வினோத் லேசில் பையைத் திறந்து காசை வெளியில் எடுத்துவிட மாட்டான். பஸ்ஸுக்குச் செலவழிக்க மனமின்றி, இரண்டு மைல் துhரம் கால் கடுக்க நடந்து செல்ல அஞ்ச மாட்டான். சினிமா, டிராமா சட்டென்று துணிந்து போய் விடமாட்டான். ‘ஓசி’ டிக்கட் கிடைத்தால் தொலையட்டும் என்று சென்று பார்ப்பான். இப்படியொரு பயங்கர கருமித்தனம் சகிக்கக் கூடாத அளவு விரிவடைந்து அவனை வியாதி போலத் தொற்றிக் கொண்டிருந்தது.
கல்யாணம் ஆன பின்பாவது சிலரைப் போல கர்ணனாக மாறிவிடுவான் என்று எதிர்பார்த்த நண்பன் ராகவனுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. கல்யாணமாகி இரண்டு மாத காலமாகியிருந்தும் ஒருநாள்கூட மனைவியை நாடகம், சினிமா, கடற்கரை என்று வெளியே அழைத்துச் செல்லவில்லை. அவன் மனைவியும் அதைப்பற்றிக் கவலைப்படுபவளாய் இல்லை. அதுவே தன் மனைவியால் இருந்தால்…? கற்பனையிலேயே நடுங்கினான் ராகவன்.
ஹும்… மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்தான். ஏக்கப்பெருமூச்சு விட்டான் ராகவன். கைநிறைய சம்பளம் வாங்கி என்ன பிரயோசனம்? அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது ஒரு முப்பது பைசாவுக்குப் பூ வாங்கிச் செல்லக்கூட மனமில்லாத கருமித்தனமான கணவனாக வினோத் இருப்பதுதான் அவனுக்குப் பிடிக்கவில்லை ‘ யோசித்தான் ராகவன்.
அன்று வெள்ளிக்கிழமை.
கைநிறைய மல்லிகைப் பூவை வாங்கிக்கொண்டு வினோதின் வீட்டுக்குச் சென்றான்.
“வாப்பா ராகவா, என்ன திடீர் விஜயம்?” வரவேற்றான் வினோத்.
வந்தவனை ஒப்புக்குக்கூட காபி சாப்பிடுகிறாயா என்று கூடக் கேட்க மாட்டானே கஞ்சப்பயல் என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே, ‘இந்தப்பக்கம் வந்தேன், அப்படியே உன்னையும் பார்த்துட்டுப் போகலாமேன்னுதான் வந்தேன். வழியில் நல்ல மல்லிகைப்பூவாக விற்றான் இன்று வெள்ளிக்கிழமை இல்லையா? அதனால் என் வீட்டுக்கும், உன் வீட்டுக்குமா வாங்கிவந்தேன்.”
“தாங்க்ஸ் ராகவா! மீனா இங்கே வா…!” – குரல் கொடுத்தான் வினோத்.
அடுப்படியில் வேலையாக இருந்த மீனா, பரபரப்புடன் வெளியே வந்தாள்.
“எடுத்துக்கோம்மா இந்தப் பூவை…”- ராகவன் உபசரிததான். மீனாவின் முகம் சிவந்தது. ஒரு கணம் திகைத்துவிட்டு அந்தப் பூவை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
“ஏ ராகவா…! உள்ளே வாயnன், நம்ம ஆபிஸ் ஃபைலில் ஒரு சந்தேகம் கேட்கணும்.”- வினோத் ராகவனை உள்ளே அழைத்தான்.
உள்ளே சென்ற ராகவன், தான் வாங்கி வந்த மல்லிகைப் பூ வினோதின் தாயார் படத்தை அலங்கரிப்பது கண்டு நாக்கைக் கடித்துக் கொண்டான்.
தான் வாங்கிக்கொடுப்பதைப் பார்த்தாவது நண்பனுக்கு உறைக்கட்டுமே என்று நினைத்தவனுக்கு ஓர் உண்மை உறைத்தது. பூ வாங்கிக் கொடுக்கும் உரிமை கட்டின கணவனுக்குத் தான் உண்டு என்ற உண்மை பளிச்சிட்டது. இந்த உண்மையை உணர்த்திய அந்த உத்தமியை தெய்வமாக நினைத்தான்.
– 24/02/1985