மதிய நேரம் . தன்னுடைய பள்ளிக்கூடத்து நூலகத்திலிருந்து வெளியே வந்தாள் துருதுரு பதின்பருவ மாணவி பொற்கொடி. பொற்கொடி , பள்ளியின் நுழைவாயிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த போது மைதானத்தில் அவளுடைய தாய்மாமன் ஆனந்த் , சேலை உடுத்திய ஒடிசலான ஓர் இளம் பெண்மணியுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். மாமாவை நோக்கி வந்தாள்.
‘என்ன மாமா, ட்யுட்டி நேரத்துல ஆபீசை விட்டு வரவே மாட்டே. எங்க ஸ்கூல்ல என்ன பண்றே?‘
கட்டுடல் கொண்ட ஆனந்த், அக்காவின் மகளைப் பார்த்து நெளிந்தான்.
‘அது வந்து.. டிஸ்டன்ஸ் கோர்ஸ் படிக்கறன் இல்ல. எக்சாம் ஹால் டிக்கட்ல இந்த ஸ்கூல்ன்னு இருந்துச்சு. நாளைக்கு பரீட்சை அதான் இன்னிக்கே சென்ட்டர பார்த்துக்கலாம்ன்னு…‘
‘நீ படிக்கற ஆள் எல்லாம் இல்லையே உண்மையை சொல்லு மாமா’
அதட்டினாள் பொற்கொடி .
‘பொண்ணு இவங்கதான் எம்ஏ இங்கிலீஷ் படிக்கறாங்க இவங்க மல்லிகா … இவங்களுக்காக தான்….‘
‘இவங்கன்னா ஓ இவங்க தான் என் வருங்கால அத்தையா’
‘நிகழ்காலத்துலயும் இவங்க உனக்கு அத்தைதான்.. என்ன உறவு விட்டுப் போச்சு…. ஒங்க டாடியோட தங்கை அந்த முறையில் உனக்கு அத்தை..‘ என்றான் ஆனந்த் .
‘இப்ப தெரியுது.. இவங்களும் அப்பாவும் சின்ன வயசுல எடுத்துகிட்ட போட்டோவை அப்பா பெட் ரூம்ல மாட்டி வெச்சிருக்காரு…. அந்த பாசமலர் இவங்களா இப்பதான் பார்க்கறேன், பூமிக்கு வந்து பதினைந்து வருசம் கழிச்சு பார்க்கறேன்…‘ என்றாள் பொற்கொடி.
‘பொண்ணு இவங்க ஒங்க பெரியப்பா கட்டுப்பாட்டில் இருக்காங்க ஒங்க பெரியப்பா சொன்ன பொண்ண ஒங்க அப்பா கல்யாணம் பண்ணிக்காம எங்க அக்காவை கல்யாணம் பண்ணிகிட்டதால ரெண்டு அண்ணனும் உறவை துண்டிச்சிகிட்டாங்க அதுக்கு ஒங்க அத்தை என்ன பண்ண முடியும்’ என்றான் ஆனந்த்.
‘நான் பொறந்தப்ப அக்கம்பக்கத்து ஆளுங்க ஏழை ஆளுங்க எல்லாம் என்னைப் பார்க்க வந்து என் கையில பத்து ரூபா வெச்சிட்டு போனாங்க ன்னு அம்மா சொன்னாங்க . இவங்க ஒரே ஊர்ல இருந்துகிட்டு நான் பொறந்தப்பவும் வரலை எந்த பிறந்த நாளுக்கும் வரலை நான் பெரியவளா ஆனதுக்கும் வரலை … ‘
மல்லிகா எதுவும் பேசாமல் மௌனம் காத்தாள். ஆனந்த் என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தான்.
‘சரி பொண்ணு . அதை எல்லாம் மனசுல வெச்சுக்காத. ஒங்க பெரியப்பா கிட்ட பேசறதுதான் சவாலான பணி. நீதான் சமர்த்துப் பொண்ணு ஆச்சே. பெரியப்பா கிட்ட பேசணும் எங்க கல்யாணத்துக்காக…‘ என்றான் ஆனந்த்.
‘நான் பொறந்ததிலிருந்து பார்க்க வராத பெரியப்பா கிட்ட நான் போய் பேச முடியுமா ? நீயே மூளையைக் கசக்கி ஏதாவது ஸ்கெட்ச் போட்டுக்க..பெரியவங்க வேலையை சின்னப் பொண்ணு தலைல கட்றே. எனக்கு படிக்கறதுலயே மண்டை காஞ்சு போவுது . நான் வரேன்..பேசா மடந்தை அத்தை நான் வரேன்’ என்று கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பொற்கொடி.
மறு நாள். பொற்கொடி படிக்கும் பள்ளிக்கூடத்தில் மாலை நேரத்தில் இலக்கிய கூட்டம். அரங்கில் மாணவர்களும் மாணவிகளும் பார்வையாளர்களாக அமர்ந்து இருந்தனர் . மேடையில் தலைமை ஆசிரியை ராதா மணியும் இளம் பெண் தொழில் அதிபர் கவிதாவும் அமர்ந்து இருந்தனர்.
தலைமை ஆசிரியர் உரைமேசை அருகில் நின்று பேசினார்.
‘மாணவச் செல்வங்களே.. கவிதைப் போட்டிக்கு நடுவராக சாதனைப் பெண்மணி கவிதா வந்து இருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த முதல் பரிசு கவிதையை அவரே இங்கு வாசித்துக் காண்பித்து அதை எழுதிய மாணவ மணிக்கு பரிசினை வழங்குவார். வாங்க கவிதா’
உயரமான, சாதாரண புடவை அணிந்திருந்த இளம்பெண் கவிதா, மலர்ந்த முகத்துடன் உரைமேசை அருகில் வந்தாள். பேசினாள்.
‘நன்றி அம்மா அவர்களே மாணவ மணிகளுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.. தேர்ந்து எடுத்தல் என்பதில் ஒரு கவிதையைத் தான் தேர்வு செய்ய முடியும் எனவே மற்றவர்கள் மனம் தளர வேண்டாம். முதலிடம் பெற்றதாக நான் தேர்வு செய்துள்ள கவிதை –
இந்த கவிதையின் தலைப்பு – கடல் என்னும் அற்புதம்
கடல் சூழ்ந்த உலகம் என்பர் முன்னோர்
எனினும் உலகப் பரப்பில் கடல் ஓர் தனி உலகம்
கடல் ஓர் அன்னை என்றனர்
அலையால் அணைப்பதால்
வேண்டியதை அள்ளிக் கொடுப்பதால்
வாழ வழிவகை தருவதால்
வர்த்தகம் தருவதால்
கடல் ஓர் தனி உலகம்
பேரிடர் , கொள்ளை , சண்டை
நிலப்பகுதியில் உள்ளதெல்லாம் இங்கே
கடல் ஓர் தனி உலகம்
உள்ளே செல்பவருக்கு புது உலகம்
கரையில் உள்ளவர் மனம் குளிரும்
கடல் ஓர் தனி உலகம்
உள்ளே ஓர் இயக்கம்
கரையிலும் ஓயாத இயக்கம்
பலருக்கும் வாழ்வு அளிக்கும்
கடல் ஓர் தனி உலகம்
வியப்புகளின் மொத்த வடிவம்
இவ்வாறு கடலைப் பற்றி சொல் ஓவியம் வரைந்தவர் மாணவி பொற்கொடி.
அவருக்கு இந்த பேனா தொகுப்பை என் நிறுவனத்தின் சார்பாக, தலைமை ஆசிரியை அம்மா அவர்களின் அனுமதியுடன் அளிக்கிறேன். ‘
பொற்கொடி மேடைக்கு வந்து பரிசினைப் பெற்றுக் கொண்டு கவிதாவையும் தலைமை ஆசிரியையும் வணங்கி விட்டுத் திரும்பிச் செல்கிறாள். அவளுடைய தோழிகள் கரவொலி எழுப்புகின்றனர்.
நிகழ்ச்சி முடிந்து பொற்கொடி வீட்டுக்குச் செல்லும் போது பள்ளி வளாகத்தில் கவிதா அவளது கார் அருகே நின்று கொண்டு இருப்பதைப் பார்த்து அவளருகில் சென்றாள்.
‘மேம் … நன்றி ‘
‘நல்லா எழுது… வாழ்த்துக்கள் ‘
‘ஏன் மேம் கார்ல ஏதாவது பிரச்னையா? ‘
‘ஆமாம் டிரைவர் , மெக்கானிக்கை வர சொல்லி இருக்காரு. நான் என் ப்ரெண்டோட பொண்ணு அரங்கேற்றத்துக்குப் போகணும் ‘
‘ஆட்டோவுல போவீங்கன்னா, பக்கத்துல இருக்காரு ஆட்டோ அங்கிள் வர சொல்லவா?‘
‘வர சொல்லு இந்த டிராபிக்ல மெக்கானிக் எப்ப வந்து சேருவாரு?‘
பொற்கொடி, ஆட்டோ ஓட்டுநர் முத்துவுக்கு போன் செய்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவர் பள்ளியின் நுழைவாயிலுக்கு வந்தார்.
‘வாங்க மேம்… ‘
கவிதா ஆட்டோவில் ஏறப் போனாள். ‘மேம் ஒங்க கிட்ட ஒரு அஞ்சு நிமிசம் பேசணும்… ‘ என்றாள் பொற்கொடி.
‘வா சபாவுக்கு போய் சேர்றதுக்குள்ளே பேசிடலாம் வா’ என்றாள் கவிதா. பொற்கொடி ஆட்டோவில் ஏறி கவிதாவின் பக்கத்தில் அமராமல் சற்று தள்ளி அமர்ந்தாள். ஆட்டோ கிளம்பியது.
‘சொல்லு என்ன என் கிட்ட பேசணும்’ என்றாள் கவிதா.
‘மேம் .. என்னோட அப்பா பேரு சதாசிவம் அம்மா பேரு நிர்மலா.. பெரியப்பா பேரு நாகரத்தினம்… அவர் ஒங்க கம்பெனில ஜி எம் ஆ இருக்காரு…‘ என்று பேசத் தொடங்கிய பொற்கொடி, அத்தை மல்லிகாவுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது பற்றியும் அவளுடைய தாய்மாமா ஆனந்த் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பது பற்றியும் பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் இடையே உள்ள பதினைந்து வருட பிணக்கு பற்றியும் கவிதா கொடுத்த நேரத்திற்குள் சொல்லி முடித்து பெரியப்பாவிடம் பேசி, ஏற்கனவே காலம் கடந்து விட்ட அத்தையின் திருமணம் நடைபெற உதவும்படி கேட்டுக்கொண்டாள்.
கவிதா இறங்க வேண்டிய சபா அரங்கம் வந்தது. ஆட்டோ நின்றது. கவிதா, உரிய தொகையை முத்துவிடம் கொடுத்தாள். இருவரும் ஆட்டோவை விட்டு இறங்கினர்.
‘பொற்கொடி..பாவம்…பட்டாம்பூச்சி மாதிரி எந்த கவலையும் இல்லாமல் சிறகடிச்சு பறக்க வேண்டிய வயசுல பெரியவங்கள பத்தி நீ யோசிக்கறே பெரிய மனுஷத்தனத்தோட யோசிக்கறே..ஒன்ன பாத்தா பெருமையா இருக்கு. ஆனா, நான் சொல்லி ஒங்க பெரியப்பா கேட்பாரான்னு தெரியல.. உனக்காக பேசிப் பார்க்கறேன். .. வரேன்’ என்று கூறி விட்டு அரங்கத்திற்குள் சென்றாள் கவிதா. பொற்கொடி, காத்திருந்த முத்துவின் ஆட்டோவில் ஏறி வீட்டுக்குச் சென்றாள்.
பொற்கொடியின் பெரியப்பா நாகரத்தினத்தின் வீடு களை கட்டியிருந்தது. கவிதாவின் தலையீட்டால் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணைந்தனர். இன்று மல்லிகா – ஆனந்த் காதல் ஜோடியின் நிச்சயத் தாம்பூல நிகழ்ச்சி . பொற்கொடியின் அம்மாவும் அப்பாவும் ஆனந்த் சார்பிலும் அவளுடைய பெரியப்பாவும் பெரியம்மாவும் மல்லிகா சார்பிலும் நிச்சய தட்டை மாற்றிக் கொண்டனர். கவிதா வருகை தந்தாள். பாவாடை தாவணியில் மேலும் அழகாக காட்சி அளித்த பொற்கொடியை கவிதா வியப்புடன் பார்த்தாள். குத்து விளக்கில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்த பொற்கொடி, கவிதாவை நன்றியுடன் பார்த்தாள். கவிதா அவளைப் பார்த்து புன்னகை பூத்தாள்.
குறிப்பு – சவால் என்பதை அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன். இந்தப் புனைகதைகளில் , சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள் , பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.