கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 2,757 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15

அத்தியாயம்-6

வித்யாதி தலை குனிந்தபடி படியேறி வந்துகொண்டிருந்தான்.

“அம்மா அம்மா அண்ணா வந்திருக்கிறான்.” பெரியவள் சத்தமாக குரல் கொடுத்தாள்.

“எங்கே? எங்கே” சுபத்ரா கைகாரியத்தை விட்டுவிட்டு வந்தாள். வித்யாபதி உள்ளே வந்தான். குழந்தைகள் அவனருகில் வந்து கட்டிக் கொண்டு கையைப் பிடித்துக் கொண்டார்கள்.

“என்னப்பா? நீ மட்டும் வந்தாயா? மருமகளும் கூட வந்திருக்கிறாளா?” ஆர்வத்துடன் தெருப்பக்கம் காருக்காக எட்டிப்பார்த்தாள்.

“நான் மட்டும்தான் வந்தேன் அம்மா.”

“மருமகள் ஏன் வரவில்லை?”

வித்யாபதி பதில் பேசவில்லை. தம்பி தங்கைகளை விடுவித்துக் கொண்டு தன்னுடைய கட்டிலில் அமர்ந்து கொண்டான். போதும் போதாதுமாக இருக்கும் இந்த வீட்டில் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. சமையலறையில் பாத்திரங்களில் ஓசை செவிகளுக்கு விருந்தாக இருந்தது.

“அண்ணா காபி குடிப்பானோ என்னவோ. பக்கத்து வீட்டு மாமியிடம் கேட்டு ஒரு டம்ளர் பால் வாங்கிக்கொண்டு வா.” தாய் குரல் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

வித்யாபதி கட்டிலில் படுத்துக் கொண்டான். மாமனார் வீட்டில் இருக்கும் ஐஸ்வரியம் இந்த வீட்டில் இல்லாதது உண்மைதான். ஆனால் இங்கே இருக்கும் நிம்மதி மட்டும் அங்கே இல்லை. அவனுக்கு அந்த சோபாக்கள், திரைச்சீலைகள், தரைவிரிப்புகள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதோ விலையுயர்ந்த ஹோட்டல்தான் நினைவுக்கு வந்தது. ஹோட்டல் அறை எவ்வளவு சௌகரியமாக இருந்தாலும் இரண்டு நாட்களில் திகட்டிவிடும். எப்போ வீட்டுக்குப் போவோம் என்று தோன்றும். அவன் கண்களுக்கு முன்னால் சீதா தோன்றினாள். அவனுக்குத் திடீரென்று தோன்றியது. சீதாவின் முன்னிலையும் ஹோட்டல் அறையைத்தான் நினைவுப்படுத்தும். கொஞ்ச நேரம் கழித்து தாய் காபி டம்ளர் கொண்டு வந்து கொடுத்தாள். வித்யாபதி எழுந்து உட்கார்ந்தான்.

“உங்க மாமியார் வீட்டில் எல்லோரும் சௌக்கியம்தானே?” குசலம் விசாரித்தாள்.

“எனக்குத் தெரியாது.”

“உங்க மாமனார் வீட்டில் இருக்கிறாரா?”

“நான் வரும்போது வாசலில் கார் இருக்கவில்லை.”

“அப்படி என்றால்?”

“ஆமாம் அம்மா. வாசலில் கார் இருந்தால் அவர் வீட்டில் இருப்பதாக அர்த்தம். இல்லாவிட்டால் இல்லை.”

“நன்றாகத்தான் இருக்கு.” காபி டம்ளரை எடுத்துக் கொண்டு போகப் போனவள் கேட்டாள். “உனக்கு அங்கே வசதியாகத்தானே இருக்கு?”

வித்யாபதி பதில் சொல்லவில்லை. சுபத்ரா மகழ்ச்சி பொங்கும் குரலில் “சுவாமிநாதய்யர் வீட்டில் சம்பந்தம் என்று தெரிந்தது முதல் அக்கம் பக்கத்தில் எல்லோரும் நம்மை எவ்வளவு மதிப்புடன் பார்க்கிறார்கள் தெரியுமா? நீ ரொம்ப கொடுத்து வைத்தவன் வித்யா. கல்யாணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அந்தச் சாப்பாடு, மரியாதைகள் எல்லாவற்றையும் ரொம்ப புகழ்ந்தார்கள்.”

வித்யாபதி மகிழ்ச்சியுடன் மிளிர்ந்துகொண்டிருந்த அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“சாப்பாட்டு நேரத்திற்கு இருப்பாயா? கிளம்பி விடுவாயா?”

“இருப்பேன் அம்மா” என்றான். நான் இனி அந்த வீட்டிற்கு போகமாட்டேன். போகச்சொல்லி என்னை வற்புறுத்தாதே என்று அம்மாவிடம் சொல்லத் தோன்றியது.

சுபத்ரா போய்விட்டாள். வித்யாபதி கட்டிலில் படுத்தப்படி யோசித்துக் கொண்டிருந்தான். அந்த விட்டில் ஒரு நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் அதிகமாக சம்பந்தம் இருக்கவில்லை. எல்லாம் இயந்திரகதியில் நடப்பதுபோல் தோன்றும். ஒருத்தருடன் பேச வேண்டுமென்றால் கூட வேலைக்காரன் மூலமாக சொல்லியனுப்புவார்கள். சாப்பிடும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் அதிகம். ரொம்ப சீரியஸாக சாப்பிட்டு முடிப்பார்கள். அந்த நிசப்தம் அவனுக்கு மூச்சு முட்டுவது போல் இருக்கும்.

அரைமணி நேரம் கழித்து சாப்பிட வரச்சொல்லி சின்ன தங்கை அழைக்க வந்தாள். தாய் எல்லோருக்கும் பரிமாறினாள். “இன்று தொட்டுக்கொள்ள காய் எதுவும் செய்யவில்லையப்பா.” குறைப்பட்டுக் கொண்டாள்.

“ஒருநாள் காய் இல்லாவிட்டால் என்ன ஆகும் அம்மா? இதற்கு முன் எத்தனை நாட்கள் காய் இல்லாமல் சாப்பிடவில்லை?” என்றான்.

“இதற்கு முன்பு வேறு விஷயம்.”

“இப்போ புதிதாக என்ன வந்துவிட்டது?” இரட்டிப்பது போல் கேட்டான்.

“என்ன வந்துவிட்டதா? அப்போ எங்க அண்ணாவாக இருந்தாய். இப்போ சுவாமிநாதய்யரின் மாப்பிள்ளை. அப்பாடீ! சுவாமிநாதய்யரின் மாப்பிள்ளை காய்கறி இல்லாமல் சாப்பிடுவதாவது?” சின்ன தங்கை கண்களை பெரிதாக்கி சுழற்றிக் கொண்டே போலி வியப்பைக் காட்டினாள். வித்யாபதி தங்கையின் தலையில் லேசாக குட்டினான. “நான் எப்போது சுபத்ராவின் மகன்தான். தெரிந்ததா?” என்றான்.

சுபத்ராவின் கண்களில் சட்டென்று நீர் கசிந்தது. இந்தக் காலத்து பையன்களுக்கும் வித்யாபதிக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. திருமணம் ஆனதும் மகன் மாறி விடுவான் என்றும், பணக்கார மாமனார் வீட்டு மோகத்தில் விழுந்து தம்மை மறந்து விடுவான் என்று பயந்தாள். வித்யாபதி வீட்டுக்கு வந்ததோடு அல்லாமல் முன்னைப் பொலவே தம்பி, தங்கைகளுடன் பழகுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள்.

“அப்பா எங்கே போயிருக்கிறார் அம்மா?” என்றான்.

“வேறு எங்கே? சீட்டாட்டத்திற்குத்தான். சாப்பிட வரமாட்டேன்னு சொல்லிவிட்டுப் போனார்.”

குழந்தைகள் சாப்பிட்டு விட்டு எழுந்துகொண்டார்கள். சுபத்ரா சாப்பிட உட்கார்ந்தாள். வித்யாபதி மணையைப் போட்டுக் கொண்டு தாயின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான்.

சூடாக சாப்பிடுவதாலோ, வேலை அலைச்சலினாலோ அல்லது கூரையின் தகர ஷீட்டுக்கள் வெயிலுக்கு சூடாகிவிட்டதாலோ சுபத்ராவுக்கு சாப்பிடும் போது வியர்த்துக் கொட்டியது. சாப்பிட்டுக் கொண்டே நடுநடுவில் விசிறியால் விசிறிக் கொண்டிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் முதல் நாள் வந்து வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று எவ்வளவு ஏசினார் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். வித்யாபதி தாயின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஊம் கொட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தான். தாய்க்கு பரிமாறுவது என்றால் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

“அப்பா என்ன சொன்னார்?” என்றான்.

“என்ன சொல்லப் போகிறார்? வாயைத் திறக்காமல் உட்கார்ந்திருந்தார். வீட்டுக்காரருக்கு உனக்கு பெரிய இடத்தில் கல்யாணம் ஆனதில் ரொம்ப பொறாமை. ‘நீங்கள் இப்போ பெரிய மனிதர்களாகி விட்டீர்கள். சின்ன போர்ஷனில் ஏன் குடியிருக்கப் போறீங்க? பெரிய வீடாக பார்த்துக் கொண்டு போய் விடுங்கள். முதல் தேதிக்கு விட்டை காலி செய்து விடுங்கள்’ என்றார்.”

விசிறியை வாங்கி விசிறிக் கொண்டே “நன்றாக இருக்கு” என்றான்.

“நீ அவர்கள் வீட்டுக்கு மாப்பிள்ளையானால் அந்தப் பணம் ஏதோ எங்கள் மடியில் வந்து விழுந்தாற்போல் எல்லோரும் பெசிக் கொள்கிறார்கள்” என்றாள்.

சுபத்ரா சாப்பிட்டு முடித்துவிட்டு பாத்திரங்களை ஒழித்தாள்.

“அம்மா” வித்யாபதி விசிறியை பரிசீலித்துக் கொண்டே அழைத்தான்.

“என்னப்பா?”

“நான் இனி அந்த வீட்டுக்குப் போக மாட்டேன். நீங்க சொன்னீங்க என்பதற்காக நான் அந்தப் பெண்ணை பண்ணிக் கொண்டேன். கல்யாணம் ஆனால் மாமியார் வீட்டுக்கு மருமகள் வருவது வழக்கம். ஆண்மகன் வேட்டாத்திற்குப் போவது சம்பிரதாயம் இல்லையே? நீ அப்பாவிடம் அவர்களுக்கு இந்த செய்தியை சொல்லியனுப்பு.”

“வித்யா… ஆனால்…”

“இனி என்ன சொன்னாலும் நான் கேட்பதாக இல்லையம்மா.” அவன் கையிலிருந்த விசிறியைக் கீழே போட்டுவிட்டு வந்தான். “இந்தத் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டு நடைபிணமாகி விட்டேன். அங்கே இருந்துகொண்டு கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிரையும் விட்டுவிடச் சொல்லி சொல்லாதே அம்மா. உனக்குக் கோடி புண்யம். எப்படிச் சொல்லி அப்பாவை சமாதானப்படுத்துவாயோ உன் இஷ்டம். நான் அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்காக கார் வந்தாலும் வரும். நான் வீட்டில் இருக்க மாட்டேன். நீ இந்த சமாசாரத்தை சொல்லி அனுப்பிவிடு.” போகப் போனவன் நின்றான். “உனக்கு எதுக்கும்மா பயம்? மகனைப் பெற்றெடுத்த தாய் நீ” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

சுபத்ரா திகைத்துப் போனவளாய் ரொம்ப நேரம் அப்படியே நின்றுவிட்டாள்.

வித்யாபதி அறையில் வந்து படுத்துக் கொண்டான். அவன் மனம் இப்பொழுது லேசாக இருந்தது. அந்த அளவுக்கு தான் வேண்டும் என்றால் சீதாவே இங்கே வருவாள். தான் மட்டும் செத்தாலும் சரி அங்கே போக மாட்டான். அவனுக்கு இந்திராவின் நினைவு வந்தது. மனம் முழுவதும் கலங்கிவிட்டது. இந்தத் திருமண விஷயத்தில் தன்னுடைய தவறு எதுவும் இல்லை என்றும், தவறு முழுவதும் இந்திராவுடையதுதான் என்று தெரிந்தாலும் அவன் மனம் சமாதானமாகவில்லை. தன்மீதே தனக்குக் கோபம் வந்தது. இந்திரா சுயநலமற்று, தனக்காக, தன்னுடைய குடும்பத்தாரின் நலனுக்காக யோசித்து இவ்வளவு தியாகம் செய்திருக்கிறாள். தன்னுடைய புத்தி எங்கே போய்விட்டது? அவ்வளவு நல்ல இதயம் கொண்ட இந்திராவை தான் இழக்கலாமா? “நீ கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால் விடு. நான் இப்படியே இருந்து விடுகிறேன்” என்று சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? இந்திரா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்? தான் தோற்றுப் போய்விட்டான்.

யோசனையில் மூழ்கியிருந்தவன் அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்து போனான்.

“அண்ணா! அம்மா எழுந்துகொள்ளச் சொன்னாள்.” தங்கை வந்து உலுக்கினாள். அவனுக்கு விழிப்பு வந்தது.

வித்யாபதி எழுந்து கொல்லையில் போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான். முன் அறையில் தந்தை உட்கார்ந்திருந்தார், தாய் அரிசியில் கல்லை பொறுக்கிக் கொண்டிருந்தாள். தந்தையும் மகனும் ஒருவரையொருவர் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார்கள்.

வித்யாபதி அறைக்குள் சென்று தலை வாரிக்கொண்டு, உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

அதற்குள் தந்தை அழைத்தார். “என்னடா? என்ன விசேஷம்?”

“விசேஷம் எதுவும் இல்லை.”

“எங்கே போகிறாய்? மாமியார் வீட்டுக்கா?”

“இல்லை. கடைத் தெருவுக்கு.” வித்யாபதி சொல்லிக் கொண்டிருந்த போதே கார் வந்து நின்றது.

டிரைவர் இறங்கி வந்து வித்யாபதியைப் பார்த்ததும் வணக்கம் தெரிவித்தான். “சார் கார் வந்திருக்கு.”

வித்யாபதியின் புருவங்கள் முடிச்சேறின. “நான் வரப்போவதில்லை. நீ போகலாம்.”

போனான்.

டிரைவர் வித்யாபதியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். பிறகு கிளம்பப்

வித்யாபதியின் தந்தை எழுந்து வந்தார். “இதோ வந்துவிடுவான். சித்த இரு. போய் விடாதே” என்று குரல் கொடுத்தார்.

டிரைவர் அவரை ஒரு நிமிடம் ஏறயிறங்கப் பார்த்தான். சரி என்று தலை அசைத்துவிட்டு போய் காரில் உட்கார்ந்து கொண்டான். குழந்தைகள் காரைப் பார்த்ததும் ஓடி வந்தார்கள். ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். டிரைவர் அவர்களை சிடுசிடு என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏண்டா போக மாட்டேங்கிறாய்? என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று உலுக்கி எடுத்தார்.

“நான் போக மாட்டேன். அம்மாவிடம் மதியமே சொல்லிவிட்டேன்” என்றான் தாயின் பக்கம் பார்த்துக் கொண்டே. அந்தம்மாள் குனிந்த தலை நிமிராமல் அரிசியைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் உன் இஷ்டம்தானா?” கோபமாகக் கத்தினார்.

“இல்லை. இதுவரையில் உங்கள் விருப்பப்படி நடந்துகொண்டேன். மற்றது என் விருப்பம். அந்தப் பெண்ணுக்கு என்னுடன் குடித்தனம் நடத்தணும் என்று இருந்தால் இங்கே வரச் சொல்லுங்கள். நான் மாமனார் வீட்டோடு வந்து இருப்பதாக வாக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.” வித்யாபதி செருப்பை மாட்டிக் கொண்டு வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தான்.

“நீ இந்த மாதிரி ஏன் செய்கிறாய் எனக்குத் தெரியும். அந்த இந்திராதான் இதெல்லாம் உனக்குக் கற்றுத் தருகிறாள்.” தந்தை பற்களை நறநறத்தார்.

போய்க் கொண்டிருந்த வித்யாபதி ஒரு நிமிஷம் நின்றான். “அப்பா அவள் பெயரை மட்டும் எடுக்காதீங்க. அந்தப் பெண் என்னைப் பண்ணிக்காமல் போனதால் நஷ்டமடைந்தது அவள் இல்லை. நீங்களும், நானும். நீங்க எதை இழந்தீங்கன்னு நான் சொன்னாலும் உங்களுக்கு இப்போ புரியாது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

வித்யாபதி வருவதைப் பார்த்து டிரைவர் காரை விட்டிறங்கி கதவைத் திறந்தான். ஆனால் வித்யாபதி அந்தப் பக்கம் கண்ணெடுத்துக் கூட பார்க்கவில்லை.

நடந்து போய்க் கொண்டிருந்த வித்யாபதியை ஏளனமாகப் பார்த்துக் கொண்டே டிரைவர் கதவைச் சாத்தினான். “காரிலிருந்து இறங்குங்கள்” என்று குழந்தைகள் அதட்டினான்.

“இப்போ செய்வது?” சுபத்ரா இயலாமையுடன் பார்த்தாள்.

“நம்மால் என்ன செய்ய முடியும்? போய் அவரையே கேட்கிறேன்.”

“அவர் நம்மீது எரிந்து விழுவாரோ என்னவோ?”

“அப்படி எதுவும் நடக்காது. இதையெல்லாம் அந்த இந்திராதான் செய்ய வைக்கிறாள் என்று சொன்னால் தீர்ந்தது. நான் போய் பேசிவிட்டு வருகிறேன். என் ஜரிகை அங்கவஸ்திரத்தை எடு.”

சுபத்ரா எழுந்து போய் கொண்டு வந்து தந்தாள். அதை எடுத்துப் போட்டுக் கொண்டு போய் காரில் ஏறி அமர்ந்தார். “போப்பா டிரைவர்” என்றார்.

இதுபோன்ற அடாவடி பேர்வழிகளை நிறையவே பார்த்திருக்கிறேன் என்பது போல் டிரைவர் அலட்சியமாக ஒரு உலுக்கலுடன் காரை ஸ்டார்ட் செய்தான். திடீரென்று குலுங்கியதால் ஒரு பக்கமாக சாயப் போனவர் எப்படியோ சமாளித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டார்.

அத்தியாயம்-7

சுவாமிநாதய்யர் சம்பந்தி சொன்னவற்றை எல்லாம் சுருட்டைப் பிடித்தபடி கேட்டுக் கொண்டார். “அந்த இந்திரா ஏதோ வேலை பார்ப்பதாக சொன்னீங்க. எங்கே?” என்று கேட்டார்.

“ஸ்டேட் பாங்கில் வேலை பார்க்கிறாள்.”

“எந்த பிராஞ்ச்?”

மூர்த்தி சொன்னார்.

“சரி விடுங்க. அந்தப் பெண்ணிடம் நெருங்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். பையன் என்னதான் சொல்கிறான்?”

“அவன் தனியாக எதுவும் சொல்லவில்லை.”

“ஆகட்டும். கல்யாணமான புதுசு. நாலுபேர் நாலு விதமாக பேசுவார்கள். உங்க மகன் இங்கே வருவதற்கு சுமுகமாக இல்லாவிட்டால் என் மகளையே உங்க வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். நான்கு நாள் வலுக்கட்டாயமாக சேர்ந்து இருந்தால் அவர்களே சமாதானமாகி விடுவார்கள்” என்றார் அவர்.

“ஆகட்டும்… ஆகட்டும்” என்றார் வித்யாபதியின் தந்தை. மாப்பிள்ளையை அதட்டியோ மிரட்டியோ தங்கள் வீட்டிற்கு வரவழைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பில் அவர் வந்தார். இவரானால் மகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகச் சொல்கிறார். அதைக் கேட்டதும் மூர்த்திக்கு தொண்டையில் பந்து அடைப்பட்டாற்போல் இருந்தது.

சுவாமிநாதய்யர் சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அரைமணிக்கெல்லாம் சீதாவை மாமியார் வீட்டுக்கு அனுப்பும் விதமாக ஏற்பாடு செய்தார். சீதா முதலில் தந்தையிடமிருந்து இந்த விஷயத்தைக் கேட்டதும் திகைத்துப் போனாள். “நானா? அவர்கள் வீட்டுக்கா?” என்றாள் வியப்புடன்.

“ஆமாம். நீயேதான் போகணும். உன் மதிப்பு என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. உனக்கு எந்த இடைஞ்சலும் வராமல் எல்லா ஏற்படுகளையும் நான் செய்கிறேன். நீ போகும் போது உன்னுடைய வளர்ப்பு கிளி, நாய்கள், முயல்கள், மீன் தொட்டி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போ”

“எனக்கு நினைவு தெரிந்த பிறகு யார் வீட்டிற்கும் போய் இருந்ததில்லை.”

“வாழ்க்கை என்றால் சில சமயம் செய்யாத காரியங்களையும் செய்ய வேண்டியிருக்கும்.”

“அப்பா!”

“என் கண் இல்லையா. நீ போய் இருந்தால் உன் நாய்களுக்கு பால் வாங்கித் தர முடியாமல் நம் வீட்டுக்கே ஓடி வந்து விடுவான்.”

”அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை அப்பா.” எங்கேயோ பார்த்துக் கொண்டே சொன்னாள் சீதா.

“நம்மைப் பிடிக்காதவர்களை வளைத்துப் போடுவதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது.”

“அவ்வளவு சிரமம் நாம் ஏன் பட வேண்டும் அப்பா?”

“நமக்கு மான மரியாதை இருப்பதால். அதைக் காப்பாற்றிக் கொள்ளணும் என்றால் நிறைய விஷயங்களில் தியாகம் செய்யணும். அதனால்தான் இந்த சமுதாயத்தில் பணம் இருப்பவனைவிட மான மரியாதை உள்ளவனுக்குத்தான் அதிக மதிப்பு. நான் எது சொன்னாலும் உன்னுடைய நன்மைக்காகத்தான். என் திறமையின்மீது உனக்கு நம்பிக்கை இருக்கு இல்லையா? என் தங்கம் இல்லையா. சீதா ரொம்ப நல்லப் பெண். அப்பாவின் பேச்சை ஒரு நாளும் தட்ட மாட்டாள்.”

சீதாவால் மேற்கொண்டு மறுக்க முடியவில்லை. சீதாவின் சுபாவம் அவருக்குத் தெரியும். அவளுடைய சம்மதம் வாங்க வேண்டும் என்றால் அதட்டுவதை விட கெஞ்சினால்தான் காரியம் நடக்கும்.

அரைமணி கழித்து சீதாவின் பயணத்திற்கு வேலைக்காரர்கள் மளமளவென்று எற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். வித்யாபதியின் தந்தை காரில் ஏற்றிக் கொண்டிருந்த சாமான்களை கலவரத்துடன், இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். கார் முன் சீட்டில் பொம்மைகளின் பெட்டி இருந்தது. அதன்மீது கூண்டில் ஊஞ்சலாடிக்கொண்டு இரண்டு கிளிகள் இருந்தன. பின் சீட்டில் இரண்டு நாய்கள் இருந்தன. அவை சீதாவின் மீது விழுந்து புரண்டு ரகளை செய்து கொண்டிருந்தன. சீதா எப்படியோ அவற்றை சமாதானப்படுத்தி உட்கார வைத்தாள். சீட்டின் கீழே சீதாவின் கால்களுக்கு அடியில் மூங்கில் கூடையில் நான்கு முயல்கள் இருந்தன. அவை பசும் புல்லைக் கடித்துக் கொண்டு காதுகளை தீட்டி சத்தங்களை கேட்டுக் கொண்டிருந்தன.

‘”அப்பா என் புத்தகங்கள்?”

“பின்னால் டிக்கியில் இருக்குமா” என்றார் அவர்.

“மீன்தொட்டி?”

“பின்னால் அனுப்பி வைக்கிறேன்.”

“பின்னல் சாமான்கள்?”

“டிக்கியில் கூடையில் வைத்திருக்கிறேன்” என்றாள் தாய்.

“மறுபடியும் கார் எப்படியும் வரும் இல்லையா. எல்லாவற்றையும் அனுப்பி வைக்கிறேன். நீங்க கிளம்புங்கள் சம்பந்தி” என்றார் சுவாமிநாதய்யர்.

மூர்த்தி தொய்ந்து போன முகத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். முன் சீட்டில் பெட்டியை கொஞ்சம் நகர்த்தி அவர் உட்காரந்து கொள்வதற்கு இடம் ஏற்படுத்தித் தந்தார். “கிளிக்கூண்டை கொஞ்சம் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று மடியில் வைத்தார்.

பின்னால் இருக்கும் நாய்கள் எங்கே மேலே பாயுமோ என்று மூர்த்திக்கு பயமாக இருந்தது. மிரள மிரள பார்த்துக் கொண்டிருந்தவரை தோளில் தட்டிக்கொடுத்து “உட்காருங்கள். அவை உங்களைக் கடிக்காது. வீட்டுக்குப் போனதும் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வீசியெறிந்தால் வாலை ஆட்டிக் கொண்டு உங்கள் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வரும்” என்று இலவசமாக அறிவுரை வழங்கினார் சுவாமிநாதய்யர்.


இந்திரா ஆபீஸிலிருந்து ரத்னாவின் வீட்டிற்கு வரும் போது தாமதமாகிவிட்டது. ஏனோ சமீபகாலமாக ரொம்ப களைப்பாக இருக்கிறது. இதற்கு முன்னால் இந்திரா எப்போதும் உற்சாகமாக, கலகலவென்று இருப்பாள். இப்பொழுது அதெல்லாம் வலிய வரவழைத்துக் கொண்ட நடிப்பாகிவிட்டது. தான் சீரியஸாக இருந்தால் அலுவலகத்தில் சக ஊழியர்கள் வித்யாபதியுடன் திருமணம் நடக்காததால் தாழ்வாக உணருகிறாள் என்று நினைக்கக் கூடும் என்ற பயத்தில் இரண்டு பங்கு உற்சாகத்துடன் வளைய வந்து கொண்டிருந்தாள்.

எல்லோரும் வேலைமெனக்கெட்டு ஏதோ ஒரு சாக்கில் பேசுவார்கள். வித்யாபதிக்குக் கல்யாணமாகிவிட்டதே என்பார்கள். இந்திரா எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொண்டாலும் முகம் வெளிறிப் போகும். அவர்களுக்கு அது வேடிக்கையாக இருக்கும். லீவ் எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்கலாம் என்றால் வீட்டில் அக்காவும், அவள் மாமியாரும் பழிப்பதைத் தாங்க முடியவில்லை. “அந்தப் பையன் மீது மோகத்தில் நல்ல வரன்களை எல்லாம் மறுத்துவிட்டாய். இப்போ பார் எப்படி ஏமாற்றிவிட்டானோ?”

இந்திரா அவர்களுக்கு பதில் சொல்லவில்லை. இயலாமையால் அழுகைதான் பொங்கி வந்தது.

அன்று மாலை ரத்னா போன் செய்தாள். “நீ ஆபீஸ் விட்டதும் நேராக எங்கள் வீட்டுக்கு வந்துவிடு.”

“ரொம்ப வேலை இருக்கு. விஷயம் என்னவென்று சொல்லேன்?”

“ஊஹும். போனில் சொல்லக் கூடியது இல்லை.”

“அப்படி என்னதான் சமாசாரம்?”

“அதான் போனில் சொல்ல முடியாது என்றேனே?” ரத்னா சலித்துக் கொண்டாள்.

“சரி சரி” என்றாள் இந்திரா.

“தாமதம் ஆனாலும் பரவாயில்ல. உன் வேலையை முடித்துக் கொண்டே வா” என்றாள் ரத்னா.

அப்படியே வருவதாகச் சொல்லிவிட்டு இந்திரா போனை வைத்துவிட்டாள்.

மாலை ஏழு மணி ஆகும்போது ரத்னாவின் வீட்டிற்கு போனாள் இந்திரா. கதவுகள் திறந்துதான் இருந்தன. இந்திரா உள்ளே போனாள். இவ்வளவு தூரம் போன் செய்த ரத்னா அவளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. வாசலுக்கு வரவில்லை. “ரத்னா’ என்று அழைத்துக்கொண்டே உள்ளே போனாள். ரத்னா பதில் குரல் கொடுக்கவில்லை. “ரத்னா” இன்னொரு தடவை அழைக்கப் போன இந்திரா நின்றுவிட்டாள். அங்கே வித்யாபதி நின்றிருந்தான்.

இந்திரா திகைத்துப் போனவளாகப் பார்த்தாள்.

“ரத்னா இல்லை. கடைத்தெருவுக்குப் போயிருக்கிறாள்.” இந்திராவைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

இந்திராவுக்கு உடம்பில் குப்பென்று மின்சாரம் பாய்ந்தாற்போல் இருந்தது. இதற்கு முன்பு இதேபோல் ரத்னாவின் வீட்டில் சந்தித்துக் கொள்வார்கள். தனக்காகக் காத்திருக்கும் வித்யாபதி இதே போல் “ரத்னா இல்லை. கடைத்தெருவுக்குப் போயிருக்கிறாள்” என்பான். தான் உடனே அவன் கைகளில் சரணடைந்து விடுவாள். அந்தச் சந்திப்பு எவ்வளவு இனிமையாய் இருக்கும்? சுவர்க்கத்தில் இருப்பது போல் தோன்றும். இப்போ நரகத்தில் இருப்பது போல் தோன்றியது. வித்யாபதியின் முகத்தில் பெயருக்குக் கூட முறுவல் தென்படவில்லை. அவனுக்கும் அதே நினைப்பு போலும்.

“உட்காரந்துகொள் இந்திரா” என்றான்.

இந்திரா உட்காரவில்லை. போவதற்காக திரும்பினாள். ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை பேசாமல் கிளம்புவதற்கு கால்கள் ஒத்துழைக்கவில்லை. “ரத்னா வந்தால் நான் வந்து விட்டுப் போனதாக சொல்லுங்கள்” என்றாள். பிறகு தலை குனிந்தபடி வாசலை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

“இந்தூ!” அவன் குரலில் இருந்த வேதனை இந்திராவைத் தடுத்து நிறுத்தியது.

“ஒரு வார்த்தை கேட்டுவிட்டுப் போ.”

பின்னால் திரும்பியவள் என்னவென்பது போல் பார்த்தாள்.

“என்மீது உனக்கு இன்னும் கோபம் போகவில்லையா?” தீனமாக ஒலித்தது அவன் குரல்.

இந்திராவின் உதடுகள் துடித்தன. “கோபமா? எதற்கு? என்னுடைய கையாலாகாததனத்துக்கு நீங்க என்ன செய்வீங்க? நீங்க ஒன்றும் என்னை ஏமாற்றவில்லையே, உங்கள் மீது கோபம் வருவதற்கு?”

“ஒரு நிமிஷம் உட்காரமாட்டாயா ப்ளீஸ்.” வேண்டுகோள் விடுப்பது போல் சொன்னான்.

“ஒரு நிமிஷம் என்ன மணிக்கணக்காய் உட்கார்ந்து கொள்கிறேன். ஆனால் என்ன பயன்? வேற்று மனிதர்களுடன் பேசுவதென்றால் எனக்கு வார்த்தையே வராது.”

இந்திராவின் வாயிலிருந்து வேற்று மனிதர்கள் என்ற வார்த்தை அவன் இதயத்தை அம்பாய் தாக்கியது. அந்த வேதனை முகத்தில் வெளிப்படாமல் எப்படியோ சமாளித்துக் கொண்டான். “ஏதாவது பேசு இந்திரா.”

“உன் மனைவியை நன்றாக வைத்துக் கொண்டு நல்ல கணவன் என்று பெயர் வாங்கு.”

“இதுதானா நீ சொல்ல நினைத்தது?”

“வேறு என்ன சொல்லட்டும்? சொல்வதற்கு நம் நடுவில் என்ன இருக்கிறது? இங்கே எதற்காக வந்தாய்? யாருக்காவது இது தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?”

“தவறுதான் இந்திரா. உன்னுடைய வேதனையைப் பற்றி யோசிக்கவில்லை. நான் எவ்வளவு வேதனையில் இருக்கிறேன் என்று உனக்குத் தெரியாது.”

“வேதனை! உனக்கென்ன வேதனை? சுவாமிநாதய்யரின் மாப்பிள்ளையாகிவிட்டாய். இனி உனக்கு என்ன குறைச்சல்?”

அவன் இதழ்களில் வேதனை கலந்த முறுவல் படர்ந்தது. “குறை இல்லாதது உண்மைதான். ஆனால் அந்த சுகங்களை அனுபவிப்பதற்கு மனம் என்று ஒன்று இருக்கணும் இல்லையா? அந்த மனதை நீ கொள்ளையடித்து விட்டாய். இந்த உடல் மட்டும்தான் சீதாவைக் கல்யாணம் செய்து கொண்டது.”

இந்திராவுக்கு அந்த நிமிடமே அவன் கைகளில் சரணடைய வேண்டுமென்று தோன்றியது. ஆனால் பெரும் முயற்சி செய்து கட்டுப் படுத்திக் கொண்டாள். “வித்யா! நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குப் புரிந்துவிட்டது. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள். அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்படும் கேவலமான குணம் எனக்கு இல்லை. நீ இப்போ சீதாவின் கணவன். உனக்கு மதிப்பைத் தவிர வேறு எதையும் என்னால் கொடுக்க முடியாது. நீ சீதாவைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாய். அந்தப் பெண்ணை எப்படிப் பார்த்துக் கொள்வாயோ உன் இஷ்டம். ஆனால் என்னைப் பற்றி யோசிக்க வேண்டாம். என்னுடன் பேசவும் முயற்சி செய்ய வேண்டாம். இனி ஒருநாளும் இதுபோல் தனிமையில் சந்திக்க முயற்சி செய்யாதே.” இந்திரா விருட்டென்று திரும்பிப் போய்விட்டாள்.

வித்யாபதி அப்படியே நின்றுவிட்டான். அவனுக்கும் இந்திராவுக்கும் இடையே எதோ பிளவு ஏற்பட்டாற்போல் உணர்ந்தான். இந்திரா தனக்கு கிடைக்காமல் தொலைவுக்குப் போய் விட்டாற்போல் தோன்றியது.

ரத்னா காய்கறி வாங்கி வந்தாள். “இந்திரா வந்தாளா?”

“வந்தாள்” என்றான். ஆனால் அவன் முகத்தில் உற்சாகம் தென்படவில்லை.

“சீதா எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டாள் ரத்னா.

“நன்றாகத்தான் இருக்கிறாள்” என்றான். இனி அங்கே ஒரு நிமிடம் கூட இருக்க அவனுக்கு பிடிக்கவில்லை. ரத்னாவிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்து விட்டான்.

‘இனி ஜென்மத்தில் மாமியார் விட்டுக்குப் போகவே மாட்டேன்’ என்று நினைத்துக் கொண்டான்.

வித்யாபதி ஊர் சுற்றிவிட்டு நேரம் கழித்து வீட்டுக்குப் போனான். “அம்மா!” என்று கதவைத் தட்டினான். தாய் குரல் கொடுக்கவில்லை. ஆனால் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டது. அவன் குழப்பமடைந்தான். காதுகளை தீட்டிக் கொண்டு கேட்டான். சந்தேகமே இல்லை. நாய்கள் குறைக்கும் சத்தம் தங்கள் வீட்டிலிருந்துதான் கேட்டுக் கொண்டிருந்தது.

தாய் வந்து கதவைத் திறந்தாள். வித்யாபதி உள்ளே வந்தான்.

“சீதா… சீதா… உன் புருஷன் வந்துவிட்டான்.” கூண்டில் இருந்த கிளி கத்தியது.

அவன் தலையை நிமிர்த்தி அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கால்களுக்கு நடுவிலிருந்து முயல் ஒன்று ஒடியது. அவன் துள்ளிக் குதித்து விட்டு ஒரு பக்கமாக நின்று கொண்டான். அறை முழுவதும் மரப்பெட்டிகள். சூட்கேஸ்கள் என்று எங்கும் சாமான்கள் பரத்தியிருந்தன. நாய்கள் இரண்டும் தந்தையின் கட்டில் மீது ஏறி படுத்திருந்தன.

“என்னம்மா இதெல்லாம்?” என்றான்.

“நீ போகவில்லை இல்லையா, மருமகள் இங்கே வந்துவிட்டாள். இனி மேல் இங்கேதான் இருப்பாளாம்.” தாழ்ந்த குரலில் சொன்னாள் தாய்.

அவன் விளக்கை அணைத்துவிட்டு தாயின் பின்னால் சமையலறைக்குள் வந்தான். சுபத்ரா அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே சொன்னாள். “மாலையில் வந்தாள். நானும் வியப்படைந்து விட்டேன். அப்பாதான் அழைத்துக் கொண்டு வந்தார். அந்த நாய்களுக்கு படுத்துக் கொள்வதற்கு முன்னால் பால் குடிக்கும் பழக்கமாம். நம் வீட்டிற்கே பால் போறவில்லை. ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தாள். கிரோசின் வாடை அதுக்குப் பிடிக்கவில்லையாம். தொடக்கூட இல்லை. ஒரே கத்தல். இப்பொழுதுதான் கொஞ்சம் ஓய்ந்திருக்கு. மருமகளுக்கு உன்னுடைய அறையைக் கொடுத்துவிட்டு அப்பாவின் கட்டிலை நாய்களுக்கு போட்டேன். குழந்தைகளும் நானும் சமையலறையில் படுத்துக் கொண்டோம்” என்றாள்.

சீதா வருவாள் என்று வித்யாபதி கனவில்கூட நினைக்கவில்லை. அவன் சாப்பிட்ட பிறகு மனைவி இருந்த அறைக்குள் போகவில்லை. நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டு ஜன்னலில் கால்களில் நீட்டிக் கொண்டான்.

சீதா வந்தால் வரட்டும். தனக்கென்ன வந்தது? சீதாவின் திமிர் அடங்கி தன்னை ஒரு மனிதனாக மதித்தால்தான் அவளிடம் பேசுவான். ஆனால் அவனுக்கு அந்த நாய்கள், முயல்கள், கிளிகள், சாமான் சட்டுகள் எல்லாம் பார்த்தால் பயமாக இருந்தது. ஏற்கனவே வீடு சின்னது. தங்களுக்கே போறாது. இதில் மிருகங்களுக்கும் பறவைகளுக்கு எங்கே இடம் இருக்கும்? நினைத்துப் பார்க்கும் போதே எரிச்சல் ஏற்பட்டது.

அத்தியாயம்-8

மறுநாள் காலையில் விடியும் போதே கிளி “சீதா எழுந்துகொள்” என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தது. சீதா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஆனால் வித்யாபதி எழுந்துவிட்டான். விட்டில் இருந்தால் சீதாவுடன் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிவரும் என்ற பயம் ஏற்பட்டது. வாய் கூட கொப்பளிக்காமல் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியேறிவிட்டான்.

வேலைக்காரி “அம்மா” என்று அழைத்தபடி பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு உள்ளேவரப் போனாள். அந்தக் குரலைக் கேட்டது நாய்கள் இரண்டும் எழுந்துகொண்டு கோரஸாக உச்சஸ்தாயில் குலைக்க ஆரம்பித்தன.

அந்தச் சத்தத்திற்கு அந்த வீட்டு நபர்கள் மட்டுமே இல்லை. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூட எழுந்துகொண்டு விட்டார்கள். வேலைக்காரி நாய்களை பார்த்ததும் ”அம்மாடியோவ்” என்று அந்தப் பக்கம் ஓடினாள். வேலைக்காரி ஓடியதைப் பார்த்து நாய்கள் கட்டிலை விட்டிறங்கி பின்னால் துரத்தின. வேலைக்காரி கத்திக் கொண்டே பயத்தில் பால்பாக்கெட்டை கீழே போட்டுவிட்டாள். நாய்கள் பால்பாக்கெட்டை வாயில் கவ்விக் கொண்டன.

அதற்குள் அந்த இடத்திற்கு வந்த சீதா “என்ன சத்தம்? இப்படி வாங்க” என்று நாய்களை அதட்டினாள். ஏற்கனவே பால்பாக்கெட் ஓட்டையாகி தரையில் பால் ஓடிக் கொண்டிருந்தது. நாய்கள் இரண்டும் சத்தம் போட்டுக் கொண்டே பாலை நக்கத் தொடங்கின.

சுபத்ராவும் குழந்தைகளும் எழுந்து வந்தார்கள். வேலைக்காரி கேட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள். “அம்மாடி! அந்த நாய்களை கட்டிப் போட்டால் தவிர நான் உள்ளே வர மாட்டேன்” என்றாள்.

“இவை கடிக்காது. கட்டிப் போடுவதற்கு சங்கிலி இல்லை. கட்டிப்போடும் வழக்கமும் இல்லை” என்றாள் சீதா.

“அப்படி என்றால் நான் வரமாட்டேன்” என்றாள் வேலைக்காரி.

“இரு, ஒரு காரியம் செய்கிறேன்.” சீதா அவற்றை அறைக்குள் தள்ளி வெளியே கதவைத் தாழ் போட்டாள்.

அதற்குப் பிறகு வேலைக்காரி உள்ளே வந்தாள். தரையில் ஓடிக் கொண்டிருந்த பாலை பார்த்துவிட்டு சுபத்ரா பெருமூச்சு விட்டாள். இனி மாலை வரையில் பால் கிடைக்காது. மருமகளும் விட்டில் இருக்கிறாள்.

உள்ளே வந்த வேலைக்காரியிடம் எங்கேயாவது போய் பால் வாங்கி வரச்சொல்லி கெஞ்சினாள். அவளும் அலைந்து திரிந்துவிட்டு கால் லீட்டர் தண்ணிப் பால் கொண்டு வந்தாள்.

சுபத்ரா காபி கலந்து சீதாவிடம் கொடுத்தாள். சீதா அந்த காபியை வாயில் ஊற்றிக்கொண்டதும் துப்பிவிட்டாள். “சீ… இது காபியா? எங்க வீட்டில் நாய்கள் கூட குடிக்காது” என்றாள்.

“பால் சிந்திவிட்டதும்மா. வேறு பால் கிடைக்கவில்லை” என்றாள் சுபத்ரா விளக்கம் தருவது போல்.

சீதா பதில் பேசவில்லை. அந்தம்மாள் கட்டியிருந்த பழையப் புடவையை பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கள் வீட்டு சமையல்காரி இதைவிட நல்ல புடவையை உடுத்துவாள்.

எட்டு மணி ஆகும்போது அந்த வீட்டின் முன்னால் கார் வந்து நின்றது. காரிலிருந்து வேலைக்காரன் இறங்கி வந்தான். அவன் கையில் பளபளவென்று ஸ்டீல் கேரியர் மின்னிக் கொண்டிருந்தது.

“சின்னம்மா! உங்களுக்கும் நாய்களுக்கும் பிரேக்பாஸ்ட் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். நாய்கள் ஏற்கனவே கதவைக் கீறிக் கொண்டும் வாலை ஆட்டிக் கொண்டும் ரகளை செய்து கொண்டிருந்தன.

அவன் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தான். அங்கே வித்யாபதி எழுதும் மேஜைமீது இருந்த புத்தகங்களை எடுத்து கீழே போட்டுவிட்டு அந்த இடத்தில் கேரியரை, பிளாஸ்கை வைத்தான். முதலில் சீதாவிடம் காபியை நீட்டினான். “டிரைவர் வருவதற்கு தாமதமாகிவிட்டது. அய்யா அவனை அடிக்கவே போய்விட்டார். நீங்க எழுந்து கொண்டு காத்திருக்கப் போறீங்களே என்று நடுங்கிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

சீதா காபி குடிக்கும்போது அவன் நாய்களுக்கு பாலையும் பிரட்டையும் கொடுத்தான். டிரைவர் முயல்களுக்கு தழைகளை எடுத்துப் போட்டான். அவை பரபரவென்று இலைகளை தின்றுகொண்டே கண்ணாடி குண்டுகளை போல் கண்களை சுழற்றிக் கொண்டிருந்தன.

“சீதா பசி பசி” கிளி கத்தியது.

சீதா கூடைக்குள் தேடி கொய்யாப் பழத்தை எடுத்துப் போட்டாள்.

சுபத்ரா வாசலில் நின்றிருந்தாள். குழந்தைகள் அம்மாவின் பக்கத்தில் சாய்ந்தபடி நின்றுகொண்டு வீட்டில் சினிமா ஷூட்டிங் நடப்பது போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சீதா காபியைக் குடித்துக் கொண்டே “எனக்கு பசியாக இல்லை. டிபனை அவர்களுக்குக் கொடு” என்றாள்.

“மாப்பிள்ளை சார் எங்கே?” அவன் தாழ்ந்த குரலில் கேட்டான்.

“அந்தம்மாவிடம் கேட்டுக்கொள்” என்றாள் சுபத்ராவைச் சுட்டிக்காட்டிக் கொண்டே.

“பையன் வீட்டில் இல்லை தம்பி.” பணிவான குரலில் சொன்னாள் சுபத்ரா. வேலைக்காரன் கேரியரையும், குழந்தைகளையும் மாறி மாறி பார்த்தான். பிறகு தட்டில் வைத்துவிட்டு அவர்களிடம் கொடுத்தான்.

பத்து மணியாகும் போது வித்யாபதியின் தந்தை வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் நாய்கள் மறுபடியும் குலைக்கத் தொடங்கின. “அப்படி திரும்பி கொல்லை கதவுப் பக்கமாக வாங்க.” சுபத்ரா குரல் கொடுத்தாள். அவர் கொல்லைப்பக்க கதவு வழியாக வந்தார்.

அங்கே கொல்லையில் கட்டில்களும், பாய்களும் பரத்தியிருந்தன. அவற்றின் மீது புத்தகங்கள் வெயிலில் காய வைக்கப்பட்டிருந்தன.

“இதெல்லாம் என்ன?’ என்றார் அவர் வியப்புடன் பார்த்துக் கொண்டே.

“மருமகளுடைய புத்தகங்கள். தொடர்கதைகளை படிப்பாளாம். அவற்றை கத்தரித்து பைண்ட் செய்வாளாம். செல்லரித்துப் போகாமல் இப்படி காயவைத்து மறுபடியும் பெட்டியில் பத்திரப்படுத்துவாளாம்.”

அப்படியா என்பது போல் பார்த்தார்.

அத்தியாயம்-9

சீதாவின் வருகை அந்தத் தெருவில் உள்ள அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்டுகளுக்கு முக்கியச் செய்தியாகிவிட்டது. தொடக்கத்தில் சீதாவைப் பற்றி, அவளுடைய வளர்ப்பு பிராணிகளைப் பற்றி கதைக் கதையாக பேசிக்கொண்டார்கள். நாளாவட்டத்தில் அந்தக் கதைகள் எல்லாம் சீதாவிடம் ஈர்ப்பை ஏற்படுத்தின.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஏதோ ஒரு சாக்கு வைத்துக் கொண்டு சுபத்ராவின் வீட்டுக்கு வந்து பேசுவார்கள். அவளிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய கண்களும் காதுகளும் சீதா இருக்கும் அறையின் மீதே நிலைத்திருக்கும். சீதா வந்ததால் கஷ்டங்களும் இருந்தன. சுகங்களும் இருந்தன. கஷ்டம் என்றால் அந்த வீடு அந்தத் தெருவில் இருப்பவர்களுக்கு பொருட்க்காட்சியைப் போல் மாறிவிட்டது. எப்போதும் யாராவது ஒருத்தர் வந்து கொண்டே இருப்பதால் வீட்டு வேலைகளுக்கு இடைஞ்சலாக இருந்ததோடு சுபத்ராவுக்கு எரிச்சல் ஏற்பட்டது. தொடக்கத்தில் சுபத்ரா தன்னுடைய மருமகளைப் பார்ப்பதற்காக எல்லோரும் வந்து கொண்டிருப்பதைக் கண்டு பெருமையாக உணர்ந்தாள். வந்தவர்களுக்கு பாய் போட்டு உட்காரச்சொல்லி மரியாதைகளை செய்து காபி கொடுத்து உபசரித்து வந்தாள். போகப் போக வேலை பளு அதிகமானதால் சோர்வு ஆட்கொண்டது. ஏற்கனவே வீட்டு வேலைகளுடன் ஒரு நிமிடம் ஓய்வு கிடைக்காது. மேலும் இந்த உழைப்பு வேறு என்று சலிப்பு ஏற்பட்டது.

சீதாவின் வருகையால் சுகங்களும் ஏற்பட்டன. இதுவரையில் வாரத்திற்கு நான்கு நாட்கள் டிமிக்கிக் கொடுக்கும் வேலைக்காரி இப்பொழுது ஒருநாள் கூட லீவ் போடாமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். சீதா சாப்பிட்ட பிறகு கேரியரைக் கழுவி வைப்பது அவளுக்கு ரொம்பப் பிடித்தமான வேலை. அதில் மணக்க மணக்க சாம்பாரும் பொரியலும் கொஞ்சமோ நஞ்சமோ பாக்கியிருக்கும். சுபத்ராவுக்கு இந்த கேரியர் விஷயம் பிடிக்கவே இல்லை. தம் வீட்டிற்கு வந்த மருமகள் தங்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது அவளுடய விருப்பம். மகனுக்கும் மருமகளுக்கும் சமையலறையில் அருகருகில் மணையைப் போட்டு உட்கார வைத்து எல்லோருடன் சேர்த்து தன் கையால் பரிமாற வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாள். ஆனால் வித்யாபதி அந்த விருப்பத்தை முதலிலேயே கிள்ளி எறிந்துவிட்டான். “அது போன்ற எதிர்பார்ப்புகள் எதுவும் வைத்துக் கொள்ளாதேம்மா” என்றான்.

சீதா தொடக்கததில் வேலைக்காரன் வேலைக்காரன் கொண்டு வந்த கேரியரை சமையலறையில் வைக்கும்படிதான் சொன்னாள். சுபத்ரா அதைத் திறந்து பார்த்தாள். அதில் இருப்பது சரியாக இரண்டு பேருக்கு மட்டும் போதுமானதாக இருந்தது. வித்யாபதி இந்த கேரியர் விஷயம் கேள்விப்பட்டதும் எரிச்சலடைந்தான். “அம்மா! இதென்ன பித்தலாட்டம்? நம்மோடு இருக்கணும் என்று இருந்தால் நீங்க சமைத்ததைச் சாப்பிட்டுவிட்டு இருக்கச் சொல்லு. இல்லாவிட்டால் போகட்டும். அவ்வளவுதானே தவிர இந்த மாதிரி அங்கே இருந்து சாப்பாடு கொண்டு வரக் கூடாதுன்னு சொல்லிவிடு” என்றான்.

சீதா கதவிற்கு அருகில் வந்து நின்றாள். “அத்தை! நீங்க சமைத்ததைச் சாப்பிட எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அப்படிச் செய்தால் எனக்கு அரை வயிறுதான் நிரம்பும். பட்டினிக் கிடந்து எனக்குப் பழக்கம் இல்லை. இதோ இந்த கேரியரில் இருப்பதை எல்லாம் பார்த்தீங்க இல்லையா? நாளை முதல் இதே மாதிரி சமைப்பதாக இருந்தால் கேரியர் வேண்டாம் என்று நானே சொல்லி விடுகிறேன்” என்றாள்.

சுபத்ரா மகன் பக்கம் பார்த்தாள். வித்யாபதி பதில் சொல்ல முடியாதவனாய் கையிலிருந்த பேப்பரை அங்கிருந்த மேஜைமீது வீசிவிட்டு கோபமாக போய்விட்டான்.

கேரியர் வருவது நிற்கவில்லை. வேலைக்காரியிடம் என்ன சொன்னாளோ என்னவோ. அவள் டஞ்சனாய் அந்த வேளைக்கு வருவாள். சீதாவுக்கு பரிமாறிவிட்டு போவாள். பாக்கியிருப்பதை வித்யாபதிக்காக சமையலறையில் கொண்டு போய் வைத்தாள் சீதா. வித்யாபதி வந்ததும் சுபத்ரா அதை எடுத்து பரிமாறப்போனாள். அவன் தடுத்துவிட்டான். “தம்பி தங்கைகள் எதை சாப்பிட்டார்களோ அதையே எனக்குப் போடுங்கம்மா” என்றான். அதற்குப் பிறகு சீதா சாப்பிட்டு மிஞ்சியதை வேலைக்காரி எடுத்துக் கொண்டுப் போகத் தொடங்கினாள்.

வேலைக்காரியின் தயவால் இந்த விஷயங்கள் எல்லாம் அந்தத் தெருவில் எல்லோருக்கும் தெரியவந்தன. அவர்களால் சுபத்ராவிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. அந்த அம்மாளுக்கு அவமானமாக இருந்தது.

தன்னுடைய எரிச்சலை எல்லாம் கணவர் மீது காட்டினாள். “உங்களுக்கு எப்போதும் சீட்டாட்டம்தான். வீட்டில் என்ன நடக்கிறது என்று கவனிக்க வேண்டாமா?” என்று பிடுங்கி எடுத்தாள்.

“இப்போ என்னவாகிவிட்டது?” என்றார் அவர்.

“என்னவாகிவிட்டதா? இந்தத் தெருவில் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். இதென்ன குடித்தனம்? இதென்ன வழக்கம்? அந்தப் பாழாய் போன டிபன்கள், கேரியர்கள் சுமந்து கொண்டு வருவதாவது? கொஞ்சமாவது நியாயமாக இருக்கிறதா? நேற்று நம் பக்கத்து வீட்டுக்காரி சொல்லிக் கொண்டிருக்கிறாள். காலையில் அந்தக் கார் வந்தால் சரியாக ஏழுமணி ஆனாற்போலவாம். எல்லோரும் கடியாரத்தை சரியாக திருப்பி வைத்துக் கொள்கிறார்களாம்.”

“போகட்டும் நல்லதுதானே. இத்தனை நாட்கள் கழித்தாவது நம் வீட்டிற்கு ஒரு பெருமை வந்து சேர்ந்திருக்கிறது.” சிரித்துக் கொண்டே சொன்னார்.

“போதுமே. கொஞ்சமாவது வெட்கம் மானம் இல்லையா? என்னால் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை.”

“என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?”

“அவனை மாமியார் வீட்டிற்கு போய் இருக்கச் சொல்லுங்கள்.”

“என்னால் முடியாது. அவன் கேட்க மாட்டான். பிடிவாதக்காரன்.”

“இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருக்கும்?”

“அந்தக் கடவுளுக்குத்தான் தெரியணும்.”

“தலையெழத்து” சுபத்ரா நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

“பணக்கார வீட்டு சம்பந்தம் வேண்டும் என்று ஆசைப்பட்டாய் இல்லையா? இப்போ வருத்தப்பட்டுக் கொள்வானேன்?” அனுபவி என்பது போல் பார்த்தார்.

சுபத்ராவுக்கு வருத்தமாக இருந்தது. பெரிய இடத்துப் பெண். மகன் சந்தோஷமாக இருப்பான் என்று நினைத்தாள். இப்படி கேலிக்கூத்தாகிவிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

இரண்டு வாரங்களில் வாரங்களில் சீதா அந்தத் தெருவில் எல்லோருக்கும் வேண்டியவளாகிவிட்டாள். பெண்கள் எல்லோருக்கும் சீதாவைப் பிடித்துப் போனதற்கு பல காரணங்கள் இருந்தன.

சீதாவிடம் வாரப்பத்திரிகைகள், மாத நாவல்கள் இருந்தன. இரவல் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். தையல் பின்னல் எல்லாம் தெரியும். கேட்பவற்களுக்கு பொறுமையாக சொல்லியும் கொடுப்பாள். அதோடு சினிமா பற்றிய செய்திகளை சொல்லுவாள். அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு மதிய நேரத்தில் சீதாவிடம் வருவது பழக்கமாகிவிட்டது. எல்லோரும் நேராக சீதாவிடம் வருவார்கள். சுபத்ராவும் குழந்தைகளும் கொல்லை திண்ணையில் பாய் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.

“உங்க மாமியார் உன்னிடம் நன்றாகப் பேசுவாளா?” சீதாவிடம் விசாரிப்பார்கள்.

“ஏன் பேச மாட்டாள்? நன்றாகத்தான் பேசுவாள்” என்பாள் சீதா.

“நீங்கள் இருவரும் அதிகமாக பெசிக் கொள்வதாகத் தெரியவில்லையே?” ”அதுவா? எனக்கும் அத்தைக்கும் பேசுவதற்கு என்ன விஷயம் இருக்கும் சொல்லுங்கள்? புத்தகம் படிக்க மாட்டாள். தையல் பின்னல் தெரியாது. சினிமாவும் பிடிக்காது. இனி வேறு என்ன பேசுவது?”

கேட்டவளுக்கு அந்த பதில் திருப்தியைத் தரவில்லை. சீதா சாமர்த்தியமாக பதில் சொல்வது போல் தோன்றியது. “நீயும், உன் புருஷனும் சேர்ந்து சினிமாவுக்கோ, வேறு எங்கேயாவதோ போனதாக தெரியவில்லையே?”

“எப்படிப் போக முடியும்? அவருக்கு இந்தி சினிமாதான் பிடிக்கும். எனக்கோ தமிழ் படம்தான் பிடிக்கும். அதோடு அவர் கம்பெனியில் வேலை கற்று வருகிறார். வீட்டில் இருப்பதே அரிது.”

“இந்த தலையெழுத்து உனக்கு ஏன்? கப்பல் மாதிரி அங்கே வீடு இருக்கும் போது அதை விட்டுவிட்டு இந்த கீக்கிடத்தில் இருப்பானேன்?”

“எங்க அப்பாதான் சொன்னார். இந்த மாதிரியான இடைஞ்சல்கள் கூட தெரிந்து கொள்ளணுமாம். கல்யாணம் ஆன பிறகு மாமியார் வீட்டில் இருப்பதுதான் ஒரு பெண்ணுக்கு மரியாதையாம். அதனால்தான் இங்கே இருக்கிறேன்.”

இந்தப் பதில்களை சுபத்ரா கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்கு அந்த நிமிடத்தில் சீதாவிடம் எல்லையில்லாத பிரியம் ஏற்பட்டது. ரொம்ப புத்திச்சாலித்தனமாக பதில் சொல்லியிருக்கிறாள். எந்த இடத்திலேயும் கணவனையோ, மாமியார் வீட்டையே விட்டுக்கொடுக்கவில்லை. அவள் கண்களில் நீர் சுழன்றது. மேலுக்கு பிடிவாதக்காரியாக தென்பட்டாலும் சீதாவின் மனம் மென்மையானதுதான் என்று தோன்றியது.

வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். மாலை ஆறுமணியாகிவிட்டது. அன்று என்ன காரணமோ சீதாவுக்காக யாரும் வரவில்லை. சீதா காபி குடிக்கவில்லை.

சுபத்ரா காபி கலந்தாள். சீதாவின் அறைவாசலில் வந்து நின்றாள். காபி கொடுத்தால் என்ன சொல்லுவாளோ? காபி ருசியாக இருக்காதோ என்று தயங்கினாள். பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். சீதா கட்டிலில் தலையணையில் முகம் புதைத்து படுத்திருந்தாள். சுபத்ரா மெதுவாக அழைத்தாள்.

“சீதா!”

சீதா விழித்துக் கொண்டு இருந்ததால் அந்த அழைப்பிற்கு கண்களைத் திறந்து பார்த்தாள். எதிரே நின்ற மாமியாரைக் கண்டதும் விருட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். “நீங்களா அத்தை? என்ன விஷயம்?” என்றாள்.

“இதுவரைக்கும் கார் வரவில்லையே. இதோ காபி கொண்டு வந்தேன்.” டம்ளரை நீட்டிக் கொண்டே சொன்னாள்.

சீதாவின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. கையை நீட்டி டம்ளரை வாங்கப் போனவள் நின்றாள்.

“வேண்டாம் அத்தை. ஒரு வேளை குடிக்கவில்லை என்றால் என்னவாகி விடும்?”

“கொஞ்சம் குடித்துப் பார். பிடிக்காவிட்டால் விட்டு விடு.”

“நன்றாக இருக்காதுன்னு யார் சொன்னார்கள்?”

“நான்தான் நினைக்கிறேன்.”

“நான் அதற்காக மறுக்கவில்லை.”

“பின்னே?”

சீதா கொஞ்சம் தயங்கிவிட்டு பிறகு சொன்னாள். “நீங்கள் நான் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டீங்க. நான் எதற்காக குடிக்கணும்? நான் குடித்தால் அந்த கொஞ்சம் காபியும் ஒருத்தருக்கு இல்லாமல்தானே போகும்?”

“சீதா”

“என்னை மன்னித்து விடுங்கள் அத்தை. என் கழுத்தில் தாலி கட்டிய உங்கள் மகனே என்னை வேற்று மனுஷியாய் பார்க்கிறார். நீங்க அப்படிப் பார்த்தாலும் நான் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டேன்.”

“சீதா! நானும் அவனிடம் எவ்வளவோ சொல்லிவிட்டேன். அவனுக்குப் புத்தியே இல்லை. நீ கொஞ்சம் பொறுமையாக இரும்மா. எல்லாம் சரியாகிவிடும். காபியைக் குடி. நல்லப் பெண் இல்லையா?”

சீதா நிமிர்ந்து பார்த்தாள். சுபத்ராவின் கண்களில் தென்பட்ட பரிவுக்கு சீதாவின் பிடிவாதம் தளர்ந்து போய்விட்டது. காபியை வாங்கிக் கொண்டாள்.

அத்தியாயம்-10

வித்யாபதி வீட்டிற்குள் நுழைந்த போது படுக்கையறையிலிருந்து சீதாவின் குரலும் குழந்தைகளின் குரலும் சேர்ந்து சிரிப்பும் கும்மாளமுமாக கேட்டுக் கொண்டிருந்தது. அவன் சமையலறைப் பக்கம் வந்தான். அங்கே சுபத்ரா தனியாக வாசற்படியில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களில் நீர் நிரைந்திருந்தது. தனியாக உட்கார்ந்திருந்த தாயைப் பார்த்ததும் வித்யாபதிக்கு இரக்கம் ஏறபட்டது. அம்மா!” என்று அழைத்தான். திடுக்கிட்டவளாக புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

”என்னம்மா? என்ன நடந்தது?” நயமாக கேட்டான்.

“என்ன நடந்தால் உனக்கு என்னடா? எங்கள் மேல் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் நீ இந்த மாதிரி செய்வாயா?”

“நான் என்ன செய்தேன்?”

“என்ன செய்தாய் என்று உனக்குத் தெரியாதா? நாலு பேர் எங்களைப் பார்த்து சிரிக்கும்படியாக செய்துவிட்டாய். சீதாவுடன் உன் கல்யாணம் முடிந்தால் நீ சந்தோஷமாக, சௌக்கியமாக இருப்பாய் என்று நினைத்தோம். இப்படி நம்ப குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து நிற்கும் என்று நினைக்கவில்லை.”

வித்யாபதி தலையைக் குனிந்துகொண்டான்.

“வீட்டுக்காரர் காலையில் வந்தார். வாடகையைக் கூட்டித் தரணுமாம். வேலைக்காரி சொல்லிவிட்டாள். சம்பளம் அதிகம் தந்தால் தவிர வேலைக்கு வரமாட்டாளாம். இதற்கு முன்னால் மளிகைக் கடைக்காரன் ஆறு மாதங்கள் பணம் கொடுக்காவிட்டாலும் எதுவும் சொல்லமாட்டான். அவசரமாக ஆயிரம் ரூபாய் தரச்சொல்லி ஆளை அனுப்பியிருக்கிறான். எங்கிருந்து கொண்டு தருவேன் பணத்தை? யாருக்கு என்று என்னால் பதில் சொல்ல முடியும்? இதெல்லாம் என் தலையெழுத்து.” நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

“அம்மா!” வேதனையுடன் பார்த்தான்.

“உங்க அப்பாவானால் ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமாய் அந்த சீட்டாட்டத்தில் மூழ்கிவிடுவார். அதில் உட்கார்ந்துவிட்டால் அவருக்கு இரவு பகல் தெரியாது. அக்கம் பக்கத்தில் எல்லோரும் சிரிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.”

‘என்னை என்ன செய்யச் சொல்கிறாய் அம்மா?”

“சீதாவுடன் போய் அவர்கள் வீட்டில் இரு.”

“அம்மா!”

“அதைவிட வேறு வழியில்லையடா. சீதாவை நான் நன்றாகப் புரிந்துகொண்டு விட்டேன். ஏதோ செல்லமாக வளர்ந்ததால் மனதில் இருப்பதை அப்படியே பேசுகிறாள். ஆனால் சுபாவத்தில் கெட்டவள் இல்லை. குழந்தைகள் எல்லோரும் என் பேச்சை கேட்பதில்லை. ஸ்கூலுக்குப் போகாமல் எப்போ பார்த்தாலும் சீதாவிடம் பழியாய் கிடப்பதோடு ஊர் கதைகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.” அதற்குள் கார் ஹாரன் ஒலித்தது.

“அதோ சாப்பாடு வந்து விட்டது போலிருக்கு. தலையெழுத்து! மருமகள் குடித்தனத்திற்கு வந்தால் ஏதோ நம்மோடு சேர்ந்து சாப்பிட்டாள் என்று இல்லாமல் நம் தரித்திரத்தை சுட்டிக் காட்டுவது போல் இருக்கு. இந்தப் பாழாய் போன குழந்தைகள் கூப்பிட்டாலும் வரமாட்டார்கள்.”

சுபத்ரா எழுந்துகொண்டு குழந்தைகளை ஒவ்வொருத்தராக பெயர் சொல்லி அழைத்தாள். “வருகிறோம்” என்று சொன்னார்களே தவிர ஒருத்தரும் வரவில்லை. சீதா அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டாள்.

பத்து நிமிடங்கள் கழித்து சின்னவள் ஓடி வந்தாள். “அம்மா! அம்மா! நாங்கள் எல்லோரும் அண்ணியுடன் சேர்ந்து ஜூவுக்கு போகிறோம்” என்றாள்.

“எங்கேயும் போக வேண்டியதில்லை. வாயை மூடிக் கொண்டு வீட்டிலேயே இருங்கள்.” எரிந்து விழுவது போல் சொன்னாள்.

கால்மணி நேரம் கழித்து சீதா வெள்ளை நிறப்புடவையில் கொடிகள் போட்ட ஆர்கண்டி புடவையை உடுத்திக்கொண்டு வந்தாள். அந்தப் புடவையில் பதுமையைப் போல் இருந்தாள். “அத்தை! நான் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜூவுக்கு போய் வருகிறேன்” என்றாள்.

சீதா சொன்ன அந்த தொரணைக்கு சுபத்ராவால் மறுப்பு சொல்ல முடியவில்லை. “சரிம்மா. சீக்கிரமாக வந்து விடுங்கள்” என்றாள்.

“ஆகட்டும் அத்தை” சீதா போகும் முன்னால் அங்கேயே இருந்த வித்யாபதியை தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்து விட்டுப் போனாள். அந்தப் பார்வையில் அலட்சியம் இருந்தது. எடுத்தெறிவது போல் கூர்மையாய் இருந்தது. அவனை அந்தப் பார்வை ஊசியாய் தாக்கியது.

பத்து நிமிடங்கள் கழித்து சீதா குழந்தைகளுடன் கிளம்பிவிட்டாள். வீடு நிசப்தமாக இருந்தது. நடு அறைக்கு வந்த சுபத்ரா அங்கே சங்கிலியால் கட்டிப் போட்டிருந்த நாயைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். “இது காலையில் பக்கத்து வீட்டுக்காரர்களின் கோழியைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டது. அவர் வந்து சண்டை போட்டார். சீதா கோழியின் விலையைக் கொடுத்துவிட்டாள். ரொம்ப ரகளை. இப்போ அப்பாவியைப் போல் எப்படிப் படுத்திருக்கிறது பார்த்தாயா?” படுத்திருந்த நாய் கண்களைத் திறந்து ‘என்னைத்தான் சொல்கிறாயா?’ என்பது போல் பார்த்துவிட்டு திரும்பவும் கண்களை மூடிக் கொண்டது.

“இந்தப் பாழாய் போன முயல்கள் வேறு. நாற்றம் தாங்க முடியவில்லை. வீட்டுக்காரர் வந்து “நாற்றம் வருகிறது, உடனே முயல்களை அப்புறப்படுத்தி விடுங்கள்” என்று சொன்னார். சீதா காதில் வாங்கிக் கொள்ள வில்லை. “இது எங்கள் வீடு. எங்கள் இஷ்டம் வந்த இடத்தில் நாங்கள் வைத்துக்கொள்வோம். உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றாள். அதற்கு அவர் மேலும் எரிச்சலடைந்தார். சீதாவை கோர்ட்டுக்கு இழுப்பதாகச் சொல்லி மிரட்டிவிட்டுப் போனார்.” சுபத்ரா மகன் பக்கம் திரும்பினாள். ”வித்யா! நீ அவர்கள் வீட்டில் போய் இருந்தால் என்னவாகிவிடும்?’ என்றாள்.

வித்யாபதி சீரியஸாக பார்த்தான். “அம்மா! நான் செத்துப் போனால் என்னவாகி விடும்?” என்றான்.

“சீ… சீ… என்ன பேச்சுடா இது? இந்த மாதிரி இன்னொரு தடவை சொன்னாய் என்றால் என்னைக் கொலை செய்ததற்குச் சமம். என்ன வித்யா இது? இதெல்லாம் என்னுடைய தவறுதான் என்று தோன்றுகிறது. உன் மனதைப் புரிந்துகொள்ளாமல் இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டு, உன் சந்தோஷத்தைக் கெடுத்துவிட்டேன்.”

“நடந்ததற்கு இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?”

“சரி. நடந்தது நடந்துவிட்டது. இனிமேல் எப்படி நடக்க வேண்டும் என்று யோசி.” “அது கடவுளுக்குத் தான் தெரியணும்.” அவன் விரலை உயர்த்தி மேலே காண்பித்தான்.

மாலையாகிவட்டது. கார் வந்து வீட்டின் முன்னால் வந்து நின்றது. சந்தடி செய்து கொண்டே குழந்தைகள் இறங்கி வந்தார்கள். சீதாவும் அவர்களுடன் உள்ளே வந்தாள். வித்யாபதி முன் அறையில் நாற்காலியில் பின்னால் சாய்ந்துகொண்டு கால்களை ஜன்னலில் நீட்டியபடி உட்கார்ந்திருந்தான்.

குழந்தைகள் எல்லோரும் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். சீதா அவர்களிடம் நன்றாகத்தான் பழகுகிறாள். அம்மா அப்பாவிடம் மரியாதையாக நடந்து கொள்கிறாள். தன்னைப் பார்க்கும் அந்தப் பார்வையில்தான் எரிச்சல்.

கண்களை மூடிக் கொண்டிருந்த வித்யாபதியிடம் சின்ன தங்கை ஓடி வந்தாள். ‘”அண்ணா! அண்ணா! வந்து … வந்து..” என்றாள்.

வித்யாபதி கண்களைத் திறந்து பார்த்தான். “என்ன?” என்றான்.

“நாங்க ஜூவில் சுற்றும் போது இந்திரா தென்பட்டாள். பின்னாலிருந்து வந்து என்னை அப்படியே தூக்கிக் கொண்டாள். நானும் யாரோ என்று திரும்பிப் பார்த்தேன்.”

அவன் ஜன்னலிலிருந்து கால்களை கீழே இறக்கி தங்கையின் தோள்களைப் பற்றினான். ‘இந்திரா தென்பட்டாளா? உண்மையாகவா? என்ன சொன்னாள்?”

”ஒன்றும் சொல்லவில்லை. அண்ணா ஏன் வரலைன்னு கேட்டாள்.”

“நீ என்ன சொன்னாய்?”

“எனக்குத் தெரியாது என்றேன்.”

“வேறு ஏதாவது கேட்டாளா?”

“ஊஹூம். அதற்குள் அண்ணி கிட்டே வந்து யார் இந்தப் பெண் என்று கேட்டாள். அண்ணாவின் சிநேகிதி இந்திரா என்று சொன்னேன். இந்திரா சிரித்துக் கொண்டே வணக்கம் சொன்னாள். ஆனால் அண்ணி முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டாள். வாங்க போகலாம் என்று சொன்னாள். நாங்களும் கிளம்பி வந்து விட்டோம்.”

வித்யாபதிக்குக் கோபம் வந்தது. கொஞ்சம் பண்பாகப் பேசினால் என்னவாம் என்று நினைத்துக் கொண்டான்.

சின்ன தங்கை போகும் போது கையைப் பிடித்து நிறுத்தினான். “இந்திராவுடன் வேறு யார் இருந்தாங்க?”

“யாரோ ஒரு அம்மாள் இருந்தாள்.”

“இந்திரா என்ன மாதிரி புடவையை உடுத்தியிருந்தாள்?”

“ஜரிகை பூக்கள் கொண்ட நீல வண்ண ஷிபான் புடவைக் கட்டியிருந்தாள். காதுகளில் தோடு போட்டிருந்தாள். தலை பின்னி பூ வைத்திருந்தாள். போதுமா?”

ஏளனமாக, தீவிரமாக ஒலித்த அந்தக் குரலைக் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். அங்கே சீதா நின்றிருந்தாள். அவன் தடுமாறினான். சீதாவின் பார்வை கத்தியைப் போல் அவனைக் கிழித்தெறிவதற்குத் தயாராக இருந்தது.

– தொடரும்…

– பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனராணி அவர்களின் படைப்பு “Sithapathi” தமிழில் “சீதா(வின்)பதி” என்ற தலைப்பில்.

– சீதா(வின்)பதி (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன், முதற்பதிப்பு: 2015, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *