சில இடங்களில் கூச்சல்கள் கூட சுகமே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 6,463 
 
 

எங்கள் காலனியில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகள், அல்லது பங்களாக்கள் கொண்டது. பெரும்பாலும் என்னைப்போல ஓய்வு பெற்றவர்கள்தான் அதிகமாக இருப்பர். எங்கள் தெருவின் ஒரு பகுதியை தவிர, மற்ற பகுதிகள் அமைதியாகத்தான் இருக்கும் எங்கள் காலனியில் படித்தவர்கள் அதிகம். பெரிய பெரிய உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் அதிகம். அடுத்து என்ன? வழக்கம்போல உள் அரசியல் தான். காலனி அசோசியேசன் பதவிக்கு போட்டி,பொறாமைகள் உண்டு, ஒருவருக்கொருவர் புறம் பேசுவதும் உண்டு. இது எல்லா காலனிகளிலும் உண்டு என்றாலும் எங்கள் காலனியில் கொஞ்சம் அதிகமோ என அடிக்கடி தோன்றும்.

காலை நடை பயிற்சியில் இருக்கும்போது என்னிடம், யோவ் ராமசாமி! உன் தெரு கடைசியில அந்த ஓட்டு வீட்டுல என்னய்யா ஒரே சத்தமா இருக்கு? எப்ப பார்த்தாலும் “ஒரே நாஸ்டி” பேசாம அவங்களை காலி பண்ண வைக்கணும்யா, இவங்களால நம்ம காலனிக்கே கெட்டபேரு !.நான் ஒன்றும் பேசவில்லை. ஏனென்றால் பேசிக்கொண்டு வந்தது அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர். அவா¢டமும் ஒரு மனப்பான்மை உண்டு, என்னவென்றால் அவருடைய பதவியை விட பல படிகள் கீழே இருந்து பணி புரிந்து ஓய்வு பெற்ற என்னைப்போன்றவர்களிடம் எல்லாம் பழக வேண்டியிருக்கிறதே. இது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்காதீர்கள், அவரைப்போல பதவியில் இருந்து ஓய்வு பெற்று கொஞ்சம் தள்ளியிருந்த காலனி நண்பரிடம் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார், அது அரசல் புரசலாய் என் காதுகளில் வந்து விழுந்து தொலைக்கிறது.அதனால் பேசாமல் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தேன்.பணியில் இருக்குபோதும் அப்படித்தான் இருந்தேன்.

இல்லாவிட்டால் அமைதியாக பணி ஓய்வு பெற விட்டிருப்பார்களா? மற்றபடி அவர் குற்றம் சாட்டிய குடும்பம் என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டது.

அந்த குடும்பம் பெரிய குடும்பம், வயதான தம்பதி, அவர்களுக்கு இரண்டு ஆண்கள், ஒரு பெண். அனைவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது மூவருக்கும் குறையாமல் மூன்று மூன்று குழந்தைகள் இருப்பர், பெண்ணுடைய கணவனும் அந்த கூட்டத்துக்குள் ஐக்கியமாகிவிட்டான். காலை எழுந்தது முதல் இரவு வரை ஒரே சத்தமாகத்தான் இருக்கும், யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாது, சில நேரங்களில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதும் உண்டு. நாங்கள் கூட பயப்படுவது உண்டு, எங்கே கொலை கிலை விழுந்துவிடுமோ,என்று, எல்லாம் ஒரு அரை மணி நேரம்தான். அப்புறம் பார்த்தால் இவர்களா இப்படி சண்டையிட்டார்கள் என்று தோன்றும்.இந்த சண்டையில் அதிகம் வசவு வாங்குவது அந்த வயதான தம்பதிகள் தான். எனக்கு பாவமாய் இருக்கும். அதுவும் அந்த ஆண் வாரிசுகளும், அவன் மனைவிமார்களும் அந்த பெரிசுகளிடம் போடும் சண்டையை பார்த்தால் எங்கே அந்த வயதானவர்கள் அடிபட்டு கீழே விழுந்து விடுவார்களோ என கவலையாயிருக்கும், அப்புறம் பார்த்தால் அந்த பெரிசுகளைச்சுற்றி உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.

ஒரு உண்மையை சொல்லிவிட வேண்டும். அந்த குடும்பம்தான் இந்த காலனி காடாயிருக்குபோதே முதலில் தைரியமாய் குடி வந்தது. அதற்குப்பின்னால் பல வருடங்கள் கழித்தே, பயந்து பயந்து நாங்கள் ஒருவர் ஒருவராக வீடு கட்டி குடி வந்தோம். அதை இப்பொழுது வசதியாய் மறந்து அவர்களை காலி செய்யவேண்டும் என்று அடிக்கடி பேசிக்கொள்கிறோம்.
அன்றும் அப்படித்தான் ஒரே கூச்சலாய் இருந்தது. தெருவில் அவர்கள் வீட்டை அடுத்து நான்கு வீடுகள் மட்டுமே தள்ளி இருந்ததால் எனக்கு வீட்டுக்குள் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. என் மனைவியின் முகத்தை பார்த்தேன், அவள் எந்த சலனமும் இல்லாமல் இருந்தாள். சே நாம எல்லாம் இருக்கறதா இல்லையா என்ன குடும்பமோ, என் வாய் முணு முணுத்தது. சத்தம் காதில் வாங்கினாலும் பதில் ஒன்றும் வரவில்லை என் மனைவியிடமிருந்து. சரி அவள் கவலை அவளுக்கு, எங்களுக்கு பிறந்த பையனும், பெண்ணும், திருமணமாகி வெளி நாடுகளில் தங்கிவிட்டனர். எப்பொழுதாவது ஒரு முறை வந்து எட்டிப்பார்த்து செல்வர். அதற்கே அந்த ஆர்ப்பாட்டம். லீவ் கிடையாது, உடனே போக வேண்டும் என்று. அவர்கள் பெற்ற குழந்தைகளையாவது அருகில் விடுவார்களா, தாத்தாவை தொந்தரவு செய்யாதே, பாட்டியை தொந்தரவு செய்யாதே, என்று விலக்கியே வைத்திருப்பார்கள். சத்தம் அதிகமாக இருந்தது.சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தேன்.

என்னைப்போலவே அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் அந்த வீட்டை நோக்கி படையெடுக்க தயாராக இருந்தார்கள். நான் வெளியே வந்து அவர்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க, அதுவரை என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தவர்கள்,ஏதோ நான் இவர்களுக்கு தலைமை தாங்குவது போல என் பின்னால் நடந்து வந்தனர்.அங்கு அந்த வயதான தம்பதிகளை சுற்றி அவர்களுடைய வாரிசுகளும்,அவர்கள் மனைவிமார்களும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.

ஏன் இப்படி சண்டையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? என்னுடைய சத்தத்தில் கொஞ்சம் அந்த இடம் அமைதியானது. அவரவர்கள் தங்களுக்குள் முணு முணுத்துக்கொண்டு மெல்ல அந்த இடத்தை விட்டு விலகினர். எனக்கு அந்த வயதான தம்பதிகளை பார்க்க பரிதாபமாக இருந்தது. இதற்கு ஒரு வழி காண வேண்டும். தினம் தினம் இந்த வயதான தம்பதிகள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடுபடுவது மனதுக்கு வருத்தமாக இருந்தது.

நண்பன் பாலுவை பார்க்கச்சென்றேன், பாலு ஆரம்பத்தில் என்னோடு பணிபுரிந்து கொண்டிருந்தவன்,பிறகு பணியிலிருந்து விலகி வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது நல்ல நிலைமையில் உள்ளான்.அவனிடம் இந்த வயதான தம்பதிகளைப்பற்றி சொன்னேன். அவர்களுக்கு ஒரு நல்ல முதியோர் இல்லம் இருந்தால் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டேன்.அவன் தன்னுடைய செல்வாக்கால் ஏற்பாடு செய்து தருவதாக சொன்னான்.

மனசு நிம்மதியுடன் வீட்டுக்கு வருமுன் அவர்கள் வீட்டுக்கு சென்று அந்த வயதான தம்பதிகளை பார்த்து உங்களுக்கு நல்ல ஒரு இடமாக பார்த்து வைத்திருக்கிறேன். நீங்கள் அங்கு போய் இருங்கள் அப்பொழுது தான் உங்கள் அருமை இவர்களுக்கு தெரியும் என்று பெரிய லெக்சர் கொடுத்தேன். அதற்கு அந்த தம்பதியர் ஒன்றும் பேசாமல் இருந்தனர். மனசு சங்கடம் போலிருக்கிறது என்று நினைத்து சரி நான் வருகிறேன் என்று அவர்களிடம் விடை பெற்றேன்.

என் மனைவியிடம் இவ் விபரம் தெரிவித்தேன். அவள் இதெல்லாம் உங்களுக்கு வேண்டாத வேலை என்று சொன்னவள்,அவர்கள் சந்தோசம் அவரக்ளுக்கு அதை ஏன் கெடுக்கிறீர்கள் என்று முணுமுணுத்தாள்.அவள் சொன்னது எனக்கு புரியாததால் ஒதுக்கி தள்ளினேன்.

பாலு எல்லாம் தயாராகிவிட்டதாக தெரிவித்தான். நான் அவர்கள் வீட்டுக்கு சென்று அனைவரையும் அழைத்து உங்க அப்பா, அம்மா, கொஞ்ச நாள் முதியோர் இல்லத்துல இருப்பாங்க, நீங்க அவங்களை போய் பாத்துக்கலாம். அவங்க அங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும். என் பேச்சுக்கு அவர்கள் எதுவும் பேசவில்லை என்றாலும், இந்த விவகாரத்தில் நான் தலையிட்டதை விரும்பவில்லை என தெரிந்தது. என்றாலும் நான் பெரிய மனிதன் என்பதால் அவர்கள் எதுவும் பேசவில்லை. நானே ஒரு கார் ஏற்பாடு செய்து அந்த தம்பதிகளை ஏற்றி அந்த இல்லத்தில் கொண்டு போய் விட்டு விட்டு, அப்பாடி! என வீடு வந்து சேர்ந்தேன். என் மனைவி என்னை விரோதியாய் பார்த்தாள். நான் நல்லதைத்தானே செய்தேன். இவள் ஏன் என்னை விரோதமாய் பார்க்கவேண்டும்?.

ஒரு வாரம் ஓடி யிருக்கும் அந்த தெருவே அமைதியாய் இருந்தது எங்களுக்கு வெறிச்சென்று இருந்தது. ஏதோ இழந்தது போல இருந்தது. அந்த குடும்பத்தில் எப்பொழுதும் என்னை மா¢யாதையாய் பார்ப்பவர்கள் கூட இப்பொழுது என்னை விட்டேத்தியாய் பார்ப்பதாய் எனக்கு பட்டது. ஏன் என் மனைவி கூட என்னிடம் முன்னைப்போல பேசுவது குறைந்து போனதாய் பட்டது.இந்த தெருவே ஏதோ சத்ததுக்கு ஏங்குவது போல பட்டது. இதனையே பக்கத்து வீட்டுக்காரர்களும் நினைக்கிறார்களோ?

பத்து நாள் ஓடியிருக்கும், காலை வேலையில் திடீரன்று எங்கள் தெருவில் கூச்சல் கேட்டது. நேரம் ஆக ஆக சத்தம் பெரிதானது,என்னவென்று விசாரிக்க அதே வீட்டிற்கு கிளம்ப எத்தனித்த போது என் மனைவி தடுத்தாள்.இங்க பாருங்க அது அவங்க குடும்ப விவகாரம், உங்களுக்கு கொடுப்பினை இல்லையின்னா பேசாம இருங்க, போய் அவங்க கூட்டை கலைக்காதீங்க.அவள் சொன்ன வார்த்தைகள் எனக்கு புரியவில்லை,அவளை உதாசீனப்படுத்திவிட்டு அந்த வீட்டுக்கு சென்றேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த வயதான தம்பதியர் அங்கு உட்கார்ந்திருக்க அவர்களை சுற்றி வழக்கம்போல கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர் அவர்களின் வாரிசுகள்.

எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை, பேசாமல் தலைகுனிந்து என் வீட்டிற்கு வந்தேன். நான் உள்ளே நுழையும் வரை பேசாமல் இருந்த என் மனைவி ஏன் வருத்தமா இருக்கறீங்க என்று ஆறுதலாய் கேட்டாள், போகும் போது இவள் பேசிய பேச்சுக்கும் இப்பொழுது பேசும் பேச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்த நான் எதுவும் புரியாமல் அவள் முகத்தை பார்க்க, அவங்க என்னதான் சண்டை போட்டாலும் அந்த தம்பதிகள் மனசுக்குள்ள ஒரு பாசம் இருந்து கிட்டே இருக்கும், நம்மளை சுத்தி நம்ம குடும்பம் இருக்கு அப்படீன்னு, இவங்களை எவ்வளவுதான் வசதியான இடத்துல கொண்டு போய் வச்சாலும் அங்க அவங்க குழந்தைங்க,பேரன் பேத்திங்க குரலை கேட்கலியின்னா அனாதையா நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க. உண்மையில பார்த்தா நாமதாங்க அநாதை, அவங்க இல்லை, ஏண்ணா சண்டை போடறதுக்கும், சமாதானம் பேசறதுக்கும் எப்பவும் அவங்களை சுத்தி ஆளுங்க இருக்காங்க. நமக்குதான் இருந்தும் யாருமே இல்லை.குரலில் அழுகை வெடித்து கிளம்பியது.

எனக்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *