சிறிய மகிழ்ச்சி நேரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 1,259 
 
 

ராகேஷ் சந்தோஷமாக இருந்ததற்கு காரணம் உண்டு. இதோ, இன்னும் அரை மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பி விடுவான். வினயாவிடம் தொலைபேசியில் “வினு, தயாராக இரு, மூணு மணிக்கு வந்துடறேன். மால் போய் ஷாப்பிங், டின்னர் எல்லாம் முடிச்சுட்டு வரலாம். திஸ் டைம் ஷ்யூர். எனக்கு லைட் டே தான் இன்னிக்கு. ஜி.எம் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்” என்று உறுதியளித்து விட்டான். அதே போல் அவனுடைய பணிகளை முடித்து விட்டான். மெலிதாக விசிலடித்துக் கொண்டே கிளம்பத் தயாரானான். பக்கத்து இருக்கை நண்பர்கள் “ராக், ரொம்ப ஜாலி மூட் போல் இருக்கு. இன்னிக்காவது நல்ல நம்பர் ஸ்கோர் பண்ணிடுப்பா, வைஃப் கிட்டே.” என்று சொல்லி கிண்டல் செய்தார்கள். ராகேஷ் புன்னகைத்தபடியே அலுவலகத்திலிருந்து வெளியே வந்து, தன் கார் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

ராகேஷ், வினயா இருவருக்கும் திருமணம் நடந்து ஒண்ணரை வருடம் ஆகிறது. காதலித்து மணந்தவர்களேயானாலும், ஏழாம் மாதம் முதல் சின்னச்சின்ன பிணக்குகள். புரிதல் இல்லாத பேச்சுகள். ராகேஷ் ‘இன்று நிச்சயம் இதை நான் செய்து விடுகிறேன்’ என்று சொல்லி செய்யாமல் போய் விவாதங்கள் நடக்கும். வினயா அவள் பங்குக்கு ‘நீங்க கவலைப்படாதீங்க ராக், நான் பாத்துக்கிறேன் ‘ என்று உறுதி கூறி அது முடியாமல் இவனுக்கு கோபம் வந்து மீண்டும் தர்க்கம். இப்படியாக இந்த விஷயத்தில் அதிகம் மாட்டுபவன் ராகேஷ்தான். இம்முறை அவள் பிறந்த நாள் வருவதற்கு முன்பே ஞாபகமாக அவளிடம், ‘உனக்கு வேண்டியவைகளை வாங்க இன்று உறுதியாக போகலாம்’ எனக்கூறி பேச்சு மாறாமல் இன்று சரியான நேரத்தில் போய்க்கொண்டிருக்கிறான்.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியவுடன் வெளிவந்த வினயா, “பரவாயில்லையே, அப்பப்ப பிராமிஸ் செஞ்சதெல்லாம் நினைவில் வரும் போல இருக்கு. கரெக்டா வந்ததுக்கு தேங்க்ஸ். கொஞ்சம் பக்கோடா செஞ்சிருக்கேன். இப்ப காபி போட்டு சாப்பிட்டு கிளம்பிடலாம். ரெடியாகி வாங்க”. என்றாள். “வினு, நான் லஞ்ச் ஒண்ணும் சரியா சாப்பிடல. அந்த நேரத்தில் வேலையை முடிச்சிட்டு உடனே கிளம்பிடலாங்கறதாலே, சும்மா ரெண்டு பிரெட் ஸ்லைஸ்தான். ஏதாவது வச்சிருக்கியா இங்கே?” என்று வயிற்றை தொட்டுக்கொண்டு ராகேஷ் கூறினான்.

“காலையில் செஞ்சு வச்ச இட்லி ரெண்டு இருக்கு. ஒரு கப்ல லெமன் ரைஸ் இருக்கு. அந்த டைனிங் டேபிளில் இருக்கற டப்பாவில் கொஞ்சம் வடகமும் சிப்ஸும் இருக்கு. அத்தோடு பக்கோடா, தயிர் சாதம் இதெல்லாம் போதும்னு நினைக்கிறேன் இப்போதைக்கு” வினயா சொன்னாள்.

“சூப்பர், தாராளமா போதும். இப்ப வந்துடறேன். நீ காபியை ரெடி பண்ணு. நீயும் ரெடியாகு. இன்னிக்கு என்ன ரொம்ப அழகா இருக்கற மாதிரி இருக்கே” என்று செல்லமாக அவள் கன்னத்தில் தட்ட, “அய்யே, இப்பதான் அழகு பத்தி தெரிஞ்சுதா, ரொம்ப வழியாதீங்க. இவ்வளவு நாள் மோசமா இருந்தேனா?” என்று வினயா கேட்க,

“அம்மாடி, ஆளை விடு, இப்போ ஆர்குமெண்ட் வேண்டாம், நாம் ப்ளான் செஞ்சபடி அடுத்த வேலையப்பாப்போம் ” என்றபடி வேகமாக அறைக்குள் சென்றான் ராகேஷ்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவன் சாப்பிட்டு விட்டு காபியை எடுத்துக் கொண்டு வேறு உடை மாற்ற உள்ளே செல்லும்போது, “நான் ரெடியா இருக்கேன். நீங்க வந்தா இறங்கிடலாம்” என்று வினயா கூறினாள். “வெய்ட், ஐந்தே நிமிடம், இதோ வந்துடறேன்” என்று பதிலளித்தான் ராகேஷ். அப்போது அழைப்பு மணி ஒலித்தது. “இந்த நேரத்தில் யாரு, நான் பாக்கறேன், நீங்க போய் ரெடியாகி வாங்க” என்றபடி வாயில் கதவை திறக்க சென்றாள் வினயா. “ஓ.கே” என்று ராகேஷ் அறைக்குள் சென்றான்.

கதவைத் திறந்த வினயாவுக்கு ஆனந்தமும் இன்ப அதிர்ச்சியும் ஏற்பட்டது. அங்கே அவளின் சிறுவயது தோழி, சுதா நின்று கொண்டிருந்தாள். இருவரும் இணைபிரியாதவர்களாக பள்ளி படிப்பை முடிக்கும் வரை இருந்தார்கள். அதன் பின்னர் இருவரது குடும்பங்களும் வெவ்வேறு நகரத்திற்கு இடம் பெயர்ந்ததாலும், வெவ்வேறு குடும்ப சூழ்நிலை காரணங்களாலும் நேரில் சந்திப்பது நின்று போய், வெறும் கைபேசி தொடர்பு மட்டுமே நீடித்தது. வினயாவின் திருமணத்தின் போது சுதாவுக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருந்ததால் அவள் வர இயலவில்லை. வெகுநாட்கள் கழித்து இன்றுதான் இருவரும் சந்திக்கின்றனர்.

“ஏய், வினி, எப்படிடி இருக்கே, உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு சொல்லாம கொள்ளாம நேரா வந்தேன். என் ஹஸ்பெண்டுக்கு இங்கே ட்ரான்ஸ்ஃபர் ஆகிடுச்சு. நானும் அந்த வேலையை விட்டுட்டேன். இங்கே எங்கேயாவது தேடிக்கலாம்னு நினைப்போடு போனவாரம் தான் கதிர் நகரில் வந்து குடியேறி இருக்கோம். அய்யோ, எவ்வளவு நாளாச்சுடி நாம ரெண்டு பேரும் சந்திச்சு, அரட்டை அடிச்சு, எனக்கு ஒரே சந்தோஷமா இருக்குடி” என்று சுதா வினயாவை கட்டிப்பிடித்து சிரித்தபடியே சொன்னாள்.

“நிச்சயமாடி சுதா, நல்ல வேளை, நீ இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வந்திருந்தா நான் என் ஹஸ்பெண்டோட ஷாப்பிங் போயிருப்பேன். நல்ல வேளை. உள்ள வாடி, எனக்கு உன்னை பாத்ததும் பழசெல்லாம் நினைவுக்கு வருதுடி. முன்னைக்கு இப்போ கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேடி நீ. ” வினயா மகிழ்ச்சி பொங்க கூறினாள்.

அப்போது ராகேஷ் தயாராகி வெளியே வந்தான். வினயா அவனை சுதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள். “ஸாரி மிஸ்டர் ராகேஷ், உங்க ப்ரோக்ராம நான் வந்து கெடுத்துட்டேன். ஜஸ்ட் ஹாஃப் அன் அவர். நான் பேசிட்டு கிளம்பிடுவேன்.” என்றாள் சுதா.

“நோ, நோ, அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உங்க ரெண்டு பேரோட நட்பை பத்தி வினு நிறைய சொல்லி இருக்கா. இட்ஸ் ஆல் ரைட்.உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா நீங்களும் எங்களோட மாலுக்கு வரலாம். திரும்பி வரும்போது நாங்க உங்க வீட்ல ட்ராப் பண்ணிடறோம்” என்றான் ராகேஷ்.

“கரெக்ட் டி சுதா, காபி தரேன், சாப்பிடு. எங்களோட வாயேன்டி. எனக்கு பர்ச்சேஸ் செய்ய நீயும் இருந்தா நல்லாவே இருக்கும். என்னடி சொல்ற ” என்று வினயாவும் சொன்னாள்.

“இல்லைடி, இன்னொரு நாள் வரேன். ஈவினிங் நானும் அவரும் கோவில் போக முடிவு செஞ்சிருக்கோம். இன் ஃபேக்ட் நான் ஸன்டே வரலாம்னு தான் இருந்தேன். ஆனால், எனக்கு மனசு கேக்கல, உன்னை எப்படியாவது பாத்துடணும்னு இன்னிக்குன்னு முடிவு செஞ்சேன்.ஓடி வந்துட்டேன்.” என்று சுதா பதிலளித்தாள்.

“பரவாயில்லைடி, ஏங்க நீங்க கொஞ்சம் உங்க ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கங்க, இன்னும் ஒருமணி நேரத்துல கிளம்பிடலாம். சரியா?” என்று வினயா ராகேஷைப்பார்த்து கேட்டாள். “நோ, ப்ராப்லம். நீங்க ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கறீங்க. அந்த நல்ல மூமெண்டை என்ஜாய் பண்ணுங்க. நான் ரூம்ல இருக்கேன். நீ தயாரா இருக்கும்போது கூப்பிடு” என்று ராகேஷ் அறைக்குள் போக நடந்தான்.

“வினி, மிஸ்டர் ராகேஷ், நீங்க ரெண்டு பேரும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எங்க வீட்டுக்கு வாங்க. ஓகேவா?” என்று சுதா இருவருக்கும் அழைப்பு விடுத்தாள்.

“ஓ, சேர்டன்லி, வருவோம்” என்று சொல்லியபடி போனான் ராகேஷ்.

வினயாவும் அதை ஆமோதித்து விட்டு “சரி, வாடி, கிச்சனுக்கே வந்து காபி எடுத்துக்கோ, பக்கோடா கொஞ்சம் இருக்கு, சாப்டறியா?” என்றபடி சுதாவை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். இருவரும் பழைய நிகழ்ச்சிகள் பற்றி பேசத்தொடங்கினர்.

படுக்கை அறைக்குள் சென்ற ராகேஷ், அங்குள்ள மேசையில் இருந்த மடிக்கணினியை துவக்கி அதில் மூழ்க ஆரம்பித்தான். நீண்ட நாட்கள் கழித்து வேலை நாட்களில் மதியம் வீட்டிற்கு வந்து, தயிரும் மற்ற உணவும் உண்டதால் லேசாகக் கண்களை சுழற்றியது. சிறிய தூக்கம் போடலாம் போல் இருந்தது. ஆனால் வினயா அவள் தோழியை அனுப்பி விட்டு திடீரென வந்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி அப்படியே கண்ணை மூடியபடி உட்கார்ந்தான்.


“சுதா டாக்ஸி புக் பண்ணி போய்ட்டா. உங்க கிட்ட சொல்ல சொன்னா. அவசியம் அடுத்த வாரமே நம்மை அவங்க வீட்டுக்கு வரணும்னு சொன்னா. வாங்க, கிளம்பலாம். நாம ஒரு மணி நேரம் லேட்டா தொடங்கறோம். பரவாயில்லை. சுதாவைப் பாத்ததுல இதெல்லாம் பெரிய விஷயமா தோணலை. சரி, ஃபர்ஸ்ட் எங்க போறோம், மால் ஆர் புடவைக்கடை?” என்று விஜயா பரபரத்தாள்.

“புடவைக் கடைக்கு போவோம். பாக்கி எல்லாத்துக்கும் மால் இருக்கு.” என்றான் ராகேஷ்.

புடவைக் கடைக்குள் நுழைந்தவுடன் ‘எங்கதான் காசு முளைக்குதோ, இல்லை எப்படித்தான் இதுக்கு பட்ஜெட் போடுவாங்களோ தெரியல, எந்த நாளும் கூட்டம்தான்’ என்று வினயாவின் காதில் கிசுகிசுத்தான். ‘என்ன செய்ய முடியும், வாங்க வேண்டிய நேரத்தில் வாங்கித்தானங்க ஆகணும்’ என்று பதில் சொன்னாள் அவள். ‘உன் சாய்ஸுக்கு வாங்கிக்கோ. நான் இந்த சேர்ல உட்காந்துக்கறேன்.’ என்று ராகேஷ் சொல்ல, ‘என் சாய்ஸ் ரெண்டு, உங்க சாய்ஸ் ஒண்ணு மொத்தம் மூணு’ என்று சொல்லி சிரித்தாள் வினயா. ‘நோ ப்ராப்லம்’ என ராகேஷ் கூறினான்.

ஒருவழியாக ஒண்ணரை மணி நேரத்தில் வந்த வேலை முடிந்து பணம் செலுத்திவிட்டு வெளியே வந்தனர் இருவரும். இரண்டு பைகளையும் தூக்கி வந்த ராகேஷை பார்த்து “எங்கிட்ட ஒண்ணு கொடுங்க” என்று வாங்கிக்கொண்டாள் வினயா. ” அடேங்கப்பா, அதெல்லாம் யோசிப்பியா நீ” என்று ராகேஷ் கேட்க, “ஓ, எஸ், நிச்சயமா, செய்வேன்” என்று புன்னகைத்தபடி ஒரு பையை வாங்கிக்கொண்டாள்.

வாரத்தின் நடுநாளாக இருந்தாலும் பன்னடுக்கு அங்காடி முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவளுக்கு சமையலறை உபகரணங்கள் புது விதமாக வந்தவைகளை வாங்கினாள். மற்ற சில தேவையான பொருட்களை வாங்கி முடித்து வந்தவுடன்,

“சரி இப்ப, நான் சொல்ற கடைக்கு வா” என்று சொல்லி அருகில் இருந்த பிரசித்தமான நகைக்கடைக்குள் அழைத்து சென்றான் ராகேஷ். உள்ளே போய் அங்கிருந்த ஒரு நபரை கூப்பிட்டு, தன் சட்டைப்பையில் இருந்து சிறிய பேப்பரை காண்பிக்க, அவர் ‘ஒரு நிமிஷம்’ என்று சொல்லி உள்ளே சென்று ஒரு அட்டை பெட்டியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்து விட்டு “சார், மேடம் ரெண்டு பேரும் இங்கே உட்கார்ந்து பாருங்க, உங்களுக்கு கூல் ட்ரிங்க்ஸ் இப்போ வரும்” எனக்கூறி உட்பகுதிக்கு போனார்.

வினயா ஆச்சரியமாக ராகேஷை பார்த்து விட்டு, உட்கார்ந்து பெட்டியை திறந்தாள். அழகான நெக்லஸ் ஒன்று அதில் பளிச்சிட, அருகில் உட்கார்ந்த ராகேஷ் கையை பலமாக அழுத்தி “எக்ஸலண்ட், அருமையான செலக்ட் பண்ணிருக்கீங்க, எப்படி என் சந்தோஷத்தை உங்களுக்கு சொல்றதுன்னே தெரியலே, அசத்திட்டீங்க கணவரே” என்று முழு திருப்தியுடன் அவன் தோளைத்தொட்டு சொன்னாள்.

“நான் நேத்திக்கே செலக்ட் பண்ணி வச்சு பே பண்ணிட்டு நாளைக்கு உன்னோட வரும்போது வாங்கிக்கறேன்னு வச்சிட்டு வந்தேன். அந்த நபரை எனக்கு தெரியும் அதனால். உனக்கு பிடிச்சது பத்தி சந்தோஷமா இருக்கு.” என்றான் ராகேஷ். நெக்லஸை போட்டு பார்த்து கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டு இருந்தாள் வினயா. அவனையும் குளிர்பானம் குடித்தபடி ஆசையாக பார்த்தாள். “இப்படி நீ பாத்து எவ்வளவு நாளாச்சு? இப்பதான் நிம்மதியா இருக்கு” என்ற ராகேஷ் அவள் இடுப்பில் லேசாகக் கிள்ளினான். அவள் வெட்கத்துடன் “சும்மா இருங்க, கடைல இருக்கோம்” என்று செல்லமாக அவன் கையை அழுத்தினாள்.

பிறகு அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட்டார்கள். அவன் வாங்கிய உணவு வகைகளையே விரும்பி சாப்பிட்டாள். அவர்கள் வேலைகள் முடிந்து வெளியே வந்தபோது லேசாக மழை தூறல் ஆரம்பித்தது. “உள்ளே போய் ஒரு குடை வாங்கிட்டு வந்துடறேன். ஏன்னா நம்ப கார் பார்க் செஞ்சிருக்கற இடத்துக்கு கொஞ்ச தூரம் நடக்கணும்” என்றான் ராகேஷ். “அதெல்லாம் வேண்டாங்க, என் ஹேண்ட் பேக்ல ஒரு குடை எப்பவும் இருக்கும். இங்கே பாருங்க ” என்று குடையை எடுத்து விரித்தாள். கையில் பைகளை எடுத்து ராகேஷ் நடக்க, ஒரு பையை அவள் எடுத்துக்கொண்டாள். இன்னொரு கையால் குடையை அவனுக்கும் சேர்த்து பிடித்தாள் வினயா. நடக்கும் போது அவன் தோளில் மழைத் தூறல் விழுந்ததை கவனித்த வினயா இன்னும் நெருங்கி உள்ளே வாங்க என்று அவனை இழுத்தாள் வினயா. “ஆஹா, இந்த மழை இப்படியே இருக்கட்டும் கொஞ்ச நேரம். அதற்குள் பார்க்கிங் இடம் வந்துடுமோ? ச்சே, இன்னும் கொஞ்சம் தள்ளி பார்க்கிங் செஞ்சிருக்கலாம் போல இருக்கு ” என்று மனதில் நினைத்து நடந்தான் ராகேஷ்.

அவன் நெருங்கியபடி நடந்தாலும் மழைத்துளி அவன் மேல் பட்டது. மழை சற்று வலுவானது போல் தோன்றியது. அவன் முகத்தில் மழைச்சாரல் தெரித்தது. வினயா தன் இடது கையில் இருந்த பையை குடையின் வளைவில் மாட்டி விட்டு அவன் இடுப்பை தன்னருகே நெருக்கி இழுத்து மிகவும் ஒட்டியபடி வந்தாள். ராகேஷ் அவளைப் பார்த்து “இத்தனை அன்பு, ஆசை எங்கே போச்சு இவ்வளவு நாளா?” எனக்கேட்க “‘அது எப்பவும் உண்டு இன்னிக்கு மார்னிங்தான் முடிவு பண்ணேன். இனிமேல் அநாவசிய தர்க்கம் எல்லாம் இல்லாம ஜாலியா சந்தோஷமா ரெண்டு பேரும் இருக்கணும்னு. இனிமே இந்த நெருக்கம் இப்படியேதான் இருக்கும்.” என்று கொஞ்சலாகப் பேசினாள் வினயா. “ஆஹா, மழையே உனக்கு நன்றி. மழைக்கு ஒரு சல்யூட்” என்று ராகேஷ் சத்தமாக சொன்னான். அவள் சிரித்தாள்.


“என்ன ஆச்சு, ராகேஷ், ராகேஷ், என்ன சொல்றீங்க? மழைக்கு நன்றியா? எங்க மழை? முரட்டு தூக்கமா, அதற்குள்ள?” தொடர்ந்து எங்கோ வினயா கத்தியது புரிந்தது. சட்டென்று கண் விழித்து அவளை நிமிர்ந்து பார்த்தான் அவன். பிறகு சுற்று முற்றும் பார்த்தான். கையில் ஒரு டம்ளரில் தண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள் வினயா. “ஹலோ, என்ன இவ்வளவு டீப் தூக்கமா, பகலில்? கூப்பிடுறேன், கூப்பிடுறேன் காதிலேயே விழல, அதான் கொஞ்சம் தண்ணியை தெளிச்சேன் மூஞ்சில. எழுந்து கிளம்புங்க, ஷாப்பிங் போகலாம். சுதா இறங்கி போய் பதினஞ்சு நிமிஷம் ஆகிடுச்சு.” என்றாள் அவள்.

‘ச்சே, அடப்பாவமே, பகல் கனவா கண்டுட்டு இருந்தோம்! மோசமா இருக்கே நிலமை’ என்று நினைத்து பின்னர் ‘ஆனால் அதிலும் ஒரு மகிழ்ச்சியான காட்சி இருந்ததே, அவளின் நெருக்கம் அதிகமானதே அந்த கொஞ்ச நேரத்தில்’ என்று எண்ணி மனதிற்குள் மகிழ்ந்தான். ‘கடவுளே, இன்று உண்மையிலேயே அது போல திரும்பவும் நனவில் நடக்கட்டும்’ என்று வேண்டியபடி, கார் சாவியை எடுத்தான்.

Print Friendly, PDF & Email
பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *