சிறகிழந்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 8,101 
 
 

முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ ஒரு இரையைக் கவ்விக் கொண்டது. விரட்டி விடுவார்களோ என்ற பயம் தெளிந்ததாலோ என்னவோ மீண்டும் திருப்தியுற்று இரை தேடலில் ஆர்வமாயிற்று.

வெளி விறாந்தையில் அமர்ந்தபடி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவனுக்கு அந்தக் காட்சி பட்டென்று மனதில் ஒட்டிக் கொண்டது.

இப்படிப் பிறந்திருக்கலாம், ஒரு பறவையைப் போல… எவ்வளவு சுதந்திரமாய், சந்தோஷமாய் இருந்திருக்கும். இரை தேடுதல்… கூட்டுக்குத் திரும்புதல் …. துணையோடு சல்லாபித்திருத்தல்… பறவைகளுக்கு மட்டும் எப்படி வாய்த்தது? இப்படி மிக மிக எளிமையான வாழ்வு.

அவனது இனம் ஏன் இப்படி இருக்கிறது…? ஆறறிவு படைத்த மானிட சமூகம் ஏன் இப்படி ஒட்டுண்ணிகளாய் ஒருவரை ஒருவர் உறிஞ்சியே காலம் கழிக்கிறது .அக்கா….அம்மா ஏன் இப்படிப் போனார்கள்… ? மனிதாபிமானம் என்பதே கொஞ்சமுமின்றி மற்றவர்களை ரணப்படுத்துவதே இலக்காக்கிக் கொள்ள எப்படி மனம் வருகிறது அவர்களுக்கு…?

நண்பர்களோடுதான் கொஞ்சமேனும் சந்தோஷித்திருக்க முடிகிறது. எல்லா மனிதர்களுமே தங்களை ஒத்தவர்களிடம் மனப்பாரங்களை இறக்கி வைக்கும் போதுதான் மனம் லேசாகின்றார்கள் போலிருக்கிறது. இவனது பெருமூச்சு மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தக்கதல்ல. எல்லோருமே பெரும்பாலும் வெவ்வேறு பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்கள். அவரவருக்கு அவரவர் பிரச்சினை பெரிதாய்த் தோன்றும் அநேகமாய் எல்லோருமே கல்யாணமாகி விட்டவர்கள். தத்தமது பிரச்சினைகளைக் கூறி முடிக்கும் வேளைகளில், அவனைச் சுட்டி “அதிஷ் டக்காரன், தப்பிச்சாயடா…” என்று சொல்லி விட்டு நகர்வார்கள் இருந்தும் கூட, சில சந்தோஷமான தருணங்களில்.

“எப்படா கலியாணச் சாப்பாடு போடப் போறாய்….” என்று கேட்காமலில்லை.

அப்போதெல்லாம் ஏன் இவர்களருகில் வந்து வீணாய் அகப்பட்டுக் கொண்டோம் என்று தோன்றும்.

நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த வயதில் இனியொரு வாழ்க்கை தேவையா என்று கூட சில சமயங்களில் அவனுக்குத் தோன்றுவதுண்டு. வாழ்வின் இறுதி அத்தியாயங்களுள் ஒருத்தியை மணந்து. குழந்தைகள் பெற்று முதிர்கின்ற வயதில் அந்தக் குழந்தைகளுக்கு எதைத்தான் செய்ய முடியும்? அதை அதை அந்தந்தக் காலங்களில் செய்யாமல் பிறகெப்போது செய்வது?

“எல்லாம் அவனிண்டை பலன், ஒண்டும் சரி வரேல்லை…”

அம்மா இப்படித்தான் வருகிறவர், போகிறவர்களிடம் அங்கலாய்ப்பாள்.

“எங்கேயேன் நல்ல இடமாய் இருந்தாச் சொல்லுங்கோ…” அக்காவின் விசாரிப்பு.

“அவன் படிச்சவன், நல்ல உத்தியோகத்திலை இருக்கிறவன், அதுக்குத் தக்கபடி அவனுக்குத் தரத்தானை வேணும்.”

இது அத்தானின் எதிர்பார்ப்பு.

இவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும். அக்காவைக் கட்டும் போது வீட்டையே சீதனமாய் வாங்கிக் கொண்ட அத்தான். அம்மாவையும் அவனையும் அங்கே தங்க அனுமதித்திருப்பது கூட அவன் பேரில் வரப் போகின்ற சீதனத்தை நம்பித்தானோ….? தனக்கு அடுக்கடுக்காய்ப் பிறந்த நான்கு பெண் பிள்ளைகளுக்குச் சீதனம் வேண்டும் என்பதற்காக அக்கா அவனுக்கு வருகின்ற சம்பந்தங்களைத் தட்டிப் பறிப்பது எவ்விதத்தில் நியாயம்.

“தமக்கைன்ரை புருசன் தோட்டம் தானை. அவளின்டை பிள்ளையளுக்கும் ‘டொனேஷ ன்’ தாறதாயிருந்தாச் சொல்லுங்கோ… அவனைக் கட்டித் தரலாம்…..”

“மாமா…. செண்பகம்….” அக்காவின் சின்னவள் செண்பகத்தைத் துரத்திக் கொண்டு ஒடுகிறாள். பத்து வயது. துறுதுறுப்போடு துள்ளுகிற வயது. பெரியவள் இப்போது தான் ஏ.எல் படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் படித்து முடிப்பதற்கிடையில் அவளுக்கென ரெடியாக இவன் சீதனம் தயார் செய்து வைத்து விட வேண்டும். அவள் காலாகாலத்தில் சந்தோஷமாக கல்யாணம் கட்டிக் கொண்டு போவாள் அதற்காக இவன் காலாகாலமாய்க் காத்திருக்க வேண்டுமா?

அண்ணா புத்திசாலி. கல்யாணம் கட்டியவுடனேயே அண்ணி அவனை தன் கைக்குள் போட்டுக்கொண்டாள் தானும் தன் குடும்பமுமென அவன் மாறி விட்டான். இந்த வீட்டுப் பிரச்சினைகளுள் அவன் முகம் நுழைப்பதேயில்லை.

தம்பியோ, யாரோ ஒருத்தியைக் காதலித்து கைப்பிடித்ததால் வரப்போகின்ற சீதனம் நஷ்டமாகி விட்டதென்று அம்மாவும், அக்காவும், அவனோடு கதைப்பதையே நிறுத்தி விட்டனர். அவனுக்கென்றால் மிக மிக ஆச்சரியமாக இருக்கும். தம்பி மீது மிகப் பிரியம் வைத்திருக்கும் அம்மா … அவன் கேட்டு எதையும் அம்மா மறுத்ததில்லை. அப்படிப்பட்ட அம்மாவா அவனோடு கதைக்காமல் விட்டாள் ஆனால், போகப்போக அக்கா மீதான பயத்தில் தான் அம்மா அவனை ஒதுக்கி வைத்தாள் என்பது புரிந்தது. தம்பியோடு கதைத்தால், அக்கா தன்னைக் கடைசிக் காலத்தில் கவனிக்காமல் விட்டால்… எனும் பயம் அம்மா மனதில் ஒடியிருக்க வேண்டும்.

கடைசியில் மாட்டிக்கொண்டது இவன். தன்னைக் கவனிக்காமல் அண்ணனும், தம்பியும் ஒதுங்கிக் கொண்டார்கள் என்று சொல்லி சொல்லியே, அக்கா இவன் மேலான அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொண்டாள்.

அவள் அப்படிச் சொன்ன காலங்களில்.

“நான் இருக்கிறன் அக்கா உனக்கு… அண்ணனையும் தம்பியையும் மாதிரி நான் உன்னை விட்டுட்டுப் போக மாட்டன்…” என்றவனுக்கு இப்போதே அதன் தாற்பரியம் புரிந்தது. அக்கா தன்னை நகர முடியாத ஒரு பொறிக்குள் அகப்படுத்தியிருக்கிறாள் என்பது தெரிந்தது. தன்னுடைய உழைப்பிற்கும் மேலதிகமாக தன்னை விற்றுப் பெறப் போகும் சீதனத்திற்குமாக அவள் காத்திருப்பது இப்போது தானே புத்தியில் உறைக்கிறது.

முதன் முதலில்அதை அவன் உணர்ந்து கொண்ட போது அவனால் அவனையே நம்பமுடியவில்லை.

இருபதுகளின் நடுப்பகுதியில் அவன் காலெடுத்து வைத்த போது அவன் மனதிலும் லேசாய் காதல் முளைவிட்டது. அமைதியான சுபாவம் கொண்டிருந்த அழகிய பதுமை போன்றிருந்த உதயா மீதில் அவன் காதல் அரும்பியது. அவளோடு பேச வேண்டும் போலவும், அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலவும் தோன்றிற்று. அவனது பிறந்த தினத்திற்கு அவனுடைய நண்பர்களோடு அவளும் வந்திருந்தாள். இவனது காதலை உதயா உணர்ந்து கொண்டாளோ இல்லையோ, இவனது கண்களிலிருந்து அக்கா அதைக் கண்டு பிடித்து விட்டாள். அவர்கள் போய் விட்ட அன்றிரவு இவன் நிலவு பார்த்துக் கொண்டிருந்த போது அக்கா அவனை மெல்ல அணுகினாள்.

“அந்தப் பிள்ளை வசதியான பிள்ளையாய்த் தெரியேல்லை தினகரன்..”

“எந்தப் பிள்ளை…? அதிர்ந்து போய்க் கேட்டான் அவன்.”

“அதுதான், நீ வழிஞ்சு வழிஞ்சு போய்க் கதைச்சியே….”

“அது நல்ல பிள்ளை அக்கா….”

“நல்ல பிள்ளையா இருந்தா மட்டும் காணுமே……”

தம்பி நான் உன்னைத் தான் நம்பியிருக்கிறன். பார்…. என்ரை நாலு குஞ்சுகளையும்…. இதுகளுக்கு இனி ஆர் வழி….?

“இதுகளை என்னை நம்பித்தான் பெத்தனீங்களோ…? அவனுக்கு முதன் முதல் ஆத்திரம் வந்தது.

“ஏன் அத்தான் இருக்கிறார் தானை. அவருக்கென்ன, கால், கை நல்லாத்தானை கிடக்கு…”

மனதுக்குள் கொப்பளிக்கும் வார்த்தைகளை வெளியே கொட்டிவிட முடியாது .கொட்டியும் பழக்கமில்லை.

அத்தான் சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

மச்சினன் ஒருவன் கிடைத்தான் தலையில் மிளகாய் அரைப்பதற்கு என்று நினைத்திருப்பரோ….?

அக்கா அவனது காதலை முளையிலேயே நறுக்கி விட்டாள். இந்தக் குடும்பச் சூழலுள் சிக்கித் தவிக்கும் தன்னால் ஒரு நல்ல காதலனாக ஒருபோதுமே நடக்க முடியாதென்பது அவனுக்கு அப்போதே புரிந்து விட்டது. தனக்குள் வளர்ந்த காதல் மேலும் கிளை பரப்பு முன் அதை உள்ளேயே போட்டுப் புதைத்தான். உதயா மேலான காதல் வெறும் கனவு என்பதைப் புரிந்து கொண்டவனாய், தன்னை ஒரு பொறுப்புள்ள சகோதரனாய் தனக்குத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டாள்.

ஆனால், உதயா பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியபோது எல்லோருக்கும் போலவே இவனுக்கும் தன் கல்யாண அழைப்பிதழைக் கொடுத்தாள். இவனும் அதைப் புறக்கணிக்காமல் அவளது திருமணத்திற்குப் போயிருந்தான். எட்டாக்கனியாய் போயிருந்த அவளதுநினைவுகளைத் தள்ளிவிட்டு,அவளை மனதார ஆசீர்வதித்துவிட்டே வந்தான். அவளுக்கு இப்போது ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் பிறந்திருக்கக் கூடும். அவனை, அதற்குப் பிறகு காணக் கிடைக்கவில்லை. அவள் பற்றிய விசாரிப்புகள் இனி அநாவசியம் அவனுக்கு.

“ இருபத்தைஞ்சு லட்சம் வேணும். அஞ்சு லட்சத்தை அவையளின்ரை பேரிலை போடுவம். மிச்சம் இருபதும் டொனேசன்….”

அக்கா பேரம் பேசுவது கேட்கிறது. இந்த அக்காவுக்கு கல்யாணம் பேசும் போது சீதனத்தினால் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள்….? இனி, அக்காவின் பிள்ளைகளுக்குப் பேசும் போதுகூட அதுதானே நடக்கப் போகிறது. அப்படியிருந்ததும் அவனை வைத்து இரக்கமின்றி அவர்கள் பேரம் பேசுகிறார்களென்றால்….? தம்பியை வைத்தே இவ்வளவு வியாபாரம் என்றால்…. அக்காவுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்திருந்தால். என்ன நடந்திருக்கும்….? எல்லாம் அளந்து தான் வைத்திருக்கிறான் ஆண்டவன்.

“ தம்பி சீனி முடிஞ்சுது போய் வாங்கிவா அப்பன்…” அக்கா பிளாஸ்ரிக் கூடையைக் கையில் தருகிறாள்.

இவன் திரும்பிப் பார்க்கிறான். வளவில் அத்தான் முருக்கமிலை ஒடித்துக் கொண்டிருக்கிறார். அவரால், இது வரைக்கும் ஆடுகளுக்கு மட்டும் தான் சரியாக உணவு போட முடிந்தது.

அவனது பார்வையை உணர்ந்து “அந்தாளோடை இனி கத்திக் கொண்டிருக்கேலாது…..” என்கிறாள் அக்கா.

தனது கைச்செலவுக்கென வைத்திருக்கிற பணத்திலும் கூடத் துண்டு விழப்போகிதென்ற எண்ணம் தோன்றினாலும் பேசாமலே சைக்கிளை எடுத்துக் கொண்டு படலை வரை உருட்டினான்.

“மாமா ….. எனக்கு கன்டோஸ் வாங்கி வாங்கோ….” விளையாடிக் கொண்டிருந்த சின்னவள் உச்ச தொனியில் கத்தினாள்.

“சும்மா இரடி, மாமா பாவம்……”

அக்கா அதட்டுவது கேட்கிறது.

கடைக்குப் போய்விட்டுத்திரும்பிய போது ஏ.எல் படிக்கிற பட்டாளம் ஒன்று பக்கத்து ஒழுங்கைக்குள் இருந்து குபீரென்று ஆரவாரத்தோடு வெளிப்பட்டது. சற்றே தாமதித் தவனுக்கு அந்தப் பட்டாளம் சுகுணாவின் வகுப்புப் பட்டாளம் என்பது புரிந்தது. சுகுணா அக்காவின் மூத்த மகள். அந்தப் பட்டாளத்துள் சுகுணாவைக் காணவில்லை. சைக்கிளை மெதுவாக மிதித்தவன் எதேச்சையாக அந்த ஒழுங்கையைத் திரும்பிபார்த்தான்.தூரத்தில் யார் அது……..? சுகுணாவா…………..? இவன் பட்டென்று சைக்கிளை நிறுத்தி. மீண்டும் அந்த ஒழுங்கையைப் பார்த்தான்.

தூரத்தில் ஒழுங்கை முடிவில் சுகுணா வேலியோரம் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்றிருந்தாள். புத்தகங்களை அணைத்தபடி இரட்டைப்பின்னல் அசைய அசையச் சிரித்தப்படி பேசிக்கொண்டிருந்தாள். கூட ஒரு பையன் . அவளது வகுப்பில் படிக்கிறவனாகவோ அல்லது ஒன்றிரண்டு வகுப்பு பெரியவனாகவோ இருக்கலாம். திடுமென்று சந்தித்துக் கொண்டவர்களாக அவர்களைப் பார்த்தால் தெரியவில்லை.

இவன் அதிர்ந்து போய் நின்றவன் சுதாகரித்த போது கடையிலிருந்து வெளிப்பட்ட கிழவியொருத்தி சத்தமாய் முணுமுணுத்தாள்.

“அதையேன் தம்பி விறைச்சுப்போய் பார்க்கிறீர். உதுகள் நெடுகலும் தானை இப்பிடி நிக்குதுகள். வெக்கங்கெட்டதுகள்…” என்றவாறே தன் போக்கில் நடந்தாள்.

இவன் அதற்கு மேல் நிற்காமல் சைக்கிளை மிதித்தான். மனமெங்கும் குழம்பிச் சலனித்துப் போயிருந்தது. அவர்களுக்கு வயது வந்துவிட்டது. காதலிக்கிறார்கள். எந்தக் கவலையுமின்றி இந்த உலகை மறந்து கலகலத்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் எதற்காகத் தன் காதலைத் தியாகம் செய்தான்….? எதற்காக இன்னும் தன் வாழ்வை வறள வைத்துக் கொண்டிருக்கிறான்…? கேள்விகளால் மனம் குழம்பியது.

வீட்டுக்கு வந்தவன். அக்காவைக் கூப்பிட்டு சீனியைக் கொடுத்து விட்டு சின்னவளிடம் கன்டோசை நீட்டினான்.

“அய் கன்டோஸ்” எனக் குதித்தவள் கன்டோசை வாங்கி அதன் உறையைப் பிரித்து, உள்ளிருந்த பொன்னிறத் தாளை கிழியாமல் கழற்றினாள். நிதானமாய் அவள் கழற்றுவதைப் பார்க்க இவனுக்கு ஆசையாய் இருந்தது.

“இந்தாங்கோ மாமா கன்டோஸ்…”அவள் முதல் துண்டைப் பிய்த்து அவனிடம் நீட்டினாள்.

“அவனுக்கென்ன, கன்டோஸ் தின்னுற வயசே இப்ப…. கொண்டே அக்காக்குக் குடு….”

அக்காவின் குரல் அவனது இளமையை எம்பித் தள்ளியது.

“அதுதானை கன்டோஸ் தின்னுற வயசே எனக்கு ….. நீ சாப்பிட்டம்மா…..”

அவனது குரல் கரகரத்தது. அந்தக் குரலில் இவ்வளவு காலமாய் அவன் இழந்த வாழ்வின் சுவைகள் அவனை எள்ளி நகையாடிய விரக்தி படரந்திருந்தது.

– கலைமுகம் : சித்திரை – ஆனி 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *