நான் வீட்டை விட்டுக் கிளம்பி பத்துநாட்கள் ஆகிவிட்டன. புறப்படும்போது வித்யா திரும்பத்திரும்பச் சொன்னாள். ”இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்றாள். என் வேலைகளின் நடுவில் நேரமேயில்லை. அதனால் எனக்கு எந்தச் சிற்றுண்டி சாப்பிடும்போதும் என் வித்யாவின் தோசையே மனதில் நின்றது.
கண்ணன் பாட்டில் சொல்வார்களே, ‘பஞ்சுபோல் தோசைவார்த்து அஞ்சு தோசை வைத்து அதன்மேல் வெண்ணெய் வைத்து”, என்று. அப்படி அருமையாக வித்யா தோசை வார்ப்பாள். நான் மறுபடி ஊருக்குப் போகக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகும்.
இன்று பூனாவில் சுந்தரைப் பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறேன். அவனே மாலையில் வந்து என்னை அழைத்துக்கொண்டு செல்வ தாகத் தெரிவித்திருக்கிறான். நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். ”எனக்கு இரவு சாப்பாடு வேண்டாம், உஷாவை தோசை வார்க்கச் சொல்லு”.
“ஏண்டா, ஏதாவது விரதமா? ஹோட்டலில் தோசை சாப்பிடுவோமே!” என்றான் சுந்தர்.
“இல்லைடா, வீட்டுக்குப் போகும்போது யாராவது ஹோட்டலுக்குச் செல்வார்களா? வீட்டுதோசைதான் நன்றாயிருக்கும். மிளகாய்ப் பொடி இருந்தால் போதும். ஃபிரிட்ஜில் எப்போதும் தோசை மாவு வைத்திருப்பாளே உஷா!”, என்றேன் நான்.
பதிலே சொல்லாத சுந்தர் வழியில் ஒரு ’தோசைமாவுப் பாக்கெட்டு’ம் ’ரெடிமேட் சட்னி’யும் வாங்கியதை நான் கவனிக்கவில்லை. வீட்டில் உஷாவையும் கண்ணனையும் காணவில்லை. “சுந்தர்! உஷா ஊரில் இல்லையா?” என்று கேட்டேன். “ஆமாண்டா, அவளுடைய பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு போயிருக்கா… ஒரு வாரம் ஆகிறது. குழந்தைக்கு ஸ்கூலும் போகமுடியாமல் இருக்கு. ஒரு ஃபோன் கூடப் பண்ணாமல் உட்கார்ந்திருக்கா. இன்னிக்காவது நாளைக்காவது வரணும்…” என்று சுந்தர் சொல்லவும் எனக்கு தோசை தின்னும் ஆசையும் குறைந்துபோயிற்று.
சுந்தர் உடைமாற்றிக்கொண்டு லுங்கியில் வந்தான். பாக்கெட் தோசை மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டினான். தோசைக்கல், எண்ணெய் ஜாடி, தட்டு என்று எல்லாவற்றையும் தேடிப்பிடித்து தயார் செய்தான். சட்னியைப் பிரித்து ஒரு கிண்ணத்தில் ஊற்றினான்.
கேஸ் அடுப்பைப் பற்றவைக்கப் போனவன், “அடடா, தோசைத் திருப்பி இல்லையேடா!” என்றான். தொடர்ந்து, “அதனாலென்ன, வேறு கரண்டியால் செய்யமுடியாதா என்ன?” என்று சவால்விடு வதாய் கூறினான்.
“என்னடா இது? ஒரு வீடுன்னா ஒரு தோசைதிருப்பிகூட இருக்காதா என்ன? நீயும் எட்டு வருடமா குடும்பம் நடத்துகிறாயே”, என்றேன்.
“அதில்லைடா! போனவாரம் குளியலறையின் தாழ்ப்பாள் உடைந்து போய்விட்டது. அதை ரிப்பேர் செய்ய ஆணியைக் கழற்ற சரியா எதுவும் கிடைக்கலை. சரின்னு தோசைத்திருப்பியால் ஒரு நெம்பு நெம்பினேன்.அது உடைந்துபோய்விட்டது.உடனேயே வேறொன்று வாங்கிவரலாம்னு கிளம்பினேன். உஷாதான் ‘நாந்தான் சென்னைக் குப் போகிறேனே, அங்கேயே நல்லதாப்பார்த்து ஒன்று வாங்கிக் கொண்டுவருகிறேன். இங்கே யானைவிலை கொடுத்து நீங்கள் வாங்கவேண்டாம்ன்னு என்னைத் தடுத்துவிட்டாள்”, என்று விளக்கம் தந்தான்.
“சரி, தோசையை வார்ப்போம்”, என்று கூறி செயலில் இறங்கியவன் அரைகுறைவட்டமாக ஒன்று வார்த்துவிட்டான். என்றாலும், அதை சட்டுவத்தால், சாதக்கரண்டியால், கத்தியால் என்று எப்படியெப்படி யெல்லாமோ எடுக்க முயன்று தோற்றுப்போனான்!
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், சுந்தர் சமீபத்தில்தான் அந்த வீட்டில் குடியேறியிருந்தான். அதனால், அக்கம்பக்கம் அதிகப் பழக்கமில்லை. தனி வீடு. திடீரென்று ‘ஒரு தோசைத்திருப்பி வேண்டும்’ என்று யாரிடம் போய்க் கேட்பது…? மணி எட்டைத் தாண்டிவிட்டதால் அக்கம்பக்கத்திலிருந்த கடைகளும் மூடப்பட்டிருக் கும்….
”சரி, இட்லியாக வார்த்துவிடுகிறேன்”, என்றான். எனக்கோ பசி. எதையாவது தின்போம் என்று தோன்றியது. இட்லி பார்க்க இட்லியாகவே இருந்தது. சற்று கல்லாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், குழிகளுக்கு எண்ணெய் தடவாததால் எடுக்கவே முடியாமல் ஒட்டிக்கொண்டிருந்தது. எப்படியோ ஸ்பூனால் சுரண்டி உப்பு மாவைப்போல், மோர்க்களியைப்போல் எடுத்து இருவரும் தின்றோம். ஃப்ரிட்ஜிலிருந்து சில்லென்று கிண்ணத்தில் பால் எடுத்துக் குடித்து விட்டு ’அக்கடா’ என்று படுத்தோம்.
சுந்தர் ஆரம்பித்தான். “பார்த்தாயா மோகன், அததுக்கு ஒருவிதமான ஆயுதம் தேவைப்படுகிறது.அது இல்லையென்றால்அந்தப் பொருளே வீணாகிவிடுகிறது. என்னவானாலும் பெண்கள் பொறுமைசாலிகள் தான், ஒப்புக்கொள்கிறாயா?” என்றான்.
“நூறு சதவிகிதம் ஒப்புக்கொள்கிறேன். வித்யா கொடுத்த தோசையை வேண்டாம் என்று சொன்னதற்கு பழிவாங்குவதாய் என் கண்ணி லேயே தோசை படமாட்டேங்கிறது சுந்தர்”, என்றேன்.
“இதைக் கேள். ஒரு தடவை நான் ஃபாரின் பாண்ட் ஒன்றை போட்டுக்கொண்டிருந்தேன். மேலே கொஞ்சம் ட்ரான்ஸ்ப்ரண்ட்டா சட்டை போட்டுக்கிட்டிருந்தேன். அலுவலகத்தில் என் நாற்காலியிலே உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்தப்போ திடீர்னு ’பேண்ட் ஸிப்’ பிஞ்சு போயிடுத்து. எழுந்திருக்கவே முடியாம தவிச்சுப்போயிட்டேன். ஒரு ஸேஃப்டி பின் மட்டும் கையில் இருந்திருந்தால் எத்தனை உபயோகமா இருந்திருக்கும் என்று ஏங்கினேன். நல்லவேளையா, என் கூட வேலை பார்க்கும் ரோஸி யதேச்சையா என் நாற்காலியைத் தாண்டிப் போனாள். உடனே, வெட்கத்தை விட்டு அவளிடம் ஒரு ஸேஃப்டி பின் இருக்குமா என்று கேட்டேன். எதற்கென்று குறுக்குக்கேள்வி எதுவும் கேட்காமல் தன்னுடைய கைப்பையிலிருந்து எடுத்துக்கொடுத்துவிட்டுப் போய்விட்டாள். அவளால் என் மானம் கப்ப றாமல் காப்பாற்றப்பட்டது. அதற்குப்பிறகு என்னுடைய பர்ஸில் எப்போதுமே ஒன்றிரண்டு பின்கள் கட்டாயம் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வேன்”, என்றான் சுந்தர்.
“எனக்கும் அப்படிப்பட்ட ஒரு தர்மசங்கடமான அனுபவம் உண்டு. ஒருமுறை வித்யாவுடன் அவர்களுடைய கிராமத்துக்கு ஒரு முக்கிய மான கல்யாணத்திற்காகப் போயிருந்தேன். கையில் ஆறுமாதக் குழந்தை. திரும்பும்போது குதிரைவண்டியை விட்டு இறக்கியதும் சூட்கேஸ் கைப்பிடி உடைந்துவிட்டது.வேறு எங்கு பிடித்தும் தூக்க வசதியில்லை. என் கையில் மற்றுமொரு பை இருந்ததால் சூட்கேஸை குழந்தைபோல் ஏந்திக்கொள்ளவும் வழியில்லை. வித்யாவோ தூங்கும் குழந்தையைத் தவிர வேறு எதையுமே தூக்கமுடியாத ந்லை. ஏழரைக்கு ரயிலைப் பிடிக்கவேண்டும். கூலிக்கு ஆளும் கிடைக்கவில்லை, ஆட்டோவும் கிடைக்கவில்லை.
“சட்டென்று வித்யா தன்னுடைய துப்பட்டாவை குறுக்காக மடித்து பெட்டியை ஒரு சுற்றுசுற்றிக் கட்டி பிடிபோலப் பிடிக்கும்படி செய்து கொடுத்தாள். குழந்தைக்குப் போர்த்தியிருந்த சால்வையால் தன்னை யும் போர்த்திக்கொண்டு உள்ளேயே குழந்தையை அணைத்துக் கொண்டாள். பிரயாணநேரத்தில் பெண்கள் அப்படிப் போர்த்திக் கொள்வது சகஜம்தானே? இப்படி, வித்யாவின் புத்திசாலித்தனத்தை நான் பலமுறை வியந்ததுண்டு”, என்றேன்.
“ஆமாம், நீ சொல்வது ரொம்பவும் சரி. மனிதனுக்கு சில நேரங்களில் சரியான பொருள் கைக்குக் கிடைக்கவில்லையானால் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடும். முக்கியமாக, கத்திரிக்கோல், சுத்தியல், ஸ்க்ரூட்ரைவர், ஸ்டாப்லர், பின், ரப்பர் பேண்ட், பேனா, குண்டூசி என்று எத்தனையோ அத்தியாவசியப் பொருள்கள். சட்டென்று ஒரு விஷயம் குறிக்கத் தேடினால் எங்கிருந்தோ ’எழுதாத பேனா’ கிடைக்கும். ஒரு சிறிய வெள்ளைத்தாள் தேடினால் வீடுபூராவும் கிடைக்காது. ஒரு அற்ப விஷயம் மனதிற்கு வேதனை உண்டாக்கி மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும்…” என்று சொல்லிக்கொண்டே போனான் சுந்தர்.
“அதேசமயம், ஒன்றைத் தேடும்போது அது கிடைக்காமல் போனாலும் முன்பு எப்போதோ தொலைந்துபோன வேறொரு பொருள் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டல்லவா!”, என்று என்னையுமறியாமல் மனதில் நினைப்போடியது.
– 15 ஜூலை, 2012