சில கேள்விகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2017
பார்வையிட்டோர்: 10,987 
 
 

அந்த வினாடி மீண்டும் மீண்டும் அவள் நினைவிலே கிளர்ந்தது. அஸ்வினியை ஈரத்துணியாய் முறுக்கிப் போட்டது. டாக்டர் படிப்பையே பாதித்தது. அவள் படிக்க வேண்டிய கேஸ் ஹிஸ்டரி பல வால்யூம் பக்கங்கள் பாக்கி இருந்தன. அழுது அழுது முகம் வீங்கியிருந்தது. எந்தத் தொழில் பார்த்தாலும் பெண்ணின் தனிப்பட்ட விஷயங்களில் பெண் பெண்ணாகவே இருக்கிறாள்.

அடி பட்ட பெண் – நாகம்

காயமடைந்த பெண் – சிங்கம்

நிராகரிக்கப்பட்ட பெண்ணும் அப்படியே.

“”விடமாட்டேன்டி அவனை. எதுக்காக என்னை நிராகரிச்சாங்க? என்ன காரணம்னு சொல்லணுமா? வேணாமா? பொண்ணு மனசு என்ன கடைச் சரக்கா?” என்று புலம்பிக் கொண்டாள். ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல் அது. ஞாயிற்றுக்கிழமை சோம்பல் காலை.

அருகிலிருந்தவள் மிருதுபாஷிணி.

“”இவ்ளோ புலம்பல்ஸ் ஒய்?” – கையில் மாதுளம்பழச் சாறு கண்ணாடி டம்ளரில் சர்க்கரை சேர்த்துக் கொண்டே பேசினாள். நான்காம் வருஷம் மருத்துவத்தில் ஒன்றான கிளாஸ்மேட் அவள்.

“”அசு எழுந்திரு. குடிச்சிட்டு தெம்பாத் தூங்கு”

“”ஏய்… கிண்டல்”

“”பின் என்ன? திருத்தி எழுதவும். திருப்பி சரி செய்யவும். இது என்ன கதையா? நடந்தா?” “”நடந்ததுதான் விட்ரு.. இன்னும் கொஞ்சம் சுகர்”

“”போதும் புறப்படு.. வா கிளம்பி”.

“”என்ன செய்யப் போறே..?”

“”நேராப் போவேன்.. ஏன்டா இப்டீ செஞ்சேன்னு

கேப்பேன்.. கம்னாட்டின்னு கத்துவேன்.. கால்ல இருக்றதை கழட்டி மூஞ்சிக்கு நேரா காட்டுவேன் .. அப்பதான்டி மனசு ஆறும்..”

“”புடிக்கலைன்னு சொல்லிட்டானா? அதான் கோபமா..”

“”இல்ல… இல்லவே இல்ல”

சில கேள்விகள்“”அப்றம் என்னதான் நடந்தது?”

“”பொண்ணு பாக்கவே வர்ல. பூனாவுல இன்ஸ்பெக்ஷனாம். பொய்”

“”அவனே வர்லங்கற… அப்றம் யார் உன்னை பொண்ணு பாத்தது?”

“”அவன் அம்மாவும் அப்பாவும்”

“”சுத்த ஓல்டு டைப்”

“”ஓல்டு கோல்டெல்லாம் கிடக்கட்டும். எங்களுக்குப் புடிச்சாலே பையனுக்கும் ஓகே. அது இதுன்னு பில்டப்டி. மூத்த பையனுக்கும் இப்டிதான் பாத்து கல்யாணம் பண்ணோம்னு கன்வின்ஸ் பண்ணிட்டாங்க. ஜாதகப் பொருத்தம் வேறே பாத்தாங்களாம்.. அப்டியே பொருந்திச்சாம்.. அதனால நம்பிட்டோம்டி பாஷினி…”

“”சரி… நீங்க பொருத்தம் பாக்லியா?”

“”அதுதான் ஒண்டர் என் அம்மா சிதம்பரத்லயும் அப்பா கும்பகோணத்துக்கும் போயி ஆளுக்கொரு ஜோசியரா பத்துப் பொருத்தமும் ஒண்ணா இருக்குன்னு பூரிச்சுப் போனாங்க. நிச்சயம் ஆயிடும்னு அடிச்சு சொன்னாங்க பாஷினி”

“”என்னதான் ஆச்சு?”

“”குருவாயூர் எக்ஸ்பிரஸ்ல மூத்த மகன், அவன் சம்சாரம், .. எல்லாரும் கேங்கா வந்தாங்க.. வீட்டை சுத்திப்பாத்தாங்க..”

“”பஜ்ஜி காபி சாப்டாங்களா?”

“”அது மட்டுமா.. கல்யாணமாகி வேலைக்குப் போவியா? எப்ப கோர்ஸ் முடியும்? எல்லா டீடெய்லும் கேட்டாங்க.. நானும் அடக்கமா அழகா பதில் சொன்னேன்டி”

“”அழகா இருக்கிற நீ? சொல்ற பதிலும் அழகாவே இருந்துருக்கும்”

“”மீதியும் கேளு. பையனோட அம்மாக்காரி கண்ணுக்கு மை இட்டிருந்தா. கூடவே யாரோ ஒருத்திய பிரென்ண்டுன்னா.. அவ டார்ச்சர் வேறெ”

“”உடம்புல ஊனம் இருக்கா காது கேக்குதான்னு பாக்றது தப்புல்லே.. கால் கட்டைவிரலை விட அடுத்தவிரல் உயரம்லாம் பாத்தா.”

“”பழைய பஞ்சாங்கம்”

“”முத முதல்ல மெட்ரிமோனியல் நெட்டுல என் போட்டோ பாத்துட்டு சுத்தி சுத்தி போன் செஞ்சதே அவங்கதான்… தெரியுமா? அப்புறம் என்னடான்னா அவன் வர்ல – அம்மா, அப்பா, அண்ணன் குடும்பம், குழந்தை அனுப்பிச்சான்.. கடைசில .. என்ன ஏதுன்னு சொல்லாமலே கவுத்துட்டாங்க பாஷினி.”

“”நல்லதுன்னு நெனச்சு வுட்டுடு.. எதுவுமே கடைசின்னு நெனைக்காத. ஆரம்பம்னு நினை. தன் மகனுக்கும் வருங்கால மருமகளுக்கும் அனுமார் மாதிரி தூது வந்த குடும்பம்னு நெனைச்சேன். சூது மிக்க குடும்பம்னு புரியுது.”

“”அழகா உன் குடும்பத்தை ஏமாத்தியிருக்காங்க அசு ஆனா இப்ப நீ கோபமா போய் அவன்ட்ட கேட்டு என்ன ஆகப்போவுது.. நடிப்பான் அசு”

“”ரிஜெக்ட் பண்ண காரணம் என்ன அது எனக்குத் தெரிஞ்சாகணும்.. நெஞ்சுல முள்ளா குத்துது பாஷினி..”

“”அன்னிக்கு உன் வீட்டுக்கே வராத மாப்பிள்ளை பையனை இன்னிக்கு எதுக்காகப் பாத்து ஆத்திரத்தை கொட்ணும்னு நினைக்றே?”

“”மாப்பிள்ளையா? வஞ்சகன்”

“”கெடைச்சிருந்தா மாப்பிள்ளைன்னுதானே சொல்வே?”

“”கிடைக்காததுக்கு காரணமே அவன் அம்மாதான். அவனே தைரியமா நேரா என் வீட்டுக்கு வந்திருந்தா அன்னிக்கே டிசைட் ஆயிருக்கும். நெட்டுல பார்த்த ஒருத்தரை நேர்ல பாக்கும்போதுதான் தெளிவு பொறக்கும். நாங்களும் பேசி ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிருப்போம்.. நடுவுல பையனைக் காட்டாம அவன் பூனா போனதா பொய்”

“”ஏய் ..ஓல்டு ஏஜ்ல அப்டிதாண்டி நடந்துப்பாங்க..”

“”உலகத்துலயே நம்ப வச்சு ஏமாத்ற முகமூடி இருக்குன்னா அது கிழவன் கிழவிங்ற முகமூடிதான்.. பஸ்ல பாத்தியா கிழவனுகதான் அதிகம் உரசுவாங்க..”

“”ஓகே அஸ்வினி இன்னிக்கு சண்டே. என்கிட்டே ஸ்கூட்டி இருக்கு. பெட்ரோல் போட்டுக்குவோம். செல்போன்ல கூட உன்கிட்டே எக்ஸ்கியூஸ் கேக்காத அந்தக் கோழையை வாங்கு வாங்குன்னு வாங்குவோம்.. புறப்படு .. மறைமலை நகர்ல தானே அவன் வீடு?..”

“”எனக்காக மட்டும் இல்லே பாஷினி. பெண் உணர்ச்சிகளைப் புரிஞ்சுக்க தவறிடறாங்க.. அம்மா அப்பாவாலே பிசையப்பட்ட மைதா மாவு மாதிரி நடந்துகிறாங்க.. பசங்க.”

அவர்கள் புறப்பட்டார்கள்.

மறைமலை நகரின் டிராபிக் தாங்க இயலாத அளவுக்கு இருந்தது. சாயங்காலம் மூணு மணிக்கே இப்படியா?

பாஷினி நன்றாக டூ வீலர் ஒட்டுகிறவள் தான். கோபமோ டென்ஷனோ என்னமோ தெரியவில்லை. தப்பு தப்பாக சிக்னல்களில் கால் ஊன்றி நின்றாள்.

அவள் பின்னால் அசு.

மகாபாரதத்தில் அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவரை தனது தம்பிக்காக தூக்கி வருகிறார் பீஷ்மர். குதிரையில் தூக்கி வந்தபின், அம்பைக்குப் பிடிக்கவில்லை என அவளை அவள் காதலனிடம் விட்டு வரச் செல்வார் பீஷ்மர். அம்பையின் காதலன் அவளை ஏற்காத பட்சத்தில் என்னை நீங்களே ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என்று கெஞ்சுகிறாள்… அவளது நியாயமான உணர்வுகள் புரியாமல் மறுப்பார் பிரம்மச்சாரி பீஷ்மர். உன்னை இன்னொரு பிறவி எடுத்தேனும் பழி வாங்குவேன் என்று கூறி அம்பை உயிர் துறப்பாள். அதுதான் சிகண்டி.

பெண்ணின் கோபங்கள் சாதாரண உணர்ச்சியுடன் புறப்படக் கூடியவை அல்ல. வெற்று ஆசைகள் நிரம்பிய கண்ணாடிப் பாத்திரமும் அல்ல அவர்கள் இதயங்கள்.

“”ரொம்ப தேங்க்ஸ் பாஷினி எனக்காக டிராபிக்ல – வெயில்ல அலையுற..”

“”அது இருக்கட்டும். எனக்கும் கஷ்டமா இருக்கு. உன்னைப் பொண்ணு பார்த்துட்டு போனதிலிருந்து நீ இன்னும் இளைச்சுட்டு வரே.. நேரத்துக்கு சாப்பிடு.. லட்டு மாதிரி ஜொலிச்சு பழி வாங்கு”

“”உனக்கு எல்லாமே தெரியுதே… வண்டியை நேரா பாத்து ஓட்றி… டெம்போ டிராவலர் பார்.. ஒடி ஒடி” என்று சொல்லி வந்த அஸ்வினி சட்டென குரல் மாற்றினாள்.

“”அதோ அந்த ஐம்பத்தி நாலு தொண்ணூறு.. அந்த வெள்ளை நிற டாட்டா சுமோ பின்னாடி போ..”

“”ஹேய் எதுக்கு.. இப்ப டைவர்ட் பண்றே?”

“”அதுலதான் அன்னிக்கு வந்தாங்க.. அவங்கதான்டி. கமான் அந்த குரூப்”

“”ஓ..” என்றபடியே சந்து பொந்துகளில் வண்டி வளைக்கப்பட்டது. ஆக்சிலேட்டரை முடுக்கினாள் பாஷினி.

“”தப்பக் கூடாதுடி அவன்”

“”தப்பிச்சிருவானா.. தப்ப விடுவேனா..”

“”விரட்டு விரட்டு..”

உண்மைதான். உள்ளத்தில் வேகம் வந்தவர்களின் வேகம், விமானத்தையே விரட்டிப் பிடித்து விடும் என்பது புரிய வைப்பது போல அந்த பெண்களின் சுமோ வேகமும் ஸ்கூட்டி வேகமும் இருந்தது.

“”ஸ்லோ பண்ணு பாஷினி.. அவுங்க லெப்ட் இண்டிகேட்டர் போட்டு திருப்பறாங்க.. கொஞ்சம் தள்ளி நாம நிப்போம்..”

தூரத்தில் ஒரு கடையில் ஆப்பிளும் சில பிஸ்கட் பாக்கெட்டுகளும் வாங்கும் நடுத்தர வயதுப் பெண்மணி தெரிந்தாள். பருமனான சரீரம்.

“”அதாண்டி.. அவ வீட்டுக் காரன்”

“”சேம் குரூப்..”

“”சரி ..சரி.. நீ பாக்காத மாதிரியே தலையை திருப்பிக்கோ…”

மகனை தக்க இடமாக மார்கெட்டிங் செய்ய இந்தப் பெருசுகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்

கிழமையாக அலைகின்றன. தனக்கு சமைத்துப் போடவும், கால் அமுக்கவும் மருமகள் தேடுகின்றன.

அருகில் சென்று அவர்கள் பேசுவது காதில் கேட்கும் தூரத்தில், அவர்கள் பார்க்க முடியாத இடமாகப் பார்த்து நின்று கொண்டனர். .

டாட்டா சுமோவில் இருந்த அந்த அம்மாளிடம் கூஜா கணவன், “”என்ன இருந்தாலும் அந்தப் பொண்ணு அஸ்வினியை ஏன் நிராகரிச்சோம்னு நாம போன் பண்ணி சொல்லியிருக்கணும்.”

“”கொஞ்சம் வாயை மூடறேளா? எல்லாம் சொல்லியாச்சு.. நம்ம பையன் ராகவன் இம்பொடண்ட்னு உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். இதை அவுங்ககிட்டே தைரியமா எடுத்துச் சொல்ல முடியாமதான்.. எங்களுக்கு பிராப்தம் இல்லேன்னு.. ஒரே வார்த்தைல போன்ல சொன்னேன். தெரிஞ்சே ஒரு பொண்ணோட வாழ்வை கெணத்துல தள்ளி கெடுப்பாளா.. அதுல ஆரம்பிச்சதுதானே எனக்கு டிப்ரஷன் வியாதி? அஸ்வினி நல்ல பொண்ணு.”

“”அந்த ஒரு வார்த்தைய உன்னால யாருட்டதான் சொல்ல முடியும்?”

“”தெரிலீங்க.. ஒவ்வொரு வரனா தேடித் தேடி அலைஞ்சு… மொத்தத்துல என் மன நலன் போயிடுத்து ”

தன் எதிர்கால மருமகள் குடும்பத்தைக் கெடுக்க விரும்பாத}காரணமான}அந்த ஒரு வார்த்தை அஸ்வினிக்குக் கேட்டது.

சில இரகசியங்கள் இப்படித்தான் காற்றில் உடைபடாமலே மிதக்கின்றன.

இருவரும் அவர்கள் பார்க்காதவாறு, மெல்ல திரும்பி நடந்தனர். ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு போகிறபோது, அஸ்வினியின் மனம் லேசாகி இருந்தது.

– பெப்ரவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *