சில நேரங்களில் சில தீர்ப்புகள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,536 
 
 

“”ஏங்க… நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே… கையிலே வெண்ணையை வச்சுகிட்டு, வீணா அலைவானேன்? பாங்க்ல கிடக்கிற பணத்தை எடுத்து வந்து, சிவசு கிட்டே குடுங்க. அவன் அலையறதை காண சகிக்கலைங்க,” என்ற சரயுவை முறைத்தார் பாலசுப்ரமணியம்.
“”என்னடி பேசுற… அதத்தூக்கி குடுத்துட்டு, நாம தெருவுலே நிக்கணுமா?”
“”நாம ஏங்க தெருவுக்கு போறோம்… நாம பெத்த புள்ளங்க; நம்மள காப்பாத்துவான். புள்ளை, படாத பாடு படறான்… நாயா பேயா அலையறான். புள்ளைக்கு உதவாத பணம் நமக்கெதுக்கு,” என்று சீறினாள் சரயு.
“”வேணாம் சரயு… பணத்தை குடுத்து, மனஸ்தாபத்தை வாங்காதே…” விவாதங்கள் முற்றி, சரயு கண்ணீராலு<ம், கோபதாப பேச்சா<லும், அவரைக் கரைத்து, ஆறு லட்சத்தை வள்ளிசாக தூக்கி, சிவசுவின் கையில் வைத்தாள்.
சில நேரங்களில் சில தீர்ப்புகள்!மகனும், மருமகளும் கண்ணீர் மல்க காலில் விழுந்தனர்.
“அம்மா… அம்மா…’ என்று சிவசுவும். “அத்தை… அத்தை…’ என்று விஜியும், தாங்கிப் பிடிக்க, உச்சி குளிர்ந்து போனாள் சரயு.
வீடு வாங்கி முடித்ததுமேயே, “”அம்மா… நீங்க வாசல்புற அறையிலேயே தங்கிக்கலாம். அது, இனிமே உங்க ரெண்டு பேருக்குத் தான்!” என்று சிவசு சொன்னபோது, பெருமிதமாக ஏறிட்டாள் சரயு.
ஆனால், அது பெயருக்குத் தான் அப்பா, அம்மா அறையாக இருந்ததே தவிர, அது விஜியின் உறவினர்கள் தங்கும் விருந்தினர் அறையாக இருந்ததுதான் அதிகம். இருவரும், ஹாலில் தரையில் படுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அடிக்கடி தள்ளப்பட்டனர்.
ஹாலிலும் நிம்மதியாய் அக்கடா என்று, காலை நீட்டிப் படுக்க முடியாமல், வருவோரும், போவோருமாய், தூக்கம் பறிபோக, உடம்பே அலண்டு போனது.
வருடங்கள் போனதே தவிர, சிவசுவும், விஜியும், பணம் வாங்கிய விஷயத்தை, சுலபமாய் மறந்தே போயினர். மருந்து வாங்கவோ, அவசிய செலவுக்கோ கூட, இருவரிடமும் கையேந்தும் நிலையில், பாலசுப்ரமணியத்துக்கு, சங்கோஜம் பிடுங்கி தின்றது.
சிவசுவுக்கு பணம் தந்த விஷயம் எப்படியோ கசிந்து, இளைய மகன் குமாரின் காதை அடைய, அவனும், அவன் மனைவியும், நேராகவே வந்து, “”அந்த பணத்துக்கு, நானும் உரிமைக்காரன் தானே… நானும் உங்களுக்கு தானே பிறந்தேன்?” என்று குதித்தான்.
அவன் மனைவியோ, “”பணத்தோடு வந்தால், என் வாசல் கதவு திறக்கும்,” என்று பச்சையாகவே சொல்லிவிட்டு, ஓரகத்தியைப் பார்த்து பொருமி தீர்த்துவிட்டுக் கிளம்பினாள்.
கணவருக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமாக, சரயு வாயைத் திறந்து பணம் பற்றி பேச்செடுக்க, ஆங்காரமாகி விட்டாள் விஜி.
“”மகனுக்கு கொடுத்ததை திருப்பி கேக்கறீங்களே… நீங்க பெத்தவங்க தானா?” என்றாள்.
“”பெத்தவங்கன்னாலும் வயித்துல பசியும், உடம்புக்கு நோவும் வராம இருக்காதா என்ன… இதோ குமார், “முகத்துலேயே முழிக்காதே… பணமில்லாம’ன்னு பேசிட்டான். குறைந்தது பாதி பணமாவது தந்தா தானே…. குமாருக்கும் குடுக்கணும் தானே?” என்றாள் சரயு.
“”அப்போ… இங்கே இத்தனை வருடம் போர்டிங்கு, லாட்ஜிங்குன்னு இருந்தது, அப்பப்போ டாக்டருக்குன்னு எளவெடுத்தது, இதெல்லாம் எந்த கணக்கு பணமாம்… பணம் பொல்லாத பணம். பிசாத்து ஆறு லட்சத்துக்கு, கெழங்களுக்கு வாயப் பாரு… போட்டதை தின்னுட்டு, மூலையில கிடக்கிறதா இருந்தா, இங்க இருங்க… இல்லே, வீட்டைவிட்டு வெளியே போயிடுங்க.
“”ஏதாவது பணம், கிணம்ன்னு வாயைத் தொறந்தா, நான் பொல்லாதவளாயிடுவேன்… ஆமா, பணம் தந்தேன் தந்தேன்னு சொல்றீங்களே… நான் பணமே வாங்கலைங்கறேன்… நீங்க என்ன கோர்ட்டுக்கு போவீங்களா… தோபாருங்க… சல்லிக்காசு கூட தர முடியாது. உங்களால ஆனதை பாருங்க!” என்று, ரசாபாசமாய் கத்திய விஜியின் முன், வாயடைத்துப் போனாள் சரயு.
பேச்சுகளின் வீச்சின் முன், அந்த தாயுள்ளம் மிரண்டு போனது.
“தலைக்கு மேலேயும் வர ஆரம்பித்துவிட்ட வெள்ளச் சூழலில், எதைப் பிடித்து கொண்டு நீந்த, எப்படி நீந்த?’ என்று பாலசுப்ரமணியம் திகைத்து நின்றார்.
இதற்கு பின், நிலைமை மிகவும் மோசமானது. சிவசு வாய், கண், காது எல்லாவற்றையும் மூடிக் கொள்ள, விஜி தன் சுய ரூபத்தைக் காட்டினாள். விஜியே ஒரு இரும்புத் திரையாக மாறிவிட, இருவரும், மூச்சுவிடக் கூட திணறி மரண அவஸ்தை பட்டனர்.
எல்லாவற்றுக்கும் முடிவாக, சிவசு ஒருநாள், “”அப்பா, எனக்கு டில்லிக்கு டிரான்ஸ்பராயிடுச்சு… அதனாலே இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன். “அட்வான்ஸ்’ கூட வாங்கிட்டேன். நாளைக்கு, “பாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ல வந்து, சாமான்களை, “பாக்’ செய்திடுவாங்க. நான் நாளைக்கே கிளம்பறேன். டிக்கட், “புக்’ பண்ணியாச்சு. குமார் உங்களை அழைச்சிட்டு போவான்… பேசிட்டேன்,” என்றான்.
குமார் அழைச்சிட்டு போறதாவது… பாலசுப்ரமணியத்துக்கு, “சிவுக்’ கென்றது.
“”சிவசு… “நான் வர மாட்டேன். நீங்களும் பணமில்லாம இங்க வரவேணாம்ன்னு, குமார் போன்ல சொல்லிட் டானேப்பா,” என்றார் உடைந்த குரலில்.
“”என்னப்பா பேசுறீங்க… அவனுக்கு மட்டும் உங்களை காப்பாத்தற கடமையில்லையா… சாவற மட்டும், நாந்தான் உங்களை சுமக்கணுமா?” சிவசுவின் வார்த்தையில், அனல் அடித்தது.
“”நீ, அவனுக்கு சேர வேண்டிய பணத்தைக்குடு, அவன் தங்கமா தாங்குவான்!” என்று குறுக் கிட்டாள் சரயு.
“”எதுக்கு பணம்… ஏது பணம்… நீங்க தந்து, நாங்க வாங்கினோமா… இல்லவே இல்லைங்கறேன்… உங்களால ஆனதை பாருங்க… கோர்ட்டுக்கு போனா<லும் ஒண்ணும் பருப்பு வேகாது.
“”அப்புறமும் இங்கதான் வந்து நிக்கணும். வாயப் பொளந்துட்டு, போனப்புறம் கொள்ளி போடவும், நெய்ப்பந்தம் பிடிக்கவும், எங்க தயவுதானே வேணும்!” என்று, படப்படத்தவள், சிவசுவை இழுத்துக்கொண்டு உள்ளே போய், அறைக் கதவை அறைந்து சாத்தினாள் விஜி.
“”தப்பு பண்ணிட்டோம்ங்க?” என்று அழுத மனைவியை, வெறுமனே பார்த்தார் பாலசுப்ரமணியம்.
“வாழவேண்டிய மீதி வாழ்க்கையை, அதன் காலம் வரை வாழ்ந்து தானே ஆக வேண்டும்… அது காலம் வகுத்து வைத்த கட்டாயம் அல்லவா… வேலைக்கு செல்ல இடம் கொடாத உடம்புடனும், பணமில்லாத வெறுங்கையுடனும்…’ யோசனையில் புருவங்கள் முடிச்சிட்டன.
நீதிபதி மாணிக்கவல்லி நிமிர்ந்து அமர்ந்தாள். எல்லாம் பேசி முடித்த பாலசுப்ரமணியம், மேல் துண்டால் கண்களை துடைத்துக் கொண்டார்.
“”அம்மா… இப்பவும் அந்த பணத்துலே, என் இரண்டு பிள்ளைகளுக்கும், கல்யாண மாகிப் போன என் பெண்ணுக்கும், ஒவ்வொரு லட்சம் தந்துடத்தான் விருப்பம். மீதியை, எங்க மிச்ச காலத்துக்கு வச்சிக்கிடறோம். அப்புறமா, நா.. நாங்க யாரோடையும் இருக்கவும் இஷ்டப்படலை. ரொம்பவும் பட்டாச்சு…
“”நெய் பந்தமும், மகன் கைகொள்ளி யும் வேண் டாம்மா… மின்சார தகனமே போதும். ஏற்கனவே நெஞ்சுலே சொருகின கொள்ளி, இன்னமும் எரிஞ்சு கிட்டு தானிருக்கு… இனியாவது கடைசி காலத்தை நிம்மதியா கழிக்கணும்ன்னு ஆசையாயிருக்கும்மா… என் மருமக விஜி சொன்ன வார்த்தையால தான், கோர்ட்டுக்கு போனாத்தான் என்னன்னு தோணுச்சு… ஏறிட்டேன்,” என்றார்.
சிவசுவின் முகம் அஷ்டகோணலாக, விஜியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இருவருமே, பாலசுப்ரமணியம் கோர்ட்டுக்குப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை.
கோர்ட்டு, குமாரையும் வரவழைத்திருந்தது. அவனும் குடும்பத்துடன் வந்திருந்தான். அவன் முகத்தில், ஒரு குருரத் திருப்தி நிலவியது. அலட்சியமாக பார்த்துக் கொண்டு நின்றான்.
சுற்றி<லும் பார்வையை ஓட விட, நீதிபதி மாணிக்கவல்லி, கண்ணாடியை சரிசெய்து கொண்டு, கணீரென்ற குரலில் ஆரம்பித்தாள்…
“”இந்த நீதிமன்றம், இதுவரை எத்தனையோ வழக்குகளை சந்தித்திருக்கிறது. முதன் முறையாக ஒரு பெற்றோர், தங்களுடைய வாழ்வாதாரத்தை, பெற்ற பிள்ளையிடமே கையேந்தி பெறுவதற்காக, இந்த மன்றத்தை நாடியுள்ளதை வருத்தத்துடன் கவனிக்கிறது…
“”தந்தையிடமிருந்த, அவருடைய உழைப்பூதியத்தை தன் தேவைக்காக வாங்கிக்கொண்டு, திருப்பித் தர மறுத்ததுடன், பெற்றோர் என்றும் எண்ணாமல், உதாசீனப்படுத்தி, மனவேதனைக்கு ஆளாக்கியிருக்கின்றனர்.
“”சிவசுவும், அவர் மனைவியும், சகோதரன் வர மாட்டான் என்று தெரிந்தும், சுயநலமாக சிந்தித்து, அவர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு, ஊருக்கு போக நினைத்த அந்த இருவரின் செயலை, மன்னிக்க முடியாத குற்றமாக இந்த கோர்ட் நினைக்கிறது…
“”அதே போல் இளைய மகன் குமாரின் நடத்தையையும், இந்த மன்றம் வன்மையாக கண்டிக்கிறது… பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, அவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், விட்டேற்றியாக இருந்த இருவரையும் கூட, குற்றமிழைத்தவர்களாகவே இந்த மன்றம் கருதுகிறது. பெற்றவர்களின் மன உளைச்சலை, இரு பிள்ளைகளுமே அதிகப்படுத்தி இருக்கின்றனர்…
“”எனவே, சிவசு, தன் தந்தையிடம் வாங்கிய, ஆறு லட்சத்திற்கும் இன்றைய தேதி வரையில், அதற்கான வட்டித் தொகையுடன் திருப்பித் தர வேண்டுமாய், இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 90 நாட்கள் அவகாசம் தருகிறது…
“”இந்த 90 நாட்களும், பெற்றோரை தன் பொறுப்பில் வைத்து பராமரிக்கும்படி, குமாருக்கு இந்த மன்றம் ஆணையிடுகிறது. அதாவது, குமார் தனி வீடு பார்த்து, குடியமர்த்தி அவர்களுக்கான எல்லா செலவுகளையும், வாடகை, சாப்பாடு, மருந்து என்று அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய கைச் செலவுக்காக மாதம், நாலாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று, இந்த கோர்ட் தீர்ப்பளிக்கிறது.
“”குடும்ப கவுரவம் என்றும், சடங்கு சம்பிரதாயம் என்றும் குழம்பாமல், வாழும் நாட்களை நிம்மதியாக வாழ, சட்டத்தின் துணையை நாடி, சரியான முடிவெடுத்த, பெரியவர் பாலசுப்ர மணியத்தை, இந்த மன்றம் பாராட்டுகிறது.
“”இந்த வழக்கு, இனிவரும் காலங்களிலும், ஒரு பாடமாக இருக்கும் என்று, இந்த நீதிமன்றம் நினைக்கிறது!” என்று தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி மாணிக்க வல்லி.
சிவசுவும், விஜியும் தவிப்புடன் நிற்க, குமாரும் அவன் மனைவியும் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சரயுவும், பாலசுப்ரமணியமும், மகிழ்ச்சி பொங்க, கண்ணீர் மல்க கை கூப்பி நின்றனர்.

– பிப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *