேட்டதும் இந்திரா வரண்ட முறுவலை உதிர்த்தாள். ‘வித்யா! என்ன சொல்கிறாய்? இன்னும் லீவில் இருப்பதா? ஏற்கனவே இரண்டு மாதங்களாக சம்பளம் இல்லாத லீவில் இருந்து வருகிறேன். வங்கியில் இருந்த பணம் கொஞ்சமோ நஞ்சமோ செலவழிந்துவிட்டது. வித்யா! ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு கொடுத்தாய் என்றுகூட நான் கேட்கவில்லை. ஏன் தெரியுமா? வங்கியில் இருப்பது போதாது என்று எனக்குத் தெரியும்.”

”’பைத்தியம்தான் நீ.” வித்யாபதி இந்திராவின் தலையைக் கோதிவிட்டான்.

இந்திரா குனிந்து அவன் தோளில் தலையை வைத்து கண்ணீரை அடக்கிக் கொண்டே சொன்னாள். “வித்யா எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?”

“சொல்லு.”

“எனக்கு ரொம்ப உடம்பு சரியில்லாமல் போய் வாழ்நாள் முழுவதும் இந்த ஆஸ்பத்திரியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏன் என்றால் நான் இங்கே இருந்தால் நீ இங்கே வருவாய். என்னைப் பார்ப்பாய். எனக்காக கவலைப்படுவாய்.”

“நீ உண்மையிலேயே பைத்தியக்காரித்தான்.”

“மறுபடியும் நாம் இருவரும் சந்தித்துக் கொள்வது எப்போ?”

அவன் ஒரு நிமிடம் யோசித்தான். “உன் உடம்பு நன்றாக தேறியபிறகு”

“எங்கே? எப்படி?”

“இடமா இல்லை? நான் உங்க வீட்டுக்கும் நீ என் வீட்டுக்கும் வர முடியாமல் இவர்களால் தடுக்க முடியும். ஆனால் வெளி உலகத்தில் சந்தித்துக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது இல்லையா? இந்த பறந்த உலகத்தில் நாம் சந்தித்துக் கொள்வதற்கு இடமா இல்லை?”

இந்திராவுக்குப் புரியாமல் இல்லை, அவன் வேண்டுமென்றே உரையாடலை பரிகாசமாக மாற்றுகிறான் என்று. வித்யாபதி தாழ்ந்த குரலில் சொன்னான். “இதோ பார் இந்தூ! உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளணும் என்று நினைத்திருந்த போது திருமணம் என்பது வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயமாக, புனிதமான பந்தமாகத் தோன்றியது. எப்போ உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போய் விட்டதோ அந்தச் சடங்கைப் பற்றிய என் எண்ணமே மாறிவிட்டது. திருமணத்திடம் இப்பொழுது எனக்கு விலைமதிப்பு வாய்ந்த பந்தமாகத் தோன்றவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இணைந்து வாழ்க்கையை மேற்கொள்வதற்காக சமுதாயம் ஏற்படத்தியிருக்கும் ஒரு கட்டுபாடு மட்டும்தான். கல்யாணம் ஆகாவிட்டாலும் பரவாயில்லை. இருவர் இணைந்து வாழ்வதற்கு திருமணம் அவசியம் இல்லை. ஒருவரிடம் ஒருவருக்கு அன்பும் விருப்பமும் இருக்கும் வரையிலும் அந்த பந்தம் கடவுள் போட்ட முடிச்சாகிவிடும். இந்த உலகத்தில் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கும் தம்பதிகளைப் பார். இவர்களுடையது உண்மையான திருமணம் அல்ல. அவர்களுக்கு அதன் அர்த்தம் கூட தெரியாது. கல்யாணம் என்றால் மாட்டைக் கட்டிப் போடும் கொழுக்கொம்பாக இருக்கக் கூடாது. நாம் கல்யாணம் செய்து கொள்ளாததால் அந்த பிரமைகள் விலகிப் போகவில்லை. கல்யாணம் மட்டும் ஆகியிருந்தால் இந்த காதல் ஜோதி அணைந்து போயிருக்குமோ என்னவோ?” என்றான்.

இந்திரா மௌனமாக கேட்டுக் கொண்ருந்தாள். வித்யாபதி யோசிக்கும் தோரணை அவளுக்குப் பிடிக்கவில்லை. விளங்கவும் இல்லை. கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால் அந்தக் காதலின் விளைவுதான் என்ன? யாராக இருந்தாலும் கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால் நிம்மதியான, பாதுகாப்பான வாழ்க்கை எங்கிருந்து கிடைக்கும்? குழந்தைகள் இருந்தால்தானே வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும். கல்யாணம் ஆகிவிட்டால் பெண்ணின் வாழ்க்கை தோட்டத்தில் மலர்ந்த பூவைப் போல் மணம் பரப்பிக் கொண்டு இருக்கும். கல்யாணம் ஆகாத பெண்ணின் வாழ்க்கை தெருவில் வளரும் மரம் போன்றது. யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடுவார்கள். அதனால் பெண்ணைப் பொறுத்தவரையில் திருமணம் ரொம்ப முக்கியம்.

ஆண் பெண் இருவருக்கும் இடையே இருக்கும் காதல்தான் திருமணம் என்று வித்யாபதி நினைக்கிறான். அது சரியில்லை. தன்னுடைய காதலை யாருக்கும் பகிர்ந்தளிக்காமல் உனக்கே தருகிறேன். அப்படி இருக்கும் போது இனி நமக்குள் திருமணம் என்ற பந்தம் எதற்கு என்ற எண்ணம் போலும். தனக்கு அப்படி இல்லை. அவனுடைய காதலுடன் அவன் ரத்தத்தைப் பகிர்ந்து கொண்டு பிறக்கும் குழந்தைகள் வேண்டும். நித்யமும் சேர்ந்து வாழும் வீடு ஒன்று தேவை. சண்டை போட்டால் மட்டும் என்ன? சொல்லப் போனால் தானும் வித்யாபதியும் எத்தணை முறை சண்டை போடவில்லை? கல்யாணம் ஆகிவிட்டால் பிரிக்க முடியாத பந்தம் ஏற்பட்டு விடும். கல்யாணம் ஆகவில்லை என்றால் எல்லாமே பயம்தான்.

இந்திராவின் கண்களுக்கு முன்னால் சாந்தா சித்தியும், சங்கரன் சித்தப்பாவும் நிழலாடினார்கள். சித்திக்கும், சித்தப்பாவுக்கு ஒரு நிமிடம் கூட ஒத்துப் போகாது. கால் நூற்றாண்டு காலம் சேர்ந்து குடித்தனம் செய்தாலும். நான்கு குழந்தைகளை பெற்ற பிறகும் அவர்கள் போக்கு மாறவே இல்லை. சங்கரன் சித்தப்பா இறந்து போய்விட்டார். சித்தி அழுது தீர்த்துவிட்டாள். சாப்பாடு தூக்கம் விட்டு விட்டு கட்டிலோடு கட்டிலாகக் கிடந்தாள். “உயிருடன் இருந்த போது அப்படி சண்டை போட்டுக் கொண்டீர்கள் இல்லையா? இப்போ அவர் போனால் சனி ஒழிந்தது என்று நினைத்துக் கொள்ளாமல் ஏன் அழுகிறாய் சித்தீ?” என்று இந்திரா கேட்டாள். “இப்போ அவர் யாருடன் சண்டை போடுவார்? எனக்கு துணையில்லாமல் போய்விட்டதே?” என்று பிலாக்கணம் பாடினாள். அவளுக்கு அவர் துணையாம். வேடிக்கைதான் என்று நினைக்கத் தோன்றியது. துணை என்ற வார்த்தைக்கு அர்த்தம் இப்போ நன்றாகப் புரிகிறது.

“என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் இந்தூ?” என்றான் வித்யாபதி.

“ஒன்றுமில்லை” என்றாள் இந்திரா.

மறுநாள் இந்திரா வீட்டுக்கு வந்துவிட்டாள். வித்யாபதி இந்திராவின் வங்கி பாஸ்புக்கைத் திருப்பித் தந்து விட்டான். அதைப் பிரித்துப் பார்த்த இந்திரா திகைத்துப் போனாள். அதிலிருந்து ஒரு பைசா கூட அவன் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் எழுதிக் கொடுத்த செக்குகள் எல்லாம் அதனுள் வைக்கப் பட்டிருந்தன. சுமார் ஐந்தாயிரம் செலவழிந்திருந்தது அவளுக்காக. வித்யாபதி இவ்வளவு செலவு செய்தானா? முதலில் திகைப்பு ஏற்பட்டாலும் போகப் போக ரோஷம் வந்துவிட்டது. அவ்வளவு பணம் அவனுக்கு எங்கிருந்து வந்தது? எல்லாம் சீதாவுடையதுதானே? சீதாவின் பணத்தை அவன் செலவு செய்தால் தான் ஏற்றுக் கொண்டு விடுவாள் என்று எப்படி அவன் நினைத்தான்? இந்திரா ரத்னாவின் மூலமாக பணத்தை வங்கியிலிருந்து ட்ரா செய்து ஒரு கவரில் வைத்து அத்துடன் கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பினாள்.

“வித்யா!

ஏன் என்னை இப்படி ஏமாற்றினாய்? என் பணமே என்னிடம் இருக்கும் போது நீ இப்படி செலவழிப்பது நியாயமா? என்னை கதியில்லாதவளாக்கி விட்டாய் இல்லையா? எனக்கு உன்னுடைய அன்புதான் தேவை. ஏன் என்றால் அது உனக்குச் சொந்தமானது. நீ கொடுக்கும் பணத்தில் ஒரு பைசா கூட வேண்டாம். அது எனக்கு விஷத்திற்குச் சமம். ஏன் என்றால் அது சீதாவுடையது. தயவுசெய்து பணத்தைப் பெற்றுக்கொள். மறுத்துவிட்டு என்னை யாசகியாக்கி விடாதே.”

மாலையில் ரத்னா அந்தக் கவரைத் திருப்பிக் கொண்டு வந்தாள். அதில் பணத்துடன் வித்யாபதி எழுதியிருந்த கடிதமும் இருந்தது.

பைத்தியாக்காரி இந்தூ,

யாரையும் அவசரப்பட்டு வார்த்தைகளை சொல்லக்கூடாது. அதிலும் உன்னை உயிருக்கும் மேலாக பாவிக்கும் என்னை. நான் செலவழித்தப் பணம் சீதாவுடையது என்று எப்படி எண்ணிவிட்டாய்? நான் உனக்காக செலவழித்த பணம் சீதாவுடையது என்று நீ நினைத்தாய் என்றால் அதைவிட அவமானம் வேறு இல்லை. பணம் இல்லாவிட்டால் பிச்சை எடுத்தாவது உன்னிடம் தருவேன். அதுவும் கிடைக்காத போது நீ இறந்து போவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பேனே தவிர சீதாவின் பணத்தை மட்டும் உனக்காக செலவழிக்க மாட்டேன். நீ இந்த மாதிரி நினைப்பது தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது. இத்தனை வருட நட்பில் என்னைப் புரிந்துகொண்டது இவ்வளவுதானா என்றும் தோன்றுகிறது.

இந்தூ! தயவு செய்து ஒருநாளும் என்னை இதுபோல் எடைபோட்டு விடாதே. இந்தப் பணம் எனக்குச் சொந்தமானது. என் உழைப்பின் ஊதியம். நான் இந்த பேக்டரியில் மற்ற ஊழியர்களை விட அதிகமாக உழைப்பதற்காக வழங்கப் படும் சம்பளம் அது. அந்தப் பணத்தை உனக்காக செலவு செய்வது தவறா? அம்மாவுக்கு உடம்பு சரியாக இல்லாவிட்டால் நான் கவனித்துக் கொள்ள மாட்டேனா? உடன் பிறந்தவர்களில் தேவைகளை நான் பூர்த்தி செய்ய மாட்டேனா? அதேபோல் இந்தூவுக்கு உடலநலம் சரியில்லை என்றால் நான்தான் கவனித்துக் கொள்ளணும் என்று நினைத்தேன். அதனால்தான் நீ கொடுத்த செக்குகளை போடாமல் அப்படியே வைத்து விட்டேன். உன் உடல்நலம் தேறிவிட்டது. நீ மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டாய். இது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? நீ அனுப்பிய இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டால் அந்த சந்தோஷம் நிலைக்குமா? நீயே சொல்லு. ஒரு விஷயம் சொல்லட்டுமா? உனக்கு உடல்நலமில்லத சமயத்தில் நான் ரொம்ப சிக்கனத்தைக் கடைபிடித்தேன். ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு எத்தனையோ முறை நடந்து போயிருக்கிறேன். ஏன் என்றால் அந்த வழியில் பஸ்கள் வராது. ஆட்டோவில் போகலாம் என்றால் ரொம்ப செலவாகும். அந்தப் பணம் இருந்தால் உனக்கு ஒரு டஜன் சாத்துக்குடி வாங்கலாமே என்று தோன்றும். இதையெல்லாம் உன்னிடம் சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது.

நீ அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பியிருக்கிறேன். நான் உனக்கு யாரோ வேற்று மனிதன் என்று நினைத்தாயானால், நாளைக்கு ரத்னாவிடம் கொடுத்தனுப்பு. நான் பெற்றுக் கொள்கிறேன். இந்தூவுக்கு என்னுடைய அன்பை விட சுயஅபிமானம்தான் முக்கியம் என்று நினைத்துக் கொள்வேன்.

உன்னைப் பார்த்து எத்தனையோ யுகங்களாகி விட்டாற்போல் தோன்றுகிறது. உடனே ஓடி வந்து உன் மடியில் தலையைச் சாய்க்க வேண்டும். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்மீது கோபம் கொள்ளாதே.

வித்யா

கடிதத்தைப் படித்து முடித்ததும் இந்திரா ஹோவென்று அழுதுவிட்டாள். “நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்” என்று சுவற்றில் தலையை முட்டிக் கொண்டாள். ரத்னா ஓடி வந்து “என்ன இது?” என்று தடுத்தாள்.

“ரத்னா! வித்யாவை வரச்சொல்லி போன் செய். உடனே வரச்சொல்லு. எத்தனை வேலைகள் இருந்தாலும் ஒரு நிமிடம் வந்துவிட்டு போகச் சொல்லு.” சொல்லிக் கொண்டே அழத் தொடங்கினாள்.

ரத்னா அச்சத்துடன் சமையற்கட்டைப் பார்த்தாள். “உங்க அக்கா வீட்டில் இருக்கிறாளே?”

“இருந்தாலும் பரவாயில்லை. இதில் ரகசியம் எதுவும் இல்லை” ஆவேசமாக மொழிந்தாள். “ரத்னா! நீ போய் பண்ணுகிறயா? அல்லது நானே போய் பண்ணட்டுமா?”

“என்ன ஆவேசம் இது? நானே போன் பண்ணுகிறேன்.” ரத்னா கிளம்பினாள்.

– தொடரும்…

– பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனராணி அவர்களின் படைப்பு “Sithapathi” தமிழில் “சீதா(வின்)பதி” என்ற தலைப்பில்.

– சீதா(வின்)பதி (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன், முதற்பதிப்பு: 2015, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *