(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(Much Ado About Nothing)
கதை உறுப்பினர்
ஆடவர்
1. லியோனதோ: மெள்ளினாத் தலைவன் – ஹீரோ தந்தை – பீயாத் ரிஸ் மாமன்.
2. கிளாடியோ: பிளாரென்ஸ் நகரத்துப் பெருமகன் – ஹீரோவின் காதலன்.
3. பெனிடிக்: பாதுவா நகரத்துப் பெருமகன் பீயாத்ரிஸை வெறுத்தெதிர்த்துப் பின் காதலித்தவன்.
4. தான் பெத்ரோ : ஆரகன் இளவரசன் – கிளாடியோ, பெனிடிக் ஆகிய இருவருக்கும் நண்பன்.
5. தான்ஜான் : தான் பெத்பேராவின் மாற்றாந்தாய் மகன் – அவன் மீதும் அவன் நண்பன் மீதும் பொறாமை கொண்டவன்.
6. பொராகியோ : ஹீரோவின் தோழியாகிய மார்கரட்டின் காதலன் – தான் ஜானின் நண்பனாதலின் அவன் தூண்டுதலால் ஹீரோமீது பழி சுமத்தியவன்.
பெண்டிர்
1. ஹீரோ: லியோனதோவின் மகள் – கிளாடியோ காதலி .
2. பீயாத்ரிஸ்: லியோனதோ வின் மருமகள் – முதலில் பெனிடிக்குடன் பூசலிட்டுப் பின் நண்பர் சூழ்ச்சியால் அவன் காதலியானவள்.
3. உர்ஸலா: ஹீரோவின் தோழியர்.
4. மார்கரட்: ஹீரோவின் தோழியர்.
கதைச் சுருக்கம்
பிளாரென்ஸ் பெருமகனான கிளாடியோவும், பாதுவாப் பெருமகனான் பெனிடிக்கும் தம் நண்பனான ஆரகன் இள வரசன் தான் பெத்போவுடன் போருக்குச் சென்று வெற்றியுடன் மீளும் வழியில் மெஸ்ஸினாத்தலைவன் லிபோன தோவின் அரண்மனையில் தங்கினர். கிளாடியோ லியோனதோவின் மகள் ஹீரோவைக் காதலித்தான். ஆனால் பெனிடிக்கும் லியோனதோ மருமகள் பீயாத்ரிஸும் இதற்கு நேர்மாறாகப் பூசலிடவே, நண்பரனை வரும் லியோனதோவும் சேர்ந்து அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் மீது காதல் கொண்டு தவிப்பதாக மற்ற வர்க்குத் தெரியக்கூறிச் சூழ்ச்சியால் அவர்களிடையே காதல் உண்டு பண்ணினர்.
இதற்குள் தான் பெத்ரோவினிடமும் நண்பரிடமும் பொறாமை கொண்ட அவன் மாற்றாந்தாய் மகன் தான் ஜான் தன் நண்பனும் ஹீரோவின் தோழியாகிய மார்கரட்டின் காதலனுமான பொராகி யோவை ஏவி ஹீரோமீது பழிசுமத்தி அவனை அவள் காதலன் கிளாடியோ மணவினையின் போது வெறுத்து அவமதித்தொதுக்கச் செய்தான். கோழிநிலையைத் திருத்தியன்றித் தான் மணப்பதில்லை என்று பீயாத்ரீஸ் கூறிவிட்டாள். லியோனதோ ஹீரோ இறந்த தாகக் கூறி அவள் மானங்காத்தான்.
அதற்குள் ஒரு வழக்கறிஞர் முன் தான்ஜான் தன் வஞ்சச் செயல்கூறி வீம்படித்ததால் ஹீரோவின் தூய்மை விளங்கவே, கிளாடியோ கழிவிரக்கங்கொண்டு துடித்தான். அப்போது லியோனதோ தேற்றி அவள் போன்ற அவள் தங்கையை மணக் கும்படி வேண்டிக்கொண்டு உண்மையில் ஹீரோவையே மணக்கச் செய்தான். அதனையறிந்த கிளாடியோ மகிழ்ந்தான். பெனிடிக்கும் பீயாத்ரீஸை மணந்து மகிழ்ந்தான்.
1. காதல் ஒருபுறம் : பூசல் ஒருபுறம்
லியோனதோ என்பவன் ‘மெஸ்ஸின நகரத்து அரசியல் தலைவன். அவனுக்கு ஒரு மகளும் ஒரு மருமகளும் இருந்தனர். மகள் பெயர் ஹீரோ ; மரு மகள் பெயர் ‘பீயாத்ரிஸ் என்பது.
இவர்களுள் ஹீரோ அடக்கமான பேச்சு உடையவள். பீயாத்ரிஸோ கலகலத்த பேச்சும் பிறரை எளிதில் எள்ளி நகையாடும் குணமும் உடையவள்.
அந்நாட்டரசனுக்குப் போரில் உதவி செய்யச் சென்ற வீர இளைஞர் சிலர் வழியில் மெஸ்ஸினாவில் தங்கினர். அவர்களுள், ‘ஆரகன் இளவரசனை தான் பெத்ரோ தலைமையானவன். அவனுடன் வந்தவர்கள்
பிளாரன்ஸ் நகரத்துப் பெருமகனான ‘கிளாடியோவும், பாதுவா நகரத்துப் பெருமகனான ‘பெனிடிக்கும் ஆவர்.
போரிலேயே அப்போது அவர்கள் கவனம் இருந்தபடியால் லியோனதோவின் மாளிகையில் இருந்த பெண்களை அவர்கள் அவ்வளவாகப் பார்க்கவில்லை. ஆனால் போரில் அருஞ்செயல் புரிந்து புகழும் வெற்றியும் பூண்டு திரும்பி வந்தபோது அவர்கள் கண்ணுக்கு அப்பெண்கள் அரமங்கைய ராகத் திகழ்ந்த னர்.
கிளாடியோ ஹீரோவைக் கண்ணுற்றது முதல் மதிமயக்க முற்றவன் ஆனான். அவள் அழகில் ஈடுபட்ட அவன் கண்கள் தேனுண்ட வண்டுகள் போல் அவளை விட்டகலாமற் சுற்றின . அவளுடைய அடக்க ஒடுக்கமான போக்கும், நடையும், நயமிக்க மொழிகளும் அவன் உள்ளத்தை அரித்தன. அவன் கண்கள் தன் பக்கம் நாடுவதைக் குறிப்பாக அறிந்த ஹீரோவின் உள்ளமும் அவள் இணக் கத்தை நாடாமலே அவன் பக்கம் ஒன்றிவிட்டது. இருவர் மன நிலைகளையும் உய்த்துணர்ந்துகொண்ட இளவரசன் தலைவனுடன் இதுபற்றிக் கலந்து பேசினான். ஹீரோவுக்குக் கிளாடியோ ஏற்ற காதலனே என்று எண்ணி அவர்களை மணவினை யால் இணைக்கத் தலைவனும் ஒப்புக்கொண்டான். காதலருக்கும் இது தனித்தனியே நண்பர்கள் வாயி லாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது கேட்டுத் தம்மையே மறந்து மகிழ்வுற்றனர்.
ஹீரோவும் கிளாடியோவும் இங்ஙனம் மன மொத்து ஒன்றுபட்டதற்கு நேர் மாறாகப் பெனிடிக் கும் பீயாத்ரிஸும் ஓயாது கலவரமிடுவாராயினர். பெனிடிக்குப் பீயாத்ரிஸுபக் கிணையான வாயடியும் நகைத்திறனும் உடையவனாபினும் அவன் , கிளாடி யோவும் தலைவனும் பேசுவதையே கவனித்து அவர் களிடம் பேசிக் கொண்டிருந்தான். தன்னிடம் ஒரு வரும் பேசாதது கண்டு, பீயாத்ரிஸ் சினங்கொண் டாள். பிறரிடங் கடகடவென்று பேசிக்கொண்டிருக் கும் பெனிடிக்கைக் கண்டதும் தன் நகைத்திறனுக் கும் வாயடிக்கும் ஏற்ற பேர்வழி இவனே என்று எப்படியோ அவள் மனந்துணிந்துவிட்டது. உடனே அவள் அவனை அணுகி, ‘ஐயோ பாவம்! ஓயாது பேசியும் உன்னை ஒருவருங் கவனிப்பாரில்லை. அப் படியும் நீ பேசிக்கொண்டே இருப்பது தான் வியப் பாயிருக்கிறது,’ என்றாள்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சா தன்றோ ? அதுபோல் பெனிடிக் இதை ஒரு பொருட் டாக எண்ணவில்லை. மாறாக அவளுக்கு நலல பாடம் படிப்பிக்க எண்ணிச் சற்று நேரம் பொறுத்து அவளை அப்பொழுதுதான் கண்டவன் போல் பாவித்து, அட்டா, நான் பார்க்கவில்லையே ; இந்தத் திருமகளுக்கு மூத்த பெருமகள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாளா?’ என்றான்.
பிறரை ஏளனம் செய்பவருக்குத்தான் ஏளனம் சுடும். தன்னை மூத்தாள் என்று அவன் சொன்னதும் அவள் பின்னுஞ் சினங்கொண்டு அவனைக் குறைத் துக் கூறலானாள். மேலும் இளவரசன் பெனிடிக் பேசுவதையெல்லாங் கேட்டு, அவனுக்குப் பக்கத் துணையாக நிற்பது கண்டு இருவரையும் ஒரே சொல் லால் இழிவுபடுத்த எண்ணி, அவள் ‘பெனிடிக், உன் திறத்தைப் பார்த்து இவ்விளவரசர் சிரிக்கிறதைப் பார். அவருக்கு எங்கிருந்து இவ்வளவு நல்ல கோமாளி கிடைத்ததென்று விளங்கவில்லை’ என் றாள். கேலியில் உண்மை கலந்திருந்தால் அஃது ஆழ்ந்து பதியும். ஆதலால் தன்னை இங்ஙனம் இளவரசனுக்குக் கோமாளி என அவள் அழைத்தது பெனிடிக்கின் மனத்திற் சுறுக்கெனத் தைத்தது.
அதோடு, போரைப் பற்றிய பேச்சு வந்த போதும், அவள் அவனுடைய வீரத்தை மதியாமல் ‘இந்தப் போரில் நான் மட்டும் உன்னுடன் வந்திருந் தால், நீ கொன்றதனைத்தும் நான் தின்றிருக்கக் கூடுமே,’ என்றாள். அவன் போரில் மிகுதியாகக் கொன்றிருக்க முடியாது என்ற இக்குறிப்புப் பொய் யேயாயினும் அவனுக்கு அது மிகுந்த அவமதிப் பைத் தருவதாக இருந்தது.
பீயாத்ரீஸின் சுடுமொழிகள் ஒவ்வொன்றிற் கும் பெனிடிக்கும் சரியாக இரண்டு பங்கு சுடுமொழி கள் தந்தான். இங்ஙனமாக இவர்களிருவரும் ஒரு வரை யொருவர் குத்தலாகப் பேசுவதில் தம் திறனை யெல்லாங் காட்டி வந்தனர்.
2. சூழ்ச்சியால் வெறுப்பு விருப்பாக மாறுதல்
கிளாடியோவும் ஹீரோவும் கொண்ட காதல் முதிர்ந்து அவர்கள் விரைவில் இணைபிரியாத் தோழ ராயினர். அவ்விருவரும் தம்மணவினை நாளை மிகவும் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்தன ராதலின், அந் நன்னாள் வரையிற் பொழுது போவது அருமையா யிருந்தது. இதனைக் குறிப்பாய் அறிந்த இளவரசன் அவர்களுக்குக் களிப்பைஊட்டி நேரத்தைப் போக்கி யுதவ ஓர் இனிய வேலையை உண்டு பண்ணினான். கலகலப்பாய்ப் பூசல் விளைத்துவரும் பெனிடிக்கும் பீயாத்ரிஸும் ஒருவரை யொருவர் காதல் கொள் ளும்படி செய்ய வேண்டுமென்பதே அவ் வேலை. முதலில் பெனிடிக்கின் தோழர்கள் அவன்மீது பீயாத்ரிஸ் காதல் கொண்டுள்ளாள் என்று அவனை நம்பச் செய்ய வேண்டும். அதுபோல் பீயாத்ரிஸின் தோழியர் பெனிடிக் அவள் மீது காதல் கொண்டிருப் பதாக அவளை நம்பச் செய்யவேண்டும். அப்போது இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கும் வகை யைப் பார்த்து அவர்களை எல்லாரும் சேர்ந்து ஏள னம் செய்யலாம் என்று இளவரசன் எடுத்துரைத்தான்.
இதன்படியே லியோன தோவும் கிளாடியோவும் பெனிடிக்குத் தெரியாமல் பேசுவதுமாதிரித் தங் களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பெனிடிக் தமக்கருகில் செடி கொடி வரிசைகளுக்கப் புறம் ஓர் இருக்கையில் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்தான் என்பது , அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
தற்போக்காகப் பேசுவது போல் வேறு பொதுச் செய்திகளைப் பற்றிச் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தபின், திடீரென்று கிளாடியோ லியோன தோவைப் பார்த்து, ‘ அஃதிருக்கட்டும் நண் பரே! நீர் உமது மருகியைப் பற்றிச் சொன்ன செய்தி என்னாயிற்று? என்னால் அதை நம்பவே கூடவில்லை’ என்றான்.
லியோனதோ: ‘ஆம்’ முதலில் என்னாலும் நம்ப முடியாமலே தான் இருந்தது. பெனிடிக்கைப் பற்றி அவள் பேசுவதைக கேட்டால் அவள் அவனை வெறுக்கிறவள் என்றுதான் எவரும் சொல்லுவர். அப்படியிருந்தும், அவள் அவனைக் காணாதவிடத்து அவன் பெயரையே நினைத்துப் புலம்பி அவனைப் புகழ்ந்து புகழ்ந்து அழுங்குவானேன்? பாவம். அவள் நல்லவள்; அறிவுடையவளும் கூட. இந்த ஒரு வகையிலே தான் அவள் தன் அறிவைப் பறி கொடுத்துவிட்டுப் பெண்ணே பிடிக்காத இந்தக் காட்டானிடம் மனம் செலுத்துகிறாள்.’
கிளாடியோ: ‘ஆம். அது வொன்று தான் அவள் அறிவுக்குப் பொருந்தாச் செயல் என்று ஹீரோகூடக் கூறுகிறாள். எப்படியும் அவனிடம் இதைக் கூறி அவளைக் காதலிக்கச் செய்ய வேண்டு மென்றும் ஹீரோ என்னிடம் சொன்னாள். அதற்கு நான், ‘அவனிடம் இதைச் சொல்வதில் பயனில்லை. காதலுக்கும் அவனுக்கும் தொலை மிகுதி. அதிலும் பீயாத்ரிஸையாவது அவன் விரும்பவாவது ‘ என்று சொல்லித் தடுத்துவிட்டேன்.
முதலில் அவர்கள் யாரோ ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுவதாக எண்ணி, பெனிடிக் அக் கதையை அரை மனத்துடன் கேட்டுக்கொண்டிருந் தான். பின் அது பீயாத்ரிஸையும் தன்னையும் குறிப்பதாகக்கண்டு அதனைக் கூர்ந்து கவனித்தான். பிறர் தன்னைக் குறைவாக நினைத்தும் பீயாத்ரிஸ் மட்டும் தன்னை உயர்வாக மதித்துக் காதலிப்பதைக் கேட்டதும் அவள் மீது அவனுக்கிருந்த வெறுப்பே விருப்பாக மாறிவிட்டது. ‘ஆ, இதுவரை நான் பெண்கள் பக்கம் நாடா திருந்ததெல்லாம் இப் பெண்ணரசிக்காகவே போலும் ‘ என்று அவன் வாய்விட்டுக் கூறினான். கிளாடியோவும் லியோன தோவும் இகனைச் செவியுற்று முதல் படியிலேயே தமது சூழ்ச்சி வெற்றியுற்றதென மகிழ்ந்தனர்.
இச்சமயம் மறுபுறம் ஹீரோவின் வேலையும் நன்கு தொடங்கிற்று. ‘உணவு வேளையாயிற்று; எல்லோரும் வந்துவிட்டார்கள். உன் நாக்குக்கு அஞ்சியோ என்னவோ பெனிடிக் வரவில்லை. அவனை நீயே இழுத்து வா,’ என்று அவள் பீயாத் ரிஸை அனுப்பினாள். பீயாத்ரிஸும் அதனைப் பின் பற்றி வேண்டா வெறுப்பாகத் தோட்டத்திற்குள் வந்து பெனிடிக்கைப் பார்த்துத் தன் வழக்கப்படி கடுகடுத்த குரலில், வயிற்றில் பசி கூடவா உனக் குத் தெரியவில்லை. இங்கு உன்னை அழைத்துவர வும் வேறு போக்கற்றவர்கள் அகப்படவில்லையாம்!’ என்றாள். அவள் மொழிகள் உண்மையில் எப்படி யிருந்தாலும் பெனிடிக்கின் காதுக்கு மட்டும் அன்று அதில் அன்பும் காதலும் உள்ளடங்கி யிருப்பன வாகப் பட்டது. அன்று ஒருநாள் மட்டும் அவன் அதற்கு மாறாகக் கடுமொழி கூறாது, ‘சரி, இதோ வருகிறேன். நீ இன்னும் உணவருந்தாமலா இருக் கிறாய்,’ என்றான். அவனது பேச்சில் ஏற்பட்ட மாற்றத்தைப் பீயாத்ரிஸ் கவனியாமலில்லை.
பீயாத்ரிஸினது காதல் வளர்ச்சியின் அடுத்த படி அன்று மாலையே கொடங்கிற்று. ஹீரோ அப் போது தன் தோழியராகிய ‘உர்ஸுலா மார்கரட் ஆகிய இருவருடனும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது ஹீரோ மார்கரட்டை அனுப்பிப் ‘ பீயாத்ரிஸிடம் ஹீரோவும், உர்ஸுலா வும் உன்னைப்பற்றிப் பேசிக்கொண்டே போகிறார் கள்,’ என்று கூறும்படி செய்தாள். பீயாத்ரிஸும் இதைக் கேட்டவுடன் எதிர்பார்த்தபடி தோட்டத் திற்கு வந்து தொலைவிலிருந்தே பதுங்கிப் பதுங்கி ஹீரோவும் உர்ஸுலாவும் பேசிக்கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்திலுள்ள பூம்பந்தருக் கருகில் மறைந்து நின்றாள்.
அவள் வந்திருப்பதை அறிந்தும் அறியாதது போல ஹீரோ உர்ஸுலாவுடன் முன் பேசியதைப் போலத் தொடர்ந்து பேசும் முறையில் பேசத் தொடங்கினாள்.
ஹீரோ: அவள் எவ்வளவோ பெருமைக்காரி, உர்ஸுலா! அதோடு ஆடவர் என்றாலே அவளுக்குப் பிடிப்பதில்லை. இப்படிப்பட்ட வளைப் பார்த்துப் பெனிடிக் காதல் கொண்டது வியப்பாகவே இருக் கிறது. இதை அவளிடம் சொன்னால் அவள் ஏளனந் தான் பண்ணுவாள். ஆதலால் அவளிடம் சொல்ல வேண்டா .’
உர்ஸுலா : சரி, எளிதாகச் சொல்லிவிட் டாய். சொல்லாவிடில் பெனிடிக்கின் நிலை என்னா வது? எப்படியும் சொல்லித்தான் ஆகவேண்டும். என் அறிவுக்கு, அவள் வெளிக்கு வாயடி அடிக் கிறாள் ; அடித்தாலும் அவனுடைய உயர் நடையையும் அறிவையும் உள்ளூரப் பாராட்டாமலிருக்கும் படி அவ்வளவு அறிவில்லாதவளல்லள் அவள். என்னவோ அவள் மனத்தை யார் கண்டார்கள்? பெனிடிக்கைப் போன்ற வீரமும் அறிவும் உடைய இளைஞன் இந்த இத்தாலி நாடு முழுமையும் தேடினாலும் அகப்படப் போவதில்லை. அவனைத் தெய்வம் யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ?………. சரி, அவள் காரியம் எப்படியாவது இருக்கட்டும். உனக் கும் கிளாடியோவுக்கும் மணவினை எப்போது?
ஹீரோ : நாளையே. அதற்கான ஆடைகள் எல் லாம் வந்துவிட்டன. மணவறைக்கான ஆடைகளைத் தெரிந்தெடுத்து அணிவதில் உன் துணை வேண்டும் ; வா போகலாம்.
ஹீரோவும் உர்ஸுலாவும் போனபின் பீயாத் ரிஸ் தனக்குள், ‘ ஆ, இம்மட்டில் இப்பெண்கள் என்னை உதவாக்கரை என்று வைத்திருக்கிறார்கள். ஆனால் பெனிடிக்கைக் கைக்கொள்வதன் மூலம் என் திறனை அவர்களுக்குக் காட்டுகிறேன்,’ என்றெழுந்தாள்.
பெனிடிக்கும் பீயாத்ரிஸும் அதன்பின் தாம் முன் ஒருவரை யொருவர் திட்டியதை மறந்து கலந் துறவாடத் தொடங்கினர். கிளாடியோவும் ஹீரோ வும் தொடங்கிய கைத்திறன் அவர்கள் எதிர்பார்த் ததைவிடப் பன் மடங்கு பயன் தந்தது. ஆனால் அதனைக் கண்டு அவர்கள் நெடு நாள் மகிழ்வதற் கின்றி, ஊழ் அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத புயல் ஒன்றைக் கொண்டுவந்து விட்டது.
3. வஞ்சத்தால் விளைந்த பேரிடர்
இளவரசன் ‘தான் பெத்ரோ ‘வுக்கு ஒரு மாற் றாந்தாய் மகன் இருந்தான். அவன் பெயர் தான் ஜான் என்பது. அவன் கெட்ட குணமும் குறுகிய நோக்கமும் உடையவன். அவனுக்கு இளவரசனிட மும் அவனுடைய நண்பர்களிடமும் பொறாமை மிகுதி. அவர்களுக்கு ஒரு நன்மை வந்தால் அவ னுக்கு அஃது ஒரு தீமைபோலக் குத்து தலாயிருக் கும். இளவரசன் கிளாடியோவின் மணவினைக்கு உள்ளீடானவன் என்பதைக் கண்டதும் எப்படி யாவது அவர்களது கனவுலகை உடைக்க வேண்டும் என்று உறுதிகொண்டான்.
தான் ஜானின் நண்பனாகிய பொராகியோ ஹீரோவின் தோழி மார்கரட்டைக் காதலித்து வந் தான். தான் ஜான் அவனுக்கும் அவன் மூலமாக மார்கரட்டுக்கும் நிரம்பப் பொருள் கொடுத்து அவர் களைத் தன் வசப்படுத்தினான். பின் அவன் பொராகி யோவிடம் ‘ஹீரோவின் உடையணிந்து உன் காதலி யைப் பலகணி வழியாக நள்ளிரவில் வந்து உன் னுடன் பேசச் செய். நான் அச்சமயம் பார்த்துக் கிளாடியோவை அங்கே அழைத்து வந்து ஹீரோ மீது அவனுக்குக் கெட்ட எண்ணம் உண்டாகும் படி செய்கிறேன். அப்போது இம் மணவினை முறி வடையும்,’ என்றான்.
அதன்படியே அன்று நள்ளிரவு நடைபெற் றது. தான் ஜான் அன்று கிளாடியோவினிடமும் இளவரச னிடமும் சென்று ‘ஹீரோவைக் கிளாடியோ மணப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அவள் தீயவள் ‘ என்றான். இளவரசனும் கிளாடி யோவும், ‘ இதென்ன, உனக்கு மட்டுமா அவள் தீயவள் என்று பட்டுவிட்டது. அவளை அனைவரும் பெருமையாகவே பேசுகின்றார்கள். எங்கள் கண்ணுக்கும் மாசிலா மணியாகவே அவள் காணப்படு கின்றாள் ‘ என்றனர். அப்போது பொய்ம்மையை வாய்மையாகத் திரிப்பதையே தொழிலாகக் கொண்ட அவ்வஞ்சகன் , ‘ அவள் பிறருடன் உறவாடுவதை நான் அடிக்கடி நேரில் பார்த்திருக்கிறேன். நாளை அவள் உங்களை மணக்கப் போகும் பெண் அல்லவா? இன்றிரவுகூட அவள் வழக்கம்போல் ஒரு மூன்றாம் மனிதனுடன் பேசுவதை நீங்கள் கண்டால் என்ன சொல்வீர்கள்’ என்றான். அதுகேட்டு வியப்பும் கலவரமுங் கொண்டு கிளாடியோ, நீ கூறுவது உண்மையாயின் அவள் மணவினையைப் பலரறியத் துறந்து அவளை நீக்கிவிடுவேன்,’ என்றான். இளவரச னும் ‘ அப்படிச் செய்தே தீருவோம்,’ என்று அவ னுடன் சேர்ந்தே பேசினான். அதன்பின் மூவரும் ஹீரோவின் அறைச் சாளரத்தின் பக்கம் ஒளிந்து நின்றனர். நள்ளிரவில் முன்னேற்பாட்டின்படி ஹீரோவின் உடையணிந்த மார்கரட் சாளரத்தைத் திறந்து வெளியே கண்ணோட்டம் செய்தாள். அதனை எதிர்பார்த்து நின்ற பொராகியோ மெல்லிய குரலில் காதற்பா ஒன்றைப் பாடிக்கொண்டு வந்தான். உணமையிலேயே காதலரான அவ்வருவரும் அள வளாவிக் கைகோத்துப் பேசி மகிழ்ந்தனர். அத னைக் கண்ணுற்றிருந்த கிளாடியோவன் நெஞ்சில் ஊழித் தீப் போன்ற சீற்றம் எழுந்து புகைந்து எரிய லாயிற்று. இளவரசன் நெஞ்சமும் சட்டென்று கருகிற்று.
மறு நாள் மணவினை தொடங்குகையிலேயே கிளாடியோ துடிதுடிக்க வந்து, அந்தணன் வளர்த்த வேள்வித் தீயை அவித்து, அதற்காக வைத்திருந்த பொருள்களைக் காலாலுதறித் தள்ளித் தேய்த்தான். பின் மணப்பெண்ணைப் பார்த்து, ‘உனக்கு மண வினை தான் எதற்கு; உன் நடையை மறைக்க உன் தந்தை செய்த சூழ்ச்சியா இது?’ என்றான். லியோ னதோ இக் கொடுமொழிகள் கேட்டு, ‘ஐயா நேற்று வரை என்னுடன் உயிருக் குயிராய்ப் பழகிய நீங்கள் இன்று இப்படி ஏன் தாறுமாறாய்ப் பேசுகிறீர்கள் , என்றான். இளவரசன் முன் வந்து, ‘அரசே தாறு மாறாய்ப் பேசுவது நாங்கள் அல்லேம்; தங்கள் புதல்வி நடையிற் கண்ட தாறுமாறான தன் மையே நீங்கள் காண்பதன் மூலகாரணம்,’ எனக் கூறிவிட்டுக் கிளாடியோவையும் கூட்டிக்கொண்டு வெளியேறினான்.
தன் காதலனே தன்னை வெறுத்துத் தன் நடையிற் குறை கண்டதாகக் கூறவே, ஹீரோ எண்சாணும் ஒருசாணாய்க் குறுகினாள். அவள் மெய் துடிதுடித்தது. அவள் உணர்வற்று நிலத்தில் வீழ்ந்தாள். கிளாடியோவும் இளவரசனும் அவள் விழுந்ததைப் பார்த்தும் அவளுக்கு என்னுற்றதோ என்று கூடக் கருதாமல் வெளியே சென்று விட்டனர்.
4. உற்றவிடத்துதவும் உறவோர்
உண்மை வீரர்களும் உயர் குண முடையவர் களுமான இவ்விருவரும் கூறிய மொழிகளி லிருந்து லியோன தோவும் தன் மகள் தீயநடத்தை யுடையவளே என்று நினைத்தான். உணர்வற்றுக் கிடக்கும் ஹீரோவி னருகிற் சென்று பீயாத்ரிஸ் ‘என் அருமை அண்ணி, உனக்கு என்ன திவினை நேர்ந்தது ; ஐயோ, நீ கண் திறவாயோ என அழு தாள். பெனிடிக்கும் அணுகிவந்து, ‘பீயாத்ரிஸ், அவள் எந்நிலையி லிருக்கிறாள?’ என்றான். பீயாத் ரிஸ் கண்ணீ ர் வழிந்த முகத்துடன், ‘அவளைக் கொன்று விட்டார்கள் போலும் அப்பாவிகள் !’ என் றாள். ஹீரோவின் தந்தையாகிய லியோனதோ மட்டும், அவள் இறந்தே போகட்டும் ; இறைவனே, அவள் கண்கள் திறவாதிருக்க அருள்க,’ என்றான்.
மணவினை முடிக்கவந்த அந்தணன் ஹீரோ வின் செவியில் கிளாடியோ கடுமொழிகள் விழும் போதும் அவள் உணர்வற்று விழும்போதும் அவள் முகத்திற் கண்ட வியப்பையும் பெருந்தன்மை யையுங் கண்டு, அவள் தூய கற்பு உடையவளே என்று உறுதிகொண்டான். அவன் உதவியாலும் பீயாத்ரிஸ், பெனிடிக் ஆகியவர்கள் முயற்சியாலும், ஹீரோ விழித்தெழுந்தாள். ஆனால் அவள், ‘நான் ஏன் பிறந்தேன் ; ஏன் பிழைததேன்?’ என்று அழத் தொடங்கினாள். அந்தணன் அவளுக்கு ஆறு தல் கூறி லியோனதோவிடம், ‘ ஐய, இவள் குற்ற மற்றவள் என்று நான் உறுதி கூறுவேன். இவள் வகையில் ஏதோ சூது நடந்துள்ளது. எல்லாம் காலம் சரிப்படுத்தும். அதுவரை அவள் இறந்து விட்டாள் என்றே வெளியிற் செய்தி கூறிவிடுங்கள். பிற என் பொறுப்பு,’ என்றான்.
லியோனதோ: அதனால் பயனென்ன? அப்படி. ஒரு வீண் பொய்யைத்தான் சொல்வானேன்?
அந்தணன்: அப்படியன்று. நான் சொல்கிற படி செய்யுங்கள். அதன் பயன் பின்னால் தெரியும். அவள் இறந்தாள் என்று ஏற்பட்ட பின் அவளைப் பற்றிய பொய் எளிதில் வெளிப்படும்.
லியோனதோ இதற்கு ஒருவாறு இணங்கி னான். பெனிடிக்கும் பீயாத்ரிஸும் உண்மைச் செய்தியை வெளியிடோம் என உறுதி கூறினர்.
பெனிடிக்குக்கு உண்மையிலேயே ஹீரோவி னிடம் நல்ல நம்பிக்கையும் இரக்கமும் ஏற்பட்டன. ஆயினும் பீயாத்ரிஸ், ‘அவன் என் அருமை அண் ணியைக் குறை கூறின கிளாடியோவின் நண்பன் தானே ‘ என மனதிற்கொண்டு அவனிடம் விலகி நடக்கலானாள். அப்போது அவன் ‘ பீயாத்ரிஸ், நான் உனக்குச் செய்த பிழை யாது?’ என்று வருந்திக் கேட்டான்.
பீயாத்ரிஸ்: நீ என்னை நேசிக்கவில்லை.
பெனிடிக்: யார் சொன்னது! நான் நேசிப் பதுபோல ..
பீயாத்ரிஸ்: ‘அந்தக் கதை கட்டுகளெல்லாம் இப்போது என் காதில் விழாது. என் மனத்தில் ஹீரோவைப்பற்றிய கவலை ஒன்றிற்கே இடம் உளது. அதைத் தீர்த்த பின்னர்தான் உம்மைப் பற்றி என்னால் நினைக்கமுடியும். அவளைக் கறைப் படுத்திய அந்தக் கிளாடியோ இருக்கும் வரை நான் உம்மை அவர் நண்பராகவே நினைப்பேன்.”
பெனிடிக்: கிளாடியோ வேண்டுமென்று இக் குற்றம் செய்ததாக எனக்குப் புலப்படவில்லை. ஆயினும் அவனை எதிர்த்து வென்று உன் காதலுக் குத் தகுதியுடையவனாவேன்.’
இம் மொழிகளுடன் பெனிடிக் கிளாடியோவை நாடிச் சென்றான். அச் சமயம் லியோனதோ இள வரசனையும் கிளாடியோவையும் வழிமறித்துத் தன் புதல்வியின் மானத்தைப் பழித்து அவள் உயிரை வாங்கியதற்காகத் தன்னுடன் போராடும்படி அவர் களை அழைத்தான். ‘ ஆண்டிலும், ஆட்சி முறையி லும் எங்களுக்குப் பெரியவரான தங்களுடன் நாங் சள் போர் செய்யமாட்டோம்,’ என அவர்கள் மறுத்து விட்டனர். அச் சமயம் பெனிடிக்கும் வந்து போருக் கழைத்தான்.
5. உண்மை விளங்குதல்
இத் தறுவாயில் தீயவர் நலம் தீய்ந்து நல்லோர் தீமை நலிய அருள்புரியும் இறைவனது தோற்றம் போன்ற நற்செய்தி ஒன்று நிகழ்ந்தது. பொராகியோ தான் ஜான் ஏவலினால் தான் செய்து முடித்த அரிய வேலைத்திறனைப்பற்றி வீம்பு பேசிக்கொண்டிருந்தான். குற்ற வழக்குத் தலைவர் ஒருவர் இதனைக் கேட்டிருந்து அவனைக கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொண்டுவந்து லியோன தோமுன் விட்டார். லியோனதோவின் காவலர் அவனை அச்சுறுத்தி உண்மை முழுமையும் வெளி விடச் செய்தனர்.
ஹீரோ வகையில் தான் செய்த தீமையின் முழுவன்மையும் இப்போது கிளாடியோ மனத்தில் அழுந்திற்று. அவனுடைய தீச்சொல் கேட்டு ஹீரோ அடைந்த துயர் கூட அதற்கு ஈடன்று. தான் ஹீரோவுக்குச் செய்த தீங்கிற்கு அவன் அழலாய் உருகி, லியோன தோவை நோக்கி, அதற்காக எத்தகைய கழுவாய் புரியவும் தான் முன் வருவதாகக் கூறினான்.
லிபோனதோ , ‘ என் மகளுக்குச் செய்த தீமைக்குச் சரியான கைம்மாறு அவளுக்கு இளையா ளான அவள் போன்ற மற்றொரு புதல்வியை மணப் பதுதான்,’ என்றான். தன் மொழியால் தானே கட் டுண்டு கிளாடியோ இதனை வேண்டா வெறுப்பாய்
ஏற்றான். முறைப்படி மணம் நடக்கலாயிற்று. மணத் திரை நீக்கியதும் கிளாடியோ மணவினையில் ஏற்பட்ட வழக்கப்படியே, ‘நீ ஏற்றுக்கொள்வையாயின் நான் இன்று முதல் உன் கணவன் ‘ என்றான். அதற்கு விடையாகப் பெண், ‘ நான் முன்பே உம்மை ஏற்று உம் மனைவியாய் இருக்கிறேன்,” என்றாள். அது கேட்டு வியப்புடன் கிளாடியோ அவளை நோக்க, அவள் தன் பழைய காதலியே – தான் மணக்க மறுத்த ஹீரோவே என்று கண்டு ஒன்றுந் தோன் றாமல் திகைத்தான். அப்போது அந்தணன் நடந்த வற்றை யெல்லாம் விளங்கக் கூறினான். கிளாடியோ அதுகேட்டுக் கண்ணை யிழந்து மீண்டும் பெற்றவன் போல் உளமகிழ்ந்தான். மணவினை இனிது நடந் தேறியது.
இம் மணவினையின்போதே தாமும் மணந்து கொள்ள வேண்டுமென்று பெனிடிக்கும் பீயாத்ரிஸும் லி யோனதோவிடம் வழக்காடி னார்கள். ஆனால் லியோன தோ, ‘உங்களிடையே காதல் கிடையாது,’ என்று கூறி மறுக்கத் தொடங் கினான். பெனிடிக்கும் பீயாத்ரிஸும் ஹீரோவை யும் கிளாடியோவையும் விடத் தாம் ஒருவரை ஒருவர் பன்மடங்கு காதலிப்பதாகக் கூறினர். அப்போது ஹீரோவும் கிளாடியோவும் நகைத்துத் தாங்கள் அவர்கள் வகையில் செய்த ஏமாற்றத்தை விளக்க,
புத்தகம்) சிறுபிழையால் நேர்ந்த பெருந்தொல்லை 47 அது கேட்டுப் பீயாத்ரிஸ் சற்று முகம் கோணினாள். ஆனால் பெனிடிக்கு அவள் கையைப் பற்றி இழுத்து, இவர்கள் வாயாலேயே இவர்கள் ஏமாற்றுக்காரர் கள் என்று ஆய்விட்டது. இவர்கள் இப்போது கூறு வதும் ஏமாற்றமாகவே இருக்கவேண்டும். எப்படி யானாலும், நான் அரும்பாடு பட்டுத் தேடிய என் காதல்மணியை மணம் செய்தே தீருவேன்,’ என்றான்.
லியோனதோ விலாப்புடைக்க நகைத்துப் பீயாத்ரிஸைப் பார்த்து, ‘ இவர் இப்படிச் சொல்லு கிறாரே, நீ என்ன செய்யப்போகிறாய்?’ என்று கேட்டான்.
பீயாத்ரிஸ், ‘இவர் இவ்வளவு பிடிமுரண்டா விருப்பதனால், இவரை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் கிளாடியோ மாதிரி இவரும் பெருங் கதை கிளப்பி விட்டுவிடுவார்,’ என்றாள்.
எங்கும் மண வாழ்த்தும் மண முரசும். தான் – ஜான் காதுக்கு மட்டும் இம் மணப்பேச்சுச் சுவை தரவில்லையாம். அவனை யார் இப்போது கவனிப்பார்கள்!
– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (நான்காம் புத்தகம்), முதற் பதிப்பு: 1945, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.